Monday, December 24, 2012

திரும்பி பாரடா 2012 (2)


1.வீட்டில் இரட்டையரில் ஒருவர் தான் வைத்துள்ள லட்சியத்திற்காக கராத்தே வகுப்புக்குச் சென்று கொண்டிருப்பதோடு அதிலும் முன்னேறியுள்ளார். வகுப்பில் எப்போதும் முதல் நிலை தான். பள்ளிக்கூட அளவில் நடந்து முடிந்த ஸ்பெல் பீ என்று சொல்கின்ற ஆங்கில தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த மாவட்ட அளவிற்கு தயாராகியுள்ளார்.   சென்ற வருடம் முழுக்க மூவரின் தமிழ் மொழி அறிவு குறித்து அதிகம் கவலைப்பட்டு பல காரியங்களை செய்தேன், தூங்கத் தொடங்கும் போது சொல்லிய கதைகளின் வழியே பாடங்கள், வெளியே அழைத்துச் செல்லும் போது புரிய வைத்த விசயங்கள் என்று கிடைத்த நேரங்களில் எல்லாம் அடித்த ஆணிகள் அற்புதமாக வேலை செய்யத் தொடங்கி விட்டது. 

2.என் தாய் மொழியை என் குழந்தைகளுக்கும் நல்ல புரிதலோடு சொல்லிக் கொடுக்கவும் இந்த வருடத்தில் முடிந்துள்ளது. ஒருவருக்கு தமிழ்வாசிப்பு சிறுவர் மலரில் தொடங்கிய பயணம் இப்போது வெகுஜன இதழ்களில் வந்து நிற்கின்றது. பத்திரிக்கைகளில் வரும் படங்களைப் பார்த்து விட்டு மனைவி கதறினாலும் நான் கண்டு கொள்வதில்லை. தவறுகளை விட்டு வெளியே வர முதலில் அந்த தவறுகள் குறித்து புரிதல் வேண்டும் என்பதில் உறுதியாகவே இருக்கின்றேன்.  

இவர் மட்டும் சற்று முரட்டுக் குதிரை. காரணம் வீட்டுக்குள் வந்து பாடங்களை படிப்பதில்லை. பள்ளியிலேயே அத்தனையும் முடித்து விட்டு இங்கே வந்து பத்து நிமிடத்திற்குள் ஒரு திருப்பி விட்டு என்னை திமிராக பார்த்து சவால் விடுகின்றார். முடிந்தவரைக்கும் உரையாடலின் மூலம் புரிய வைத்து விடுகின்றேன். மூவரும் தமிழை பிழையின்றி எழுத வாசிக்க கடிதம் எழுத கற்றுக் கொண்டு விட்டார்கள். இருவர் இந்த வருடம் தான் சிறுவர் மலருக்கு வந்துள்ளார்கள். 

3.கடைக்குட்டியின் மற்றொரு பெயர் ஜில் ஜில் ரமாமணி. காரணம் நாட்டியத்தில் தீரா ஆர்வம். அதைவிட நொறுக்குத்தீனி. படிப்பிலும் வகுப்பிலும் இவரும் முதல் நிலை தான். . ஆனால் ஒவ்வொரு காரியமும் தேர் போல மெதுவாகத்தான் நகரும். பேசத் தொடங்கி விட்டால் ஒவ்வொரு வார்த்தையும் இடி போல இறங்கும். 

மனைவியும் இவரும் அடிக்கடி பேசிக்கொள்வதை கண்டு கொள்ளாதது போல காதில் வாங்கிக் கொண்டிருப்பேன். மாமியார் மருமகள் வாக்குவாதம் போல போய்க் கொண்டிருக்கும். கடைசியில் நான் நாட்டாமையாக ஆக்கப்படுவேன்.  அந்த சமயம் தான் என் ஒன் பாத்ரூம் வருது. இருங்க வந்து விடுகின்றேன் என்று தப்பி விடுவதுண்டு.

4.இடையில் ஒருவர் இருக்கின்றார். படிப்பில் பி கிரேடு. ஆனால் சாப்பாடுச் சுவையில் என்னைப் போலவே ஏ கிரேடு. எது குறித்தும் மற்ற இருவரையும் போல ஆசைப்படுவதில்லை அலட்டிக் கொள்வதும் இல்லை. உண்ண உறங்க கொஞ்சம் படிக்க அவவ்வபோது நான் தான் மிஸ் இங்கே கொஞ்சம் வந்து உட்காருங்க என்று என்னை மிரட்ட என்று அவர் பயணம் அமைதியான நதி போல போய்க் கொண்டிருக்கின்றது.  என் அம்மாவின் அம்மா குணங்களைக் கொண்டு வந்து என்னை பலவிதங்களில் மாற்றியவர் மாற்றிக் கொண்டுருப்பவர். 

5.பத்து வருடமாக எனக்கு ஒரே மருத்துவர் தான். வருடத்தில் தவிர்க்கவே முடியாமல் இரண்டு தடவை செல்வது வழக்கம். எனக்கு பெரிதான எந்த நோயுமில்லை. குடும்பத்தில் இருந்த இருக்கும் சர்க்கரை நோய் கூட அண்டவில்லை. ஆனால் திருப்பூர் நகரம் தரும் தூசியும், மாறும் பருவ நிலையும், அலைச்சலும் தரும் ஒவ்வாமை என்பது தான் சளியில் தொடங்கும். காய்ச்சலை வரவழைக்கும். வண்டி நகராது.  

மருத்துவரிடம் சென்ற பிறகு தான் ஒரு கட்டுக்குள் வந்து நிற்கும்.  உடம்பில் எதிர்ப்பு சக்தியும் வருடத்திற்கு வருடம் இழந்து கொண்டே இருப்பதை கண்கூடாக பார்த்துக் கொண்டிருந்த போதிலும் இந்த வருடத்தின் பாதிக்கு மேல் தான் இயற்கை மருத்துவத்தின் பக்கம் சென்றே ஆக வேண்டும் என்று தோன்றி வெற்றிகரமாக குடும்பம் கடந்த ஆறு மாதங்களில் ஆங்கில மருத்துவத்தை விட்டு வெளியே வர முடிந்துள்ளது. 

6. இந்த வருடம் தமிழ்நாட்டில் இருந்த, இருந்து கொண்டிருக்கும் மின்வெட்டு திருப்பூரில் உள்ள நெருக்கமான பழக்கத்தில் உள்ள, பார்த்த, பழகிய பலரின் வாழ்க்கையையும் சூறையாடி விட்டது. எனக்கு எந்த பாதிப்பும் இல்லை. குடும்பத்திற்கென்று உருவாக்கிக் கொடுத்த வசதிகள் அவர்களின் தினசரி வாழ்க்கை பாதிக்கவில்லை.

பாதிப்பு என்று பார்த்தால் உழைப்புக்கு கிடைக்க வேண்டிய உண்மையான வருமானங்கள் பாதியாக கிடைத்தது மட்டுமே. அத்துடன் உழைக்க வேண்டிய தருணங்கள் இன்றி அமைதியாக வேடிக்கை பார்க்க வைத்தது தான் கொடுமை.

7.வசதிகளை பொருட்படுத்தாமல் இயல்பான கிராமது சிந்தனைகளில் வாழ்க்கை வாழ பழகிக் கொண்டதால், குடும்பத்தையும் அதன்படியே வழி நடத்துவதால் எந்த இடர்பாடுகளும் பெரிய அளவில் பாதிப்பதில்லை., குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அதற்கு கிடைக்கும் பலன்கள், கிடைக்காத போது செய்ய வேண்டிய உண்மையான அக்கறை சார்ந்த உழைப்பு என்று இந்த வருடம் முழுக்க இனிய நாட்களாகவே இருந்தது.

8.ஒவ்வொரு முறையும் ஒரு குறிப்பிட்ட வலைதளத்தை சோதனையாக எடுத்துக கொண்டு அதனை முழுமையாக உள்வாங்க முயற்சிப்பதுண்டு. எழுத தொடங்கிய முதல் தலைப்பு முதல் நேற்று எழுதியது வரைக்கும் பார்ப்பேன்.

இந்த வருடம் எழுத்தாளர் ஜெயமோகன் தளத்தை பார்த்த போது ஆச்சரியப்பட்டேன். அவர் மேல் உள்ள விமர்சனங்கள், ஆதரவு, எதிர்ப்பு, வசவுகள், பாராட்டுரைகள் என்று அனைத்தையும்  உள் வாங்க முடிந்தது.  

9.அவரும் தினந்தோறும் விரிவாக தான் நினைப்பதை எந்தவித சமரசமின்றி எழுதுகின்றார். அளவு எதையும் வைத்துக் கொள்ளாத போதும் கூட அது அவசியமான கட்டுரையாகவே இருக்கின்றது. அதைவிட அவரின் தள வடிவமைப்பு தான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

அவர் எழுதிய எதைப் பற்றி வேண்டுமானாலும் தெரிந்து கொள்ள முடியும். அந்த அளவிற்கு ஒவ்வொரு இடத்திலும் ஏராளமான உழைப்பின் மூலம் சாத்தியமாக்கி இருக்கின்றார்.  எழுதுவதைப் போல அதை கொண்டு சேர்த்தலும் அவசியம் என்பதை அவரின் தளம் எனக்கு உணர்த்தியுள்ளது. 

10.பள்ளி முதல் கல்லூரி வரைக்கும் உள்ள நாட்களில் மேடைப் பேச்சுகளில் கலந்து பல பரிசுகளையும் பெற்றுள்ளேன். அதற்குப் பிறகு 15 ஆண்டுகள் வாசிப்பு மட்டுமே. பேய்த்தனமான வாசிப்பு முதல் பொழுதுபோக்கு வாசிப்பு வரைக்கும் எந்த பாரபட்சமும் இல்லை.  கடந்த நான்கு ஆண்டுகளில் தான் எழுத முடிகின்றது என்ற நம்பிக்கையும் வந்துள்ளது. ஆனால் இந்த வருடம் தமிழ்ச்செடி விழாவில் தான் முதன் முதலாக பேசினேன்.

அலுவலக ரீதியான மனித வள மேம்பாட்டுத்துறையில் வாரந்தோறும் உரையாடல் நடக்கும். தமிழ்ச்செடி விழாவில் பேசுவதற்கு முன்பு முதல் நிமிடம் வரைக்கும் எது குறித்து பேசப்போகின்றோம் என்று எதுவும் தெரியாமல் கோவை மு சரளா மற்றும் மெட்ராஸ் பவன் சிவா இவர்களுக்கிடையே நடந்த உரையாடலுக்கு மையமாக நான் பேசினேன். நண்பர்கள் எழுதும் எழுத்துக்களைப் போல பேசும் பேச்சும் தெளிவாக அற்புதமாக உள்ளது என்றனர். காரணம் பொதுவாக எழுதுபவர்களுக்கு நன்றாக பேச வராது என்பார்கள். இது இந்த ஆண்டில் எனக்கு கிடைத்த அங்கீகாரத்தில் ஒன்று..

அடுத்த பதிவில் முடிகின்றது.

திரும்பி பாரடா 2012  1

Sunday, December 23, 2012

காரைக்குடி உணவகம் - பசியா? ருசியா?


சாலம்ன் பாப்பையா, திண்டுக்கல் லியோனி பட்டிமன்றத் தலைப்பு போல இருக்குதே என்று யோசிக்கின்றீர்களா?

வேற என்ன செய்வது?  

உண்ண வழியில்லாமல் ஒரு பெருங்கூட்டம் பெருகிக் கொண்டே இருக்கின்றது. அடுத்து என்ன மாதிரி வித்தியாசமான சுவையில் உண்ணலாம் என்று அலையும் கூட்டமும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே தானே இருக்கிறது.

பழைய சாதம். தொட்டுக்க கொஞசம் முதல் நாள் வைத்த பழைய புளிக்குழம்பு? ரெண்டு வெங்காயம். எனக்கு இது போதும்.

சோறு தவிர வேறெந்த கருமாந்திரமும் தேவையில்லை. சோறு தான் வேண்டும்.  அதை சாப்பிட்டால் எனக்கு சாப்பாடு சாப்பிட்ட திருப்தி?

அய்யோ? இந்த சோறு சாப்பிடுபவர்களைப் பார்த்தாலே எனக்கு எரிச்சலா வரும். விதவிதமான டிபன் வகைகள் தான் எனக்கு எப்போதும் விருப்பம்?

விதவிதமான புதிய வகைகளை சுவைத்துப் பார்ப்பது எனக்கு பிடிக்கும்? வர வர பீட்ஸா,பர்கர் கூட பிடிக்கமாட்டுது. 

அடப் போங்கப்பா சாப்பாடு என்றால் அசைவம் தான் உண்மையான சாப்பாடு. ஒரே ஒரு கருவாடு. ஒரு தட்டு சாப்பிட்டு விடுவேன். எனக்கு சிக்கன், மட்டன் இருந்தா ஒரு கட்டு கட்டி விடுவேன். ஒரு முட்டை கூட சாப்பிட்டுற சாப்பாட்டில் இல்லைன்னா அது என்னப்பா சாப்பாடு?

இந்த ஐந்துக்குள் தானே நாமே ஏதோவொரு இடத்தில் ஒளிந்து தின்று கொண்டிருக்கின்றோம்.

இந்த பஞ்சபாண்டவர்களைப் போல இவங்க முப்பாட்டனும் நான்கில் இருந்து தான் தொடங்குகின்றார்கள். .

இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு. 

ஆனாலும் இதன் நீட்சி அதிகம் என்றாலும் இப்போது இதனை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

கண்மாய் மீனில் கருப்பட்டி போட்டு சமைத்தால் நன்றாகவா இருக்கும்?

அல்வாவை அயிரை மீன் பக்குவத்தில் செய்ய முடியுமா?

புளியோதரையில் அதிகமாக உப்பை அள்ளிக் கொட்டினால்  உப்போதரை என்று சொல்ல மாட்டார்கள்.  செய்தவர் அடிவாங்கி விடுவார். .

சொல்லிக் கொண்டே போகலாம்.  காரணம் நாம் விரும்பும் ருசி தான் நமக்கு முதலில் பசியைத் தூண்டுகின்றது.   குழப்பமாக இருக்கின்றதா? 

இயல்பாக உடம்பில் நேரம் வந்ததும் பசி எடுப்பது என்பது வேறு? 

ருசி நம்மை தூண்டுவது என்பது வேறு.  

திடீரென்று சுவராஸ்சியம் இல்லாமல் ஒரு கிராமத்துக் கடையில் வேண்டா வெறுப்பாக சாப்பிடும் சூழ்நிலை உருவாகின்றது என்று வைத்துக் கொள்ளுங்க.  இயல்பான பசிக்காக உள்ளே நுழைந்து இருப்பீங்க.  வேறு எந்த கடைகளும் அந்த சமயத்தில் கண்களுக்கு தென்பட்டு இருக்காது. ஆனால் அவங்க கொடுத்த கோழிக் குழம்பை பார்த்து சொக்கிப் போய்  என் சொத்தை வேண்டுமானாலும் எழுதித் தருகின்றேன். இன்னோரு கரண்டி ஊத்துங்க என்று உறிஞ்சத் தோன்றுமே? அது தான் ருசியின் மகிமை.

கூழாக மாற்றுங்க.

இன்று ஒவ்வொருவரும் ருசியாக சாப்பிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டு எத்தனையோ விதமான உணவுகளை தினந்தோறும் தினறு பார்க்க முயற்சித்துக் கொண்டே தான் இருக்கின்றோம். ஆனால் எப்படி சாப்பாடுகின்றோம் என்பது தான் பெரிய கேள்விக்குறி?

சாப்பிடுவதைப் பற்றி இப்போது பேச வேண்டும்.

ஒரு கையில் அப்படியே எடுத்து ஒரு உருண்டை உருட்டி அப்படியே வாயில் திணிப்பது ஒரு வகை.  வாய் என்பது ஒரு சிறிய அளவு உள்ள பகுதி. ஆனால் அதன் கொள்ளவுக்கு மேல் திணிக்கும் போது பாதிக்கும் மேலே அரைக்காமலேயே அப்படியே உள்ளே போய்விடுகின்றது.  வயிறு என்பது செரிக்கத்தானே இருக்கிறது என்பது நீங்க சொல்வது என் காதில் விழத்தான் செய்கின்றது.  ஆனால் வயிறு என்பதன் பணி வேறு.

சாப்பிடுவதை முறைப்படுத்தி வைத்திருக்கிறார்கள். 

ஒவ்வொரு விரலின் நுனியில் தொடங்கும் முதல் கோடு வரைக்கும் தான் சாப்பாட்டை எடுக்க வேண்டுமாம். அதாவது நான்கு விரல்களும் சோர்ந்த அந்த அளவுக்கு எடுக்கும் போது தான் கிடைக்கும் அளவு தான் வாயில் இயல்பாக பற்கள் கடித்து நாக்கு சுழற்றி அது கூழாக மாற்றி உள்ளே இறங்க உதவும். அளவுக்கு மீறி எடுத்து வாயில் திணிக்கும் போது தான் பாதி கடித்தும் கடிக்காமலும் உள்ளே போக ஒவ்வொரு பஞ்சாயத்தின் தொடக்கமும் இதில் இருந்து தான் தொடங்குகின்றது.

செரிக்காமல் வயிற்றில் தங்குவது, செரிமாணத்தின் அளவு தெரியாமல் சாப்பிடுவது, எப்போது சாப்பிட வேண்டுமோ அதை மீறி கண்ட நேரத்தில் சாப்பிடுவது, ஓய்வு கொடுத்தே ஆக வேண்டிய நேரத்தில் உள்ளே தள்ளிக் கொண்டேயிருப்பது...............

இத்தனையும் செய்து விட்டு குத்துதே குடையுதே என்றால் அதற்கு என்ன தான் தீர்வு? 

நோய்களின் ஆரம்பம் ஒவ்வொருவரின் வயிற்றில் இருந்து தான் தொடங்குகின்றது. அந்த வயிற்றை சரியாக கவனிக்காமல் வைத்திருக்கும் போது வயிற்றுப் போக்கு முதல் வெளியே தள்ளி விடுப்பா என்று சொல்லாமலேயே செய்யும் வாந்தி வரைக்கும் நம்மை வரவேற்கின்றது.

மைதா மாவு போன்ற சமாச்சாரங்களை வழிக்கு கொண்டு வர ஈஸ்ட் என்ற பொருளைச் சேர்ப்பதை கவனித்து இருப்பீர்கள் தானே? 

காரணம் நொதித்தல் என்ற நிலை நடக்க வேண்டும்.  அப்புறம் வகுத்தல் கூட்டல் பெருக்கல் போன்ற சமன்பாடுகள் நடக்கும். அதன் பிறகே நாம் விரும்பிய பலகாரத்தைச் செய்ய முடியும். மாவு நொதிக்கவில்லை என்றால் நாம் நொந்து போய் அந்த மாவை வேடிக்கைப் பார்க்க மட்டுமே உதவும்.  

அதைப் போலத்தான் நம் வாயில் உள்ள எச்சில் என்ற உமிழ்நீர் என்ற அற்புத பணியைச் செய்கின்றது.  காறி காறி துப்பி அதை வீணாக்கும் மனிதர்களுக்கு அதன் அருமை புரியப்போவதில்லை. 

சுவை என்பது நாக்கு மட்டுமே உணரும். உள்நாக்கில் தொடங்கும் அந்த உணவின் கூழ் என்பது வெறும் சாறு தான். அதற்குப் பிறகு அதன் சுவையை எந்த உறுப்பும் உணர வேண்டிய அவசியமில்லை.  

ஆனால் இந்த நாக்கு வரைக்கும் நடக்கும் பயணத்திற்குத்தான் நான் நாயாய் பேயாய் அலைந்து அலைந்து கண்ட கண்ட இடங்களில் உள்ள கருமாந்திரங்கள் வாங்கி வாயில் கொட்டிக் கொண்டேயிருக்கின்றோம். 

ஆனால் கூழாக மாறி உள்ளே அளவோடு உள்ளே செல்லும் எந்த உணவும் உங்களுக்கு ஆரோக்கியத்தை தருகின்றதோ இல்லையோ அது அவஸ்த்தையை தராது. 

சத்துக்கு உணவா? சக்திக்கு உணவா? இல்லை சாவதற்குள் அத்தனை சுவையையும் தின்று பார்க்கத்தான் இந்த உணவா? என்று எத்தனை எண்ணங்கள் இருந்தாலும் ருசியோடு அத்தனை பசியையும் போக்குவதோடு நன்றாக வாயில் அரைத்து அதை கூழாக்கி உள்ளே அனுப்புங்க.  ஆயுள் கெட்டி என்று அர்த்தம். நோய்கள் வர யோசிக்கும்.

Saturday, December 22, 2012

திரும்பி பாரடா 2012

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது அடுத்த ரெண்டு மூன்று வருடங்களில் என் கையில் கிடைத்த நோட்டுக்களை டைரியாக நினைத்துக் கொண்டு  அப்போது தோன்றியதை நாட் குறிப்புகளாக நிறைய விசயங்களைப் பற்றி எழுதி இருக்கின்றேன்.

ஆனால் தொடர்ந்து என்னால்  எழுத முடிந்ததில்லை. பல நினைவுகள் மறந்து  போய் விட்டது. இப்போது கூட பழைய டைரிகளை வீட்டில் காட்டும் போது நக்கல் வார்த்தைகள் வந்து விழும்.  இந்த வலைபதிவில் நான் இதுவரைக்கும் முயற்சிக்காத ஒன்று

நண்பர் வெயிலான் உடன் இது குறித்து உரையாடிய போது ஏற்கனவே மா.சிவகுமார் இதைப் போல அன்றாட நிகழவுகளை தினந்தோறும் குறிப்புகளாக எழுதியிருப்பதாக சொன்னார். ஆனால் நான் இந்த வருடம் முழுக்க நடந்த நிகழ்வுகளை அனுபவ குறிப்புகளாக வலைபதிவில் எழுதி வைக்க முடியுமா? என்று யோசித்தன் விளைவு இது. . 

ஒவ்வொருவருக்கும் முன்று வாழ்க்கை உண்டு.

குடும்பம், தொழில் நம் தனிப்பட்ட விருப்பங்கள்.

இந்த மூன்றையும் முயற்சித்துப் பார்த்துள்ளேன். 

பதிவின் நீளம் கருதி மூன்று பதிவுகளாக வருகின்றது.. 

அறிமுகமான இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்து நிற்க பேச எழுத முடியாத தொழில் வாழ்க்கையில் வருடத்தின் இறுதிப் பகுதியில் தான் ஆற்றங்கரையோரம் அமர்ந்து வேடிக்கைப் பார்க்கும் அமைதி வந்தது. காரணம் இந்த வருடம் செயல் இழந்து போன தமிழ்நாட்டு அரசாங்கத்தின் "அறபுத திறமையான புரிதல்" நிர்வாகத்தில் திருப்பூர் என்ற தொழில் நகரமே  ரஜினிக்காந்த் சொன்னது போல ச்சும்மா அதிர்ந்து  கலகலத்துப் போய்விட்டது.  உருவான மின்தடையில் ஒவ்வொரு ஏற்றுமதி நிறுவனங்களுக்கும் டீஸல் வாங்கி கட்டுபிடியாகவில்லை.படிப்படியான ஆட்குறைப்பு நடவடிக்கை, என்று கண் எதிரே பல கொடுமைகளை பார்க்க நேர்ந்தது. ஆனால் நமக்கு பலசமயம் ஆட்கள் தேவைப்பட்ட போதிலும் அமைதியாகவே இருந்து விடுங்க என்ற அறிவுறுத்தல் வந்த காரணத்தால் ஏராளமான ஓய்வுகளை வேதனையுடன் பார்க்கத்தான் முடிந்தது. எழுதித் தீர்க்க வேண்டிய விசயங்கள் நிறைய உள்ளது. ஏதாவது ஒரு சமயத்தில் இது குறித்து எழுத வேண்டும்.

ஆறு வருடமாக முடிந்தே போய்விட்டது என்ற கிடந்த ஒரு நிறுவனத்தை தூக்கி நிறுத்தியதோடு நிர்வாக மேலாண்மையில் கற்றுக் கொண்ட பாடங்களும் கிடைத்த அனுபவங்களும் ஏராளம்.

இனிய வெற்றிகளை மட்டுமே நாம் விரும்புகின்றோம். வாழ்வில் எதையும் வெற்றி தோல்வி என்று மட்டுமே பார்க்கின்றோம். ஆனால் என்ன கிடைத்தது? எப்படி மாறியுள்ளோம்? என்பதை எடுத்துக் கொள்ளும் போது நான் இந்த வருடம் நிறைய மாறியுள்ளேன் என்பதை புரிந்து கொள்ள முடிகின்றது.  பண ரீதியாக இழப்பில்லை. அதே சமயத்தில் மன ரீதியான வளர்ச்சி அபரிதமானது.

ஈயடிச்சான் காப்பி போல வாழ்பவர்கள் வெள்ளம் வந்து விட்டது. காப்பாற்றுங்க காப்பாற்றுங்க என்று (உடன் பணிபுரிவர்கள்) தொழில் ரீதியான பிரச்சனைகளை என்னிடம் கொண்டு வரும் போது அழகாக அமைதியாக பிரித்து வைத்து அவர்களை வைத்தே அதை முடிவுக்கு கொண்டு வந்த திறமையை இந்த வருடம் வளர்த்துக் கொண்டுள்ளேன். இதற்கு காரணம் வலையுலக எழுத்துக்களே. கூர்மையாக ஒன்றை கவனிக்கும் போது அவசரத்தை விட அமைதியாக இருப்பதென்பது நம் இயல்பான பழக்கமாக மாறிவிடுகின்றது. 

உலகம் நம்மை பாராட்டினாலும் நம்மிடம் உள்ள அத்தனை இயல்பான குணங்களையும் காண்பவர், சகிப்பவர், மாற்றுபவர் அவரவர் மனைவிகள் மட்டுமே. அந்த வகையில் நான் என்றுமே பாக்கியவான் தான். என்னை என் போக்கிலேயே வாழ அனுமதித்தவளுக்கு இந்த வருடம் என் அன்பை எப்போதும் போல கோபத்தோடு கொஞ்சம் கூடுதலோடு கொடுத்துளேன். வாங்கிய திட்டுக்களை விட கிடைத்த மதிப்பெண்கள் அதிகம்.

ஊர் உலகம் தெரிய நம்முடைய முயற்சிகளுக்கு உண்மையான பலன் கிடைக்காத போது அது கவலையை அறிமுகம் செய்கின்றது. அது உடனே சோகத்தை அறிமுகம் செய்ய இறுதியில் உடம்பில் கொண்டு போய் பதிவு செய்கின்றது. ஆனால் அது போன்ற தருணங்களில் பிடித்த விசயங்களில் ஈடுபடும் போது நம்மிடம் உள்ள அடுத்த திறமைகள் ஒவ்வொன்றும் எட்டிப்பார்க்க புதிய பாதை உருவாகின்றது. உணர்ந்த உண்மைகளும் உணர்த்தும் எதார்த்தமும் கைகோர்கக கிடைக்க அனுபவங்களை எழுத்தாக மாற்றும் போது சிலருக்கேனும் பயன் உள்ளதாக இருக்கின்றது. பல சமயங்களில் நாம் கடந்து வந்த அவசர தருணங்களை படித்துப் பார்க்கவும் உதவுகின்றது.

எது குறித்து யோசித்தாலும் அதன் தொடர்பான வார்த்தைகள் தொடர்ச்சியாக தோன்ற ஆரம்பித்து விடுகின்றது. மனதிற்குள் பார்த்த, பாதித்த, படித்த, கேட்ட, யோசித்த அத்தனை விசயங்களின் கோர்வையும் நமக்கு பல புரிதலை புரிய வைக்கின்றது.  அந்த சமயத்தில் தொடர்ச்சியாக யோசனையில் வந்து விழுந்து கொண்டேயிருக்கிறது. ஆனால் எழுத ஆரம்பித்த பிறகு அத்தனையும் மறந்து போய் புதிதான சிந்தனைகள் எழுத்தாக மாறி யோசித்ததை விட இயல்பாக ஒரே மூச்சில் எழுதி முடித்து விட முடிகின்றது.

ஏறக்குறைய 600 வார்த்தைகள் உள்ள ஒரு கட்டுரையை தலைப்பு மற்றும் மேலும் கீழும் பார்த்து படித்து விட்டு ஒரு விமர்சனத்தை உடனே எழுத முடிகின்றது. விமர்சனத்தை எழுதிய பிறகு அந்த கட்டுரையை முழுமையாக படித்து முடித்து விட்டு மீண்டும் அந்த விமர்சன வரிகளை பார்க்கும் போது பொருத்தமாகவே இருந்து விடுகின்றது.

ஐயோ இவருக்கு எப்படி நேரம் கிடைக்கின்றது? எப்படி பெரிதாக எழுத முடிகின்றது என்ற விமர்சனங்களுக்கு எப்போதும் என் கைவசம் இருக்கும் பதில் ஒன்றே ஒன்று தான். எத்தனை பெரிய கொம்பனாக இருந்தாலும் தினந்தோறும் அதிகப்ட்சம் நான்கு மணி நேரமென்பது வெட்டியில் கழிப்பதாகத் தான் இருக்கும். அந்த நேரம் கூட கிடைக்காமல் உழைத்துக் கொண்டு இருக்கின்றார்கள் என்றால் சீக்கிரம் மருத்துவமனைக்குச் செல்லப் போகின்றார்கள் என்று அர்த்தம். குடும்பம், குழந்தைகள் மேல் கவனம் செலுத்தாதவர்களுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாக கிடைக்கக்கூடும். 

ஒவ்வொரு நாளும் இணையத்தோடு வாழ கடமைப்பட்ட தொழில் உள்ளவர்களுக்கு இன்னமும் கூடுதலாக கிடைக்கும்.நான்கு மணி நேரமென்பது என்னால் 600 வார்த்தைகள் உள்ள கட்டுரை 3  எழுத முடியும். எழுதுவதை விட வடிவமைப்புக்குள் கொண்டு வருவதற்கான சவாலில், எழுத்துப் பிழைகளை திருத்த இன்னமும் நான் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம் இருக்கிறது.

ஓராயிரம் சிந்தனைகளை நாம் எழுத்தில் எழுதினாலும் நம் குடும்ப வாழ்க்கையில் ஓரளவுக்கு மேல் ஏமாற்றி விட முடியாது. பொதுவாக எழுத்தாளர்களை,எழுத ஆசைப்படுவர்களை இந்த சமூகம் ,வாசிப்பாளர்கள் கொண்டாடுகின்றதோ இல்லையோ முக்கியமாக அவரவர் வீட்டில் மதிப்பு கிடைப்பதில்லை. எளிதான காரணம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. எழுத்து மூலம் சிந்தனைகளை வளர்க்க முடியும்.  குடும்பத்தினர் ஆசைப்படும் எதையும் அத்தனை எளிதாக கொண்டு வர முடியாது. ஆனால் எனக்கு அந்த பிரச்சனை இதுவரைக்கும் வந்ததில்லை. இரண்டு தண்டவாளமாக வைத்துக் கொண்டிருப்பதால் சரியான திசையில் பயணித்துக் கொண்டிருக்கின்றேன்.

ஓளவையார் குறித்து படிக்கும் போதெல்லாம், அவர் சொல்லிவிட்டுச் சென்ற பாடல்களை படித்து முடிக்கும் போது ஒவ்வொரு முறையும் திருவள்ளுவரும் இந்த பாட்டியின் திறமையும் சுண்டக் காய்ச்சிய பாலின் சுவையை உணர்த்திக் கொண்டே இருக்கின்றார்கள். எழுத்துப் பயணத்தில் நாம் இன்னமும் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்கமுடியவில்லை.

ஃ பணம், மனம், எழுத்து இது மூன்றிலும் முடிவும் இருக்காது. அதன் எல்லையை வாழ்வின் இறுதி வரைக்கும் நம்மால் புரிந்து கொள்ளவும் முடியாது. ஆகா நாம் நன்றாக எழுதியிருக்கின்றோம் என்று யோசிக்கும்  போது நாம் வாசித்த ஒரு சிறிய கவிதை அனைத்தையும் தூக்கி சாப்பிட்டு விடும். உடலில் ஆரோக்கியம் இருக்கும் வரையிலும் இந்த எழுத்துப் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதே என் தீரா ஆசை. 

மீதி அடுத்த பதிவில்..................

சென்ற ஆண்டு 2011  (தினந்தோறும் மலரும் பூக்கள்) அதிகம் பேரால் பாராட்டப்பட்ட தலைப்பு.