Tuesday, December 31, 2019

நன்றி 2019


@ இந்த வருடத்தின் கடைசி நாள்.  எழுத வேண்டிய அனைத்தும் எழுதிய திருப்தி வந்துள்ளது. இந்தப் பதிவில் எதுவும் எழுதும் எண்ணமில்லை.

2013 ஆம் ஆண்டு தான் தீவிரமாக எழுதினேன். மொத்தம் 167 தலைப்புகள். அதாவது இரண்டு நாளைக்கு ஒன்று என்ற கணக்கு. அதற்குப் பிறகு இந்த ஆண்டு தான் 150 தலைப்புகள் வந்துள்ளது.




இந்தப் புத்தங்கள் கிண்டில் அன் லிமிட் ல் நீங்கள் இருந்தால் இலவசமாக வாசிக்க முடியும்.  உங்கள் எண்ணங்கள் நிறைவே 2020 உதவக்கூடியதாக அமைய என் வாழ்த்துகள். தொடர்ந்து வரும் நண்பர்களுக்கு நன்றி. மீண்டும் (இடைவெளிவிட்டு) சந்திப்போம்.

நான் வாழும் ஊரை, என்னை வளர்த்து ஆளாக்கிய ஊரை உலகமே தெரிந்து கொள்ளும் வண்ணம் முழுமையாக பல்வேறு நிலையில், பலவிதமான பார்வையில், ஒவ்வொரு சூழலையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பாரபட்சமின்றி எழுத்தாக மாற்றியுள்ளேன்.  திருப்தி. மகிழ்ச்சி.







@ இன்று மதியம் துவங்கி ஜனவரி 5 வரைக்கும் 2019 புத்தகத்தை இலவசமாக வாசிக்க முடியும். பெறுக. மகிழ்ச்சியுடன் 2019 திரும்பிப் பாருங்கள். 

Amazon Kindle Pen to Publish 2019  என்ற போட்டி மட்டும் என் பார்வையில் படாமல் இருந்தால் நிச்சயம் கடந்த சில வாரங்கள் செயல்பட்டது போலச் செயல்பட்டு இருக்க மாட்டேன் என்பது உண்மை.  ஏதோவொரு நிர்ப்பந்தம் நம்மை உந்தித் தள்ளும் போது, அதற்குள் நம்மைப் பொருத்திக் கொள்ளும் போது, நாம் அதன் பின்னால் ஓடத் துவங்கும் போது மட்டுமே நமக்குள் இருக்கும் திறமைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக வெளி வரத் துவங்குகின்றது.  வெற்றி மற்றும் வெற்றியை அடைய இன்னமும் காலம் நம்மைக் காத்திருக்கச் சொல்கின்றது என்ற தத்துவம் நமக்குப் பலவிதமாகப் புரிய வைக்கும் என்பதனை உணர வைத்தது.  கிண்டில் போட்டி மூலம் என் பழைய புத்தகங்கள் அனைத்தும் இன்றும் உலகம் முழுக்க வாழும் தமிழர்களின் பார்வைக்குச் சென்று சேர்ந்துள்ளது. நம் வாழ்வில் இது போன்ற சூழலில் தான் நம்மைச் சுற்றியுள்ளவர்களின் உண்மையான குணாசிதியங்கள் நமக்குத் தெரிய வரும்.

@ எவரெல்லாம்   எதிர்பார்ப்பின்றி     நமக்கு       உதவக்      காத்திருக் கின்றார்கள்.  வேடிக்கை பார்க்கின்றார்கள் என்பதெல்லாம் உணர முடியும். வாழும் போதே நாம் இதுவரையிலும் வாழ்ந்த வாழ்க்கை மூலம் பெற்ற நண்பர்களின் அனைத்து விதமான குணாதிசயங்களையும் கண்டு கொள்ள முடியும். வெற்றி எதிரிகளை உருவாக்கும். வெற்றி பெறாத போது கிடைக்கும் அனுபவங்கள் மனதில் உரமாக மாறும். மாற்றிக் கொள்ள வேண்டும். இதுவும் கடந்து போகும் என்பதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். மனிதர்கள் பேசும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டுப் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்பதற்கு அப்பாற்பட்டு, சாதி, மதம், அரசியல் கொள்கைகள், பொறாமை போன்ற எண்ணங்கள் அனைத்தும் எப்படி அவர்களை மாற்றி வைத்துள்ளது என்பதனையும் கண்டு கொண்டேன். நம் எண்ணங்கள் தான் நம்முடைய வாழ்க்கை. எண்ணம் போல வாழ்க்கை.

ஆனால் வாழ்க்கை என்பது அடுத்த நிமிட ஆச்சரியங்களால் மட்டுமே நம்மை வழி நடத்துகின்றது. நம்மால் உணர முடியாது. நம்மால் புரிந்து கொள்ளவும் முடியாது. எப்போதும் எதுவும் இங்கே யாருக்கும் மாறலாம். மாற்றும்.

நிஜ வாழ்க்கை ரீல் வாழ்க்கை என்று இரண்டு பகுதிகள் உண்டு.  நிஜ வாழ்க்கையில் உங்களுக்கு எதிரியாக மாறுபவர்கள் உங்களின் பொருளாதாரம், திறமைகள் பார்த்து உருவாகக்கூடும்.  ஆனால் ரீல் வாழ்க்கை என்ற இணைய வாழ்க்கையில் உங்களின் அரசியல் கொள்கைகள், நீங்கள் எழுதும், ஆதரிக்கும் அரசியல் கட்சிகள் மூலம் உருவாகின்றார்கள் என்பதனை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்.   நம் அரசியல் எப்படியுள்ளது?

  மேல்மட்ட அரசியல் என்பது வெவ்வேறு கொள்கைகள் கொண்டவர்கள் தங்கள் கொள்கை முழக்கத்தை பொது வெளியில் முழங்கிக் கொண்டு பரஸ்பரம் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு ஆதாயம் அடைகின்றார்கள்.  அடுத்த கட்டமென்பது மேலே உள்ளவர்களை எப்போதும் ஆதரித்து தங்கள் சொந்த வாழ்க்கையில் அடைய வேண்டிய சுகங்களை எளிதில் பெற்று விடுகின்றார்கள்.  கடைசி நிலையில் உள்ளவர்கள் தான் இணையத்தில் செயல்படுபவர்கள் அல்லது வாக்களிக்கும் பொது மக்கள்.  இவர்கள் தாங்கள் நம்பும் ஒரு விசயத்தை எழுத, பேச ஏராளமான எதிரிகளை இயல்பாகப் பெற்று விடுகின்றார்கள். ஓரங்கட்டப்படுகின்றார்கள்.

அடுத்த வீட்டில் நடப்பது என்ன? எதிர் சந்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு உதவ மனமில்லாதவர்கள் அத்தனை பேர்களும் இணையத்தில் உலகமே நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகின்றார்கள்.  நீங்கள் உங்கள் ஆசைகளை, விருப்பங்களை, அடைய விரும்பும் இலக்குகளைச் செயலாக்கத்தில் காட்டுங்கள்.  பேச்சை விடச் செயல் முக்கியம்.  பலரின் செயல்கள் இந்த நாட்டின் வளர்ச்சிக்கு உதவியது.  பேசிக் கொண்டே இருந்தவர்கள், இருப்பவர்களின் குடும்பத்தின் பொருளாதாரம் மட்டுமே வளர்ந்தது, வளர்ந்து கொண்டே இருக்கின்றது என்பதனையும் எப்போது நினைவில் வைத்திருங்கள்.

இணையத்தில் மட்டும் எதிரிகளை பெற்று விடாதீர்கள். நிஜ வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் எதிரிகள் உங்கள் திறமைகளை வெளியே கொண்டு வரக் காரணமாக இருக்கின்றார்கள்.  நெருக்கடியான சூழலை உருவாக்கி உங்களிடம் மறைந்து கிடக்கும் அத்தனை திறமைகளையையும் வெளி வரக் காரணமாகவும் இருக்கின்றார்கள்.  நெருங்கிய நட்புகளின் துரோகங்களை விட நிஜமான எதிரிகளை எதிர் கொள்ளப் பழகுங்கள்.  அது இணையத்தில் வாய்ப்பில்லை. மன உளைச்சல் தான் உங்களுக்கு இறுதியாகக் கிடைக்கும்.

உங்கள் தாத்தாவின்  தாத்தவை  நீங்கள்  பார்த்து   இருக்க    வாய்ப்பில்லை.  உங்கள்  பேரனின் பேரனையும் பார்க்கப் போவதில்லை.  உங்களுக்கு இந்த பூமி சொந்தமானது இல்லை.  உங்கள் வாழ்க்கை குறிப்பிட்ட காலம் வரைக்கும் இங்கே வாழ உங்களை அனுமதிக்கும்.  கவலைப்பட வேண்டாம். இயற்கை அதனை வேலையை எப்போதும் சரியாகவே செய்து கொண்டு வந்து கொண்டிருக்கின்றது.

செய்யும்.

கலங்காதே. மனம் மயங்காதே.

மகிழ்ச்சி. அனைவருக்கும் 2020 வாழ்த்துகள்.

5 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உழைப்பின் இலக்கணமான உங்களுக்கு வரும் ஆண்டும் சிறந்த ஆண்டாக அமையட்டும். இனிய 2020 புத்தாண்டு வாழ்த்துக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

பற்பல உண்மைகள்...

எனக்கு யார் எதிரி...? என்பது தான் அடுத்த பதிவாக எழுத நினைக்கிறேன்...!

G.M Balasubramaniam said...

நண்பர் ஒருவர் கூறுவார் படுத்து இருக்கும்போதும்கால்களை ஆட்டிக் கொண்டு இருக்க வேண்டும் இல்லாவிட்டால் தூக்கிச் சென்று விடுவார்கள்

ஸ்ரீராம். said...

வரும் ஆண்டு(கள்)  மகிழ்ச்சியாகவும் வளமாகவும் அமைய வாழ்த்துகள்.

karunakaran said...

இந்த ஆண்டு௨௦௨௦இல் முன்னூறு தலைப்புகள் எழுத வாழ்த்துங்கள்