அந்த 42 நாட்கள் - 19
Corona Virus 2020
(மாா்ச் 25 முதல் மே 3 வரை)
"நாளைக்கு என்ன தினம்?" என்று அழைத்துக் கேட்டார் நண்பர்.
"21/10. கூடவே ஏப்ரல் 1 " என்றேன்.
"இல்லை. நாளை முதல் பல முட்டாள்களுக்குப் பாடைக்கு நாள் குறிக்கும் தினம்" என்று அலட்டிக்கொள்ளாமல் சொன்னார்.
எரிச்சலாக இருந்தாலும் அவர் சொன்ன தகவல் முக்கியமானது.
ஜெ தனது ஆட்சிக் காலத்தில் ஆயிரம் தவறுகள் செய்து இருந்தாலும் அது வெறுமனே அரசு சொத்தை சூறையாடுதல் என்கிற ரீதியில் தான் பட்டியலில் போய்ச் சேர்ந்தது. ஏற்கனவே இருந்தவர்கள் செய்தார்கள். இவரும் செய்தார். கூடுதலாகச் செய்தார் என்றே மக்கள் பார்வையில் தெரிந்தது. கடைசியில் நீதிமன்றம் கொடுத்த தண்டனையிலிருந்து மயிரிழையில் தப்பி மெரினா போய் அடைக்கலமாகித் தப்பி விட்டார்.
ஆனாலும் அவர் செய்த தவறுகளில் முக்கியமான தவறென்பது மதுக்கடைகளைத் தமிழகத்தில் பரவலாக்கியது. இல்லாத இடங்களைத் தேடித் தேடிக் கண்டுபிடித்துத் திறந்தது.கோவில், பள்ளிக்கூடம் என்று பாரபட்சமில்லாமல் மது அரக்கனைக் கொண்டு போய் சேர்த்து தமிழகத்தில் முதல் முறையாக 18 வயதிற்குக் கீழ் இருப்பவர்களைக் குடிகாரர்களாக மாற்றியது.
மேலும் திட்டமிட்டு ஒவ்வொரு இடமாகக் கொண்டு சேர்த்தது. எதிர்ப்புகள் உருவான போது அடக்கி ஒடுக்கியது. இது மிகப் பெரிய சமூக விளைவுகளை உருவாக்கப் போகின்றது என்பதனை உணராமல் தன் பினாமி நிறுவன வருமானம் ஒன்றின் மேல் கவனம் வைத்திருந்த காரணத்தால் அதன் விளைவுகள் இப்போது தமிழகத்தில் விபரீதமாக வெடிக்கக் காத்துக் கொண்டிருக்கிறது.
அதன் பாதிப்பு இப்போது கொரானா 21 நாள் லாக் டவுன் சமயத்தில் வெளிப்படத் துவங்கியுள்ளது. மற்ற ஊர்களை விடத் திருப்பூரில் மதுக்கடைகள் உருவாக்கிய தாக்கம் அதிகம். சமூக விழுமியங்கள் அனைத்தையும் குழி தோண்டி புதைத்து விட்டது.
முதலாளி, தொழிலாளி, வேலை இருப்பவர், இல்லாதவர், தேடிக் கொண்டிருப்பவர் என்று பாரபட்சமின்றி அனைவர் வாழ்க்கையையும் மல்லாக்கத் தூக்கிப் போட்டுப் பந்தாடிக் கொண்டு இருக்கின்றது. தொழிலாளிகளைத் தொழிலுக்கு வெளியே கொண்டு வந்து விட்டது.
திறமையிருப்பவர்களை மதுப் பழக்கம் செயல் இழக்கவும் வைத்து விட்டது. கவனச் சிதறலும், கண்ணியக்குறைபாடுகளும் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. குடும்ப அந்தரங்கம் சந்தி சிரிக்கத் துவங்கி விட்டது. யார் யாருக்கு? யாருடன் யாருக்கோ? என்று எல்லை மீறிய குடும்ப வாழ்க்கை உருவாகத் தொடங்கியது. எதற்கும் இனி இங்கே இலக்கணம் தேவையில்லை என்ற நம்பிக்கை உருவானது. "மாலையில் சரக்கடிக்கக் காசு வேண்டும். அதற்காகவே வேலை செய்கின்றேன். அதற்காகவே வாழ்கிறேன்" என்கிற மனோநிலைக்குக் கொண்ட வந்து சேர்த்தது.
சிலவற்றை முழுமையாகச் சொல்லவும் முடியாது. வாயில் மெல்லத்தான் முடியும். கடந்த பத்து நாளில் பலரின் கதைகள் காதுக்கு வந்து கொண்டிருந்தாலும் இன்று நண்பர் சொன்ன கதை கொஞ்சம் வித்தியாசமானது.
அவர் சாயப்பட்டறை முதலாளியாக இருக்கின்றார். வசதிகளுக்கும், வாய்ப்புகளுக்கும் குறைவில்லை. புகைப்பழக்கம் மட்டும் இருந்தது. ஆனால் நண்பர்களுடன் தேநீர்க்கடைச் செல்வது போல உருவான பழக்கம் தினமும் மதுக்கடைகளுக்கு (பார்) சென்ற பிறகே வீட்டுக்கு வந்து சேருமளவிற்கு மாறியது. அதாவது தினமும் ஏழு மணிக்கு பார் க்குச் சென்று வீட்டுக்கு வந்து சேரும் போது 11 மணி ஆகி விடும். இதன் காரணமாகக் காலை என்பது மதியத்திற்குப் பின்பே தொடங்கியது. அதன் பிறகென்ன? மாலை வந்து விடும். மயக்கம் உருவாகி விடும்.
இது மாதத்தின் முப்பது நாட்களும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த போது இடையில் மருத்துவர் எச்சரிக்கை விடும் அளவிற்கு வந்து நின்ற போது சில நாட்கள் வண்டி வெளியே செல்லாமல் இருந்தது. அடுத்த வாரத்தில் இயல்பு நிலைக்கு வந்த பிறகு மீண்டும் சென்ற பாதைக்கே செல்லத் துவங்கியது.
வீட்டில் இருப்பவர்கள் மனதை உறுதிப்படுத்திக் கொண்டு விட்டனர். அதாவது காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அருகே இருக்கும் மின் மயானத்தில் புக்கிங் மட்டும் செய்யவில்லை. மற்றபடி தயாராகவே இருக்கின்றார்கள்.
இப்போது கொரானா தடைக்காலத்தில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று வாரத்திற்கு வாங்கி வைத்த சரக்கு அனைத்தும் ஒரே வாரத்தில் தீர்ந்து போகும் அளவிற்குத் தீர்த்தமாடி முடித்தாகிவிட்டது. சிகரெட் வாங்க அலைய வேண்டியதாக உள்ளது. கடைகள் முழுமையாகத் திறப்பதில்லை. திறந்திருக்கும் கடையில் தான் விரும்பும் பிராண்ட் கிடைப்பதில்லை. இது முதல் பிரச்சனை. கள்ளத்தனமாக விற்கும் சரக்குப் பாட்டில்களில் ஒரிஜினல் இல்லை. கேள்வி கேட்கவும் வழியில்லை. இயல்பான சரக்குப் பாட்டிலே பினாயில் வாடையில் தான் வருகின்றது. அதை எப்படிக் குடிக்கின்றார்கள்? எதற்காகக் குடிக்கின்றார்கள்? என்பது அரசுக்கும் குடிகாரர்களுக்கும் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த ஷரத்துக்கள் குறித்து யாருக்குக் கவலை?
ஆனால் நம் முதலாளிக்கு எந்தப் பக்கம் திரும்பினாலும் பிரச்சனை. மூன்று மடங்கு காசு கொடுக்கத் தயாராக இருந்தாலும் எதுவும் கைக்குக் கிடைக்கவில்லை என்பதனைவிட தன் ஈகோ சீண்டப்பட்டுக் கொண்டே இருப்பது தான் பெரிய பிரச்சனை.
அவசர கதியில் போலிஸ்காரர் எப்போது வேண்டுமானாலும் வந்து நிற்பார் என்ற பயத்தில் திறந்து வைத்திருக்கும் பெட்டிக்கடைக்கார பொடிப்பையன் "யோவ் எது கிடைக்கிறதோ? அதை வாங்கி குடிக்கப் பாருய்யா? இது தான் வேண்டுமென்று அடம்பிடிக்காதே" என்று அறிவுரை சொல்ல நம்மவர் காண்டாகி கண்ணீர் விட்டு அழுகின்றார். உடம்பும் மனமும் முழுமையாக மாறி தன் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு வெளியே இருப்பதை இப்போது தான் உணர்ந்துள்ளார்.
நிறுத்த முடியாத பழக்கங்கள் ஒரு பக்கம்.
நாள் தோறும் இதன் பொருட்டு அடையும் அவமானங்கள் மறு பக்கம்.
அடையும் மன உளைச்சல் அளவில்லாதது.
வீட்டை விட்டு வெளியே செல்ல வாய்ப்பில்லை. வந்த நேரத்திலும் எதுவும் கிடைப்பதில்லை.
உடல் ஆரோக்கியம் அதள பாதாளத்தில் இருந்தாலும் அது குறித்துக் கவலைப்படாமல் இவரைப் போன்றவர்கள் மீண்டும் மீண்டும் பாதாளக் குழிக்குள் சென்று கொண்டு இருப்பது தான் கொரானா வைரஸ் விடக் கொடூரமாக உள்ளது.
நம் உடல் செயல்பாட்டில் 21 நாட்கள் ஒரு காரியத்தைத் தொடர்ந்து செய்து வந்தால் அது இயல்பான பழக்கமாகிவிடும் என்பார்கள்.
ஆனால் பத்து நாளைக்கே பலரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
வருகின்ற வாரத்தில் தமிழகத்தில் ஏராளமான காட்சிகளை நீங்கள் காண வாய்ப்புண்டு. காரணம் பெரும்பான்மையினர் வாங்கி வைத்திருந்த ஸ்டாக் முடிந்து விட்டது. இனி எத்தனை இதயம் நிற்கப் போகின்றதோ? அரசாங்கம் கொரானாவுக்கு தனி வார்டு போல இதற்கு எத்தனை வார்டுகள் துவக்க வேண்டும். அல்லது கேரளா போலக் குறிப்பிட்ட நேரம் இங்கே வழங்கப்பட வேண்டும்?
2 comments:
குடிப் பிரச்சனை - நம் ஊரில் ரொம்பவே அதிகமாகி விட்டது. ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதும் இதனைக் கவனித்திருக்கிறேன். இந்த முழு அடைப்பு குடிப்பழக்கத்திலிருந்து சிலரையாவது திருத்தினால் நல்லது.
மனநோய் தான்... திருந்த சிரமம் தான்...
Post a Comment