Sunday, May 22, 2022

கற்றதும் பெற்றதும் (சொல்ல விரும்பும் நிகழ்வுகள்) மே 2022

நீங்கள் இந்திய ஏற்றுமதி, இறக்குமதி, இங்கு உள்ள துறைமுகங்கள், அந்நியச் செலவாணி, சாதகம், பாதகம் போன்றவற்றை எளிமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினால் எழுத்தாளர் ஜோ டி குரூஸ் பேசியுள்ளதைக் கேட்க கீழே உள்ள இணைப்பில் செல்லவும்.




எழுத்தாளர் ஜோ டி குரூஸ் அவர்களைப் பற்றி இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன்.

நாலைந்து வருடங்களுக்கு முன்பு கோவை விஜயா பதிப்பகம்  முதலாளி வேலாயுதம் அவர்கள் கோவையில் நடக்கும் ஒவ்வொரு புத்தக விழா, கூட்டம், நிகழ்வு போன்ற ஒவ்வொன்றுக்கும் எனக்கு அழைப்பிதழ் அனுப்பி வைப்பார்.  

பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் முடிந்த வரைக்கும் சென்று விடுவேன். என்ன பலன்? என்றால் ஒரு வெங்காயமும் இருக்காது. சுய புராணமும் வியாபார தந்திரங்களும் இருக்கும். பல முறை தவிர்த்து விடுவதுண்டு. அவர் ஒரு முறை அழைத்துப் பேசினார். அந்த முறை எழுத்தாளர் ஜோ டி குரூஸ் (@joe.dcruz.372) பாராட்டு விழா என்று அழைத்து இருந்தார்.  

அந்த விழா குறித்து இப்போது முழுமையாக எனக்கு நினைவில்லை. ஆனால் என் மனதிற்குள் ஜோ டி குரூஸ் அவர்களை நேரில் பார்த்து விட வேண்டும் என்ற ஆவல் உந்தித் தள்ள விழாவிற்குச் சென்றேன். இவர் எழுதிய “ஆழி சூழ் உலகு, கொற்கை” எனும் இரு நாவல்களில் “கொற்கை” நாவலுக்குத்தான் சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.

எப்போதும் போலப் பார்வையாளர் வரிசையிலிருந்து அன்று இவரின் பேச்சைக் கேட்டேன்.  நான் ஊரில் நண்பர்களுடன் பேசும் வட்டார வழக்கு போலவே வேறொரு விதமாக இருந்தது. கவர்வதாக இருந்தது. அருகில் சென்று பேசத் தயக்கமாக இருந்தது.  தேநீர் இடைவேளை சமயத்தில் இவர் அங்கிருந்த சிலருடன் பேசிக் கொண்டு இருந்ததை இவர் அருகிலிருந்து கேட்டேன்.  அவர் எழுத்தைப் போல அவரை காதலிக்கத் தொடங்கினேன்.  காரணம் வெள்ளந்தி என்பார்களே நிஜமாகவே அப்படியொரு ஆத்மா என்பதனை பத்து நிமிடத்தில் புரிந்து கொண்டேன்.  அப்போது கூட நெருங்கிப் பேசவில்லை.  

மகிழ்ச்சியுடன் திரும்பி வந்தேன். அதன் பிறகு சில முறை பேசியுள்ளேன். 40 வருடங்களில் எத்தனையோ எழுத்தாளர்களுடன் பேசி உள்ளேன். மறுபடியும் உயிரே போனாலும் இவர்களை பாரத்து விடக்கூடாது என்கிற அனுபவம் எல்லாம் எனக்குக் கிடைத்துள்ளது. ஆனால் மரியாதைக்குரிய ஜோ டி குரூஸ் அவர்கள் எழுத்தாளர் என்பதனைத் தாண்டி அவர் இந்தியாவைத் தேசியத்தை எந்த அளவுக்கு நேசிக்கின்றார் என்பதனையும், சொல்லுக்கும் செயலுக்கும் வித்தியாசம் இல்லாமல் இயல்பாகவே வாழ்கின்றார் என்பதனை நேரிடையாக உணர்ந்த போது எனக்கு உத்வேகம் அளிப்பதாகவே இருந்தது.

கப்பல் துறையில் முப்பது ஆண்டுகளுக்கு மேலான அனுபவம், இந்திய கப்பல் துறை முகங்கள் மட்டுமல்ல உலக அளவில் உள்ள அனைத்து விதமான கப்பல் துறை சாரந்த அனைத்து விதமான செயல்பாடுகளை விரல் நுனியில் வைத்திருப்பதைப் பார்க்கும் போது இவரைப் போன்றவர்களைத் தான் மோடி அவர்கள் கப்பல்துறை முகம் சார்ந்த அமைச்சகத்திற்குக் கொண்டு வர வேண்டும் என்று உரையாடும் ஒவ்வொரு முறையும் நினைத்துக் கொள்வதுண்டு.

நீங்கள் எந்த துறையிலிருந்தாலும் அதனை மற்ற தொடர்புள்ள துறையோடு ஒன்றிணைத்து உள்வாங்கித் தெரிந்து இருக்க வேண்டும். ஊழல் இல்லாது சுய ஒழுக்கத்தோடு நேர்மையாக பணியாற்றியிருக்க வேண்டும்.  இப்படி இவரை பல விதங்களில் உள் உணர்ந்து நான் பார்த்த போது என் பார்வையில் நூறு சதவிகிதம் பெற்றவர்.

ஆங்கிலப்புலமையோடு அழகான இயல்பான வட்டார வழக்கு தமிழோடு எழுதும் புலமையோடு மடை திறந்த வெள்ளம் போல உரையாற்றும் வல்லமை படைத்தவர்கள் என்கிற விதத்தில் எனக்கு ஆச்சரியமளித்தவர்களில் முதன்மையானவர். காவியை ஆதரிப்பதால் இவர் இழந்தது அதிகம். அதே சமயத்தில் இவர் கிறிஸ்துவத்தில் பிறந்த காரணத்தால் புறக்கணிக்கப்பட்ட சம்பவங்களும் மிக அதிகம். 

சுருக்கமாகச் சொன்னால் மத்திய அமைச்சர்கள் இவரை அழைத்து ஆலோசனை கேட்கும் அளவுக்கு இருந்தாலும் இன்னமும் இவரை மத்திய அரசு முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வில்லையோ? என்று நான் தனிப்பட்ட முறையில் வருத்தப்பட்டதுண்டு. காலம் மாறும் என்று நம்புகிறேன்.

ஏற்றுமதி, துறைமுகம் சார்ந்த விசயங்கள், உலகளாவிய பொருளாதாரம் என்பது குறித்து #கற்றுகளத்தில்இறங்கு அமர்வில் பேசினார்.

ஏற்றுமதியில் ஏறுமுகம் - நடந்தேற வேண்டிய மாற்றங்கள் /எழுத்தாளர் ஜோ டி குரூஸ் / #JothiG Joe_D CruZ

***

நான் வாழும் வாழ்க்கையில் நான் உருவாக்கிக் கொண்ட கொள்கைகளில் சமரசம் செய்து கொள்வதில்லை.  ஒரு மகள் கல்லூரி சென்ற பிறகு தான் அலைபேசி வாங்கிக் கொடுத்தேன். அதுவரை இணைய வகுப்புக்கு என் அலைபேசியைத் தான் பயன்படுத்தி வந்தார். பெரிய வண்டி ஓட்டுவதற்கு முன்பு குரங்கு பெடல் போட்டு கீழே விழுந்து சிராய்ப்புடன் கற்றுக் கொள்வது போல. தற்போது அடுத்தவரும் என் அலைபேசியைப் பயன்படுத்தி வருவதால் எந்த நண்பர்களையும் தொடர்பு கொள்ள முடிவதில்லை. அவர்கள் அழைத்தாலும் பேச முடியாத சூழல். இது இன்னமும் 100 நாட்களுக்குத் தொடரும். நண்பர்கள் மன்னிக்க வேண்டுகிறேன்.

***

அலைபேசி விசயத்தில் இந்த அளவுக்குச் சர்வாதிகாரமாக இருக்கக் காரணம் தினமும் நீங்கள் செய்தித்தாள்களில் பார்க்கும் அனைத்துக் குற்றங்களுக்கும் இரண்டே காரணம் 1. டாஸ்மாக். 2. அலைபேசி.

***

என் நண்பர்கள் பலரும் பத்தாம் வகுப்பு படிக்கும் போது மகளுக்கு மகனுக்கு அலைபேசி வாங்கிக் கொடுத்து, 12 ஆம் வகுப்பில் கற்றதும் பெற்றதும் என்று பலவற்றை என்னுடன் பகிர்ந்து உள்ளனர். நாம் தான் நம் குழந்தைகளுக்கு ஆசிரியர். கடவுள். வழிகாட்டி.  நான் அதில் சமரசம் செய்யவே மாட்டேன்.

***

பதின்ம வயது என்பதை டீன் ஏஜ் என்கிறார்கள். 13 வயது முதல் 19 வயது வரைக்கும் உங்கள் குழந்தைகளுக்கு உண்மையான சமூகத்தை அடையாளம் காட்டாத பட்சத்தில் அதன் விளைவுகள் 21 வயதுக்கு மேல் உங்களைத் தாக்கும்.  உங்களின் கடந்த கால வாழ்க்கை, நீங்கள் கடந்து வந்த பாதை, உங்கள் தாய் தகப்பன் குறித்த அடிப்படை விசயங்கள் போன்றவற்றைச் சொல்லி உணர வைத்து விடுங்கள். தற்கால நடைமுறையில் அவர்கள் எப்படி தங்களைப் பொருத்திக் கொள்ள வேண்டும் என்பதனை அவர்களே முடிவு செய்து கொள்வார்கள்.  நீங்கள் தலையிடத் தேவையில்லை. மீறி நீங்கள் உள்ளே நுழைந்தால் தலைமுறை இடைவெளி என்பது உங்களுக்குத் தூக்கமில்லா இரவுகளையே பரிசாகத் தரும். 

***

50 வயதுக்கு மேல் உடல் உறுப்புகள் அடம் பிடிக்கத் தொடங்கும்.  

60 வயது தொடங்கினால் உங்கள் வாயை முக்கால்வாசி நேரம் மூடிக் கொண்டு இரண்டு காதை மட்டும் திறந்து வைத்திருங்கள்.  

உங்கள் நண்பர்களின் அரசியல் கொள்கை என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.  

உங்கள் நட்பு விரிசல் இல்லாமல் இருக்க உரையாடத் தெரிந்தால் மிகுந்த நாகரிகத்துடன் உரையாடுங்கள். 

இல்லை நான் வெறுப்பில் நின்றே பேசுவேன் என்றால் நீங்கள் இறக்கும் வரை அனாதை தான். படிப்படியாக ஒவ்வொருவரும் ஒதுங்கவே விரும்புவார்கள்.

***

நெருங்கிய நண்பர் "என்ன மகளைக் கிறிஸ்துவ கல்லூரியில் சேர்த்து விட்டு இருக்கிறீர்கள்? நீங்கள் ஆதரிக்கும் கட்சிக்கு ஆகாத மதம் அல்லவா" என்று புத்திசாலித்தனமாக பேசுவதாக நினைத்துக் கொண்டு கேட்டார்.  நான் மகளிடம் சொன்னதை அவரிடம் சொன்னேன்.  

ஒரு கல்வி நிறுவனம் என்பது அறக்கட்டளை வழியே நிர்வாகம் நடத்த வேண்டும்.  

குறைந்த பட்சம் மூன்று தலைமுறைகளுக்கு மேலாக இருக்க வேண்டும். 

நிறுவனம் எந்த மத பின்புலத்திலிருந்தாலும் கல்வி கற்றுக் கொடுக்கும் விசயத்தில் அதனை மாணவர்களிடம் வெளிப்படுத்தக்கூடாது. 

பல மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 

அனைத்து கலாச்சாரமும் உள்ளே இருக்க வேண்டும்.  

மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும். 

தங்குமிடம் இயற்கை சூழலில் இருக்க வேண்டும். 

இவையெல்லாம் யார் வழங்குகின்றார்கள் என்பது தான் முக்கியம். அவர்கள் என்ன மதம் என்பது முக்கியமல்ல. 

இதைத்தான் மகளிடம் வேறு விதமாகச் சொல்லி வைத்திருந்தேன். "எந்த இடத்திலும் இதுவரை தலை வணங்காமல் வந்து விட்டேன். கல்லூரிச்சேர்க்கையின் போது யாரையும் பார்த்துத் தான் சேர வேண்டும் என்ற சூழலை உருவாக்கி விடாதே" என்றேன். 97.6 சதவிகிதம் எடுத்த காரணத்தால் தேர்வு பட்டியலில் மூன்றாவது நிலையிலிருந்தார். 

இதை இங்கே விரிவாக எழுதக் காரணம் கடந்த சில வருடங்களாக நான் தற்போது இருக்கும்  கொங்கு மண்டலம் மட்டுமல்ல. தமிழகத்தில் உள்ள அனைத்து கலைக் கல்லூரிகளும் புனிதமான சில காரியங்களைச் செய்து வருகின்றார்கள்.  தரகர் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களை மூளைச் சலவை செய்வது போலப் பேசி பெற்றோர்களைச் சம்மதிக்க வைத்து ஒரு மாணவருக்கு ஒரு லட்சம் என்பதாக முன் தொகை வாங்கி வைத்துக் கொள்கின்றார்கள். பரிட்சை நடக்காத போதும், மதிப்பெண் பட்டியல் வராத போதும், எத்தனை மதிப்பெண்கள் வாங்குவோம் என்று தெரியாத நிலை என்ற போதும் தனியார் கல்வி நிறுவனங்கள் நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் என்று வாங்கி கல்லா கட்டுகின்றார்கள்.

***

கல்லூரியில் முதல் ஆண்டு பயிலும் மகளிடம் 

"இரண்டு வருடங்கள் உன் சந்தோஷங்களை, மகிழ்ச்சியை எடுத்துக் கொள்.  எந்த தொந்தரவும் செய்ய மாட்டேன். உன் விருப்பங்களை நிறைவேற்றுவேன்.  மூன்றாவது வருடம் என் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட வேண்டும்.  நீ அடுத்துச் செல்ல வேண்டிய பாதைக்கு உன் சிந்தனைகளை மாற்ற வேண்டும்" என்று சொல்லியுள்ளேன்.

***

அடுத்த வருடம் மற்றொரு மகள் கல்லூரி செல்ல இருக்கின்றார். அவருக்கும் இதையே தான் சொல்லி உள்ளேன்.  

கல்லூரி செல்வதற்கு முன் உங்கள் மகன் மகளிடம் நிஜமான சமூகத்தின் அனைத்து கூறுகளையும் அறிமுகம் செய்து வைக்கவும். முடிந்தவரை நிறையப் பேசுங்கள்.  கவனச் சிதறல் அதிகம் உள்ள குழந்தைகள் என்ற நிலையில் பெற்றோர்கள் ஒவ்வொருவரும் அதிக கவனம் செலுத்தியே ஆக வேண்டும் என்ற சூழலில் தான் நாம் வாழ்ந்து கொண்டு வருகின்றோம். குழந்தைகளைக் குறையாகச் சொல்லத் தேவையில்லை. எப்போதும் போல நல்லதும் கெட்டதும் உள்ள சமூகச் சூழல் இப்போது அதிக கெட்டதிற்குள் ஒளிந்து இருக்கும் நல்லதை அடையாளம் காண்பது எப்படி? என்பதனை அவர்களுக்கு நீங்கள் தான் கற்றுக் கொடுக்க முடியும்.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எங்கள் மகளுக்கு : தெரியாமல் இருந்தால் கூட நினைக்கும் செயலில் முயற்சியை விடாதே, தெரிந்து செயல்வகை-களை அறியலாம்....

அதன்பின் தெளிவு பிறக்கும்... தெரிந்து தெளிதல்-களை உணரலாம்...

பிறகென்ன...? தெரிந்து வினையாடலை விளையாடலாம்...!

மேற்சொன்னவை பத்தாம் வகுப்பு வரை...!

வினை - தூய்மை, திட்பம், செயல்வகை என கல்லூரி வாழ்க்கை முடியும் நிலையில் உள்ளது...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பதிவினை முழுமையாக லயித்துப் படித்தேன். கடைசிப்பத்தியில் கூறப்பட்டுள்ளவற்றை, எங்கள் மகன்களை வளர்க்கும்போது நாங்கள் கடைபிடித்தோம். அவ்வாறாக பெற்றோர் இடுகின்ற அடித்தளமானது பிள்ளைகளை சரியான பாதைக்கு இட்டுச்செல்லும் என்பதை அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்.

ஜோதிஜி said...

Good

ஜோதிஜி said...

Thanks 🙏🏾

ஸ்ரீராம். said...

எழுத்தாளர் பற்றி தெரிந்து கொண்டது சந்தோஷம்.  மகளுக்கு அலைபேசி எந் என்றதில் தரவேண்டுமோ அந்த என்றதில் தந்தது, கல்லூரி  உள்ளிட்ட விஷயங்களும் சுவையாகத் தந்திருக்கிறீர்கள்.

வெங்கட் நாகராஜ் said...

பகிர்ந்து கொண்ட தகவல்கள், விஷயங்கள் அனைத்தும் சிறப்பு. மகள்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.