சுதந்திரக் கருத்து என்றால் என்ன?
முதல் இருபது வயதில் வறுமையால், சாதி சார்ந்த இழிவுகளால், மதம் சார்ந்த ஒதுக்கல்களால், உறவுகள் சார்ந்த புறக்கணிப்புகளால் வெந்து நொந்து தன் இடத்தை அடைய, அடைந்த இடத்தை தக்க வைக்க, மற்றவர்களை விடப் பல மடங்கு போராடிப் பெற்ற பின்பு உருவாகும் வாழ்க்கையின் இறுதியில் என்ன கிடைக்கும்? உருவாகும் எண்ணங்களில் நீங்கள் என்ன மகிழ்ச்சியான கருத்தை எதிர்பார்க்க முடியும்?
"சுட்ட வடு" என்று அய்யன் வள்ளுவர் இதைத்தான் ஆழமாக நமக்குப் புரிய வைக்கின்றார். அது மாறாது. கடைசி வரையிலும் மறையாது. எந்தந்த வயதில் எவையெல்லாம் இயல்பாகக் கிடைக்க வேண்டுமோ அது கிடைக்காத பட்சத்தில் உள்ளே வன்மமாகத்தான் எரிமலை போல உள்ளே கனன்று கொண்டேயிருக்கும். வெளியே துப்புவதற்கு சமய சந்தர்ப்பங்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும்.
இழிவுகளைத் துடைத்தெறிந்து விட முடியும். புறக்கணிப்புகளை மறந்து விட முடியும். நான் வென்று விட்டேன் பார்த்தாயா? என்று மறைமுகமாக வாழ்ந்து காட்டி பழிவாங்கி விட்ட திருப்தி மனதிற்குள் கிடைத்து இருந்தாலும் அது ஆறாத, ஆற்ற முடியாத வன்மமாக உள்ளே இருப்பதைச் சிலரால் மட்டுமே ஆக்கப் பூர்வமாக மாற்ற முடியும்.
அதற்குப் புத்தகங்கள் உதவும். பழகும் மனிதர்கள், சந்திக்கும் சூழல் உதவும். ஆனால் பலரால் பழசை மறக்க முடியாமல் உள்ளே வைத்துக் குமைந்து குமைந்து இணையப் பெருவெளியில் கொட்டத் துவங்குகின்றார்கள். மனித மனதில் வித்தியாசங்களை அளவிட முடியாது. நம்மால் வேடிக்கை தான் பார்க்க முடியும்.
எத்தனை தத்துவங்கள் சொன்னாலும், உணர்த்தினாலும், புரியவைத்தாலும் வலித்தவனுக்குத் தான் வலியின் சொரூபம் புரியும். தெரியும்.
காலம் கற்றுக் கொடுக்கும்.
4 comments:
காலம் கற்றுக் கொடுக்கும்
‘உண்மை ஐயா
அவரவருக்கு ஏற்படும் வித்தியாசமான அனுபவங்கள?
நன்றி ஆசிரியரே.
அனுபவங்கள் தான் செதுக்கின்றது.
Post a Comment