Saturday, April 25, 2020

கொரானா குறிப்புகள் - 25/03/2020



அந்த 42 நாட்கள் -  13
Corona Virus 2020

(மாா்ச் 25 முதல் மே 3 வரை)

நேற்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் "பின்னலாடை நிறுவனங்களை மூடி ஒத்துழைப்பு தாருங்கள்" என்று அழைப்பு விடுத்தார்.

முதலாளி சமூகம் அதன் பிறகே சற்று அசைந்து கொடுத்தது. எடப்பாடி 144 என்றார். விஜயபாஸ்கர் " நோய்த் தொற்றுள்ளவர்கள் என்று அடையாளம் காட்டப்பட்டவர்கள் அவரவர் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது. அரசின் உத்தரவு. மீறுவது தண்டனைக்குரிய குற்றமென்று" இறுக்கம் காட்டினார். நடக்கப் போகும் விபரீதத்தை உணராத சமூகம் சிலிர்த்தது. பறக்கத் தொடங்கியது. பேருந்துகளை நோக்கிப் பாயத் தொடங்கியது. நிரம்பி வழிந்தது. தனியார் பேருந்து கட்டணக் கொள்ளையர்கள் உருவானார்கள். அரசுப் பேருந்து எண்ணிக்கையை ஏன் குறைந்தார்கள் என்பது குறித்து யாருக்கும் அக்கறையில்லை.




வடமாநிலங்களில் ரயில் கூரை மேல் அமர்ந்து பயணிக்கும் காட்சிகள் தமிழ்நாட்டிலும் நடக்கத் தொடங்கியது. சொந்த ஊருக்குச் சென்றால் மட்டுமே நாம் உயிர் பிழைத்திருக்க முடியும் என்று நம்பிய மக்கள் பதற்றத்தில் ஓடத் தொடங்கினர். ஒவ்வொருவரும் கடத்தத் தொடங்கினர். யாரிடம் கோவிட் 19 உள்ளது? இல்லை? என்ற பாரபட்சமே இல்லை. முண்டியடித்து இருக்கையை அடைந்து விட்டால் போதும். சொர்க்க லோகம் கிடைத்த திருப்தியில் இடம் விட்டு இடம் நகரத் தொடங்கியது மொத்தச் சமூகமும்.
•••••

நேற்று மாலை பெண்கள் நலக்கூட்டணியினர் ஒன்றாகச் சேர்ந்து பெரிய பட்டியலை என்னிடம் கொண்டு வந்து கொடுத்தார்கள். 110 விதியின் கீழ் சபாநாயகர் சிறப்பு அனுமதி அளித்திருந்தார். இதற்கு அவசரம் இல்லை. "எப்போதும் போல இவ்வுலகம் இயங்கும் கவலை வேண்டாம்" என்றேன். சபை கூச்சலில் அமளிதுமளியானது. "வன்முறை கூடாது. இது காந்தி தேசம்" என்று அலறினேன். ஒருவர் வந்து மட்டும் என்னைக் காப்பாற்ற முயன்றார். வேறுவழியே இல்லாமல் மளிகைக்கடைக்குச் செல்ல உடைகளை மாற்றத் துவங்கிய போது மற்றொருவர் கடைக்கு அழைத்துக் கடை உள்ளதா? என்று கேட்டுக் கொண்டிருந்தார். அழைத்த அழைப்பு சென்று கொண்டேயிருந்தது.

கடை பூட்டியிருந்தாலும் எங்கேயாவது வாங்கிய பின்பு தான் உள்ளே வர வேண்டும் என்று கட்டளையிட மளிகைக் கடைக்குச் சென்று சேர்ந்தேன்.

பாதி ஷட்டர் மூடியிருக்க உள்ளே பெரிய கும்பல் பொருட்களைச் சூறையாடியிருந்தார்கள். பெரும்பாலான மளிகைப் பொருட்கள் இல்லை. அதாவது அறிவிப்பு வந்த இரண்டு மணி நேரத்திற்குள் மக்கள் அள்ளிச் சென்று மொத்தக் கடையை காலி செய்து இருந்தனர். தெரிந்த அண்ணாச்சி அப்போது தெரியாத கணவானாக மாறியிருந்தார். விலைவாசி திடீரென 40 சதவிகிதம் எகிறியிருந்தது. குறிப்பிட்ட பொருட்களை வாங்கி வந்து உள்ளே நுழைந்த போது அடுத்த சீட்டை சபாநாயகர் என்னிடம் கொடுத்தார்.

"நாளை காலை ஐந்து மணிக்கே உழவர் சந்தையில் சென்று வாங்கி வந்து விட வேண்டும்" என்றார். அடுத்தவர் அலாரம் செட் செய்தார். மறுக்க முடியுமா?
•••••

உழவர் சந்தை அதிகாலை நான்கு மணி முதல் தொடங்கும். இயல்பான தினங்களில் 9 மணி வரைக்கும் கூடக் காய்கறிகள் வாங்க முடியும். இன்று காலை ஆறு மணிக்குச் சென்ற போது முக்கால்வாசி கடைகள் இல்லை. வாங்கி விற்பவர்கள் கடை பரப்பி இருந்தனர். அழுகும் பொருட்களின் விலைகள் நம்மை அழ வைத்தது. இடித்துக் கொண்டு உரசிக்கொண்டு அவசரப்பட்டு தலைகள் எங்கும் அலைகளாகவே தெரிய என்ன செய்வது என்று குழம்பிப் போனேன். வட இந்தியத் தொழிலாளர்களின் கூட்டம் தம்பதி சமேதரராய் பீஸ் ரூப்யே என்று பேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். பார்த்துக் கொண்டிருக்கும் போதே கண்ணிமைக்கும் நேரத்தில் ஒவ்வொரு கடையின் பொருட்களும் காணாமல் போய்க் கொண்டேயிருந்தது. பக்கத்து வீட்டுப் பெண்மணிகளும் "தம்பி எங்களுக்கும் வாங்கி வந்துடுங்க" என்று அன்புக் கட்டளையிட்டு இருந்தனர். மொத்தமாக வாங்கி முடித்த போது சாப்பாட்டுக்கடைக்குத் தேவைப்படும் அளவிற்கு மூன்று பைகள் சுமக்கமுடியாத சுமையாக மாறியது.
•••••

பக்கத்துச் சந்தில் இருந்த பேக்கரி கடைகள் "அண்ணே மதியம் 2 மணியோடு மூடுகிறோம்" என்றார்கள். பெட்ரோல் பங்கில் முகமூடி அணிந்த மனிதர் தும்மிய நபரைப் பார்த்துக் கத்தத் தொடங்கினார். மற்றொருவர் பெட்ரோல் டேங் மூடியைத் திறக்கும் போது பார்த்தேன். டேங் கவரின் உள்ளே மதுப் பாட்டில்கள் வரிசையாக இருந்தது. வங்கிகளும் ஏடிஎம்களும் ஆச்சரியமாகப் பொறுப்பாகச் செயல்பட்டது. தெருவில் நடமாட்டம் குறைந்தே இருந்தது.

****

விஜயபாஸ்கர் ஊடகத்தில் பேசும் போது "மாண்புமிகு அண்ணன் முதலமைச்சர், எடப்பாடியார் அரசு, எடப்பாடியார் வழிகாட்டலின்படி" என்று தவறாமல் ஒப்பித்துக் கொண்டேயிருந்ததைப் பார்க்கும் போது அபூர்வச் சகோதரர்கள் ராஜேந்திர பாலாஜிக்குப் பிறகு இவருக்கு ஆப்பு சொருகப்போவது போலவே தெரிகின்றது. மற்ற துறைகள் அனைத்தும் கப்சிப் என்று இருக்கின்றார்கள். தமிழ்நாட்டில் எதுவும் நடக்காதது போலவே உள்ளனர். எங்களுக்குத் தொடர்பில்லை என்பது போல இருக்கின்றார்கள். 33 வருடம் தமிழகத்திற்கே தண்ணீ காட்டிய பெண்மணியிடம் கற்ற வித்தைகளை இந்தச் சமயத்திலும் அபூர்வச் சகோதரர்கள் காட்டிக் கொண்டிருப்பதாகவே தெரிகின்றது. ரணகளத்திலும் மயிலாடுதுறை மாவட்டக் குழந்தை பிறந்துள்ளது. முதலில் அறுபது கோடி பிறகு 500 கோடி என்று ஒதுக்கும் பணம் கூடிக் கொண்டிருந்தது. இப்போது மொத்தமாகக் கொரானா பாதுகாப்புக்காக என்று 3800 கோடிகள் ஒதுக்கியுள்ளார்கள். மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு ஒரு மாதச் சிறப்பு ஊதியம் என்று அறிவித்து பணிபுரியும் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஆத்மாக்களின் வயிற்றில் பால் வார்த்துள்ளார் எடப்பாடி.
••••••

மத்திய அரசாங்கம் இந்தச் சூழலில் கூட மக்கள் நலப் பணியில் அயராது பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள். கொரானா வந்தால் என்ன? நீ எப்போதும் போல "சுங்கவரிக்கட்டணம் கட்டிவிட்டுச் செல்" என்று சொல்ல ஒவ்வொரு இடங்களிலும் ஆயிரக்கணக்கான வண்டிகள் நீண்ட நேரம் வரிசையில் நின்று கொண்டேயிருக்கிறது. வந்தால் வரவு. செத்தால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற அணுகுமுறை நன்றாகவே வேலை செய்கின்றது.
•••••

இப்போதுள்ள சமூகம் இதுவரையிலும் வாழாத புதிய சமூகம். தொழில் நுட்பத்திற்கு முதல் தலைமுறை சமூகம். பசி, பட்டினி, பஞ்சம் பார்க்காத சமூகம். வருடத்திற்கொரு முறை ஆடைகள் எடுக்க முடியும் என்பது மாறி தினமும் எடுத்து உடுத்தலாம் என்கிற அளவிற்கு வளர்ந்த சமூகம். வீட்டில் இருந்தபடியே அனைத்தையும் பெறும் சமூகம். எல்லாவற்றையும் எதிர்க்கேள்வி கேட்டு தங்களை அறிவுஜீவியாகக் கருதிக் கொள்ளும் சமூகம். மணிக்கொரு முறை வாட்ஸ் அப் பார்த்து தங்கள் அறிவுகளை வளர்த்துக் கொண்டேயிருந்தாலும் "இவர்கள் வைரஸ்ன்னு சொல்லி ஏதோ கௌப்பி விட்டுக்கிட்டு இருக்கானுங்க" என்று உறுதியாக நம்புகின்றார்கள். "தொட்டால் ஒட்டுமென்று கதையை கௌப்பி விடுறானுங்க" என்கிறார்கள். "அம்மை வந்த போது மஞ்சத் தண்ணியில குளித்து விட்டு நாம நம்ம வேலையைப் பார்கலையா?" என்கிறார்கள்.

இதைத்தான் சந்தையில் பேசிய பெண்மணியின் உரையாடல் எனக்கு உணர்த்தியது.

வீட்டுக்குள் நுழைந்த போது சந்தையில் பேசிய பெண்மணி சொன்ன வார்த்தை காதில் இன்னமும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது.

பக்கத்தில் நின்று கொண்டிருந்த பெண்மணியிடம் இப்படிச் சொல்லிக் கொண்டிருந்தார்.

"எங்கள் குடும்ப சோசியர் சொல்லியிருக்கிறார். நானெல்லாம் ஊரே வெள்ளத்தில் மூழ்கினாலும் கெட்டி ஆயுசு. வைரஸ்ஸாவது ஒன்னாவது".

நம்பிக்கை காப்பாற்றும் என்பது உண்மை. இதே நம்பிக்கை தமிழக ஜனத் தொகையைக் குறைத்து விடுமோ என்று அச்சமாகவும் உள்ளது.

25/3/2020

2 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நம்பிக்கை, காப்பாற்றும் என்றே நினைப்போம். அதே சமயத்தில் நீங்கள் எதிர்பார்த்த அச்சமும் மனதில் கொள்ள வேண்டியதே.
(எங்கள் பள்ளி நூற்றாண்டு விழா மலர்ப் பணியில் ஈடுபட்டுள்ளதால் பதிவுகளைப் பார்ப்பதில் சற்று தாமதம் ஏற்படுகிறது.)

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்து நம்பிக்கைகளையும் தகர்த்து எறியும் தன்மை ஊழிற்க்கு உண்டு...