Sunday, October 05, 2014

தமிழர்களின் கலைரசனையை வளர்த்த ஜான் மைக்கேல் டி குன்ஹா


தமிழ்நாட்டில் கடந்த 27ந் தேதி மதியம் முதல் தினந்தோறும் புதுப்புது நாடகங்கள் நடந்து கொண்டேயிருக்கின்றது.  வருகின்ற 7ந் தேதி திறக்க வேண்டிய பள்ளிக்கூடம் எட்டாம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. கடையடைப்பு, உண்ணாவிரதம், மௌன போராட்டம், பால்குடம் ஏந்தி பிரார்த்தனை என்று எல்லா பக்கங்களிலும் செலவு பிடிக்கும் சமாச்சாரமாக நடந்து கொண்டேயிருகின்றது.

யாரோ சிலர் இத்தனை செலவுகளையும் செய்து கொண்டிருக்கின்றார் என்றால் வந்த வருமானத்திற்கு அல்லது வரப் போகின்ற வருமானத்திற்காக தங்கள் விசுவாசத்தை காட்டிக் கொண்டிருக்கின்றார்கள் என்று அர்த்தம். கண்ணீர் விடும் எவரும் எனக்கு பதவி வேண்டாம் என்று ஒதுங்கவில்லை.

மொத்தத்தில் தமிழர்கள் என்றாலே இளக்காரமாக பார்க்கும் அண்டை மாநிலங்களில் கூட நடத்தப்படும் கூத்துக்களைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது முடங்கிப் போன தமிழ்நாட்டு நிர்வாகம் என்பது இப்போது இல்லாமலேயே போய்விட்டது.  ஒரு வேளை கலைஞருக்கு இது போல ஒரு சம்பவம் நடந்து இருக்கும் பட்சத்தில் இந்நேரம் திமுகவில் அடிதடி, வெட்டுக்குத்து என்று தொடங்கி இந்நேரம் பல கொலைகள் கூட விழுந்துருக்கும்.  பதவியை கைப்பற்றும் போராட்டத்தில் பல தலைகள் உருண்டிருக்கும்.

ஆனால் அதிமுகவில் மயான அமைதியும் இன்னமும் பயத்துடன் தான் பம்முகின்றார்கள்.  இது தான் ஜெயலலிதாவின் வெற்றிக்குக் காரணம். இதுவே தான் இந்த தோல்வியைக் கொண்டு வந்து நிறுத்தியதற்கும் காரணமாகவும் உள்ளது.

••••••••••••

இந்தியாவில் இதைப் போல சில சமயம் நடந்து விடுகின்றது. யாரோ ஒரு தனி நபர் மூலம் பல கோடி மக்களுக்கும் நம்பிக்கை அளிக்கும் வண்ணம் ஏதோவொன்று நடந்து விடுகின்றது. 

27 செப்டம்பர் 2014. பரப்பன அக்ரஹாரா 

கர்நாடக மாநிலத்தில் உள்ள இந்த பெயரும் இடமும் இந்தியாவில் உள்ள மக்கள் மனதில் பதிந்ததோ இல்லையோ இங்கே உள்ள ஒவ்வொரு அரசியல்வாதிகளுக்கும் பீதியைக் கிளப்பியிருக்கும். இனிமேல் மிக மிக கவனமாக திருட வேண்டும் என்று முயற்சிப்பார்கள்.

சொடுக்கி படிக்க 


•••••••••

ஜெயலலிதாவுக்கென்று ஒரு தனியான கொள்கையுண்டு.

"இங்கு ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு விலையுண்டு".

அவர் ஆட்சிக்காலம் முழுக்க இந்த விலைப்பட்டியலில் சிக்காதவர்கள் யாருமே இல்லை என்கிற அளவுக்குத்தான் இருந்தது. ஆனால் இன்று ஒரு தனி நபரால் உடைக்கப்பட்டுள்ளது.

நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா.

"உங்கள் பணத்ததால் என்னை விலைக்கு வாங்க முடியாது" என்று நிரூபித்தவர்.

••••••••••

ஜெயலலிதாவின் வாழ்க்கை எங்கு தொடங்கியதோ அதே மாநிலத்தில் (அரசியல்) முடிவடைந்து விட்டது. அடுத்த பத்து வருடங்கள் என்பது அரசியலில் அனாதை ஆனதற்குச் சமம்.  இதற்குப் பின்னால் உள்ள அரசியல் சூழ்ச்சிகளை விட இவர் உருவாக்கிக் கொண்டதே அதிகம். அடிமைக் கூட்டத்தை வளர்த்து வந்தவர் தனக்கு ஆலோசனை சொல்லும் கூட்டத்தை வளர்க்காமல் இருந்தது யாருடைய குற்றம்?

ஆனால் இன்னும் 50 ஆண்டுகள் கழிந்தாலும் இவருக்கு உண்டான அவப்பெயர் மட்டும் என்றுமே மாறாது. மறையாது. இவரின் உழைப்பு, திறமைக்கு அப்பாற்பட்டு கிடைத்த அனைத்து விதமான அதிர்ஷ்ட வாய்ப்புகளையும் தன் தனிப்பட்ட குணாதிசியத்தால் இன்று கொட்டிக் கவிழ்த்து விட்டார். 

"அதிகாரம் என்பது உச்சத்திற்கு கொண்டு போய் நிறுத்தும். ஆனால் எச்சமாய் மாற்றி விடும்" என்பதை இப்போது கிடைத்த தனிமையில் உணர்வாரா?

•••••••••••

ஒவ்வொரு முறையும் நான் ஒரு தொடர் எழுதத் தொடங்கும் போதும், அது தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் போது அரசியலில் ஏற்படும் திடீர் மாற்றங்களைப் பற்றி எழுத முடியாமல் போய்விடும்.   

கடந்த பத்து வாரங்களாக செய்தித்தாள்கள், வார இதழ்கள் எதையும் வாசிக்க முடியாத நெருக்கடியான பணிச்சூழல் இருந்தாலும் ஏற்றுக் கொண்ட பணியான ஒரு தொழிற்சாலையின் குறிப்புகளுக்காக குறிப்பிட்ட நாளை ஒதுக்கி என்னை நானே  ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடிந்தது.  

கடந்த நாலைந்து நாட்களாக ஜெயலலிதா குறித்த விசயங்களை பதிவு செய்ய முடியாமல் போய் விட்டதே என்று யோசித்துக் கொண்டிருந்தேன். 

இந்த சமயத்தில் இதை பதிவாக மாற்றி வைக்கவிட்டால் இது குறித்து தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்களுக்கு இதன் முழுமையான விபரங்கள் தெரியாமல் போய் விடக்கூடும் என்பதற்காக இந்தப் பதிவு.

தற்போதைய சூழ்நிலையில் ஜெ. வுக்கு யார் கடிதம் எழுதினாலும் அவர் இருக்கும் பரப்பன அக்கிரஹாரத்திற்குள் உள்ள சிறைச்சாலைக்குச் சென்று விடும். 

படிக்க சொடுக்க

அம்மாவுக்கு சும்மா ஒரு கடிதம்.

*************

அவர் வாழ்க்கையில் அனுபவித்துக் கொண்டிருந்த அதிகப்படியான வசதிகள், எடுபிடி, ஏவலாளி, அதிகாரம், பந்தா, ஆணவம், அகங்காரம், பிடிவாதம்,   தான் தோன்றித்தனமான செயல்பாடுகள், மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சியில் அக்கறையின்மை, சக மனிதர்களை உயிரற்ற ஜடமாய் பார்க்கும் மனோபாவம், போன்ற அனைத்துக்கும் மொத்தமாய் சேர்த்து ஒரு நபர் 1136 பக்க தீர்ப்பின் வாயிலாக படிப்பினையைத் தந்துள்ளார்.  


**********

ஜெயலலிதா கடந்த கால வாழ்க்கையில் பெற்ற "மனோரீதியான தாக்கதில்" இருந்து வெளி வராமல் வேலிக்குள் வாழ்ந்து கொண்டிருந்தவர், இது ஆணாதிக்க சமூகம். இதிலும் வென்று போராடி மேலே வந்தவர். கலைஞர் போன்ற ஆட்களை தமிழ்நாட்டில் சமாளித்து மேலே வருவது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. ஆனால் அனைத்தையும் வென்று வந்தவர் மனிதர்களை மதிக்கவோ மன்னிக்கவோ தயாராக இல்லை என்பதும் அவரின் தனிப்பட்ட கொள்கையாகவே இருந்தது.

சக மனிதர்களை விட வேள்வி, யாகம், தெய்வம், சாஸ்திரங்கள் மேல் நம்பிக்கை கொண்டிருந்தவருக்கு அவர் வணங்கிய தெய்வங்களே  இன்று சிறப்பான முடிவைத் தந்துள்ளது.

இப்போது நீதி உருவாக்கிய வேலி தான் "காலம்" அவருக்குத் தந்த பரிசாக மாறியுள்ளது. 

•••••••••••••••••••

இது குறித்து நான் படித்த, கேட்ட, அறிந்து கொண்ட தகவல்களை நாலைந்து பதிவுகளாக எழுத முடியும். நீங்கள் படிக்கும் செய்திகள் 90 சதவிகிதம் அவரவருக்கு தோன்றிய வகையில் கதை, கற்பனையுடன் கலந்து கட்டி ஆடுகின்றார்கள். சிறைவிதிகளை உடைக்கவும் முடிகின்றது. ஒப்பந்தப்படி உல்லாசமாக இருக்கவும் முடிகின்றது.

ஆனால் தமிழர்கள் காலந்தோறும் யாரோ ஒருவரிடம் அடிமையாக இருப்பதை பெருமையாக நினைத்துக் கொண்டாலும் இன்று வரையிலும் அதில் எவ்வித மாற்றமும் இல்லை. மேலும் என்னை விட வேறு திறமையான அடிமையை வேறெங்கும் நீங்கள் கண்டுவிட முடியாது என்பதற்கு உதாரணமாக அதிமுக தொண்டர் படையினர் என்ற பெயரில் ஒவ்வொருவரும் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

அவரவர் தங்களுக்குத் தெரிந்த வகையில் தங்கள் பதவியை காப்பாற்றிக் கொள்ள, தங்களுக்கு வந்து கொண்டிருக்கும் வருமானத்தை காப்பாற்றிக் கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கின்றார்கள். மேலும் தங்கள் கலைத்திறைமையை தமிழ்நாடு தவிர கர்நாடகா வரைக்கும் ப்ளக்ஸ் பேனர் மூலம் வெளிக் காட்டிக் கொண்டு இருக்கின்றனர்.  

இது குறித்து கடந்த ஒரு வாரமாக தமிழ் இணையத்தில் நான் கண்ட ரசித்த படங்களில் சிலவற்றை இங்கே உங்கள் பார்வைக்கு தந்துள்ளேன். 

படிக்க சொடுக்க


இந்த பதிவில் உள்ள மொத்த இணைப்புகளையும் நேரம் கிடைக்கும் போது வாசித்துப் பாருங்கள். அரசியல் கொள்கைகளுக்கு அப்பாற்பட்டு சில புரிதல்கள் உங்களுக்கு உருவாகக்கூடும்.  

ஆனால் கடைசியாக சில வார்த்தைகள்,

இணையப் பெருவெளியில் கலைஞர் என்றாலே கபடி விளையாடுவது போல விளையாடி கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.  அந்த புகழை தற்பொழுது ஜெயலலிதா எடுத்துக் கொண்டார்.  முதல் முறையாக ஜெ. சம்மந்தப்பட்ட அனைத்து கண்ணீர் காட்சியையும் படிப்பவர்கள் பரிகாசம் செய்வது ஜெ. அரசியல் வாழ்க்கையில் இதுவே முதல் முறையாக இருக்கக்கூடும். 

ஈழத்தமிழர்கள் பிரச்சனையாக இருக்கட்டும், தமிழ்நாட்டின் வாழ்வாதார பிரச்சனையாக இருந்தாலும் சரி எல்லாமே தனக்கு உதவும் விளம்பர சுவரொட்டி போல பாவித்துக் கொண்ட ஜெயலலிதாவுக்கு கடைசியில் பலதரப்பட்ட சுவரொட்டி வாசகங்கள் தான் இன்று பரிசாக கிடைத்துள்ளது. வெளிச்சத்தில் வாழ்ந்து, வெளிச்சத்தையே மட்டும் விரும்பியவருக்கு இன்று வெளியுலகம் தொடர்பு இல்லாத இடமே பரிசாக கிடைத்துள்ளது.

ஆனால் நான் திருப்பூருக்குள் சந்தித்து உரையாடிய சலூன் கடை முதல் பல தரப்பட்ட தொழிலாளர்கள், அன்றாட வாழ்வில் சந்திக்கும் சாதாரண மனிதர்கள் வரைக்கும் ஜெயலலிதா மேல் கொண்டுள்ள அபிமானம் இன்று வரைக்கும் மாறவில்லை என்பது முதல் ஆச்சரியம்.  ஒரு அரசியல் தலைவரின் தோல்வியின் போது அடுத்த நபர் குறித்து மக்கள் யோசிக்க வேண்டும்.  இது தான் பொதுவான விதி.  ஆனால் மொத்த தமிழ்நாட்டு அரசியலிலும் வெற்றிடம் தான் நிலவுகின்றது.  இது தமிழ்நாட்டு அரசியலில் இதுவரையிலும் நிகழாத ஆச்சரியமான நிகழ்வாகும்.

ஜெ. வின் சிறைத்தண்டனை குறித்து நான் சந்தித்து உரையாடிய ஒவ்வொருவரும்  அவரவர் பாணியில் வெவ்வேறு விதமாகச் சொன்னாலும் மொத்தமாக "அவர் செய்த தவறுக்கு மக்கள் ஏற்கனவே தண்டனை கொடுத்து விட்டார்கள்" என்று தான் முடிக்கின்றார்கள்.  தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரையிலும் தங்களது அடிப்படை அரசியல் அறிவில் எந்தப் பெரிதான மாற்றங்களையும் உருவாக்கிக் கொள்ள விரும்பவில்லை என்பதே கண்கூடு.  

தங்களது அடிப்படை வாழ்வாதாரம் சரியாக இருந்தால் போதும் என்கிற நிலையில் தான் இருக்கின்றார்கள்.  மேல் மட்ட ஊழல், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி எதிர்காலம் குறித்த அக்கறை போன்ற எதிலும் அவர்களால் யோசிக்கக் கூட முடியாத அளவுக்கு இருக்கின்றார்கள்.  இன்னும் கொஞ்சம் அதிகமாக இது குறித்து கேட்டால் "இங்கு யார் தான் யோக்கியவான்?" என்ற வட்டத்திற்குள் கொண்டு வந்து நம்மை நிறுத்துகின்றார்கள்

இது தவிர, தமிழ்நாட்டில் உள்ள எந்த அரசியல் தலைகளாலும் மனதார இந்தத் தீர்ப்பை வரவேற்க முடியாத சூழ்நிலை தான் இங்கே நிலவுகின்றது. 

ஒவ்வொருவர் முதுகிலும் ஓரு வண்டி அழுக்கு இருப்பதால் அடுத்தவர் அழுக்கு குறித்து பேச முடியாத நிலையில் இருக்கின்றார்கள். 

கலைஞரால் கூட தன் சொந்த வார்த்தைகளில் இந்த தீர்ப்பு குறித்து சொல்ல முடியாத அளவுக்குத் தான் அவரின் நம்பகத்தன்மை உள்ளது. 

இந்த அளவுக்குத்தான்  தமிழ்நாட்டில் அரசியல் உள்ளது.  

சரி விடுங்க. 

இதுவும் கடந்து போகும்.  

கீழே உள்ள பாசக்கார பயபுள்ளைங்க கலைத்திறமையை ரசித்து விடுங்க. 


















தொடர்புடைய பதிவுகள்

காசு, பணம், மணி, துட்டு.

பிரபல்யம் எனப்படுவது யாதெனில்

பிரபல்யங்களின் சாவு

சாராயத்தமிழன்

சொம்புத்தூக்கிகள்


அரசியல் விரும்பாதவர்களுக்கு (மட்டும்)

திருப்பூரில் உள்ள பின்னலாடைத் தொழில் மற்றும் அது சார்ந்த ஏற்றுமதி நிறுவனத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் சார்ந்த சமூக வாழ்க்கையை அனுபவங்களின் வாயிலாக அலசும் தொடர் இது.

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்

6 comments:

எம்.ஞானசேகரன் said...

தமிழகத்தின் ஒரு முக்கியமான அரசியல் நிகழ்வைப் பற்றிய உங்கள் பதிவு இல்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எழுதிவிட்டீர்கள். நடுநிலை என்பதற்கு அர்த்தம் தெரியாதவர்கள் அல்லது நியாயத்தை ஆதரிப்பவர்கள் வெகு சொற்பமாகிவிட்டராகள். புத்திசாலிகள் என்பவர்கள் சொம்பு தூக்கிகள் என்ற பட்டத்திற்குக் கூட பெருமைப்பட்டுக் கொள்வார்கள். எம்.ஜி.ஆருக்கு வெறும் பாமர மக்கள் கூட்டம்தான். ஆனால் ஜெயலலிதாவுக்கோ படித்த கூட்டம்+பாமரர்கள் கூட்டம் இரண்டுமே. படித்த கூட்டம் கூட இப்படி மடத்தனமாக இருப்பார்கள் என்பது நிரூபனமாகிவிட்டது. கேவலத்தின் உச்சிக்கு தமிழ்நாடு போய்விட்டது. நாகரிகமான அரசியல் என்பது இனி வெறும் கனவு மட்டும்தானா? இப்போதைய பதிவை விட உங்கள் பழைய பதிவான அம்மாவுக்கு சும்மா ஒரு கடிதம் வெகு அருமை. வாழ்த்துக்கள் ஜோதிஜி. அடிமட்டத்து மக்களிடையே ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை (எம்.ஜி.ஆருக்கு இருந்தது போல) இருப்பதுதான் ஆச்சர்யமளிக்கிறது. அதனால் அந்த ஓட்டுக்களை வைத்துத்தான் இத்தனை அலங்கோலங்களும்!

bandhu said...

இப்படி ஒரு நிலைக்கு தமிழ்நாடு வர யார் காரணம்?

நியாயமான அரசியல் வாதி என்பது வழக்கொழிந்த ஒன்று என்று ஆகி விட்டது. இதற்க்கு அரசியல் வாதி மட்டும் காரணம் அல்ல. மிகப் பெரிய கட்டமைப்புடன் கட்சி நடத்த வேண்டி இருக்கிறது. அப்படி கட்சி நடத்தினால் தான் அரசுக்கு வர முடியும். அந்த அளவு கட்டமைப்புடன் கட்சி நடத்த எவ்வளவு பணம் தேவை! எங்கிருந்து வரும் அந்தப் பணம்? ஒழுங்கான கணக்குடன் நன்கொடை வாங்கி கட்சி நடத்துபவர்கள் யார் இருக்கிறார்கள்? ஆக, நம் கண் முன்னே இருக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் தன செலவுகளுக்கு இரண்டே வழிகள் இருப்பதாகத் தெரிகிறது.. ஒன்று.. லஞ்சம்.. கட்சிக்காக என்று.. இரண்டு.. இப்போது போட்டால் பின்னால் பெரியதாக எடுக்கலாம் என்று அரசியல் வாதிகள் போடுவது. நடைமுறை இப்படி இருக்கையில் எப்படிப் போகும் லஞ்சம்?

ஒரே உண்மை .. எல்லாமே பதவிக்காக / அதிகாரத்திற்காக நடக்கும் போட்டி / நாடகமாகவே தெரிகிறது. அதையும் தாண்டி இப்படி ஒரு தீர்ப்பு வந்திருக்குமேயானால்.. அதையும் முழுமையாக வரவேற்க முடியவில்லை. அதற்க்கு ஒரே காரணம்.. இப்போது இருக்கும் அரசியல் வெற்றிடம்.. ஜெக்கு மாற்றாக உருப்படியான ஒருவரையும் காணவில்லை.. அதற்காக ஜெக்கு தண்டனை கொடுத்திருக்கக் கூடாது என்றும் சொல்ல முடியவில்லை.. அவர் சொத்து முழுவதையும் பறிமுதல் செய்து வேறு தண்டனை கொடுக்காமல் விட்டிருக்கலாமோ?

? said...

கருணாநிதி மற்றும் அரசியல் வெற்றிடத்தை காட்டி ஜெயாவை மன்னித்து விடலாமென்ற என்கிற சிந்தனையே மிகவும் அபாயகரமானது.. எம்ஜியாருக்கு பின்னாடி ஜெயா வந்தா போல, ஜெயா இல்லைனா குஷ்பூ என போய்கிட்டே இருக்க வேண்டியதுதான் தமிழன்.

இந்த வழக்கில் அவர் மீதான குற்றச்சாட்டு 66 கோடி. ஆனால் இதே போன்ற மேலும் தமிழகத்தில் 11 வழக்குகளில் அவர் எல்லாக் குறுக்குவழிகளையும் பிடித்து வெளியேறியுள்ளார். நீதிபதிக்கு சம்மானம் அளிப்பது முதல் நீதிபதி குடும்பத்தினர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்வது வரை எல்லா வித்தையும் செய்து காட்டினார். அவரது ஆட்சிகாலத்தில் நடந்த அவலங்கள்... ஐஏஎஸ் அதிகாரி மீது ஆசிட் ஊற்றி தமிழ்நாட்டில் ஆசிட் கலாச்சாரத்திற்கு வித்திட்டது,ஆகாதவரை கஞ்சா வழக்கு போட்டு அடக்குவது, என சொல்லி மளாதவை.. இதில் பலவற்றினை சவுக்கு பட்டியலிட்டுள்ளார் பார்க்கவும். இதில் சொல்லாதவை ஏராளம். http://savukku2.blogspot.in/2014_09_01_archive.html

உலகத்திலேயே மாதர் காவல்நிலையம் கட்டியது அம்மாவாம். ஆனால் முன்பு அம்மா ஆட்சியில் பெண்கள் போலிஸ் ஸ்டேசன் போனால் கற்போடு திரும்ப இயலாத நிலை. இந்த அவப்பெயர் தவிர்க்கத்தான் மகளிர் காவல்நிலையம், ராமதாஸ் மரம் நடுவது போல.வீரப்பனை வேட்டையில் தமிழக போலீஸால் கற்பிழந்த பழங்குடி பெண்கள் பலர் (இந்த லட்சணத்தில் சிங்கள ராணுவத்தை குறை சொல்கிறோம்). தான் பெண்ணென்ற போதும் இந்த போலிஸ் மீது ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை ஜெயா.

கர்நாடகாவும் சுப்பிரமணிய சுவாமியும் இந்த விடயத்தில் தமிழ்நாட்டுக்கு செய்துள்ள நன்மை ஈடுசெய்ய முடியாது.

Amudhavan said...

நீண்ட உழைப்பிற்கிடையே வெளியாகியுள்ள உங்களுடைய இந்தப் பதிவை நேற்றும் இன்றுமாகப் படித்து முடித்தேன். கூடவே நீங்கள் தந்திருக்கும் இணைப்புக்களையும் படித்தேன். சில இணைப்புக்கள் தவிர மற்ற இணைப்புக்கள் அனைத்தும் நீங்கள் ஏற்கெனவே எழுதிய பதிவுகளின் இணைப்புக்களே. அவற்றை ஏற்கெனவே படித்திருந்த போதிலும் இந்தக் கட்டுரையுடன் இணைத்துப் புரிந்துகொள்வதற்காக மறுபடியும் படித்தபோது நீங்கள் சொல்லவந்திருக்கும் செய்தியின் நோக்கம் தெளிவாகப் புரிகிறது.
ஒரு மறக்கக்கூடாத அனுபவத்தை, சம்பந்தப்பட்ட அரசியல்வாதி மட்டுமல்ல மக்களும் - குறைந்தபட்சம் படித்தவர்களும் சரியான திசையில் புரிந்துகொண்டு தங்கள் வாழ்க்கைக்கான பாதையை வகுத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆதங்கம் எத்தனைப்பேருக்குப் புரியப்போகிறதோ தெரியவில்லை.சிரத்தையுடனும் தைரியத்துடனும் சொல்லவேண்டிய விஷயங்களைத் தயங்காமல் சொல்லியிருக்கிறீர்கள்.
தங்களின் அசாத்திய தைரியமும் ஆச்சரியத்தையே தருகிறது.


\\எம்.ஜி.ஆருக்கு வெறும் பாமர மக்கள் கூட்டம்தான். ஆனால் ஜெயலலிதாவுக்கோ படித்த கூட்டம்+பாமரர்கள் கூட்டம் இரண்டுமே. படித்த கூட்டம் கூட இப்படி மடத்தனமாக இருப்பார்கள் என்பது நிரூபனமாகிவிட்டது.\\
கவிப்பிரியன், ஒரு மாபெரும் ரகசியத்தை அப்படியே போட்டு உடைத்திருக்கிறீர்கள். உங்களின் இந்தக்கூற்றில் ஒரு திருத்தம்; எம்ஜிஆருக்கு வெறும் பாமரக்கூட்டம்தான் முதலில் இருந்தது. அவர் என்றைக்கு முதலமைச்சராக ஆனோரா அன்றைக்கே 'படித்த கூட்டம்' பெரும்பான்மையாக அவர் பின்னால் அணி திரண்டது. ஆனால் இங்கே நடந்த 'ரசவாதம்தான்' இன்றைய தமிழகத்தின் அத்தனை சீரழிவுகளுக்கும் காரணம். பாமரக்கூட்டமும் படித்த கூட்டமும் ஒன்று சேர்ந்தது இல்லையா? பாமரக்கூட்டத்தைப் படித்த கூட்டம் அவர்களுடைய நிலைக்கு மேலெழுப்பியிருக்க வேண்டும்.
இங்கே நடந்தது அப்படியே தலைக்கீழ்..........
படித்த கூட்டம் பாமரக்கூட்டத்தின் அளவுக்குத் தன்னைக் கீழிறக்கிக் கொண்டது.
இதே நிலை ஜெயலலிதாவுக்கும் அப்படியே தொடர்ந்தபடியே இருக்கிறது. தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருப்பது இதுதான்.

'பரிவை' சே.குமார் said...

தமிழகத்தில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வு குறித்து பணிச்சுமைக்கு இடையே மிக நீண்ட பகிர்வு...
படங்களைப் பார்க்கும் போது படித்தவனும் பாமரனும் இங்கே விலக்குகளாக மாறி நிக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது....

நல்ல பகிர்வு அண்ணா...

Thulasidharan V Thillaiakathu said...

தங்கள் தொடர் எழுத்துப் பணிக்கிடையே தமிழக அரசியல் குறித்த, எப்படிப்பட்ட ஒரு ஆழமான கருத்துடைய ஒரு நீண்ட பதிவு, இணைப்புகளுடன்.!! எல்லாவற்றையும் படித்து முடிக்க 2 தினங்கள் வேண்டியிருந்தது. தங்களது ஆதங்கம் மிகவும் நியாயமானதே!

தமிழ் நாட்டிற்கு ஒரு நல்ல ஆட்சி அமைப்பாளர் கிடைக்க மாட்டாரா? யாருமே இல்லையா? என்ற ஒரு ஆதங்கம் கூடவே எழுவதைத் தடுக்க முடியவில்லை! ஏன் இப்படியான ஒரு அவல நிலை? காமராஜருக்கு அடுத்து நல்ல ஒரு ஆட்சியாளர் இல்லையே. சுரண்டும் வர்கம் தானே மாறி மாறி தமிழகத்தை ஆளுகின்றது! மாற்று ஒன்றுமே இல்லையா? திரு நல்லகண்ணு போன்ற நல்ல தலைவர் இருந்தும்......தமிழகத்தின் நிலை ஏன் இப்படி ஆனது என்ற ஒரு ஆதங்கம் எழுகின்றது.

நல்ல பதிவு நண்பரே!