Monday, December 02, 2019

தலைமுறை இடைவெளி ?

தலைமுறை இடைவெளி என்றால் என்ன?

33 வருடங்கள். ஒரு தலைமுறையின் ஆயுள்காலம் என்கிறார்கள்.

அதன் பிறகு எல்லாமே மாறுகின்றது.

புனிதம் தன் இயல்பை இழந்து விடும். கொள்கைகள் வலுவிழந்து விடும். புதிய கொள்கைகள் உருவாகும். பெரிய மாற்றங்களைக் கண்டு சிலருக்குப் பயம் வந்து விடும். பதட்டமடைந்து விடுகின்றார்கள். பதவியிழந்த அரசியல்வாதிகள் போல நாம் அனாதை ஆகிவிட்டோமே? என்று எண்ணத் தொடங்குகின்றார்கள். முரண்பாடுகள் எட்டிப் பார்க்கத் தொடங்கும். கீழுள்ள தலைமுறைகள் செய்யும் ஒவ்வொன்றும் தவறாகத் தெரியும். தான் வாழ்ந்த காலம் தான் பொற்காலம் என்று நம்புவார்கள்.

ஜனத்தொகை பெருக்கத்தின் அடிப்படையில் உருவாகும் ஒவ்வொரு துறையையும் அவர்கள் பார்வையில் கேவலமாக விமர்சனம் செய்வார்கள். மொத்தத்தில் கலிகாலம் என்று கொண்டு வந்து முடிப்பார்கள்.




என்னைப் போன்றவர்கள் இரண்டாவது தலைமுறையுடன் பழகுவதைப் போல மூன்று தலைமுறைகளைப் பார்த்து இன்னமும் தன்னை எந்த விதத்திலும் மாற்றிக் கொள்ளாத, விரும்பாத என் அம்மாவை எப்போதும் நினைத்துக் கொள்வதுண்டு. இதன் காரணமாகவே அவர் என்ன பேசினாலும் அப்படியே சிரித்துக் கொண்டே பதில் சொல்லாமல் ஏற்றுக் கொள்வதுண்டு.

மகள்களிடம் அப்பத்தா என்ன சொன்னாலும் அவர் சொல்வதை அப்படியே கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள் என்று வலியுறுத்துவதுண்டு. காரணம் மூன்றாவது தலைமுறையில் வாழும் ஒவ்வொருவரும் குழந்தைப் பருவத்திற்கு மாறி விடுகின்றார்கள். குழந்தைகள் என்றாலே அடம் பிடிக்கும். ஆர்ப்பாட்டம் செய்யும். தான் என்ன செய்கின்றோம் என்பது அறியாமல் துணிச்சலுடன் செய்வார்கள். இளங்கன்று பயமறியாது என்பார்களே அப்படித்தான் வயதான ஒவ்வொருவரும் அவரவர் சூழலில் வாழ்கின்றார்கள். அவர்கள் அப்படியே ஏற்றுக் கொள்வது தான் நாம் அவர்களுக்குச் செய்யும் மரியாதை என்று மகள்களுக்குத் தனியாகப் பேசும் போது புரிய வைப்பேன்.

நேற்று பேசிக் கொண்டே உடன் நடந்து வந்த மகளிடம் இந்த பூ மரமும், உதிர்ந்து கிடக்கும் பூத் துகள்களையையும் காண்பித்து இதைப் பார்க்கும் போது என்ன தோன்றுகின்றது என்று கேட்டேன்?

நான் அங்கேயே நின்று கொண்டு திரைப்படங்களில் காட்டப்படும் ப்ளாஸ்பேக் போலப் பள்ளி நினைவுகளை மனதிற்குள் கொண்டு வந்தேன். மகள் சூழ்நிலைக்குப் பொருத்தமில்லாமல் போட்டார் ஒரு வெடிகுண்டு. என்ன ஆயிற்று?

ஏன் பிலிம் காட்டுகிறீர்கள்? சாதாரணக் குப்பையைக் காண்பித்து மொக்கைத் தனமாகத் தத்துவம் பேசாதீர்கள் என்று சொல்லிவிட்டு இறுதியாக ஏன் குப்பையைக் கூட்டாமல் வைத்திருக்கின்றார்கள்? இந்த வீட்டில் உள்ள ஆன்ட்டி நான்கு நாட்கள் வெளியூர் போயிருக்கின்றார் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா? என்றார்.

பனி விழும் மலர் வனம் உன் பார்வை ஒரு வரம் என்று வைரமுத்து எழுதியிருக்கிறாரே? உனக்குத் தெரியுமா? என்று கேட்டேன்.

அனிருத் இசையில் தர்பார் படப் பாடல் பற்றிப் பேசினார். கப்சிப்.

பூ, மலர்வனம், வைரமுத்து, பள்ளிக்கூட நினைவுகள் அனைத்தும் நொடிப் பொழுதில் இட்ஸ் கான்.🙏

டாலர் நகரம் (DOLLAR NAGARAM)




8 comments:

வெங்கட் நாகராஜ் said...

தலைமுறை இடைவெளி - நல்லதொரு புரிதல் அவசியம். நானும் மகளிடம் அவ்வப்போது புரிதல் பற்றி பேசுவதுண்டு.

நல்ல பகிர்வு. பாராட்டுகள்.

ஸ்ரீராம். said...

நேற்றுபோல் இன்று இல்லை.   இன்று போல் நாளை இல்லை!

கரந்தை ஜெயக்குமார் said...

பேசிப் பேசித்தான் மெல்ல புரிதலை உருவாக்க வேண்டும்
அருமை

G.M Balasubramaniam said...

எனக்கு நன் எழுதி இருந்த பதிவு ஏனோ நினைவுக்கு வந்தது சுட்டி இதோ படித்துப் பாருங்களேன் https://gmbat1649.blogspot.com/2016/03/follow-my-words-not-my-deeds.html

ஜோதிஜி said...

வயதாகும் போது நாம் வாயை மூடிக் கொண்டு காதுகளை திறந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

ஜோதிஜி said...

அடுத்த பத்தாண்டுகளில் மிகப் பெரிய தொழில் நுட்பம் மாறுதல்கள் மூலம் நாம் நினைத்தே பார்க்க முடியாத பல மாறுதல்கள் இங்கே நடக்கப் போகின்றது ராம். காத்திருப்போம்.

ஜோதிஜி said...

மகளுடன் பேசிக் கொண்டே தான் இருக்கிறேன். நாம் காட்டிய பாதையில் அவர்கள் வருகின்றார்கள். ஆனால் பள்ளிக்குச் சென்று வந்தவுடன் தோழியர்கள் ஆதிக்கம் செலுத்தி அவர்களின் பாதையை மாற்றி விடுகின்றார்கள். இது குறித்து விரைவில் எழுத வேண்டும்.

ஜோதிஜி said...

படித்தேன். நன்றி.