Monday, October 14, 2019

பதாகை என்ற ப்ளெக்ஸ் போர்டு - அநாகரிக அரசியல்

சிங்கப்பூரில் 98/99 வாக்கில் நடந்தது. பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பயணிகள் மீது அதி வேகமாக வந்த வாகனம் மோதுகின்றது. சிலர் படுகாயம் அடைந்தனர். சிலர் உயிர் பிழைப்பது கடினம் என்கிற நிலைக்குச் செல்கின்றனர். அடுத்த நாள் பாராளுமன்றத்தில் புதிய சட்டம் வருகின்றது. அன்றே நடைமுறைக்கு வந்தது. இது நான் பார்த்த உண்மையான மக்கள் ஆட்சி.

இன்று வரையிலும் அங்கு இது போலத்தான் ஒவ்வொன்றும் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. அரசியலுக்கும் நிர்வாகத்திற்குப் பல காத தூரம் இருக்கும். நிர்வாகம் ஒரு முடிவு எடுக்கின்றது என்றால் அதில் அரசியல் கலக்காது. அமெரிக்கா முதல் மற்ற வளர்ந்த நாடுகள் வரைக்கும் இப்படித்தான் மக்களின் நலன் பேணப்படுகின்றது.

ஆனால் இங்கு இந்தியாவில்?

சுபஸ்ரீ என்ற பெண் இறந்து விட்டார். முப்பது நாள் காரியம் கூட இன்னமும் செய்து இருக்கமாட்டார்கள். எவரையும் தூக்கி உள்ளே வைக்கவில்லை. ஊடகங்கள் அவர்கள் பங்குக்கு அலறினார்கள். சமூக வலைதளங்கள் சோகக் குறியைப் போடு விட்டு அடுத்த சோகத்தைத் தேடிப் போய்விட்டார்கள்.

ஆனால் இப்போது?

வெட்கமே இல்லாமல், மனசாட்சி என்பது கொஞ்சம் கூட இல்லாமல் மத்திய வெளியுறவுத்துறை சென்னை நீதிமன்றத்தில் பேனர் வைக்க அனுமதி கேட்கின்றது. அதற்கு நீதிமான்கள் ஒப்புதலும் கொடுக்கின்றார்கள் என்றால் என்ன அர்த்தம்.

கோமளவிலாஸ் ல் சிங்கப்பூர் பிரதமர் மோடியை அழைத்துச் சென்று தோசை வாங்கி கொடுத்து அனுப்பியதைப் பார்த்து ரொம்ப நாள் சிரித்துக் கொண்டே இருந்தேன். நம் பிரதமர் போகின்ற இடங்களில் என்ன தான் கற்றுக் கொண்டு வருகின்றார்? என்பதே எனக்குக் குழப்பமாக உள்ளது.

ஒரு வேளை சீனப்பிரதமர் சாலை ஓரங்களில் வைக்கப்பட்டு தன் முக பதாகைகளைப் பார்த்து புளாங்கிதம் அடைந்து, உற்சாகத்தில் இனி அருணாச்சலப் பிரதேசம் வழியாக ஊடுருவ மாட்டோம். பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுக்க மாட்டோம். இந்தியாவிற்கு முடிந்த அளவு ஒத்துழைப்பு கொடுப்போம் என்று வாக்குறுதி கொடுப்பாரோ? இந்திய விசயங்களில் எங்களின் திருட்டுத்தனங்களை இனி நிறுத்திக் கொள்வோம் என்பாரோ?

சீனப்பிரதமருக்கு ஒரு வகையில் தமிழர்கள் ஒவ்வொருவம் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளோம்.

குஜராத்தில் இந்த சந்திப்பு நடைபெற்று இருக்கும் பட்சத்தில் சீர்கெட்டு சின்னாபின்னாப்பட்டு இருக்கும் மாமல்லபுரம் இந்த அளவுக்கு பொலிவு அடைந்திருக்க வாய்ப்பே அமைந்திருக்காது.

()


1969 முதல் 1975 ஆம் ஆண்டுக்குள் பிறந்திருக்கக்கூடியவர்கள் இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் நடந்த அதி முக்கியமான நிகழ்வுகளை உணர்ந்திருக்க வாய்ப்பு இருக்காது.

ஒன்றாம் வகுப்பு செல்வதற்கு ஆயத்தமாகி இருப்போம். அழுது கொண்டு இருக்கும் நம்மை தரதரவென்று இழுத்துக் கொண்டு போய் பள்ளியில் கொண்டு போய் தள்ளியிருப்பார்கள். ஆமாம் இப்போது போலத் தலை வாரிப் பூச்சூடி வாரி அனைத்து முத்தமிட்டு டாடா பை என்று சொல்லி பள்ளியில் கொண்டு போய் விட்டிருக்க வாய்ப்பிருக்காது. நாம் ஒன்றாம் வகுப்பில் உட்கார்ந்து கொண்டு தேமே என்று விழித்துக் கொண்டு முக்கால் தூக்கத்திலிருந்திருக்கும் சமயத்தில் தான் நாடே மொத்த துக்கமான சம்பவங்களைக் கடந்து வந்தது.

1. அறிஞர் அண்ணா மறைவு.
2. கர்மவீரர் காமராஜர் மறைவு.
3. தந்தை பெரியார் மறைவு.

மூன்றாம் நான்காம் தலைமுறையிலும் இவர்களைக் காட்சிப் பொருளாகப் பார்ப்பவர்கள் முதல் கட்சிக்காரர்கள் வரைக்கும் இவர்களைப் போற்றிப் புகழ் பாட வேண்டிய அவசியத்தில் இருப்பதே அவர்கள் எப்படி வாழ்ந்து விட்டுச் சென்றார்கள் என்பதற்கான சாட்சி.

ஆனால் மகாத்மா காந்தியின் பிறந்த தினமான அக்டோபர் 2,   நான்காம் ஐந்தாம் தலைமுறை வரைக்கும் நினைத்துப் பார்க்க வேண்டிய அவசியத்தில் இருப்பதும், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சொன்னது போல "இப்படியொரு மனிதர் ரத்தமும் சதையுமாக இந்த உலகத்தில் வாழ்ந்தார் என்பதை நம்புவதற்கே கஷ்டமாக இருக்கும்" என்றதைப் போல இன்று மகள்கள் காந்தியின் திரைப்படத்தை ஆர்வத்துடன் பார்ப்பதே வியப்பாக உள்ளது. என் பேரன்களும் இதே ஆர்வத்துடன் இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

காந்தி எரிச்சலூட்டியவர், ஆச்சரியப்படுத்தியவர், பரிதாபத்தை உருவாக்கியவர், ஆயுதமின்றி, ரத்தமின்றி மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தவர். உலகத்திற்கே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே வித்தியாசமான தலைவர்.

காந்தியை நினைக்கும் போதெல்லாம் வின்ஸ்டன் சர்ச்சிலும் என் நினைவுக்கு வந்து போவார்.

"எங்களுக்கு எங்களை ஆளத் தெரியும்" என்றார் காந்தி. "இவர்கள் காற்றைக்கூடக் காசுக்கு விற்பார்கள்" என்றார் அவர். விசமத்தனமான வார்த்தைகள் என்றாலும் எத்தனை பொருத்தமான தீர்க்கதரிசி. நூறு ஆண்டுகளுக்குப் பின்னால் தான் கொஞ்சம் மாறும் என்றார்.

அதற்கு நாம் 2047 வரைக்கும் பொருத்து இருக்க வேண்டும். அதற்கு இன்னும் நான்கு பிரதமர்கள் மோடிக்குப் பிறகு தங்கள் ஆட்சிக் காலத்தை முழுமையாக நடத்தி வெளியே வர வேண்டும்.

தற்போது 50 வயதைக் கடந்து வந்து கொண்டிருப்பவர்கள் தங்கள் வாழ்வின் இறுதியில் உருவாகப் போகும் இந்தியாவின் மாற்றங்களைப் பார்க்கலாம்.

காந்திக்கு அஞ்சலி செலுத்தும் இன்றைய அரசியல்வாதிகளைப் பார்க்கும் போது "குரங்கை நினைக்காமல் நீ இந்த மருத்தைக் குடிக்க வேண்டும்" என்று நாட்டு வைத்தியர் சொன்னது தான் என் நினைவுக்கு வருகிறது.


மாமல்லபுரத்தில் வேட்டி சட்டை அணிந்து சீன அதிபருடன் வலம் வந்த மோடி



2 comments:

G.M Balasubramaniam said...

/அரசியலுக்கும் நிர்வாகத்திற்குப் பல காத தூரம் இருக்கும். நிர்வாகம் ஒரு முடிவு எடுக்கின்றது என்றால் அதில் அரசியல் கலக்காது. அமெரிக்கா முதல் மற்ற வளர்ந்த நாடுகள் வரைக்கும் இப்படித்தான் மக்களின் நலன் பேணப்படுகின்றது./ ஆனால் இங்கு நிர்வாகம் அரசியலுக்குள் அடங்கி விட்டது அதனால் ஒருவருக்கொருவர் ஆதாயம் தேடுகின்றனர்

ஜோதிஜி said...

சரியான கருத்து. நன்றி.