Saturday, February 29, 2020

வணிகம் பழகு


பிறந்த குழந்தைக்கான ஆடைகள் எடுக்க "விலை குறைவாக இருக்கும்" என்ற பெண்களிடம் பெயர் பெற்ற ஜவுளிக்கடைக்குத்தான் தான் போக வேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்றி உள்ளே சென்று ஆடைகளின் விலையைப் பார்த்த போது சிரித்துவிட்டுத் திரும்ப வெளியே அழைத்து வந்து விட்டேன். இரண்டு ஜட்டியுடன் கூடிய இரண்டு குழந்தை சட்டைக்கு ரூ 500 போட்டு தள்ளுபடி என்று ரூ 400 போட்டு இருந்தனர். லாபத்துடன் கூடிய அதிகபட்ச விலை ரூ 120 என்பது இந்த அளவுக்கு விலை வைக்கக் காரணம் அங்குள்ள செலவீனங்கள். பண்டிகை தினங்கள், முக்கிய கொண்டாட்ட நாட்கள் தவிர பெரும்பாலான ஜவுளிக்கடைகளின் வியாபார லாபத்தை ஈடுகட்டப் பலவிதங்களில் சமாளித்து சந்தையில் நிற்க வேண்டிய தேவையுள்ளது. 




ஆண்கள் பயன்படுத்தும் சட்டை மற்றும் பேண்ட் பிட்டுகள், ரெடிமேட் சமாச்சாரங்களில் எந்தக் கடையும் அதிகம் லாபம் வைக்க முடியாது என்பதனை கவனித்துப் பார்த்தால் தெரியும். காரணம் வட மாநிலங்களில் அளவு கடந்து உற்பத்தியாகும் துணிகளை 120 நாள் கடனில் கொண்டு வந்து பிரபலக் கடைகளில் தள்ளிக் கொண்டேயிருக்கின்றார்கள்.  

ஆனால் குழந்தைகளின் ஆடைகள், பெண்களுக்கான பிரத்யோக ஆடைகளின் சந்தை ஒப்பீட்டளவில் குறைவு. விலைகள் வானுயர உள்ளது.  மக்கள் "ஷாப்பிங் அனுபவம்" பெறக் குளிர்சாதன சுக வசதிகள் பெற்று மயக்கத்தில் தங்கள் பணத்தை தாங்களாகவே விரும்பிக் கொடுத்து வருகின்றார்கள்.

காதர்பேட்டையில் குறிப்பிட்ட கடை அடையாளம் கண்டு அங்கே சென்ற போது ரூ 400க்கு ஒரு வருடம் ஒரு குழந்தை போடும் 12 வகையான பலவிதமான தரமான ஆடைகளை எடுக்க முடிந்தது.  என்னைப் பாராட்ட மனமின்றி மகளிடம் நான் எடுத்த விலை எப்படி? பெருமையாகப் பேசிக் கொண்டிருந்தார்.  சபாநாயகர் என்பவர் எப்போதும் அரசியல் சாசனத்தில் தனி அதிகாரம் பெற்றவர் தானே?

••••••

இன்று வந்த செய்தித்தாளுடன் 'சொமாட்டோ' விளம்பரத்தாளும் வந்து சேர்ந்தது.  என்னிடம் காட்டாமல் மறைத்துக் கொண்டு ரகசியமாக "பெண்கள் நலக் கூட்டணி" அமைத்துப் பேசிக் கொண்டிருந்தனர். 

அதில் எது வாங்கினாலும் ரூ 5 என்று சொல்லி இன்றே எங்கள் செயலியைத் தரவிறக்கம் செய்யுங்கள் என்று ஆசை காட்டியிருந்தனர். கோபி மஞ்சுரியன், சில்லி சிக்கன், சிந்தாமணி ஆம்லேட், மசாலா ப்ரை, ஸ்மோக்கி லாலி பாப் (2 துண்டு) என்று எல்லாமே ஐந்து ரூபாய்.  இதுவொரு சிறப்புத் தள்ளுபடி என்று சொல்லியிருந்தார்கள்.  விலை குறைவு என்றதும் நாம் சம்மதிப்பேன் என்று மேல் சபையில் ஏகமானதாகத் தீர்மானம் நிறைவேற்றி சபாநாயகர் ஒப்புதல் கொடுத்து ஜனாதிபதி என்னிடம் கொண்டு வந்தனர்.  

2 கோடி கையெழுத்துப் போல அதை வேறு பக்கம் நகர்த்தி வைத்து விட்டு ஒன்றும் சொல்லாமல் வெளியே சென்று விட்டேன். வந்ததும் சபாநாயகர் கேட்டார்.

"தரமான பொருட்கள் தகுதியான விலையில் தான் விற்கவேண்டும். அது தான் வியாபாரம்.  தரம் அதிகமாக விலை குறைவாக இருக்க வேண்டும் என்று எண்ணக்கூடாது. அது வியாபாரத்தில் வாய்ப்பில்லை. தரம் குறைவு. அதிக விலை என்றால் அதற்குப் பெயர் கொள்ளை", போன்ற தத்துவ முத்துக்களை உதிர்த்தால் டெல்லி கலவரம் போல மாறும் என்பதால் எளிமையாகப் புரிய வைத்தேன்.

"ஒரு முட்டை இன்று 5 ரூபாய். கோழிக்கறி 200 ரூபாய். தொடைக்கறி 300 ரூபாய் என்கிற நிலையில் இருக்கும் போது இவர்கள் இப்படி கொடுக்கக்கூடாது. கொடுக்கவும் முடியாது. ஆசைகளைத் தூண்ட வேண்டும் என்பது வியாபார யுக்தியாக இருந்தால் நீ விட்டில் பூச்சி" என்றேன்.  

"நீங்களும் எப்போது தான் புரியும் பேசப்போறீங்கன்னு பார்க்கத்தான் போகிறேன்?" என்று கலவரம் முடிந்த பின்பு புதிய ஐபிஎஸ் ஆபிசர் டெல்லி  கலவரப்பகுதிகளை வந்து பார்வையிட்ட மாதிரி என்னை ஒரு மாதிரியாகப் பார்க்கிறார்.

நான் என்ன செய்யட்டும்?


6 comments:

வெங்கட் நாகராஜ் said...

விட்டில் பூச்சி - சரியாகச் சொன்னீர்கள்.

எனக்கு நேற்று இப்படி ஸ்விக்கியிலிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது - எது வாங்கினாலும் 60% சதவீதம் தள்ளுபடி என! பொதுவாகவே வெளியுணவுகளை தவிர்க்கும் காரணத்தினால் தகவலை நீக்கி விட்டு அடுத்த தகவலுக்குச் சென்று விட்டேன்.

சபாநாயகர் - வீட்டுக்கு வீடு... :)

ஜோதிஜி said...

வீட்டுக்கு வீடு அல்ல. நாடு முழுக்க இப்படி இருக்கும் வீட்டில் தான் அமைதி நிலவுகின்றது வெங்கட்.

திண்டுக்கல் தனபாலன் said...

என்னது வருங்கால அமைச்சர் தாக்கப்பட்டாரா...? கிளம்புங்கள் தேவியர் இல்லத்திற்கு...!

G.M Balasubramaniam said...


"நீங்களும் எப்போது தான் புரியும் பேசப்போறீங்கன்னு பார்க்கத்தான் போகிறேன்?" சரியானபுரிதல்

ஜோதிஜி said...

அப்பாடா......நீண்ட நாள் உங்க ஆசை நிறைவேறியது...........

ஜோதிஜி said...

சைதை அக்கா தாக்கப்பட்டாரா.....அய்யகோ......