ஆகஸ்ட் 1
மனம் இயல்பானதாக மாறி விட்டது. சுற்றிலும் நடப்பவை அனைத்து வேடிக்கையாக மாறிவிட்டது. மாவட்டத்திற்கிடையே பேருந்து சேவை செயல்படாத வரைக்கும் திருப்பூர் போன்ற தொழில் நகரங்கள் தங்களுக்கான அடையாளத்தை அடைவது கடினம். தொழிலாளர்கள் முதல் பணியாளர்கள் வரை, சிறிய முதலாளிகள் முதல் பெரிய முதலாளிகள் வரைக்கும் தங்களுக்குரிய லாபத்தை விட்டுக் கொடுத்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற நிலையில் தான் வாழ முடியும். பணிபுரிபவர்களின் சம்பளம் பாதியாகக் குறைந்துள்ளது. மூன்று வேளை உணவு. வாடகை வீட்டில் வசித்தால் மாதம் தோறும் கொடுக்கும் அளவுக்கு பணம். கொரானா தாக்காமல் காப்பாற்றிக் கொண்டால் போதுமானது.
மாற்றவே முடியாத சூழலின் போது நாம் சூழலுக்கு தகுந்தாற் போல நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும். வருந்தி உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்ளக்கூடாது. வாழ்வில் லட்சியம் என்பது எந்த அளவுக்கு முக்கியமோ? அதை அடைந்து அனுபவிக்க ஆரோக்கியம் மற்ற அனைத்தையும் விட முக்கியம்.
தொழிலாளர்களின் சம்பளம் வாரச் சம்பளத்திலிருந்து மாறி மாதம் இருமுறை என்பதாகவும் பல சமயம் மாதம் ஒரு முறை என்பதாகவும் மாறியுள்ளது. ஏற்றுமதி தவிர உள்நாட்டு வணிகமும் படுத்து விட்டது. மற்ற மாநிலங்களுக்கு பொதுப் போக்குவரத்து சிறப்பாக இருந்தால் மட்டுமே தொழில் சுழற்சி உருவாகும்.
மகளின் பதினோராம் வகுப்புத் தேர்வு முடிவு வந்தது. சென்ற வருடம் தனியார்ப் பள்ளியில் படித்தார். மொத்த வகுப்பில் உள்ள மாணவிகளில் 96 சதவிகிதம் எடுத்து மூன்றாம் இடத்தைப் பெற்று இருந்தார். இந்த வருடம் அரசுப் பள்ளியில் படித்து 1350 மாணவிகளில் 92 சதவிகிதம் பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளார். இவர் சென்ற ஆண்டு படித்த தனியார்ப் பள்ளியில் இந்த வருடம் 11 ஆம் வகுப்பு தேர்ச்சியில் முதல் மாணவி பெற்ற மதிப்பெண் சதவிகிதம் 91 சதவிகிதம். இரண்டு மடங்கு அதிகமாக எண்ணிக்கை உள்ள அரசுப் பள்ளியில் படித்த மாணவிகளில் 92 சதவிகிதம் பெற்றுள்ளார்.
தொலைக்காட்சியில் பழைய நெடுந்தொடர்கள் சக்கைப் போடு போட்டது. மக்கள் எதையாவது பார்த்தால் போதும் என்று தொலைக்காட்சி முன்னால் தவம் இருந்தார்கள்.
ஜூலை 1
ஆறாம் வகுப்பு முதல் செய்தித்தாள்கள், வார இதழ்கள், கதை, கட்டுரைகள் வாசித்து வருவதால் தமிழக அரசியலின் அடிப்படைக்கூறுகள் ஓரளவுக்குத் தெரியும். இதற்குப் பின்னால் என்ன உள்ளது? என்பதனை ஒன்றன்பின் ஒன்றாகப் பார்த்துப் பழகிய காரணத்தால் குறிப்பிட்ட கொள்கை, தனி நபர்கள் மேல் உள்ள விருப்பம் இயல்பாகவே இல்லை என்பதால் எதையும் ஆராய்ச்சி மனப் பான்மையில் பார்த்தே பழகி வந்தேன். இதுவரையிலும் எழுதித் தொகுத்த தமிழக அரசியல் வரலாறு (1921 முதல் 2020) பிடிஎப் நிலையில் 988 பக்கங்கள் வந்துள்ளது. பக்கங்கள் குறைக்க வேண்டும். இன்னமும் தெளிவு வர வேண்டும். சுருக்க வேண்டும் என்பதால் இழுத்துக் கொண்டே போகின்றது. தனிப்புத்தமாக ஒன்று. தனித்தனியே மூன்று புத்தகம் விரைவில் வரும். அமேசான் தளத்தில் வெளியிடப்படும். எப்போது என்று என்னால் இப்போது சொல்ல முடியவில்லை. இதற்கான அட்டைப் படத்தை முதல் முறையாக இங்கே வெளியிடுகிறேன். இந்தக் கட்சி நான்? என்று சொல்பவர்களின் மனதில் இதனை முழுமையாக படித்து முடியும் போது மாற்றம் உருவாகும். தமிழ்நாட்டு மக்களின் மேல் பரிதாபம் தோன்றும்.
பத்திரிக்கைகளில் வந்த சம்பவங்களின் அடிப்படையில் தொகுத்துள்ளேன். எப்போதும் எழுதுபவர் தன் பார்வையை வைத்து எழுதுவார். நடந்த காலத்தில் உருவான சம்பவங்கள் மறைக்கப்படும். பக்தவச்சலம் காலத்தில் ஹிந்தி எதிர்ப்பு எப்படிப் பார்க்கப்பட்டது. எதிர் அணியில் இருந்த அண்ணா பார்வையில் எப்படிப் பார்க்கப்பட்டது என்பதனை விருமாண்டி படக் கதை போலவே சொல்லி உள்ளேன். இதுவே கலைஞர் காலத்தில் நடந்த விசயங்கள் எம்ஜிஆர் காலத்தில் எப்படி மாறியது. இவை அனைத்தும் ஜெயலலிதா காலத்தில் எப்படி மேலேறி வந்தது என்கிற பாணியில் எழுதியுள்ளேன். வாசிப்பவர்களே புரிந்து கொள்வார்கள். எது உண்மை? யார் நல்லவர்? எந்த ஆட்சி சிறந்தது?
காமராஜர் காலத்தில் முதுகுளத்தூர் கலவரம் நடந்தது. சென்னையில் சட்டக்கல்லூரியில் ஒரு மாணவனை தொலைக்காட்சியில் படம் எடுக்கின்றார்கள் என்பதனை மறந்து தாக்கிய சம்பவம் எவருக்கும் மறக்க முடியாது. மொத்தம் இடையே 50 வருடங்கள். பெரியார் சொன்ன சாதி மறுப்பு எங்கே போனது? எப்படி சாதி வளர்ந்தது? யார் வளர்த்தார்கள்? படிக்கும் போது புரியும்.
பல நூறு அரசியல் வரலாறு புத்தகங்கள் படித்தவர்களுக்காக இந்தப் புத்தகம் எழுதப்பட்டது அல்ல. என் மகளைப் போல வயதுள்ளவர்கள், பத்திரிக்கை வாசித்து பழக்கம் இல்லாத புத்தக வாசிப்பு இல்லாத 20 முதல் 30 வயதுள்ள இளையர்களுக்காவே எழுதப்பட்டது. யூபிஎஸ்சி தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள் இதனைப் படித்து விட்டு மற்ற தனித் தனி புத்தகங்கள் படித்தால் எளிதில் புரியும். இவர்களுக்கான மொழி, இவர்கள் விரும்பும் நடையில் எழுதி தொகுத்துள்ளேன்.
சென்னை தி.நகர் ராபின்சன் பூங்காவில் திமுக வை அண்ணா 1949 அன்று தொடங்கினார். செங்கல்பட்டு அருகே திருக்கழுக்குன்றம் பகுதியில் நடந்த கூட்டத்தில் எம்ஜிஆர் முதல் முறையாக திமுக வை விமர்சனம் செய்து பேசினார். நடந்த ஆண்டு 1972.
அண்ணாவிற்கு முன் காங்கிரஸ் என்ன சாதித்தது? தமிழகம் என்ன பெற்றது? எம்ஜிஆருக்குப் பின்பு தமிழகம் மாறிய பாதை என்ன? இடையே நடந்தது என்ன?
ராபின்சன் பூங்கா முதல் திருக்கழுக்குன்றம் வரை
(1921 முதல் 2018 வரை நடந்த தமிழக அரசியல் நிகழ்வுகளின் சுவராசிய சம்பவங்களின் பயணம்)
ஜூன் 1
வண்டியில், பைக்கில், மிதிவண்டியில், நடந்து என்று பலதரப்பட்ட மக்கள் பலவிதமான வியாபாரங்கள் செய்தார்கள். கொரானா காலம் என்பதால் இவர்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என்பது என் கொள்கையாக இருந்த காரணத்தால் வீட்டில் ஒரு மனதாகத் தீர்மானம் ஏற்றப்பட்டு இன்று வரையிலும் வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டு வந்து கொண்டிருக்கிறது.
அமேசான், நெட்ஃபிலிக்ஸ் சக்கைப் போடு போட்டது.
மே 1
ஏற்றுமதி நிறுவனங்களில் பெரிய பதவிகளில் இருந்தவர்கள் அலறினார்கள். சம்பளம் குறைக்கப்பட்டவுடன் அவரவர் கடைப்பிடித்த ஆடம்பர வாழ்க்கை அடி வாங்கியது. வட மாநிலத் தொழிலாளர்கள் திருப்பூரை விட்டு காலி செய்து சென்றார்கள். ஏறக்குறைய ஆறு லட்சம் பேர்கள் உள்ளே இருந்தார்கள். இறுதியில் ஒரு லட்சம் பேர்கள் திருப்பூரில் இருந்தார்கள். மது தான் தங்கள் அன்றாட கடமை. குடிவெறி தான் வாழ்க்கை என்று வாழ்ந்த தமிழர்கள் மன நோயில் இருந்தார்கள்.
ஏப்ரல் 1
கொரானா ஊரடங்கு ஆச்சரியத்தை உருவாக்கியது.
மக்களின் மனோபாவத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது. தனிப்பட்ட வாழ்க்கையைச் சரியான முறையில் வாழத் தெரியாதவர்கள், அமைத்துக் கொள்ளாதவர்கள் சங்கடப்பட்டார்கள். கஷ்டப்பட்டார்கள். வீட்டுக்குள் சண்டை போட்டார்கள். ஒரு மகன் மகளைப் பெற்றவர்கள் மிகவும் பயந்தார்கள். வாசிப்பு அனுபவம் என்றால் கிலோ என்ன விலை? என்று கேட்ட பெற்றோர்களும், அதைப் பற்றியே அறியாதவர்களின் குழந்தைகள் செய்த காரியங்கள் அனைத்தும் பெற்றோர்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது.
9 comments:
உங்களின் தேடலும் தொகுப்பும் நன்றாக இருக்கும்... வாழ்த்துகள்...
// பத்திரிக்கை வாசித்து பழக்கம் இல்லாத புத்தக வாசிப்பு இல்லாத 20 முதல் 30 வயதுள்ள இளையர்களுக்காவே எழுதப்பட்டது. //
அருமை...
அனைவருக்கும் சென்று செல்லவேண்டும் என்ற நோக்கில் உங்கள் எழுத்துக்கள் அமைகின்றன. மனம் நிறைந்த வாழ்த்துகள்.
மின்னூல்களுக்கு வாழ்த்துகள் ஐயா
அரசாங்கமே ஆய்வுகளை கண்டு கொள்ளாத போதும் உங்களைப் போன்ற உழைப்புகளை உற்று நோக்கும் போது என்னைப் போன்றவர்கள் செய்யும் மிகச் சாதாரணமானது. உங்கள் புகழ் வாழ்நாளுக்குப் பிறகும் பேசக்கூடியதாக இருக்கும்.
ஆழம் தெரியாமல் காலை உள்ளே விட அது சுழலுக்குள் சிக்கியவனாக கடந்த இரண்டு மூன்று மாதங்களாக மனம் பேதலித்து போய் விட்டது.
உங்கள் மகள் படித்து இது எனக்கு பிடித்தது புரிந்தது என்று பாராட்டினால் என் உழைப்பு சரியானது என்று அர்த்தம்.
சலிக்காமல் எழுதித்தள்ளுகிறீர்கள் அதுதான் ஆச்சர்யமான விஷயம். அடுத்தடுத்த மின்னூல்கள் வரிசையில் இருக்கிறது போல. வாழ்த்துக்கள் ஜோதிஜி அவர்களே.
தூங்கும் நேரம் தவிர்த்து மற்ற முழு நாளும் உழைப்பதற்கான மணித்துளிகள் என்று நான் எப்போதும் செயல்படுவேன். நன்றி ஞானசேகரன்.
Post a Comment