ஒவ்வொரு முறையும் சென்னை செல்லும் போதும் மற்றும் திரும்பி வந்த பிறகு வீட்டில் உள்ள ஒரு மகளிடம் திட்டு வாங்குவதுண்டு. காரணம் நான் அவரை விட்டுவிட்டு நான் மட்டும் போகின்றேன் என்ற வருத்தம். பள்ளிக்குச் செல்கிறாய்? நீ வளர்ந்த பிறகு நாம் சுற்றுவோம் என்றால் முறைப்பைப் பதிலாக தந்து விட்டு நகர்ந்து விடுவார்.
பயணம் தொடங்கியது முதல் சந்தித்த நபர்கள் மற்றும் வீட்டுக்கு வந்து சேர்ந்தது வரை நான்கு பெண்களையும் வைத்துக் கொண்டு கொஞ்சம் சுவராசியமாக உரையாடுவதுண்டு. தற்போது எங்கள் ஏற்றுமதி நிறுவனத்தின் துணை நிறுவனமான ஏசியன் சினி கம்பைன்ஸ் தொடர்பாகச் சந்தித்த திரைப்பட பிரபலங்கள், அது சார்ந்த உரையாடல்கள், எடுத்த புகைப்படங்களை அவர்களிடம் கணினி வழியே காட்டும் போது இன்னும் அவர்களின் கோபப் பார்வையை தாக்குப் பிடிக்க முடியாமல் தவிக்க வேண்டியதாக உள்ளது.
@@@@@
கடந்த இரண்டு மாதங்களில் பல முன்னணி நடிகர்கள், வளர்ந்த, வளரும் மற்றும் வாய்ப்புக்காக காத்திருக்கும் இயக்குநர்கள், தொழில் நுட்ப கலைஞர்கள், இசையமைப்பாளர்கள், படப்பிடிப்பு நடக்கும் இடங்கள், அது சார்ந்த திட்டமிடுதல், ஆலோசனைகள் என்று எனது இயல்பான வாழ்க்கை முறை மாறி விட்டதால் தினமும் நான் வாசிக்க வேண்டிய நேரங்கள் அனைத்தும் காணாமல் போய்விட்டது. ஏற்றுமதி நிறுவன வேலையுடன் இந்த வேலைச் சார்ந்த விசயங்களில் அதிக ஆர்வம் காட்டுவதால் தினசரி வாசித்தே ஆக வேண்டிய பத்திரிக்கைகள் கூட அடுக்கி வைக்கப்பட்டு என்னைப் பார்த்து நக்கலாகச் சிரிக்கின்றது.
@@@@@
புத்தகங்களை வாசிக்க முடியாவிட்டாலும் பலதரப்பட்ட மனிதர்களை வாசிக்க முடிகின்றது. திரைப்படம் என்ற மாய உலகத்தில் வாழும் அத்தனை பேர்களையும் வாசிக்க முடிகின்றது. பணம் அதிகம் புழங்கும் இடத்தில் குற்றச்செயல்கள் அதிகம் நடக்கும். இது நிர்ணயிக்கப்பட்ட விதி. அதே போல பணமும் புகழும் மிக அளவில் கிடைக்க வாய்ப்புள்ள இடங்களில் பொறாமையும் சந்தேகமும் படபடப்பும் இருந்து கொண்டே இருக்கும் என்பதும் உண்மை தானே?
அதைத்தான் கவனித்துக் கொண்டே வருகின்றேன். தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஒவ்வொருவரும் போராட்டமான வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொண்டு வாழ்கின்றார்கள். கூடுதலாக வெளிச்சம் தங்கள் மேல் விழ அதைக் காப்பாற்றிக் கொள்ள உள்ளும் புறமும் நடிகராகவே தங்களை மாற்றிக் கொள்கின்றார்கள். அவர்களுக்கென சொந்த வாழ்க்கை எதுவும் இருக்காதா? என்று யோசிக்கத் தோன்றியது. அது நடைமுறையில் சாத்தியமே இல்லாதது என்ற எதார்த்தத்தையும் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஒன்றை இழந்தால் தான் மற்றொன்றைப் பெற முடியும் என்பது தானே உலக நியதி.
@@@@@
உலக நியதியைத் தாண்டி சிலரால் வாழ முடியும்? என்பதற்கு நம் முன் வாழும் உதாரணம் நடிகர் சிவகுமார். முகநூலில் சில சமயம் நடிகர் சிவகுமார் குறித்து கார சார விமர்சனங்களைப் பல சமயத்தில் படித்துள்ளேன். பொதுப் பார்வை என்பதும் பொதுப்புத்தி என்பதும் இங்கே மாறாது. ஆனால் நடிகர் சிவகுமார் வீட்டில் இருந்த ஒரு மணி நேரமும் வீட்டு நிர்வாகத்தில் காட்டக்கூடிய நேர்த்தியும், அங்கே பணியாற்றும் பணியாளர்கள் மேல் அவர் வைத்துள்ள அன்பும், அங்குள்ள ஒவ்வொருவரும் தங்களுக்கு கிடைத்துள்ள சுதந்திரத்தை சரியான அளவில் பயன்படுத்தும் விதமும் அதிக ஆச்சரியத்தைத் தந்தது.
நேரத்தை எந்த அளவிற்குத் திட்டமிட்டு பயன்படுத்துகின்றார்கள் என்பதை நடிகர் சிவகுமார் முதல் அங்குள்ள கடைநிலை ஊழியர்கள் வரைக்கும் எனக்குப் பல விதங்களில் உணர்த்திக் காட்டினார்கள்.
@@@@@
என்ன தான் நாம் தனிப்பட்ட முறையில் சிறப்பாக வாழ்ந்தாலும் காலமும் சூழ்நிலையும் நம்மை பல சமயம் கைமா போல கசக்கி பிழிந்து விடும் என்பதும் உண்மை தானே? இசையமைப்பாளர் சிற்பியின் இசை வாழ்க்கையை தமிழுலகமும் தமிழர்களும் கடந்த காலத்தில் கொண்டாடியதை எவருக்கும் மறுக்க இயலாது. அப்படிக் கொண்டாடிய பல பாடல்களை நானும் கேட்டுள்ளேன்.
ஆனால் தற்போது வாய்ப்பு இல்லாமல் இருக்கின்றார். அவருக்கான நேரம் மீண்டும் தொடங்கும் என்று நம்புகின்றேன். காரணம் தன் வாழ்க்கை, எதார்த்தம், இசையறிவு, நுணுக்கம், பதிகம், பாசுரம் குறித்த பார்வை, அவர் கோர்த்து வைத்துள்ள பல தனிப்பாடல்கள், அவர் வீட்டுக்குள் வைத்துள்ள ஒலிப்பதிவு கூடம், பழையவற்றை, நடந்து வந்த பாதையை மறக்காத தன்மை, தன் நிலைமையை எளிதாக எடுத்துக் கொண்ட விதம் என்று எல்லாவிதங்களிலும் ஆச்சரியப்படுத்தினார். அவர் வீட்டில் இருந்த மூன்று மணி நேரமும் இசையின் மற்றொரு பரிணாமத்தை புரிந்து கொள்ள முடிந்தது.
@@@@@
எழுத்தாளர் ஞாநி அவர்கள் எப்போதும் என் மரியாதைக்குரியவர். அவர் உடல் நலம் சற்று குன்றி இருக்கும் இந்தக் காலகட்டத்தில் அவரைச் சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் சென்ற முறை சென்னைப் பயணத்தில் நிறைவேறியது. சிங்கத்தை அதன் மாறிய குகையில் சந்தித்தேன். உடல் தளர்ந்தாலும் உள்ளம் தளரவில்லை. இன்னும் செய்ய வேண்டிய கடமைகள் குறித்து தான் அதிகம் பேசுகின்றார். அவரின் இறுதி மூச்சு நிற்கும் வரையிலும் அவர் எண்ணம், கம்பீரம், சமூக சிந்தனை எதுவும் மாறாது என்பதனை உணர்ந்து கொள்ள முடிந்தது.
@@@@@
என் பிரியத்துக்குரிய தந்தி தொலைக்காட்சியில் பணிபுரியும் அதியமானுடன் சண்டை போட முடியாமல் திரும்பி வந்துவிட்டேன் என்ற ஆதங்கம் தான் மனதில் உள்ளது. எப்போதும் ஞாநி நான் அதியமான் மூவரும் சேர்ந்தாலே அதுவொரு காக்டெயில் கலவையாக ரணகளமாக இருக்கும்.
@@@@@
எப்போதும் நான் சென்னை சென்றாலும் குறிப்பிட்ட சிலரை அவசியம் சந்திக்க வேண்டும் என்று மனதிற்குள் நினைத்துக் கொள்வேன். நரேன் மற்றும் கேஆர்பி செந்தில். இருவரும் வெவ்வேறு துருவங்கள். ஆனால் இருவரிடமும் நான் கற்றுக் கொள்ள தெரிந்து கொள்ள நிறைய விசயங்கள் இருக்கும். இந்த முறை நரேன் அவர்களுடன் மட்டும் நான் தங்கியிருந்த விடுதியில் நீண்ட நேரம் உரையாட முடிந்தது.
நீண்ட காலத்திற்குப் பிறகு டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனை சந்திக்க வாய்ப்பு அமைந்தது. காலமும் சூழ்நிலையும் அவருக்குண்டான எதிர்கால கனவான திரையில் முத்திரை பதிக்க வாய்ப்பு அமைக்கும் என்று நம்புகிறேன். அப்போது வாங்க வேண்டிய சில புத்தகங்கள் வாங்கினேன். அதில் ஒன்று கார்டூனிஸ்ட் பாலா வின் நமக்கேன் வம்பு?
இந்த முறை கார்டூனிஸ்ட் பாலா வை சந்ததிக்க முடியாமல் போனதில் வருத்தமே? நெஞ்சுரம் மிக்கவர். சமகால நிகழ்வுகளை அஞ்சாமல் எடுத்துரைக்கும் அவரின் வரைகலை பணி பாராட்டக்கூடியது. எத்தனை இடர் வரினும் "என் கடன் பணி செய்து கிடப்பதே" என்பதோடு அவரின் சமூகப்பணி(எத்தனை ஆயிரம் பேர்கள் இரத்தம் பெற்று நல்வாழ்க்கை வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்களோ? என்பதை நினைத்து ஆச்சரியப்பட்டுள்ளேன். இது போன்ற அவரின் வெளியே தெரியாத செயல்கள் எண்ணிக்கையில் அடங்காதது) போற்றுதலுக்குரியது.
@@@@@
எங்கள் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான "மாவீரன் கிட்டு" என்ற திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சி (டீசர்) அக்டோபர் 1ந் தேதி அன்று 1500 லயோலா கல்லூரி மாணவர்கள் மற்றும் மிக அதிக எண்ணிக்கையிலான பத்திரிக்கையாளர்கள் மத்தியில் வெளியிடப் போகின்றோம். படத்தின் குரல் பொருத்தம் (டப்பிங்) பணி விரைவாக நடந்து கொண்டு இருக்கின்றது. பாடல்கள் முழுமையடைந்து விட்டது.
பாடல்கள் மற்றும் திரைப்பட வெளியீடு பற்றி இயக்குநர் சுசீந்திரன் விரைவில் வெளியிடுவார்.
எங்கள் நிறுவன தயாரிப்பு என்பதனை விட இந்தப் படத்தின் குறிப்பிட்ட துண்டுக் காட்சியினை, ஒரு பாடலை டி இமான் இசைக்கூடத்தில் பார்க்க கேட்க வாய்ப்பு கிடைத்தது. நிச்சயம் வெற்றிப்படம் என்பதனை அப்பொழுதே என் மனம் சொல்லியது.
ஆனால் இந்தப் படம் எந்த அளவுக்கு மக்களைக் கவரும்? என்பதனை, நம்ம "வஷிஷ்டர் வாயால் பிரம்மரிஷி" என்ற பட்டம் பெறுவது எப்படி என்பதனை "கறார் கந்தசாமி" நண்பர் சிவகுமார் விமர்சனத்தை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.
@@@@@
இசையமைப்பாளர் டி இமான் அவர்களின் இசைக்கூடத்தில் மூன்று மணி நேரத்திற்கு மேல் இருக்க வேண்டிய வாய்ப்பு கிடைத்தது. ஒரு பாடல் பதிவு எப்படி நடக்கின்றது என்பதனை கவனிக்க முடிந்தது. தமிழ் மொழி என்பதனை அ ஆ கூடத் தெரியாமல் சம்மந்தப்பட்டவர்களின் குரல் வளத்திற்காக மட்டுமே அவர்களை தமிழில் பாட வைக்கும் போக்கு தமிழ்த் திரைப்பட உலகத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் அதிக நடக்கின்றது. குறிப்பாக ஏ.ஆர்.ரகுமான் வருகைக்குப் பிறகு தினமும் ஒரு பாடகர் அறிமுகமென்று திரை உலகமே வேறொரு பாதையில் பயணிக்கத் தொடங்கியது.
அதன் விளைவுகளை டி இமான் இசைக்கூடத்தில் கண்டேன். டி. இமான் போன்ற பொறுமைசாலிகளுக்குக் காலம் தகுந்த அங்கீகாரம் கொடுக்கும் என்று நம்புகிறேன்.
@@@@@
நான் இருக்கும் நிறுவனத்தில் பத்து நாட்களுக்கு ஒரு முறை (வாரக்கூட்டம்) நடைபெறும். ஒவ்வொரு நிர்வாகத்திலும் சிலர் மட்டுமே அங்கீகாரத்திற்கு உரியர்வர்களாக வெளியே தெரிகின்றார்கள். என் பார்வையில் ஒரு நிர்வாகத்தில் உள்ள அத்தனை பேர்களும் அவரவர் திறமையின் பொறுத்துத் தெரியப்பட வேண்டும் என்று கருதுவேன்.
அதனைத்தான் இது போன்ற கூட்டத்தின் வாயிலாக வெளிப்படுத்துகின்றேன். இது போன்ற கூட்டங்கள் "சிந்தனை மாற்றங்களை" விதைக்கின்றது. "மாற்றி யோசி" என்பதன் ஆரம்பக்கட்டமாக இருக்கின்றது.
11 comments:
பரிணாமத்தை - பரிமாணம் அல்லவா?
👍
வாழ்த்துக்கள் ஐயா
உங்கள் சென்னைப் பயண அனுபவங்களை நறுக்குத் தெறித்தாற்போலச் சொல்லியிருக்கிறீர்கள். அக்டோபர் 1 ம் தேதி லயோலா கல்லூரி விழாவுக்கு உங்கள் மகள்களையும் துணைவியாரையும் அழைத்துச் சென்று காட்டுங்களேன்.
//அவர்களிடம் கணினி வழியே காட்டும் போது இன்னும் அவர்களின் கோபப் பார்வையை தாக்குப் பிடிக்க முடியாமல் தவிக்க வேண்டியதாக உள்ளது//
அவர்களின் கோபப்பார்வை மட்டுமல்லஜீ...
இப்போது எங்களின் கோபப்பார்வையும் சேர்ந்துகொண்டது என்பதை இங்கே பதிகிறேன்.
அது சரி..., போன பதிவில் ஒருத்தர் உங்களின் எழுத்து புரியவில்லை என்றதற்கு அடுத்த பதிவில் மாற்றிக்கொள்கிறேன் என்று கூறியதை மிகவும் வித்தியாசமாக பதிவிட்டிருக்கிறீர்கள். நச்சென்று!
வாழ்த்துக்கள் அண்ணா...
பயண அனுபவங்களை சுருக்கமாக, அனைவருக்கும் பாடமாக அமையும் வகையில் தந்த விதம் அருமை. பாராட்டுகள்.
அருமையான பதிவு. நன்றி. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.
உழைப்பும்...சொல்லிச் சென்றவிதமும்
அதிக எதிர்பார்ப்பைத் தூண்டிப் போகிறது
வாழ்த்துக்களுடனும்....ஆவலுடனும்...
பகிர்வுக்கு நன்றி ஐயா!
அருமையான பதிவு...சொல்லியிருக்கும் விதம். வாழ்த்துகள்!
Post a Comment