Saturday, October 05, 2019

அன்புள்ள சீனாதானா



அன்புள்ள சீனாதானா அவர்களுக்கு,

75வது பிறந்த நாள் கொண்டாடி இருக்கும் உங்களிடம் நான் இங்கு நலம். கொசு அங்கு நலமா? என்று கேட்கும் கல்நெஞ்சக்காரன் அல்ல. ஆனாலும் என்னமோ  தெரியவில்லை. சில நாட்களாக நீங்கள் தொடர்ந்து சிறையில் இருப்பது என் மனதைப் பிசைவதாக உள்ளது. நீங்கள் சிறைக்குச் சென்ற  23ந் தேதியிலிருந்து என்னால் சரியாகச் சாப்பிடவே முடியலை. உங்கள் நினைப்பாகவே உள்ளது. 

முன்பு இரண்டு ஈடு இட்லி சர்வசாதாரணமாக உள்ளே போய்க் கொண்டிருந்தது. இப்போது பத்து தள்ளுவதற்குள் பெரும்பாடாகி விடுகின்றது.

அதுவும் நம்மூர் மிளகாய் சட்னி பற்றித் தான் உங்களுக்குத் தெரியுமே? எந்த மாவட்டத்திலும் கிடைக்காத காரைக்குடி பகுதிக்கு உண்டான சிறப்பான அந்த சட்னி நீங்க இருக்கும் இடத்தில் கிடைக்கின்றதா? என்று தெரியவில்லை. அதனை 3500 கிலோ மீட்டர் கெட்டுப் போகாமல் எப்படி அனுப்பி வைப்பது என்றும் எனக்குப் புரியவில்லை.

நீங்கள் வீட்டிலிருந்தால் கூட பேத்தி (மட்டும்) வாழ்த்து சொல்லியிருப்பார். ஆனால் இப்போது நீங்கள் பெற்றுள்ள சிறப்புச் சலுகையில் யார் வந்து பார்ப்பார்கள்? நீண்ட தாமதத்திற்குப் பிறகு மன்மோகன் சிங் உடன் மாபியா தலைவியும் வந்து சிறைச் சாலையில் பார்த்துள்ளார். ஒரு வேளை நாம் இருக்க வேண்டிய இடத்தை நீங்கள் இருப்பதைக் கண்டு வர வந்து இருப்பார்களோ? அதிலும் பொருளாதார மேதை சொன்னாரே ஒரு ஸ்டேட்மெண்டு. 

அதிகாரிகள் தான் காரணம். சீனாதானா காரணமில்லையென்று.  என்னவொரு புத்திசாலித்தனம். நம் கலாச்சாரத்தில் பொண்டாட்டி தப்பு செய்தால் முதலில் கணவனைத்தானே கைமா செய்வார்கள். அப்புறம் தானே மற்ற பேச்சுகள். அவர் தெரிந்து பேசினாரா? இல்லை நாமும் இது போல மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாகச் சொன்னாரா? எனக்குத் தெரியவில்லை?

கபில்சிபல், அபிஷேக் சிங்வி முதல் பெரிய சிறிய முதலைகள் எல்லாம் உச்ச நீதிமன்றத்திற்குள் மட்டுமல்ல வெளியேயும் தங்கள் ஆதிக்கத்தை நிலை நாட்டி நீதிபதிகளை ஏவலாளி போல வைத்திருந்தார்கள். அவர்கள் விரும்பினால் நள்ளிரவில் கூட வீட்டிலிருந்தபடியே ஜாமீன் வாங்க முடியும். எல்லோரும் அவர்களைப் படு பயங்கர திறமைசாலிகள் என்றே நினைத்திருந்தனர்.  ஆனால் அதிகாரம் இருந்தால் அவல் கூட சர்க்கரைப் பொங்கலாகத் தெரியும் என்பது இப்போது உங்களுக்குப் புரிகின்றதா?

உங்கள் நெருங்கிய தோழர் ஓபி சைனி கூட சில நாட்களுக்கு முன்பு பதவி ஓய்வு பெற்றுப் போய்விட்டார். எத்தனை முறை உங்களைக் காப்பாற்றி இருப்பார்.  மளிகைக்கடை  பட்டியல் போல எவருக்கும் கிடைக்காத ஜாமீன்கள் அணி வகுத்துத் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்க நீங்களும் மகனும் ஆனந்தமாக இருந்த காலம் இப்போது கனாக்காலமாக எனக்குத் தெரிகின்றது.  இப்போது நீதிமான்கள் உங்கள் கேஸ் வந்தாலே பின்னால் கேஸ் போகும் அளவிற்குத் தெரித்து ஓடுகின்றார்களாமே? உண்மையா?

இதுவரையிலும் நீங்கள் அடையாத புகழை இந்த சமயத்தில் பெற்று இருங்கீங்க. எனக்கு நிறையப் பெருமையாக இருக்கிறது அய்யா?

இரண்டடுக்கு பாதுகாப்பு சூழ்ந்து வாழ்ந்த உங்களுக்கு எட்டடுக்கு பாதுகாப்பு கொடுத்திருக்கும் பாஜக வை நீங்கள் பாராட்டியே ஆக வேண்டும். இந்த சமயத்தில் உங்கள் பக்கத்து அறையில் இருப்பவர்கள் கூட உங்கள் பக்கம் வர முடியாத சூழலில் தான் இருப்பார்கள். வேறொன்றுமில்லை. தங்களையும் பட்டியலில் கொண்டு வந்து விடுவார்களோ என்ற பயத்தில் பத்தடி தள்ளித் தான் இருப்பார்கள்.

ஒவ்வொரு முறையும் நீங்கள் நீதிமன்றத்திற்கு வந்த காட்சியைத் தொலைக்காட்சியில் பார்க்கும் போது. என் கண்ணில் ஆறாக நீர் பெருக்கெடுத்து ஓடுகின்றது. மனைவி கூட ஆறுதல் சொல்ல மறந்து என்னை ஆச்சரியமாகப் பார்க்கின்றார். நிச்சயம் இன்று நீதி வெல்லும். அநீதி ஒழியும் என்று மனதிற்குள் உரக்கச் சொல்லிக் கொண்டேன். ஆனால் நீதிமான்கள் தங்களைப் புண்படுத்தினார்கள் என்று கேள்வியுற்றேன். உங்கள் சிறை அறையில் உட்கார நாற்காலி வைத்துக் கொள்ளக் கூட உரிமையில்லை போல. 

வீட்டுச் சாப்பாடு சாப்பிடக்கூட உரிமை மறுத்து இப்போது தான் பரிதாபப்பட்டு வழங்கி உள்ளார்கள் போல. என்ன செய்வது? நாம் உணவுக்காக வாழ்ந்த பரம்பரை ஊர் உலகத்திற்குத் தெரியுமா? உணவின் சுவை தான் புரியுமா?  வாழ்க்கை தான் எவ்வளவு கொடுமையானது பார்த்தீர்களா? மணியடித்தால் சோறு என்று வாழ்க்கைப் பாதை மாறும் என்று நினைத்து இருப்பீர்களா?

உங்கள் உரிமையை உங்களால் கூட  நிலைநாட்ட முடியவில்லை. உங்கள் மகன் ஒரு பக்கம். உங்களின் எடுப்பு தொடுப்புகள் மறுபக்கம். எவராலும் முடியாமல் உங்களை மீண்டும் மீண்டும் அவஸ்த்தைக்குள்ளாக்குவது கண்டு நெஞ்சே வெடித்து விடும் போலிருக்கிறது.

கார்ப்ரேசன் வண்டியில் அழைத்துச் செல்லும் போது தெற்காசியாவின் சிறந்த நிதி அமைச்சர் என்ற பட்டமும், ராஜா குடும்பத்துப் பேரன் போன்ற பெருமைகளெல்லாம் டெல்லி வீதிகளில் சிதறிக் கிடப்பதைக் கண்டு வருத்தமாக உள்ளது. மீண்டும் திஹார் உங்களை அன்போடு வரவேற்கின்றது என்று அழைத்துச் சென்றமைப் பார்த்து உள்ளம் குமுறுகின்றது.

உங்களுக்குத் தேவைப்படும் அடிப்படை வசதிகளுக்கே அல்லாட வைக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டேன். வசதிகள் இல்லாமல் வாழ்வது எப்படி? என்பதனை ஜன்டா கற்றுக் கொடுப்பார் போல. எண்களில், எழுத்துக்களில் மட்டுமே இந்தியப் பொருளாதாரத்தைக் கரைத்துக் குடித்த உங்களுக்கு அமித் அய்யா இப்போது நிஜமான இந்தியர்கள் வாழும் வாழ்க்கையை கற்றுக் கொடுக்கின்றார் என்ற எதார்த்தத்தைப் புரிந்து கொள்ள உதவுகின்றார் போலும்.

உள்ளே தொலைக்காட்சி வசதி செய்து கொடுத்து இருக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டேன். கண்ட கருமாந்திர சேனல்கள் பக்கம் செல்ல வேண்டாம்.

அவர்களுக்கு வேறு வேலையிருக்காது. உங்களை மாதிரி ஜிடிபி, வேலை இழப்பு, உற்பத்திக்குறைவு என்று ஏதேதோ நான்கு வெட்டிப்பசங்க பொருளாதார நிபுணர்கள் என்ற பெயரில் உளறிக் கொண்டிருப்பார்கள். கேட்கக் கேட்க உங்களின் அறிவுக்கூர்மை நட்டக்குத்தலா எழுந்து நிற்கும்.

பொறுக்க முடியாமல் அடுத்து ட்விட் தட்டுவீர்கள்? இப்போது அதுவா நமக்கு முக்கியம்?

காலாற நடக்க வேண்டும். மூன்று நேரம் பிடித்த சாப்பாடு சாப்பிட வேண்டும். நேரத்திற்குப் போட வேண்டிய மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். சுருக்கமாகச் சொல்லப் போனால் அண்ணன் எடப்பாடி வழியில் நாம் செல்ல வேண்டும். மானம் பெரிதா? பதவி பெரிதா? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?

உங்களுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லோரும் எப்படியெல்லாம் பிழைக்கக் கற்றுக் கொண்டுள்ளார்கள் என்பது உங்களுக்குப் புரிபடுவதே இல்லை? பாருங்கள் இங்கே ஒரு கூத்து நடந்தது.

ஆளுநர் அழைத்தார். ஆர்ப்பாட்டம் வாபஸ் என்கிறார்கள். என்ன பேசினார்? எதைக் காட்டினார்? எப்படி மாறினார்கள்? என்பது போன்ற ராஜரகசியங்கள் உங்களுக்குத் தெரியாதது அல்ல. நீங்களும் இவர்களைப்போல நான்கு ட்விட் தட்டிவிடுங்களேன்.

என் நண்பரிடம் உங்களைப் பற்றிப் பேசத் தொடங்கினால் எப்போதும் என்னைத் திட்டிக் கொண்டேயிருக்கிறார் அய்யா.  

ஆதாரம் இருந்தால் சமர்ப்பிக்க வேண்டியது தானே? ஏனிந்த ஜாலக்கு வேலை? என்கிறார்.  

நான் என்ன சொல்ல முடியும்?  நீங்க வெளியே வந்தால் புத்திசாலித்தனமாகப் பேசுவீர்கள்? பலரின் டவுசர் கழட்டப்படும். இது அவர்களுக்குத் தெரியாமலா இருக்கும்.  வச்சு செய்வது எப்படி? என்பதையே உங்கள் காண்டி தானே இந்தியாவிற்கே கற்றுக் கொடுத்தது.  

நீங்கள் உருவாக்கிய திட்டங்களைத்தானே புது லேபிள் ஒட்டி இங்கே பம்மாத்து காட்டிக் கொண்டிருப்பது போன்ற ராஜரகசிங்களை வெளியில் சொல்ல முடியுமா? உங்களைப் போன்றவர்கள் சொல்ல வந்தால் எங்கள் கதி என்னவாகும் என்று அவர்கள் யோசிப்பார்கள் தானே?

கபில்சிபல் என்னன்னவோ செய்து தான் பார்க்கின்றார்? உச்சக்கட்டமாக அய்யா சாமி, அவருக்கு வயித்தால போகிறதென்று வேறு புலம்பித்தான் பார்க்கின்றார். என்ன செய்வது? ஒருவருக்குக்கூட மனசாட்சியே இல்லையே?

உங்கள் அருந்தவ புதல்வன் டிவிட்டரில் உங்களுக்கு ஒரு கடிதம் எழுதி வெளியிட்டிருந்தார். கதை கதையாம் காரணமாம். அந்த காரணத்திற்கு ஒரு தோரணமாம் என்று தீட்டியிருந்தார். நீங்கள் வேறு அங்கிருந்தபடி டிவிட்டரில் நாட்டுப் பொருளாதாரம் குறித்துக் கவலைப்படுவதைப் பார்த்து நிறையப் பெருமையாக உள்ளது.

நான் என் மகளிடம் தினமும் சொல்கிறேன். "சுதந்திரப் போராட்ட விடுதலை வீரரும் தியாகியுமான வஉசி க்குப் பிறகு எங்கவூரு ப. சி தான்" என்று உங்களைப் பற்றி பெருமையாகச் சொல்லி வைத்துள்ளேன்.

அவர் உடனே இந்திராணி முகர்ஜி, சுப்பி என்ற சுப்ரமணியன் சுவாமி வெளியிட்ட பட்டியல் பற்றிப் பேசத் தொடங்கினார். உனக்குப் பரிச்சை இருக்கிறது. போய் படிம்மா என்று அன்போடு அனுப்பி வைத்து விட்டேன்.

பின்குறிப்பு

மறக்காமல் உங்கள் கையில் உள்ள அலைபேசியில் இருக்கும் டிவிட்டரை கையோடு அன்இன்ஸ்டால் செய்து விடவும். முடிந்தால் மகனை சமூக வலைத்தளங்களிலிருந்து நீங்கள் வெளியே வரும் வரைக்கும் விலகியிருக்கச் சொல்லவும். பேட்டி என்று யாராவது கேட்டு வந்தால் வேட்டி அவிழ்வது கூட தெரியாத அளவுக்கு அவர் பேசும் பேச்சுக்களை நிறுத்தச் சொல்லவும்.

இது உங்களின் விடுதலைக்கு உதவுமா? என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் நிச்சயம் உங்கள் உள்ளே இருக்கும் நாள் வரைக்கும் உங்களுக்குத் தேவைப்படும் அடிப்படை வசதிகளில் பிரச்சனையில்லாமல் இருக்கவாவது உதவும் என்று நம்புகிறேன்.

இப்படிக்கு.

உங்கள் ஊர்க்காரன்.

()












5 comments:

KILLERGEE Devakottai said...

பதிவை ரசித்தே படித்தேன் இருப்பினும் இப்பதிவு 'பசி'க்கு ஆறுதலா... ஆட்டுதலா... என்பது குழப்பமாகவே உள்ளது.

அது ஒரு கனாக் காலம் said...

உங்களுக்கு வஞ்ச புகழ்ச்சி நன்றாக வருகிறது .

எனக்கு, ஒரு விஷயம் மட்டுமே, சிதம்பரம், மற்றும் அவருடைய பேர் போன வக்கீல்கள் , மகன், வடக்கு பத்திரிகைகள் எல்லாரும் ஏன் சிதம்பரம் மட்டும் கைதானார்? , முதலில் அந்த முடிவு எடுத்தவர்கள் IAS ஆபிசர்கள் தான் , சிதம்பரம் வெறும் கையெழுத்து தான் போட்டார் , என சால்ஜாப்பு சொல்கிறார்கள் .

அங்க தான் நிக்கறான் நம்ப சிதம்பரம் , முடிவு ஏற்கனேவே எடுக்கப்பட்டு இருந்தாலும் , இந்திராணி முகர்ஜி மற்றும் பீட்டர் முன்பு , பேரம் பேசி , தான் அதை செய்தது போல காண்பித்து, அதற்க்கு ஒரு தொகையும் பெற்று , அது கார்த்திக்கின் வங்கி கணக்கில் போய் சேர்ந்தது - 420 குற்றமாகும். எப்பொழுது யார் கையெழுத்து இட்டார்கள் என்பது முக்கியமல்ல.

கிருஷ்ண மூர்த்தி S said...

கில்லர்ஜி! இதிலும் கூட சந்தேகமா? இம்சை அரசர்களுக்கு இப்படித் துதிபாடித்தானே சேதி சொல்லியாக வேண்டும்! :-))))

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இப்பதிவினை முன்னர் படித்த நினைவு. முகநூலில் பகிர்ந்திருந்தீர்களோ?

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கடிதம். அவருக்கு யார் இப்படி சொல்லப் போகிறார்கள்...