Tuesday, August 08, 2023

பெரியாரின் பேரன்கள்

 சாதியை ஒழிக்க முடியுமா? என்றால் நிச்சயம் முடியாது. வெகுஜனம் சாதி வேண்டாம் என்று விலகினாலும் அரசியல்வாதிகள் அவ்வளவு எளிதாக விட்டு விடுவார்களா? இது மாரி செல்வராஜ்க்கு தெரியுமா? தெரியாதா?


பா. ரஞ்சித் முன்பு ஒரு பேட்டியில்  திமுகவில் உள்ள சாதிய வேறுபாடுகளைக் களைய உதயநிதி முயல வேண்டும் என்று தோழமை சுட்டல் மூலம் தெரிவித்த காரணம் ரெட் ஜெயண்ட் நிறுவனம் உள்ள பயம் தான்.

யார் காரணமோ? 

எது நிஜ பிரச்சனையோ? அவற்றை எல்லாம் புறங்கையால் தள்ளிவிட்டு எது தேவையில்லையோ அதையே மாரி செல்வராஜ்ம் பா.ரஞ்சித் ம் கடந்த சில வருடங்களாக தங்களின் சுயநலத்துக்காகக் கொம்பு சீவி விட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். தொடர்பே இல்லாமல் ராஜராஜசோழன் பற்றி ரஞ்சித் உளறல் ஒரு சாம்பிள். இப்போது மாரி செல்வராஜ் தேவர் மகன் பார்த்து பல நாட்கள் தூங்கவில்லை என்ற உளறல்.  

அப்பா சாமிகளா? போதுமய்யா என்று கையெடுத்து கும்மிடத் தோன்றுகின்றது.  அமைதியாக இருக்கும் குளத்தில் ஏம்பா மாறி மாறி இரண்டு பேரும் கல்லெறிஞ்சுக்கிட்டு இருக்கீங்க என்று கேட்கத் தோன்றுகிறது?

கடந்த சில வாரங்களாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் வந்த மாமன்னன் இணையத்தில் ட்ரெண்ட்டிங் ல் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது.  ஆனால் இது மாரி செல்வராஜ் விரும்பாத ட்ரெண்டிங். தான் நினைத்து எடுத்த கருத்துக்கு எதிராகத் தன் படம் வேறொரு விதமாக மாறும் என்று இயக்குநரே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்.

காரணம் புரட்சி பேசுகின்றேன் என்று சொல்லி பன்றி ஒரு பக்கம் நடிப்பே வராத உதயநிதி மறுபக்கம்.  இதற்குள் மக்களுக்குப் புரியாத குறியீடு.  

மாரி செல்வராஜ் ம் பா. ரஞ்சித் ம் தங்கள் படங்கள் மூலம் சாதியை ஒழித்து விடலாம் என்று உறுதியாக நம்புகின்றார்கள்.  ஆனால் இவர்கள் இருவரும் செய்து கொண்டிருப்பது எதிராக மாறுகின்றது என்பதனை உணர மறுக்கின்றார்கள். 

திரையரங்கில் ஓடிய இந்தப் படத்திற்குப் பெரிய வரவேற்பு இல்லை. 

அதே சமயத்தில் வணிக ரீதியில் தோல்விப் படமாகவும் அமையவில்லை.  கருத்தியல் ரீதியாகப் பெரிய விவாதத்தை ஓரளவுக்கு உருவாக்கியது. ஆனால் சமீபத்தில் ஓடிடி யில் மாமன்னன் ரீலிஸ் ஆனதும் தான் வில்லன் கதாபாத்திரமாகச் சித்திரிக்கப்பட்டுள்ள 

பகத் பாசிலை ஒவ்வொரு சாதி இளைஞர்களும் தத்தமது ஆதர்ஷண புருஷராக மாற்றிக் கொண்டு விட்டனர். 

தங்கள் சாதிப் பெருமை பேசும் பாடல்களைப் பின்னால் ஒலிக்க விட்டு  படமாகவும் காட்சியாகவும் மாற்றி ட்ரெண்ட்டிங் ல் தெறிக்க விட்டு வருகின்றது.  ஒரு குறிப்பிட்ட சாதி மட்டுமல்ல.  

ஒவ்வொரு பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒவ்வொரு இளைஞர்களும் பகத் பாசிலை தங்களுக்கு உரிய ஆளாகவே பார்க்கின்றனர்.

50 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சாதியக் கட்டுமானம் இப்போது தளர்ந்து விட்டது.  கிராமங்களில் வயதான பெரியவர்களைத் தவிர பெரும்பாலான இளைஞர்கள் தத்தமது பிழைப்புக்காக வெளி மாவட்டங்கள் தொடங்கி வெளிநாடு வரைக்கும் பரந்து பட்டு வாழ்ந்து கொண்டு இருக்கும் தற்போதைய சூழலில் சாதி தன் கோர முகத்தை படிப்படியாக இழந்து வருவதை நாம் அனைவரும் அறிவோம்.

அதாவது பொருளாதாரச் சூழல் பல மாற்றங்களை உருவாக்குகிறது.  ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தாங்கள் கற்ற  கல்வி மூலம் உன்னத நிலையை அடைந்து பரஸ்பரம் புரிதலுடன் காதலித்து திருமணம் செய்வதை இங்கே யாரும் தடுப்பதே இல்லை. சிலர் சொல்வது போலத் தூக்கி வா.. தாலி கட்டு என்பது போன்ற கொடுமையான வழிகாட்டல் தான் இரண்டு பக்கமும் பாதிப்பை உருவாக்குகின்றது என்பதனை இயக்குநர் அறிந்து இருப்பாரா?

சாதி ஒழிப்பு என்பது கட்டாயத்தில் உருவாக்குவதல்ல. அது தன்னிச்சையாக அவரவர் விருப்பத்தின் படி முடிவெடுப்பது. மற்றபடி உடம்பில் ஆறிப்போன புண்ணை கிளறிவிட்டுக் கொண்டேயிருப்பது போல ஒவ்வொரு முறையும் ரஞ்சித் ம் மாரி செல்வராஜ் ம் பிதுக்கினார்கள் ஒதுக்கினார்கள் என்ற இத்துப்போன வசனத்தை வைத்து இன்னும் எத்தனை நாளைக்கு ஒப்பேற்றப் போகின்றார்கள்? 

மதவெறியர்கள், மதத்தை வைத்துப் பிரிவினைச் செய்கின்றார்கள், 

இது செக்யூலர் கண்ட்ரி,

மதநல்லிணக்கம், 

நாங்கள் பெரியாரின் பேரன்கள் என்று உச்சரிக்கும் ஒருவர் கூடச்  சாதியை வைத்து அரசியல் செய்யும் கட்சிகளைக் கண்டு கொள்வதில்லை? இந்தக் கேள்விக்கு மாரி செல்வராஜ் ம் பா ரஞ்சித் பதில் தருவார்களா? 

 விடாது துரத்தும் ரெய்ட்டுக்கு அண்ணாமலை தான் காரணமா?

No comments: