Friday, December 11, 2020

கோவை Shanthi Social Service திரு.சுப்ரமணியம் காலமானார்.


இன்று தான் இவரின் புகைப்படத்தைப் பார்க்கிறேன். அதுவும் முழுமையான படமல்ல. அவர் பார்க்காத சமயத்தில் வேறு எவரோ எடுத்து இருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.  நான் முதல் முதலாக இவரின் சாந்தி சோசியல் சர்வீஸ் அறக்கட்டளை வழியாக நடத்திக் கொண்டிருக்கும் மருத்துவப் பரிசோதனை நிலையத்திற்குச் சென்ற போது இவரின் படம் எங்கேயாவது மாட்டியிருக்குமா? என்று அந்த வளாகம் முழுக்க பல முறை சுற்றிச் சுற்றி வந்த ஞாபகம் இப்போது வருகின்றது. எங்கும் இல்லை.


தமிழ்நாட்டில் கடந்த 50 வருடங்களாகத் திரை நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் வியாதிகள்  இவர்கள் இருவருக்கும் கிடைத்த அங்கீகாரத்தைப் போலத் தனி மனிதர்களில் சிறப்பாக வாழ்ந்த எவருக்கும் கிடைக்கவில்லை.  

திரு. சுப்ரமணியம் இன்று காலையில் மறைந்தார் என்பது சமூக வலைதளங்களில் மெதுமெதுவாகப் பரவத் தொடங்கிய போது தொலைக்காட்சி ஊடகங்கள் எந்த அளவுக்கு இவருக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்று கவனித்தேன். சற்று நேரத்திற்கு முன்பு தான் துணுக்குச் செய்தி போலச் சொல்லிவிட்டு அடுத்த செய்திக்குச் சென்றார்கள்.

ஒவ்வொரு துறைகளும் செல்லரித்துப் போய் இருக்கும் இந்தச் சமயத்தில், இப்போதுள்ள சமூகத்தில் திரு. சுப்ரமணியம் அவர்களை நினைத்தால் வியப்பாக உள்ளது. தன் முகத்தைக் காட்டிக் கொள்ள விரும்பாமல், தன் பெயரை எங்கேயும் வெளிப்படுத்திக் கொள்ள நினைக்காமல் நூறு சதவிகித சேவை மனப்பான்மையுடன் தன் கடந்த 24 வருட வாழ்க்கையை மக்களுக்காகவே, மக்களின் தேவைக்காகவே தன் சொத்துக்களை அர்ப்பணித்துள்ளார்.

அங்கீகாரம் என்பது ஒரு வகையில் ராஜ போதை தான். போதாது என்று மீண்டும் மீண்டும் மனம் தேடிக் கொண்டேயிருக்கும்.  60 வயதுக்கு மேல் நம் உடம்பு தளர்ந்து விடும். 70 வயதுக்கு மேல் தள்ளாட்டம் தொடங்கும். ஆனால் இந்தியாவில் அரசியலில் இருக்கும் அத்தனை பேர்களின் வயதையும் யோசித்துப் பாருங்கள்.  காரணம் அவர்கள் வெளிச்சத்தை விட்டு வெளியே செல்ல முடியாமல் தங்கள் உடல் உபாதைகளையும் ஏற்றுக் கொண்டு மீண்டும் மீண்டும் அரசியல் களத்தில் தொடர்ந்து இருந்து கொண்டேயிருக்கின்றார்கள். 

தன் முகம் வெளியே தெரியவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு துறையிலும் இன்றைய சூழலில் பணம் கொடுத்துப் புகழ் பாடுவது தொடங்கி, ஏதோவொன்றைப் பேசி பலரின் பார்வைக்குச் செல்வது வரைக்கும் எத்தனை எத்தனை வினோதமான விபரீதமான சம்பவங்கள் இங்கே நடந்து கொண்டிருக்கிறது என்பதனை நீங்களும் நானும் பார்த்துக் கொண்டேயிருக்கின்றோம். ஆனால் திரு சுப்ரமணியம் பள்ளி கட்டிக் கொடுத்துள்ளார் என்பது தொடங்கி ஃபேஸ்புக்கில் ஒவ்வொருவரும் எழுதியிருப்பதைப் பார்க்கும் போது கால்வாசி கோவை வாசிகள் இவரால் வாழ்ந்து உள்ளனர் என்றே தோன்றுகின்றது.

இவரைப் போல வாழ வேண்டும் என்ற எண்ணம் உண்டு.  குறைந்தபட்சம் இவரை மாதிரி வாழ முயல வேண்டும் என்ற எண்ணமும் உண்டு.

குடும்பத்தில் ஒருவர் இழந்தது போல இன்று மனம் நிலைகொள்ளாமல் தவிக்கின்றது. பூமியெங்கும் அவர் புகழ் பரவ அவர் மகள்கள் இவரின் செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே என் ஆசை.

ஆழ்ந்த அஞ்சலி.

சாந்தி சோஷியல் சர்வீஸஸ்

14 comments:

ஜோதிஜி said...

ஒரு எளிமையான விவசாய குடும்பத்தில் பிறந்தவர் திரு சுப்பிரமணியம் அவர்கள். பாலிடெக்னிக் வகுப்பை PSG Polytechnic ல் முடித்தார். Madras Machine tools (MMT)ல் பணியில் சேர்ந்தார். திருமதி சாந்தி அவரது மனைவி. மூன்று மகள்கள். MMT யில் பெற்ற அனுபவத்தை கொண்டு சிறிய அளவில் கியர் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். இவரது நேர்மையாலும் அயராத உழைப்பாலும் சிறந்த தயாரிப்பாலும் நிறுவனம் வளர்ச்சி அடைந்தது. அதன் பின்னர் பெரிய இடத்தில் நிறுவனம் செயல்பட்டது. சிறிது காலத்தில் மூன்று கிளைகளும் நிறுவப்பட்டது. நிறுவனம் வளர்ச்சி அடைந்த போதே பிரச்சினைகளும் சிறிய அளவில் வந்தது. இதற்கிடையில் இரண்டு மகள்களுக்கு திருமணம் நடைபெற்றது. சிறந்த பக்திமானான அவரது மனைவி திருப்பதி செல்லும் போது விபத்தில் மரணமடைந்தார். (அவரது குடும்பத்தினரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி இத்துடன் நிறைவு செய்யலாம்)

ஜோதிஜி said...

நிறுவன பணியாளர்கள் குடும்பம் நடத்த தேவையான சம்பளத்தை வழங்கினார், ஆனால் ஆடம்பர வாழ்க்கைக்கு சம்பளம் வழங்க முடியாது என்பது இவரது கொள்கை. கோவிலுக்கு நன்கொடை தரமாட்டார் ஆனால் தினமும் இராமஜெயம் எழுத தவற மாட்டார். அரசு பள்ளிகளுக்கு மட்டுமே கட்டிடம் உள்கட்டமைப்பு வசதிகளை மனமுவந்து செய்வார். சூலூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஆரம்ப பள்ளிகளிலும் கணினி கற்பிக்க தனியாக கட்டிடம் கணினி, கணினி ஆசிரியர் சம்பளத்துடன் வசதி செய்து தந்தார். சூலூர் ஒன்றியத்தில் பல கிராம சாலைகளை சொந்த செலவில் அமைத்து தந்தார்.

ஜோதிஜி said...

முதன் முதலில் இவர் பணியாற்றிய MMT நொடித்துப் போனதால் பேங்க் ஆஃப் மதுரை வங்கி நிறுவனத்தார் இதனை வாங்கி லாயல் மெஷின் ஒர்க்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தினர். இதுவும் நொடித்துப் போனது. இந்த நிலையில் இதனை சாந்தி கியர்ஸ் விலைக்கு வாங்கியது. பலரும் ராசியில்லாத இந்த இடத்தை வாங்கியதால் இவரது நிறுவனங்களும் நொடிந்து போகும் என்று ஆருடம் கூறினார்கள் (ஒரு சிலரது விருப்பமும் இதுவாகவே இருந்தது).

ஜோதிஜி said...

இங்கு மருந்துகள் குறைவாக விற்பனை செய்வதால் பாதிக்கப்பட்ட தனியார் மருந்து கடை உரிமையாளர்கள் (இவர்களில் எனது மூத்த சகோதரரும் ஒருவர்) இணைந்து பல நெருக்கடிகள் கொடுத்தனர். வேறு வழியில்லாமல் தனியார் மருந்து கடைகளும் 16% தள்ளுபடி தருகிறார்கள் இப்போது. பலரும் திரு சுப்பிரமணியம் அவர்களிடம் சென்று தனியார் தள்ளுபடி தருகிறார்களே நமது விற்பனை பாதிக்குமே என்றதற்கு அவர் சொன்ன பதில் "மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். இங்கு வந்து வாங்க மக்கள் பயணச்செலவு இல்லாமல் அவர்கள் வீட்டிற்கு அருகிலேயே குறைந்த விலையில் கிடைத்தால் அதுவே வெற்றி தான் " என்றார்.

ஜோதிஜி said...

இதன் பின்னர் உணவகமும் ஆரம்பிக்கப்பட்டது. உணவு தயாரிக்க மூலப் பொருட்களின் விலை, பணியாளர்கள் சம்பளம் பராமரிப்பு செலவு மட்டுமே விற்பனை விலையாக இருக்கிறது.

பல ஹோட்டல் உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் திரு கருணாகரனிடம் சென்று இவர் மீது புகார் தெரிவித்தனர். ஆட்சியரிடம் திரு சுப்பிரமணியம் அவர்கள் "நான் மக்களுக்காக குறைந்த விலையில் சேவை செய்கிறேன், இது சட்டப்படி தவறு என்றால் நடவடிக்கை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறி வந்தபின் முழு சாப்பாடு ₹10/ என விலையை சரிபாதியாக குறைத்தார். அனைத்து உணவுகளும் விலைக்குறைப்பு செய்யப்பட்டது.

ஜோதிஜி said...

பெட்ரோல் பங்க் வைத்த ஒரு மாதத்தில் வரவு செலவு கணக்கு பார்க்கப்பட்டது. இலாபம் ரூபாய் மூன்று லட்சத்திற்கும் மேல் இருந்ததால் " இலாபமே வரக்கூடாது, அப்படி இலாபம் வந்தால் அது மக்களுக்கே சேரட்டும்" என்று கூறிவிட்டார். பெட்ரோல் விலையை குறைக்க இந்தியன் ஆயில் நிறுவனம் ஏற்க மறுத்தது. பலருக்கு வேலைவாய்ப்பாவது கிடைக்கட்டும், பல குடும்பங்கள் பிழைக்கும் என்று பலவித சேவைகளுக்கும் பல பணியாளர்களை நியமித்துள்ளார்.

ஜோதிஜி said...

மற்றெந்த நகரத்திலும் எப்படி என தெரியவில்லை, கோவையில் இறந்தவர்களை எரியூட்டப்படும் மயானம் ஈஷா, சமர்ப்பன், நித்யானந்தா போன்ற நிறுவனங்களால் நிர்வகிக்கப்படுகிறது. சாந்தி அறக்கொடை நிறுவனமும் சிங்காநல்லூர் எரியூட்டப்படும் மயானத்தை நிர்வகிக்கிறது.

ஜோதிஜி said...

திருமதி சாந்திசுப்பிரமணியம் அவர்கள் ஈகை குணம் மிக்கவர். இவரது கியர் நிறுவன இலாபத்தில் ஒரு பகுதியை பெறும் திருமதி சாந்தி அவர்கள் பயணம் செய்யும் போது குடிசைப்பகுதிகள் இருந்தால் வாகனத்தை மெதுவாக இயக்க படித்து, ரூபாய் தாள்களை வெளியே போடுவது வழக்கம். இறைவன் கொடுக்கும் பணம் இறைவனின் குழந்தைகளுக்கு சேர் வேண்டும் என்பது இவரின் எண்ணம். இவரது அகால மரணத்திற்கு பின்னர் மனைவியின் விருப்பங்களை நிறைவேற்றுவதை தலையாய கடமையாக கொண்டே இந்த அறக்கொடை நிறுவனத்தை மனைவியின் பெயரிலேயே ஆரம்பித்துள்ளார்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மிகச்சிறந்த முன்னுதாரண மனிதர்.

Mohamed Yasin said...

20 / 22 வயதில் கல்லூரி படிப்பை முடித்து விட்டு சீக்கிரம் வெளியே பறக்க மனது அதன் சிறகை விரிக்கிறது.. அடுத்த ஒன்று / இரண்டு ஆண்டுகள் திறமைக்கு , அதிஷ்டத்திற்கு, சூழ்நிலைக்கு ஏற்ப ஏதோ ஒரு வேலையை தேடி கொண்டு சராசரி வாழ்க்கை ஓட்டம் ஓட ஆரம்பிக்கிறது.. இதற்கு இடையில் குடும்ப பொறுப்பு, திருமணம், குழந்தைகள், சொந்த வீடு, கடன் என ஒரு பத்து ஆண்டுகள் ஓடியே வேகமே தெரியாமல் ஓடி விடுகிறது.. 40 வயதை நெருங்கும் நேரத்தில் கடந்த கால நிகழ்வுகளை எண்ணி பார்க்கும் போது வெறுமையே மிஞ்சுகிறது.. ஓடும் வேகத்தை குறைத்து சமுதாயத்தை குறித்து எண்ணும் போது ஏதோ ஒரு முலையில் திரு.சுப்பிரமணியம் அய்யா போன்ற மனிதர்களை காண முடிகிறது..

எல்லோரும் பணத்தை நோக்கி ஓடும் நேரத்தில், சேவையை நோக்கி செல்ல வேண்டும் என்ற எண்ணம் வர அடிப்படை காரணம் என்னவாக இருக்கும் என தெரிந்து கொள்ள மனம் விழைகிறது..அவர் அளவுக்கு சேவை புரிய முடியுமா என்று தெரியவில்லை?? ஆனால் நேற்று மனதுக்குள் ஒன்றை மட்டும் நினைத்து கொண்டேன்.. நேற்று எனது மகளின் பிறந்த நாள் (திரு.சுப்பிரமணியம் அய்யாவின் இறந்து நாளும் கூட..) இந்த தருணத்தில் அவரின் சேவையில் 10% வது நான் நிச்சயம் என் வாழ்நாளில் பூர்த்தி செய்வேன் என உறுதி ஏற்கிறேன்.. என் மகன் / மகளுக்கு அவர்கள் வளந்து வரும் தருவாயில் ஐயாவின் வாழ்வியலை குறித்தும், அவரின் சேவை மனப்பான்மை குறித்து நிச்சயம் அறிவுறுத்துவேன்.. குடும்பத்தினருக்கு என் பிராத்தனைகள்..

ஜோதிஜி said...

என் மன ஓட்டத்தை அப்படியே பிரதிபலித்து இருக்குறீங்க. அருமை.

ஜோதிஜி said...

உண்மை.

கரந்தை ஜெயக்குமார் said...

போற்றுதலுக்கு உரிய மனிதர்

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான மனிதர். அவரது இழப்பு குடும்பத்தினருக்கு மட்டுமல்லாது பலருக்கும் இழப்பு.