Tuesday, January 19, 2010

இந்திரா காந்தி ஈழம் பின்னால்

1984 ஆம் ஆண்டு. இந்திரா காந்தி இறப்புக்குபிறகு ராஜீவ் காந்தி பதவிக்கு வந்த நேரம்.  இந்திரா காந்தியின் உள்வட்டாரத்தில் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த பார்த்தசாரதி என்ற தமிழர் புறந்தள்ளப்பட்டு மொத்த பொறுப்பும் ரொமேஷ் பண்டாரியிடம் மாற்றப்பட்டது.  ரா தலைமைப் பொறுப்பு சக்சேனா வசம்.  இந்திரா காந்தி இறுதிசடங்கில் ஜெயவர்த்னே கலந்து கொண்டு ராஜீவ் காந்தியை சந்தித்ததும், அதன் பிறகு மொத்த இலங்கை குறித்த வெளியுறவு கொள்கை மாற்றம் பெற்று வேறு ஒரு பாதையில் நகர்ந்தது. வெள்ளந்தியான ராஜீவ் காந்தியிடம் விபரமான ஜெயவர்த்னே என்ன மந்திரம் ஓதினார் என்பதை அந்த புத்தர் மட்டுமே அறிந்து இருக்க வாய்ப்புண்டு?

இந்திரா காந்தி எந்த அளவிற்கு இலங்கை தமிழர்களின் மீது அக்கறை கொண்டு செயல்பட்டாரோ அதன் மாற்று என்று சொல்லும் அளவிற்கு ராஜீவ் அணுகுமுறை இருந்தது.  " இலங்கை என்ற நாடு துண்டாட அனுமதியோம்.  ஆனால் தமிழர்களின் நல்வாழ்வுக்கு இந்தியா பொறுப்பு"  இதன் மற்றொரு அர்த்தம் தமிழர்களின் நலன் அதே சமயம் இலங்கை எப்போது இந்தியாவை சார்ந்து இருக்க வேண்டும். மற்ற அந்நிய நாடுகள் இலங்கையில் தளம் அமைக்கும் பட்சத்தில் நிரந்தர தலைவலியாய் அமைந்து விடும் என்பதால் இந்திரா காந்தியின் அணுகுமுறை மறைபொருள் போல் விவேகமாய் இருந்தது.  முதிர்ந்த அனுபவம் மிக்க நரசிம்மராவ், ஜி.பார்த்தசாரதி போல் ஆட்கள் அமைந்து விட எல்லாமே நல்லபடியாக போய்க்கொண்டுருந்தது.  ஜெயவர்த்னே பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொள்ளும் அளவிற்கு.  காரணம் அமிர்தலிங்கத்தை சிறப்பு விருந்தினர் என்ற அளவிற்கு அனுமதித்த இந்திரா காந்தியின் தீர்ககதரிசனம் ஜெயவர்த்னேவுக்கு தீராத தலைவலியாக இருந்தது.
ஒரு பக்கம் பேச்சுவார்த்தை.  மறுபக்கம் ரா மூலம் கொடுக்கப்பட்ட ஆயுதப்பயிற்சி மூலம் இலங்கைக்குள் நடத்தப்பட்டுக்கொண்டுருந்த கிளர்ச்சியின் வித்துக்கள்.  ஆனால் ராஜீவ் காந்தியிடம் ஜெயவர்த்னே எவ்வாறு அறிமுகம் செய்து கொண்டார்?  என்ன பேசினார்கள்? என்பதை விட அதற்குப்பிறகு ராஜீவ் காந்தியின் ஒவ்வொரு இலங்கை குறித்தான அணுகுமுறையும் மாற்றம் பெற்றதென்பது ஒரு வகையில் அரசியல் ஞானி ஜெயவர்த்னேயின் வெற்றிகரமான சாதுர்யத்தின் ஒரு மைல்கல்.

கல்வியறிவும், நேர்மையும், தெளிந்த உள்ளமும், அரசியல் சூழ்ச்சிகள் எதையும் அறியாத ராஜீவ் காந்திக்கு பின்புலமாக இருந்த அத்தனை அதிகாரிகளும் உருவாக்கிய கோடுகள் அத்தனையும் கோப்புகளாக மாற்றம் பெற ஒரு வகையில் இலங்கையில் போராடிக்கொண்டு மொத்த போராளிகளுக்கும் மிகுந்த நெருக்கடியும், ஜெயவர்த்னே மனதிற்குள் சிரித்துக்கொள்ளும் அளவிற்கு ஒவ்வொன்றும் விரைவாக நடந்தேறத் தொடங்கியது. தந்திர அரசியல் ஞானி ஜெயவர்த்னே ஒரு பக்கம்.  விவேகமில்லாத வீரத்தை மட்டும் வைத்துக்கொண்டு போராடிக்கொண்டுருந்த போராளிக்குழுக்கள் மறுபக்கம்.  இதற்கிடையே உண்மையான அடிப்படையான பிரச்சனைகள் என்னவென்று தெரியாத இந்திய அதிகாரவர்க்கத்தினர் நடுவில்.  இந்தியாவைப் பொறுத்தவரையில் ராஜீவ் விரும்பும் ஒப்பந்தம் வேண்டும்.  பின்னால் வரும் பிரச்சனைகளை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்.

இதே வருடத்தில் பிரபாகரனின் தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் மிஞ்சிப்போனால் 1500க்குள் தான் மொத்த போராளிகளே இருந்தார்கள்.  ஆனால் மற்ற இயக்கங்களான TELO. EROS. EPRLF. PLOT இதைத் தவிர சிறிதும் பெரிதுமாக இருந்த ஏறக்குறைய நாற்பதுக்கும் சற்று குறைவான எண்ணிக்கையில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதைகள்.  விடுதலைப்புலிகளைத் தவிர மற்ற பெரிய இயக்கங்களில் சுமாராக 6000 முதல் 7000 வரைக்கும் போராளிகள் இருந்தனர்.  எல்லாவகையில் அன்றைய சூழ்நிலையில் பிரபாகரனை விட மற்ற போராளிக்குழுக்கள் நல்ல கட்டமைப்பு. சொல்லப்போனால் அன்றைய சூழ்நிலையில் மொத்த போராளிக்குழுக்களை ஒன்று சேர்த்தால் இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை என்பது குறைவு தான்.

ஒன்றைத்தவிர, அது பிரபாகரன் தலைமையில் இருந்த அத்தனை பேர்களுக்குள் இருந்த ஒழுக்கம், அர்ப்பணிப்பு, தன்னலமற்ற சேவை மனப்பான்மை போன்ற பல விசயங்கள் வேறு எந்த இயக்கத்திலும் பெரிதாக காணப்படவில்லை.  தனி ஈழம் என்பதை தீர்வாக வைத்து இருந்தார்களே தவிர பிரபாகரன் போல் அதே உறுதியோ, அதைத் தவிர வேறு ஒன்று இருந்தால் ஏற்றுக்கொள்ளும் மனோ நிலையில் தான் இருந்தார்கள்.  இந்த குணாதிசியங்கள் தான் இவர்கள் ரா வலையில் சிக்க உதவியதும், விலை போக காரணமாக இருந்ததும், இறுதியில் சகோதர யுத்தங்கள் மூலமாக ரத்த ஆறு ஓடியதும் என்று தனியான பாதை பயணிக்கின்றது. ரா இந்தப் போராட்டத்தில் உள்ளே நுழைந்த போது, சந்திரஹாசன் மூலம் டெலோ அமைப்பு முக்கியத்துவம் கொடுத்து நடத்திக்கொண்டுருந்த ஆட்டங்கள் கடைசி வரைக்கும் தொடர்ந்தது.  கிட்டத்தட்ட டெலோ அமைப்பு ரா அமைப்பின் செல்லப்பிள்ளை என்று சொல்லும் அளவிற்கு.  ஆனால் ஒவ்வொரு இயக்கத்திற்கும் ஒவ்வொரு பகுதியிலும் தன்னுடைய ஆளுமையை நிலைநாட்டக்கூடிய மக்கள் ஆதரவு இருந்து என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்ட ஆகவேண்டும்.

ஜெயவர்த்னேக்குப் பிறகு அதிகார ஆசையின் பொருட்டு அமைச்சர்களாக இருந்த அதுலத் முதலி ஒரு பக்கமும், காமினி திச நாயகா மறுபக்கமும் தமிழர் அழிப்பு நடவடிக்கையில் இறங்கி பட்டாசு வெடித்துக்கொண்டாடும் தீபாவளி பண்டிக்கை போல் கொண்டாடிக்கொண்டுருந்தார்கள்.  இதே வருடத்தில் பிரபாகரனுக்கு மொத்த போராளிக்குழுக்களும் ஒன்றினைந்து செயல்படவேண்டிய அவஸ்யத்தை ஆன்டன் பாலசிங்கம் பலவிதமாக உணர்த்தி இறுதியாக (1984 ஏப்ரல்)  Eelam National Liberation Front (ENLF) என்ற பெயரின் கீழ் EROS. PLOT. EPRLF. LTTE  என்று தனித்தனியாக செயல்பட்டுக்கொண்டுருந்தவர்கள் ஒரே குடையின் கீழ் வந்தனர்.  பிரபாகரன் EPRLF தலைவர் பத்மநாபா வை முதல் முதலாக சந்தித்ததும் இப்போது தான்.

இதன் பிறகு ஒவ்வொருவரும் ரவுண்டி கட்டி அடிக்கத் தொடங்கினர்.  ஆனால் இவர்களின் கொரில்லா தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் பின் வாங்கிய இராணுவத்தினர் அப்பாவி பொதுமக்களை கொல்லுவதை மட்டும் நிறுத்தவே இல்லை.  அதுவரையில் பொறுமையாக இலங்கை இராணுவத்துடன் போரிட்டுக்கொண்டுருந்த போராளிக்குழுக்கள் முதன் முறையாக (1985 மே 14) அனுராதபுரத்தில் சிங்கள அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் (இது பெரிய கரும்புள்ளி) நடத்தி 100க்கும் மேற்பட்டவர்களை சாகடித்தனர்.

இலங்கையில் நிற்காத தாக்குதல்களும், அகதிகளின் வருகையும், உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தலும் என தொடர்ந்து கொண்டே போக ராஜீவ் காந்தி உத்தரவின் பேரில் இருதரப்பினரை எதிரெதிரே அமர வைத்து பூட்டான் தலைநகர் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்தினார்.  பத்மநாபா, சீறீசபாரெத்தினம்,பாலகுமார்,பிரபாகரன் நான்கு பேர்களும் தங்களுடைய பிரதிநிதிகளை அனுப்பி வைத்தனர்.  அமிர்தலிங்கம் நேரிடையாக கலந்து கொண்டார்.  இவர்களின் செயல்பாடுகளைப் போலவே மற்றொரு ஆச்சரியம்?
ஜெயவர்த்னே தன்னுடைய தம்பி ஹெக்டர் ஜெயவர்த்னேவை அனுப்பி வைத்தார்.   ஜுலை முதல் சுற்றும் ஆகஸ்ட் இரண்டாம் சுற்றும் பேச்சுவார்த்தை நடந்தது.    இந்த பேச்சு வார்த்தை நடந்து கொண்டுருந் போதே திருகோணமலையில் பேரூந்தில் சென்று கொண்டுருந்த அப்பாவி தமிழ்மக்களை இராணுவம் இறக்கி சுட்டுக்கொன்றது.  இதற்கு பதிலடியாக மன்னார் மாவட்டத்தில் இருந்த இராணுவ முகாம் புலிகள் தாக்கி அழித்தனர்.  இது சங்கிலி போல் தொடர்ச்சியாக நடந்து கொண்டு இரு தரப்பிலும் அதிக சேதம் உருவாக்க, திம்பு பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இந்த திம்பு பேச்சுவார்த்தையை முன்னின்று நடத்திக்கொண்டுருந்தவர் ரொமேஷ் பண்டாரி.  இந்திரா காந்தி காலத்தில் இருந்து செயல்பட்டுக்கொண்டுருந்த ஜீ.பார்த்தசாரதிக்கும் இவருக்கும் அணுகுமுறையில் தலைகீழ் மாற்றம்.  காரணம் அது வரைக்கும் ரா மூலம் மொத்த போராளிகுழுக்களுக்கும் ஆயுதப்பயிற்சி இது போக நிதி உதவி என்று  செய்து கொண்டுருந்த காரணத்தால் தாங்கள் சொல்வதை மொத்த போராளிகளும் எளிதில் கேட்பார்கள் என்ற நம்பிக்கை பொய்த்துப் போனது.

ஒவ்வொருவரும் பிரிந்து செயல்பட்டுக்கொண்டுருந்தார்களே தவிர தமிழர்களுக்கான மொத்த உரிமைகளை எவரும் விட்டுத் தயாராய் இல்லை.  இந்திய அதிகார வர்க்கத்தினருக்கு அவசர உணவு விடுதி சாப்பாடு போல் எல்லாமே கையெழுத்து போட்டு விட்டால் முடிந்து விடும் என்ற நம்பிக்கை.  ஆனால் அதுவரைக்கும் வலியுடன் வாழ்ந்தவர்களுக்கு இவர்கள் காட்டும் வழி மேல் நம்பிக்கை இல்லை.  இந்தியாவிற்கும், ஜெயவர்த்னேவுக்கும் சாதமாகவே இருக்க, மொழிபெயர்ப்பாளாராக செயல்பட்டுக்கொண்டுருந்த ஆன்டன் பாலசிங்கம், ரொமேஷ் பண்டாரியின் கடுமையான மிரட்டலுக்கும், அசிங்க வார்த்தைகளுக்கும் ஆளாகி நாடு கடத்தப்பட்டார்.  இவருடன் மற்ற போராளிக்குழுக்களுக்கு ஒருங்கிருணைப்பாளராக செயல்பட்டுக் கொண்டுருந்த சந்திர ஹாசன்,மற்றொரு போராளித் தலைவர் சத்யேந்திராவும் நாடு கடத்தப்பட்டனர்.  ஒவ்வொன்றும் ரொமேஷ் பண்டாரியின் கண் அசைவில் நடத்தப்பட்டுக்கொண்டுருந்தது.

ரொமேஷ் பண்டாரியின் ஓய்வுக்குப் பிறகு ராஜீவ் காந்தியால் இலங்கைக்கென்று உருவாக்கப்பட்ட குழுவில் இருந்தவர்கள் மத்திய அமைச்சர்களான ப.சிதம்பரம், நட்வட்சிங்.  அப்போது வெளியுறவுச் செயலாளர் ஏபி வெங்கடேஸ்வரன்.  காரணம் தொடங்கப்போகும் (1986 ஏப்ரல் பெங்களூர்) சார்க் மாநாட்டில் ஜெயவர்த்னேவை அழுத்தம் கொடுத்து தமிழர்களுக்கான தீர்வுக்கான முன் வரைவு ஒப்பந்தத்தை மாநாட்டில் சமர்பிக்க ஏற்பாடு நடந்து கொண்டுருந்தது.

இந்திரா காந்திக்கே போக்கு காட்டிய ஜெயவர்த்னேவுக்கு ராஜீவ் காந்தி எம்மாத்திரம்? இந்த குழு பேச்சுவார்த்தைக்கு போக அவரோ இனரீதியான அரசியல் மாநாட்டை கூட்டுவதும், வடக்கு கிழக்கு தமிழர் இணைப்பு என்பதை விட முன்று கூறுகளாக தமிழர் சிங்களர் முஸ்லீம் என்று பிரித்து, திரிகோணமலை பகுதியை சிங்களப்பகுதியில் வரும் அளவிற்கு, இடப்பெயர்ச்சி, சிங்களர்களின் முக்கியத்துவம் என்றொரு தந்திர ஒப்பந்தத்தை சார்க் மாநாட்டில் சமர்பிக்க காத்து இருந்தார்.

காரணம் இது போன்ற ஒரு திட்டத்தை அது வரைக்கும் இந்தியாவிடம் சொல்லவும் இல்லை.  விவாதிக்கவும் இல்லை.  போராளிகள் சொன்ன ஜெயவர்த்னே குணாதிசியங்களை இந்திய அதிகார வர்க்கத்தினர்களுக்கும் புரிந்து கொள்ள உதவிய தருணமிது.

இந்திய அமைச்சர்களுக்கு அதிர்ச்சி.  அவர்களைப் பார்த்து ஜெயவர்த்னே என்ன செய்துருப்பார்?  நம் தலைவர்களைப் பார்த்து மனதிற்குள் மௌனவாக சிரித்துருப்பார்.  காரணம் அரசியல் என்பதே கொள்கை என்பது இரண்டாம் பட்சம்.  தந்திரம், சமயோஜிதம், சாமர்த்தியம் தானே இன்றுவரைக்கும் முக்கியமாய் இருக்கிறது?

தோட்டத் தொழிலாளர்கள் ஒப்பந்தம், கச்சத்தீவு ஒப்பந்தம், திம்பு பேச்சுவார்த்தை என்று ஒவ்வொரு முறையும் வல்லரசு இந்தியா முகத்தில் பேயரசு இலங்கை கரியை பூசினாலும் முழுமையாக புரிந்து செயல்படும் அதிகாரம் பெற்றவர்கள் இந்தியாவில் இன்று வரையிலும் யாருமில்லை? இதனால் தான் தூதுக்குழுவாக சென்ற திருமாவளவனைப் பார்த்து ராஜபக்ஷே எகத்தாளமாக கட்டிப்பிடித்து " நீங்கள் தப்பி விட்டீர்கள்.  இல்லாவிட்டால் பிரபாகரன் கூட போய் சேர்ந்து இருப்பீர்கள்"  என்ற கெக்கேபிக்கே தத்துவத்தை உரத்துச் சொல்ல முடிகின்றது.  பாவம் அவருடைய வழித்தோன்றல்கள்.  கணக்கை தொடங்கி விட்டார்.  முடிவு எப்படி இருக்கும் என்பதை காலம் அவருக்கு விரைவில் உணர்த்தும். அதுவரைக்கும் அவர் இருப்பாரா, இல்லை பாக்கியை வழித்தோன்றல்கள் வாங்கிக்கொள்வார்களா? என்பது தெரியவில்லை?

7 comments:

பின்னோக்கி said...

இப்பொழுது சீனாவால் இந்தியாவின் நிலை வித்தியாசமாக இருக்கிறது. ஆனால் அப்பொழுது யார் காரணம் ?. எந்த நாடு.

தமிழ் உதயம் said...

இந்திராகாந்தியின் ஈழத்தமிழர்கள் மீதான பாசம் எத்தகையது. கருணாநிதிக்கு எந்தளவு இருக்குமோ அந்தளவுக்கு தான். கறுப்பு ஜுலைக்கும், இந்திராகாந்தி இறந்த காலத்திற்கும் இடையே இருந்தது பதினைந்து மாதங்கள். உருப்படியாக அம்மையார் என்ன செய்தார். கறுப்பு ஜுலைக்கு பிறகு ஐநா சபையில் நடந்த விவாதத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டது, அன்றைய இந்திய அரசு. அன்றே அழகாய் முடிந்து இருக்க வேண்டிய பிரச்சனையை, தனது நேர்மையற்ற, சாதுர்யமற்ற போக்கால் சர்வதேச நாடுகள் வந்து உட்கார வழியமைத்து இந்தியா தன் தலையில் தானே மண் அள்ளி போட்டு கொண்டது. காஷ்மீருக்கு தனி பிரதிநிதியை சவூதி நியமித்துள்ளது. சீனா காஷ்மீரிகளுக்கு தனி விசா வழங்குகிறது. கூகுள் தன் இஷ்டத்திற்கு இந்திய வரைப்படம் தயாரிக்கிறது. தன் இறையாண்மைக்கு ஏற்படும் சிக்கல்களுக்கே தீர்வு இல்லாமல் தத்தளிக்கும் போது, இவர்களுக்கென்ன இன்னொரு நாட்டின் இறையாண்மை மீது அக்கறை.

ஜோதிஜி said...

சீனா குறித்த மொத்த புரிதல்கள் பின்னால் வரும். அது ஒரு வரியில் சொன்னால் சரியாக இருக்காது. ராஜபக்சே வரும் போது சீனா மற்றொரு முக்கிய கதாபாத்திரம்.

ஜோதிஜி said...

மன்னர் காலத்தில் இருந்து இன்று நவீன விஞ்ஞான காலம் வரைக்கும் பொருந்தக்கூடிய ஒரு ஊர் நன்றாக இருக்க வேண்டுமென்றால் ஒரு குடும்பத்தை அழிப்பது தவறு இல்லை என்பதை உங்கள் விமர்சனத்திற்கு இடையே ஏதோ ஒரு இடத்தில் பொருத்திப் பார்த்துக்கொள்ளுங்கள்.

அது தான் இந்தியா, அது தான் இலங்கை, சாபவிமோசனம் இல்லாத தமிழர்களின் நலன்?.

தமிழர் நலனை விட கேந்திர நலன் முக்கியம் என்பதாக தொடக்கம் பெற்றது. இன்று முள்ளிவாய்க்கால் வரைக்கும் வந்து நின்று உள்ளது.

M.Thevesh said...

இராமன் வாலியை மறைந்திருந்து கொன்றது போல்
இந்தியா சிங்கள இராணுவ உடையில் மறைந்திருந்து
ஈழத்தமிழரைக் கொன்றது.இதுதான் காந்திதேசத்தின்
லட்சணம்.

ஜோதிஜி said...

லட்சணம் என்பது இன்று அவலட்சணம்.

Anonymous said...

நம்பிக் கெட்டவர்கள் ஈழத்தமிழர் நாம். அன்றுமட்டுமல்ல இன்றும். இனியாவது புரிந்துகொள்ளுமா ஈழத்தமிழினம்.

யாழ்