Monday, May 27, 2019

வாழும் தெய்வம் வள்ளல் அழகப்பச் செட்டியார்

நான் படிக்கும் போது தனியார் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. அதாவது அரசு நிதி உதவி பெறும் (தனியார்) கல்லூரியாக இருந்தது. அழகப்பச் செட்டியார் (ஒரே வாரிசு) மகள் திருமதி உமையாள் ராமநாதன் அவர்களின் ஆலோசனை மற்றும் நிர்வாகத்தின் கீழ் இருந்தது. அவருக்கு அப்படியொன்றும் பெரிய அளவுக்குச் செல்வாக்கு இல்லை. அவர் அப்பா உருவாக்கிய கல்லூரியில் ஒவ்வொரு இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்பில் குறிப்பிட்ட இருக்கைகள் ஒதுக்கியிருந்தார்கள். அதனை அவர் கேட்டு வருபவர்களிடம் கொடுத்து விட்டுக் குறிப்பிட்ட நன்கொடை வாங்கிக் கொள்வார்.

கல்லூரியின் உள் கட்டமைப்பில் அழகப்பச் செட்டியார் எந்த அளவுக்குத் தனிப்பட்ட கவனம் செலுத்தினார் என்பதற்கும், ஒவ்வொரு துறை சார்ந்த கட்டிடங்களையும், வகுப்பறைகளையும் நாம் சென்று பார்த்தால் நம் விழிகள் வியப்பால் விரியும். அணுஅணுவாக ரசித்துக் கட்டியிருந்தார். இன்றைய காலகட்டத்தில் வாழ்கின்ற கல்வித்தந்தையர் நினைத்தே பார்க்க முடியாத அர்ப்பணிப்பு.

பிரதமர் நேருவிடம் தன் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாகவும், தன் இடைவிடாத முயற்சிகளாலும், அண்ணாமலைப்பல்கலைக்கழக வேந்தர் அப்போது அழகப்பச் செட்டியாரிடம் சொன்ன (நக்கல்) வார்த்தைகளின் அடிப்படையிலும் கல்லூரி சார்ந்த விசயங்களில் அளவு கடந்து அக்கறை காட்டினார் என்று சொல்வதுண்டு.

பல சமயங்களில் ஏதாவது ஒரு இடத்தில் தன் சுயநல அடிப்படையில் செட்டியார் செயல்பட்டு இருப்பாரா? என்று நான் பலமுறை யோசித்து பணிபுரிந்த பழைய நபர்களிடம் பலமுறை கேட்டதுண்டு. ஆனால் ஒருவர் கூட அவரின் தியாக மனப்பான்மையில் ஒரு துளி கூட தவறாகச் சொன்னதே இல்லை. தொடக்கம் முதல் இறுதிவரையிலும் தியாக மனப்பான்மையின் அடிப்படையிலேயே செயல்பட்டு இருக்கின்றார் என்பதனை என்னால் உணர முடிந்தது.

நான் சேரும் போது அப்பா தான் பணம் கட்டினார். அப்போது தனியார் கல்லூரிகள் பெரிய அளவுக்கு வளர்ந்திருக்கவில்லை. சுற்றிலும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மாணவர்களுக்கு மட்டுமல்ல, உயர் நடுத்தர வர்க்க மாணவர்களுக்கும் அழகப்பா கல்லூரி தான் ஒரே வாய்ப்பாக இருந்தது. இன்று வரையிலும் எத்தனை கோடி மாணவர்கள் வெளியே சென்று இருப்பார்கள் என்று கணக்கீடு செய்வது கடினம்.

இன்று என்னுடன் கல்லூரியில் படித்த நண்பன் தன் மகனை அறிவியல் இளங்கலையில் சேர்க்க அழைத்துச் சென்று இருந்தான். அங்கிருந்து அந்த சமயத்தில் அழைத்துப் பேசினான். பழைய நினைவுகள் பலவற்றைப் பேசி முடித்து விட்டு மறக்காமல் கேட்டேன்.

மகனுக்குக் கட்ட வேண்டிய தொகை எவ்வளவு? என்றேன்.

அவன் சொன்ன தொகை ரூபாய் 4000க்கு கீழே இருந்தது. எனக்கு இந்த தொகையின் வலிமை இப்போது தான் புரிகின்றது. காரணம் தனியார் பள்ளியில் +1 படிக்க ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் செலவாகின்றது. இதுவே ஆடம்பரப் பள்ளியில் இரண்டு லட்சம் வரை செலவாகின்றது.

இப்போது அழகப்பா அரசு கலைக்கல்லூரியாக இருப்பதால் கல்லூரிக்கட்டணம் என்பது நடுத்தரவர்க்கத்திற்கு டிப்ஸ் தொகை போலவே உள்ளது. எவர் வேண்டுமானாலும் எளிதாகக் கட்டி உள்ளே சேரும் அளவிற்கு உள்ளது.

மற்றொரு ஆச்சரியம் நான் படித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் எனக்குத் தெரிந்த அக்காமார்கள் +2 முடித்த பின்பு பல விதங்களில் தாங்கள் நினைத்து இருந்த கல்லூரி வாழ்க்கையைத் தொடர முடியாதவர்களாக இருந்தார்கள். (அதிகம் படித்தால் கணவர்கள் அமையாது என்பது பல காரணங்களில் முக்கிய காரணமாக இருந்தது)

இன்று மிக மிகச் சாதாரண குடும்பத்தில் உள்ளவர்களின் குழந்தைகள், கல்லூரியிலிருந்து ஐம்பது கிலோ மீட்டர் உள்ள தொலைவில் இருக்கும் கிராமத்துப் பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளையும் கல்லூரிக்குக் கொண்டு வந்து சேர்க்கும் மாற்றங்களைக் காணும் போது பலவிதங்களில் மகிழ்ச்சியாக உள்ளது. படித்து முடித்தவுடன் வேலை கிடைக்கின்றதோ? கிடைக்காதோ? என்பதற்கு அப்பாற்பட்டு என் மகளும், மகனும் ஒரு பட்டதாரி என்ற ஒவ்வொரு பெற்றோரின் கனவும் இன்று அழகப்பச் செட்டியார் மூலம் காரைக்குடியைச் சுற்றியுள்ள குடும்பங்களுக்குச் சாதிக்க முடிந்த லட்சியமாக மாறியுள்ளது.

48 வருடங்கள் தான் இவ்வுலகில் வாழ்ந்துள்ளார். அவர் மறைந்து (1957) 62 வருடங்கள் முடிந்து விட்டது. அவர் போட்ட விதையின் வீரியம் இன்னும் நூறு வருடங்கள் இருக்கும். அவருக்கு அரசு ரீதியான கொண்டாட்டாங்கள் எதுவும் இன்று வரையிலும் இல்லை. அதனால் என்ன? ஒவ்வொரு மாணவரின் வாழ்க்கையிலும் அல்லவா ஒன்றாக கலந்து விட்டாரே? இதற்கு மேல் அவருக்கு எவர் பெருமை சேர்க்க வேண்டும்?

எனக்கு முன்னால் படித்த முப்பது வருட மாணவர்களும், எனக்குப் பின்னால் படித்த முப்பது வருட மாணவர்களின் வாழ்க்கையின் ஞானத்தகப்பன் என்பவர் வள்ளல் அழகப்பச் செட்டியார். அவர் எந்நாளும் வாழும் தெய்வமே.

1 comment:

Rathnavel Natarajan said...

வாழும் தெய்வம் வள்ளல் அழகப்பச் செட்டியார் - அருமையான பதிவு. எனது பக்கத்தில்பகிர்கிறேன். நன்றிதிரு ஜோதிஜி