வெயிலுக்கு பெயர் போன மாவட்டத்தில் பிறந்த காரணத்தால் இன்னமும் மழையை விட வெயில் ரொம்பவே பிடிக்கும். உடம்பில் கசகசக்கும் வியர்வை வழிந்தோடினாலும் வீட்டுக்குள் நுழைந்தால் ஆடைகளை கழட்டி விட்டால் போதும். குளிர் அப்படியல்ல. எலும்பு வரைக்கும் ஊடுருவும். வெயில் தான் என்னை வளர்த்தது. இன்று வெயில் இருந்தால் தான் வாழ முடியும் என்ற தொழிலிலும் இருக்கின்றேன்.
வானம் பார்த்த பூமி, வறப்பட்டிக்காடு, பொட்டல் காடுகள், கருவேலமரங்கள் சூழ்ந்த பூமி என்று வாழ்ந்த பூமியை விட வாக்கப்பட்ட இடத்திற்கு மாறிய போது மனமும் உடலும் மாறத் தொடங்கியது. மனம் சுகத்தை எதிர்பார்க்க வசதிகள் வந்து சேரும் போது இங்கே எல்லாமே மாறத் தொடங்கி விடுகின்றது.
கல்லூரியில் முதலாண்டு படித்துக் கொண்டிருந்த போது எழுத்தாளர் இந்துமதி எழுதிய "தரையில் இறங்கும் விமானங்கள்" என்ற புத்தகத்தை யாருமே இல்லாத நூலகத்தில் வைத்து ஒரு மதிய வேளையில் தான் முதன் முதலாக அந்த புத்தகத்தை படித்தேன்.
பலதடவை படித்துள்ளேன். கல்லூரி முடித்து வெளியே வந்து இலக்கின்றி சுற்றிக் கொண்டிருந்த போதும் படித்துள்ளேன்.
மதிய நேர வெய்யிலை அதன் சுகத்தை இந்துமதி விவரித்து இருப்பார். இன்று வரையிலும் இந்த புத்தகம் கொடுத்த தாக்கம் போல வேறு எந்த புத்தகமும் எனக்கு தந்ததில்லை. இதன் தலைப்பு கூட இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையைச் சொல்வதாகத்தான் உள்ளது.
இப்போது வெய்யில் மட்டுமல்ல மழையும் கூட உடம்புக்கு சவாலாகத்தான் இருக்கின்றது. நமக்கு என்ன வந்துவிடப்போகின்றது என்று யோசித்து வாழ்ந்த காலங்கள் மாறி நமக்கு ஏதாவது வந்துட்டா? என்று யோசிக்க வைக்கின்றது. பயம் தான் வாழ்க்கையின் ஆதாரமாக மாறிப் போக அத்தனையும் படபடப்பாக மாறிவிடுகின்றது.
உயர்வான நிலையில் உள்ள எவரை வேண்டுமானாலும் சந்தித்துப் பாருங்கள்?
ஒரு படபடப்பு அவர்களிடம் இருந்து கொண்டே இருக்கும். சேர்த்து வைத்ததை காப்பாற்ற வேண்டிய துடிப்பும், பணிபுரியும் வேலையில் தினசரி சந்திக்கும் அவஸ்த்தை என நிலையில்லாமல் தான் இருப்பர்.
யாருக்குத்தான் இங்கே பதட்டமில்லாமல் வாழ முடிகின்றது?
ஒவ்வொரு சமயத்திலும் விஞ்ஞானம் தந்த முன்னேற்றத்தை வளர்ச்சி என்கிறோம். இந்த விஞ்ஞானப் பறவையில் பறந்து முன்னேறியவர்களை வளர்ந்த நாடுகள் என்று அழைக்கின்றோம். நாம் தான் இத்தனை வருடங்கள் பின்தங்கி விட்டோம் என்று அங்கலாப்புடன் அலுத்துக் கொள்கின்றோம். கூடவே நம்மாளுங்க திங்க மட்டுமே லாயக்கு என்று நெட்டி முறிக்கின்றோம்.
ஆனால் இந்த வளர்ச்சிக்காக நாம் என்ன விலை கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்?
1990 க்குப் பிறகு இந்தியாவை உலக நாடுகளிடம் அறிமுகம் செய்து வைத்து காட் ஒப்பந்தம் என்ற கடவுளை அறிமுகம் செய்து வைத்தனர். வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்தது. அப்போது தான் வினைகளும் நமது வாழ்க்கையின் ஒரு அங்கத்தினராக மாறத் தொடங்கியது. ஆனால் அப்போது அது குறித்து எவரும் அதிகமாகஅலட்டிக் கொள்ளவில்லை.
காரணம் எளிமையானது.
எல்லோரும் எப்போதும் சொல்லும் அதே தத்துவம் தான்.
எல்லோரும் எப்போதும் சொல்லும் அதே தத்துவம் தான்.
ஒன்றை இழந்தால் தான் ஒன்றைப் பெற முடியும்.
ஒன்று இரண்டையா இழந்துள்ளோம்?
நம்மைச் சுற்றிலும் உள்ள காற்றைத் தவிர அத்தனையும் இன்று காசு கொடுத்தே பெற முடியும் என்கிற சூழ்நிலையில் இந்த வளர்ச்சி நம்மை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.
நம் வாழ்க்கை நம் ஆரோக்கியம் என்று பேசத் தொடங்கி தற்போது நம்முடைய அடிப்படைத் தேவைகள் அனைத்தும் ஆடம்பரத் தேவையாக மாறி ஒவ்வொன்றுக்கும் ஒரு விலையை கொடுக்க வேண்டியுள்ளது.
கடந்த இரண்டு மாதமாகத்தான் வீட்டில் தண்ணீருக்கென தனியாக ஒரு தொகை ஒதுக்க வேண்டியுள்ளது. மாதச் செலவில் இந்த தொகை சிறிய அளவாக இருந்தாலும் மனதில் உருவாகும் குற்ற உணர்ச்சிக்கு அளவேயில்லை.
சுடுதண்ணீர் என்றாலும் சுத்திகரித்து குடிங்க என்று கூவிக்கூவி அழைத்து நம்மை வடிகட்டின முட்டாளாக நுகர்வு கலாச்சாரம் மாற்றியுள்ளது.
நாள்தோறும் அலறிக் கொண்டிருக்கும் ஊடகங்கள் தரும் பயமே இந்த சந்தையின் லாபத்தை நாளுக்கு நாள் அதிகரிக்க வைத்துக் கொண்டிருக்கின்றது.
இரண்டு நாளைக்கு ஒரு முறை வந்து கொண்டிருந்த வீட்டுக்குள் இருந்த குழாயில் காற்று மட்டுமே வரத் தொடங்கியது.
வாரத்தில் இரண்டு நாளைக்கு வந்து கொண்டிருந்த பொதுக் குழாயிலும் தண்ணீர் நின்று போக அப்போது கூட மக்கள் யோசிக்கத் தயாராகாமல் தண்ணீர் லாரியை வரவழைக்கத் தொடங்கினர். சுகமாக மொண்டு குளித்து வாழப் பழகியவர்களுக்கு கையிலிருந்த காசு கரைய மெதுவாகவே ஞானம் வரத் தொடங்கியது.
வாரத்தில் இரண்டு நாளைக்கு வந்து கொண்டிருந்த பொதுக் குழாயிலும் தண்ணீர் நின்று போக அப்போது கூட மக்கள் யோசிக்கத் தயாராகாமல் தண்ணீர் லாரியை வரவழைக்கத் தொடங்கினர். சுகமாக மொண்டு குளித்து வாழப் பழகியவர்களுக்கு கையிலிருந்த காசு கரைய மெதுவாகவே ஞானம் வரத் தொடங்கியது.
திருப்பூரில் 1992 ல் ஒரு குடம் 50 பைசாவில் தொடங்கி சில இடங்களில் ஒரு ரூபாய்அளவுக்குக்கூட விற்றது.
இருபது வருடங்களுக்குப் பிறகு அதே நிலமை திரும்பியுள்ளது. அப்போது இல்லாத வளர்ச்சி அத்தனையும் இப்போது வந்துள்ளது? ஆனால் அப்போது இருந்து பிரச்சனைகளை விட இப்போது அதிகமாகியுள்ளது? எப்படி?
இருபது வருடங்களுக்குப் பிறகு அதே நிலமை திரும்பியுள்ளது. அப்போது இல்லாத வளர்ச்சி அத்தனையும் இப்போது வந்துள்ளது? ஆனால் அப்போது இருந்து பிரச்சனைகளை விட இப்போது அதிகமாகியுள்ளது? எப்படி?
வார்டு கவுன்சிலர் யாரென்றே தெரியாத அத்தனை பேர்களும் அலுவலகத்திற்கு தினமும் படையெடுக்க அதற்கென்ன ஆகட்டும் பார்க்கலாம்?என்றாராம். கூடவே கேன் வாட்டர் வர்றதில்லையா? என்று கேட்ட போது தான் தற்போது தண்ணீர் என்பது விலை கொடுத்து வாங்க வேண்டிய ஒரு பொருள் என்பதே பலருக்கும் புரியத் தொடங்கியுள்ளது. குழாயில் வராத தண்ணீர் பலருக்கும் கண்ணீரை வரவழைத்துக் கொண்டிருக்கின்றது.
ஊரில் வீட்டுக்குப் பின்னால் இருந்த கிணற்றில் எனக்கு நினைவு தெரிந்த வரையிலும் பத்து இழுவையில் தண்ணீர் வந்து விடும். அருகே இருந்த நடராஜபுரம் ஊரணியில் பால் போலவே தெளிந்த நீரை குடிக்க பயன்படுத்திய குடும்பங்கள் அதிகமாகவே இருந்தார்கள்.ஊரைச் சுற்றிலும் இருந்த ஒவ்வொரு குளத்திலும் முடிந்தவரைக்கும் நிரம்பியே பார்த்திருக்கின்றேன். ஆடு, மாடுகளுடன் அவசரமாக கழுவிக் கொண்டு நகர்ந்தவர்களையும் பார்த்து இருக்கின்றேன்.
வயலுக்கு அருகே இருந்த கண்மாயில் பார்த்த தண்ணீரும், ஊருக்கு வெளியே இருந்த கண்மாயில் கடல் போல நின்ற தண்ணீர் எதையும் இப்போது காணவில்லை. குளமெல்லாம் வீடாக மாறிப் போய்விட்டது. கண்மாய் ஓரத்தில் கட்டிடங்கள் முளைத்துள்ளது.
தண்ணீரில் மூழ்கி குளித்த உடம்புக்கு இன்று முனகிக் கொண்டே துடைத்து வர கடந்து போன இருபது வருடங்கள் தந்த வளர்ச்சியில் நாம் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளோம்.
ஒன்றை இழந்தால் பரவாயில்லை. மொத்தமாக அத்தனையும் இழந்து கொண்டேயிருக்கின்றோம். எங்கிருந்தோ வந்தவர்களுக்காக இத்தனையும் இழந்து விட்டு இன்னமும் கூட அதைப் பற்றி யோசிக்கத் தெரியாதவர்களாக வாழ்ந்து கொண்டிருப்பது தான் இந்த வளர்ச்சி தந்த அறிவு. நாட்டுக்கு அந்நிய முதலீடு தேவை என்கிறபாதையில் சென்ற பொருளாதார புலிகள் இன்று இயல்பாக கிடைத்த புளி கூட கசக்கும் அளவிற்கு விலை உயர்ந்துவிட்டது.
எப்பேற்பட்ட வளர்ச்சி தெரியுமா?
எப்பேற்பட்ட வளர்ச்சி தெரியுமா?
மிதிவண்டி வாகனமாக மாறியது. எரிபொருளின் தேவை அதிகமானது. மொத்த நாடும் எரிபொருளை நம்பியே ஓடத் தொடங்க விலைவாசிகள் விண்ணைத் தொட்டு நிற்கின்றது.
வானொலி தொலைக்காட்சியாக மாறியது. உலகம் சுருங்கிப் போனது. ஆனால் அருகே இருப்பவர்கள் அந்நியமாகிப் போனார்கள்.
தொலைபேசி அலைபேசியாக மாறியது. உறவுகளின் நெருக்கம் விலகிப் போய்விட பேச நேரமில்லாது ஓடிக் களைத்த ஓட்டப்பந்தய வீரர்கள் போல வாழ்க்கையும் மாறிப்போனது.
ஆட்டுக்கல்லுடன் அம்மிக்குழவியும் காணாமல் போனது. நினைத்துப் பார்க்க மட்டுமே என்று இருந்த அத்தனை பொருட்களும் நுகர்வு கலாச்சாரத்தில் வந்து நிற்க ஒவ்வொரு பொருட்களுமே நமது அன்றாட வாழ்க்கைக்கு அவசியம் தானே? என்ற எண்ணமும் இயல்பாக மாறிப் போனது.
இன்று மின்சாரம் இல்லையேல் வாழ முடியாத நிலைக்கு வந்து விட்டோம்.
கடந்த 50 ஆண்டுகளில் தானிய உற்பத்தி பெருகி இன்று பசி, பட்டினி, பஞ்சம் இல்லை என்று வளர்ந்துள்ளோம். உருவான தொழில் வளர்ச்சியில் வேலை வாய்ப்புகளுக்கும் பஞ்சம் இல்லை என்று மாறியுள்ளது.
ஆனால் நிலங்கள் மலடாகி காற்றில் கரும்புகையும் கலந்து இயல்பான வாழ்க்கையில் ஒன்றாகிப் போய்விட்டது.
எல்லாமே சரி தான்?
வாழ்வதற்கான தேவைகளும், நமது வசதிகளுக்காக நாம் பெற்ற வளர்ச்சிகளும் நமக்கு நாகரிக உலகத்தை அறிமுகம் செய்து வைத்தது.
காடு அழிந்து வீடாக தொழிற்சாலைகளாக மாறியது. இயற்கையின் சுழற்சி மாறத் தொடங்கியது. இன்று ஆக்கலும் அழித்தலும் கைவரப் பெற்ற மனிதனால் இயற்கையை உருவாக்க முடிவதில்லை. அதன் சூட்சமத்தை இன்றும் கூட முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை.
இயற்கையோடு கலந்த நம் வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு விசயத்தைப் பற்றியும் பேசுவாம்.
முதலில் காட்டைப் பற்றி பேசுவோம்.
அடுத்த பதிவில்...........................
23 comments:
//தற்போது தண்ணீர் என்பது விலை கொடுத்து வாங்க வேண்டிய ஒரு பொருள் என்பதே பலருக்கும் புரியத் தொடங்கியுள்ளது.///
இதுக்கே கவலைப்பட்டா எப்படீங்க... வர காலத்துல நல்ல காற்றை சுவாசிக்க அந்த காற்றை காசு கொடுத்துதான் வாங்க வேண்டியிருக்கும் அந்த நாட்கள் வர தூரம் அதிகம் இல்லை
// நமக்கு என்ன வந்துவிடப்போகின்றது என்று யோசித்து வாழ்ந்த காலங்கள் மாறி நமக்கு ஏதாவது வந்துட்டா? என்று யோசிக்க வைக்கின்றது. பயம் தான் வாழ்க்கையின் ஆதாரமாக மாறிப் போக அத்தனையும் படபடப்பாக மாறி விடுகின்றது. //
ஒரு கட்டத்தில் எல்லோருக்கும் இந்த சூழ்நிலை வந்துவிடுவதை, சரியாகச் சொன்னீர்கள். சில சமயம் ரொம்பவும் படபடப்பான நேரங்களில் எல்லாம் ” நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் “ என்ற பாடலை நான் போட்டு கேட்பேன். வலைப்பதிவு எழுதுவதனால் படபடப்பு குறையும்.
பல இடங்களில் மினரல் வாட்டர் ஏஜென்சிகளை நடத்துபவர்களே வார்டு கவுன்சிலர்கள்தான். அப்புறம் எப்படி கார்ப்பரேசன் குழாயில் தண்ணீர் வரும்?
அடுத்து உங்களது காடு வா வா என்று அழைக்கிறது. ஆவலுடன் எதிர் கொள்கிறேன் ... நன்றி!
நல்ல அலசல்.
1974 இல் விசாகப்பட்டினத்தில் வாழ்க்கையை தொடங்கியபோதே தினம் 10 குடம் தண்ணீர் என்று வாங்கிய நினைவு. தண்ணீருக்குக் காசு இல்லை.கொண்டு வந்து ஊற்றும் நபருக்கு அது வாழ்க்கை நடத்தும் வருமானம்.
காலையில் தலையில் ஒன்னும் இடுப்பில் ஒன்னுமா ரெண்டு குடம் தண்ணீஈரோடு வந்து கதவைத் தட்டுவாங்க அந்தம்மா. தினம் நிறைகுடம் கண் முழிப்புதான்.
நாங்க அப்போ வாடகைக்கு இருந்த புத்தம்புது வீட்டில் அதுவரை தண்ணீர் குழாய் இணைப்பு வரவில்லை.
இப்போ..... உலகின் அதி சுத்தமான தண்ணீர் விநியோகம் நடக்கும் நகரத்தில் வாழ்க்கை. எங்க ஊரில் இதுவரை நகரசபை கூட தண்ணீருக்குத் தனியா வரி விதிக்கலை.
இந்தியா வந்தால் தண்ணீர் பாட்டில் கையில் இல்லாம முடியாது:(
இந்தியாவின் முட்டாள் அரசியல்வாதிகள் பெரிதும் கடன் என்றால், நான் ஏன் அதை பற்றி கவலைப்பட வேண்டும்?
இந்த உடலுக்கு நாம் எதை கொடுத்து பழக்குகிறோமோ அதற்கேற்றார்போல் அது தன்னை தகவமித்துக்கொள்கிறது. 15 வருசஷத்துக்குமுன்னால கிணத்துத்தண்ணீ குடிச்சிட்டிருந்தவங்க இன்னிக்கு அதே கிணத்துல தண்ணி இருந்தாலும் கேன் தண்ணி வாங்கி குடிக்கிறார்கள். கேன் தண்ணிக்கு பழக்கப்பட்ட உடல் மறுபடியும் கிணற்று தண்ணிக்கு பழககொஞ்சம் டையம் எடுக்கும் அதுக்குள்ள பாத்தியா கிணத்துதண்ணி உடம்புக்கு ஒத்துக்கலைன்னு மொத்தமா தவிர்த்துவிடுவதும் நடக்கிறது. நேத்துவந்த T.V விளம்பரத்தை நம்பும்நாம் இத்த்னை ஆண்டுகளாய் நம்முடன் அல்லது நாம் அதனுடன் இருக்கும் உடலைப்பற்றி அறிந்துகொள்வதில்லை. எந்த ஊருக்கு போனாலும் முதல்ல அந்த ஊரு தண்ணிய குடிக்கணும்ன்னு சொல்வாங்க அப்பதான் உடம்பு அந்த சூழ்நிலையை அனுசரிக்க பழகும். ஆனால் நாம் வீட்டைவிட்டு இறங்கியதுமே வாட்டர்கேன் வாங்குகிறறோம். அப்போ அவன் அதை காசாக்கத்தான் பார்ப்பான். நான் பெரும்பாலும் கேன் தண்ணிரை தவித்துவிகிறேன்.
அவசியமான ஒரு பதிவு ... தொடரும் என்று சொன்னதால் நிச்சயம் தொடர்ந்து படிக்கிறேன்... ஜூனியர் விகடனில் பாரதி தம்பி கூட தண்ணீர் பற்றி ஒரு தொடர் எழுதி வருகிறார்..
தண்ணீராலும் தண்ணீர் இல்லாமலும் அழியப் போகிறோம் என்ற உண்மையை நம் மக்கள் மனதில் உறக்க பதிய வைக்க ஒரு பெரும் படை தேவை ஜோதிஜி
நீர் இன்றி அமையாது உலகு.
குறிப்பிட்ட சில நாடுகளில் சுத்தமான காற்றை மாஸ்க் மூலம் சுவாசிக்க என்ற சந்தைப்படுத்தும் திட்டம் வெற்றிகரமாக நடைமுறையில் வந்து விட்டது என்பதை படித்தேன்.
நீங்கள் சொன்ன தலைப்பு அதன் முரண்நகை கண்டு சிரித்தேன். காடுகளை வெட்டி காசாக்குபவர்களை வா வா என்று அழைக்கிறது என்பதாக எடுத்துக் கொள்வதா? இல்லை நிச்சயம் ஒரு நாள் சுடுகாடு தான் நிரந்தரம் என்பதாக எடுத்துக் கொள்வதா? படபடப்பு குறைய் சர்வரோக நிவாரணி பதிவுலகம். சரிதானே?
நீங்கள் குறிப்பிட்டுள்ள வருடம் நான் ஒன்னாப்பு சேர்ந்த வருடம்.
உலகின் அதி சுத்தமான தண்ணீர் விநியோகம் நடக்கும் நகரத்தில் வாழ்க்கை.
இந்த நகர் (நியூசிலாந்து) கொடுத்த தாக்கம் அதிகமானது. ஏறக்குறைய அதிசயம் போலத்தான் என் மனதில் கனவாக உள்ளது.
அரசியல்வாதிகள் வாங்கும் கடனின் இறுதி பாரம் சுமப்பவர்கள் மக்களே. ஒரு பதிவே எழுதமுடியும்.
முகநூலில் பகிர்ந்துள்ளேன்.
சீனு நானும் பாரதி தம்பி தொடரை தொடர்ச்சியாக படித்துக் கொண்டு வருகின்றேன். இன்னமும் விரிவாக பேசப்பட வேண்டிய விசயமது.
நீர் இன்றி அமையாது உலகு.
கொஞ்சம் மாற்றலாம் போலிருக்கே.........
காசு இன்றி (இனி) வராது நீர்.
ஞானம் கல்வி ஈசன் பூஜை எல்லாம் காசு முன் செல்லாதடி...!
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே...
காசு காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே...
உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே... அதுக்கு
உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே...
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே... பிணத்தைக்
கட்டி அழும் போதும் தாண்டவக்கோனே...
பணப்பெட்டி மேலே கண்வையடா தாண்டவகோனே.....!
வான்மழை நீரும் மண்ணின் குணத்தால்... மாற்றம் அடைவதுண்டு.
வஞ்சகர் உறவால் நல்ல மனிதரும் தீயவர் ஆவதுண்டு.
உனக்கு முன்னே பிறந்த நிலம்... ஊருக்கெல்லாம் கொடுத்த நிலம்...
உனக்கு பின்னும் இருக்குமடா... உரிமை என்றால் சிரிக்குமடா...
எங்கே தேடுவேன்...? தண்ணீரை எங்கே தேடுவேன்...?
உலகம் செழிக்க உதவும் தண்ணீரை எங்கே தேடுவேன்...?
திருப்பதி உண்டியலில் சேர்ந்து விட்டாயோ?...
திருவண்ணாமலை குகை புகுந்தாயோ?
இரும்புப் பெட்டிகளில் இருக்கின்றாயோ?
இரக்கமுள்ளவனிடம் இருக்காத தண்ணீரைனை எங்கே தேடுவேன்.....!
தேர்தலில் சேர்த்து தேய்ந்து போனாயோ?
தேச சுகத்துக்காக ஊட்டி சென்றாயோ?
சுவற்றுக்குள் தங்கமாய்ப் பதுங்கி விட்டாயோ?
சூடஞ் சாம்பிராணியாய் புகைந்து போனாயோ?
இன்பமெங்கே... இன்பமெங்கே... என்று தேடு...
இன்றிருப்போர் நாளையிங்கே.... இருப்பதென்ன உண்மை...?
இதை எண்ணிடாமல் சேர்த்து வைத்து காத்து என்ன நன்மை...?
இருக்கும் வரை இன்பங்களை அனுபவிக்கும் தன்மை...
இல்லையென்றால் வாழ்வினிலே உனக்கேது இனிமை?
இயற்கை அன்னை தந்ததெல்லாம் எல்லோர்க்கும் சொந்தமடா.....
வான்மழை நீரும் மண்ணின் குணத்தால்... மாற்றம் அடைவதுண்டு.
வஞ்சகர் உறவால் நல்ல மனிதரும் தீயவர் ஆவதுண்டு.
உனக்கு முன்னே பிறந்த நிலம்... ஊருக்கெல்லாம் கொடுத்த நிலம்...
உனக்கு பின்னும் இருக்குமடா... உரிமை என்றால் சிரிக்குமடா...
(மனிதனின் வாழ்க்கை ஒரு பிடி சாம்பலில் முடிந்து போகிறது
பணம் இருக்கும் மனிதனிடம் மனம் இருப்பதில்லை.....
மனம் இருக்கும் மனிதனிடம் பணம் இருப்பதில்லை.....
பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்...
பணம் இல்லாத மனிதருக்கு சொந்தம் எல்லாம் துன்பம்....
நாம் எங்கோ கனவு கண்டு கொண்டிருக்கையில் நம் விமானங்கள் தரையிறங்கிய தோடல்லாமல் நமது அடுத்த தலைமுறையினரையும் நமது உதாசீனத்தால் தரை இறக்குகிறோமே என்று மனது சஞ்சலப் படுகிறது.
வழக்கம்போல திரு அகலிகன் கருத்துரை நடைமுறையை தெளிவாகச் சொல்லி ஒரு வழியையும் காட்டுகிறது.
அவர் பதிவுக்கு செல்லுங்க. நேரமின்மையால் குறைவாகத்தான் எழுதுகின்றார்.
//நேத்துவந்த T.V விளம்பரத்தை நம்பும்நாம் இத்த்னை ஆண்டுகளாய் நம்முடன் அல்லது நாம் அதனுடன் இருக்கும் உடலைப்பற்றி அறிந்துகொள்வதில்லை//
என்று அகலிகன் சொன்னதை எத்தனை பேர் யோசிக்கப் போகிறோம்.
Post a Comment