Sunday, August 01, 2021

ஆகஸ்ட் 1 2021

எப்போதும் பக்கோடா சுவைப்பது போல கலவையாக நடந்த சம்பவங்களைச் சுவராசியமாக வாசிக்கும்படி அவ்வப்போது எழுதி வைப்பேன். இன்று அதிகாலை நேரம் இருந்த காரணத்தால் இதனை இங்கே எழுதி வைக்கத் தோன்றியது.



மகள் ஒருவர் கல்லூரிக்குச் செல்ல ஆயத்தப்பணி குறித்த அக்கறையின்றி தினமும் ஓர் இணைய நெடுந்தொடர் பார்த்துக் கொண்டு இருக்கின்றார். நான் தான் பதட்டத்தில் உள்ளேன். புதிய வாழ்க்கை. புதிய கலாச்சாரம். புதுப்புது மாற்றங்கள். இதுவரையிலும் நாம் வளர்த்த வளர்ப்பின் வெளிப்பாடு என்பது என்ன? என்பதனை இனி வரும் வருடங்களில் தான் நாங்கள் பார்க்கப் போகின்றோம்.

அடுத்த வரிசையில் இருப்பவர் 2022ல் நடக்கப் போகும் நுழைவுத் தேர்வுக்கு இப்பொழுதே அதிகாலை முதல் இரவு வரை உழைத்துக் கொண்டு இருக்கின்றார்.  பார்க்கும் நமக்கு ஒரு பக்கம் ஆச்சரியமாக உள்ளது. மறுபக்கம் இந்த அளவுக்குக் கஷ்டப்பட வேண்டுமா? என்று தோன்றுகின்றது. மகள்கள் மூவருக்கும் அடுத்தடுத்து வரும் ஐந்தாண்டுகள் கல்லூரிப் பருவமாக மாறப் போகின்றது. 

நான் தமிழ்த் திரைப்படங்களில் மூன்று படங்களை மட்டுமே மகள்களிடம் சொல்லி உள்ளேன். இன்னும் 50 வருடங்கள் கழித்துக் கூட இந்தத் திரைப்படங்களைப் பார்ப்பவர்கள் ஆச்சரியப்படுவார்கள். கற்றுக் கொள்ள ஏராளமான விசயங்கள் உள்ளது என்பேன். 1. ஹே ராம். 2. விருமாண்டி. 3. தீரன் அதிகாரம் ஒன்று.  ஆனால் இவற்றைத் தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு இப்போது நான் பார்த்துக் கொண்டிருக்கும் படம் சார்பேட்டா பரம்பரை. நீங்கள் நம்ப மறுப்பீர்கள். என்னால் இருபது நிமிடத்திற்கு மேல் பார்க்க முடியவில்லை. ஒரு நாள் முழுக்க இதைப் பற்றியே யோசித்துக் கொண்டு இருக்கிறேன். அடுத்த நாளில் அரை மணி நேரம். இது சார்ந்து எழுதக்கூடியவர்களின் விமர்சனங்கள் என்று கலவையாக இந்தப் படம் என் மனதில் 200 சதவிகிதம் ஆக்கிரமித்துள்ளது. கடந்த மூன்று நாட்களாக பாதி தான் பார்த்து முடித்துள்ளேன்.  

மகள்கள் ஆச்சரியப்படுகின்றார்கள்.  காரணம் சமீபகாலமாக தெலுங்கு ஜுனியர் என்டிஆர் கூத்துக்களைத்தான் ரசித்துப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். தலையில் அடித்துக் கொள்கின்றார்கள்.


ஜூலை 22 அன்று மஞ்சுளா ஈன்றெடுத்த ஏழு குட்டிகளில் அடுத்தடுத்து இரண்டு இறந்து போனது.  ஒரு குட்டி இயற்கையாகவே அடுத்த நாள் இறந்து போனது. என்ன காரணம் என்று யூகிக்க முடியவில்லை. ஆனால் மற்றொரு குட்டி இறப்பு இன்று வரையிலும் எங்களுக்கு இயற்கை குறித்த சூட்சமத்தைப் புரிய வைக்க முயல்கின்றது.

சந்துக்குள் குட்டிகளுடன் மஞ்சுளா இருந்தது. அருகே இரண்டு தென்னை மரங்கள் உள்ளது. முதல் தென்னை மரம் சந்தின் தொடக்கத்தில் உள்ளது. இரண்டாவது தென்னை மரம் சந்துக்குள் இருக்கும் மஞ்சுளா மற்றும் குட்டிகளுடன் தொடர்பு இல்லாமல் குறைந்த பட்சம் இருபது அடிக்கு மேல் இருந்தாலும் இரண்டாவது தென்னை மரத்திலிருந்து விழுந்த தேங்காய் தரையில் பட்டுக் குதித்து அப்படியே சந்துக்குள் இருந்த ஒரு குட்டியின் மேல் பட்டு இரவு முழுக்க ரத்தம் வடிந்து மறுநாள் இறந்து கிடந்தது. அடுத்த சில நாட்கள் இந்த ஆச்சரியத்தை வருத்தமாக நினைத்து அனைவரும் கவலைப்பட்டோம்.  இறப்பு என்பது நெருங்கி விட்டால் அது உறுதி என்பது இதன் மூலம் எங்களால் புரிந்து கொள்ள முடிந்தது.

ஒரு நாயின் கர்ப்பகாலம் 60 நாட்கள். 61 வது நாளில் பிரசவமாகி விடுகின்றது. மஞ்சுளா எட்டு வாரங்கள் முடிந்தவுடன் குட்டி போடப் போகின்றது என்றவுடன் தனக்கான இடத்தை எப்படித் தேர்ந்தெடுத்துக் கொண்டது என்பது தனியாக எழுத வேண்டிய பதிவு.

உயிருடன் இருந்த ஐந்து குட்டிகளை முதல் மூன்று வாரங்கள் எங்களால் முழுமையாக பார்க்க முடியவில்லை. பயந்து பயந்து தான் அணுகினோம். அந்த அளவுக்கு மஞ்சுளா குட்டிகள் மேல் மிக மிகக் கவனமாக இருந்தது. எங்களை நெருங்க அனுமதிக்கவில்லை.  நான்காவது வாரத்தில் தான் பார்த்தோம். ஒரு குட்டியின் ஒரு கால் மட்டும் அதன் பாதம் இல்லாமல் பிறந்து இருந்ததைப் பார்த்து அதிக வருத்தமாக இருந்தது.  அதாவது மூனே முக்கால் கால்.  

குட்டிகள் பிறந்து நான்காவது வார இறுதியில் மஞ்சுளா பால் கொடுப்பதிலிருந்து தன்னை மெது மெதுவாக விடுவித்துக் கொண்டது. குட்டிகள் அருகே வந்தாலும் கண்டு கொள்ளவில்லை. அதன் பிறகே குட்டிகளை நாங்கள் எளிதாக கையாள முடிந்தது.

மகளின் தோழிகள் மூலம் மூன்று குட்டிகள் வெவ்வேறு வீட்டுக்குக் கொடுத்து அனுப்பினோம். எங்கள் வீட்டுக்கு அருகே இருப்பவர் எங்களை விட மஞ்சுளா மேல் அதிக அக்கறை கொண்டு என்னன்ன தேவையோ அனைத்தையும் தினமும் வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து மஞ்சுளாவும் குட்டிகளும் ஆரோக்கியமாக வளர்வதில் அதிக அக்கறை காட்டினார். அவர் உறவினர் ஒரு குட்டியை எடுத்துச் சென்றனர். இறுதியில் பாதம் இல்லாமல் பிறந்த குட்டி மட்டுமே மிஞ்சியது. இவனுக்கு பாதமகன் என்று பெயர் வைத்து இருந்தோம். கடைசி வரைக்கும் எத்தனை ஆண் எத்தனை பெண் என்பதனை நாங்கள் பார்க்கவே இல்லை. பக்கத்து வீட்டுக் காரர் தான் ஐந்தில்  மூன்று பெண் குட்டிகள் என்றார்.  

பாதம் இல்லாமல் பிறந்த ஆண் குட்டியை திருப்பூரில் வீரபாண்டி பகுதியில் உள்ள ஆத்தாள் தோட்டம் என்ற இடத்தில் நாய்க் காப்பகம் கொண்டு போய் விட்டு வந்தோம்.  அங்கிருந்த சூழல், எங்கள் மனநிலை எல்லாம் கடந்து போன நாட்களில் எங்களை அதிகம் பாதிப்படையச் செய்தது.  மிகையுணர்ச்சிகள் என்பதனை அதிகமாக வாழ்க்கையில் பொருட்படுத்தாத எனக்குக் கடந்த 40 நாட்கள் மிகப் பெரிய தாக்கத்தையும் உளவியல் மாறுபாடுகளையும் உருவாக்கியது.

கற்றுக் கொள் களத்தில் இறங்கு என்ற குழுமம் என்பது பாஜக ஆதரவு தளத்தில் உள்ள நண்பர்களுடன் உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு வாரம் வெள்ளிக் கிழமை இரவு 7 மணி முதல் 8 மணி வரைக்கும் நடக்கும். ஒருவர் பேசுவார். இறுதியில் கேள்வி பதில் என்பதோடு முடியும். வெற்றிகரமாக ஆறுவாரங்கள் முடிந்து விட்டது. 

இதன் நோக்கம் கற்றுக் கொள்ள விரும்புகின்றவர்கள் முகம் சுழிக்காத வண்ணம், கட்சி சார்ந்த ஜால்ரா அதீத இல்லாமல் அனைவருக்கும் விரும்பும் வண்ணம் உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். வெற்றி பெற்றுள்ளோம்.

இணையம் வழியே பேசக்கூடியது காற்றில் கரைந்து போய்விடக்கூடாது. ஆவணமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தனியாக யூ டியூப் சேனல் துவங்கினேன்.  கடந்த ஐந்து வாரங்களில் 1200 மணி நேரம் கேட்டு உள்ளனர்.  இதுவரையிலும் 130 சந்தாதாரர்களாக வந்து சேர்ந்து உள்ளனர்.

100 ஆளுமைகள் இதில் பேச வைக்க வேண்டும் என்பதே என் முதன்மை நோக்கம்.  இதன் மூலம் சமூகம், அரசியல், பண்பாடு, கலாச்சாரம், தேசிய மற்றும் மாநில அரசியல் பற்றி எளிய தமிழ்ப்பிள்ளைகளுக்கு புரியும் வண்ணம் இருக்க வேண்டும் என்பதே என் எண்ணம். கனவு நனவாக வேண்டும்.


தொலைக்காட்சி ஊடகங்கள் மூலம் பிரபல்யமாக மாறியுள்ள யூ டியூப் சேனல் வரைக்கும் அனைவருக்கும் தெரிந்த முகங்களை வைத்துப் பேசுவது போல இருக்கக்கூடாது. இணையம் வழியே அறிமுகமான எந்தக் கட்சிக் கொள்கை சித்தாந்தத்தை நம்பக்கூடியவராக இருந்தாலும் அவர் சமூகத்திற்கு நல்ல கருத்துச் சொல்லத் தயாராக இருந்தால் அவரை இங்கு நாங்கள் அறிமுகம் செய்து வைக்கின்றோம்.  இப்படித்தான் இதன் பயணத்தைத் திட்டமிட்டுள்ளோம்.

தமிழக பாஜக தலைவராக திரு. அண்ணாமலை அவர்களை நியமித்தது தனிப்பட்ட முறையில் மகிழ்ச்சியாக இருந்தது. காரணம் ஏற்கனவே இங்கே இருந்த எலும்பு பொறுக்கிகளைப் பற்றி அவசரப்பட்டு எழுதி விடக்கூடாது என்பதற்காகவே மனதிற்குள் தெரிந்த பலவற்றை எழுதாமல் கட்டுப்படுத்தி வைத்திருந்தேன்.

மார்ச் 2020 முதல் ஜூலை 2021 வரைக்கும் முதல் அலை மற்றும் இரண்டாவது கொரோனா மூலம் நான் உணர்ந்து கொண்டது ஒன்றே ஒன்று. உடல் உறுப்புகளில் செயல்பாடுகள் முற்றிலும் மாறியுள்ளது. நாம் ஆரோக்கியம் என்று நம்பியிருந்ததைக்கூட அடித்து நொறுக்கியுள்ளது.

தொலைக்காட்சி விவாதங்கள் எதையும் நான் எப்போதும் பார்ப்பதே இல்லை. முக்கியமான விவாதங்கள் என்று பலராலும் சொல்லப்படும் போது யூ டியூப் வழியாக கேட்பேன். சரியாக இல்லாதபட்சத்தில் இரண்டு நிமிடங்களில் நிறுத்தி விட்டு நகர்ந்து விடுவேன். ஆனால் படித்த நண்பர்கள் கூட தொலைக்காட்சி முன்னால் கிடையாய் கிடப்பதும், உடனே இவர்கள் பேசுவதை நம்பி உணர்ச்சி வசப்படுவதும் ஆச்சரியமாகவே உள்ளது.

மது மற்றும் புகையிலையின் பல வடிவம் போன்ற போதைக்கு நீண்ட நாட்களாக ஆட்பட்டு இருப்பவர்கள் ஒரு வாரம் இதனை முழுமையாக நிறுத்தி விட்டு வெளியே வாருங்கள். உங்கள் மன உறுதியின் தன்மை உங்களுக்குப் புரியும். 80 சதவிகித மக்களால் முடியவில்லை என்பதே உண்மை.

ஆகஸ்ட் 1 2020


கடந்த 15 மாதங்களில் அரசு ஊழியர்கள், தரமான தனியார் நிறுவனங்களில் பணியாற்றிவர்களைத் தவிர இங்கு வாழும் அத்தனை பேர்களும் பொருளாதார ரீதியாக மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்து உள்ளனர். என்னையும் சேர்த்து. மீண்டு வர இன்னும் சில வருடங்கள் ஆகலாம்.

முதல் மற்றும் இரண்டாவது கொரோனா தடுப்பூசி திருப்பூர் அரசு பொது தலைமை மருத்துவமனையில் தான் போட்டுக் கொண்டேன்.  நான் கஷ்டப்பட்டதை விட மனைவி இரண்டு ஊசிகளும் போட அதிக அவஸ்தைப்பட வேண்டியதாகிவிட்டது.  தடுப்பூசி டோக்கன்களை விற்றுச் சம்பாதிக்கும் நல்லாட்சியில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஓ...! மையப் (மய்யப்) படங்கள் 2...!

கல்லூரி வாழ்க்கை எதிர்பாராதவற்றை கற்றுக் கொடுக்கும் - நமக்கும்...!

திண்டுக்கல் தனபாலன் said...

சார்பேட்டா --> சார்பட்டா

ஜெய் பீம்...!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மகள்களின் கல்லூரிப்பருவம் சிறப்பாக அமைய வாழ்த்துகள். சார்பட்டா...அண்மையில் நான் ரசித்த படம்.
பாதம் இல்லாமல் பிறந்த குட்டி..மனதை நெகிழவைத்தது.

ஜோதிஜி said...

மகிழ்ச்சி. நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

மகள்களின் கல்லூரிப்பருவம் - அவர்கள் முன்னேற்றப் பாதையில் செல்ல வாழ்த்துகள்.