Saturday, November 23, 2019

ஊர் நினைவுகள் 3



நாம் வாழ்ந்த ஊரில் இடைவெளி விட்டுச் செல்லும் போது நம் உணர்வு எப்படியிருக்கும்? திருமணம் ஆகி சில வருடங்கள் கழித்து  தன் பிறந்த வீட்டுக்கு வரும் பெண்ணின் மனம் போல இருக்கும் என்பதனை நீங்கள் உணர்ந்து இருக்கின்றீர்களா?

ஊர் குறித்து, உறவுகள் நினைத்து வருத்தங்கள், கோபங்கள் இருந்தாலும் உள்ளுற வாஞ்சையும் இருக்கத்தானே செய்யும். 

நம்முடன் படித்தவர்கள் முதல் நம்மோடு பழகியவர்கள் வரைக்கும் இன்னமும் அதே ஊரில் இருந்தாலும் அவர்கள் நமக்கு அன்னியமாகத்தான் தெரிகின்றார்கள்.  காரணம் வாழ்க்கை முறை மாறியிருக்கும். சிந்தனைகள் முற்றிலும் மாறியிருக்கும்.




வாழ்ந்த ஊரில் நமக்கான அங்கீகாரம் கிடைப்பது எளிதன்று.  சாதி, மதம் முதலில் உள்ளே வரும்.  அடுத்தடுத்து பலதும் குறுக்கும் நெடுக்கும் பாயும். திடீரென்று உள்ளே வந்து வாழ்ந்து கொடிகட்டிப் பறந்து கொண்டிருப்பவர்களுக்குப் பதட்டம் உருவாகும்.  இவற்றையெல்லாம் மீறி உங்களுக்கு நீங்கள் பிறந்த ஊரில் அங்கீகாரம் கிடைக்க வேண்டுமென்றால் உச்சக்கட்டப் பதவியில் இருக்க வேண்டும்.  ஊரே போற்றும் நட்சத்திரமாக இருந்தால் மட்டுமே வாய்ப்பு அமையும்.

அங்கேயே தொடக்கம் முதல் வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு அங்குள்ள ஒவ்வொன்றும் மிகச் சாதாரண விசயங்களாகவே தெரியும். நமக்கு அங்கே உருவான, உருவாகிக் கொண்டிருக்கும்  மாற்றங்களைப் பார்த்துப் பிரமிப்பாக இருக்கும்.  அப்போது நமக்குள் உருவாகும் உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. 

 இந்த உணர்வு உங்களுக்குத் தோன்ற வேண்டுமென்றால் 50 வயதைத் தொட்டு இருக்க வேண்டும் அல்லது கடந்திருக்க வேண்டும். 

அம்மா, தம்பி, அண்ணன் என்று ஒவ்வொருவரும் தனித்தனியான அருகருகே உள்ள பகுதியில் இருக்க வளர்ந்த வீட்டில் அண்ணன் ஒருவர் இருக்கின்றார்.  மகள்களிடம் சொல்லிவிட்டுச் சென்றேன்.  "ராமர் பிறந்த இடம் அயோத்தி என்றால் என் வீடும் உங்களுக்கு அயோத்தி தானே?" என்று கேட்டேன்.  "மொக்கை போடாமல் சீக்கிரம் வந்து சேரப் பாருங்கள்" என்று வாழ்த்தி அனுப்பி வைத்தார்கள்.

இருபது வருடத்திற்குப் பிறகு முதல் முறையாகத் தொடர்ந்து எந்த வேறு வேலையும் இல்லாமல் 3 நாட்கள் நான் பிறந்த ஊரில் இருந்தேன்.  எல்லாப் பணியையும் ஒதுக்கி வைத்து விட்டேன்.  அமேசான் போட்டிக்கான புத்தகத்தை வெளியிட்ட பின்பு கிளம்பினேன். அது தொடர்பாக நெருங்கிய நண்பர்கள் மட்டும் அழைத்தனர்.  தொழில் சார்ந்த தொடர்புகள் அழைப்புகள் வராத அளவிற்குத் திட்டமிட்டு வைத்திருந்தேன். 

முதல் பிரச்சனை உருவானது. இரவு எட்டரை மணிக்கே தூங்கத் தொடங்கி விடுகின்றார்கள். இப்போது தொலைக்காட்சி வந்த காரணத்தால் அது ஒரு மணி நேரம் தள்ளிப் போய்விடுகின்றது.  அப்படியும் பாதிப் பேர்கள் பத்து மணிக்கு நாம் வெளியே நடந்து வந்தால் என்ன நடுராத்திரியில் வேலை? போய்த் தூங்க வேண்டியது தானே? என்கிறார்கள்.




24 மணி நேரமும் உழைத்துக் கொண்டே எப்போது ஓய்வு? எப்போது தூக்கம் என்று தெரியாமல் வாழ்கின்றவனுக்கு அதிக நேரம் வித்தியாசம் காட்டும் வேறொரு தேசம் போலவே இருந்தது.

காலை முதல் மாலை வரைக்கும் ஒவ்வொரு இடமாகச் செல்வது. நடந்தே செல்வது. அண்ணன் மகன் வைத்திருந்த பைக், மற்றும் மிதி வண்டியில் செல்வது என்ற என் செயல்பாடுகளைப் பார்த்து என் அண்ணிக்குக் குழப்பம் வந்து விட்டது.  மிதி வண்டியை எடுத்துக் கொண்டு சென்ற போது  பொறுக்க முடியாமல்  மூன்றாவது நாள் கேட்டே விட்டார்.

"நீங்க இன்னமும் மாறவே இல்லை. நான் திருமணம் ஆகி வந்த போது எப்படி இருந்தீங்களோ அப்படியே தான் இருக்குறீங்க?" என்றார்.

குடும்பத்தில் உள்ள மற்ற அண்ணன், தம்பி, அக்கா, தங்கை போன்ற அனைவரையும் விட என் பேச்சு, எண்ணம், செயல்பாடு எல்லாமே சற்று வித்தியாசமாக இருக்கும் என்பதால் எவரும் அத்தனை சீக்கிரம் என்னிடம் நெருங்கமாட்டார்கள்.  

பொது விசயங்களைத் தவிர குடும்ப விசயங்களில், அது சார்ந்த பஞ்சாயத்துகளில் நான் எப்போதும் ஆர்வம் காட்டுவதில்லை. அப்படி என்னிடம் பேச வந்தாலும் மனைவியிடம் நகர்த்தி விடுவேன்.  காரணம் 1947க்கு பிறகு இந்த உலகம் மாறியுள்ளது என்பதனை அவர்கள் இன்னமும் நம்பத் தயாராக இல்லை. ஒவ்வொருவரும் அவரவருக்கு உகந்த மாதிரி புரிந்து வைத்துக் குறிப்பிட்ட எல்லைக்கோட்டுக்குள் இருப்பதால் நான் அவர்களைத் தொந்தரவு செய்ய விரும்புவதில்லை.  அதே சமயத்தில் அவர்களின் பழமைவாத எண்ணங்களை என்னிடம் அண்ட விடுவதும் இல்லை.  இதுவே பலசமயம் பாராட்டாகவும் சில சமயம் கோப வார்த்தைகள் மூலமாகவும் என்னை நோக்கி வரும்.  கண்டு கொள்வதில்லை.

வெறுக்கவும் முடியாமல் விரும்பவும் முடியாமல், ஆதரிக்கவும் மனமின்றி அல்லாடிக் கொண்டிருக்கும் அம்மாவை இந்தப் பயணத்தில் சந்திக்க முயலவில்லை.

இந்தியாவை, தமிழகத்தைச் சுற்றி வருவதை விட நாம் பிறந்த ஊர், அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள், உடன் இருக்கும் சிறு நகரங்களை நம்மில் எத்தனை பேர்கள் முழுமையாகப் பார்த்திருப்போம்.  இது தானே? என்று எளிதில் கடந்து வந்து இருப்போம். திடீர் பிரபல்யம் அந்த ஊருக்கு வந்து சேரும்.  அதன் பிறகு அடித்துப் பிடித்து மற்றவர்களுடன் நாமும் புதிய நபர்கள் போல அங்கே செல்வோம்.  

ஆனால் நான் முந்திக் கொள்வதுண்டு.  இன்று திருவண்ணாமலை பிரபல்ய தளமாக விளங்குகின்றது.  நான் 1992 முதல் 1997 வரைக்கும் அந்த ஊரை அங்குலம் அங்குலமாக ரசித்து வந்துள்ளேன்.  இப்போது அந்தப் பக்கமே செல்வதில்லை.

ஊரில் ஒவ்வொரு சின்னச் சின்ன இடங்களையும் பார்த்துக் கொண்டே வந்தேன். பள்ளிக்கு நடந்து வந்த தடம், முதல் முறையாக நண்பன் அனந்த ராமன் வீட்டில் இருந்த மிதி வண்டியை அவன் அப்பாக்குத் தெரியாமல் எடுத்து வந்து நிறுத்திய சந்து, குரங்கு பெடல் போட்டு மிதிவண்டியை ஓட்டி, விழுந்து கற்றுக் கொண்ட சந்து, "மாப்ளே உன் பெயர் ஒரு நாள் உலகம் முழுக்க தெரியும் அளவிற்கு வருவேடா...." என்று ஆறாம் வகுப்பிலிருந்து இன்று வரைக்கும் சொல்லிக் கொண்டிருக்கும் கோபிநாதன் வாழ்ந்த பழைய வீடு, 

நண்பர்கள் தூண்டி விட டைப் அடித்து முடித்து விட்டு வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்த பெண்ணிடம் ஐ லவ் யூ சொன்ன சந்து,  மாவு மாங்காய் இருந்த ஆச்சி வீட்டில் கல் எறிந்து பறிக்க முற்பட்ட போது அவர் சாணியைக் கரைத்து உள்ளே இருந்து ஊற்றிய வீடு, ஒவ்வொரு வாரமும் திருஷ்டி கழித்துச் சிதறு தேங்காய் உடைக்க வருபவர்களிடம் அடாவடியாக பிடுங்கி நாங்கள் உடைக்கின்றோம் என்று அவர்களை நகர்த்தி விட்டு கருவேலக்காட்டுக்குள் நாலைந்து பேர்கள் சண்டை போட்டுக் கொண்டே தின்ற பொது திறந்த வெளி கழிப்பிடம் என்று அனைத்து இடங்களும் தேவையின் பொருட்டு வெவ்வேறு விதமாக மாறியிருந்தது.

ஒவ்வொரு நாளும் அண்ணியிடம் கொண்டு போய்க் காட்டிய போது சிரித்துக் கொண்டே சொன்னார்.

"உங்களைப் பார்த்தால் உங்கள் அம்மாவே பேச பயப்படுகிறார்கள்.  நீங்க இப்படி பச்சப்புள்ளையாட்டாம் இங்கே செய்து கொண்டிருப்பதைப் பார்த்தால் அவர்கள் நம்ப மாட்டார்கள்" என்றார்.

என்ன செய்வது அவர்களுக்கு அவர்கள் வாழ்க்கையை வாழ ஒரு முகம் தான் தேவைப்பட்டது.  

அவர்கள் வாழ்ந்த சந்துக்குள் இருந்து உலகைப் பார்த்தார்கள்.  இது மட்டும் தான் உலகம் என்று நம்பி வாழ்ந்தார்கள். இன்னமும் அதனையே நம்புகின்றார்கள். என்னையும் நம்பச் சொல்கின்றார்கள். நான் உலகம் முழுக்க பறந்து வந்து விட்டேன். வானத்திலிருந்து உலகத்தைப் பார்க்கிறேன். 

அதுவே என்னை அவர்களை அன்னியமாகவும் பார்க்க வைக்கின்றது என்றேன்.








5 முதலாளிகளின் கதை (திருப்பூர் கதைகள் Book 15) (Tamil Edition) by Jothi G ஜ...


6 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

படிக்கப் படிக்க எனக்கும் என் சொந்த ஊருக்குச் சென்று தங்கி வர வேண்டும் என்ற கட்டுக்கடங்கா ஆவல் எழுகிறது. ஆனாலும் வாய்ப்புதான் இல்லை. சொந்த ஊரில் சொந்த பந்தங்கள் இல்லையே என்னும் ஏக்கம்தான் மிஞ்சுகிறது
நீங்கள் கொடுத்து வைத்தவர்

அது ஒரு கனாக் காலம் said...

சொந்த ஊர் பற்றி அழகாக படமெடுத்து சொல்லியிருக்கிறீர்கள் , மாங்காய் , மங்கை , I love u , குரங்கு பெடல் , டீ பிஸ்கூட் / வடை ..... எல்லார் வாழ்விலும் நீக்கமற நிறைந்துக்கிறது அனுபவங்களால் .... இதை படிக்கும் பொழுது / நினைத்து பார்க்கும் பொழுது , நம் குழந்தைக்கு ( குழந்தைகளுக்கு ) இது போன்ற அனுபவம் இல்லையே என்ற ஏக்கம் நிச்சயம் வரும். ஆனால் இந்த காலத்திற்கு ஏற்ப , அவர்களிடமும் ஓர் உலகம் உள்ளது , நாம் தான் கண்டு களிக்க வேண்டும்....

எனக்கு சொந்த ஊரெல்லாம் கிடையாது , வளர்ந்த ஊர் தான் ... சீக்கரம் அங்கு போகவேண்டும் என்ற ஆவலை தூண்டிவிட்டீர்கள் , ஆனால் , கண்ணுக்கெட்டிய தூரம் வரை அந்த வாய்ப்பு தெரியவில்லை...

Mohamed Yasin said...

கடந்த கால நினைவுகளை அசைபோடுவதில் உள்ள சுகம் வேறுஎதிலும் இருக்குமா என்று தெரியவில்லை??? இயந்திரத்தனமாக சுற்றிக்கொண்டிருக்கும், வாழ்க்கையில் யாருக்கும் எங்கேயும் தங்கி இளைப்பாற, கடந்த கால நினைவுகளை அசைபோட நேரமும் இல்லை, நேரமிருந்தாலும் விருப்பமில்லை என்பது தான் யதார்த்தமான உண்மை!!!

சொந்த ஊரை விட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாக வெவ்வேறு பகுதியில் இருந்ததால், சொந்த ஊருக்கு செல்வது என்றாலே அலாதி இன்பம்.. என்றுமே நான் சொந்த ஊரை கண்டு வியக்கும் அதிசயம் "மனிதர்கள்". நாட்களும், கிழமைகளும் மாறிக்கொண்டிருந்தாலும் என்றுமே மாறாத ஒரு அதிசயமாக நான் பார்ப்பது மனிதர்களை தான்!!!

கோவையில் பணிபுரிந்த நேரத்தில் 10 மணி நேரம் தொடர்ந்து பயணம் செய்த களைப்பு, எங்கள் ஊர் எல்லையை தொட 10 நிமிடம் இருக்கும் போது பறந்து ஓடும்.. சொந்த ஊரின் வாசனையை வெளி ஊரில் இருந்து வந்த அகதியால் மட்டுமே நுகர முடியும்.. அந்த வகையில் நானும் ஒரு அகதியே!!!

என்னுடைய சொந்த அனுபவத்தை 7 வயது மகனிடம் பகிரும் போது அதிசயமாக கேட்கிறேன்.. உங்க ஸ்கூல்ல AC கூட இல்லையா??? என்று.. என்ன சொல்லி அவனுக்கு புரியவைக்க முடியும் உங்கப்பன் படிக்கும் போது சொந்த கால்ச்சட்டை கிடையாது என்று!!!
உங்களின் அனுபவம் சுவைக்க, சுவைக்க தெவிட்டாமல் இருக்கிறது.. அந்த ஊர் நினைவலைகளில் இன்னும் அதிகம் நீந்த மனம் நாடுகிறது!!!

ஜோதிஜி said...

உங்க ஸ்கூல்ல AC கூட இல்லையா??? என்று.. என்ன சொல்லி அவனுக்கு புரியவைக்க முடியும் உங்கப்பன் படிக்கும் போது சொந்த கால்ச்சட்டை கிடையாது என்று!!!....... சப்தமாக சிரித்து விட்டேன் யாசின்.

ஜோதிஜி said...

வாய்ப்பு என்பது நாம் உருவாக்கிக் கொள்வது தான் சுந்தர்

ஜோதிஜி said...

நீங்கள் இருப்பதே சரித்திரப் பிரசித்திப் பெற்ற ஊர் தானே?