Thursday, October 04, 2012

டீச்சர் தந்த விருந்து


பயணங்களை நான் விரும்புவதில்லை. காரணம் எனது பள்ளி பருவத்தில் ஊரை விட்டு எங்கேயும் சென்றதே இல்லை. கல்லூரி வரைக்கும் உண்டான காலத்தில் எங்கேயும் பயணிக்க வேண்டிய அவசியமும் அமைந்ததே இல்லை. சுற்றுலா என்பதெல்லாம் பாடங்களில் படித்த வார்த்தைகள் மட்டுமே.  முடிந்தால் அடுத்த வீட்டு சந்தில் கிடைத்த மிதிவண்டிகளை ஓட்டிப் பார்த்து வெளியில் வெயிலில் சுற்றிக் கொள்ள வேண்டியது தான்.  

படித்த பள்ளிக்கூடத்தில் இருந்து அருகே இருந்த காரைக்குடியில் காந்தி படம் பார்க்க அழைத்துச் சென்றார்கள். அப்போது வெள்ளை ரோஜா படம் நியூசினிமா திரையரங்கில் ஓடிக் கொண்டுருந்தது.  காந்திப்படம் முடிந்ததும் அழைத்து வந்த ஆசிரியருக்கு டேக்கா கொடுத்துவிட்டு நண்பர்களுடன் ஓடிச் சென்று பார்த்து விட்டு வந்தோம்.

வீட்டில் நடந்த மண்டகப்படியை அமைதியாக பெற்றுக் கொண்டேன். பனிரென்டாம் வகுப்பு படித்துக் கொண்டுருந்த போது இப்போதுள்ள இராமேஸ்வரம் பாலம் கட்டத் தொடங்கி இருந்தார்கள். அங்கு பாலத்தின் கட்டுமானத்தை பார்க்க அழைத்துச் சென்றார்கள்..  படகில் ஏறி அந்த காங்கீரிட் தூண்கள் கட்டும் விதத்தை பௌதீக ஆசிரியர் நாராயணன் சார் அருகே நின்று விளக்கினார். அவர் என்றால் எப்போதும் மாணவர்களுக்கு மட்டுமல்ல கூட உள்ள ஆசிரியர்களுக்கும் ஒரு இளக்காரம் தான்.  காரணம் அவர் போட்டுருக்கும் பேண்ட் எப்போது வேண்டுமானாலும் அவிழ்ந்து விழக்கூடிய சூழ்நிலையில் இருக்கும். 

அவரும் கடைசி வரைக்கும் இந்த பழக்கத்தை மாற்றிக் கொள்ள தயாராய் இல்லை. நான் பள்ளியை விட்டு வெளியே வந்து பல ஆண்டுகள் கழித்து அவரை சாலையில் சந்திக்கும் போது கூட அவர் போடுருககும் பேண்ட்டைத் தான் கவனித்தால்.  ம்... மாற்றமே இல்லை. இடுப்பில் ஊசலாடிக் கொண்டுருந்தது.

இதற்குப் பிறகு சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்தில் உள்ள தாவரவியல் ஆராய்ச்சி நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.  அங்குள்ள சதுப்பு நிலக்காடுகளை, படகில் சென்று பார்த்து விட்டு அங்குள்ள ஆராய்ச்சி மாணவர்களை சென்று பார்த்தோம்.  ஓரு ஆராய்ச்சி மாணவருக்கு உதவியாக இருந்த அக்காவைப் பார்த்து விட்டு சொர்ணம் என்பவன் (இவன் மேற்படியில் கில்லாடி) அவங்க என்னையே பார்த்துக் கொண்டேயிருப்பதாக சொல்ல எல்லோரும் ஆசிரியர் விளக்கிக் கொண்டுருப்பதை விட்டுவிட்டு அந்த அக்காவை பார்த்துக் கொண்டுருந்தோம். 

உள்ளே உள்ள விளக்கங்கள் அத்தனையும் முடித்து விட்டு எங்களை வெளியே அழைத்து வந்த ஆசிரியர்,  அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தை மறைவிடத்திற்கு எங்களை அழைத்துச் சென்று சாத்து சாத்தென்று சாத்தி தீர்த்தார்.  ஆனால் ஆசிரியர் கையால் அடித்தது எங்களுக்கு வலிக்கவே இல்லை.  காரணம் நிறைய அக்காக்கள் அந்தப்பகக்ம் நடந்து சென்றபடியே இருந்தார்கள்.

கல்லூரிக்கு வந்து கூட எங்கேயும் அழைத்துச் செல்லவில்லை. ஹெர்பேரியம் தயாரிக்க கடைசி ஆண்டு சுற்றுலா செல்ல வேண்டும் என்ற விதி கூட சாத்தியப்படவில்லை. அங்கேயே இருந்த இலை செடிகளை காய வைத்து ஒப்பேற்றினார்கள்.  கல்லூரிக்கு ஊரிலிருந்து 30 நிமிட பயணம். ஆனாலும் கல்லூரியிலிருந்து காரைக்குடிக்கு பத்து நிமிட பயணம் செல்ல வேண்டும். அருகே இருந்த காரைக்குடியில் இருந்த திரையரங்கங்கள் தான் பசங்களுக்கு பெரிய சுற்றுலா தளம்.  ஆனால் அங்கேயும் அதிகமாக வருவதற்கு வாய்ப்பிருக்காது.  மற்றொரு பள்ளிக்கூட வாழ்க்கையைப் போல கல்லூரி வாழ்க்கை.  

ஆனால் இந்த இரண்டு வாழ்க்கையும் முடிந்து வெளியே வந்து அடுத்து வந்த பத்தாண்டுகளில் சுற்றிய மாவட்டங்கள், மாநிலங்கள், நாடுகள் என்று அலுத்துப் போகும் அளவிற்கு அளவுக்கு அதிகமாகவே சுற்றிவிட்டேன்  வேலையின் காரணமாக சுற்றித்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் ஒவ்வொரு வாய்ப்பாக வந்தது.  கடமையின் பொருட்டு சுற்றிய பயணங்கள் எதுவும் சுகப்பட்டதே இல்லை. புதிய இடங்கள். புதுப்புது மனிதர்கள். எதிர்பாரத சவால்கள். புதுமொழிகள். கற்றுக் கொள்ளவும், கவனிக்கவும், சமாளிக்கவும் நேரம் சரியாக இருந்தது.

தொழில் ரீதியாக சுற்றும் பயணத்தில் உள்ள பிரச்சனையே லாபமும் லாபத்தைச் சார்ந்த விசயங்களுமே.  சுற்றியுள்ள எந்த விசயங்களுமே மனதில் ஏறாது.  ஆனால் கடந்த நான்கு ஆண்டுகளில் எழுதத் தொடங்கிய பிறகே வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்கள் வேறொரு விதமான சுகத்தை அறிமுகப்படுத்தியது. வேகமாக ஓடி வந்த பாதையில் உள்ள பள்ள மேடுகளை நினைக்க வைத்தது. அதை எழுத வைத்தது. எழுதும் போது பலவிதமான எதிர்மறை, நேர்மறை சிந்தனைகளை ஆராய வைத்தது. 

அதன்பிறகு எங்கு சென்றாலும், எங்கே இருந்தாலும் சுற்றி உள்ள நிகழ்வுகளை புதிய கண்ணோட்டத்தில் ரசிக்க வைத்தது.  அலுப்பே இல்லாமல் வாழ்க்கையை அனுபவிக்க வைத்தது.

முதன் முதலாக வேர்ட்ப்ரஸ் ல் எழுதிய தொடங்கிய முதல் மூன்று தலைப்புக்குள் என்று நினைக்கின்றேன்.  துளசி கோபால் என்று ஒருவர் வந்து விமர்சனம் எழுதியிருந்தார்.  தொடக்க கால திருப்பூர் வாழ்க்கையை எழுதியிருந்த போது இப்படி விமர்சனம் எழுதியிருந்தார்.

ரொம்பவும் கஷ்டப்பட்டு விட்டீங்களோ?  இப்ப எப்படி இருக்கீங்க? என்று எழுதியிருந்தார்.

அப்போது இந்த விமர்சனக்கலையும், விமர்சனம் செய்பவர்களைப்பற்றியும், எங்கேயிருந்து வருகிறார்கள்? அவர்களுக்கும் ஒரு வலைபதிவு இருக்கும் என்பது போன்ற எந்தவித அடிப்படை அறிவும் இல்லாத போது அமைதியாக அந்த பெயரைப் பார்த்து மனதில் குறித்து வைத்திருந்தேன்.  அவர் பெண்மணி என்பதே எனக்குத் தெரியாது. சில வாரங்கள் கழித்து மதுரை சீனா அய்யா எனது வேர்ட்ப்ரஸ் தளத்திற்கு வந்து இருந்தார்.  அப்போது பின்னூட்ட பிதாமகி துளசி கோபால் வருகை தந்துள்ளார் என்று சிலாகித்து எழுதியிருந்த போது தான் துளசி கோபால் என்பவர் பெண்மணி என்பதை தெரிந்து கொண்டேன்.  

இவருக்கு சில சிறப்பு அம்சங்கள் உண்டு.  வலைதளத்தில் இயல்பாக புழங்கக்கூடியவர். நேர்மையாக உண்மையாக எழுதும் புதியவர் எவராயினும் தயங்காமல் ஒவ்வொரு சமயத்திலும் ஆதரித்து அக்கறையுட்ன் அவர்களின் வளர்ச்சியை கவனிப்பவர். சிலர் மட்டும் தனிப்பட்ட மின் அஞ்சல் தொடர்பில் சிநேகம் வளர்க்க முடியும்.  தேவையான விசயங்களை மட்டும் பேசி தேவையில்லாத சம்பவங்களை எளிதில் கடந்து சென்று விடுவார். இவரின் உள்வட்டத்தில் நானும் இருக்கின்றேன் என்பதை பெருமையாக கருதுகின்றேன். 

இவரின் மணிவிழா கடந்த 20 செப் அன்று சென்னையில் நியூ வுட்லண்ட்ஸ் ல் நடந்தது.  இரண்டு வாரத்திற்கு முன்பே என்னை தேவியர்களுடன் மனைவியுடன் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டுருந்தார்.  அப்போதைய சூழ்நிலையில் கலந்து கொள்ள முடியுமா? என்று நினைத்திருந்தேன்.  நான் பார்க்க வேண்டிய நபர்கள் என்று பட்டியலில் பலரும் இருந்த காரணத்தால் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மனதில் வைத்திருந்தேன்.  அதுவரையிலும் துளசி கோபால் அவர்களுடன் தொலைபேசி உரையாடல், மின் அஞ்சல் தொடர்பில் மூலம் மட்டுமே பழக்கமாகி இருந்தேன்.

இவர் தற்போது நியூசிலாந்தில் கோபால் அவர்களுக்கு உறுதுணையாக, மகளுடன், வீட்டு நிர்வாகியாக, உலகம் சுற்றும் வாலிபியாக இருந்தாலும் இவர் இருக்க வேண்டிய துறை பத்திரிக்கை சார்ந்த துறையில் இருக்க வேண்டும் என்று பல முறை யோசித்து இருக்கேன்.  இவர் பதிவில், அளிக்கும் விமர்சனத்தில் சர்வசாதாரணமாக ஆங்கிலமும் கலந்து எழுதுவார்.  நானே பலமுறை செல்லமாக கோவித்துள்ளேன்.  ஆனால் எனக்கு வலைபதிவுகளில் அறிமுகமானவகையில் தமிழ்மொழியில், மிகத் தெளிவாக இலக்கணம் தெரிந்து, அதன் உள் அர்த்தத்தை விளக்கமாக எடுத்து புரியவைக்கும் நபர் இவர் ஒருவரே. 

பலமுறை நான் வெட்கப்பட்டு ஓடியுள்ளேன்.  

குறிப்பாக எனக்கு தமிழ்மணம் நட்சத்திரம் தகுதி அளித்த போது நான் எழுதிய அந்த வார கட்டுரைகள் அத்தனையும் டீச்சர் கைவண்ணத்தில் திருத்தி வெளிவந்தவை தான்.  ஒரே குட்டு.  உழக்கு ரத்தம் தலையில் குபுக்கென்று வரும்.  ஆனால் கொட்டுவது தெரியாது.  ரத்தத்தை துடைத்துக் கொண்டு மறுபடியும் மெனக்கெட வேண்டும்.  இப்படித்தான் எனது எழுத்துலக வளர்ச்சியில் இவரின் பங்கும் அதிகமாக இருக்கிறது.

அந்த விழாவில் நான் மட்டும் தான் பாலர் பள்ளி சிறுவனாக கலந்து கொண்டேன். இதுவரையிலும் எந்த விழாக்களிலும் கலந்து கொண்டதில்லை. அதற்கான வாய்ப்புகள் வந்த போதும் திருப்பூர் சூழ்நிலைகள் சாதகமாக அமைந்தது இல்லை. சென்னையில் ஏற்கனவே புத்தக கண்காட்சியில்  சந்தித்து இருந்த போதிலும் இங்கேயும் இன்னும் பலரையும் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. வந்திருந்த அத்தனை பேர்களும் என்னைப் போல இரண்டு மடங்கு மூன்று மடங்கு வலைபதிவில் அனுபவசாலிகள். 

தனிப்பட்ட முறையில் துளசி கோபால் மணிவிழாவில் கலந்து கொண்டதை, கலந்து கொள்ள அழைப்பு அனுப்பியதை எனக்கு கிடைத்த எழுத்துலக விருதாக நினைக்கின்றேன்.

நன்றி டீச்சர். ( எனக்கு கிடைத்த சில படங்களை மட்டும் இங்கே தந்துள்ளேன்) 


                                                       கேக் வெட்டும் யூத் தம்பதி


        அப்பன் முருகன் கைகூப்புகிறார். செந்திலாண்டவர் முன்னே வருகிறார்.


           நல்லதே நினை.  நல்லதே பேசு. நல்லதே நடக்கும் என்ற சீனா அய்யா  
                                                       சென்னை சூறாவளி அன் கோ

                             மோகன் குமார் வரும் போதே ச்சும்மா அதிருதுல்ல.....
        இந்த ஷங்கர் பயபுள்ள பேச ஆரம்பிச்சா எந்தபக்கமும் திரும்பமுடியல
                            சாகாவரம் பெற்ற கோவை லதானந்த (கூட்டத்தில்)
             ஊருக்கெல்லாம் இவரு தல. எனக்கு மட்டும்  தங்கக் கம்பி.
          என்னை ரொம்பவே ஆச்சரியப்படுத்திய மாசி என்ற மா.சிவக்குமார்.
       நம்ம உண்மைத்தமிழன் மற்றும் நண்பர் ராஜராஜனுடன் டீச்சர் மாணவர்
                                                                 டீச்சர் தந்த விருந்து.

11 comments:

தி.தமிழ் இளங்கோ said...

வலையுலக பதிவர்களை நேரில் கண்டு உரையாடியது போன்று இருந்தது உங்கள் பதிவு.

வடுவூர் குமார் said...

வந்திருந்தும் சந்திக்கமுடியவில்லையே!!

cheena (சீனா) said...

அன்பின் ஜோதிஜி

டீச்சர் தந்த விருந்து அருமை

அதனினும் அருமை அவ்விருந்தினைப் பற்றிய இப்பதிவு

புகைப்படங்களூம் அருமை

இன்னும் எத்தனை அருமைகளோ

நல்வாழ்த்துகள் ஜோதிஜி
நட்புடன் சீனா

cheena (சீனா) said...

// நல்லதே நினை. நல்லதே பேசு. நல்லதே நடக்கும் என்ற சீனா அய்யா //

அன்பின் ஜோதிஜி - என்னைப் பற்றி இவ்வளவு தெரிந்து வைத்திருப்பதற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

வருண் said...

:-)

CS. Mohan Kumar said...

பள்ளிப்பருவ நினைவுகளுடன் சுவாரஸ்யமா எழுதிருக்கீங்க. உங்களை இவ்விழாவில் சந்தித்து உங்களுடன் நட்பு பாராட்டியதில் நிரம்ப மகிழ்ச்சி

அமுதா கிருஷ்ணா said...

பள்ளி,கல்லூரி நாட்களில் நடந்தவைகள் எப்பவும் மறக்கவே முடியாதவை.பதிவர் சந்திப்பை மிஸ் செய்து விட்டேன்.

Unknown said...

இளமைக் கால நினைவுகள்,பள்ளி,கல்லூரி,வாழ்க்கையை மறக்கவே முடியாது.

குறும்பன் said...

டீச்சர் டீச்சர்தான். அவங்கள அடிச்சுக்கயாராலயும் முடியாது

ஜோதிஜி said...

நன்றி தமிழ் இளங்கோ

குமார்.. விடுங்க மற்றொரு சமயத்தில் சந்தித்து விடுவோம். சரிதானே?

வாங்க சீனா அய்யா. வலையுலகத்தில் நீங்கள் என்றுமே ஆச்சரியமான மனிதர் தான்.

வருண்?

நன்றி மோகன் குமார். நிறைய உங்களைப் பற்றி யோசித்து இருக்கேன். உங்கள் சுயத்தை இழந்து விட வேண்டாம். இப்படியே இருங்க. சென்னையில் வெள்ளந்தி மனிதர்கள் குறைவு. உங்களைப் பார்த்த போது நீடாமங்கல மனிதராகத்தான் எனக்கு தெரிந்தீர்கள்.

வாங்க அமுதா.

வருக பழனிசாமி. நன்றி குறும்பன்.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
மிக்க மகிழ்ச்சி.
வாழ்த்துகள்.