Wednesday, January 27, 2021

சசிகலா என்ற தியாகி

சசிகலா என்ற தியாகி 27 ஜனவரி 2021 சிறையிலிருந்து வெளியே வந்து உள்ளார்.

இந்திய நீதிமன்றங்களில் உள்ள ஆள் பற்றாக்குறையும், தேங்கியிருக்கும் பல லட்ச வழக்குகளும், தீர்ப்பில் உள்ள பாரபட்சமும் உச்சத்தை எட்டியுள்ள இப்போதைய காலகட்டத்தில் அடுத்த நம்பிக்கை ஊடகங்கள். 


ஆனால் நாங்கள் விளம்பரத்திற்கிடையே செய்தி என்ற பெயரில் துணுக்குகளை கோர்த்து தருவோம். மக்கள் பிரச்சனை சார்ந்த விசயங்கள் இதில் இருக்காது என்ற அவர்களின் கோட்பாடுகளை உணர்ந்த மக்கள் அதனை புறக்கணித்து தொலைக்காட்சிக்கு வந்த போது அங்கே ஏர்வாடி கும்பல்கள் கத்துவதைப் பார்த்து சீரியல்கள் போதும் என்று தமிழக குடும்பங்கள் தங்களை காப்பாற்றிக் கொண்டு வருகின்றார்கள்.

கடந்த சில நாட்களாக சசிகலா குறித்த செய்திகளும், அதற்கு தொலைக்காட்சிகள் கொடுக்கும் முன்னுரிமைகளையும் பார்க்கும் போது ஜனநாயகத்தில் உள்ள செல்லரித்த தூண்கள் எப்போது மொத்தமாக இடிந்து விழும் என்றே நினைக்கத் தோன்றுகின்றது.

மக்களாட்சி என்ற பெயரில் நடக்கும் ஒவ்வொரு கூத்துக்களையும் நீங்கள் தொடர்ந்து கவனிக்கும் போது உங்கள் இதயத்துடிப்பு எகிறும். ஆனால் இவர்கள் விளையாடும் விளையாட்டுகளை சுவராசியமாக ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தி பார்த்து அடுத்த காய் எங்கே நகரும்? யார் நகர்த்துவார்கள்? நகர்த்தலுக்கு பேசப்பட்ட பேரம் என்ன? என்பதனை இடையிடையே கூர்ந்து கவனிப்பதுண்டு. 

இடையிடையே தாங்கள் விரும்பும் நபர்களை, கட்சிகளை கோர்த்து பேசும் அதி மேதாவிகளை இனம் கண்டு கொள்வதுண்டு. 

சசிகலா வந்தால் தமிழக வரைபடமே மாறும் என்பவர்கள் இன்னமும் தினகரன்,  சசிகலா மேல் உள்ள பெரா வழக்குகள் குறித்து அறியாமலா இருப்பார்கள்?

ரஜினி நகர்ந்த இடத்தில் சிறிது காலம் சசிகலா. 

இனி உயிரைக் காப்பாற்றிக் கொள்வாரா? சேர்த்துள்ள சொத்துகளை விட்டு விட மனசு வருமா?  மீண்டும் சிறைச்சாலை என்றால் அவர் மனம் உடல் தாங்குமா?

சசிகலாவை வைத்து, எடப்பாடி தோற்க வேண்டும் என்பதனை நேரிடையாக சொல்ல பயந்து கொண்டு கலைஞர் ஆளுமை இப்போது கட்சிக்குள் வந்து விட்டது என்று உளறுபவர்களைப் பார்த்து உரக்கச் சிரித்துக் கொள்வதுண்டு. 

அட நன்னாரிப்பயல்களா? எப்பேர்ப்பட்ட திறமைசாலிக்கு இப்பேர்ப்பட்ட வாரிசுகள் என்று நொந்து  பார்க்கும் பார்வைகள் பேசுபவர்களுக்கு தெரியவா போகின்றது.  வாங்கிய காசுக்கு ஒரு கூவு.  வரப்போகும் காசுக்கு மற்றொரு கூவு.

காட்சி ஒன்று.

சசிகலாவின் தண்டனைக் காலம் சில தினங்களில் முடியப் போகின்றது. 27ந் தேதி வெளியே வந்து விடுவார் என்று தோன்றுகின்றது. இன்னமும் உறுதியில்லை. மாறுதல்கள் உருவாக வாய்ப்புண்டு. அது குறைவு தான். இந்த  சமயத்தில் சிறைத்துறையின் நடைமுறையின் படி பல பேப்பர்களின் கையெழுத்திட வேண்டும். அது தான் நேற்று வரைக்கும் நடந்து கொண்டிருந்தது.

காட்சி இரண்டு.

இப்போது பெங்களூரில் அதிக குளிர். இன்று காலையில் சசிகலாவிற்கு எப்போதும் போல சளித் தொந்தரவு. சிறையில் மருத்துவர் உண்டு. ஆனால் என்ன காரணமோ வெளியே அழைத்து வரப்படுகின்றார்.  கொரோனா பயமாக மாற்றப்படுகின்றது. வரும் போது இயல்பாக நடந்து வருகின்றார். 

காட்சி மூன்று.

வெளியே வந்தவர் திடீரென்று பரபரப்பு கூடி சக்கர நாற்காலியில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் காட்சியாக மாறுகின்றது. மருத்துவ அறிக்கைகள் தொடர்ந்து பேசுகின்றது.

எந்தவொரு ஆட்டத்திலும் துருப்புச்சீட்டு முக்கியம். அதனை பாதுகாத்து வைத்திருப்பார்கள். இருக்கிறதா? இல்லையா? என்று குழப்பத்தில் வைத்திருப்பார்கள். வெட்டுப்படுமா? பயன்படுத்தப்படுமா? சூழல் பொறுத்து மாறும்?

தினகரன் தியாகத் தலைவி சின்னம்மா என்கிறார்.  திவாகரன் கொல்ல சதி நடக்கின்றது என்கிறார் (இவருடன் சசிகலா பேச்சு வார்த்தையை நிறுத்தி பல மாதங்கள் ஆகிவிட்டது.  இருவருக்கும் எப்போதும் ஆகாது).

என்ன சாதித்தார்? என்ன செய்தார்? என்ன நடந்தது? ஏன் சிறைக்குச் சென்றார்? என்பது போன்ற விவாதங்கள் இனி இங்கே தேவையில்லை என்றே முடிவு செய்து விட்டார்கள். 

ஊடகங்கள் காட்டும் முனைப்புகளைப் பார்க்கும் மும்பையில் விபச்சாரத் தெரு என்றொரு பகுதியில் நடந்து சென்ற போது இருபது வருடங்களுக்கு முன்னால் பார்த்த காட்சி இப்போது என் நினைவுக்கு வந்து போகின்றது.  

தெரு முழுக்க பெண்கள் ஒவ்வொருவரும் வாசலில் நின்று கொண்டு அழகியாக காட்டிக் கொண்டிருப்பார்கள். ஊடகங்களில் சசிகலா குறித்து பேசுபவர்களின் ஒவ்வொரு முகத்தையும் நான்  பார்த்த அந்த அழகிகள் முகமாக மாற்றிக் கொள்கிறேன்.

7 comments:

ஸ்ரீராம். said...

கண்ராவி அரசியல்!

Rathnavel Natarajan said...

அருமை

Unknown said...

Admk ops eps winning zone. Sasi in but not possible win.

மெய்ப்பொருள் said...

அரசியல் இவ்வளவு மோசமாக இருப்பதற்கு ஊடகமும்
ஒரு காரணம் . சுதந்தர போராட்டத்தின் போது
பத்திரிகைகள் பெரிய பங்கு வகித்தன . காந்தி ,நேரு ,
பாரதி போன்றவர்கள் பத்திரிகை மூலமே பொதுமக்களை
தூண்டி எழுப்பினார்கள் .

பத்திரிகையில் வந்து விட்டது என்றால் உண்மை என்று
நம்பினார்கள் . ஆட்சியாளர்கள் பெரிய அளவில் தப்பு
செய்யவும் பயந்து கொண்டிருந்தார்கள் .

ஆட்சி செய்பவர் முதலில் செய்ய வேண்டியது
அவற்றை விலைக்கு வாங்குவது - பிறகு ரொட்டி
துண்டிற்கு வாலை ஆட்ட வைத்து விடலாம் .
பயமுறுத்த வேண்டிய தேவை இல்லை .

அப்புறம் நிருபரை பேட்டி என்ற பெயரில்
இந்திரன் சந்திரன் என்று புகழ்ந்து எழுத வைக்கலாம் .
ஊடகங்கள் மீது உள்ள நம்பிக்கை போய் விட்டால்
ஆட்சி செய்பவர்கள் தான் நினைத்ததை செய்யலாம் .


KILLERGEE Devakottai said...

//ஊடகங்களில் சசிகலா குறித்து பேசுபவர்களின் ஒவ்வொரு முகத்தையும் நான் பார்த்த அந்த அழகிகள் முகமாக மாற்றிக் கொள்கிறேன்//

செருப்பை பன்றியின் சாணியில் முக்கி அடித்து இருக்கிறீர்கள்

நல்லவேளை நான் ஊடகவியலராக பணி செய்யவில்லை தப்பித்தேன்.

'பரிவை' சே.குமார் said...

வீணாப்போன அரசியல் அண்ணா...
தெய்வத்தாய்... தியாகத் தலைவி என்பதெல்லாம் கேட்கும் போது கேவலமாக இருக்கிறது.
என்ன தியாகம் செய்தார்..? யாருக்காகச் செய்தார்...?
எடப்பாடி எட்டி நின்றால் மீண்டும் அவரே முதல்வர்...
ஸ்டாலின் சட்டையைக் கிழிச்சிக்க வேண்டியதுதான்... சசிகலாவை வைத்து அரசியல் நடத்த நினைப்பவர்களும் பத்திரிக்கை நடத்த நினைப்பவர்களும் நினைப்பது நடக்கப் போவதில்லை என்பதே உண்மை...

subramanian said...

பெண்ணின் தலையில் திமுக கலரில் ஸ்டாலின் படம் போட்ட தொப்பி.
மடியில் தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசு பை .
இந்த படம் ஒன்றே போதும் தமிழ்நாட்டின் இப்போதைய
பரிதாப நிலையை எடுத்து காட்ட .