Saturday, January 16, 2010

பதினெட்டுபட்டி பஞ்சாயத்து ரா வுகள்

1983 க்குப்பிறகு, இலங்கை "கருப்பு ஜுலை" கோரத் தாண்டவங்களுக்குப் பிறகு, கொத்து கொத்தாக மக்கள் தமிழ்நாட்டில் வந்து இறங்கத் தொடங்கிய பிறகு தான் இந்தியா இலங்கையின் மேல் தன்னுடைய பார்வையை பதித்தது.  அதுவரைக்கும் இலங்கை என்பது அண்டை நாடு.  முதல் பிரதமர் நேரு முதல், சாஸ்திரி தொடர்ந்து இந்திரா காந்தி ஆட்சிக்கு வரும் வரைக்கும் இது தான் நிலவரம்.

அது வரைக்கும் ஐ.பி (இண்டலிஜென்ஸ் பிரோ) என்ற அமைப்பு மட்டுமே இருந்து வந்தது.  ஆனால் சீனாவுடன் நடந்த போரில் உளவு ஓற்றறிதலில் உண்டான குளறுபடிகள், தோல்விகள், அவமானங்கள் என்று ஒன்றன்பின் ஒன்றாக இந்தியா பெற்ற பாடங்கள் அத்தனையும் சுய பரிசோதனை செய்யும் அளவிற்கு அன்னை இந்திரா காந்தியை யோசிக்க வைக்க உருவானது ரா  RAW (ரிசர்ச் அண்ட் அனாலிஸ் விங்க்) என்ற அமைப்பு.  பக்கத்து நாடுகளின் மேல் கண் வைத்து இருத்தல், இந்தியாவிற்குள் உள்ளே உள்ள தீவிரவாத குழுக்களை கலைத்தல், அழித்தல் முடிந்தால் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றுக் கருத்துக்கள் உள்ளவர்களை ஒன்றிணைத்து அவர்களை வளர்த்து அவர்களுக்குள்ளே சண்டையை உருவாக்குதல் என்று அவர்களின் புனிதப்பணிகள் எல்லாமே பாகிஸ்தான் நாட்டில் இருந்து பங்களாதேஷ் என்ற நாட்டை பிரித்துக்கொடுக்கும் வரைக்கும் சிறப்பாகத் தான் இருந்தது.
எந்த நாட்டிலும் வாழ்பவர்களுக்கும் புரிந்தோ புரியாமலோ அமெரிக்கா என்பது இன்று வரைக்கும் சொர்க்க தேசம்.  அது போல் உலகத்தில் உள்ள மற்ற நாடுகள் அத்தனைக்கும் அமெரிக்காவின் சிஐஏ என்பது அடிவயிற்றை கலக்கும் வஸ்து.  உண்ணவும் வேண்டும்.  அடிவயிறு கலங்கினால் கக்கூஸ் போகாமல் கையை வைத்து அடக்கிக்கொள்ளவும் வேண்டும்.  காரணம் அவர்களின் நோக்கம் என்பது அத்தனை துல்லியமானது.  ஒற்றை இலக்கத்தில் தான் அவர்களின் தோல்வி முயற்சிகள்.  ஆனால் வெற்றிகள் என்பது எப்போதும் எண்ணிக்கையில் அடங்காது.

இதில் மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால் தொத்தல் வத்தல் நாடுகளில் உள்ள அத்தனை உளவு ஸ்தாபனங்களிலும் சிஜஏ இருப்பதும், அந்த நாட்டின் மொத்த முன்னேற்பாடுகளை இருந்த இடத்தில் இருந்தபடியே தெரிந்து கொள்வதும் அன்றும் இன்றும் அமெரிக்காவின் தனிச்சிறப்பு.  உளவுத்துறையில் பணிபுரியும் ஒரே நபர் வாழும் நாட்டிடம் ஒரு சம்பளமும், அந்த அதிகாரி சிஜஏ விடமிருந்து சம்பளம் மற்றும் வெகுமதிகள் வாங்கிக்கொண்டு வாழ்வதும் மிகுந்த ஆச்சரியம்.  இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அத்தனை நாடுகளிலும், நேற்று வரைக்கும் கைது செய்யப்பட்ட முக்கிய அதிகாரிகளின் பின்புலத்தை நோண்டிப் பாரத்தால் அங்கு சிஜஏ கைங்கர்யம் தெரியும்.  ஆனால் இதுவெல்லாம் வெகுஜன பத்திரிக்கையில் அந்த அளவிற்கு எளிதாக வந்து விடாது.  அதற்குப் பின்னாலும் பல காரணங்கள் உண்டு.  அண்ட சாரச்சரங்கள் அத்தனை இடங்களிலும் ஆண்டவன் இருக்கின்றான் என்றால் சிலர் அடிக்க வருவீர்கள்.  ஆனால் இந்த சிஜஏ உலக உருண்டை முழுக்க பரவி இருக்கிறார்கள் என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.
இதை படிக்கும் நீங்கள், இந்தியாவின் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட மிக முக்கியமான ஏதோ ஒரு துறையில் பணிபுரிந்து கொண்டுருக்கும் பட்சத்தில் உங்களுடன் பழகும் ஒருவர், உங்கள் மொத்த அலுவலகத்தில் ஒருவர் நிச்சயம் சிஜஏ விசுவாசியாக இருந்து தான் ஆக வேண்டும்.  சிரிப்பு வருகிறாதா?  மனதிற்குள் சிரித்துக்கொள்ளுங்கள்.  காலப்போக்கில் நீங்களே உணர்ந்து கொள்வீர்கள்.  இத்தனை விபரமாக இதைக்குறிப்பிடக் காரணம் அந்த அளவிற்கு வல்லமை பெற்றவர்கள் நம்முடைய ரா என்ற அமைப்பில் தலைமைப் பொறுப்பில் இருந்தவரே சிஜஏ விசுவாசியாக இருந்து கைது செய்யப்பட்டவர்கள் என்றால் நம்புவீர்களா? முக்கிய காலகட்டத்தில் கோப்புகள் காணாமல் போவதும், அதிகாரிகள் அமைதியாக இருக்கவும் என்ன காரணமாக இருக்க முடியும்? என்பதை உங்களால் இப்போது யூகிக்க முடிகிறதா?

ரா என்ற உளவுத்துறையின் துணை இயக்குநராக பணியாற்றியவர் கே.வி. உன்னிகிருஷ்ணன்.  சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்தவர். கேரளாவைச் சேர்ந்த இவர் தமிழ்நாட்டுக்கென்று ஒதுக்கப்பட்டவர்.  1962ல் இருந்து சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, வடஆற்காடு, தென் ஆற்காடு, நெல்லை மாவட்டங்களில் உயர் காவல் துறை அதிகாரியாக பணியாற்றி, பின்னாளில் கொழும்புவில் நான்கு ஆண்டுகள் இந்திய தூதரகத்தில் முதன்மை செயலாளராக பணியாற்றியவர்.  கடைசியாக செங்கல்பட்டு மற்று சென்னை காவல் துறை பயிற்சிக் கல்லூரியில் குறுகிய காலம் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரலாக பணிபுரிந்து விட்டு உளவுத்துறையான ரா வுக்கு இடம் பெயர்ந்தவர்.

தொடக்கத்தில் சொன்னது போல் இலங்கைப் பிரச்சனை தமிழகமெங்கும் 1983க்குப் பிறகு கொழுந்து விட்டு எறியத் தொடங்கிய பிறகு மத்திய அரசாங்கத்திடம் செல்லும் இலங்கை பிரச்சனை குறித்த கோப்புகள் அத்தனையும் ரா கொடுக்கும் செய்திகள் மட்டுமே.  வெளியில் உள்ள மற்ற செய்திகள் அத்தனையும் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் ஒன்றுக்கும் உதவாதது.  ஆனால் தொடக்கம் முதல் இவர் கையாண்ட ஒவ்வொரு வழக்கும், பிரச்சனைகளும் முடிவே இல்லாமல் நீள ஒவ்வொரு நிலையிலும் சிஜஏ பங்களிப்பும், வெகுமதியும் குறிப்பிட்ட காலத்திற்குப்பிறகு ஐ.பி (IB) யின் புலனாய்வுக்கு உட்பட்டு திகார் சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட பிறகு தான் ஒரு முடிவுக்கு வந்தது.  அப்படி என்றால் நாட்டின் பாதுகாப்பு?  இலங்கை தமிழர்களின் இன்று வரைக்கும் நீண்டுகொண்டுருக்கும் மொத்த பிரச்சனைகள்?

இதில் மற்றொரு ஆச்சரியம் 1979/83 ஆம் ரா வின் இயக்குநராக இருந்த NF சன்டுக் பதவிக்காலம் முடியும் முன்னே காணாமல் போனவர்.  கடைசியில் தேடிப்பார்த்தால் அமெரிக்காவில் குடியேறியிருந்தார்.  இந்த உழுத்துப் போன அமைப்பை வைத்துக்கொண்டு தான் இன்று வரைக்கும் மொத்த இந்தியாவின் பாதுகாப்பும், வெளிநாட்டு கொள்கைகளும் தீர்மானிக்கப்படுகின்றது.  இவர்கள் அத்தனை பேர்களும் நம்மை அந்நிய தீய சக்திகளிடம் இருந்து பாதுகாத்துக்கொண்டு இருக்கிறார்களாம்?

                                                       சிவசங்கர மேனன்
இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் எந்த இந்திய அதிகாரிகளும் இன்றுவரையிலும் விதிவிலக்கல்ல.  சம்பளம் இந்தியா.  பணி அமெரிக்காவிற்கு.  முடிந்தால் இலங்கை ஆட்சியாளர்களை சந்தோஷப்படுத்துதல்.  அப்படியென்றால் அங்குள்ள தமிழர்கள்?  "கிடப்பது கிடக்கட்டும் கிழவியை தூக்கி மனையில் வை" என்ற கதை தான்,

இந்தியாவின் பனி போர்த்திய மலை முகடுகளில், சுவாசிக்கக்கூட வழியில்லாது, சுமக்க முடியாத சுமைகளுடன், அடுத்த நிமிடம் சாவா? வாழ்வா? என்று அனுதினமும் தன்னை அர்பணித்துக்கொண்டுருக்கும் அத்துவான பனிக்காட்டில் வாழும் அந்த தனியொரு வீரனின் தியாகம் அத்தனையும் டெல்லியில்  உள்ள நாலைந்து தறுதலைகளின் தான் தோன்றி போக்கினால் தீர்மானிக்கப்படுகின்றது என்றால் உங்களால் என்ன சொல்லத் தோன்றும் ?

தொடக்கத்தில் தமிழ்நாட்டில், டேராடூனில் போராளிகளுக்கு ஆயுதப்பயிற்சி அளித்தது, பிரிந்து  செயல்பட்டுக்கொண்டுருந்த போராளிக்குழுக்களுக்கு அவரவர் கொண்டுருந்த மறைமுக ஒப்பந்தப்படி கொடுக்கப்பட்ட கூடுதல் குறைவான மரியாதைகள், அடங்கி நடந்த போது கொடுக்கப்பட்டவைகள், கீழ்ப்படிய மறுத்த போது புடுங்கப்பட்ட உரிமைகள், துரத்தப்பட்ட, கொல்லப்பட்ட போராளிகள் என்று தனியாக ஒரு பாதை செல்லும்.  காரணம் இவையெல்லாம் ராஜ ரகஸ்யங்கள்.

ரா வைப் பொறுத்தவரையில் போராளிகள் என்பவர்கள் இந்தியாவின் அடியாள்கள் அல்லது கூலிப்பட்டாளம்.  நில் என்றால் நிற்க வேண்டும்.  உட்கார் என்றால் படுத்து சாஷ்ட்டாங்கமாக படுத்து வணங்க வேண்டும்.  ஜெயவர்த்னே எப்போதும் பயந்து போய் இருக்க வேண்டும்.  அவருடைய உதவிகள் அத்தனையும் இந்தியாவின் மூலம் மட்டுமே நிறைவேற வேண்டும்.  போராளிகள் என்பவர்கள் ஜெயவர்த்னேவுக்கு வைத்த ஆப்பு.  அவ்வளவு தான்.  இதில் எங்கே தமிழர் ஆதரவு?

டெல்லிக்கு உன்னி கிருஷ்ணன் என்றால் தமிழ்நாட்டுக்கு மோகன்தாஸ்.  இவருக்கு இடது வலது அலெக்ஸ்சாண்டர், வால்டர் தேவாரம்.  கூட்டணி சிறப்பாக இருக்கிறது.  ஆனால் தமிழர்களின் வாழ்க்கை தான் அன்றே பரிதாபமாக மாற்றம் பெறத் தொடங்கியது என்றால் அது தான் நிஜம்.  காரணம் புரிந்து கொள்ள அக்கறையில்லை.  புரிந்தவர்கள் சொன்னால் கேட்கவும் அவர்களுக்கு மனமும் இல்லை.  ஒரு வகையில் இந்தியா கொண்டுருந்த மேலாதிக்க எண்ணங்களின் வெளிப்பாடு, இவர்களைப் போன்ற அதிகாரிகளின் மூலம் நிறைவேற்ற காரணமாக இருந்தது தான் முக்கியமான காரணம்.

சார்க் மாநாட்டில் ஜெயவர்த்னே பெங்களூருக்கு கலந்து கொள்ள வந்த போது இங்கிருந்த அத்தனை போராளிகளும் "கவனிக்க"ப்பட்டார்கள். மொத்த ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.  தேவையில்லாமல் உள்ளூர் ரௌடிகள் சூளை மேட்டுப் பகுதியில் தகராறு செய்த போது அதைக்காரணம் காட்டியே தேவாரம் மொத்த மனதில் வைத்திருந்த கோபத்தையும் நிறைவேற்றிக்கொள்ள முடிந்தது.  அதுவே தான் கடைசி வரைக்கும் சந்தன கடத்தல் வீரப்பன் இறப்பு வரைக்கும் நடந்தது.

சட்டம் ஒழுங்கு முக்கியம் என்றால், உள்ளே வாழ்வர்களின் நலமும் முக்கியமாகத் தானே?  அயல்நாட்டு இந்தியர்களின் முதலீடு உள்ளே வர வேண்டும் என்று விரும்புவர்கள் அங்கு அவர்களுக்கு உருவாகும் பிரச்சனைகளை நீக்கி அவர்களுக்கான நல்வாழ்க்கையில் அக்கறை செலுத்துதலும் தேவைதானே? உளவுத்துறை மட்டுமல்ல எந்த அதிகாரவர்க்கத்தினரும் நமக்கேன் இந்த வம்பு என்று ஒதுங்க மொத்த அயோக்கியர்களின் புகலிடமாக அரசியலும் மாற்றம் பெறத் தொடங்கிவிட்டது. காரணம் படித்தவர்கள் பயந்தாங்கோலிகள்.  பன்றிகள் ஆட்சியாளர்கள்.  அப்புறமென்ன மொத்த அறிவுஜீவுகளும் அரசியல் என்பது சாக்கடை என்று சொல்லி அடுத்த சந்து வழியாக போய்விட வேண்டியது தானே?

கோப்பில் கையெழுத்துப் போடாத காரணத்தால் தண்ணி இல்லா காட்டுக்கு அவரை மாற்றிவிட்டார்கள்?  நமக்கேன் வம்பு என்று அடுத்தவர் கையெழுத்துப் போட்டுக்கொடுக்கும் போது கொலை, கொள்ளை, கற்பழிப்பு வழக்குகளில் உள்ள அமைச்சர்கள் கூட ஆட்டம் போடத் தொடங்கிவிடுகின்றனர்.  நூறில் நான்கு அதிகாரிகளின் கண்டிப்பு காரணமாகத் தான் இன்று இந்த இந்திய அரசாங்கம் செயல்பட்டுக்கொண்டுருக்கிறது.

ரா விடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதும் அவர்கள் முதலில் செய்த வேலை, இலங்கையில் உள்ள பிரபாகரன் முதல் பத்து பேர்கள் கொண்ட சிறு குழுவரைக்கும் மொத்தமாக தகவல் திரட்டியதும், மொத்த சாதக பாதக அம்சங்களை கணக்கில் கொண்டு அவர்களை கவனித்து வந்ததும் தான்.

ரா வின் முக்கிய குறிக்கோள் எந்தப் போராளிகளும் கம்யூனிச பாதையில் போய் விடக்கூடாது என்பது தான்.  இதற்கென்று தனிப்பட்ட அக்கறை.  " வங்கம் தந்த பாடம் "   என்ற கட்டுரையை பிளாட் அமைப்பு வெளியிட்ட போது ரா அழைத்து எச்சரித்து அவர்கள் உள்ளே உள்ள அமைப்பை சீர்குலைக்க முடிவு செய்தது.    அதே சமயம் ஈராஸ் அமைப்பில் இருந்து ஈ.பி.ஆர்.எல்.எப் பிரிந்ததற்கான காரணம் குறித்து " ஈராஸ் மாஸ்கோ ஆதரவாளர்கள், நாங்கள் மாவோயிஸ்டுகள்"  என்று EPRLF போராளிகள் பேசும் அளவிற்கு அவர்கள் ரா மாற்றி இருந்தனர்.  மிரட்டிய பிறகு ரஷ்யா ஆதரவு நிலைப்பாட்டினை எடுத்தனர்.

தொடக்கம் முதல் எம்.ஜி.ஆருக்கு வெளிப்படையாக பண்ருட்டி ராமச்சந்திரன் ஒரு பக்கமும், மறைமுகமாக மறுபக்கம் உளவுத்துறை அதிகாரி மோகன்தாஸ்.  அதேபோல் விடுதலைப்புலிகளுக்கு பழ. நெடுமாறன், வக்கில் ராதாகிருஷ்ணன் (மதிமுகவில் இருந்தது மாறி மறுபடியும் உள்ளே வந்து மறுபடியும் மாறி...............?),  ஈராஸ் அமைப்புக்கு பெரியார் தாசன், வைகறைவாணன் என்பவரும் பின்புலமாக செயல்பட்டுக் கொண்டுருந்தனர்.  சந்திரகாசன் என்பவர் டெலோவுக்கும், ஈபிஆர்எல்எப் க்கு பின்புலமாக செயல்பட்டார்.   ரா உளவுத்துறை டெலோ அமைப்புக்கு மற்ற போராளி அமைப்புகளை விட முக்கியத்துவம் கொடுக்க ஒரே காரணம் சந்திரஹாசன் ரா அதிகாரிகளுடன் கொண்ட புரிந்துணர்வு,  அதுவே ஈபிஆர்எல்எப் ஒன்றிணைக்க இந்த இரு அமைப்புக்கும் ரா கொடுத்த முக்கியத்துவம், ஆயுதங்கள், பயிற்சி என்று மூன்று கால் பாய்ச்சலில் போய்க்கொண்டுருக்க கேட்கவா வேண்டும் மற்ற போராளிக்குழுக்களுக்கு.

ஈராஸ் மற்றும் பிளாட் அமைப்பும் வலிய போய் ராவிடம் போய் சிக்கிக்கொண்டது. பின்னாளில் பழ நெடுமாறன் மூலமாக பிரபாகரனின் விடுதலைப்புலிகள் இயக்கம் உள்ளே வந்தது.  விரும்பாத பிரபாரகன் வேறு வழியே இல்லாமல் இதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை அனுப்பி பயிற்சி எடுக்க வைத்தார்.  ஒரே காரணம் 250 பேர்கள் பெற்ற முறைப்படியான பயிற்சி பின்னால் வரும் மொத்த இளைஞர்களுக்கும் உதவுவதாக இருக்குமே?  அதுவே தான் பின்னாளில் நடந்தது.

ரா வின் திருவிளையாடல் அப்போதே தொடங்கி விட்டது.  முதல்கட்ட பயிற்சி முடிந்ததும், ஈழப் பிரச்சனையை தீவிரப்படுத்தும் பொருட்டு, டெலோ அமைப்பை தூண்டி விட்டு மன்னாரில் 35 ஆண்டுகளாக வாழ்ந்து கொண்டுருந்த (தாத்தா பாட்டி இரண்டு இளம் பெண்கள்) சிங்கள குடும்பத்தின் மேல் தாக்குதல்களை தொடுக்க, மொத்த குடும்பமும் குற்றுயிரும் குலையுறுமாக தெருவில் கிடந்தனர்.  பார்த்த பாதிரியார் காப்பாற்றி மருத்துவணையில் கொண்டு வந்து சேர்க்க உள்ளே வந்தவர்கள் மீதம் இருந்த உயிரையும் பறித்தனர்.  தொடங்கியது இலங்கை இராணுவத்தின் கோரத்தாண்டவம்.  மன்னாரில் வாழ்ந்த 400 தமிழ் குடும்பங்களும் சமாதியானார்கள்.  அப்போது தொடங்கிய அகதிக்கூட்டங்கள் இன்று வரையிலும் நின்றபாடில்லை.   தொடங்கியது ரா.  மொத்த வாழ்வுரிமை போராட்டத்தையும் முடிக்க காரணமாக இன்றுவரைக்கும் காரணமாக இருப்பதும் இந்த ராரா தான். இதன் அடிப்படையில் தான் தொடக்கத்தில் பிரபாகரன் சொன்ன வாசகம் " எதிர்காலத்தில் நாங்கள் இதே இந்த இந்தியாவுடன் போர் செய்ய வேண்டியிருக்கலாம்"
அன்று பதினெட்டு பட்டி பஞ்சாயத்து நாட்டமையாக இந்தியா முடிசூட்டிக்கொண்ட கதாபாத்திரத்தை இன்று வரையில் கெட்டியாக பிடித்துக்கொண்டுருக்கிறது ரா என்ற அமைப்பு.  ஆலமரம், சொம்பு என்று எல்லாமே இருக்கிறது.  பஞ்சாயத்து சொல்லும் ஆள் மட்டும் சீனா கையில் இருக்கிறது.

2 comments:

பின்னோக்கி said...

படிக்க படிக்க நம்ப முடியாத அளவுக்கு தகவல்கள். பயத்தை உண்டு பண்ணுகிறது. அதுவும் cia வைப் பற்றிய செய்தி :(

ஜோதிஜி said...

நன்றி பின்னோக்கி.

தோற்றமும் வளர்ச்சியும் என்று சிஐஏ பற்றி எழுதினால் மொத்தமும் திசைமாறி விடும் என்பதால் சற்று மேம்போக்காக உள்ளே நுழைந்து வெளியே வரவேண்டி இருக்கிறது. ஒரு வகையில் பார்த்தால் CIA அன்று முதல் அவர்களின் பணியை மாச்சர்யம் கடந்து பாராட்டத்தான் தோன்றுகிறது.

அவர்கள் நாடு. அவர்களின் நலம். அதற்காக எந்த எல்லைக்கும் வேண்டுமானாலும் போகலாம். அது தலைவலி கொடுக்கும் தலைவர் உயிர் பறிப்பு வரையிலும்???????