Thursday, December 12, 2019

ரஜினிகாந்த் என்ற சிவாஜிராவ்

உங்களுக்கு ரஜினிகாந்த்தைப் பிடிக்குமா? பிடிக்காதா? என்று எனக்குத் தெரியாது.

ஆனால் சராசரிப் பெண்களைப் போல ஆசைப்படாத, ஆசைகள் அதிகம் இல்லாத என் மனைவிக்குப் பிடித்த ஒரே நபர் ரஜினிகாந்த்.

பலசமயம் என்ன காரணம்? என்று நானும் மகள்களும் கேட்டுள்ளோம். எனக்குப் பிடிக்கும் என்பதோடு நிறுத்திக் கொள்வார். அவர் அரசியலுக்கு வந்தால் நான் அவருக்கு ஓட்டுப் போடுவேன் என்று சொல்லியுள்ளார். அவருக்குப் பிடிப்பதால் வேறு அப்பீல் வேண்டுமா? முதல் நாள். முதல் காட்சி என்பதனை ஒவ்வொரு முறையும் நிறைவேற்றி விடுவதுண்டு.



நான் நடிகர்களை நடிகர்களாகத்தான் பார்ப்பதுண்டு. இயக்குநர்களின் திறமைகளைக் கண்டு தான் வியப்பதுண்டு. அவர்களுக்குப் பின்னால் யார் யார் இருந்தார்கள் என்று கேட்டுத் தெரிந்து கொள்வதுண்டு.

பாண்டிராஜ்,வினோத்,சீனுராமசாமி,ஷங்கர் இவர்களைத் தவிரப் புதிதாக வந்து கொண்டிருப்பவர்களையும் பிடிக்கும்.

ரஜினிகாந்த்தை நான் நடிகராகப் பார்க்க விரும்புவதில்லை. வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டியவர்கள், வெற்றியைச் சுவைக்க விரும்புபவர்கள் இவரை அவசியம் கவனிக்க வேண்டும் என்று பரிந்துரைப்பேன்.

கமல்ஹாசனின் விழாவில் இப்படிப் பேசினார்.

கமல்ஹாசனைக் கலைத்தாய் தோளில் சுமந்து செல்கின்றார். என்னையும் போனால் போகின்றது என்று கரம் பிடித்து அழைத்து வந்தார்.

மற்றொரு விழாவில்,

கமல் திறமை என்பது அது எவருடனும் ஒப்பிட முடியாத திறமை. நான் என்னை அது போன்ற திறமைசாலி என்று எங்கேயும் சொல்ல மாட்டேன்.

நம்ப முடிகின்றதா?

இது தான் ரஜினிகாந்த்.

கமலிடம் இதனை நீங்கள் எதிர்பார்க்க முடியாது. கமல் கலைஞர் என்றால் ரஜினி எம்.ஜி.ஆர். வெகுஜன ஆதரவு முதல் தான் நினைப்பதைப் பேசுவது வரைக்கும்.

இவர் தமிழக ஊடகங்களுக்குச் செல்ல டார்லிங். ஏதாவது பேசி விட மாட்டாரா? என்று ஆர்வத்துடன் இவர் பின்னால் அலையத் தயாராக இருக்கின்றார்கள்.

இந்திய ஊடகங்கள் அனைத்து இவர் என்ன பேசுவார்? என்பதனை கவனிக்க ஆர்வமாக உள்ளது.

75 முதல் 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அளவிற்கு வெற்றிகரமான மனிதராக இருக்கின்றார்.
தயாரிப்பாளரை இவர் தேடிச் செல்வதில்லை. இவர் நமக்கு வாய்ப்பு கொடுப்பாரா என்று இன்னமும் கனவு காண்பவர்கள் ஏராளமான பேர்கள் இருக்கின்றார்கள்.

வெளியே எங்கும் சென்றாலும் அழகு, ஆடம்பரம் எதையும் பார்க்காமல் இயல்பாகச் செல்லுவது மிகப் பெரிய ஆச்சரியம். சாதாரண மனிதர்களால் கூட நினைத்தே பார்க்க முடியாது.

தனிப்பட்ட குடும்ப வாழ்க்கையைச் சரியாக வைத்திருப்பது.

எமனின் வாசல் வரைக்கும் சென்று மீண்டு வந்திருப்பது என்பது ஏதோ இவர் இங்கே செய்யக் கடமைகள் காத்திருப்பதாகத்தான் எனக்குத் தோன்றுகின்றது.

வெற்றி பெற்ற, தொடர்ந்து வெற்றிகளைச் சுவைத்துக் கொண்டிருக்கும் மனிதர்களை, வெற்றிகளைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு வாழ்பவர்களை எனக்குப் பிடிக்கும். அவர்களின் பலம், பலவீனங்களைக் கவனிப்பதுண்டு.

நாமெல்லாம் வாழ்த்துச் சொல்லி அவர் வாழ வேண்டிய அவசியமில்லை. ஆனால் என் மனைவி போன்று பல கோடி உண்மையான ரசிகர்கள் உணர்வுப் பூர்வமாக அவரை வழிபடும் தெய்வமாகப் பார்க்கின்றார்கள்.

மனித வாழ்க்கையில் ஆச்சரியமான மனிதர்கள் பலரும் நம்முடன் வாழ்வார்கள். அவர்களில் ரஜினிகாந்த்தும் ஒருவர்.🙏

நிச்சயம் தமிழருவி மணியன் இந்தக் குறளின் அர்த்தத்தை ரஜினிகாந்த் க்கு புரிய வைத்திருப்பார் என்றே நினைக்கிறேன்.

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்

(அதிகாரம்:தெரிந்து செயல்வகை குறள் எண்:461)

பொழிப்பு: (ஒரு செயலைத் தொடங்குமுன்) அதனால் அழிவதையும், ஆவதையும், பின்பு உண்டாகும் ஊதியத்தையும் ஆராய்ந்து செய்ய வேண்டும்

------------

6 comments:

KILLERGEE Devakottai said...

வார்த்தை ஜாலங்களால் அலசி ஆராய்ந்து பிரித்து மேயும் தாங்கள், தங்களது மனைவியிடம் ரஜினியும் நம்மைப் போன்ற மனித ஜடம்தான் (கமலும்தான்) என்பதை விளக்கி அந்த இருட்டறையிலிருந்து வெளிக்கொண்டு வரமுடியாதா ?

நானெல்லாம் இந்த சமூகத்தையே வெளியே கொண்டு வரமுயல்கிறேன்.

நிச்சயமாக முடியாது இருப்பினும் ரசிகன் என்ற அறியாமைவாதிகளை எண்ணி வருந்துகிறேன்.

ரஜினி மட்டுமல்ல எல்லா நடிகனுமே வாயசைத்து பேசும் "பஞ்ச்" வசனங்களை உருவாக்கியது இருட்டறையில் வாழும் வசனகர்த்தா என்ற அறிவாளிகள் தமிழர்கள் என்பதை மறக்க வேண்டாம் (நீங்கள் சொன்ன இயக்குனர்களைப் போல்)

அதேபோல் தயாரிப்பாளர் என்ற பிரம்மன் (பணமுதலை-கள்) இல்லை என்றால் ரஜினி இன்னும் டிக்கெட் கிழித்துக் கொண்டு இருக்கும் நிலை வந்து இருக்கலாம்.

உண்மையில் இறைவன்தான் நம்மை வழி(?)நடத்துகிறான். இருப்பினும் நமது முன்னேற்றத்துக்கு மனிதர்கள் காரணமாக இருப்பார்கள்.

ரஜினி முதல்வராக வருவதைவிட ரஜினியை கொண்டு வந்த கலைஞானம், பாலச்சந்தர் போன்றவர்கள் ஏன் வரக்கூடாது ?

"உங்களது" மனைவி கூத்தாடிகளுக்கு ரசிகனாக இருப்பது (இது அவரது உரிமை) என்னால் ஜீரனிக்க இயலவில்லை.

வருத்தமுடன்
கில்லர்ஜி

ஜோதிஜி said...

உலகில் மனிதர்கள் பல வகையில் இருக்கின்றார்கள். வாழ்கின்றார்கள். 1. தெளிவாக சிந்திப்பது. 2. அரைகுறையாக சிந்திப்பது. 3. சிந்திக்கவே மறுப்பது. இதில் துணைப் பிரிவுகள் உள்ளது. 1. நான் உலகை மாற்ற விரும்புகிறேன். 2. என் வேலை அதுவல்ல. 3. முடிந்தவரைக்கும் முயல்வேன். இதிலும் துணைப்பிரிவுகள் உண்டு. 1. மற்றவர்களின் மகிழ்ச்சி எனக்கு முக்கியம். 2. என் மகிழ்ச்சி மட்டுமே எனக்கு முக்கியம். 3. அடுத்தவரை அழ வைப்பது தான் என் வேலை. இதிலும் துணைப் பிரிவுகள் உண்டு. 1. பெரிதான சிந்தனைகள் எனக்குத் தேவையில்லை. அன்றாட வாழ்க்கையை அமைதியாக வாழ்ந்தால் போதும். 2. தினமும் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு எது தேவையோ அது தான் என் தேவை.

நண்பா இதற்குள் நீங்கள் என்னை உங்களை என் மனைவியை வைத்து இப்போது யோசித்துக் கொள்ளவும். (காலையிலே கொலவெறியை உருவாக்கி விட்டேன் போல.)

திண்டுக்கல் தனபாலன் said...

// எமனின் வாசல் வரைக்கும் சென்று மீண்டு வந்திருப்பது என்பது ஏதோ இவர் இங்கே செய்யக் கடமைகள் காத்திருப்பதாகத்தான் எனக்குத் தோன்றுகின்றது... //

ஐயோ... அய்யய்யோ...! இதெல்லாம் வேற லெவல்...!

ஜோதிஜி said...

தனியாக பதிவு எழுதுகிறேன்.

G.M Balasubramaniam said...

சில பெர்செப்ஷன்ஸ்

ஜோதிஜி said...

இதை நீங்கள் எதையும் முன் முடிவுடன் அணுகும் முறை என்றும் கூட சொல்லலாமே?