Friday, August 18, 2023

இந்த உலகம் சம ஒழுங்கைப் பேணுகின்றது என்பதனை நம்புங்கள்.

 நீங்கள் கட்சி ரீதியான அரசியல், அதனை முன்னெடுக்கக்கூடியவர்களை விரும்பலாம். எழுதலாம். சிலாகித்துப் பேசலாம். மாற்றங்கள் நிச்சயம் எதிர்காலத்தில் உருவாக வாய்ப்புண்டு என்று நினைக்கலாம்.




நிஜத்தில் அது சாத்தியமில்லை என்பதனை பல முறை பல சந்தர்ப்பங்களில் கடந்த காலங்களில் உணர்ந்துள்ளேன். இந்தக் கட்சி அந்தக் கட்சி என்றில்லை.
இங்கு அரசியல் கட்சிகள் இயங்குகின்ற தளம் வேறு. அவர்களுக்குப் பிரச்சனைகள் இருந்து கொண்டேயிருக்க வேண்டும். அதைப் பற்றிப் பேசிக் கொண்டே இருக்க வேண்டும். மக்களை எதிர்பார்ப்பில் வைத்திருக்க வேண்டும்.
இது ஏன் இப்படி நடக்கின்றது என்று யோசித்து உள்ளேன். காரணம் தன் அரசியலுக்கு யார் எதிரான அரசியல் செய்கின்றார்களே அவர்களை மடக்க மாற்ற நீக்க தோல்வியடைச் செய்ய இவர்களும் அவர்கள் பாதையில் பாணியில் செல்வதாகச் சொல்கின்றார்கள்.
பொது சமூகத்தில் பெருவாரியான மக்கள் நம்பிக்கை வைத்துள்ள எந்த விசயத்திற்கும் எதிராக நீங்கள் எழுதினால் பேசினால் நீங்கள் தூற்றப்படுவீர்கள். காணாமல் போய்விடுவீர்கள். அவர்களை அழிக்க வேண்டும். எனக்கு வேறு வழி தெரியவில்லை என்று ஒவ்வொரு முறையும் நாம் நம்மை யாருக்காகவே அடகு வைத்துக் கொள்கின்றோம் என்ற தான் எனக்குத் தோன்றுகின்றது.
()()()
தமிழகத்தில் தனித் தேர்வர் என்றொரு உலகம் உண்டு. 10,11,12 மூன்று வகுப்புகளில் தேர்ச்சி அடையாதவர்களைத் தனியார் வணிக கல்வி நிறுவனங்கள் எப்படி நடத்துகின்றது, அரசு மற்றும் அரசு உதவி கல்விக்கூடங்கள் எப்படி நடத்துகின்றது என்பதற்கு எடப்பாடி ஆட்சியில் இருந்த போது படிப்படியாகப் பார்த்து வெந்து நொந்து அதற்குத் தீர்வு காணப் புறப்பட்டுப் பார்க்காத அதிகாரிகள் இல்லை. பாஜக முதல் விரும்பாத அரசியல்வாதிகள் வரை சென்ற பயணம் மிக நீண்டது.
தற்போது ஓய்வு பெற்ற த.செ இறையன்பு போன்றவர்களின் உண்மையான முகம் தெரிந்தது. நீங்கள் நம்பினாலும் நம்பாவிட்டாலும் நிர்வாகத்திறமை என்பது வேறு. மற்ற திறமைகள் என்பது வேறு என்பதனை கண்கூடாக உணர்ந்தேன். ஏன் அரசியலில் செல்லூர் ராஜு போன்றவர்கள் எல்லாம் செல்வாக்காக இருக்கின்றார்கள் என்றால் இவரைப் போன்றவர்கள் மக்கள் அணுகும் நிலையில் இருப்பதே முக்கிய காரணம் என்பேன். எடப்பாடி ஆட்சியில் உதயச்சந்திரன் கைகள் எப்படி கைகள் கட்டுப்பட்டு இருந்தது என்பதனையும் புரிந்து கொண்டேன். தனக்குக் கீழே பணிபுரிந்த அதிகாரிகளிடம் கூட அவரால் ஒரு விசயத்தைக் கடத்த முடியாது என்பதனை புரிந்த போது நிஜமான அதிகார அரசியலில் சூட்சமம் அன்று தான் புரிந்தது.
ஆனால் இன்று வென்றுள்ளேன். நான் என்னவெல்லாம் தனித்தேர்வர்கள் படும் பாடுகள் என்று பட்டியலிட்டுக் கொடுத்து இருந்தேனோ அவை முழுமையாகக் களையப்பட்டு விட்டது. ஒரு வருடம் வீணாகாமல் இப்போது அவர்கள் வகுப்பில் தேர்ச்சி பெற்றுச் சேர்ந்து விடுகின்றார்கள். எப்படி செயலாக்கம் பெற்றது? யார் காரணம் என்று எனக்குத் தெரியாது.
()()()
கடந்த ஏப்ரல் மாதம் இங்குள்ள அரசு பெண்கள் கலைக்கல்லூரியில் (அதிமுக ஆட்சியில் போட்ட திட்டம் இந்த ஆட்சியில் கட்டப்பட்ட 30 வகுப்பறைகள் அடங்கிய கட்டிடம்) திறக்க வேண்டிய வகுப்பறை திறக்காமலிருந்தது. என் பார்வைக்கு வந்தது. பயணம் தொடங்கியது.
கீழே கொடுத்துள்ள தினமலர் செய்தி நேற்று இரண்டாவது முறையாக வந்துள்ளது. நேற்று திறப்பு விழா நடந்ததைச் செய்தியாக்கி உள்ளனர். முதல் முறை அவர்களை அழைத்துச் சொன்னேன். நண்பர் ஈஸ்வரன் மூலம் இன்டியன் எக்ஸ்பிரஸ் ல் வரவழைத்தேன். அமைச்சர், அமைச்சரின் உதவியாளர், இஆப அதிகாரி என்று தட்டாத கதவுகளே இல்லை. அத்தனையும் சாட்சியாக ட்விட்டரில் உள்ளது.
வகுப்பறை திறக்காமல் இருப்பதால் பகுதிநேரம் வேலை செய்து கொண்டு இருக்கும் மாணவிகள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றார்கள். சில நல்லவர்களின் உதவி மூலம் பலன் பெறும் மாணவிகள் படிப்பது தடை படும் நிலையில் இருந்தது. நம்பிக்கை உள்ளவர்கள் உதவுகின்றார்கள். நம்பிக்கை இல்லாதவர்கள் கரங்களைப் பின் இழுத்துக் கொள்கின்றார்கள். ஆனால் நம்பிக்கை வைத்து இறுதியாக முதல்வர் தனிப்பிரிவினைத் தொடர்ந்து தட்டிக் கொண்டேயிருந்தேன்.
மூன்று நாட்களுக்கு முன் ஒரு பெண் மணி அழைத்தார். உங்கள் முகவரி வேண்டும் என்றார். ஏன் என்று கேட்ட போது எல்ஆர்ஜி வகுப்பறை கட்டிடம் ஏன் திறக்கவில்லை என்பதனை கடிதமாக எழுதி அனுப்புகின்றேன் என்றார். நீங்கள் யார் என்று கேட்ட போது நாங்கள் உயர்கல்வித்துறையின் (ரேஸ்கோர்ஸ் சாலையில் ) கோவை அலுவலகம் என்றார். அதனை என் வாட்ஸ்அப் ல் கொடுங்கள் என்ற போது அவசரமாகக் கட் செய்து விட்டார். நான் அப்போதே சொன்னேன் இதனை மறுபடியும் புகாராக அளிப்பேன் என்று.
உயர்கல்வித்துறை செயலாளர் அவர்களைச் சந்திக்கச் சிலரை அனுப்பி வைத்தேன். என்ன மாயம் நடந்தது? என்று தெரியவில்லை. இந்தக் கட்டிடத்தோடு தமிழகத்தில் அனைத்து திறக்காமலிருந்த கட்டிடங்கள் திறக்கப்படுகின்றது என்ற செய்தி எனக்குக் குறுஞ்செய்தியாக வந்தது.
()()()
உங்கள் மனு எண்: TN/HIGHEDU/TPR/P/PORTAL/26JUL23/5912217 ஏற்கப்பட்டது. முதலமைச்சரின் உதவிமைய செயலியினை பதிவிறக்க :https://zurl.to/cmhelpline - தமிழ்நாடு மின் ஆளுமை முகமை.
()()()
உயர்கல்வித்துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகளில் புதிய கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்
பல்வேறு மாவட்டங்களில் ரூ.87.76 கோடி செலவில் வகுப்பறைகள், ஆய்வகங்கள், விடுதிகள் திறப்பு
()()()
அழைப்பிதழ் இல்லை. எவருக்கும் தகவல் சொல்லவும் இல்லை. விழா இல்லை. முக்கிய நபர்கள் மட்டும் கலந்து கொண்டனர். ரிப்பன் கூட வெட்டவில்லை என்று கேட்டேன். மேயர் மற்றும் தெற்கு தொகுதி சமஉ டக்கப்வார் தெரிந்தவர்களுக்குப் புரிய வாய்ப்புண்டு.
120 நாட்களாக ஏன் இவர்கள் திறக்காமல் இப்படி பிடிவாதம் பிடித்துக் கொண்டு இருந்தார்கள் என்ற கேள்விக்கு இன்று வரை எனக்குப் பதில் தெரியவில்லை.
அமைச்சர்கள் தங்கள் கட்சி சார்ந்த திறப்பு விழா சார்ந்த படங்களைத் தவிர்த்து வேறு எவரேனும் புகார் கொடுத்து இருந்தால் அதனை என் கவனத்தில் கொண்டு வா என்று தத்தமது அட்மின் களுக்கு அந்தந்த அமைச்சர் பெருமக்கள் அறிவுரை சொல்ல வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றேன்.
கண்களுக்குத் தெரியாத யாரோ சிலரால் அவர்களின் செயல்பாடுகளால் இந்த உலகம் சம ஒழுங்கைப் பேணுகின்றது என்பதனை நம்புங்கள். இதனை நண்பரிடம் சொன்ன போது அவர் பதிலாகச் சொன்ன வாசகம் எழுத்தில் எழுத முடியாதது

No comments: