Friday, May 27, 2022

11 மாத உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்

வணக்கம் நண்பர்களே

எனக்கும் தொழில் நுட்ப விசயங்களுக்கும் சற்று தொலைவு அதிகம் தான். நான் கற்றுக் கொள்ள விரும்பியதும் இல்லை. கற்றுக் கொள்ளாத காரணத்தால் ஏகப்பட்ட இடைஞ்சல் வந்த போதிலும் பொருட்படுத்திக் கொண்டதில்லை. மகள்கள் உதவுகின்றார்கள்.எப்போதும் போல என் சிந்தனைத் திறனை மேம்படுத்தவே விழைகின்றேன். முழுமையான உழைப்பை அளிக்கவே விரும்புகின்றேன். கடந்த 14 வருடங்களில் எழுத்துலகில் இருக்கின்றேன். இதனைக் காசாக மாற்ற வேண்டும் என்று நினைத்தது இல்லை. மற்றவர்களின் அறிவை வளர்க்க நம்மால் முடிந்த உதவி என்பதாகக் கருதி உள்ளேன். 

அமேசான் கிண்டில் மூலம் வந்த, வந்து கொண்டு இருக்கின்ற சுமாரான பணம் முதல் தனிப்பட்ட சேமிப்பு இது தவிர பல நண்பர்களிடம் கூச்சப்படாமல் கேட்டு வாங்கிய பணத்தைக் கடந்த இரண்டு வருடங்களில் கல்வி ரீதியாகப் பல அரசுப் பள்ளி மாணவிகளுக்கு, அவர்களின் வாழ்க்கைக்கு செலவழித்து உள்ளேன். என்னை நம்பி பல நண்பர்கள் கொடுத்தார்கள். அதிகமாகப் பேசுகின்ற நண்பர்கள் ஒதுங்கினார்கள். நான் எவரையும் கட்டாயப்படுத்தவில்லை.

எந்த இடத்திலும் எவரும் என்னைப் போல விளம்பரம் தேடிக் கொள்ள விரும்பவில்லை என்பது கூடுதல் சிறப்பு.

புதிய அனுபவம் புதிய முயற்சி 

( ரசிகர் மன்றத் தலைவனாக இருந்த ஒரு கோமாளியை தமிழக கல்வித்துறைக்கு அமைச்சராகப் போட்டு என்ன சாதித்து உள்ளோம் தெரியுமா? 7.5 சதவிகிதம் மூலம் அரசு பள்ளிக்கூட மாணவர்கள் 2022 ஆம் ஆண்டு 400 பேர்கள் என்கிற ரீதியில் மருத்துவக் கல்லூரிக்குச் சென்று உள்ளனர்.  மகத்தான சாதனையிது.  கெடுக்க வேண்டும் என்பதற்காகவே அரசு பள்ளியில் நீட் பயிற்சி அளித்த சிஸ்டத்தை நிறுத்தி விட்டார்கள். அடுத்த வருடமும் வழங்க மாட்டோம் என்று சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பும் கொடுத்து விட்டார்கள். நாங்கள் இந்த வருடம் 48 அரசு பள்ளி மாணவிகளுக்கு பெருந்தொகை மூலம் பயிற்சியை முதல் ஆண்டாக தொடங்கி உள்ளோம்.

நவீன தொழில் நுட்பங்கள் ஒவ்வொன்றையும் சமூக வளர்ச்சிக்காகவே பயன்படுத்தி வருகின்றேன்.  மகள்கள் பலமுறை நீங்க எல்லாம் மொகஞ்சதாரோ காலத்தில் பிறந்து இருக்க வேண்டிய ஜென்மங்கள் என்று அன்போடு பாராட்டு மழை பொழிவார்கள்.

வாட்ஸ் அப் என்ற செயலியை அலுவலகத்தில் பலரின் மிரட்டலுக்குப் பிறகு தான் பயன்படுத்தவே தொடங்கினேன்.  பேஸ்புக் என்பதும் கடந்த சில ஆண்டுகளாகத்தான் பயன்படுத்தி வருகின்றேன். கடைசியாக ட்விட்டர் தளத்திற்குச் சென்றேன்.  ஆனால் எல்லா தளத்திலும் 15 ஆண்டுகளாகக் கணக்கு மட்டும் திறந்து வைத்து இருந்தேன்.  ஆனால் வலைபதிவில் மட்டும் விடாமல் செயல்பட்டு வந்தேன். வாசிப்பவர்கள் மிரண்டு போகும் அளவிற்கு எழுதிக் குவித்துள்ளேன்.

யூ டியூப் என்பது 6 ஆண்டுகளுக்கு முன் தான் முழுமையாக அறிமுகம் ஆனது.  தொடக்கத்தில் பேச்சாளர்கள் பேசக்கூடிய பேச்சைக் கேட்க மட்டும் பயன்படுத்தி வந்தேன். ஒரு மணி நேரம் பேச்சு அதற்கு மேல் என்று பல நிலைகளில் ஆக்கப் பூர்வமான பேச்சுகளை மட்டுமே தேர்ந்தெடுத்துக் கேட்டு வந்தேன். எந்த தொழில் நுட்பத்தையும் பொழுது போக்க என்கிற ரீதியில் நான் பயன்படுத்துவதே இல்லை.  

மகள்கள் வளர்ந்து விட்ட காரணத்தால் அவர்கள் வழிகாட்டியாக மாறிய பின்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக யூ டியூப் ல் அதிகமான பாடல்களையும் கேட்டு வருகின்றேன்.  காரணம் கடந்த மூன்று ஆண்டுகளாக நாங்கள் தொலைக்காட்சி பெட்டியை மூடி வைத்துள்ளோம். 

இதை இந்த சமயத்தில் எழுதக் காரணம்  Joined 26 Oct 2007  இந்த நாளில் ஜோ பேச்சு என்ற யூ டியூப் கணக்கு இருந்தாலும் கடந்த இரண்டு வருடங்களாக இதில் செயல்பட்டு வந்தேன். எப்போதும் போலக் கூட்டத்தை அதிகம் சேர்க்கவில்லை. பொறுமை உள்ளவர்களுக்கு இந்த தளத்தில் சமூகவியல் பொக்கிஷம் உள்ளது.

ஜூன் மாதம் எனக்கு முக்கியமானது.  14 ஆண்டுகளுக்கு முன் இதே போல ஒரு ஜூன் மாதத்தில் தான் முதல் முறையாக வேர்ட்ப்ரஸ் ல் கணக்கு தொடங்கி எழுதத் தொடங்கினேன்.  அதே 2021 ஜூன் மாதம் 20ந் தேதி அன்று வெவ்வேறு நாடுகள், வெவ்வேறு மாவட்டங்களில் உள்ள நண்பர்களுடன் பேசி கற்றுக்கொள் களத்தில் இறங்கு என்றொரு அமைப்பை உருவாக்கினோம்.

மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் புதிய பாராளுமன்றக் கட்டிடம் என்பது மோடி வீடு என்பதாக உளறி டூவிட் செய்து இருப்பதைப் பார்த்து அது குறித்து ஜும் செயலில் ஜூன் மாதம் 2021 முதல் வாரத்தில் முதல் முறையாக பொதுக்கூட்டம் போலப் பேசினேன். 

துரதிருஷ்டவசமாக யாரும் அதனைப் பதிவு செய்யவில்லை. பிறகு வருத்தப்பட்டோம்.  கேட்ட அத்தனை பேர்களுக்கும் பாராட்டினார்கள். அதனைப் பேசி பதிவு செய்யுங்கள். ஒரு யூ டியூப் சேனல் தொடங்கலாம் என்று நண்பர்கள் ஆலோசனை சொன்னார்கள்.

கற்று களத்தில் இறங்கு என்ற தளம் இப்படித்தான் உருவானது.  

சங்கர், ராமச்சந்திரன் இருவரும் வெளிநாடுகளிலிருந்த போதிலும் கூட ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் என்னுடன் ஒத்துழைத்துச் செயல்பட்டனர். இன்று வரையிலும் பலவிதங்களில் வழிகாட்டியாக உள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் என்பது இந்த தளத்தில் மிக மிக அன்னியோன்னியத்தை உருவாக்க அங்கேயிருந்து பல நண்பர்கள் தொடக்கத்தில் பல விதங்களில் உதவினார்கள். 

பேச்சாளர்களில் பெரும்பான்மையாக திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக அமைந்த ஆச்சரியம் இன்று வரையிலும் புரியாத புதிராகவே உள்ளது.

வாரம் ஒருவர் பேசினார். நானும் பேசி உள்ளேன். நண்பர்கள் பேசினார்கள். பெரிய கூட்டம் இல்லாத போதும் நாகரிகமான பார்வையாளர்கள் கிடைத்துக் கொண்டே வந்தார்கள். முக்கியமான நபர்கள், ஆளுமைகளின் பார்வைக்கும் சென்றது. அதே அளவுக்கு எதிரிகளும் கிடைத்தார்கள். அவ்வப்போது மனநோயாளிகளும் வந்து வந்து என்னை ஆசீர்வாதம் செய்து வாழ்த்தியது எனக்குக் கிடைத்த பெரும் பேறாக கருதுகின்றேன்.

என் ஓட்டத்திற்கு, உழைப்பிற்குப் பலரால் பின் தொடர்ந்து வர முடியவில்லை. ஒவ்வொருவரின் ஏச்சுக்களை, பேச்சுக்களை, விமர்சனங்களை, நக்கல்களை, நையாண்டிகளைக் கேட்டுக் கொண்டு இருக்க எனக்கு நேரமில்லை.  அடுத்த வேலை இருந்த காரணத்தால் என் கடன் பணி செய்து கிடப்பதே என்று தொடர்ந்து செயல்பட்டு வந்தேன்.

இன்று யூ டியுப் ல் இந்த இந்தக் கடிதம் வந்துள்ளது.

Congratulations -- your YouTube channel, கற்று களத்தில் இறங்கு, has been accepted into the YouTube Partner Program and is now able to monetize on YouTube!

Welcome to YouTube Partner Program!

Congratulations! You have been accepted into the YouTube Partner Program! You can now monetize your channel and contact support.

May 27, 2022, 2:34 PM

அடுத்த மாதம் தான் இந்த கணக்கு தொடங்கி ஒரு வருடம் முடியப் போகின்றது. 50 000 பேர்களுக்குச் சென்று சேர்ந்துள்ளது.

நல்லது கெட்டது என் அனைத்தையும் நான் இங்கே எழுதி வைத்து விடுவது என் பழக்கம். இதை இங்கே எழுதுவதற்குக் காரணம் விமர்சனம் செய்பவர்கள் செய்து கொண்டே தான் இருப்பார்கள். ஆதாயம் எதிர்பார்த்துக் கிடைக்காத பட்சத்தில் இனி ஏன் நாம் உழைக்க வேண்டும்? என்று எண்ணக்கூடியவர்களும் காலப் போக்கில் ஒதுங்கி விடுகின்றார்கள்.

நன்றாக யோசித்துப் பாருங்கள். நீங்கள் யூ டியூப் உள்ளே சென்றால் எங்கு பார்த்தாலும் சினிமா சினிமா சினிமா என்று இது சார்ந்த காட்சிகள் தான் கொட்டிக் கிடக்கின்றது.  மற்றொரு புறம் அரசியல். இரண்டுக்கும் நடுவே தான் உங்களுக்கு உங்கள் மகன் மகளுக்குத் தேவையான ஏதோ ஒன்றைக் கண்டு பிடிக்க வேண்டியதாக உள்ளது.

இதில் நான் செய்தது ஆவணப்படுத்துகின்ற வேலை.  யார் ஆதரவு அளிப்பார்கள்? என்று நான் அச்சப்படவே இல்லை. என்னால் முடிந்தது. தினசரி வேலைகளில் இதையும் ஒரு வேலையாகவே வைத்துக் கொண்டு செயல்பட்டேன். செயல்படுகின்றேன். செயல்படுவேன்.

மீண்டும் சொல்கிறேன்.

என் பேரன் பேத்திகள் தமிழக மண்ணில் வந்து சேரும் நேரத்தில், தவழ்ந்து விளையாடும் நேரத்தில், எல்லாவிதமான உழைப்பும், பாரம்பரியமும் கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்த தமிழினத்தை தங்கள் சுயலாபத்திற்காகக் குடி நோயாளிகளாக மாற்றிய கயவர்களை அதிகாரம் இன்றி அடக்கம் செய்யும் நாள் வரைக்கும் இது போல ஏதோவொரு வகையில் செயல்பட்டுக் கொண்டு இருக்கவே விரும்புகின்றேன்.

#KKI #Katru_Kalathil_Iranku

9 comments:

Thavalai said...

டாலர் தேசம் காலத்திலிருந்து உங்களோடு பயணிக்கிறேன்

திண்டுக்கல் தனபாலன் said...

இந்த நோய்க்கு அவரவர் மனமே மருந்து... வெங்கோலனின் *அடிவருடி" ஆவதும் அதே போல் தீர்வு உண்டு என்றாலும்...

நன்றே தரினும்

மன்னிக்கவும்... பலமுறை தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு குறள் சொல்வது வீண்... நன்றி...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உங்களின் முயற்சியும், துணிவும் போற்றத்தக்கது. உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து வருபவர்களில் நானும் ஒருவன். சமூகப்பிரக்ஞை உள்ள உங்களின் பேச்சும், எழுத்தும் இச்சமுதாயத்திற்குப் பெரும் பங்களிப்பு. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள் ஜோதிஜி.

ஜோதிஜி said...

மிக்க நன்றி வெங்கட்

ஜோதிஜி said...

மிக்க நன்றி அய்யா

ஜோதிஜி said...

டாலர் நகரம். நன்றி

ஜோதிஜி said...

வாழ்த்துகள்.

ஜோதிஜி said...

வாழ்த்துகள்.