Saturday, April 20, 2019

எழுதிய சில குறிப்புகள்


இந்த வருடம் +2 பாடத்திட்டம் கடினம். பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து கேள்விகள் கேட்டார்கள். புதிய பாடத்திட்டம். கிராமத்து மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பது போன்ற பல செய்திகள் வந்தன. அல்லது உருவாக்கப்பட்டன.

ஆனால் 238 அரசு பள்ளிக்கூட மாணவர்கள் நூறு சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழக மாணவர்கள் நடந்து முடிந்த +2 பரிட்சையில் பெற்ற பாடவாரியான தேர்ச்சி சதவிகித விபரங்கள்.

தமிழ் 94.12 %
ஆங்கிலம் 93.83 %
இயற்பியல் 93.89 %
உயிரியல் 96.05 %
கணினி அறிவியல் 95.27 %
வேதியியல் 94.88 %

நீந்தக் கற்றுக் கொடுங்கள். அவர்களே நீந்தத் தொடங்கி விடுவார்கள்.
மாற்றத்தை அனுமதியுங்கள்.

********

ஓட்டுப் போடச் சென்ற நாளில் முதல் முறையாக ஓட்டுப் போட தன் அம்மா அப்பாவுடன் அந்த பெண்ணும் வந்து இருந்தாள். எல்லோரும் வரிசையில் நின்று இருந்தாலும் வயது வித்தியாசம் பாராமல் அனைவர் கண்ணும் அந்த பெண் மேல் தான் இருந்தது. அவர்கள் உள்ளே நுழைந்த போதே உயர் நடுத்தர வர்க்கம் என்பதனை அவர்கள் நடவடிக்கையில் புரிந்து கொண்டு அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். காரணம் அந்த பெண் அணிந்திருந்த உடைகள் ரொம்பவே வித்தியாசம். 

இதைப் பற்றி விரிவாக எழுதினால் உன் கண் மேல் தான் தவறு. பொத்திக்கிட்டு போவீயா? என்று கணவான்கள் கேட்கக்கூடும். பொத்த கூட்டமும் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தந்தையும் தாயும் பார்த்துக் கொண்டு தான் இருந்தார்கள். அவர்கள் பெருமையாக எடுத்துக் கொண்டார்கள்? இல்லை இவர்கள் எப்பவுமே இப்படித்தான் தான் பாஸ் என்று பெருந்தன்மையாக எடுத்துக் கொண்டார்களா? என்று தெரியவில்லை.

இணைய விளையாட்டில் கவனம் செலுத்தி மதிப்பெண்கள் கோட்டை விட்ட போன்ற பசங்களை ஒன்றுமே செய்யக்கூடாது. அவர்கள் மேல தப்பில்ல. அவர்கள் அப்பன் ஆத்தாளைத் தெருவுக்கு கூட்டிட்டி வந்து ................... செய்துடனும். இல்லையென்றால் இந்த மதிப்பெண்கள் போதும்? என்று புலம்பாமல் பொத்திக்கிட்டு இருக்கவேண்டும்.

சந்தோஷமா, சௌக்கியமாக, ஜாலியாக, அவங்க அவங்க விருப்பப்படி இருங்க. ஆனால் இதனால் விளைவுகள் உருவாகி சங்கடங்கள் வரும் போது புலம்பாதீங்க.

**************

2019 பாராளுமன்ற பொதுத் தேர்தல்

நான் இருக்கும் பகுதியில் மூன்று வாக்குச் சாவடிகள் உள்ளது. மூன்றிலும் சுமாரான கூட்டம். இன்னும் முழுமையாக மக்கள் வந்து சேரவில்லை.

சென்ற முறை வாக்குச் சாவடிக்கு நுழையும் முன்னே பல கட்சிக்காரர்கள் அவரவர் சின்னத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் ஒப்புகை சீட்டு வழங்கி ஆதரவு கேட்டார்கள். இந்த முறை கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆதரவு மேசை ஒன்று உள்ளது. அதிலும் நபர்கள் யாருமில்லை. ஒப்புகை சீட்டுக்கு (இணையம் வழியே பெற முடியாதவர்கள்) பலரும் தடுமாறுகின்றார்கள்.

இந்த முறை அனல் பறக்கும் பிரச்சாரம் என்பதன் அர்த்தம் மாறியுள்ளது.

ஓட்டுச் சாவடிக்குள் அந்தந்த கட்சி சார்பாளர்கள் அமர்ந்திருப்பார்கள். இந்த முறை கட்சிக்காரர்கள் இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் பசங்கள் தான் உட்கார்ந்து இருந்தனர். நிச்சயம் அவர்கள் கட்சிக்காரர்கள் இல்லை. நாம் யூகித்துக் கொள்ள வேண்டியது தான். பெயரை அதிகாரி வாசிக்கும் போது அவர்கள் டிக் அடித்துக் கொள்ள வேண்டியது. ஒரு நாள் கூலி.

மூன்று தளங்கள் உள்ள அரசு பள்ளிக்கூடத்தின் ஒவ்வொரு வகுப்பறையும் யாரோ ஒரு நிறுவனத்தின் பெயர் தான் வகுப்பின் முகப்பில் பொறித்துள்ளனர். அவர்கள் தான் அரசு பள்ளிக்கூடங்களை வாழ வைத்துக் கொண்டு இருக்கின்றனர். அவர்களும் உதவியிருக்காத பட்சத்தில் சிதைந்த புதைபொருளாகக் காட்சிப் பொருளாக மாறியிருக்கக்கூடும். (சென்ற வருடம் தமிழ்நாடு அரசு கல்வித்துறைக்கு ஒதுக்கிய தொகை 28 ஆயிரம் கோடி)

நாய்கள் கத்தும். குலைக்கும். பயமுறுத்தும். மாற்றத்தை விரும்புவர்கள். ஊழல்வாதிகளை விரட்ட, இந்திய தேசத்தில் நம் குழந்தைகளும் எதிர்காலத்தில் கம்பீரமாக வாழ வேண்டும் என்பதற்காக மாறாத எண்ணத்துடன் தன்னம்பிக்கையுடன் ஓட்டளிக்க முயலவும்.

மாற்றம் ஒன்றே மாறாதது.

••••••••••••••

இப்போது வரைக்கும் 63 சதவிகிதத்தை எட்டிப் பிடிக்கவே இழுபறியாக உள்ளது. காலையில் வாக்குச் சாவடிக்குச் செல்லும் போதே எனக்குச் சந்தேகமா இருந்தது. எங்கும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வேகம் இருப்பதாகத் தெரியவில்லை.

அடுத்து எந்த கட்சி மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் தேர்தல் சீர்திருத்தம் சார்பாகப் பல நடவடிக்கைகள் எடுத்தே ஆக வேண்டும். குறிப்பாக ஆதார் எண்ணுடன் ஒவ்வொருவரின் வாக்காளர் அடையாள அட்டையை இணைத்தே ஆக வேண்டும். செய்வார்களா? என்பது சந்தேகமே.

ஊர் விட்டு ஊர் போய் ஒட்டுரிமையைச் செலுத்தும் பழக்கத்தை மாற்றி நவீன தொழில் நுட்ப வசதிகளைக் கொண்டு வர வேண்டும். கட்டாயம் ஒப்புகைச் சீட்டு குறுஞ்செய்தி, வாட்ஸ்அப், மின் அஞ்சல் வாயிலாகக் கிடைக்கும் அளவிற்கு மாற்றத்தை உருவாக்க வேண்டும்.

திருப்பூரில் உள்ள ஆறு சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய பாராளுமன்ற தொகுதிக்கு ஏறக்குறைய 1700க்கு மேற்பட்ட வாக்குச் சாவாடிகள் உள்ளது. ஒரு கட்சியின் வேட்பாளர் 1700 பேர்களை நியமிக்க வேண்டும். ஒரு நபருக்கும் அனைத்து செலவுகளுக்கும் சேர்த்து குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாயாவது கொடுத்தால் மட்டுமே ஆட்கள் கிடைப்பார்கள். இதற்கு மட்டும் ஒரு வேட்பாளர் ஒரு நாளில் 17 லட்சம் ரூபாய் செலவளிக்க வேண்டும். இதே போலச் சாதாரண செலவுகளைக் கணக்கிட்ட போதே தலைசுற்றுகின்றது. இதற்கு மட்டுமே சில கோடிகள் வேண்டும். தேர்தல் ஆணைய விதிமுறைகளைப் படித்துப் பார்த்த போது சிரிப்பு சிரிப்பாக வருகின்றது. மாறாத முட்டாள்தனம். மாற்ற விரும்பாத பழமைவாதம்.

கிராமங்களில் திமுகவின் தேர்தல் அறிக்கை பெண்கள் மத்தியில் பேராவலை உருவாக்கியுள்ளது.

••••••••••••••••••

தமிழர்களின் சேமிப்பு குணத்தைப் பற்றி சில வார்த்தைகளில் சொல்ல முடியுமா?

நிச்சயமாகப் பெருமையாகச் சொல்ல முடியும். 

15 ந் தேதி இரவு திருப்பூரில் தொழிலாளர்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரைக்கும் அமைதியாக வரிசையாக டாஸ்மாக்கில் பெருங்கூட்டமாக நின்றனர். வெளியே வரும் போது சட்டைப் பை, பேண்ட் பாக்கெட் ல் பக்கவாட்டில் இரண்டு புறமும், பின்புறம் உள்ள பாக்கெட் ல் என்று எல்லா பைகளில் வாங்கிய மதுப் பாட்டிலை வைத்துக் கொண்டு அமைதியாக வெற்றிக்கழிப்புடன் சென்றனர். காரணம் கேட்ட போது 16,17,18 அன்று மதுக்கடைகளுக்கு அரசாங்கம் விடுமுறை விட்டுள்ளது என்பதனை பொறுப்பாகப் பதில் கூறினர்

•••••••••••••••

இந்த தேர்தலில் உங்களைக் கவர்ந்த வாசகம் ஏதாவது உண்டா?

அட! ச்சும்மா இருங்க. பா.ஜ.க. வந்துரும்!!!!!

•••••••••••••

கேள்வி

பா.ஜ.க. அரசு உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் நேரிடையான உடனடி பலன் அளிக்கும் வண்ணம் ஏதேனும் உதவி ஏதும் செய்துள்ளதா?

பதில்

நிச்சயமாக.

சமீபத்தில் ட்ராய் என்ற தொலைக்காட்சிகளை வரைமுறைப் படுத்தும் சட்ட சீர்திருத்தம் கொண்டு வந்தது. அதற்கு விளக்கமாக நீண்டகால (எப்போதும் போல) செயல்திட்டம் என்றொரு வரைவு விளக்கங்களை கொடுத்து. படித்தவுடன் கிழித்துப் போட்டு விடவும் என்று சொல்லியிருந்தார்கள். நானும் அதன்படியே மறந்து போய் விட்டேன்.

அன்றைய தினமே வீட்டுக்கு வந்த கேபிள் காரருடன் உரையாடிக் கொண்டிருந்த போது அந்த சூறாவளியில் நானும் சிக்கிக் கொண்டேன் என்பதனை உணர்ந்து கொண்டேன்.

தொடக்கத்தில் 150 ரூபாய் வாங்கிக் கொண்டு எல்லாச் சேனல்களையும் கொடுத்துக் கொண்டிருந்தவர்கள் இந்த திட்டத்தின் அடிப்படையில் இலவச சேனல் 150 மட்டும் அத்துடன் ஜிஎஸ்டி சேர்த்து 162 ரூபாய் என்றார்கள். உங்கள் ஜிஎஸ்டி எண் வேண்டும் என்றேன். அது முதலாளி யாருக்கும் சொல்லக்கூடாது என்று சொல்லியுள்ளார்கள் என்றார். நானும் தேசபக்தி உடையவன் என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக இதை பெருந்தன்மையாக ஏற்றுக் கொண்டேன். எனக்கு இலவச சேனல் மட்டும் போதும் என்று மறுபடியும் நினைவூட்டினேன்.

அடுத்த நாள் விஜய் பேக் சேர்த்துக் கொள்ளுங்கள். 25 ரூபாய் சேர்த்து வரும் என்றார்கள். சரி என்றேன். இரண்டு நாட்கள் அமைதியாக இருந்தவர்கள் சன் பேக் கட்டாயம் போட்டே ஆக வேண்டும். மொத்தம் 260 ரூபாய் என்றார்கள். நான் ராத்திரி சுடுகாட்டுக்குப் போக விரும்பவில்லை என்று தொடர்பை துண்டித்தேன். அவர்களும் துண்டித்து விட்டார்கள்.

அதன் பிறகு கேபிள் ஆட்கள் என் பக்கம் தலைவைத்து படுக்கவே இல்லை. காரணம் இது போன்ற சமயங்களில் இவர்களைப் போன்ற ஆட்களிடம் என் மனஆறுதலுக்காக செந்தமிழில் கூடுதலாக பேசிவிடுவது வழக்கம்.

முட்டாள் பெட்டியிடம் விடுதலை பெற்று விடுமுறையில் இருக்கும் மகள் தினமும் தமிழ் இரண்டு செய்தி தாள்கள், ஆங்கில செய்தி தாள், மற்றும் வார இதழ்கள் படித்து முடித்து விட்டு நேருவின் சுயசரிதை 450 பக்கத்தையும் படித்து முடித்து விட்டு அடுத்த புத்தகம் என்ன? என்று கேட்கிறார்

*******

தமிழகத்தில் கோடை விடுமுறையில் அம்மாக்கள் அதிகமாக உச்சரிக்கும் வாசகம் எது?

எப்பத்தான் இந்த பள்ளிக்கூடம் திறப்பாங்களோ?

•••••••••••••

12 comments:

KILLERGEE Devakottai said...

அலசல் கதம்பம் சிறப்பு நண்பரே...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அருமையான அலசல்.
அந்தப்பெண்...இவரைப்போல பலரை நான் கண்டுள்ளேன், அமைதியாகவே இருந்துள்ளேன். காரணம் நீங்கள் சொன்னதைப்போலவே.

திண்டுக்கல் தனபாலன் said...

முகநூலில்...

இங்கு இப்போது பகிர்வாக...

(!) வலைத்தளத்தின் நினைவாக... (!)

ஸ்ரீராம். said...

தஞ்சையில் நான் படித்த தூய அந்தோணியார் பள்ளி தேர்ச்சி விகிதத்தில் இதுநாள் வரை செய்யாத சாதனையைச் செய்திருக்கிறது என்கிற செய்தி பெருமையாக இருந்தது.

கரந்தை ஜெயக்குமார் said...

அலசல் சிறப்பு ஐயா
ஆனாலும் கல்வித் துறையின் மீது, ஆசிரியர்கள் மீது, தாங்கள் மாற்றுக் கண்ணோட்டத்தில் இருப்பது புரிகிறது ஐயா

ஜோதிஜி said...

நீங்க சொல்வதும் உண்மை தான். கல்வித்துறையில் நூறு பேர்களில் 25 பேர்களின் அர்ப்பணிப்பு நிறைந்த உழைப்புக்கு கிடைத்த பரிசு இது. மீதி 75 பேர்கள் (ஆசிரியர்கள், அதிகாரிகள், உயர் அதிகாரிகள் என்பவர்கள்) என் பார்வையில் வேறு விதமாக தெரிகின்றார்கள். நல்லோர் ஒருவர் உளறேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை. தனபாலன் நிச்சயம் இது போன்ற விசயங்களில் கில்லாடி. தெளிவாக நமக்கு புரிய வைப்பார்.

ஜோதிஜி said...

மகிழ்ச்சி. மகிழ்ச்சி.

ஜோதிஜி said...

வரலாறு முக்கியம் அமைச்சரே.

ஜோதிஜி said...

அமைதியாக இருப்பதே உத்தமம்.

ஜோதிஜி said...

நன்றி

G.M Balasubramaniam said...

எந்தக் கட்சி வேட்பாளராக இருந்தாலும் அவர்கள் செய்ய வேண்டிய செலவு மிக அதிகம்அதை எப்படி மீட்டெடுப்பர்கள் தொண்டுதான் முக்கியமா

Rathnavel Natarajan said...

அருமை. நன்றி