Sunday, February 17, 2013

டாலர் நகரம் புத்தக விமர்சனம் - மதுரை சம்பத்


நண்பர் ஜோதி கணேசன் அவர்களின் அனுபவ சிதறல்களின் தொகுப்பான "டாலர் நகரம்" புத்தகத்தின் மீதான விமர்சனத்தை பதிவு செய்வதற்கு முன்பாக இதை எழுத இத்தனை நாட்களா என நண்பரின் அன்பு கலந்த கோபத்தை எதிர்பார்த்து முதலில் வணக்கம் சொல்லி பேச துவங்குவது போல் மன்னிக்கவும் என்ற சொல்லோடு எழுத விழைகிறேன்.

ஒரு பேச்சாளரின் வெற்றி என்பது எதிரே அமர்ந்திருப்பவர்களை கவரும் வண்ணம் தடங்கலின்றி பேசுவதோடு இன்னும் சிறிது பேசமாட்டாரா என்று எண்ணும் வண்ணம் விரைவாக முடிப்பதில் இருக்கிறது.  

அதே போல் ஒரு எழுத்தாளரின் வெற்றி என்பது வாசிக்க துவங்கியவுடன் ஒரு சில அத்தியாயங்களையாவது வாசித்துவிட்டு பின்னர்தான் கீழே வைக்கும் வண்ணம் அந்த புத்தகம் அமைவதுதான்.


அந்த வகையில் ஜோதிஜியின் எழுத்து நடை என்பது நிச்சயமாக வாசிப்பவரை சலிப்படையாமல் தன்னோடு பயணிக்க வைத்திருக்கிறது. 

திருப்பூர் எனது சொந்த ஊர்- காரைக்குடி நான் (பழிவாங்கும்) ஊர்மாற்றமாக மாற்றப்பட்டு பாச்சுலர் வாழ்க்கையில் 2 வருடம் பணிபுரிந்த ஊர்.  

இரண்டு ஊர்களும் அதில் தெரிவித்துள்ள பல இடங்களும் அறிமுகமானவை என்பதால், புத்தக நடையோடு பயணிக்க ஒரு ஈர்ப்பை அளித்தது.

உண்மை சுடும் என்ற போதிலும், யதார்த்தங்களை அப்படியே சொல்வதற்கும் ஒரு துணிவு வேண்டும்.  

இன்றும் வந்தாரை வாழவைத்துக் கொண்டிருக்கிற திருப்பூரில் கால் ஊன்றி வெற்றி பெறுவதற்காக கடந்து வந்த அனுபவங்களை வரிசையாக தொகுத்திருக்கிறார் நண்பர். 

பணம் நிறைய இருந்தும் முறையான திட்டமிடல் இன்மையால் சரிந்து கொண்டிருந்த ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் தாம் பொறுப்பேற்று, தொய்விற்கு காரணமாக இருந்தவர்கள் முதலாளியின் சொந்தங்கள் என்ற போதிலும் அவர்களை அகற்றிவிட்டு லாபத்தை நோக்கி, வெற்றியை நோக்கி இட்டுச் சென்றவுடன் முதலாளியின் மனைவியின் தலையீடு- அதனை தொடர்ந்து தான் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேற நேர்ந்தது - என்பதெல்லாம் இன்றளவிலும் பல உழைப்பாளிகளுக்கு நிகழ்ந்து கொண்டிருப்பதுதான்.  

இருப்பினும் அவற்றை எழுத்து வடிவில் காட்சிப் படுத்தியிருந்த விதம் தொழிலாளர்களுக்கு பாடம் கற்றுத் தருவது போல் பல முதலாளிகளையும் தான் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்க வைக்கும்.  

நிச்சயமாக அதுதான் இந்த புத்தகத்தின் வெற்றி.

எழுத்தாளர் சிவசங்கரியின் சின்ன நூல்கண்டா நம்மை சிறைப்படுத்தும் என்ற தலைப்பை முன்னிறுத்தி அரசின் தாராளமயமாக்கல் கொள்கைகள்- பருத்தி மற்றும் நூல்களின் சந்தையை எப்படி புரட்டிப் போட்டுள்ளது என்பதையும் அது உள்ளாடை தொழிலை எப்படி நெருக்கடிக்குள்ளாக்கி யிருக்கிறது என்பதும் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது.

சாயப்பட்டறைகளின் மீது நீதிமன்ற நெருக்கடி காரணமாக டேப்ரிக்கார்டரில் pause பட்டனை அழுத்தியது போல் தற்காலிகமாக திருப்பூரின் இயக்கங்கள் நின்றுள்ளது என்ற போதிலும், பல்லாண்டு காலமாக முதலாளிகள்- அரசியல்வாதிகள், சாயக் கழிவுகளை வெளியேற்றுவதில், அவற்றை மறுசுழற்சி முறையில் சுத்திகரிப்பு செய்து இரசாயன கடுமையை குறைக்க காண்பித்து வந்த அலட்சிய போக்கே இந்த நிலைக்கு காரணம் என்ற சாடலை சரியாக முன்வைத்துள்ளார்.  

திருப்பூரில் உள்ளாடை தொழிலில் இருப்பவர்களைப் பொறுத்தவரை அந்த நகரினிலேயே சாயமேற்றல் நடைபெற்றால்தான் தொழில் தடங்கலின்றி தொடரும் என்கிற சுயநலம் இயல்பாக மேலோங்கி நிற்கும்.  ஆனால் மாறாக ஜோதிஜி அந்த தொழிலை வழிநடத்தும் பணியில் இருந்த போதும் சமூக அக்கறை மேலோங்கி விவசாய நிலங்கள், குடிநீர் ஆதாரங்களின் பாதிப்பை வெளிப்படுத்தியிருக்கும் உணர்வு நிச்சயமாக பாராட்டுக்குரியதே.

திருப்பூரில் 80களில் 90களில் தொழிற்சங்க இயக்கங்கள் பலவற்றை நான் கண்டிருக்கிறேன்.  முறைசார்ந்த தொழில், முறை சாரா தொழில் எதுவாக இருப்பினும் உரிமைக்கு குரல் எழுப்புவது என்பது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.  

அவற்றைப்பற்றி ஜோதிஜி ஒன்றும் எழுதவில்லையே என்பது எனக்கு சற்று குறையாக தெரிந்தது.

மேலும் தொழிலை சார்ந்த, நகரை சார்ந்த தொடர் கட்டுரைக்கு நடுவே குழந்தைகளை ஆங்கில பள்ளிகள் கையாண்ட விதம் பற்றி எழுதியிருந்தது இந்த கட்டுரை தொடரில் சற்று ஒட்டாமல் இருக்கிறதோ என முதலில் எனக்கு தோன்றியது.  

ஆனால் ஒவ்வொருவர் வாழ்விலும் தொழிலாளியாக, சிறு முதலாளியாக, அரசு மற்றும் அரசுத் துறை பணியாளராக யாராக இருப்பினும், அவர்களின் ஓட்டம் என்பது குழந்தைகளுக்கு நல்ல கல்வி பயிற்றுவித்து அவர்களை தன்னை விட மேம்படுத்த வேண்டும் என்பதுதான் வாழ்க்கை ஓட்டத்தில் அனைவரின் முக்கிய குறிக்கோள் ஆகும்.  

அந்த வகையில் தாய் மொழிக்கல்வியின் அவசியம் குறித்து, அவற்றை பயன்படுத்தும் போது ஏற்படும் உறவுகளின் நெருக்கம் குறித்து, இன்று பலர் ஆங்கில கல்விக்கு சென்று பெற்றவர்களும் குழந்தைகளும் பிரிந்து நின்று மின்னஞ்சல் தொடர்போடு நின்றுவிடுவதையும் பளிச்சென்று சுட்டிக்காண்பித்திருப்பதால், அது இந்த வாழ்க்கையோடு இணைந்த தொடரில் அவசியமான ஒன்றே என நிறைவாக இருந்தது.

மொத்தத்தில்

                                                          நம்பி கை வைத்து
                                                      நாணயமாய் நடந்து
                                       உண்மையாய் உழைத்தால்
                                உயர்வும் வெற்றியும் நிச்சயம்

என்பதை இந்த அனுபவ தொடர் நிறைவாக சொல்லியிருக்கிறது.  

பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்களை மட்டுமே வெளியிட்டு சந்தைப்படுத்துகிற பிரசுரங்கள் பலவற்றின் நடுவே துணிவோடு இதை பிரசுரமாக கொணர முடிவெடுத்த திரு மலைநாடன், 4தமிழ்மீடியா குழுமத்திற்கு கண்டிப்பாக பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும். 

சிறப்பான புத்தக வடிவமைப்பு, தேவையான புகைப்படங்கள் ஆகியவை நன்றாக இருந்தது.  நண்பர் ஜோதி கணேசனின் எழுத்துக்கள் இன்னும் பல வெளிவர வாழ்த்துக்களுடன்

தோழமையுள்ள
ஸ்ரீ.சம்பத்
மதுரை.

டாலர் நகரம் மற்ற புத்தக விமர்சனங்கள்.

(தமிழ்மணம் திரட்டியை உருவாக்கியவர்.)



டாலர் நகரம் நூல் வெளியீட்டு விழாவில் நண்பர் வெட்டிக்காடு ரவி பேசிய 

7 comments:

Anonymous said...

எகத்வதா கதாபிம் நிம்ஷத் பரிபூர்னாம் என்று சொல்லுவதுபோல அழகான அருமையான விமர்சனம் என்று கூறுகிற அதே வேளையில் அதன் உள்ளடக்கத்துக்கு அட்டைப் படம் ஒருசாங்காக அமையப் பெறவில்லை இருந்தாலும் கூட நேர் சொன்ன விதத்திலுள்ள நேர்மையின் கான் என்ற விசயத்திற்காக பாராட்டுகள். டாலர் போலவே தாளகளின் தரமும் நிறைவு.

துனிவேதுனை பாஸ்கர்.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
நன்றி.

ஜோதிஜி said...

நன்றி பாஸ்கர். சுடுதண்ணி அவர்களும் அட்டைப்படம் குறித்து எழுதினார். அதற்கு பொறுப்பான நிலையில் உள்ள திரு மலைநாடன் அவர் தரப்பு விசயங்களை, எண்ணங்களை சுடுதண்ணி எழுதிய விமர்சனத்தில் எழுதி வைத்துள்ளார்.

ஜோதிஜி said...

உங்களுக்கு மின் அஞ்சல் செய்துள்ளேன். பார்க்கவும்.

தி.தமிழ் இளங்கோ said...

அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், இன்று (18.02.2013) உங்கள் வலைப்பதிவினை அறிமுகம் செய்து எழுதியுள்ளேன். தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!

ஜோதிஜி said...

மிக்க நன்றி.

4Tamilmedia said...

//பிரபல எழுத்தாளர்களின் புத்தகங்களை மட்டுமே வெளியிட்டு சந்தைப்படுத்துகிற பிரசுரங்கள் பலவற்றின் நடுவே துணிவோடு இதை பிரசுரமாக கொணர முடிவெடுத்த திரு மலைநாடன், 4தமிழ்மீடியா குழுமத்திற்கு கண்டிப்பாக பாராட்டுக்களை தெரிவிக்க வேண்டும். //

நன்றி சம்பத்!
நட்புடன் மலைநாடான்