Sunday, April 19, 2020

இதுவொரு கொரானா காலம்


அந்த 42 நாட்கள் - 1
Corona Virus 2020


24.03.2020 அன்று பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவில் கொரானா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க 21 நாட்கள் என்ற சுய ஊரடங்கு என்பதனை அறிவித்தார்.  மேலும் நீடித்தது. இப்போது மே 3 வரைக்கும் என் மொத்தமாக 42 நாட்கள் கொரானா என்ற வைரஸ் கிருமிக்காக இந்தியாவில் 130 கோடி மக்களும் மொத்தச் சமூகத்திலிருந்தும் விலக்கி வைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டு உள்ளனர்.

அடுத்த வீட்டில் இருப்பவர்களிடம் உரையாடப் பயந்து, பார்க்கப் பழகப் பேசத் தயங்கும் சூழலை இப்போது நடைமுறையில் இருக்கும் கொரானா "வைரஸ் தடைக்காலம்" உருவாக்கியுள்ளது.

இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டது 29 ஜனவரி - கேரளாவில். (30ஆம் தேதி பத்திரிகைகளில் செய்தி வந்தது.)

வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் விமான நிலையத்தில் பரிசோதனை செய்ய வேண்டும் என்கிற அறிவிப்பு வெளிவந்தது மார்ச் 6.

இடைப்பட்ட காலம் - சுமார் 40 நாட்கள்.

முதல் நோயாளி பற்றிய தகவல் தெரிந்தபோதே மத்திய அரசாங்கம் உஷார் ஆகியிருக்க வேண்டும். விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையை உருவாக்கியிருக்க வேண்டும். ஸ்கிரீனிங்கை துவக்கியிருந்தால், அதையும் சரியாகச் செய்திருந்தால், இந்தியாவில் இவ்வளவுகூடப் பரவியிருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் எல்லை மீறிப் போய்விட்டது. விமானப் பயணிகளும், பணம் படைத்தவர்களும் கொண்டு வந்து சேர்த்தனர்.  இன்று அன்றாடங்காய்ச்சிகள் அல்லாடிக் கொண்டு இருக்கின்றார்கள்.  ஒரு பக்கம் வாகன வசதிகள் இல்லாமல் ஆயிரம் கிலோ மீட்டர் நடந்து வந்து தங்கள் ஊருக்கு வந்து சேரும் அவல நிலையும் உள்ளது.

42 நாட்கள் முடிய இன்னும் 15 நாட்கள் உள்ளது. கடந்த நாட்களில் என்ன நடந்தது. தமிழகத்தில், இந்தியாவில், மற்ற நாடுகளில் என்னவெல்லாம் நடந்தது?  கொரானாகோவிட் 19, வூகான் வைரஸ், சீன வைரஸ், என்றழைக்கப்படும் நுண்கிருமிக்குப் பின்னால் உள்ள அறிவியல் உண்மைகள் போன்றவற்றைத் தொடர் ஓட்டத்தில் பார்க்கப் போகின்றோம்.

முதலில் "கொரானா காலம்"  "சுய ஊரடங்கு"  "சமூக விலக்கம்:", என்பது எப்படியுள்ளது என்பதனை இந்த வாட்ஸ் அப் பார்வேர்டு செய்தி மூலம் உணர்ந்து கொள்ள முடியும். பெயர் தெரியவில்லை. 

எழுதியவருக்கு நன்றி.  முதலில் இதிலிருந்து தொடங்குவோம்.




***************


மனிதன் திட்டமிட்டதற்கு
இறைவன் அளித்திருக்கும்
இடைக்கால தீர்ப்பு.

இதோ
மனிதன்
ஏப்ரல் ஒன்று முதல் NPR கணக்கெடுப்பு என்று அறிவித்தது.

கடவுள்
இப்போதைக்கு NPR கிடையாது என்று அறிவித்தது.

மனிதன்
எப்பொழுதும் இல்லாமல் இப்போது ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு என அறிவித்தது.

கடவுள்
ஒன்று முதல் ஒன்பது வரை ஆல்பாஸ் இப்போது.

மனிதன்
ஊதிய உயர்வு கேட்டு போராடிய மருத்துவர் செவிலியர்க்கு தீர்ப்பு - சம்பளம் போதவில்லை என்றால் வேறு வேலைக்கு செல்லுங்கள் என்று சொன்னது.

கடவுள்
மருத்துவர், செவிலியர் நம்மை காக்கும் மனித தெய்வங்கள் என்று சொன்னது. மேலும் அவர்களுக்கு சம்பளத்துடன் சிறப்பு ஊதியம் அறிவித்தது.

மனிதன்
இவர் அவரை தொட்டால் தீட்டு என்பது அன்று.

கடவுள்
இப்போது எவரை தொட்டாலும் உயிருக்கே வேட்டு என்பது இன்று.

மனிதன்
ஒழுக்கமே இல்லாமல் கடைகளில் முண்டி அடித்து பொருட்களை வாங்கியது அன்று.

இறைவன்
ஒரு மீட்டர் இடைவெளி விட்டு வட்டத்துக்குள் நிற்க வைத்தது இன்று.

மனிதன்
கை குலுக்கி 'ஹலோ ' சொன்ன கலாச்சாரம் அன்று.

கடவுள்
கை எடுத்து கும்பிட்டு 'வணக்கம்' சொல்லும் கலாச்சாரத்தை சொல்லி கொடுத்தது இன்று.

மனிதன்
பொது இடங்களில் எச்சிலைத் துப்பிக்கொண்டிருந்தது அன்று.

கடவுள்
பொது இடங்களில் வாயையே திறக்காமல் மாஸ்க் போட வைத்தது இன்று.

கடவுள்
செல்வாக்கைக் காட்ட ஊரைக்கூட்டி கோடிக்கணக்கில் செலவு செய்து கல்யாணம் செய்தது அன்று.

கடவுள்
20 பேருக்கு மேல் இல்லாமல் எளிமையான வைபவத்தை சொல்லி கொடுத்தது இன்று.

மனிதன்
செத்தால் ஆயிரம் பேர் வர வேண்டும் என்று நினைத்தது அன்று.

கடவுள்
செத்தால் தூக்கி செல்ல நான்கு பேர் போதும் என்று சொல்லி கொடுத்தது
இன்று.

மனிதன்
இறைவனை வழிபட கோவிலுக்கு செல்லாதவன் பாவி என்றான் அன்று

கடவுள்
இப்போது கோவிலுக்கு செல்பவனுக்கு அடி உதை என்றான் இன்று.

மனிதன்
தூய்மை செய்பவர்களை
'துப்புறவு பணியாளர்கள்' என்றனர் அன்று.

கடவுள்
தூய்மை செய்பவர்கள்
இனி ' தூய்மை பணியாளர்கள் 'என்று அழைக்கப்படுவது இன்று.

மனிதன்
வீட்டிற்கே வராமல் இரவும் பகலும் உழைப்பவனை உழைப்பாளி என்றான் அன்று.

கடவுள்
21 நாட்கள் வீட்டிலேயே இருப்பது மட்டுமே உயிர் வாழ ஒரே வழி என்றான் இன்று.

மனிதன்
பொது துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது தவறல்ல என்றான் அன்று.

கடவுள்
பொதுத்துறை ஊழியர்களின் அயராத உழைப்பை தேசம் காண்கிறது என்றான் இன்று

மனிதன்
டாஸ்மார்கை பூட்டவே இயலாது என்றான் அன்று

கடவுள்
ஏப்ரல் 14 வரை டாஸ்மாக் பூட்டப்படும் என்றான் இன்று

இன்னும் எத்தனை எத்தனையோ பாடங்களை நமக்கு சொல்லி கொடுக்கும் ' கொரானா' ஒரு வகையில் நமக்கு ' கடவுள்' மாதிரி தான்.

இறைவனின்
இடைக்கால தீர்ப்பை
நாம் மதிக்காவிடில்

இறைவனின்
இறுதி தீர்ப்பு
எப்படி இருக்கும்
என்பதை

அவரவர்களே
யூகித்துக் கொள்ளுங்கள்.

6 comments:

விசு said...

//இன்று அன்றாடங்காய்ச்சிகள் அல்லாடிக் கொண்டு இருக்கின்றார்கள். ஒரு பக்கம் வாகன வசதிகள் இல்லாமல் ஆயிரம் கிலோ மீட்டர் நடந்து வந்து தங்கள் ஊருக்கு வந்து சேரும் அவல நிலையும் உள்ளத//

ஜோதிஜி எப்படி இருக்கின்றீர்கள்.

மனிதன் :
நம் தலைவர்களை தேர்ந்தெடுப்பதில் நாம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் என்பதையும் உணர்த்தியது

கடவுள் :
"A Nation deserves its Leader"!

திண்டுக்கல் தனபாலன் said...

சில மிகச்சில உண்மைகள்...

உலகத்தில் தலை சிறந்தவனை இன்னும் உலகமே நினைக்கும் அளவிற்கு, நிலைமை மோசமாகவில்லை...!

KILLERGEE Devakottai said...

நானும் படித்தேன் நல்ல சவுக்கடி வாக்கியங்கள்.

இனி மனிதன் மாறியே தீரவேண்டும்.

ஜோதிஜி said...

வணக்கம் விசு. நலமா? நலமாக உள்ளோம். நீங்கள் சொல்வது உண்மை தான். அடுத்த 15 நாளில் தினமும் இரண்டு பதிவுகள் வரப் போகின்றது. தொடரவும். நிறையப் பேசுவோம். நன்றி.

ஜோதிஜி said...

உண்மை உண்மை உண்மை.

ஜோதிஜி said...

அடிப்படை விசயங்களைத் தவிர மற்ற அனைத்துக்கும் ஆவலாக பறந்து கொண்டிருந்த மனித வாழ்க்கை கொரானாவிற்கு முன் பின் என்று மாறும் என்றே நினைக்கிறேன்.