Sunday, August 09, 2020

பாஜக மேலடுக்கு அரசியல்

 தமிழக பாஜக வில் மேலடுக்கு என்று உண்டு. களத்தில் இறங்கமாட்டார்கள். தெருத் தெருவாக அலைய விரும்ப மாட்டார்கள். குறிப்பாகக் கட்சி வளர வேண்டும் என்ற எண்ணமும் இருக்காது. வளர உதவுபவர்களை அமுக்கி வைப்பது தான் இவர்கள் பணி. பாஜக வில் பணிபுரிபவர்கள் பலரும் ஆதங்கத்துடன் இதனை ஒவ்வொரு முறையும் சொல்லியிருக்கின்றார்கள். திமுக அதிமுகவில் இருக்கும் அங்கீகாரம் பாஜக வில் கிடைக்க வாய்ப்பே இல்லை. கட்சிக்கு புதியவர்கள் வந்து வளர்ந்து அதன் மூலம் போட்டி வளர்ந்து விட்டால் இவர்களின் பூட்டு கழட்டப்படும் என்ற அச்சத்துடன் வாழும் அரிய உயிரினம் இவர்கள். 

இதன் காரணமாகவே கடைசி அடுக்கு வரைக்கும் அந்தக் கட்சி சென்று சேராமல் இன்னமும் தொலைக்காட்சி கட்சியாகவே உள்ளது. இவர்களைப் போன்ற சுகவாசிகள் அத்தனை பேர்களும் கட்டாயம் ஒவ்வொரு தொலைக்காட்சியாக ஏறி முகத்தைக் காட்டிக் கொண்டேயிருப்பார்கள். நக்கல், நையாண்டி, கிருத்துருவம், ஏட்டிக்குப் போட்டி, எகனைக்கு முகனை, பேசுவதையே திரும்பத் திரும்ப பேசுவது என்று பார்ப்பவர்களை எரிச்சலூட்டுபவர்கள் இவர்கள். 

பலமுறை யோசித்ததுண்டு. இவர்களுக்கு யாராவது மூக்கணாங்கயிறு கட்ட மாட்டார்களா? என்று. சமீபத்தில் அந்தக் காரியத்தை கனகச்சிதமாகச் செய்தவர் திருச்சி வேலுச்சாமி. ராஸ்கல் பிச்சுபிடுவேன் என்று அன்போடு அர்ச்சனை செய்தார். இவர் ஏற்கனவே சூனா சாமியை உண்டு இல்லை என்று படுத்தி எடுத்தவர்.

(கீழே வாங்கியவரும் வரம் கொடுத்தவரும்)


இணைப்பு






எதைப் பேச வேண்டுமோ? அதைப் பற்றி மட்டும் நாம் என்றைக்கும் பேசவே மாட்டோம். எளிய தமிழ்ப் பிள்ளைகளின் தலைவராகத் தமிழக முதல்வராக தமிழர்களின் அண்ணன் விவசாயி பதவியேற்று சீரும் சிறப்புமும் ஆக ஆட்சி நடத்தத் தொடங்கினாரோ அன்று முதல் "நீர் ராசி" தமிழகத்தை சூழ்ந்து திக்குமுக்காட வைத்துக் கொண்டே இருக்கிறது. அதாவது தமிழ்நாட்டில் மழை இருக்காது.

அப்படியே பெய்தாலும் தூவானம் போலப் பெய்து வீட்டில் வடையும் காரச் சட்னியும் செய்து சாப்பிட வைக்கும். அதே சமயத்தில் பக்கத்து மாநிலத்தில் அணைகள் கொள்ளளவு நிரம்பி உபரி நீர் திறக்கப்படும். அப்படியே இங்கு வந்து சேர மனசெல்லாம் மத்தாப்பு. வயலெல்லாம் பூந்தோப்பு என்று கவிதை பாடத் தோன்றும். நமது மானமிகு அமைச்சர்கள் அணைக்கட்டில் மேலேறி நின்று பூத்தூவி வரவேற்ற போஸ்களை தமிழ்ப் பத்திரிக்கைகள் அழகாக நமக்கு கொண்டு வந்து சேர்க்கும்.

கடந்த இரண்டு நாட்களில் பெய்த மழையின் காரணமாக ஒரு பக்கம் ஆந்திரா மறுபக்கம் கர்நாடகா என்று இரட்டை போனஸ் எளிய தமிழ்ப் பிள்ளைகளுக்குக் கிடைத்துள்ளது. காரணம் நம் விவசாயி ஆட்சியில் இருப்பதால் தானே?
கர்நாடகா பக்கம் இருந்து இதே போல அடிக்கடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் தமிழகப் பொதுப்பணித்துறை சுட்ட பணமெல்லாம் பெரிதாக வெளியே தெரியவில்லை.

காரணம் வரும் தண்ணீரே பாதையை அமைத்துக் கொண்டு பயணித்து தமிழகத்திற்கு வந்து சேர்ந்து விடுகின்றது. ஆனால் இப்போது ஆந்திராவிலிருந்து வந்து கொண்டிருக்கும் தண்ணீர் அளவுக்கு அதிகமாக இருப்பதால் தட்டுத்தடுமாறி புல் பூண்டு செடி கொடி மரம் தடுப்பு மணல் பள்ளம் மேடு என்று தூர்வாரப்படாமல் அதாவது பல பத்து வருடங்கள் கண்டு கொள்ளாமல் இருந்த காரணத்தால் "ஏன்டா எங்களைப் போட்டு இப்படி இம்சிக்கிறீர்கள்?" என்று சொல்லாமல் தண்ணீர் அரசி பயணித்து வர இரண்டு நாட்கள் ஆகியுள்ளது.

அதாவது எட்டு மணி நேரத்தில் வந்து சேர வேண்டிய நீர் பாடுபட்டு கண்ணீர் விட்டு வருவதை எளிய தமிழ்ப்பிள்ளைகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.



2 comments:

வெங்கட் நாகராஜ் said...

அரசியல்வியாதிகள் - Label செம!

திண்டுக்கல் தனபாலன் said...

அண்ணன் விவசாயி பாவம்... சூழ்ந்திருப்பது பன்'நீர்' அல்லவா...?