Thursday, February 27, 2020

உங்கள் ஆரோக்கியத்திற்கான மருத்துவர்.

நுகர்வோர் சந்தையில் அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளின் தரம், விலைவாசி, ஆட்சி மாறும் போது உருவாகும் ஏற்ற இறக்கம் போன்றவற்றைப் பட்டியலிட்டுப் பார்ப்பதுண்டு. சென்ற ஐந்தாண்டு ஆட்சி பாஜக ஆட்சியில் மளிகைப் பொருட்களின் விலை கட்டுக்குள் இருந்தது. நான் ஒவ்வொரு முறையும் மொத்தக் கடை, சில்லறை விற்பனைக் கடைகள் என்று வீட்டில் உள்ள விலைப்பட்டியலை வைத்து சுய ஆராய்ச்சி செய்து பார்த்ததுண்டு. எங்களால் இருப்பு வைக்க முடியவில்லை. வாங்கும் போதும், விற்கும் போது கணக்குக் காட்ட வேண்டியுள்ளது. எங்களால் லாபம் சம்பாரிக்க முடியவில்லை என்று ஒரு மொத்தக் கொள்முதல் கடைக்காரர் என்னிடம் புலம்பியதைக் கேட்டுள்ளேன்.

ஆனால் கடந்த ஆறு மாதத்தில் விலைகள் மேலேறிக் கொண்டு இருக்கின்றது என்பதனை கண்கூடாகப் பார்க்க முடிகின்றது. இந்த முறை மளிகைச் சாமான்கள் வாங்கிய போது உறுதியாக உணர்ந்து கொள்ள முடிந்தது.
அடைவது எளிது. தக்க வைப்பது தான் கடினம்.



•••••
இத்துடன் நம் நுகர்வோர் சந்தையில் உள்ள பொருட்கள், அதன் மூலம் இவர்கள் அளிக்கும் தரம், தொடர்பில்லாத விலைகள் போன்றவற்றையும் கவனிப்பதுண்டு. ஆடம்பரப் பொருட்களைக் கண்டு கொள்வதில்லை. இருப்பவன் வாங்குகிறான். அது குறித்து நமக்குத் தேவையில்லை. ஆனால் ஒவ்வொரு குடும்பத்தினரும் பயன்படுத்தும் பொருட்களை வைத்து எந்த அளவுக்கு இங்குள்ளவர்கள் (நிறுவனங்கள்) கொள்ளையடிக்கின்றார்கள் என்பதனை குடும்பத்தினருக்கு அவ்வப்போது காரண காரியத்தோடு புரிய வைப்பதுண்டு.

இன்றைய சூழலில் பெண்களுக்கு பாக்கெட் மசாலாப் பொடி என்பது வரப்பிரசாதமாக உள்ளது. அரைத்துப் பயன்படுத்துவது என்பது இனி வாய்ப்பே இல்லை என்கிற அளவுக்கு வாழ்க்கைச் சூழல் மாறியுள்ளது. இந்தச் சூழல் தான் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மிகப் பெரிய வணிக லாபத்தைத் தந்து கொண்டிருக்கின்றது.
•••••
சமீபத்தில் ஆச்சி மசாலா குறித்து இணையத்தில் வெகு வேகமாகப் பல விசயங்கள் பரப்பப்பட்டது. அது சக்தி மசாலாவுக்கு சாதகமான சந்தையை உருவாக்கியதா என்பது குறித்துத் தெரியவில்லை. ஆனால் வீட்டில் எக்காரணம் கொண்டு இந்த இரண்டு மசாலாக்கள் மட்டுமல்ல? எந்த மசாலாக்களையும் வாங்கக்கூடாது என்பது தான் என் கட்டளையாகவும் விருப்பமாகவும் இருக்கும். காரணம் இரண்டுமே தரம் என்பது அதலபாதாளம்.

வீட்டில் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதற்காகச் சமீபத்தில் வாங்கிய சக்தி மிளகாய்ப் பொடியை அப்படியே உடைத்து மகளிடம் மோந்து பார் என்றேன். மீனில் தடவி நாக்கில் வைத்துப் பார் என்றேன். என்னப்பா காரம் என்பதே இல்லை என்றார். அதாவது மிளகாய்ப் பொடி என்கிற ரீதியில் அதுவொரு பொடி. அவ்வளவு தான். ஒவ்வொரு பொடிகளும் இப்படித்தான் இங்கே நுகர்வோர்க்கு வந்து சேர்கின்றது.
•••••

மிளகாயில் நல்ல காரம், சுமாரான காரம் என்று இரண்டு ரகம் உள்ளது. குண்டு மிளகாய், ஒல்லி மிளகாய், வத்தல் மிளகாய் என்று ரகம் ரகமாக உள்ளது. எந்த தரத்தில் வாங்கினாலும் அதற்கான தரம் இருக்கவே செய்கின்றது. கடித்தால் ஓரளவுக்குக் காரமாகத்தான் உள்ளது. ஆனால் மசாலாப் பொடி நிறுவனங்கள் அளிக்கும் எந்தப் பொடியும் அதன் இயல்பான தரத்திற்கு இல்லவே இல்லை.

சரி இவர்கள் விற்கும் விலை வாசியைப் பொருத்து இப்படிச் செயல்படுகின்றார்களா? சந்தையில் பயங்கரமான போட்டி நிலவுகின்றது. இதற்கு மேல் தரம் கொடுக்க முடியாதா? என்பதனை வேறு பக்கமாக யோசித்து ஒவ்வொன்றாகப் பட்டியலிட்டுப் பார்த்த போது வேறொரு உண்மை தெரிந்தது.
•••••

மசாலாப் பொடிகள் எந்த அளவுக்குச் சந்தையில் விற்கப்படுகின்றது என்பதற்கு சில உதாரணங்கள்.
(கரம் மசாலா 50 கிராம் ரூ 35, பிரியாணி மாசாலா 20 கிராம் ரூ 12, சிக்கன் மசாலா 50 கிராம் ரூ 27)
அதாவது உத்தேசமாக ஒரு கிலோ மசாலா என்பது இன்று சந்தையில் விற்கப்படுவது (மிகவும் குறைவாகக் கணக்கில் எடுத்துக் கொண்டாலும்) ரூ 550. ஆனால் இவர்கள் கொடுக்கும் மிளகாய்ப் பொடியை பாக்கெட் உடைத்து அப்படியே கண்ணில் தடவிக் கொண்டால் கூட ஒன்றும் செய்யாது என்கிற நிலையில் உள்ளது.
••••

மிளகாய் வாங்கி காய வைத்து அறவுக்கூலிக் கொடுத்து, கழிவு நீக்கி, எடை குறைவு கணக்கில் எடுத்துக் கொண்டு மொத்தமாகக் கணக்குப் போட்டுப் பார்த்த போது சில உண்மைகள் புரிந்தது.

7 கிலோ வாங்கும் போது .750 கிராம் காணாமல் போய்விடுகின்றது. அறவுக்கூலியோடு ஆறே கால் கிலோவுக்கு மொத்தச் செலவு 1430 ரூபாய் வருகின்றது. ஒரு கிலோவுக்கு ரூபாய் 227 வருகின்றது. 100 கிராம் ரூ 23 என்கிற அளவுக்குத்தான் வருகின்றது. கண்ணில் நீர் வரும் அளவுக்கு (இயல்பான தரத்தில் உள்ள மிளகாய்) உள்ளது. அதாவது ஒரு கிலோ தரமான மசாலாப் பொடி 230 ரூபாய். இதற்கு மேல் ஐம்பது சதவிகிதம் (அனைத்து செலவீனங்கள், லாபம், விளம்பரங்களின் செலவு) என்று வைத்துக் கொண்டாலும் 345 ரூபாய் வருகின்றது.

விளம்பரங்களுக்குக் கொண்டு போய் கொட்டிக் கொடுத்து, தரத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பிரபல்ய முகத்தைப் பார்த்தால் இவர்கள் வாங்கி விடுவார்கள் என்று நம்பி இவர்கள் செய்துகொண்டிருக்கும் தொழில் என்பது வேறுவிதமாகவே தெரிகின்றது. இவர்கள் அடிக்கும் கொள்ளை என்பது நாளுக்கு நாள் அளவுக்கு அதிகமாகப் போய்க் கொண்டேயிருக்கிறது.
உள்ளுர் சந்தையை ஆதரிக்க வேண்டும் என்பவர்கள் அவர்கள் அளிக்கும் தரத்தையும் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்.
•••••

இதில் மற்றொரு கிளைப் பிரிவையும் நீங்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு மசாலாப் பொடி அறைக்கும் இடங்களில் சிந்தும் பொடிகளை ஒன்றாகச் சேர்த்து வைத்துள்ளார்கள். அதனைத்தான் தெருவோர மீன் மற்றும் கோழிக்கடைகள் மிகக்குறைவான விலைக்கு வாங்கிக் செல்கின்றார்கள். அதுவொரு கலவையான பொடி. அத்துடன் அவர்கள் சேர்க்கும் பல சமாச்சாரங்களைக் கொண்டு சுடச்சுட, வண்ண வண்ண நிறத்தில் உங்களுக்குப் பொறித்துக் கொடுக்கின்றார்கள். உண்ணும் போது சுவையாக இருப்பது போலத் தோன்றும். நாளாக உள்ளே சென்றது அதன் வேலையை மெதுவாகத் தொடங்கும்.

இது பயமுறுத்தல் அல்ல. இன்று கோழி மற்றும் மீன் பொறித்து விற்கும் (தெருவோரக்கடைகள்) சந்தையென்பது இன்று சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கின்றது. இதே போல 5 ரூபாய் டீ 5 ரூபாய் வடை என்பது எளிய மக்களுக்கு விருப்பமானதாக, தேவையாகவும் உள்ளது. அதற்குப் பின்னால் உள்ள சந்தைகளும் கொடூரமாகவே உள்ளது.

இதற்கெல்லாம் எங்கே சார் நேரம் இருக்கிறது? என்று சொல்லாதீர்கள். உணவு தான் மருந்து. மருந்து தான் உணவு.

வெளிநாடு என்றால் வாய்ப்பில்லை. உள்ளுர் தானே? வீட்டுக்காரம்மாவுக்கு உதவி செய்யுங்கள். அவர்கள் தான் உங்கள் ஆரோக்கியத்திற்கான மருத்துவர்.

நாம் தான் முழித்துக் கொள்ள வேண்டும்.

8 comments:

Yaathoramani.blogspot.com said...

அற்புதமான அவசியமான பதிவு..பதிவுக்காக எடுத்துக் கொண்ட அக்கறை பாராட்டுக்குரியது...வாழ்த்துகளுடன்.

Yaathoramani.blogspot.com said...

அனைவருக்கும் பயன்படும் என்பதால் என் முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளேன்..

ஜோதிஜி said...

நன்றியும் அன்பும்.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ஆரோக்கியத்திற்கான மருத்துவரின் ஆலோசனைகளை ஒவ்வொருவரும் பின்பற்றவேண்டும். நானும் முயற்சிக்கிறேன், எங்கள் வீட்டில்.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு. நன்றி

திண்டுக்கல் தனபாலன் said...

அவரசத்திற்கு கூட வாங்குவதில்லை... ஏன்னென்றால் வீட்டில் அவை தீர்வதற்குள் செய்து விடுவார்கள்...!

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பதிவு. பலர் வீடுகளில் இப்படி பாக்கெட் மசாலாக்கள் தான்.

இன்னமும் எங்கள் வீட்டில் சாம்பார் பொடி போன்றவை வீட்டிலே தான் அரைக்கிறார்கள்.

கிரி said...

உணவுப்பொருட்களின் தரம் மிகக்குறைந்து விட்டது. உணவகங்களில் தற்போது சாப்பிடவே பயமாக உள்ளது.

நான் என்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதி வெளியில் தான் சாப்பிட்டு இருக்கிறேன், அப்போதெல்லாம் நம்பிக்கை இருந்தது.

தற்போது எதைப் போடுறானுகனே தெரியலை. அரசு உணவு தரக்கட்டுப்பாடு வாரியம் நினைத்தால், இதைச் சரி செய்ய முடியும். இதற்குத்தான் அவர்கள் இருக்கிறார்கள்.