****
(2)
நாலைந்து மாதங்களுக்கு முன்னால் மழை பெய்து கொண்டிருந்த சமயத்தில் குட்டி நாய் ஒன்று எங்கள் வீட்டின் முகப்பு பகுதியில் பயத்துடன் ஒதுங்கித் தடுமாறிக் கொண்டிருந்தது. சபாநாயகர் எதிர்ப்பையும் மீறி உள்ளே அழைத்து வந்து துடைத்து பெண்கள் நலக்கூட்டணிக்கு அறிமுகம் செய்து வைத்தேன். சில தினங்கள் கழித்து மஞ்சுளா என்ற பெயரும் வைத்தேன். மகள் ஒருவர் காரணம் கேட்டார்.
ஜெயலலிதா எம்ஜிஆரை என்ற பெயரை பயன்படுத்திக் கொண்டார். மஞ்சுளா எம்ஜிஆருக்காக உண்மையிலேயே பலவிதங்களில் உழைத்து அதன் பலனை அனுபவிக்காமல் ஒதுங்கிவிட்டார். மஞ்சுளா என்ற பெயர் விசுவாசத்தின் அடையாளம் என்று குட்டிக்கதையாக அவர்களுக்குப் புரியவைத்தேன்.
தினமும் மாலையில் எங்களுடன் மஞ்சுளாவும் நடைப்பயிற்சிக்கு வருவாள். உற்சாகம் பெருக்கெடுத்து ஓடும். அப்போது வயதுக்கு வராத காரணத்தால் சந்துகளில் வரும் காதலர்களைக் கண்டு கொள்ளாமலே இருந்தது. சில வாரங்களுக்கு முன்பு வயதுக்கு வந்து விட்டாள். இரண்டு தினங்கள் வீட்டின் வெளிப்புறம் அனைத்துப் பகுதிகளிலும் இரத்தக்கறை இருந்து கொண்டேயிருந்தது. நீங்கள் தான் சுத்தம் செய்ய வேண்டும் என்ற கட்டளையிட வேறு வழியின்றி நான் தான் அவளைக் கடைசி மகள் போலப் பாதுகாத்து வந்தேன்.
அடுத்த சில தினங்களில் அவளின் குணாதிசயம் மாறத் தொடங்கியது. வெளியே நண்பர்களைப் பார்த்து விட்டால் வெறி வந்தது போலத் தாவிக் குதித்த ஓட முயல சபாநாயகர் தடா சட்டத்தைப் போட்டு உள்ளே வைத்து விட்டார். நான் சில தினங்களாக கவனித்து வந்தேன். குட்டிகளை யார் பாதுகாப்பது? என்பது பெரும் விவாதப் பொருளாக மாறியது.
பெண்கள் நலக்கூட்டணி அனைவரும் சபாநாயகர் கட்டளைக்குக் கட்டுப்பட்டவர்கள். நான் பேசுவது சபைக் கூச்சலில் கேட்காது.
வயதுக்கு வந்தால் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்ற என் வாசகம் காற்றில் பறந்து காணாமல் போனது. என் வார்த்தைகளை எவரும் கவனிப்பார் இல்லை. கண்டு கொள்ளவும் இல்லை. இதற்குள் நுழைந்தால் உரிமை மீறல் பிரச்சனை உருவாகி விடும். உச்சநீதிமன்றம் கூடத் தலையிட முடியாது என்பதால் அமைதி காத்தேன்.
மகள் தோழிகளிடம் கேட்டு 15 நாளைக்கு ஒரு முறை குளிப்பாட்டுங்கள் என்றார். விழாக் கோலம் பூண்டது. ஒருவர் ஷாம்பூ, ஒரு சோப்பு, ஒருவர் குளித்து முடித்தவுடன் துடைக்க புதிய துண்டு என்று அணிவகுப்போடு நான் தான் குளிப்பாட்டிக் கொண்டிருக்கிறேன். சபாநாயகர் பொட்டு வைக்க வந்து விடுவார்.
சபாநாயகர் பாணி வித்தியாசமானது. அன்பு என்பதனை உள்ளே வைத்திருப்பார். எளிதாக வெளியே காட்டிக் கொள்ள மாட்டார். மஞ்சுளா விசயத்திலும் அப்படித்தான். அதிகாலையில் கோலம் போட்டு முடித்தவுடன் எனக்குத் தேநீர் தருவதற்கு முன்பே மஞ்சுளாவுக்குப் பால் கொடுத்து விடுவார்.
என்னை அனுமதிக்கவே மாட்டார். காரணம் நான் காற்பங்கு பால். முக்கால் பங்கு தண்ணீர் கலந்து கொடுப்பேன். காரணம் மஞ்சுளா வந்தது முதல் என் தேநீர் அரபிக் பெருங்கடல் போல இருக்க வயதான காலத்தில் கெட்டியாக குடிக்கக்கூடாது என்று அறிவுரையைக் கேட்டு அடங்கிப் போக வேண்டியதாகி விட்டது.
இவர்கள் நான்கு பேர்களுக்கும் மஞ்சுளாவுடன் எப்படி எப்படியோ உறவாடுகின்றார்கள்.
அன்பைப் பொழிகின்றார்கள். கவனிக்கின்றார்கள். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை. மஞ்சுளா என்னிடம் தான் அதிகம் ஓட்டுகின்றது. உறவாடுகின்றது. விளையாடுகின்றது. நான் சொன்னால் தான் கேட்கின்றது.
சபாநாயகர் இப்பொழுது சொல்லும் வாசகம் மஞ்சுளா உங்களுக்குக் கடைசி மகள் அல்ல. இரண்டாவது மனைவி என்று சண்டையைத் தொடங்க தயாராக இருக்க நான் வெள்ளைக் கொடி ஏந்தி 23ம் புலிகேசி போலவே மாறிவிடுகின்றேன். மகள்களிடம் அடிக்கடிச் சொல்வேன். மிருகங்கள் உங்களை எப்போதும் ஏமாற்றாது.காரணம் அது மனித குலமல்ல என்பேன்.
நான் மஞ்சுளாவுடன் உரையாடும் போது மகள்கள் நீங்க லூசாப்பா என்பார்கள். ஆனால் மஞ்சுளா நான் சொன்னபடி மாறும் போது வியந்து நிற்பார்கள். மனிதர்களை விட மிருகங்களுக்குக் களங்கமில்லாத பகுத்தறிவு உண்டு என்பதனை நம்புங்கள்.
*****
(3)
முகப்பு படம், பிறந்த நாள், திருமண நாள், குழந்தைகள் படம், சொந்தக் கதை, சோகக்கதை எதையும் சமூக வலைதளங்களில் நான் பகிர்வதில்லை. காரணம் இது ஒரு முக்கியமான செய்தி ஊடகம்.
சிலருக்கு நன்றாக பேசத் தெரியும். சிலரால் நன்றாக எழுதத் தெரியும். எனக்கு இரண்டும் முடியும் என்பது பயிற்சி மூலம் கற்றுக் கொண்ட வித்தையது. இப்போது ஒவ்வொரு வாரமும் நண்பர்கள் ஏற்பாடு செய்து வருகின்ற காணொளிக்கூட்டத்திலும் பேசிக் கொண்டு வருகிறேன். அதனை இங்கே கொண்டு வந்தது இல்லை. பெருமகன்கள் நன்றாகவே உள்ளது என்கிற அளவுக்கு ஒவ்வொரு வாரமும் எனக்கு புதிய புதிய தகவல்களைத் தேடி அலைய என்னை உழைக்க வைத்துக் கொண்டு இருக்கின்றது.
அதாவது உங்கள் சொந்த வாழ்க்கையில் மாற்ற முடியாத கவலைகள் இருந்தால் அது மாறும் வரையிலும் பொறுமையாக இருக்க வேண்டும். சூழல் மாறும் வரைக்கும் உங்களால் முடிந்த மற்ற விசயங்களில் கவனம் செலுத்தும்பட்சத்தில் புதிய துறைகள் அறிமுகம் ஆகும். கற்றுக் கொள்ள முடியும். வாய்ப்பிருந்தால் உங்கள் திறமை உங்களின் மற்றொரு முகத்தை சமூகத்திற்கு அறிமுகம் செய்து வைக்கும்.
ஒவ்வொரு நாளும் முன் தூங்கி அதிகாலையில் எழும் பழக்கம் இருப்பதால் காலைப் பொழுதுகளில் ஒரு நாளுக்குரிய பாதி வேலைகளை முடித்து விடுவதுண்டு.
June 22 நள்ளிரவு எங்கள் வீட்டு மஞ்சுளா நள்ளிரவில் ஏழு குட்டிகளைப் பெற்றது. ஆச்சரியம் என்னவெனில் நான் எப்போதும் பத்து நிமிடங்களில் தூங்கி விடுவேன். அதன் பின்பு தேசிய நெடுஞ்சாலைப் பயணம் போலவே செல்லும்.
2029
அலாரம் தேவைப்படாமல் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து விடுவேன். மகள் படிக்க அலாரம் வைத்திருப்பார். அலாரம் அடிக்க ஒரு நிமிடத்திற்கு முன்பு எழுந்து விடுவேன். அலாரம் அடிக்கும். மகள் எழுந்து அதனை நிறுத்துவார்.
ஆனால் மஞ்சுளா பிரசவம் நடந்து கொண்டிருந்த சமயத்தில் இனம் புரியாத எண்ணங்கள் மனதில் உருவாகி எழுந்து அமர்ந்தேன். நள்ளிரவு 12.30 மணி இருக்கலாம். அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்த போது குட்டிகளின் சப்தம் கேட்டது. கடந்த சில நாட்களாகவே நாங்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தோம். முதலில் நான் தான் சென்று பார்த்தேன். உள்ளே சந்துக்குள் குட்டிகளைப் பெற்று விட்டு பதட்டத்துடன் மஞ்சுளா என்னை எதிரி போலவே பார்த்தாள்.
அருள்
சபாநாயகரை எழுப்பி அழைத்துச் சென்று காட்டினேன். அவர் ஆர்வக் கோளாறு காரணமாக என் எச்சரிக்கையை மீறி சந்துக்குள் உள்ளே செல்ல முயன்றார். முதல் முறை ஒரு நாயின் சீற்றத்தை அப்போது தான் நான் பார்த்தேன். பின்னால் இழுத்து அழைத்து வந்தேன். அதன் பிறகு காலை வரைக்கும் தூக்கம் வரவில்லை.
எனக்குப் புரிந்து விட்டது. அடுத்த 24 மணி நேரம் யாரும் அருகே செல்லாதீர்கள். அது அதன் இயல்பு நிலைக்கு வரட்டும் என்று அறிவுறுத்தியிருந்தேன்.
நான் சொன்னபடியே மூன்றாவது நாள் தான் இயல்பு நிலைக்கு வந்து சேர்ந்தது. இடையில் ஏழில் இரண்டு இறந்து விட்டது. எடுக்க விடாத அளவுக்கு எங்களை படாய் படுத்தியது. அவளுக்குப் பிடித்த மாம்பழத்தைக் காட்டி வேறு பக்கம் திசை திருப்பி இறந்த குட்டிகளை ஒன்றன்பின் ஒன்றாக வெளியே புதைத்த போது மனதில் இனம் புரியாத வலி உருவானது.
இப்போது ஐந்து குட்டிகளும் போட்டி போட்டுக் கொண்டு காம்புகள் வலிக்கும் அளவிற்கு உறிஞ்சு குடிப்பதோடு கண்கள் திறக்காத போதும் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு எங்கள் பொழுதுகளைச் சுவராசியமாக மாற்றிக் கொண்டு இருக்கின்றார்கள்.
சபாநாயகர் கடந்த மூன்று நாட்களாக என்னுடன் பேசுவதில்லை. காரணம் என் தினசரி வேளைகளுடன் நர்ஸ் அம்மா வேலைகளைச் செய்து கொண்டு பிள்ளைகள் பெற்ற மகளைக் கவனிப்பது போலப் பால் பழம் என்று தொடங்கி மஞ்சுளா எவற்றையெல்லாம் விரும்பி உண்பாளோ அதை மட்டும் வாரி வாரி வழங்குவது சபாநாயகருக்கு மட்டுமல்ல இவர்கள் மூவருக்கும் என் மேல் படு பயங்கர காண்டு. இவர்கள் கேட்கும் ஒரே கேள்வி எங்களை இப்படிக் கவனித்தீர்களா? என்கிறார்கள்.
இன்று காலை வெளியே செல்ல வேண்டிய வேலையின் பொருட்டு உடை மாற்றி வெளியே வந்த போது பால் கொடுத்துக் கொண்டிருந்த மஞ்சுளா அப்படியே குட்டிகளைத் தள்ளி விட்டுக் கேட் திறக்கச் சென்ற என் அருகே வந்து நின்றது.
அவளை எப்போதும் நான் கொஞ்ச வேண்டும். தடவிக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பாள். அப்போது மகள் எடுத்த புகைப்படமிது. ஐந்து குட்டிகளும் பஞ்சபாண்டவர்கள் போல வீட்டுக்கு வந்து சேர்ந்து உள்ளார்கள். எங்கள் வீட்டுக்கு அருகே உள்ள அம்மா ஒரு படி மேலே சென்று மஞ்சுளாவுக்கு என்று தனியாக சமைத்து மூன்றுவேளையும் வந்து கொடுத்துக் கொண்டு இருப்பது இவர்களுக்கு இன்னமும் எரிச்சலை அதிகமாக்கிக் கொண்டேயிருக்கிறது.
என்ன செய்வது? அவரவர் வாங்கி வந்த வரம்?
வீட்டில் தர்மயுத்தம் தொடங்கியுள்ளது.
மீதி இடைவேளைக்குப் பிறகு.
(அடுத்த பதிவில் மீதி கொஞ்சம்)
2 comments:
சிறப்பு...
இல்லத்தில் ஒருவராக அமைந்துள்ள மஞ்சுளாவினைப் பாராட்டுவதும், சீராட்டுவதும் சிறப்பாக உள்ளது.
Post a Comment