Sunday, January 13, 2019

இவர் (தான்) மக்களின் கடவுள்

வர்கீஸ் குரியன் (1921- 2012)Verghese Kurien 

"தோல்வி என்பது ஜெயிக்காமல் இருப்பதல்ல; நம் முழுத் திறமை களையும் பயன்படுத்தாமல் இருப்பது, சமூகத்துக்காக எதுவுமே செய்யாமல் இருப்பது". - வர்கீஸ் குரியன் 

சர்வதேச அளவில் "பால் வளத்துறை நிபுணர்' என்ற அங்கீகாரம், பத்மபூஷண் மற்றும் பல உலக விருதுகளைப் பெற்ற குரியன், ஆரம்பகாலத்தில் பால்வளத் துறையில் நுழைந்ததே தற்செயலாகத்தான். 


1. ‘எனக்கும் ஒரு கனவிருந்தது’ என்ற புத்தகம் அவரது தன்வரலாறு. நல்லமுறையில் எழுதப்பட்ட ஒரு தன்வரலாற்று நூலைப்போலப் பதிந்துபோகும் படிப்பினைகளும், செயல்பட உத்வேகமும் தருவது வேறொன்றில்லை. நிச்சயமாக இப்புத்தகம் அவ்வரிசையில் வைக்கத்தகுந்தது. 236 பக்க நூலில் அதிகபட்சமாக ஒரு பத்துபக்கம் தன் குடும்பத்தை, சொந்தவாழ்வைக்குறித்து எழுதியிருக்கிறார். மற்றதெல்லாம் நலிந்துபோய்க்கிடந்த பாலின் கதை, கிராமங்களை முன்னேற்றுவதையே குறிக்கோளாகக்கொண்டு இந்தியாவில் வாழ்ந்து மறைந்த தீர்க்கதரிசிகளின் கதை, தான் லட்சக்கணக்கான விவசாயிகளின் திறமையான கூலிக்காரன் என்ற பெருமையுடன் அவர் கூட்டுறவுச் சமூகங்கள் அமைத்து வெற்றிகண்ட ஐம்பதுவருட முயற்சியின் கதை, அரசிடமும் அதிகாரிகளுடனும் நியாயம் தன் பக்கம் என்ற ஒரே தெம்பில் துணிந்து மல்லுக்கு நின்ற கதை. 

••••••••••••••• 

இன்றைக்கு நமக்குப் பால், தயிர், வெண்ணெய் எனப் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கின்றன என்றால் அதற்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தவர் வர்கீஸ் குரியன் தான். அடிப்படையான தேவை அவை ஏன் மக்களுக்குக் கொண்டு சேரவில்லை என்பதைக் கண்டுபிடித்த எளிய தொழில்நுட்பங்களின் மூலம் உலகையே திரும்பி பார்க்க வைக்கும் மாபெரும் வெண்மை புரட்சியைச் செய்திருக்கிறார் வர்கீஸ் குரியன். 

60 வருடங்களுக்கு முன்னால் இந்தியாவில் குழந்தைகளுக்கான உணவைப் பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே விற்பனை செய்து வந்தது. குரியன் அதனை உடைத்துக் குழந்தைகளுக்கான உணவையும் அறிமுகம் செய்யப் பன்னாட்டு நிறுவனங்களின் விற்பனை பயங்கரமாகச் சரிந்தது. 

இவ்வளவு சாதனைகளும் ஒரே நாளில் நிகழ்ந்தவை அல்ல. எண்ணற்ற போராட்டங்களைச் சந்தித்தார் குரியன். இதில் இருக்கும் அடிப்படை சிக்கல் என்ன தெரியுமா? குரியன் பணியாற்ற வேண்டியது முழுக்கப் படிக்காத ஏழை விவசாயிகளிடம். ஏற்கனவே பெருநிறுவனங்களால், இடைத்தரகர்களால் சுரண்டப்படும் அவர்களிடம் எதைச் சொல்லி என் திட்டத்தை நிறைவேற்றுவது என்று நினைக்கவில்லை குரியன்? அவர்களுக்குப் புரியும் எளிய முறையில் நவீன தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொடுத்தார். 
அவர் என்ன நினைத்தாரோ அதுவே நடந்தது. 

••••••••••••••••

2. குஜராத் மாநிலத்தில் கெய்ரா மாவட்டம் 1940-களின் முற்பகுதிவரை வெளியுலகத்துக்குத் தெரியாத பகுதி. 

விவசாயமே தொழில். அப்பகுதியில் "ஆனந்த்' என்று ஓர் ஊர். பிற கிராமங்களைப்போல் ஆனந்திலும் பெரும்பாலான விவசாயிகள் ஓரிரு பசு அல்லது எருமை வளர்த்து, பால் விற்று, சிரம வாழ்க்கை நடத்தி வந்தனர். 

"பால்சன்' என்கிற தனியார் பால் நிறுவனம் அப்போது மிகப் பிரசித்தம். விவசாயிகளிடம் குறைந்த விலைக்குப் பால் வாங்கிக் கொள்ளை லாபத்துக்கு விற்பனை செய்தார்கள். இவர்களைவிட்டால் விவசாயிகளுக்கு வேறு வழி இல்லை. 

இத்தருணத்தில்தான், ஒரு திருப்பம் ஏற்பட்டது. ஆனந்தில் பிறந்து வளர்ந்த திருபுவன்தாஸ் படேல் என்னும் விடுதலை வீரர், ""வெள்ளையனே வெளியேறு'' போராட்டத்தில் ஈடுபட்டு, இரண்டரை ஆண்டுச் சிறைத்தண்டனைக்குப் பிறகு 1945-ல் ஊர் திரும்பினார். 

பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதற்கு, ஏதேனும் வழிசெய்ய வேண்டும் என்ற வேட்கை கொண்டிருந்தார் திருபுவன்தாஸ் படேல். இதுதொடர்பாக, ஆலோசனை பெற, தன் தலைவர் சர்தார் வல்லபபாய் படேலைச் சந்தித்துப் பேசினார். நிலைமையை ஏற்கெனவே அறிந்திருந்த வல்லபபாய் படேல், கெய்ரா மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களைத் தொடங்குவது ஒன்றே சிறந்த வழி என்று ஆலோசனை கூறினார். சர்தார் படேலும் கெய்ரா மாவட்டத்தில் கரம்சாட் என்ற கிராமத்தில் பிறந்தவரே. 

திருபுவன்தாஸ் வீடு வீடாகச் சென்று, கூட்டுறவின் மூலம் பெறக்கூடிய பொருளாதாரப் பாதுகாப்பைப் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். 1946-ம் ஆண்டு இறுதியில் 5 பால் உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்கள் பதிவு செய்யப்பட்டன. அடுத்தகட்டமாக, கெய்ரா மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியமும் பதிவு செய்யப்பட்டது. 

ஆனந்தில் தொடங்கப்பட்ட இக் கூட்டுறவு இயக்கமே (ஆனந்த் பால் யூனியன் லிமிடெட் - அமுல்) ""அமுல்'' என்கிற மந்திரச் சொல் ஆனது. 

கூட்டுறவுக் கோட்பாடுகளிலிருந்து வழுவாமல் அதேசமயத்தில் புதிய நிர்வாக உத்திகளையும் கையாண்டு அமுல் நிறுவனம் பால் வினியோகப் பணிகளைச் சிறப்பாகச் செய்து வந்தது. இதை அறிந்த ஐக்கிய நாடுகள் சபையின் "யுனிசெஃப்' அமைப்புக் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டத்தின்கீழ் அமுலுக்குக் கணிசமான நிதி உதவி செய்தது. 

""பசியிலிருந்து விடுதலை'' என்கிற திட்டத்தின் வாயிலாக, விலைமதிப்புள்ள கருவிகளை நன்கொடையாக, ஐ.நா.வின் உணவு வேளாண் அமைப்பு (எஃப்.எ.ஓ.) வழங்கியது. அமுலின் துரித வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாகத் திகழ்ந்தவர்கள் இருவர். ஒருவர் திருபுவன்தாஸ் படேல், மற்றொருவர் டாக்டர் வர்கிஸ் குரியன். 

••••••• 

3. குரியன் கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பிறந்தார். வசதியான குடும்பம். அப்பா அரசு டாக்டர். அவருக்கு அடிக்கடி இட மாற்றம் வரும். அதனால், பல பள்ளிகளில் படிப்பு. கோபிசெட்டிப்பாளையத்தில் இருக்கும் டயமண்ட் ஜூப்லி உயர்நிலைப் பள்ளியும் அவற்றுள் ஒன்று. கல்லூரிப் படிப்பு முழுக்கச் சென்னையில்தான். லயோலா கல்லூரியில் பிஎஸ்சி பிசிக்ஸ், கிண்டி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினீயரிங். படிப்பில் நல்ல மதிப்பெண்கள். அதே சமயம், டென்னிஸ், பேட்மிண்டன், பாக்சிங் ஆகிய விளையாட்டுகளில் பரிசுகள். தேசிய மாணவர் படையில் ``மிகச் சிறந்த மாணவர்’’ பதக்கம். 

குரியனின் லட்சியம் ராணுவத்தில் சேருவது. கிண்டியில் படிப்பை முடித்தவுடன் ராணுவ வேலையும் கிடைத்தது. அம்மா அவரை அனுப்ப மறுத்தார். குரியன் சோகத்தோடு மிலிட்டரி கனவுக்குக் குட்பை சொன்னார். 

குரியனின் தாய்மாமன் ஜான் மத்தாய் டாடா ஸ்டீல் கம்பெனியில் உயர் பதவியில் இருந்தார். (பின்னாளில் இவர் ஜவஹர்லால் நேருவின் அமைச்சரவையில் நிதி அமைச்சரானார்.) அவர் உதவியால், குரியனுக்கு ஜாம்ஷெட்பூரில் வேலை கிடைத்தது. குரியன் தன் காலில் நிற்க விரும்புபவர். அம்மா வற்புறுத்தியதால் சிபாரிசால் கிடைத்த வேலையை ஏற்றுக்கொண்டார். என்னதான் திறமையால் முன்னேறினாலும், மாமா சிபாரிசு மட்டுமே காரணம் என்று முத்திரை குத்திவிடுவார்கள். இங்கிருந்து தப்பிக்க என்ன செய்யலாம்? 

அப்போது பிரிட்டீஷ் அரசாங்கம். இந்தியா விலிருந்து 500 இன்ஜினீயர்களுக்கு அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் படிப்பதற்கான முழு ஸ்காலர்ஷிப் தரும் திட்டத்தைச் செயல்படுத்திக் கொண்டிருந்தது. மெட்டலர்ஜி எனப்படும் ``உலோகவியல்’’ பிரிவின் கீழ் குரியன் விண்ணப்பித்தார். 

நேர்முகத் தேர்வுக்காக டெல்லி சென்றார். இப்போது விதி போட்டது ஒரு பகடை. உலோகவியல் துறையில் இடங்கள் நிரம்பிவிட்டன, பால்பண்ணை பொறியியல் படிப்புக்கு மட்டுமே உதவித்தொகை கிடைக்கும் என்று சொன்னார்கள். மாமா நிழலிலிருந்து தப்ப வேறு வழி தெரியவில்லை. குரியன் சம்மதித்தார். அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் அட்மிஷன் கிடைத்தது. 

குரியனுக்குப் பால்பண்ணை இன்ஜினீயரிங்கை வாழ்க்கையாக்கிக்கொள்ளப் பிடிக்கவேயில்லை. ஒரு குறுக்கு வழி கண்டுபிடித்தார். மிச்சிகனில் உலோகவியல் படிப்பில் சேர்ந்தால், இந்திய அதிகாரிகளுக்கு எப்படித் தெரியும்? அதையே செய்தார். உலோகவியல் துறையில் முதுகலைப் பட்டம் வாங்கினார். இந்தியா திரும்பினார். தன்னை மாட்டும் பொறிக் காத்துக்கொண்டிருக்கிறது என்று அப்போது அவருக்குத் தெரியாது. 

அரசாங்க ஸ்காலர்ஷிப்பில் படிக்கப்போகும் மாணவர்கள் அரசு ஒதுக்கும் வேலையில் ஐந்து வருடங்கள் பணியாற்ற வேண்டும். குரியனை கெய்ரா மாவட்டத்தில் ஆனந்த் என்னும் ஊரில் இருந்த பால் பண்ணைக்கு இன்ஜினீயராக நியமித்தார்கள். போகாவிட்டால், பெரும் தொகையை அபராதமாகக் கட்டவேண்டும். குரியனிடம் அத்தனை பணமில்லை. அதுவரை கேள்விப்பட்டேயிராத பட்டிக்காடு, மனம் வெறுக்கும் பால்பண்ணை வேலை. வேண்டா வெறுப்பாகப் புறப்பட்டார். வேலையில் சேர்ந்தார். ஒரே சிந்தனைதான், இது சிறைவாசம். எப்படியாவது சீக்கிரம் தப்பவேண்டும். குரியன் பலமுறை வேலையை ராஜிநாமா செய்தார். அரசாங்கம் ஏற்க மறுத்துவிட்டது. 

ஆனந்த் ஊரில் பிரிட்டீஷ் அரசாங்கம் நிறுவிய ஒரு பழைய பால் பதப்படுத்தும் தொழிற்சாலை இருந்தது. இந்தப் பழைய தொழிற்சாலையைத் தங்கள் கூட்டுறவுச் சங்கத்துக்கு இலவசமாகத் திரிபூவன்தாஸ் பெற்றார். பல இயந்திரங்கள் பழுதுபட்டிருந்தன. 

அந்த ஏரியாவிலேயே ஒரே இன்ஜினீயர் குரியன் மட்டுமே. அவரிடம் உதவி கேட்டார். குரியன் உடனேயே போய் ரிப்பேர் செய்துகொடுத்தார். திரிபூவன்தாஸ் அடிக்கடி உதவிக்கு அழைப்பதும், குரியன் தயங்காமல் கை கொடுப்பதும் வாடிக்கையாயின. திரிபூவன்தாஸூக்கு குரியன் திறமைமீது பிரமிப்பு; குரியனுக்குப் பெரியவரின் லட்சிய வேகத்தின் மேல் மரியாதை. 

சில மாதங்கள். பழைய இயந்திரங்கள் இனி மேல் காயலான் கடைக்குப் போகத்தான் லாயக்கு என்னும் நிலை. குரியனின் ஆலோசனைப்படி திரிபூவன்தாஸ் 60,000 ரூபாய் கடனாகப் புரட்டினார். புதிய இயந்திரம் வந்தது. குரியன் அதை நிறுவினார். இப்போது ஒரு திருப்பம். அரசாங்கம் குரியனின் ராஜிநாமாவை ஏற்றுக்கொண்டது. 

திரிபூவன்தாஸ் பதறினார். இந்த இளைஞரை நம்பிப் பெரும்பணம் கடன் வாங்கியிருக்கிறோம். இவர் போய்விட்டால் நூற்றுக்கணக்கான கிராம வாசிகளின் எதிர்காலம் சிதறிவிடும். ஆகவே, “இரண்டு மாதங்கள் எங்கள் தொழிற்சாலையில் பணிபுரியுங்கள். அதற்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்று நீங்களே முடிவெடுங்கள்” என்று வேண்டினார். குரியன் சம்மதித்தார். இரண்டு மாதம், 56 வருட பந்தமானது. 

•••••••••• 

4. கூட்டுறவுச் சங்கத்தின் தலைமை நிர்வாகியாகக் குரியன் பதவியேற்றார். தான் பார்ப்பது வெறும் வேலையல்ல, இந்தியாவின் முதுகெலும்பான கிராமவாசிகளை முன்னேற்றும் லட்சியப் பயணம் என்று அவருக்குத் தெரிந்தது. இனிமேல், அவர் நிகழ்காலமும், எதிர்காலமும் கிராம மக்கள்தாம். 
அப்போது பால் லிட்டர் இரண்டு ரூபாய்க்கு விற்றது. இதில் மாடு வளர்ப்போருக்குக் கிடைத்தது வெறும் இரண்டு அணா. குரியன் பால் வாங்குவோரிடம் போராடி விவசாயிகள் பெறும் வருமானத்தை அதிகமாக்கினார். மாடுகளின் கறவையை அதிகமாக்க, தீவனம், நோய்த் தடுப்பு ஆகியவை பற்றி ஆலோசனைகள், உதவிகள். விவசாயிகள் கூட்டம் கூட்டமாகக் கூட்டுறவுச் சங்கத்தில் இணைந்தார்கள். ஏராளமான பால் கொள்முதல். 

இந்த நாட்களில் நியூசிலாந்து, இந்தியாவுக்குப் பால் பவுடரை இலவசமாக அனுப்பிக் கொண்டிருந்தது. மும்பையில் பாலோடு இந்தப் பவுடரைக் கலந்து விற்பனை செய்தார்கள். இது அரசாலும், ஆரோக்கியத் துறை ஆலோசகர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைதான். ஆனால், குரியனின் பாலுக்கான தேவை குறைந்தது. பால் வீணானது. 

பால் பவுடர் தயாரிக்கக் குரியன் விரும்பினார். ஆனந்தில் இருந்தவை எருமை மாடுகள். பசுமாட்டு பாலிலிருந்து மட்டுமே பவுடர் தயாரிக்க முடியும், கொழுப்புச் சத்து அதிகமான எருமை மாட்டுப் பாலிலிருந்து முடியாது என்று தொழில்நுட்ப மேதைகள் நினைத்தார்கள். ஆனால், குரியனின் சகாக்கள் இந்த ``முடியாததை” முடித்துக் காட்டினார்கள். பால் பவுடர், வெண்ணெய் ஆகியவை தயாராயின. அப்போது குழந்தைகள் உணவை, கிளாக்ஸோ, நெஸ்லே ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள் மட்டுமே விற்பனை செய்தன. அமுல் குழந்தைகள் உணவை அறிமுகம் செய்தது. பன்னாட்டு நிறுவனங்களின் ஏகபோகம் மறைந்தது. 

மார்க்கெட்டிங்கிலும் தான் ஜீனியஸ் என்று குரியன் நிரூபித்தார். ``அமுல்” என்னும் பிராண்ட் பிறந்தது. கவர்ச்சியான விளம்பர வாசகங்கள், மக்கள் மனதை கொள்ளைக் கொண்டன. விற்பனை நாளடைவில் அமோக வளர்ச்சி கண்டது. 

*********** 

1940 களில் மும்பை பால் ப்ளானுக்காக, ஆனந்தில் இருந்து பால் கொள்முதல் செய்யத் துவங்கியது தனியார் நிறுவனம் ஒன்று. ஆனால், விரைவில் பால் உற்பத்தி அதிகரிக்கவே, விவசாயிகளிடம் பால் மிகுந்து போனது. அவர்கள் ஒன்று சேர்ந்து, சர்தார் வல்லப் பாய் படேலிடம் சென்று முறையிட்டனர். அவர் உடனே தன் சீடர்களான மொரார்ஜி தேசாய் மற்றும் திரிபுவன் தாஸ் படேலிடம், ’இவர்களை ஒன்றிணைத்து, ஏதேனும் செய்து கொடு’ என்று ஆணையிட்டார். அதைச் சிரமேற்கொண்டு, அவர்கள் விவசாயிகள் கூட்டுறவு சங்கம் ஒன்று துவங்கி, பால் கொள் முதல் செய்து, மும்பை அனுப்பத் துவங்கினர். கொஞ்ச நாளில், திரிபுவன் தாஸ் படேல் இதை முழு நேர வேலையாக எடுத்துக் கொண்டு நடத்தினார். ஆனந்த் மில்க் யூனியன் லிமிடெட் என்பதே சுருங்கி அமுல் என்றானது. 

ஆனால், பாலின் தரம், தட்ப வெப்ப நிலைக்கேற்ப மாறுபட்டு, மிகச் சிரமங்களுக்கு உள்ளானது அமுல். அப்போது, அருகே அரசாங்க பால் க்ரீம் நிலையம் ஒன்று இருந்தது. அதில் வெளிநாட்டுக்கும் அரசு செலவில் படிக்கப் போய்த், திரும்ப வந்த ஒரு மலையாள வாலிபர் வேலையில் இருந்தார். அவருக்கு அங்கே சும்மாயிருக்கும் வேலை. அரசு செலவில் படிக்கச் சென்றதனால், மூன்றாண்டுகள் ஒரு அரசு நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்றொரு ஒப்பந்தம் இருந்தது. 

பெரும்பாலும் சைவ உணவுப் பழக்கம் உள்ள குஜராத்தில் மாட்டுக் கறி சாப்பிடும் மலையாளக் கிறித்துவருக்கு வாடகை வீடு கிடைப்பது முதல் பல சங்கடங்கள் இருந்தன. வார இறுதிகளில், விடுமுறை நாட்களில் மும்பைக்கு ரயில் பிடித்துச் சென்று, தாஜ் ஹோட்டலில் தங்கி, வயிறார உண்டு, ஊர் சுற்றிச் செல்வார். எப்போதடா மூன்றாண்டுகள் முடியும் என்று காத்திருந்த காலத்தில் ஒரு நாள், அருகில் இருந்த விவசாயிகளின் கூட்டுறவுப் பால்பண்ணை நடத்தி வந்த திரிபுவன் தாஸ் படேல் அவரைச் சந்திக்க அழைத்தார். 

அவரும் திரிபுவன் தாஸ் படேலும், கடவுளால் ஆசீர்வதிக்கப் பட்ட ஒரு நேரத்தில் சந்தித்தனர். 

தட்ப வெப்ப நிலை காரணமாக, பால் கெட்டுப் போகும் தன் பிரச்சினைக்கு ஒரு தீர்வு கேட்டார் படேல். ப்ளேட் பாஸ்ட்யூரைஸர் என்னும் இயந்திரத்தைப் பரிந்துரைத்து, அந்தப் பிரச்சினையைத் தீர்த்தார் குரியன். பின்பு பேசிக் கொண்டிருக்கையில், தனது ஒப்பந்தம் முடிவதாகவும், விரைவில், ஆனந்தை விட்டுச் செல்வதாகவும் சொன்னார் குரியன். தன் உடைமைகளைப் பேக் பண்ணி வைத்துவிட்டிருந்தார் அப்போது. “ஆனந்துக்கு நீங்கள் தேவை, இருங்கள்” என்று அவரை இருக்கச் சொன்னார் படேல். அன்று தனது பயணத்திட்டத்தைக் கைவிட்டவர், இறுதி வரை ஆனந்தை விட்டு வெளியேறவில்லை.குரியன் என்னும் தொழில்நுட்ப வல்லமையும், மேலாண் திறனும் கொண்ட மாமனிதரின் மேலாண்மையில், மெல்ல மெல்ல, அமுல் ஒரு பெரும் நிறுவனமாகியது. 

••••••••••••• 

5. கெய்ரா பகுதியில், "பால்ஸன்' என்னும் அன்னிய பால் நிறுவனத்தின் கோரப் பிடியிலிருந்து ஏழை விவசாயிகளையும், எளிய பால் உற்பத்தியாளர்களையும் மீட்டெடுக்க வேண்டும் என்ற லட்சியத்துக்காக, கெய்ரா கூட்டுறவு அமைப்பில் குரியன் 1949-ல் நியமிக்கப்பட்டார். 

கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்கள் அதிக எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டனர். பால் வரத்துப் பெருகியது. பெரிய அளவில் விற்பனைக்கு வழி செய்வதே குரியனின் உடனடிக் கடமையாக இருந்தது. பி.எம்.எஸ். என்னும் மும்பை அரசு பால் திட்ட அமைப்புகளுக்குப் பால், வெண்ணெய் மற்றும் பால் பொருள்களை விற்பனை செய்யும் ஒப்பந்தத்தைப் பெறுவதற்குத் தீவிரமாக முயன்றார். 

இந்த ஒப்பந்தத்தால், மகாராஷ்டிர அரசுக்குக் கிடைக்கக்கூடிய பலன்கள், நியாயமான விலை, உயர்தரம், கூட்டுறவு இயக்கத்தை ஆதரிக்க வேண்டிய அரசின் பொறுப்பு ஆகியவற்றை விளக்கினார் குரியன். விளைவு: அதுவரை பால்சனுக்குப்போய்க் கொண்டிருந்த ஒப்பந்தம், முதல்முறையாக அமுலுக்கு வந்தது. வர்த்தக ரீதியாக இது ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 

நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, குழந்தைகள் ஊட்ட உணவான பால் பெüடர் மற்றும் வெண்ணெய், நெய், சீஸ், சாக்லேட் என அனைத்து வகைப் பால் உணவுப் பொருள்களையும் உற்பத்தி செய்வதில் குரியன் உலகத் தரத்தை மிஞ்சினார். இதன் பயனாக, நீண்டகாலமாக இந்தியச் சந்தையில் கொடிகட்டிப் பறந்த "கிளாங்கோ', "ஆஸ்டர் மில்க்' போன்ற பல பன்னாட்டு நிறுவனங்களின் "குழந்தை உணவுப் பவுடர்கள்' இந்தியச் சந்தையிலிருந்து படிப்படியாக மறைந்தன. 

ஒரு கூட்டுறவு நிறுவனம், வர்த்தக ரீதியாக வெற்றிபெற முடியும்; தொழில்நுட்ப மேம்பாட்டின் மூலம் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்களையும், வலுவான தனியார் நிறுவனங்களையும் போட்டியில் வெல்ல முடியும் என்பது முதன்முதலாக நிரூபணம் ஆனது. 

••••••••••••• 

 இந்த வெற்றிக்குக் காரணம், குரியனின் சில உத்திகளே ஆகும். கூட்டுறவுப் பணியில், உள்ளூர் விவசாயிகளை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். பால் உற்பத்தியில் குடும்ப உழைப்பு முழுவதையும் பயன்படுத்தினார்கள். உற்பத்தியாளர் கூட்டுறவுச் சங்கங்களை - கிராமம் முதல் ஒன்றியம் வரை - தாங்களே நிர்வாகம் செய்தனர். வெளியார் தலையீடு சிறிதும் அனுமதிக்கப்படவில்லை. 

அர்ப்பணிப்பு உணர்வு, செயல் திறன், நடைமுறைக்கு உகந்த நிர்வாக இயல், பொருத்தமான அணுகுமுறைகள், மனிதநேயம் கொண்ட நிர்வாகம் உருவானது. உலகின் சிறந்த நவீன தொழில்நுட்பம், உடனுக்குடன் அறிமுகப்படுத்தப்பட்டது. 

ஊழல், வீண் ஆடம்பரச் செலவு, அரசியல் குறுக்கீடு, அதிகாரிகள் தலையீடு ஆகியவை நெருங்காமல் கண்காணிக்கப்பட்டது. 

மிக முக்கியமாக, அமுலின் லாபம், பால் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்குப் போய்ச் சேர்ந்தது. இவர்களின் பொருளாதாரமும், வாழ்க்கைத் தரமும் பிரமிக்கத்தக்க வகையில் உயர்ந்தன. இதன் விளைவாக விவசாயிகளின் ஈடுபாடு நிலைத்து நின்றது. 

விவசாயிகளின் வறுமை பழங்கதையானது. விவசாயிகளுக்கு வீடுகள், நல்ல சாலைகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், குழந்தைகளுக்கு உயர் கல்வி ஆகியவை எளிதாகக் கிடைத்தன. சுருக்கமாகச் சொன்னால், அந்தப் பகுதியே ஒரு சொர்க்க பூமியானது. 

இதனால், ஒன்றரை லட்சம் கிராம கூட்டுறவுச் சங்கங்கள், ஒன்றரைக் கோடி உறுப்பினர்கள் கைகோத்தனர். உலகிலேயே அதிக அளவில் பால் உற்பத்தி செய்திடும் நாடு இந்தியா என்ற நிலையை உருவாக்கினார் வர்கிஸ் குரியன். இன்னும் சொல்வதென்றால், உலகிலுள்ள 200 நாடுகளில் உற்பத்தியாகும் பாலில் 17 சதவிகிதம் இந்தியாவில் உற்பத்தியாகிறது. இதில் அமுலின் வருட விற்பனை ரூ. 13,000 கோடி. உலகில் உள்ள மிகப் பிரபலமான "பிராண்டு' பெயர்களில் "அமுல்' ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது என்றால் மிகையல்ல! பல ஆசிய நாடுகள் இன்று "குரியன் மாடலை'ப் பின்பற்றுகின்றன. 

குரியன் அடிக்கடி கூறி வந்தார். ""நாங்கள் பாடுபடுவது மாடுகளுக்காக அல்ல; மனிதர்களுக்காகவே!'' கூட்டுறவு கோட்பாடுகள்; மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் நிர்வாக இயல்; உள்ளூர் மக்களின் ஈடுபாடு. இம் மூன்று அம்சங்களின் இணைப்பே, குரியனின் பாணி! 

************* 

6. 1964. பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆனந்த் வந்தார். கிராமங்களின் முன்னேற்றம் கண்டு பிரமித்தார். இதே புரட்சியை நாடு முழுக்க நடத்திக் காட்டுமாறு குரியனைக் கேட்டுக்கொண்டார். இதற்காக, 1965 இல் குரியன் தலைமையில் தேசிய பால் பண்ணை மேம்பாட்டு வாரியம் (National Dairy Development Board) என்னும் அமைப்பை மத்திய அரசாங்கம் உருவாக்கியது. Operation Flood என்னும் பெயரில் குரியன் பால் உற்பத்தியை உபரியாக்கும் கனவைத் தொடங்கினார். தன் செயல்பாடுகளை இந்தியா முழுக்க விரிவாக்கினார். 

1997. உலகில் அதிகமான பால் உற்பத்தி செய்த நாடு இந்தியா! 

50களில் தினசரி சில ஆயிரம் லிட்டர் பால் என்ற அளவில் இருந்த இந்தியாவின் பால் உற்பத்தி ஒரு நாளைக்கு 90 லட்சம் லிட்டர் என்ற இமாலய அளவை எட்டியது. இந்த அபாரமான திட்டத்தை அமுல் என்ற பெயரில் குஜராத்தில் உருவாக்கி அமல்படுத்தினார் குரியன். இன்று இந்தியாவின் மிக முக்கியமான வர்த்தகப் பிராண்டுகளில் ஒன்றாக அமுல் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

அமுல் பிராண்ட்டின் கீழ் இயங்கும் கூட்டுறவு பால் பண்ணைகள் இன்று ரூ. 10,000 கோடி என்ற அளவில் வருவாய் ஈட்டி வருகின்றன. பால், வெண்ணெய், நெய், தயிர், பால் பவுடர், இனிப்புகள், ஐஸ் கிரீம், சாக்லேட் உள்படப் பல பொருட்களை அமுல் தயாரிக்கிறது. குஜராத்தின் 15 மாவட்டங்களில் 30 லட்சம் விவசாயிகளை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது அமுல்.

அமுல் பிராண்டுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியைத் தொடர்ந்து இந்தப் பால் உற்பத்தி மாடல் நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஆவின், நந்தினி, வெர்கா, சுதா, மகானந்தா என்று பல பிராண்டுகள் நடைமுறைக்கு வந்தன. 

மீதி அடுத்த பதிவில்






5 comments:

KILLERGEE Devakottai said...

நாட்டுக்காக பொதுநலமாக உழைத்த திரு.வர்கீஸ் குரியன் அவர்களைப் பற்றிய சாதனையை அறிய வைத்த தங்களுக்கு நன்றி ஜி

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

முன்னுக்கு வர நினைப்பவர்கள் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டியவர்களில் முக்கியமானவர்.

ஜோதிஜி said...

குறிப்பிடத்தக்க பல அரசியல்வாதிகளும் நூறு நபர்கள் அனுபவிக்க வேண்டிய புகழ் வசதிகளை அனுபவித்து அவர்கள் செய்த அக்கிரமங்களை ஊடகம் வாயிலாக மறைத்து மறைந்து(ம்) விடுகின்றார்கள். ஆனால் இவர் ஆயிரம் பேர்கள் அனுபவிக்க வேண்டிய துன்பங்களைப் பெற்று பலகோடி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளார். வாழ்க்கை தரும் பாடங்களும் அனுபவங்களும்வித்தியாசமாகவே உள்ளது.

ஜோதிஜி said...

பொதுவாக சின்ன வயதில் பொதுநலம் என்ற எண்ணம் எல்லோருடைய மனதிலும் ஆழமாகவே உள்ளது. ஆனால் காலப்போக்கில் அவரவர் வாழ்க்கையில் உருவாகும் மாற்றங்கள் தன் குடும்பம் தன் வாழ்க்கை என்ற வட்டத்திற்குள் இயல்பாகவே சிக்க வைத்து விடுகின்றது. ஆனால் இவர் கடைசி வரைக்கும் தன் கொள்கையில் உறுதியாக இருந்தது என்னளவில் ஆச்சரியமாகவே உள்ளது.

Rathnavel Natarajan said...

இவர் (தான்) மக்களின் கடவுள்
வர்கீஸ் குரியன் (1921- 2012)Verghese Kurien - எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி திரு ஜோதிஜி