Saturday, May 04, 2019

எழுதிய சில குறிப்புகள் 4


முன்குறிப்பு -

பாராளுமன்ற உறுப்பினர் என்பவர் நவீன குமாஸ்தா. தனிப்பட்ட நபர்களால் ஒன்றுமே செய்ய முடியாது. கட்சியின் கொள்கையின்படியே செயல்பட முடியும். செயல்பட்டே ஆக வேண்டும். இல்லாவிட்டால் கட்டம் கட்டி விடுவார்கள். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். தன் தொகுதியின் நலனில் முழுமையாக இறங்கி வேலை செய்ய முடியாது.

பலவற்றுக்குப் பரிந்துரை செய்யலாம். மத்திய அமைச்சராக இருந்தால் தங்கள் செல்வாக்கில் திட்டங்களைக் கொண்டு வந்து சேர்க்க முடியும். அதனை விரைவு படுத்த முடியும். மற்றபடி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அரசாங்கம் கொடுக்கும் அனைத்து விதமான சலுகைகளையும், பதவி போன பின்பு ஓய்வூதியம் வரைக்கும் அனுபவிக்க முடியும். அவ்வளவு தான்.

0o0

பாராளுமன்ற உறுப்பினர்கள் என்பவர்கள் யார்?

மக்களுக்குப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆற்ற வேண்டிய பணிகள் என்ன என்பதே தெளிவாகத் தெரிவதில்லை. பள்ளிகள் கல்லூரிகளில் தங்கள் குடும்பத்தினரைச் சேர்ப்பதற்கும், தங்களுக்குத் தேவையான வேலை வாய்ப்பு மற்றும் இட மாற்றங்களுக்கும் மக்களவை உறுப்பினர்கள் உதவ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அது தவிர தெரு விளக்குகள், சுகாதாரம் போன்ற பிரச்சனைகளையும் மக்களவை உறுப்பினர்கள் செய்ய வேண்டும் என்று கருதுகிறார்கள். சுருக்கமாகக் கூறினால் மக்களவை உறுப்பினர்களைப் பஞ்சாயத்துத் தலைவர்களைப் போல் தான் கருதுகிறார்கள்.

மக்களவை அல்லது லோக் சபா இந்தியப் பாராளுமன்றத்தின் கீழ் அவை ஆகும். இந்த அவையின் உறுப்பினர்கள் மக்களால் நேரடித் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

இந்த அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 552 ஒன்றிய பிரதேச தொகுதிகளையும், நியமன உறுப்பினர்களான ஆங்கில இந்தியர் இருவரையும் உள்ளடக்கிய எண்ணிக்கையாகும். இது இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதின்படி வரையறுக்கப்பட்டதாகும்.

ஆங்கிலோ இந்தியரைப் பொறுத்தவரை இதுவே இந்த அவையின் அதிகபட்ச அமர்வு எண்ணிக்கையாகும் இருப்பினும் குடியரசுத் தலைவர் இந்த எண்ணிக்கை குறித்து மறுதலிக்கும் பட்சத்தில் இந்த எண்ணிக்கையைக் கூட்டவோ, குறைக்கவோ அரசியல் சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

உறுப்பினராவதற்கான தகுதிகள்:

மக்களவை உறுப்பினராவதற்கு ஒருவர் (ஆண் அல்லது பெண்) இந்தியக் குடிமகனாக இருத்தல் அவசியம். வயது 25 அல்லது அதற்கு மேற்பட்டவராகவும், நல்ல மனநிலையில் மற்றும் கடனாளியாக இல்லாதிருத்தல், குற்றமுறை வழக்குகள் அவர் மேல் இல்லாதிருத்தல் வேண்டும். தனித்தொகுதிகளில் (reserved constituency) போட்டியிட ஆதிதிராவிடர் அல்லது பழங்குடி வகுப்பினராக இருந்தால் மட்டுமே போட்டியிடமுடியும். பொதுத்தொகுதிகளில் அனைவரும் போட்டியிடலாம்.

1950ல் இந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட பிறகு, முதல் மக்களவைக்கான முதல் தேர்தல் அக்டோபர் 1951 முதல் பிப்ரவரி 1951 வரை நடந்தது. அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் அமைக்கப்பட்டது தான் ‘முதல் மக்களவை’.

பாராளுமன்றம் ஒவ்வொரு ஆண்டும் மூன்று முறை கூடுகிறது. பிப்ரவரி – மார்ச் மாதங்களில் பட்ஜெட் தொடரும், ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் மழைக்கால தொடரும், நவம்பர் – டிசம்பர் மாதங்களில் குளிர்கால தொடரும் நடைபெறும்.

நமது அரசியல் சட்டங்கள் பார்வையில், மக்களவை உறுப்பினர்கள் செய்ய வேண்டிய பணிகள் தான் என்ன?

1. பாராளுமன்றத்தில் விவாதங்களில் பங்கேற்று சட்டங்கள் இயற்றுவது.

2. அரசின் பணிகளைக் கண்காணிப்பது. குறைகளை பாராளுமன்றத்தின் மூலம் அரசின் கவனத்திற்குக் கொண்டுவருவது.

3. அரசு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் நிதிநிலையை அலசி அரசுக்கு ஆலோசனைகளைப் பாராளுமன்றத்தில் அளிப்பது.

4. வாக்காளர்களின் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்குப் பாராளுமன்றம் மூலமாகக் கொண்டு வந்து தீர்வு காண்பது.

பாராளுமன்றம் அளித்துள்ள வழிமுறைகள் :

1. விவாதங்கள் (debates) மூலம் அரசுக்கு ஆலோசனைகளை அளிக்கலாம். இதன் மூலம் மக்களின் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்து தீர்வு காணமுடியும்.

2. தனியார் மசோதாக்கள் மூலம் (private members bills), கட்சி கட்டுப்பாட்டு இல்லாமல், மக்களுக்குத் தேவையான மசோதாக்களை அறிமுகப்படுத்தி விவாதத்தை உருவாக்கலாம். பல தனியார் மசோதாக்கள் அரசால் ஏற்கப்பட்டு அரசு மசோதாவாக அறிமுகப்படுத்தப்பட்டு நிறைவேறியதும் உண்டு.

3. தொகுதி, மாநில மற்றும் தேசிய பிரச்சனைகளைக் கேள்விகள் (Questions) மூலம் எழுப்பி அரசின் பார்வைக்குக் கொண்டு வந்து தீர்வு காணலாம்.

4. உறுப்பினர்கள் பாராளுமன்றம் கூடும் நாட்களில் தவறாமல் கலந்து கொண்டு பங்கேற்க வேண்டும். இதற்கு வருகை பதிவேடு (attendance) என்று பெயர்.

கூட்டத்தொடர்கள் மற்றும் அலுவல் நேரம்:

வழக்கமான மக்களவை கூடும் அலுவல் நேரம் காலை 11 மணி முதல் பிறபகல் 1 மணி வரையும் மீண்டும் பிறபகல் 2 மணி முதல் 6 மணி வரை நடைபெறுகின்றது.

ஒவ்வொரு கூட்ட அமர்வின் பொழுதும் முதல் மணி நேரம் கேள்வி நேரமாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது. உறுப்பினர்கள் அமைச்சர்களின் துறை சம்பந்தமான கேள்விகள் கேட்க அனுமதிக்கப்படுகின்றது. இதற்கான பதில்கள் தரும் நாட்களும் கேள்வி நேரத்தின் பொழுதே தெரிவிக்கப்படுகின்றன.

மாநிலங்களைவை போன்றே மக்களவையும் அதற்கு ஈடான அதிகாரங்களைக் கொண்டுள்ளது.

பணவிடை மசோதாக்களை மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாது ஆனால் மக்களவையில் நிறைவேற்ற முடியும்.

இரு அவைகளினாலும் எதிரொலிக்கப்பெறும் சர்ச்சைகள் அல்லது முடிவுக்குவர சர்ச்சைகள், விவாதங்கள் இரு அவைகளும் சேர்ந்தமர்ந்து நடத்தப்பெறும் கூட்டுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்படுகின்றது. அச்சமயம் மாநிலங்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை விட மக்களவையில் இருமடங்கு உறுப்பினர் இருப்பதால் மக்களவை மேலோங்கிய அவையாகச் செயல்படும்

நிதி ஒதுக்கீடு?

ஆண்டொன்றுக்கு ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் ரூ.5.00 கோடி நிதியினை மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது.

அனுமதிக்கப்பட்ட பணிகள்?

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது தொகுதிக்குட்பட்ட பகுதியில், நிலையான சொத்துக்களை உருவாக்கிடக் கீழ்க்கண்ட பணிகளைப் பரிந்துரைக்கலாம்.

•குடிநீர் பணிகள்
•கல்வி
•மக்கள் நலவாழ்வு
•சுகாதாரம்
•சாலைப் பணிகள்
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பணிகள்

•நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதியில் 15 விழுக்காடு தாழ்த்தப்பட்ட பிரிவினர் வசிக்கும் பகுதிகளுக்கும், 7.5 விழுக்காடு பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளுக்கும் பயன்படுத்த வேண்டும்.

•நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில், பழங்குடியினர் வாழும் பகுதி இல்லையெனில், வரையறுக்கப்பட்ட நிதியினைத் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வாழும் பகுதிகளுக்குப் பயன்படுத்தலாம்.

•அதேபோல், தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வாழும் பகுதி இல்லையெனில் பழங்குடியினர் வாழும் பகுதிக்கு ஒதுக்கீடு செய்யலாம்.

இதர பணிகளுக்கான ஒதுக்கீடு

•வெள்ளம், புயல், சுனாமி, பூகம்பம் மற்றும் வறட்சி போன்ற பேரிடர்களால் பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் பணிகளைப் பரிந்துரை செய்யலாம்.

•பேரிடர் பாதிக்கப்படாத பகுதிகளில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர், பேரிடர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் செய்யப்பட வேண்டிய பணிகளுக்காக, இத்திட்டத்தின் கீழ், ஆண்டு ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை பரிந்துரை செய்யலாம்.

•பேரிடரின் விளைவு கடுமையாக இருப்பின், பாதிக்கப்பட்ட மாவட்டத்திற்கு அதிகபட்சமாக ரூ.50 லட்சம் வரை பணிகளுக்காகப் பரிந்துரை செய்யலாம்.

செயல்படுத்தும் முறைகள்?

•இத்திட்டத்தின்கீழ், ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் அவர்கள் விருப்பத்திற்கிணங்க, வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு, அவர்கள் தொகுதிகளுக்குச் செய்ய வேண்டிய பணிகளை மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்ய வேண்டும்.

•மாவட்ட ஆட்சியர் அவர்களால் நிர்வாக அனுமதி வழங்கப்படும்.

•நிர்வாக அனுமதி வழங்கிய பின் ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் இப்பணிகளைத் தொடர்புடைய துறையினர் செயல்படுத்துவார்கள்.

******


15 comments:

தாறுமாறு said...

நீங்கள் கிருஷ்ணமூர்த்தியின் தளத்தில் மோடி 5 வருடங்களில் தனது வாரணாசி தொகுதியில் நிறைய வளர்ச்சிப்பணிகளைச் செய்ததாக ஒரு கட்டுரையில் படித்ததாகப் பின்னூட்டமிட்டுள்ளீர்கள். அந்தக் கட்டுரையின் லிங்க் கொடுக்க முடியுமா? நான்கு மாதங்களுக்கு முன் வாரணாசி சென்றபோது அங்கு ஒரு மாற்றத்தையும் காணவில்லை என காவிரி மைந்தன் தனது தளத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார். எது உண்மை?

ஜோதிஜி said...

மின் கம்பிகள் தரைக்கு அடியில் மாற்றப்பட்டு விட்டன. கங்கைக்கு செல்லும் வழிகள் சுத்தமாக காட்சி அளிக்கின்றன. சுகாதாரம் பளிச்சிடுகிறது. இரண்டு பற்றுநோய் மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன. விமான நிலையத்துடன் நகரை இணைக்க புதிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. கங்கை ஆற்றுக்கு மேல் 2 புதிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், திடக்கழிவு மேலாண்மை செயல்படுத்தப்பட்டுள்ளது.நெல் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு லட்சம் குடும்பத்திற்கு எரிவாயு இணைப்பு, ஒரு லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச மின்சாரம், 15 ஆயிரத்து 325 குடும்பங்களுக்கு வீடுகள் தரப்பட்டுள்ளன.

இந்திய வரலாற்றில் முதன்முறையாக வாரணாசியில் இருந்து நீர்வழி போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளது. காசி விஸ்வநாதர் கோயிலை அடைய கங்கையில் இருந்து புதிய பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் வாரணாசி நகரின் சந்து பொந்துகளில் புகுந்து செல்ல வேண்டிய அவஸ்தை முடிவு கட்டப்பட்டது. ரூ.600 கோடியில் திட்டமிடப்பட்ட இப்பணிகள் இந்த ஆண்டு முடிந்துவிடும். 166 பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. 46 பழமையான கோயில்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

இந்த எல்லா திட்டங்களையும் பிரதமர் அலுவலகமே நேரடியாக கண்காணிக்கிறது. நிதி ஒதுக்கீடும் உடனுக்குடன் செய்யப்படுகிறது. இதனால் வாரணாசி நகரில் நடந்த மாற்றங்கள் வெளிப்படையாக தெரிகின்றன.

ஜோதிஜி said...

https://www.dinamalar.com/news_detail.asp?id=2267985

ஜோதிஜி said...

பிரதமர் நரேந்திர மோடி தற்போது கூடுதலாக மேலும் ஒரு கிராமத்தை மோடி தத்தெடுத்துள்ளார். இதற்காக வாரணாசியில் கங்கை நதிக்கரையில் உள்ள டோமாரி கிராமம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி பதவி ஏற்றதும் எம்.பி.க்கள் கிராமங்களை தத்தெடுக்கும் திட்டத்தை கொண்டு வந்தார்.

அதன்படி எம்.பி.க்கள் குறைந்தது ஒரு கிராமத்தையாவது தத்தெடுத்து அந்த கிராமத்தின் வளர்ச்சி திட்ட பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று யோசனை தெரிவித்தார்.

சமீபத்தில் மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சகம், கிராம தத்தெடுப்பு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் தற்போது நாடு முழுவதும் 1448 கிராமங்கள் மட்டுமே எம்.பி.க்களால் தத்தெடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இங்கும் வளர்ச்சித் திட்டப் பணிகள் திருப்திகரமாக செயல்படுத்தப்படவில்லை என்று உயர் அதிகாரிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

அடுத்து வருகிற மார்ச் மாதத்துக்குள் 2,370 கிராமங்களை தத்தெடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இரு சபைகளின் 790 எம்.பி.க்களும் கூடுதலாக கிராமங்களை தத்தெடுக்க வேண்டும் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவல் பிரதமர் மோடியின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. அவர் தனது வாரணாசி தொகுதியில் ஜெயநகர், நாகாபூர், ககார்கியா ஆகிய 3 கிராமங்களை தத்து எடுத்து உள்ளார்.

தற்போது கூடுதலாக மேலும் ஒரு கிராமத்தை பிரதமர் மோடி தத்தெடுத்துள்ளார். இதற்காக வாரணாசியில் கங்கை நதிக்கரையில் உள்ள டோமாரி கிராமம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது.

இங்கு கங்கை நதியில் கலக்கும் கழிவுநீரை சுத்திகரித்து அனுப்புவது உள்பட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட உள்ளது.

பிரதமர் மோடி கூடுதலாக ஒரு கிராமத்தை தேர்வு செய்து இருப்பது போல் மற்ற எம்.பி.க்களும் கூடுதலாக கிராமத்தை தத்தெடுக்க முன்வர வேண்டும் என்று முத்த அரசு அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜோதிஜி said...

https://m.dailyhunt.in/news/india/tamil/dina+seithigal-epaper-dinasei/birathamar+modi+varanasi+tokuthiyil+melum+oru+kiramathai+tatheduthar-newsid-100216930

சிகரம் பாரதி said...

தகவல்கள் அருமை. 1951 அக்டோபர் முதல் 1951 பெப்ரவரி என்பதில் தவறு உள்ளது. கவனிக்கவும்.

ஜோதிஜி said...

நன்றி.

ஸ்ரீராம். said...

வயதுத் தகுதிகள் தெரியும் என்றாலும் இவ்வளவு விவரங்கள் அறியக் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி.

G.M Balasubramaniam said...

நிறைய தகவல்கள் இதைத்தான் நான் என் பதிவுகளில்கட்சிக்கு ஓட்டுபோடச் சொல்லி எழுதி இருக்கிறேன்

Rathnavel Natarajan said...

அருமையான தகவல்கள். நன்றி

கிரி said...

MP பதவியை வைத்து எவ்வளவோ செய்யலாம் ஆனால், இது ஒரு கவுரவ பதவியாக மட்டுமே பார்க்கப்படுகிறது.

ராஜ்ய சபா MP இன்னும் சூப்பர். மக்களால் தேர்ந்தெடுக்கப்படாதவரை கூட எடுத்து இந்தியாவின் நிதி நிலையை தீர்மானிக்கும் நபராக மாற்ற முடிகிறது.

இராணுவ அமைச்சராகவும் மாற்ற முடிகிறது.

மக்களும் MLA க்களிடம் எதிர்பார்ப்பதை போல MP க்களிடம் அதிகம் எதிர்பார்ப்பதில்லை என்பது, இவர்களுக்கு வசதி.

ஜோதிஜி said...

பாராளுமன்ற மற்றும் சட்ட மன்ற உறுப்பினர் எவராக இருந்தாலும் கட்சி கட்டுப்பாடு என்பது தான் முக்கியமாக உள்ளது. தனிப்பட்ட முறையில் எதையும் சாதிக்க முடியாத அளவுக்கு நம் அமைப்பு சுற்றிலும் வேலி போட்டு வைத்துள்ளது.

ஜோதிஜி said...

ஆனால் அதனை உடைக்க வேண்டும் என்பது என் எண்ணம். கட்சி எப்படி தேர்ந்தெடுக்கின்றது. ஒன்று பணம். மற்றொனறு சாதி. கடைசியாக தனிப்பட்ட (அங்காளி பாங்காளி நண்பர்) செல்வாக்கு. தொண்டர் என்பவர்கள் தெருக்கோடியில் கடைசி வரைக்கும் கத்திக் கொண்டு இருப்பவர்கள். பாடுபட்டு வீணாகப் போய் விடுவார்கள். மற்றொரு விசயம் என்னவென்றால் கட்சிக்கு மட்டும் ஓட்டுப் போடுங்க என்று சொல்பவர்கள் படு பயங்கர துரோகிகள் என் பார்வையில். எப்படியென்றால் அரசியலில் நம்பகத்தன்மை மற்றும் மாற்றம் விரும்புவர்கள் சிலராவது அவ்வப்போது உள்ளே வர வேண்டும். அப்போது தான் பலரின் கொட்டம் அடங்கும். குறைந்த பட்சம் 50000 ஆயிரம் ஓட்டுக்கள் வாங்கினால் போதும். பெரிய கட்சிகள் பயப்படுவார்கள். ஆனால் வெல்லும் கட்சிக்கு மட்டும் ஓட்டுப் போடுங்க என்று சொல்லியே புதிதாக வருபவர்களை தொடக்கத்தில் கருவறுத்து விடுகின்றார்கள். எவரும் உள்ளே வரவே பயப்படுகின்றார்கள். இது மாற வேண்டும் என் என்பது எண்ணம். புதுப் புது நபர்கள் புதுப் புது சிந்தனைகளை நாம் அனுமதிக்க வேண்டும். அப்போது தான் கொஞ்சமாவது மாற்றத்தை நாம் எதிர்பார்க்க முடியும்.

ஜோதிஜி said...

நன்றி

ஜோதிஜி said...

அதிமுக வில் யார் யார் எம்பி என்றே இன்று வரையிலும் தமிழ் கூறும் நல் உலகத்திற்கு தெரியாது. இது தான் பெரிய கொடுமை.