Friday, December 20, 2019

அமேசான் 2019 Pen to Publish நடத்தும் கிண்டில் போட்டி

அமேசான் 2019 ஆம் ஆண்டும் Pen to Publish நடத்தும் கிண்டில் போட்டியில் ஏன் கலந்து கொண்டேன்?

சென்ற வருடம் ஃபேஸ்புக் பக்கம் அதிகமாகச் செல்லவில்லை. இவ்வாண்டு தினமும் செல்லும் பழக்கம் உருவானது. தினமும் எழுதுகிறேன். முக்கியமாக நேரம் உள்ளது என்பதாக எடுத்துக் கொள்ளலாம். அப்போது தான் கிண்டில் போட்டி குறித்த அறிவிப்புகளைப் பலரும் எழுதியிருந்தனர்.  அதன் பிறகே அது குறித்தே தகவல்களை ஒன்றன் பின் ஒன்றாகப் பார்க்கத் தொடங்கினேன்.

பரிசுத்தொகை மற்ற போட்டிக்கான விதிமுறைகளைப் படித்து விட்டு மறந்து விட்டேன். கலந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை.

மனைவி, மகள்களிடம் சொன்ன போது நீங்கள் போட்டி எதிலும் கலந்து கொள்ள மாட்டீர்கள்? அப்புறம் இந்த வெட்டிப் பேச்சு? என்று கலாய்த்தார்கள்.  காரணம் இதற்கு முன் பல போட்டி விபரங்களை என்னிடம் சொல்லிக் கலந்து கொள்ள உற்சாகப்படுத்தியதுண்டு.  நான் மறுத்துவிடுவேன்.



காரணம் நான் எழுதுவது என் சுயத் திருப்திக்காக மட்டுமே.  இதன் மூலம் பணம், புகழ் தேட வேண்டிய அவசியமில்லை என்றே மனதிற்குள் வைத்திருந்தேன்.  காரணம் இதன் பின்னே அலையத் தொடங்கினால் மனம் நிம்மதி இழந்து விடும்.  அதிகமான லைக் நமக்குக் கிடைக்குமா? என்று இடைவிடாது பாடுபடும் நண்பர்கள் பலரையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். எதையாவது ஒன்றை எழுதிவிட்டு ராத்திரி கண்முழிக்கும் பல நண்பர்களை எனக்குத் தெரியும். 

பெண்கள் படத்தைப் போட்டு தன் எழுத்தை வெளிக்காட்டுபவர்கள் என இது போலப் பலரும் இணையத்தில் உள்ளனர். இது போன்ற விசயங்களில் நான் தொடக்கம் முதலே உறுதியாக இருப்பதால் பஞ்சாயத்துக்கள் எதிலும் சிக்காமல் இயல்பான எழுத்துப் பயணத்தைத் தொடர முடிகின்றது என்பதும் முக்கியக் காரணம்.

இந்த வருட முதல் ஆறு மாதங்களில் அதிகமாக நேரம் இருந்தது. ஆனால் வலைபதிவில் எதுவும் எழுதவில்லை. ஏன் நாம் நேரத்தை வீணாக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு ஏதோவொன்றை எழுத நினைத்த போது நான் நினைத்த அளவுக்கு வேகம் உருவாகவில்லை.  எப்போதும் டைப் அடிக்கத் தொடங்கியவுடன் வார்த்தைகள் இயல்பாக வந்து விழுந்து கொண்டேயிருக்கும். எழுத வேண்டியதை முடித்தவுடன் தான் நிறுத்துவேன்.

இப்போது மக்கர் செய்யத் தொடங்கியது.  இது போல நாலைந்து முறையும் உருவாக மனதில் குழப்பம் உருவானது.  அதிகாலை நடைபயிற்சியின் போது ஒவ்வொன்றாக யோசித்துப் பார்த்துக் கொண்டே வந்தேன்.  அடிப்படை கவலை இல்லை.  வீட்டில் வேறெந்த தொந்தரவும் இல்லை.  அதிகாலை பத்திரிக்கை வாசிக்கும்பழக்கம் சற்று மாறியுள்ளது.  ஆர்வம் குறைந்துள்ளது.  மனம் பரபரவென்று அலைகின்றது. கோர்வையாகச் சிந்திக்க முடியவில்லை. 

 ஒன்றின் மேல் உறுதியாகப் பற்றிக் கொள்ள முடியவில்லை.  இது போலப் பல வினோதமான பழக்கங்கள் சமீபத்தில் உருவாகியுள்ளது. எப்படி? என்று அதன் பின்னால் உள்ள ஆணி வேரைக் காணும் பொருட்டு யோசித்த போது ஃபேஸ்புக் என்னுள் உருவாக்கிய மாற்றங்களை உணர்ந்து கொள்ள முடிந்தது.
வலைபதிவில் சுருக்கமாக எழுதத் தேவையில்லை. ஆனால் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் என்பதற்குத் தனிப் பாணி உள்ளது. அதை மீற முடியாது.  மீறலாம். தவறில்லை. ஆனால் எவரும் பொருட்படுத்தமாட்டார்கள்.

மற்றவர்கள் எழுதும் அளவுகளை விட நாம் சற்று விரிவாக எழுதினாலும் வார்த்தைக் கோர்வைகள், சொல்ல வந்த விசயத்தைச் சுருக்கமாக நறுக்கென்று முடித்தே ஆக வேண்டிய கட்டாயம் நம் எழுத்து நடையை மாற்றிவிடும். 

ஃபேஸ்புக் என் சிந்தனைகளை முழுமையாக மாற்றி வைத்துள்ளதைப் புரிந்து கொள்ள முடிந்தது.  ஃபேஸ்புக்  என்பது வாசிப்பதற்கு உருவாக்கப்பட்டது அல்ல. 

அதன் அல்கரிதம்  என்பது பழக, பார்க்க, பரிமாற என்று மூன்று விசயத்திற்குள் தான் அதனை அமைப்பை உருவாக்கியுள்ளார் மார்க். இதனை அவர் தெளிவாகவும் சொல்லியுள்ளார்.

மேலும் இதில் வாசிக்கக்கூடியவர்கள் 70 சதவிகித மக்கள் தத்தமது அலைபேசி வாயிலாகவே வாசிக்கின்றார்கள்.  தீவிர வாசிப்புக்கு அது சரியான கருவி அல்ல.  பழக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அது இயல்பானதாக இருக்கும்.

மற்றவர்கள் காட்சிகளை, படங்களை மட்டுமே பார்க்கவே விரும்புகின்றார்கள். பயணங்களில் பலரையும் பார்த்துள்ளேன். இப்படித்தான் ஒவ்வொருவரும் பயன்படுத்துகின்றார்கள்.

இதன் காரணமாகவே புதிய வாசிப்பாளர்கள் உருவாகவில்லை.

ஒவ்வொருவரும் காட்சி ஊடகங்களுக்கு அடிமையாகிவிடுகின்றார்கள். அவர்களால் வாசிக்க முடிவதில்லை. வாசிக்கவும் விரும்புவதில்லை. நாள்பட வாசிப்பே இல்லாத உலகத்திற்குச் சென்றுவிடுகின்றார்கள்.  தவறா? என்றால் தவறில்லை.  இதுவும் ஒரு மாற்றம் என்பதனைத்தான் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

தொழில்துறைகளில் கூட இது போல மாற்றங்கள் தான் நடந்துள்ளது.  சுய விபரக்குறிப்பு விரிவாக இருக்கக்கூடாது. நிறுவன வலைதளத்தில் சுருக்கமான காட்சி அடங்கிய காணொலிக் காட்சி வாயிலாக நம் பொருட்களைச் சந்தைப் படுத்துதல், வார்த்தைகள், வாசகங்களை முடிந்த வரைக்கும் குறைத்தல் என்று மாறியுள்ளது. ஐரோப்பாவில் உள்ளவரும் பேசும் போது இதனைத்தான் குறிப்பிட்டார்.

மனிதர்களின்  வாசிப்பு பழக்க மாற்றத்தை உணர்ந்து ஒவ்வொரு தளத்திலும், துறையிலும் இது போன்ற மாற்றங்கள் உருவாகியுள்ளதை கவனித்தே வருகிறேன்.

500 பக்கங்கள் அடங்கிய புத்தகத்தை ஒரே மூச்சில் படித்த நாம் இப்படி மாறியுள்ளோம். நம்மை ஃபேஸ்புக் அல்கரிதம் மாற்றியுள்ளது என்பதனை உணரவே வெட்கமாக இருந்தது.  அப்போது தான் செயற்கை நுண்ணறிவு குறித்த கட்டுரைகளைத் தேடிப்படிக்கத் தொடங்கினேன்.

முதல் வேளையாக இதிலிருந்து வெளியே வர நாம் ஏதாவது ஒன்றுக்குள் நம்மைப் பொருத்திக் கொள்ள வேண்டும். அது முக்கிய வேலையாக இருக்க வேண்டும்.  தொழிலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க  வேண்டும். நமக்குப் பிடித்தமானதாக இருக்க வேண்டும். நாம் ஏற்கனவே செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளதை இதன் மூலம் முடித்தே ஆக வேண்டும் என்று மனதிற்குள் யோசித்துப் பார்த்த போது சில நாட்களுக்கு முன் சந்தித்த  டைலர் பையன் சொன்ன வாசகம் என் நினைவுக்கு வந்தது.

சார் நாம் வேலை பார்த்த கம்பெனி முதலாளி இப்போது டைலராக என்னோடு தான் வேலை பார்க்கின்றார் என்று அந்தக் கதையை பேக்கரி கடையில் சொன்ன விசயங்கள் ஒவ்வொன்றாகப் பின்னோக்கி யோசித்துப் பார்த்தேன்.

நான் பணிபுரிந்த ஒவ்வொரு முதலாளிகளின் கதைகளும் இப்போது என் நினைவுக்கு வர ஏன் இதையே இந்தப் போட்டிக்காக எழுதலாமே? என்று எழுதத் தொடங்கினேன்.  வீட்டிலும் சொன்ன போது அனைவரும் சிரித்துக் கலாய்த்தனர்.  மனதில் வைராக்கியம் பிறந்தது.  எழுத் தொடங்கினேன்.  

மக்கர் செய்தது. எழுத முடியவில்லை.  

கோர்வையாகச் சிந்திக்க முடியவில்லை.  நாலைந்து நாட்கள் போராட்டமாக இருந்தது.  படிப்படியாக ஃபேஸ்புக் பக்கம் செல்வதைக் குறைத்துக் கொண்டு வாசிக்க வேண்டிய பழைய பத்திரிக்கைகள், புத்தகங்களை வாசித்து என்னை நானே கொஞ்சம் மாற்றிக் கொள்ள முயன்றேன்.

இது ஒரு வாரம் நடந்தது.  படிப்படியாக மாறினேன்.  அதன் பிறகே எழுதத் தொடங்கினேன்.  கோர்வையாக வந்து விழுந்து கொண்டேயிருந்தது.  தற்கால வாசிப்புச் சூழலைக் கணக்கில் கொண்டே ஒவ்வொன்றையும் சுருக்கமாக முடித்துக் கொண்டே வந்தேன்.

5 முதலாளிகளின் கதையை வாசித்த அனைவரும் நான் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன் என்று சொல்லும் அளவிற்கு என்னால் இந்தப் படைப்பை உருவாக்க முடிந்தது.

இப்போதும் ஃபேஸ்புக் பயன்படுத்திக் கொண்டு தான் வருகிறேன்.  

ஆனால் அதனை வென்றுள்ளேன்.  

காரணம் தினமும் என்னால் வலைபதிவில் எழுத முடிகின்றது.



(இலவசமாக படிக்க முடியும்)




10 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

5 முதலாளிகளின் கதையை வாசித்த அனைவரும் நான் ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன் என்று சொல்லும் அளவிற்கு என்னால் இந்தப் படைப்பை உருவாக்க முடிந்தது

உண்மை
உண்மை

திண்டுக்கல் தனபாலன் said...

தினமும், எழுதுவதற்கும் திறமை வேண்டும்... வாழ்த்துகள்...

G.M Balasubramaniam said...

எப்போதும் என்ன எழுதுவது என்னும் சிந்தனையே ஆட்கொள்ளுகிறது நீளமாகஎழுதமுடிவதில்லை எழுத வேண்டியது நிச்சயிக்கப்பட்டு விட்டால் எழுத்தே என்னை கொண்டுபோகும் எழுதியதை மறுமுறை நானே வாசித்துப்பார்ப்பதில்லை

Rathnavel Natarajan said...

அருமை

ஸ்ரீராம். said...

முன்னர் அவ்வளவு படித்த நம்மால் இப்போது மிகக்குறைந்த அளவுதான் படிக்க முடிகிறது என்கிற வருத்தம் எனக்குள்ளும் இருக்கிறது.  சமயங்களில் குறைந்த அளவும் படிக்க முடியாமல் சும்மா இருப்பது குற்ற உணர்வாக இருக்கிறது.

ஜோதிஜி said...

நன்றி ஆசிரியரே.

ஜோதிஜி said...

உண்மை தான்.

ஜோதிஜி said...

வாசித்துப் பார்த்தால் இன்னமும் மெருகேறும்.

ஜோதிஜி said...

நன்றி .

ஜோதிஜி said...

இந்த குற்ற உணர்வு தான் என்னை இயங்க வைக்கின்றது ராம்.