Friday, July 05, 2019

உங்கள் பெயர் என்ன?


பா.ஜ.க ஆட்சியில் இறந்து போன சமஸ்கிருத மொழி மீண்டும் புதுப்பிக்கப்படுகின்றது என்ற அரசியல் கட்சிகள் கதறுகின்றார்கள்?

அது உண்மை என்றே எடுத்துக் கொள்வோம்.

ஆனால் நம் நிஜ வாழ்க்கை எப்படியுள்ளது?

+++++

சந்திக்கும் நண்பர்கள், உறவினர்களின் குழந்தைகளின் பெயர்களைக் கடந்த சில வருடங்களாகக் கேட்டுத் தெரிந்து கொள்வதே இல்லை. கேட்கும் போதே நம்மை அறியாமல் மிகப் பெரிய கோபம் வந்து தொலைத்து விடுகின்றது. அது அடுத்தடுத்த பஞ்சாயத்துக்களையும் கொண்டு வந்து விடுகின்றது. குழந்தைகள் மேல் தவறில்லை. பைத்தியக்கார அப்பாவும் அம்மாவும் எவனோ சொன்னான் என்று புரியாத மொழி, அர்த்தம் இல்லாத குடும்பத்தோடு தொடர்பு இல்லாத பெயர்களை வைத்து நாரசாரமாக்கி விடுகின்றனர்.

நட்சத்திரப் பொருத்தம் என்ற பெயரில் அவர்கள் வைக்கும் பெயர்களே அவர்களால் உச்சரிக்க முடியுமா? என்று யோசித்ததும் உண்டு. நிச்சயம் அப்படியும் நல்ல பெயர்கள் வைக்க முடியும். ஆனால் நாகரிகம் என்ற பெயரில் இவர்கள் படுத்தும் பாடு சொல்லி மாளாது.

மதுரைக்கு அருகே உள்ள கிராமத்திலிருந்து இங்கே வந்து பணிபுரியும் ஒரு குடும்பத்தினர் வீட்டுக்கு அருகே இருக்கின்றார்கள். அப்பாவும், அம்மாவும் திராவிடக் கருப்பு. மகன் உருண்டு திரண்டு நவாப்பழம் போலப் பார்க்கக் கவர்ச்சியாக அழகாக இருப்பான். இப்போது வயது மூன்று ஆகின்றது. அவன் பெயரைக் கேட்ட போது தூக்கிவாரிப் போட்டது.

நிஷந்தன் (இந்த ஷ தான் போட வேண்டுமாம். ச என்று எழுதக்கூடாதாம்) என்று பெயர் வைத்திருந்தார்கள். நான் அவன் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டு இருக்கும் போதெல்லாம் அவனைப் பார்த்து வாடா கருப்பையா என்று தொடர்ந்து அழைக்க அம்மா என்னுடன் சண்டைக்கு வந்து விட்டார். எவ்வளவு அழகான பெயர் வைத்துள்ளேன். ஏன் இப்படி மோசமான பெயர் சொல்லி அழைக்கின்றீர்கள் என்று சண்டைக்கு வந்து விட்டார்.

அப்படியும் விடாமல் நான் தொடர்ந்து கருப்பு கருப்பு என்றழைக்க இப்போது என் வீட்டுப் பக்கமே பையனை அனுப்புவதே இல்லை.

++++++++++

மணா  என்பவர் இது குறித்து எழுதியிருந்தார்.

துண்டிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்ப் பெயர் மரபு ! -

தமிழகத்தில் உள்ள எந்தத் துவக்கப் பள்ளியிலும் தற்போது வருகைப்பதிவு எடுக்கும்போது மாணவ, மாணவிகளின் பெயர்களைக் கவனித்துப் பாருங்கள்.
பலருடைய பெயர் தமிழ்ப் பெயராகவே இருக்காது.

பெரும்பாலும் நியூமரலாஜி அடிப்படையிலோ, ஜோதிடர்கள் சொன்னபடியோ பெயர்கள் வைக்கப்பட்டிருக்கலாம். பிடித்தமான திரைப்பட நடிகர், நடிகைகள் அல்லது கிரிக்கெட் வீரர்களின் பெயர்களோ சூட்டப்பட்டிருக்கலாம்.

பிரிஜேஷ், தோஷிக், ரித்திக் – என்று இந்த ரகத்தில் பலருடைய பெயர்கள். பெண் குழந்தைகளின் பெயர்களும் இதே ரகம்.

இதென்ன… பெயர்கள் சூட்டப்படுவதை எல்லாம் தமிழ் மரபோடு இணைந்து பார்க்க வேண்டுமா என்று நம்மில் சிலர் பொறுப்பாகக் கேட்கலாம்.

சென்ற தலைமுறையில் சூட்டப்பட்ட கணேஷ், ராஜேஷ், முருகேஷ், குமார் இத்யாதி பெயர்களும் சரி,

அதற்கு முந்தைய தலைமுறையில் சூட்டப்பட்ட கருப்பையா, வெள்ளைச்சாமி, நடராஜன், பாண்டியன், முருகய்யா, கிருஷ்ணசாமி, ராமசாமி ரகப் பெயர்களும் சரி,

அப்போது இவை சூட்டப்பட்டதையும், தற்போது ஒரு பாய்ச்சலைப் போல பெயர்கள் சூட்டப்படுவதில் நேர்ந்த மாற்றத்தையும் கவனித்தால் தான் – பல விஷயங்கள் புரியும்.

தமிழருக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தொன்மையான மரபு இருப்பதைப் போல பெயர் சூட்டப்பட்டு வந்ததற்கும் ஒரு மரபு இருக்கிறது.

சங்க காலத்தில் பெயர் வைப்பதில் குடும்ப மரபிற்குப் பங்கிருந்திருக்கிறது. பாட்டன், தாத்தா பெயரை பேரனுக்கு(பெயரனுக்கு)ச் சூட்டுவது பல குடும்பங்களில் – அதுவும் கூட்டுக்குடும்பச் சூழலில் மாறா வழக்கமாகவே இருந்திருக்கிறது. பாட்டியின் பெயரைப் பேத்திக்குச் சூட்டுவதும் அதே மாதிரி தொடர்ந்திருக்கிறது.

வழிபடும் தெய்வத்திற்குப் பங்கிருந்திருக்கிறது. பெருந்தெய்வத்தை வழிபடுகிறவர்கள் பெருமாள், கிருஷ்ணன், ராமன், கணேசன் என அந்தந்த சாமிகளின் பெயர்களை வைத்துக் கொள்ள, கிராமத்துக் குல சாமிகளை வழிபட்டவர்கள் மதுரைவீரன், முனியாண்டி, பாண்டி, கருப்பசாமி, பகவதி, இசக்கி, காளியம்மா என்று பெயர் சூட்டுவது நடந்தது.

இதில் சாதிய அடுக்கிற்கும் பங்கிருந்திருக்கிறது. குறிப்பிட்ட சாதியினர் மீது தீண்டாமையின் தீவிரம் அடர்ந்திருந்த காலகட்டத்தில் சில பெயர்களை அந்த சமூகத்தினர் சூட்டக்கூடாது என்பதற்கும் கட்டுப்பாடுகள் இருந்திருப்பதையும் பார்க்க முடிகிறது.

செருப்பில்லாத பாதங்களில் மண் ஒட்டியிருப்பதைப் போலவே சூட்டப்பட்ட பெயர்களிலும் மதம், சாதியத்தின் அடையாளங்கள் ஒட்டிக் கொண்டிருந்தன.

அதையொட்டிய பெருமிதங்களும், பெருமைகளும், சிறுமைகளும், தலைகுனிவுகளும் ஒட்டிக் கொண்டிருந்தன.

தமிழகத்தில் இதுவரை ஆதிச்சநல்லூர் துவங்கி கீழடி வரை நடந்திருக்கிற தொல்லியல் ஆய்வுகளில் வேடுவர், ஆயர், உமணர் போன்ற பெயர்கள் கிடைத்திருக்கின்றன.

கபிலன், கம்பன், இளங்கோ, கணியன் பூங்குன்றன், திருவள்ளுவன், தொல்காப்பியன், அவ்வை, கணியன் பூங்குன்றன், பிசிராந்தையார் போன்ற படைப்பாளுமையின் பெயர்கள் தெரியவந்திருக்கின்றன.

ராசராசசோழன், ராசேந்திரசோழன், மகேந்திர பல்லவன், கரிகால்சோழன், குந்தவை, மங்கம்மா, வேலுநாச்சி, மீனாட்சி, மருதுபாண்டியர், கட்டபொம்மன், அழகு முத்து, சுந்தரலிங்கம், ஒண்டிவீரன், சின்னமலை என்று ஆட்சி செலுத்தியவர்களின் பெயர்கள் தமிழக வரலாற்றில் பதிந்திருக்கின்றன.

இலங்கையில் செகராசன், குலசேகர சிங்கை ஆரியன், சங்கிலி என்று ஆட்சி செலுத்தியவர்களின் பெயர்கள் பதிவாகியிருக்கின்றன.

தமிழர்களின் நீண்ட கால பெயர் மரபில் இங்கே குறிப்பிட்டிருப்பதெல்லாம் ஒரு துளி மட்டுமே.

தமிழகத்தைப் பொறுத்தவரை களப்பிரர், பல்லவர், சேர, சோழ, பாண்டியர், மராட்டியர், நாயக்கர்கள், போர்த்துக்கீசியர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் என்று ஒவ்வொரு பிரிவின் ஆதிக்கம் அதிகமாகும்போது பெயர்களிலும் அதன் தாக்கம் வெளிப்பட்டிருக்கிறது.

அதைப்போல ஆங்கிலேயரும் தங்கள் பெயரைத் தமிழ் மண்ணுக்கேற்றபடி மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். பெஸ்கி வீரமாமுனிவரானதும் அப்படித்தான்.
தமிழர்கள் இந்துக்களாக இருந்தவரை அதுவரை அவர்கள் சார்ந்திருந்த சாதியக் கட்டுப்பாடுகள் யாவும் அவர்கள் மதம் மாறிய பிறகு மாறின. கிறித்துவத்திற்கோ, இஸ்லாமிய மதத்திற்கோ மாறியவர்கள் பெயரளவிலும் விடுதலை பெற்றார்கள்.

தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்து இளைய தலைமுறையினர் அதில் பங்கெடுத்த பின்னணியில்–பெயர் சூட்டுவதில் இருந்த குடும்ப மரபு சற்றே மாறியது.

அதிலும் திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் தலையெடுத்த பிறகு தனித்தமிழில் பெயர்களைச் சூட்டுகிற உணர்வு உருவாகி-அன்பழகன், நெடுஞ்செழியன், மறைமலை, சிற்றரசு என்று பெயர்கள் சூட்டப்படுவது புது மரபானது.

திரைப்படத் தாக்கமும் வெளிப்பட்டது. அறுபதுகளுக்கு முன்னால் ‘பராசக்தி’ படம் வெளியானதும் குணசேகரன், தனசேகரன், ஞான சேகரன் என்கிற பெயர்களைச் சூட்டுவது பல தமிழர் குடும்பங்களில் நடந்தது.

நல்லதம்பி, ராமச்சந்திரன் என்று பெயர் சூட்டினார்கள். ஆயிரத்தில் ஒருவன் படத்திற்குப் பிறகு ‘மணி மாறன்’ என்று பெயரை வைத்தார்கள்.

வைஜெயந்திமாலா, சாவித்ரி, பத்மினி, சரோஜாதேவி, காஞ்சனா, தேவிகா, விஜயா, சுசீலா என்று பெண்களின் பெயர்களில் திரைப்படத் தாக்கம் பகிரங்கப்பட்டு இன்று வரை கால மாற்றத்திற்கேற்றபடி நவீனப்பட்டுத் தொடர்கிறது.

நா.பார்த்தசாரதியின் ‘குறிஞ்சிமலர்’ நாவலை ரசித்தவர்கள் ‘அரவிந்தன்’ என்று குழந்தைகளுக்குப் பெயரை வைத்தார்கள். தி.ஜானகிராமனை ரசித்தவர்கள் ‘யமுனா’ என்று சூட்டினார்கள்.

லா.ச.ரா வை ரசித்தவர் ஜனனி, அபிதா என்றும் சூட்டினார்கள். இளையராஜா பிரபலமானபோது அவருடைய பெயரை வைத்தவர்கள் தமிழகத்தில் இருந்தார்கள்.

ஆக-பெயர் சூட்டும் மரபுக்கு உதவிக்கரம் நீட்டியவை – நமது திரைப்படங்களும், இலக்கியங்களும், அரசியல் சூழலும் தான்.

தனித்தமிழில் பெயர் சூட்டுவதற்கென்று தனி நூல்கள் கூட உருவாயின. தமிழ் வளர்ச்சிக்கழகம் தமிழ்ப்பெயர்க் கையேடு என்றே தனியாக வெளியிட்டது. ஆயிரக்கணக்கான பெயர்கள் அதில் முன் வைக்கப்பட்டன.

யாழினி, இளமதி, கயல்விழி, கனிமொழி, மலர்விழி, வளர்மதி, வெண்ணிலா என்று சாதியம் ஒட்டாத தமிழ்ப்பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டதற்கும் ஓரளவு விளைவு இருந்ததை அப்போது உணர முடிந்தது.

முருகன், உமா, வள்ளி என்று புராணப்பெயர்கள் சூட்டப்பட்டன. அவ்வை போன்ற பெயர்கள் குமரி மாவட்டத்தில் அதிகமாக சூட்டப்பட்டன.

பாண்டியன் என்கிற பெயர் தென் தமிழகத்தில் பலருக்குச் சூட்டப்பட்டது. விருமாண்டி போன்ற பெயர்கள் மதுரை, தேனி பகுதிகளில் வைக்கப்பட்டன. அண்ணாமலை, நாச்சியார் என்கிற பெயர்கள் செட்டிநாட்டு பகுதிகளில் அதிகம் புழங்கின.

இவை தவிர சுதந்திரப் போராட்டக் காலத்தில் சுபாஷ் சந்திரபோஸ், காந்தி, நேரு, லஜபதிராய் போன்ற பெயர்கள் வைக்கப்பட்டன. மொழிப்போராட்டத் தியாகிகளான தாளமுத்து, நடராசன், ராசேந்திரன் போன்ற பெயர்கள் வைக்கப்பட்டன.

பொதுவுடமை இயக்க உணர்வில் ஸ்டாலின், லெனின், ஜீவா போன்ற பெயர்கள் சூட்டப்பட்டன. தமிழ்ச்செல்வன், தமிழ்ச்செல்வி, தமிழ் என்று மொழியின் அடையாளமாகப் பெயர் சூட்டப்படுவதெல்லாம் நடந்தது.

பழனி, திருப்பதி போன்ற பக்தியோடு தொடர்புடைய பெயர்கள் சூட்டப்பட்டுக் கொண்டிருக்கும்போது நடிகவேள் எம்.ஆர்.ராதா தன்னுடைய மகளுக்கு வைத்த பெயர் ‘ரஷ்யா’.

குடும்பக் கட்டுப்பாடு அறிமுகமாகாத காலத்தில் பெண் குழந்தைகளே அடுத்தடுத்து பிறந்து கொண்டிருந்தால் ‘போதும் பொண்ணு’ என்றும், கிறித்துவக் குடும்பத்தில் ‘லிம்டன்’ என்று பெயர் சூட்டிக் கடவுளிடம் வேண்டிக் கொள்வதும் நடந்தது.

முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிக் கொடுத்துப் பெரும் நிலப்பரப்பையே செழிக்க வைத்த ஆங்கிலேய அதிகாரியான பென்னிகுக்கின் பெயரைத் தங்கள் குழந்தைகளுக்கு வைத்து நன்றி செலுத்தியவர்கள் மதுரை மாவட்டத்து மக்கள்.

இலங்கையில் விடுதலைப்புலிகளின் நிதித்துறைத் தளத்தில் முன்வைக்கப்பட்ட தமிழ்ப்பெயர்கள் மட்டுமே 46 ஆயிரம்.

கோடிக்கணக்கான தமிழர்கள் உலகம் எங்கும் பரவிக்கிடக்கிற நிலையில் தமிழருக்கான அடையாளங்களைச் சிறிது சிறிதாக இழந்து வருகிற நிலையில் தமிழ்ப் பெயர்களைச் சூட்டுவதை முன்பு முக்கியமாக முன்வைத்தன தி.மு.க.வும், பாட்டாளி மக்கள் கட்சியும், விடுதலைச் சிறுத்தைகள் இயக்கமும்.

தன்னுடைய தந்தையின் பெயரையே தூயதமிழில் மாற்றினார் தொல்.திருமாவளவன். ஆனால் மதவாதச்சூழல் அதிகரித்து, சமஸ்கிருத மயமான பெயர்களின் மீதான மயக்கம் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.

பலவற்றில் தொலைகிற அடையாளம் பெயர் சூட்டலிலும் மறைந்து கொண்டிருக்கிறது.

இதனால் மத, சாதிய எல்லைகளை மீறிய இன்னொரு புதுவெளிக்கு இப்போதைய தலைமுறையைப் பெயர்கள் அழைத்துச் செல்கின்றன என்று சிலர் வாதாடினாலும், உலகமயமாக்கலின் ஒருபகுதியைப் போல, தமிழ்ப்பெயர் மரபும் குலைந்து மாறிக் கொண்டிருக்கிறது.

சாதியை அடையாளப்படுத்தும் பெயர்கள் தேவையில்லை என்று வைத்துக் கொண்டாலும், தமிழை அடையாளப்படுத்தும் பெயர்களை நீடிக்கச் செய்யலாமே!

“பெயர் என்ன, ஒரு அடையாளம் தானே! அது எப்படி இருந்தால் என்ன?’’ –என்கிற குரல்கள் கேட்டாலும், அப்படிக் கேட்பவர்களுக்கு என்ன பதில் அளிப்பது?

‘சிறையிலும், மருத்துவமனையிலும் வெறும் எண்களே நமது அடையாளங்களாக மாறுவதைப் போலவா?’- என்று பதிலுக்கு எதிர்க்கேள்வி கேட்கலாம்.

அந்தக் கேள்வியில் நமது தொன்ம மொழியின் கனத்த மௌனமும் பொதிந்திருக்கிறது என்பதை மறந்துவிட வேண்டாம்.

18 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

பெயரில்,நமது தொன்ம மொழியின் கனத்த மௌனமும் பொதிந்திருக்கிறது
உண்மை
உண்மை

கிருஷ்ண மூர்த்தி S said...

சுற்றிநடைப்பவைகளைக் கூர்ந்து கவனித்து மனமாற்றம் அதிகம் தேவைப்படுகிற காலகட்டத்தில் தமிழ் மரபு, பெயர்மாற்ற அக்கப்போர்களைக் கையில் எடுத்திருக்கிறீர்களே!

ஜோதிஜி said...

சில குழந்தைகளின் பெயர்களைக் கேட்கும் போது நம்மால் உச்சரிக்கவே சிரமமாக உள்ளது. அவங்க அப்பா அம்மா அதற்கு பொருளுரை பொழிப்புரை விளக்கவுரை கொடுக்கும் போது அருவாள எடுத்து அவங்க மண்டையில நச்சுன்னு ஒரு போடு போடலாமா? என்ற வேகமும் வந்து தொலைக்கின்றது.

நெல்லைத்தமிழன் said...

பெரும்பாலும் இந்த மாதிரி பெயர்களை தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டுபவர்கள் 'தமிழ், தமிழினம்' என்று பேசிக்கொண்டிருக்கும் தலைவர்கள் என்பதையும் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கலாம்.

காலம், நமது நாகரீகத்தையும் மாற்றுகிறது. மொழியையும் மாற்றுகிறது. இன்றைக்கு சுடிதார் போடாத தமிழச்சிகள் மிகவும் குறைவு (வேட்டி கட்டின தமிழனும்தான். கேரளாவில், வேட்டி அணிவது, முண்டு போடுவது அவர்களது பாரம்பர்யம். அதை அவர்கள் ஒருபோதும் விட்டுக்கொடுப்பதில்லை).

எனக்கும் அவ்வப்போது தோன்றும். பிறமொழி கலக்காத, அதிலும் ஆங்கிலம் கலக்காத தமிழ் எத்தனை தமிழர்களுக்குப் பேசத் தெரியும்?

இன்னொன்று, தொலைக்காட்சி வந்த பிறகு, இடங்கள் சார்ந்த பேச்சுமொழி அழிகிறதோ என்று (கொங்குத் தமிழ், நெல்லைத் தமிழ், மதுரைத் தமிழ், சென்னைத் தமிழ் என்பது போன்று)

வருண் said...

ஜோதி கணேஷ், ஜெயக் குமார், கிருஷ்ண மூர்த்தி, வருண் (எழுத்துத் தமிழ் எழுத்தாக இருந்தாலும் சமஸ்கிரதப் பெயர்தான்) னு எல்லாமே சமஸ்கிரதம் கலந்த பெயர்கள்தான்.

தேன்மொழி, தமிழழகி, சின்னத்தம்பி, கருப்பையா, குப்பன், மாரியப்பன், ஆசைத்தம்பி போன்றவைதான் தமிழ்ப் பெயர்கள்.

ஆகம் நிஷந்தன் பெயரை விமர்சிக்க நம்ம யாருக்குமே தகுதி இல்லை.

ஹார்வேட் "தமிழ்ச் சேர்" க்கு முயற்சி செய்தவர் பெயர் "விஜய் ஜானகிராமன்". இவர் பெயரிலும் சமஸ்கிரதம் இருக்கு.

ஆக எல்லாருமே இங்கே 'கில்ட்டி" தான்..








ஸ்ரீராம். said...

யோசிக்க வைத்த, புதிய சிந்தனையில்பதிவு.

'போதும்பொண்ணு' பெயருடைய சில பெண்களை சந்தித்திருக்கிறேன். அதேபோல 'வேம்பு', 'வேண்டா' போன்ற பெயர்களும்.

சில வருடங்களுக்கு முன் நான் சந்தித்த ஆச்சர்யமான பெயர் எம் கே தியாகராஜ பாகவதர்! நாற்பது நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒருவரின் பெயர் கேட்டபோது இப்படிச் சொன்னார். அப்பா பெயருக்குமோ, அல்லது ஊர் பெயருக்குமோ அந்த இன்ஷியல் சரிவரவில்லை. 'அவர்' மேல் கொண்ட ப்ரேமையின் அளவாய் அவர் தந்தையால் வைக்கப்பட்ட பெயர்!

ஜோதிஜி said...

நீங்கள் குறிப்பிட்டுள்ள பெயர்களை உச்சரிக்க எளிதாக இருக்கின்றதே? அது எந்த மொழியாக இருந்தாலும் நான் ஏற்றுக் கொள்ளவே செய்கின்றேன். ஆனால் இங்குள்ள பெயர்கள் படு வினோதமாக நாகரிகம் என்ற பெயரில் கொலையாய் கொல்லுகின்றார்கள்.

ஜோதிஜி said...

போதும் பொண்ணு எங்கள் தொழிற்சாலையில் ஒருவரின் பெயர். நீங்கள் சொன்ன பெயர் எனக்கும் ஆச்சரியமாக உள்ளது.

ஜோதிஜி said...

சன் தொலைக்காட்சி உருவான பின்பு அது உருவாக்கிய தாக்கம் தமிழகத்தில் மிகப் பெரிய கலாச்சார சீரழிவை உருவாக்கியுள்ளது.அது தான் சரி என்றும் நம்ப வைக்கப்பட்டுள்ளது.

ஜோதிஜி said...

நன்றி

நம்பள்கி said...

சமஸ்க்ரிதத்தில் பெயர் வைத்தால் தான் கெத்து என்று நம்மஆட்களும் சூடு போட்டுக் கொண்டார்கள். இனி என்ன பெயர் வைக்கலாம்.


வாயில் நுழையும் படி சில பெயர்களை நானும் சொல்கிறேனே!:


போண்டா வாயன்
மண்வெட்டி வாயன்
போண்டா மணி
கருப்பட்டி வாயன்
இடிச்சி புளி!
கண்ணாயிரம்
சங்கிலி
மாயாண்டி
கருப்பன்
சொரிமுத்து
சொரியாண்டி
பிச்சை
குப்பன்
குப்பையான்
கூளையன்
அண்டா கருப்பன்
கொப்பரை மணி
வடை சட்டித் தலையன்
மூக்கன்

raajsree lkcmb said...

இலங்கையின் வன்னி பெருநிலப்பரப்பு விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்தில் அங்கே பிறந்த குழந்தைகளுக்கு அழகழகான தமிழ் பெயர்களை சூட்டியிருக்கிறார்கள். தமிழில் இத்தனை அழகான பெயர்களா என்று வியந்திருக்கிறேன். சமஸ்க்ருத பெயர் சூட்டுவதில் இலங்கை தமிழர்களை யாரும் வெல்ல முடியாது என்றாலும் மதிவதனி, மகிழினி, திருமகள், வெண்ணிலா, வளர்மதி, யாழினி என்று தூய தமிழ் பெயர்கள் வைப்பவர்களும் உண்டு. சுவிஸில் வசிக்கும் எமது குடும்ப நண்பர் தாய்நாட்டின் மீது கொண்ட பற்றினால் தன் மகனுக்கு "ஈழவன்" என்று பெயர் வைத்திருக்கிறார். அதே சுவிசில் வசிக்கும் இன்னொருவர் இசையின் மேல் கொண்ட காதலால் தன் பேத்திக்கு "பதனிசா" என்று பெயர் வைத்திருக்கிறார்.

Kalai said...

!!!

ஜோதிஜி said...

பதனிசா என்றவுடன் எனக்கு இங்குள்ள பதநீர் தான் முதலில் நினைவுக்கு வந்தது. அப்புறம் ப த நீ சா என்று உச்சரித்துப் பார்த்தேன். பிறகு இசை நினைவில் வந்தது. ஒரு பாடல் நினைவில் உள்ளது. பார்த்து அந்த இணைப்பு இங்கே தருகிறேன். அதில் தொடக்கமே ப த நீ சா என்று தான் வரும்.

ஜோதிஜி said...

இதில் உள்ள ஒன்பது பெயர்கள் புழக்கத்தில் இருந்த பெயர்கள் தான்.

Rathnavel Natarajan said...

உங்கள் பெயர் என்ன? - அருமையான, பெயர்கள் கேட்கும் போது நான் மிகவும் யோசிக்கும் பதிவு. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி

கிரி said...

ஜோதிஜி தமிழ்ப் பெயர் குறித்து நல்ல கட்டுரை.

"மதவாதச்சூழல் அதிகரித்து, சமஸ்கிருத மயமான பெயர்களின் மீதான மயக்கம் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்பதை மறுக்க முடியாது."

இது காரணமாக நான் கருதவில்லை ஜோதிஜி.

இதற்கு காரணம், தமிழ்ப் பெயர்கள் நவீன முறையில் இல்லையென்பதே குற்றச்சாட்டு. தற்கால பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சமஸ்கிருத பெயர் வைக்க காரணம் மத ரீதியாக அல்ல, நவீன பெயர் வேண்டும் என்பதாலே.

தமிழில் இது போல பெயர்கள் தேடினால் கிடைக்கும் ஆனால், பலர் முயல்வதில்லை.

நான் என்னுடைய பசங்களுக்கு வினய், யுவன் என்று வைத்தேன்.. தமிழ் பெயராகவும் அதே சமயம் கொஞ்சம் நவீனமாகவும்.

வினய் என்பது தூய தமிழ் பெயர் போல இல்லையென்றாலும்.. ஓரளவு சமாதானமாக்கி கொண்டேன்.

பெயர் வைப்பதில் நம் விருப்பம் மட்டுமே இல்ல, மனைவியின் விருப்பமும் அடங்கியுள்ளது. எனவே, ஒரேயடியாக நாம் பிடிவாதம் பிடிக்க முடியாது.

ஜோதிஜி said...

வினய் யுவன் போன்ற பெயர்களெல்லாம் வாசிக்க இயல்பாகத்தான் உள்ளது.