Wednesday, May 08, 2019

எழுதிய சில குறிப்புகள் 5

சில துறைகளில் (மட்டும்) எதிர்மறை பிரச்சாரம் எளிதில் தன் வேலையைச் செய்யும். அதன் விளைவுகளை உடனே காட்டும். குறிப்பாக அரசியல் மற்றும் திரைப்படம்.

உங்களுக்கு ஒருவரைப் பிடிக்கவில்லையென்றால் அவரைப்பற்றி பேசாமல் வாயை மூடிக் கொண்டு இருக்கவும். அல்லது இவர் இது போலப் பேசியிருக்கின்றார் என்று தெரியவந்தால் அவரை எந்த இடத்திலும் சுட்டிக்காட்டாதீர்கள். தவிர்த்து விடவும். புறக்கணித்தால் புண்ணியம்,

இங்கு எல்லோரும் எல்லாவற்றையும் படிப்பதில்லை. நான் விரும்பும் கட்சி நபர் வெல்ல வேண்டும் என்று நினைப்பில் உள்ளவர்கள் அதற்கான வேரில் வெந்நீரை ஊற்றாதீர்கள்.

உங்கள் கோபத்தைக் காட்ட வேண்டும் என்பதற்காக அதைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும் என்று விலாவாகியாக விவரிக்கும் போது அதுவே எதிரிக்கு எதிரெணிக்கு சாதமாக அமைந்து விடும்.

91 வயதில் ஒருவருக்குப் பதவி தேவைப்படுகின்றது என்றால் நாடி நரம்பு புத்தி ரத்தம் எல்லாவற்றிலும் பதவி வெறி ஊறிப்போயுள்ளது என்று அர்த்தம். அது நாட்டைப் பற்றிக் கவலைப்பட்டு இருந்தால் இன்றைய நாட்டின் அஸ்திவாரத்தின் முதல் செங்கல்லை உருவியவர் என்று வேண்டுமானால் பெருமையாகச் சொல்லலாம். வேறு ஒன்றும் அவரால் இந்த நாட்டுக்குப் பெருமை கிடையாது. அவர் நாட்டைப் பற்றிக் கவலைப்படவில்லை. தனக்குக் கிடைத்த கடைசி வாய்ப்பில் சீட்டுக் கட்டை கலைக்க முடியுமா? ஆட்டத்தைக் கலைத்து ஆட முடியுமா? என்று பார்க்கின்றார். தோற்பதை தன் கண்ணால் காண வேண்டும் என்று விரும்புகின்றார் என்றே அர்த்தம்.

ஒவ்வொரு விமான நிலையமாக ஒன்று உளறிக்கொண்டு இருக்கின்றது என்றால் அந்த ஜந்துவை யாருமே கண்டு கொள்வதில்லை என்று அர்த்தம்.

ஆனால் பலரும் குறிப்பிட்ட சில்லறைகளை முன்னெடுக்க அதுவே எளிதாக வாசிக்கக்கூடியதாக, விரும்பக்கூடியதாக, உண்மை என்று நம்பக்கூடியதாக மாறிவிடக்கூடும் என்பதனை கவனத்தில் வைத்திருங்கள்.

மோசமானது தான் உடனே கவரும். அது வெறுக்கக்கூடியதாக இருந்தாலும்.

இது அரசியலுக்கு மட்டுமல்ல. நம் வாழ்க்கைக்கும்.

************

தேர்தலில் வெற்றி பெறுவது எப்படி?

எதிரிகள் ஒன்று சேராமல் இருக்கும் போது(ம்), அவர்களுக்கே நம்மில் யார் தலைமை என்று தேர்ந்தெடுக்க மனமில்லாமல் இருக்கும் போது தேர்தல் அறிக்கை என்ற பெயரில் தொடர்ந்து உளறிக் கொண்டே இருக்கும் போது யார் வெல்வார்கள் என்பதை நம்மால் எளிதாக உணர்ந்து கொள்ள முடியும்

*************

நீங்கள் விரும்பும்/நம்பும் ஆளுமைகள் மறையும் போது சிலாகித்து எழுதுவதற்கு முன்னால் குறிப்பிட்ட ஆளுமைகளுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர்களுடன் அவர்களைப் பற்றி பேசிப் பாருங்கள். உங்கள் எண்ணங்கள் மாறக்கூடும். கூடவே அட! நம்முடைய சந்தில் நம் வீட்டுக்கருகே வாழ்ந்தவர் இறந்த போது நேரில் போகாமல் விட்டுவிட்டோமே? என்று வருத்தப்படத் தோன்றும்.

**********

தமிழக பள்ளிக்கல்வித்துறை எப்படிச் செயல்படுகின்றது?

ஒரு சாரர் மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு ஆண்டுக்கு ஆண்டு இங்கே படித்தவர்களின் வளர்ச்சி விகிதம் ஒப்பீட்டளவில் அதிகம் என்கிறார்கள். இந்த வளர்ச்சியைத் தடுக்க மத்திய அரசு கொண்டு வருகின்ற ஒவ்வொரு திட்டங்களும் மாநில சுயாட்சியை, உரிமையைக் காவு வாங்கக்கூடியது என்கிறார்கள். நாம் ஏற்கனவே தரமான கல்வியை வழங்குகின்றோம். தரமான பாடத்திட்டங்கள் உள்ளது. தரமான கட்டமைப்பு உள்ளது. 

ஆனால் எந்த வித்தியாசமான வினோதமான தேர்வுகளும் இங்கே தேவை இல்லை என்கிறார்கள். காரணம் எங்கள் மாணவர்கள் படித்து எடுக்கின்ற மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்கள் தங்களுக்கான திறமையைப் பெற்று இருக்கின்றார்கள் என்று சொல்கின்றார்கள். ஏற்கனவே அப்படிப் படித்தவர்கள் தான் இங்கே சிறப்பாக ஒவ்வொரு துறையிலும் இருக்கின்றார்கள். அவர்களால் இந்தத் துறை வளரவே இல்லையா? என்கிறார்கள். சிறப்புத் தகுதி, சிறப்புத் தேர்வு என்பது அனைவரும் வளரக்கூடாது என்பதற்காகவே உருவாக்கப்படுகின்றது என்றும் நம்புகின்றார்கள்.

சரி வேறு என்ன தான் பிரச்சனை?

ஆம். என்னைப் போன்றவர்களுக்கு ஊழல் என்பது பெரிய தொந்தரவாக உள்ளது. அது என்னை நேரிடையாக பாதிக்கின்றது. என் வருமானத்தை பதம் பார்க்கின்றது. மன உளைச்சலை உருவாக்கின்றது.

எப்படி?

பள்ளிக்கல்வித்துறை உதயச்சந்திரன் என்ற நந்தி இருந்தார். 

உள்ளே நுழைகின்றவர்களுக்குச் சிலருக்கு வணங்கத் தோன்றியது. 

ஆட்சியாளர்களுக்கு நாளுக்கு நாள் எரிச்சலை உருவாக்கிக் கொண்டேயிருந்தது. காரணம் நம்மால் சம்பாரிக்க முடியவில்லையே? என்று அவரை உண்டு இல்லையென்று படுத்தி எடுத்துக் கொண்டிருந்தார்கள். நீதிமன்றம் ஒரு வருடம் அவரைக் காப்பாற்றியது. புதிய பாடத்திட்டங்கள் அடங்கிய புத்தகங்கள் எளிதாக இயல்பாக கிடைத்தது. அவரை தொல்லியல் துறைக்கு மாற்றினார்கள். அதாவது மறைமுகமாக வாழும் காலத்திற்கு ஏற்ப உன்னால் மாற முடியாது. எங்களால் வாழவும் முடியாது என்று மறைமுகமாக உணர்த்தினார்கள்.

சரி. அதற்கென்ன?

வருகின்ற வருடம் பத்தாம் வகுப்பிற்கு புதிய பாடத்திட்டம் அறிமுகம் ஆகியுள்ளது. புத்தகங்கள் முறைப்படி இன்னமும் வெளிவரவில்லை. அரசு சார்ந்த இணையதளங்களில் கொடுக்கவும் இல்லை. ஆனால் அந்த பாடத்திட்டங்கள் அடங்கிய கோப்பு பள்ளி ஆசிரியர்கள் அனைவரின் கைகளிலும் வந்துள்ளது. அரசு கொடுக்கும் பாடப் புத்தகங்கள் வருவதற்குத் தாமதமாகும். இவற்றை நகல் எடுத்து வந்து விடுங்கள். பாடங்கள் நடத்தும் போது ஒவ்வொருவர் கையிலும் நகல் இருக்க வேண்டும் என்று சொல்லியுள்ளார்கள். 

இங்கு ஜெராக்ஸ் எடுக்கும் ஒவ்வொரு கடையின் வாசலிலும் இங்கு பத்தாம் வகுப்பு பனிரெண்டாம் வகுப்பு புதிய பாடத்திட்டம் பிரிண்ட் அவுட் எடுத்துக் கொடுக்கப்படும் என்று பெரிதாகவே போர்டுமாட்டி வைத்துள்ளனர். அவர்கள் அனைத்து பாடத்திட்டங்கள் அடங்கிய கோப்புகளையும் வைத்துள்ளார்கள். ஒரு பக்கம் எடுக்க இரண்டு ரூபாய் என்றால் முதல் பருவம் மட்டும் அனைத்துப் பாடங்களும் எடுத்து முடித்தால் உத்தேசமாக ஆயிரம் ரூபாய் வரக்கூடும். எடுத்துத் தான் ஆக வேண்டும்.

கல்வி அமைச்சர் என்ன செய்து கொண்டிருக்கின்றார்?

தேர்தலுக்குத் தேவையான பணத்தை யார் யாருக்கு எவ்வளவு கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்ற மக்கள் பணியில் அயராது உழைத்துக் கொண்டு இருக்கின்றார். பிறந்த குழந்தைக்கு ஜெயலலிதா என்று பெயர் சூட்டிக் கொண்டு இருக்கின்றார்.

முடிவாக?

நாயைக் குளிப்பாட்டலாம்.கொஞ்சலாம். விளையாடலாம். ஆனால் வீட்டுக்குள் கொண்டு வந்து வைத்து விளையாடக் கூடாது. அது என்ன செய்யுமோ அதைத் தான் செய்யும். புத்தியில்லாமல் கொடூரமாக இருப்பது மிருகம் மட்டுமல்ல. மனித உருவிலும் இருப்பார்கள். பல சமயம் அமைச்சர்களாகவும் நமக்கு அமைந்து விடுவார்கள்.

•••••••••••



No comments: