Sunday, December 27, 2020

மனைவி என்பவள் தெய்வமாகலாம்.

இங்கு அனைவரும் குடும்ப வாழ்க்கை வாழத் தான் செய்கின்றார்கள். எத்தனை பேர்கள் அழகான குடும்ப வாழ்க்கை வாழ்கின்றார்கள் என்று பட்டியலிட்டால் இரண்டு கை விரல்கள் எண்ணிக்கைக்குள் அடக்கி விடலாம். 

எனக்குத் தெரிந்த ஒருவர் தன் மனைவியுடன் 19 வருடங்களாகப் பேசிக் கொள்வதில்லை. இருவரும் ஒரே வீட்டில் வசிக்கின்றார்கள். மகள் மகனுக்குத் திருமணம் ஆகி விட்டது. மனைவி சமைத்து வைத்து விடுவார். இவர் பணத்தை டப்பாவில் வைத்து விடுவார். இன்னமும் மாறவில்லை.  அவரவர் தரப்பில் பல காரணங்கள் சொல்லப்படுகின்றது. இதுவொரு உதாரணம். 

இதே போல இங்கே குடும்ப வாழ்க்கை என்பது கட்டாயத்தின் அடிப்படையில் வாழ்வது போலவே பலருக்கும் உள்ளது. இந்திய கலாச்சாரம், புனிதம் போன்ற அனைத்தும் கட்டுடைக்கப்பட்டு விட்டது. வெளியே தெரிவது கொஞ்சம். உள்ளே புழுங்குவது அதிகம்.

பொருந்தாக் காதல், வயதுக்கு மீறிய காதல், வயதுக்குத் தொடர்பில்லாத காதல், காமத்திற்காகக் காதல், கௌரவத்திற்காகக் காதல், வயதாகியும் ஈகோ, விட முடியாத அதிகார மனப்பான்மை, அசிங்க எண்ணங்கள், புரிதலற்ற உளறல்கள், தலைமுறைகள் வளர்ந்தும் தங்களை மாற்றிக் கொள்ளாமல் தறி கெட்டும் வாழும் வாழ்க்கை என்று ஒவ்வொரு குடும்பத்திற்குள் ஓராயிரம் காரணங்கள் உண்டு. ஒவ்வொரு காரணத்திற்குள்ளும் காமத்தில் உள்ள அத்தனை மூலக்கூறுகளும் இங்கே உள்ளது.  தகுதிக்கு மீறிய ஆசைகள் உண்டு. உழைப்பில்லாமல் உயர்ந்து விடும் நோக்கமுண்டு. பொறாமையே முக்கிய குணமாகக் கொண்டு வாழ்பவர்களும் உண்டு.

இது தான் தொடக்கம் என்று உறுதியாக சொல்ல முடியாத அளவிற்கு இன்றைய சூழலில் ஒவ்வொரு சந்தர்ப்பங்களும் மனிதர்களை மாற்றுகின்றது. உருவாகும் வெவ்வேறு சூழல்கள் அவர்களின் வாழ்க்கையை சின்னாபின்னமாக்குகிறது.. இதுவே பத்திரிக்கைகளுக்கு செய்தியாகவும் இறுதியில் வந்து விடுகின்றது. யூ டியூப் வரையிலும் உள்ள அனைத்து விதமான சமூக வலைதளங்களிலும் மேலே எழுதிய பட்டியலையிட்டு தேடிப் பாருங்கள். 

பல லட்சம் பார்வையாளர்கள் முழுமையாகப் பார்த்திருப்பார்கள். 

இது போன்ற தலைப்புகள் சமூக வலைதள மக்கள் விரும்புகின்றார்கள். (இதன் காரணமாகவே 100 பேர்கள் பார்த்தாலே போதுமானது. இயல்பான வாழ்க்கைச் சூழலை, நடந்த நடக்கும் நிஜ கால வாழ்க்கையை பதிவு செய்ய எனக்கு எண்ணம் உருவானது) 

அலைபேசியை மட்டும் முழுமையாக பயன்படுத்துபவர்கள் வாசிக்க மனமின்றி கிடைக்கும் காட்சி வடிவங்களில் தங்களை இழந்து விடுகின்றார்கள். இதன் காரணமாகவே அசிங்கமான விசயங்கள் கூட சிங்கம் போல ட்ரெண்ட்டிங் என்ற வட்டத்திற்குள் மேலேறி வந்து நிற்கின்றது. போதையாக மாறி பார்ப்பவர்கள் அதன் பின்னால் அலைகின்றார்கள். அதை வழங்குபவர்களும் தலைப்புகளில் சூடேற்றி அதனை சந்தைப் பொருளாக மாற்றுகின்றார்கள்.

காரணம் தேடுபவர்களும், இது போன்ற விசயங்களை விரும்பிப் பார்ப்பவர்களும் வாழ்க்கையை வாழும் விதங்களில் அனுபவிக்க விரும்புவதில்லை. தங்களின் தறிகெட்ட கற்பனைகளில், அடக்க முடியாத சிந்தனைகளில், அடிப்படை நாகரிகம் தெரியாத வாழ்வியலை  வாழ விரும்புவதன் மூலம் மட்டுமே அவரவர் வாழ்க்கையை வாழ விரும்புகின்றார்கள். அதுவே நாளடைவில் பழக்கமாக மாறி அதற்கு அடிமையாகிவிடுகின்றார்கள். 

கடைசியில் மனைவி ஒரு பக்கம். மகள் மகன் வெவ்வேறு பக்கம் என்று வாழ்க்கைப் பாதை மாறி விடுகின்றது. ஒரு வீட்டுக்குள் வெவ்வேறு முகத்துடன் வாழ்கின்றார்கள். வீட்டுக்குள் ஒவ்வொருவர் வைத்திருக்கும் அலைபேசிகளும் சூறாவளி அலையை உருவாக்கி விடுகின்றது. கடைசியாக வாழ்க்கை அவர்களை மாற்றியும் விடுகின்றது.

ஒரு ஆணின் யோக்கிய தனத்தை உலகம் சொல்வதை விட அவனின் மனைவி எளிதில் சொல்லிவிட முடியும். ஆனால் இங்கு வாழும் எந்த மனைவியும் கடைசி வரைக்கும் வாயைத் திறக்காமல் இருந்து விடுவதால் மகாத்மா, புனிதர், வள்ளல், தியாகி, உத்தமர், நல்லவர், ஆன்மீகவாதி, அமைதியானவர், சிந்தனையாளர் என்று பல பெயர்களில் ஆண்களால் வாழ முடிகின்றது.

எப்படித் தொழில் செய்ய வேண்டும்? என்று எண்ணத்தை மட்டுமே எனக்கு வைத்திருந்த தொடக்க காலத்தில் எப்படிக் குடும்ப வாழ்க்கை வாழ வேண்டும்? என்ற எண்ணம் உருவாகாமலிருந்த போது தாமதமாகத் திருமணம் ஆனது. குறிப்பிட்ட கொள்கைகள், சித்தாந்தங்கள், வாழ்க்கை முறைகள் என்பது போன்ற பலரின் பார்வைக்குப் பழமைவாதியாகவே தெரிந்தேன், எது நம் பாதை என்று தெரியாமல் புரியாமல் வாழ்ந்த எனக்குத் தொடக்க காலத்தில் குடும்ப வாழ்க்கை குறித்த புரிதல் உருவாகவில்லை. 

மகள்கள் வளர வளர கற்றுக் கொண்டே ஆக வேண்டிய சூழலைக் காலம் உருவாக்கியது. கால மாற்றத்தில் மலைகள் உடையும். பாறைகள் கூட சில்லு சில்லாக மாறும். இறுதியில் மணலாக மண்ணாக மாறுமென்பது இயற்கை உருவாக்கிய விதி. நானும் அப்படித்தான் மாறினேன். மாற்றிக் கொண்டேன்.

நீங்கள் கொண்டாடக்கூடிய பிரபல்யங்கள் 95 சதவிகித மக்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையை இழந்தவர்கள். அதன் பாதிப்பை தங்கள் கடைசிக் காலத்தில் தண்டனையாகப் பெற்று மறைந்தவர்கள். மற்றும் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பவர்கள். நான் உணர்ந்த போது சுதாரித்துக் கொண்டேன்.

நெருங்கிய நண்பர்கள் திரும்பத் திரும்ப என்னிடம் கேட்கும் கேள்விகள் எப்படி எழுத முடிகின்றது? நான் வந்து படிப்பதற்குள் அடுத்த நான்கு தலைப்புகள் எழுதி முடித்து விடுகிறீர்கள்? என்பது போன்ற பல கேள்விகளுக்கு ஒரே பதில் என் மனைவி தான்.  ஆனால் இந்த வருடம் நடந்த ஒவ்வொரு சம்பவங்களும், அதனை நான் வெற்றி கொண்டு வந்த விதமும், அமைதியாக வாழ்ந்த வாழ்க்கைக்கும், அனுசரணையாக என்னுடன் இருந்த, இருக்கும் மனைவிக்கு நன்றிக்கடன் செய்யும் பொருட்டு இன்றே இதனை இங்கே எழுதி வைத்திடத் தோன்றியது.

என் பார்வையில் எல்லா நாளும் திருமண நாளே. எல்லா நாட்களும் பிறந்த நாளே. ஆனால் பெண்கள் பார்வையில் தனித்த விருப்பங்கள் இருந்தாலும் நான் எதையும் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லை. அவர்களின் விருப்பங்களை மறுப்பதும் இல்லை. 

பல விதமான கட்டளைகள், கட்டுப்பாடுகள், சோதனைகளைக் கடந்த இந்த வருடம் மூத்த மகளுக்கு தனியாக அலைபேசி வாங்கிக் கொடுத்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளானேன் என்ற  என் நிலைமை தனிக் கதை. 

காரணம் இவர்கள் பள்ளியின் இணைய வகுப்புக்கு 20க்கும் மேற்பட்ட வாட்ஸ்ஆப் குரூப் இருப்பதும், தொடர்ந்து யாராவது ஒருவர் என் அலைபேசியைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதுமாக இருந்த காரணத்தால் கடந்த மூன்று மாதங்களாக என் அலைபேசி என் கைக்கு வருவதே இல்லை. நான் அலைபேசி இல்லாமல் தான் வெளியே சென்று வந்தேன். வேறு வழியே இல்லாமல் புதிதாக வாங்கிய போது "சில நாட்களுக்கு என் அலைபேசியை நீங்கள் பார்க்க அனுமதி இல்லை" என்றார். 

பயமாக இருந்தது. தயக்கமாகவும் இருந்தது. காரணம் கேட்ட போது "23 நவம்பர் முதல் பார்க்கலாம்" என்றார்.

குழப்பமாக இருந்தது. 

உலகில் குறுக்கும் நெடுக்கும் பயணிக்கும் எனக்கு இவரின் புதிர் பேச்சைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அமைதியாக ஒதுங்கி விட்டேன்.  

"குடும்ப வாழ்க்கையில் ஆண் தோற்று விடுவது எப்போதும் நல்லது" என்ற பொன்மொழி எனக்குள் ஓடிக் கொண்டேயிருப்பதால் இப்போதெல்லாம் பெரிய வாக்குவாதங்களைத் தவிர்த்து விடுவதும் உண்டு.

கடந்த நவம்பர் இறுதியில் திருமண நாளில் எடுக்கப்பட்ட படத்தை என்னிடம் வந்து கொடுத்தார்கள். எங்கள் திருமண நாள் புகைப்படத்தை உருவாக்கி இவர்களே தயார் செய்து வழங்கினார்கள். தேவையான பணத்தை இவர்கள் சேமிப்பிலிருந்து எடுத்துச் செலவழித்து உள்ளனர்.  

என் எழுத்துக்கள் உங்களைத் திருப்திப் படுத்துகின்றது என்றால் அதற்கு நான் அல்ல. என் திறமை அல்ல. என் மனைவி எனக்கு நேரம் வழங்குகின்றார். என் பாதையில் குறுக்கிடாமல் இருக்கின்றார். என்னை அங்கீகரித்துள்ளார். அவர் தன் ஆசைகளை தனக்குள் வைத்துள்ளார். என்னைப் போலவே வாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழ கற்றுக் கொண்டுள்ளார் என்று அர்த்தம்.

நீங்கள் அவருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். நான் கடந்த காலத்தில் யாருக்கு நல்லது செய்தேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் வாழும் காலத்தில் எனக்கு நல்லது செய்யவே என்னுடன் பயணிக்கின்றார் என் மனைவி. 

மகள்களும் மனைவியும் நல்லவிதமாக அமைந்து விட்டால் போதும். 

வாழும் போதே சொர்க்கத்தைப் பார்த்து விடலாம் என்பது உண்மை தானே?

மனிதர்களைத் தவிர.தெய்வங்கள் வேறில்லை 

விதைகள் பழுதில்லை

"சமூகத்தைப் புரிந்து கொள்ளுங்கள்"

கொஞ்சம் உழைப்பு. அதிக வைராக்கியம் 2020

இணைய உலகம் 2020

மீண்டும் தொடங்கவும்.


6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வாழை மரம்...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மனைவி அமைதெல்லாம்...என்பது உண்மையே. உங்கள் வாழ்வின் இவ்வகையான அனுபவங்களை என் வாழ்விலும் கண்டுள்ளேன். வாழ்க்கையில் நான் தடம் மாற இருந்த பல நிலைகளில் என்னை நெறிப்படுத்தி நல்ல நண்பனாகவும், ஆசானாகவும்கூட இருந்து வருகிறார். இதனை என் மகன்கள் மற்றும் மருமகள்களுக்கு முன்பாக நேராகக் கூறி பெருமைப்பட்டுள்ளேன். என் நண்பர்களும் இதனை அறிவர். அவ்வாறே மக்கட்செல்வங்களும். இறை நம்பிக்கை உள்ள எனக்கு மூத்தோர் தரும் ஆசிகள் மீது அதிக நம்பிக்கை உண்டு. எனக்குப் பெண் பார்த்த சூழலில் என் ஆத்தா (அப்பாவின் அம்மாவை அப்படித்தான் அழைப்போம்) உன் மனதிற்கு ஏற்ற குணவதி அமைவாள் என்று தந்த ஆசீர்வாதமே எனக்கு இத்தகு மனைவியும் வாழ்க்கையும் அமைந்ததாக நினைப்பேன்.

ஜோதிஜி said...

முற்றிலும் உண்மை வார்த்தைகள்.

ஜோதிஜி said...

வாழையடி வாழையாக.

Mohamed Yasin said...

தெய்வங்களும் என்னை விட்டு விலகின
பொழுதில் என்னை ஒரு தேவைதையாய்
வந்து தாங்கியவள் - ஜென்னி (காரல் மார்க்ஸ்ன் மனைவி)
==========================================
தன் மனைவி குறித்து காரல் மார்ஸ் குறிப்பிட்டது. ஜென்னி இல்லையென்றால் காரல் மார்ஸ் இல்லை என்பது தான் நிஜம்...

Rathnavel Natarajan said...

மனைவி என்பவள் தெய்வமாகலாம். -என் எழுத்துக்கள் உங்களைத் திருப்திப் படுத்துகின்றது என்றால் அதற்கு நான் அல்ல. என் திறமை அல்ல. என் மனைவி எனக்கு நேரம் வழங்குகின்றார். என் பாதையில் குறுக்கிடாமல் இருக்கின்றார். என்னை அங்கீகரித்துள்ளார். அவர் தன் ஆசைகளை தனக்குள் வைத்துள்ளார். என்னைப் போலவே வாழ்க்கையை அதன் போக்கிலேயே வாழ கற்றுக் கொண்டுள்ளார் என்று அர்த்தம்.

நீங்கள் அவருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். நான் கடந்த காலத்தில் யாருக்கு நல்லது செய்தேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் வாழும் காலத்தில் எனக்கு நல்லது செய்யவே என்னுடன் பயணிக்கின்றார் என் மனைவி.

மகள்களும் மனைவியும் நல்லவிதமாக அமைந்து விட்டால் போதும்.

வாழும் போதே சொர்க்கத்தைப் பார்த்து விடலாம் என்பது உண்மை தானே?- அருமை. எனது பக்கத்தில் பகிர்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள் திரு ஜோதிஜி- உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்