அங்கீகாரம்
டாக்டர் பஜிலா ஆசாத்
பொதுவாக எந்த ஒன்றை செய்யும்போதும் அதற்கான அங்கீகாரத்திற்காக மனம் ஏங்கும். வெளியிலிருந்து அங்கீகாரம் கிடைத்தாலே தவிர நீங்கள் செய்வதை உங்களாலேயே அங்கீகரிக்க முடியாமல் மனம் தவிக்கும்.
அங்கீகரிக்கப் படாத எந்த ஒரு செயலுமே உங்களுக்கு சாதனையாகவே தெரிய மறுக்கிறது. ஆனால் அந்த அங்கீகாரத்திற்கான ஏக்கமே, அது கிடைக்காத போது உங்களுக்கு ஒரு சலிப்பை ஏற்படுத்தி விடுகிறது. அங்கீகாரத்தை எதிர்பார்ப்பது தவறல்ல. ஆனால் பிறரது அங்கீகாரமென்பது அவர்களின் விருப்பு வெறுப்பிற்கும் பல் வேறு விதமான கோணங்களுக்கும் உட்பட்டது என்பதை புரிந்து கொண்டால் அங்கீகாரத்திற்காக இல்லாமல் ஆத்ம திருப்திக்காக செயல் படத் தொடங்கி விடுவீர்கள்.
அதனால், எதை செய்தாலும் நீங்கள் செய்யக் கூடிய அந்த விஷயம் முதலில் உங்களுக்கு திருப்தி தரக் கூடிய ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை மனதில் எண்ணிக் கொள்ளுங்கள், இது நிச்சயம் வெற்றி அடையும் என்ற தன்னம்பிக்கையோடு செயலைத் தொடருங்கள்.
பிடித்த விஷயத்தை செய்ய முடியவில்லையென்றால் செய்து கொண்டிருக்கும் விஷயத்தை பிடித்தமானதாக உருவாக்கிக் கொள்ள உங்கள் எண்ணத்தை சீர் செய்யுங்கள். எந்த மாதிரியான எண்ணம் உங்கள் ஆற்றலை தூண்டி விட்டு நீங்கள் செய்யும் வேலையை உங்களுக்கு சுவாரஸ்யமானதாக மாற்றக் கூடும் என் சிந்தித்துப் பாருங்கள்.
வெற்றி என்பது பணத்திலோ அல்லது புகழிலோ இல்லை. உங்கள் செயலால் இந்த பிரபஞ்சம் அடையும் பலனில் இருக்கிறது.
அது ஒருவருக்கானதாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு நாட்டுக்கோ இந்த உலகிற்கோ ஆனதாக இருந்தாலும் சரி, அந்த செயலைத் தொடர்ந்து செய்வதற்குப் பெருமைப் படுங்கள்.
பொதுவாக நம் கனவுகளோடும் கற்பனைகளோடும் எப்போதும் நம் வாழ்க்கையை ஒத்து பார்த்து நிறைவில்லாத தன்மையில் பெரும்பாலும் உழல்கிறது மனம்,
அதனால் நாம் செய்து கொண்டிருக்கும் எந்த வேலைக்கும், நம்மிடம் இருக்கும் எந்த பொருளுக்குமான மதிப்பு நமக்கு தெரியாமலே போகிறது.
எத்தனை நல்ல விஷயங்கள் நடந்திருந்தாலும் நீங்கள் விரும்பி, நடக்காமல் நழுவிப் போகும் அந்த ஒன்றில் உங்கள் முழு கவனமும் தேங்கி, சறுகிய பாறையில் வழிந்தோடும் நீராக மகிழ்ச்சியெல்லாம் வழிந்தோட ஆற்றாமையும் வெறுமையுமாக மனம் பாசி படிந்து போகிறது. எனக்கு எதுவுமே சரியாக அமைவதில்லை நான் கொடுத்து வைத்தது அவ்வளவு தான் என்று இயலாமையாக தோன்றி விடுகிறது. மகிழ்ச்சி அந்த கிடைக்காத ஒன்றில் மறைந்து கொண்டு கண்ணாமூச்சி ஆட, வாழ்க்கை சலிப்பு தட்டுகிறது.
உண்மையில் உங்களுக்கு கிடைத்திருக்கும் எந்த வேலையாக இருந்தாலும் அதை இந்த பிரபஞ்சத்தோடு தொடர்பு படுத்தி பார்த்தால் அதன் மதிப்பு உங்களுக்கு பெரிதாகத் தோன்றும். வாழ்வின் அர்த்தம் புரியும்.
அதாவது, நீங்கள் எது செய்தாலும் ஏதோ என் கடமையை செய்கிறேன் என்றில்லாமல் எதற்காக செய்கிறோம் என்னும் அந்த புரிதல் இருந்தால், அதனோடு ஒரு குறிக்கோளை இணைத்துக் கொள்ள முடிந்தால், அந்த வேலை சலிப்பில்லாத சந்தோஷத்தை தரும்.
ஏனென்றால். எதற்காக ஒன்றை செய்கிறோம் என்று புரிந்து செய்யும் போது, அதை ஈடுபாட்டோடு செய்ய முடியும். தவிர உங்களுக்கு கிடைக்கும் சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளும் போது, அதில் முன்னேற்றத்தை பார்க்கும் போது, அதன் வெற்றியை தரிசிக்கும் போது வாழ்க்கை தொய்வில்லாமல் struck ஆகாமல் சுவாராஸ்யமானதாக இருக்கும்.
உண்மையில் வாழ்வின் முன்னேற்றம் என்பது எங்கோ கண்ணுக்கெட்டாத தூரத்தை எட்டிப் பிடிப்பது மட்டுமல்ல. உங்கள் அன்றாட செயல்களை அழகான முறையில் அமைத்துக் கொள்வதிலும் இருக்கிறது. அது உங்கள் கைவசமே இருக்கிறது.
உற்சாகமான உழைப்பும், புத்திசாலித்தனமான சிந்தனைகளும் இருந்தால் எதிலும் புதுமை படைக்கலாம். ஒரு மணி நேரம் செய்யக் கூடிய வேலையை பயிற்சியின் மூலம் அதற்கு முன்பாக முடிக்குமளவு செய்ய தேர்ச்சி பெறுவதும் முன்னேற்றம்தான்.
உங்களுடைய எந்த ஒரு வேலையையும் ஒவ்வொரு முறை செய்யும் போதும் அதன் தரத்தை, அதன் வேகத்தை இன்னும் நேர்த்தியாக கூட்டுமளவு செய்வதும் ஒரு சாதனை தான். உங்களை நீங்களே தட்டிக் கொடுத்துக் கொள்ளும் சின்ன சின்ன சாதனைகளே பெரிய சாதனைகள் படைக்க உங்களை ஈர்த்து செல்லும்.
உங்களுடைய ஒரு நாள் எப்படி போகிறதென்று சின்ன சின்ன விஷயங்களாக இருந்தாலுமே லிஸ்ட் போட்டு பாருங்கள். நீங்கள் என்னவெல்லாம் செய்கிறீர்கள் என்று எழுதி பார்க்கும் போது, நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதை விட அதிகமான வேலைகளை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்கு புலப்படும் அல்லது இன்னும் நேர்த்தியாக பயனுள்ளதாக நேரத்தை செலவிடலாமே என உங்களை productive ஆக சிந்திக்கச் செய்யும்.
அப்படி நீங்கள் உங்கள் அன்றாட செயலை பட்டியலிடும்போது உங்களுடைய ஒரு நாளில் உங்களுக்குப் பிடித்த விஷயம் எது நடக்கிறது, உங்களுக்குப் பிடிக்காத விஷயங்கள் எத்தனை செய்கிறீர்கள், அதை உங்கள் மனம் எந்த அளவு ஏற்றுக் கொண்டுள்ளது அல்லது முரண்படுகிறது, என்பதை அலசிப் பார்க்க முடியும். உங்கள் சூழலில் உங்கள் திறமைக்கு தீனி இருக்கிறதா அல்லது திறமை அற்ற விஷயங்களில் உங்கள் நேரம் வீணாகிக் கொண்டிருக்கிறதா என்பதை முடிவு செய்யுங்கள்.
தவிர, உங்களுக்கு பிடித்த சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்துப் பார்த்தால் அவர்கள் எந்த வகையில் தங்களை மேம்படுத்திக் கொண்டார்கள் என்பது புலப்படும். அப்படி புலப்படும்போது, உங்களையும் அறியாமல் உங்கள் ஆற்றல் விரிவடையும். உங்களுடைய குறிக்கோளுக்கு ஏற்ப விருப்பத்திற்கு ஏற்ப உங்கள் திறமை அகன்று கொடுக்கும். என்னால் முடியும் எனும் உந்து சக்தி எழும்.
மொபைல் ஃபோன்கள் பயன்பாட்டிற்கு வந்த புதிதில் அவற்றில் பயன்படுத்திய சிம்பியன் ஓ.எஸ் பற்றி அறிவீர்களா? மனிதர்கள் செல்லும் இடங்களிலெல்லாம் தொடர்பில் இருக்கும் மொபைல் ஃபோன் இயங்குவதற்கு ஒரு இயங்கு தளம் தேவை என்ற ஒற்றை குறிக்கோளில்தான் அந்த சாஃப்ட்வேரை உருவாக்கினார்கள்.
இன்று உலகையே உள்ளங்கைகளில் கொண்டு வந்து சேர்க்கும் ஸ்மார்ட் ஃபோன்களை உருவாக்க அடித்தளம் அமைத்துக் கொடுத்த சிம்பியன் ஓ.எஸ் உருவாக்கியவர்களுக்கு எந்த அங்கீகாரமும் தேவைப் படவில்லை. David Potter ஆரம்பித்த PSION Software Co கொண்டு வந்த அந்த செயலியை இன்று பெரும்பாலானவர்கள் அறிந்திருக்காததைப் பற்றியும் அவர்களுக்கு கவலை இல்லை. ஏனென்றால் அவர்கள் குறிக்கோள் இந்த உலகை தங்கள் இணைக்க வேண்டும் என்பதுதானே தவிர அதற்கான அங்கிகாரம் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதல்ல.
பொதுவாக எது செய்தாலும் என்ன purpose க்காக செய்கிறோம் என்பதை யோசியுங்கள் அல்லது ஒரு ஆக்கபூர்வமான் purpose சை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள். அப்படி செய்யும் போது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் சேர்த்தே நீங்கள் உருவாக்கிக் கொள்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்வீர்கள்.
2 comments:
டாக்டர் உதய மூர்த்தி கட்டுரைரை படித்தது போல இருக்கிறது...
எதார்த்தம் எப்படி இருக்க வேண்டுமோ? எது சரியோ? அப்படி இருந்தால் மட்டுமே வாசிக்கும் போது நமக்கு தாக்கத்தை உருவாக்க முடியும். இதை வாசித்து முடித்த பின்பு எனக்கு பெரிய மகிழ்ச்சி உருவானது.
Post a Comment