Saturday, February 16, 2013

டாலர் நகரம் புத்தக விமர்சனம் - சுடுதண்ணி


மலேசியாவுக்கோ, சிங்கப்பூருக்கோ பிழைக்கச் சென்று பல வருடம் கழித்து வீட்டுக்கு வந்திருக்கும் சித்தப்பாவோ, மாமாவோ வீட்டுத் திண்ணையில் பக்கோடாவோ அல்லது பணியாரமோ கொறித்துக் கொண்டு சென்ற இடத்தில் நடந்த கதையெல்லாம் விலாவாரியாக சொல்லிக் கொண்டிருந்தால் எப்படி கன்னத்தில் கை வைத்து கேட்போமோ, அதைப் போன்ற அனுபவத்தைத் தருகிறது டாலர் நகரம்.

புதுவயல், காரைக்குடி, ஐயப்பா டெக்ஸ்டைல்ஸ் என்று பாரதிராஜா பாணியில் தன் மண்வாசனை மாறாமல் நம்முன் காட்சிகளைக் கொண்டுவந்து நிறுத்தியது போல் ஒரு பிரமிப்பினை ஏற்படுத்துகிறார் ஜோதிஜி. படித்து முடித்த பின் ஏதோ பிரம்மாண்ட ஜவுளிக்கடலில் மூழ்கித் திளைத்து, புது நூல் வாசனையும், சாயப்பட்டறைக் கழிவுகளுக்கு நடுவே இருப்பதைப் போன்ற பீதியும் உண்டாகிறது.

பாலியல் தொந்தரவுகள், சுகாதாரமற்ற வசிப்பிடங்கள், வியாபார தந்திரங்கள், நடைமுறைச் சிக்கல்கள் என திருப்பூரின் முதலாளிகள் முதல் தொழிலாளிகள் வரை சந்திக்கும் அவலங்களை ஆங்காங்கே அள்ளித் தெளித்து நம்மை அலற வைக்கிறது டாலர் நகரம். 

சில சிக்கலான விஷயங்களைக் கூட, இது இப்படித்தான் என்று பட்டவர்த்தனமாகவும், அதைச் சொல்லும் நயமும் சிரிப்பதா அல்லது அவலத்தை நினைத்து நொந்து கொள்வதா என நம்மைத் திணறடிக்கிறார் ஜோதிஜி. 

உதாரணம்: “இங்கே மின்சாரம் முதல் சம்சாரம் வரைக் காபந்து செய்து தான் வாழ வேண்டியிருக்கிறது”.

திருப்பூரைப் பற்றி வெறும் செவிவழிச் செய்தியாகவேக் கேள்விப்பட்டு, தொலைக்காட்சி செய்திகளில் எப்பொழுதாவது காட்டப்படும் சாயப்பட்டறை கழிவுகள் குறித்து டீக்கடைகளில் பஞ்சாயத்து செய்யும் நாட்டாமைகளுக்கும்,கல்லூரிப் படித்து முடிக்கும் வரையிலும் மாலை ஏழு மணிக்கு சாப்பிட்டு, எட்டு மணிக்கெல்லாம் முக்தி நிலையெட்டி, பத்து, பத்தரைக்கெல்லாம் நடுச்சாமம் காணும் வரம் பெற்ற ஜோதிஜி போன்ற அன்பர்களுக்கும் இப்புத்தகம் வன்மையாகப் பரிந்துரைக்கபடுகிறது.

இப்புத்தகம் தென்மாவட்டங்களிலிருந்து திருப்பூருக்குச் செல்லும் அனைத்துப் பேருந்துகளிலும் வலுக்கட்டாயமாக பயணச்சீட்டுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டிய விழிப்புணர்வு மருந்தாகும் அத்தனை தகுதிகளையும் பெறுகிறது.

புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் சில விஷயங்களை அந்த தளத்தில் தொடர்ந்து இயங்கிக்கொண்டே அச்சு ஊடகத்தில் சொல்வதற்கும் அசாத்திய துணிவும், நேர்மையும் கண்டிப்பாக வேண்டும். தான் சந்தித்த அத்தனை சிரமங்களிலும் நேர்மை தவறாது நின்று, இன்று துணிவாக இன்னார் தான் தவறு செய்கிறார்கள், இப்படித்தான் ஏமாற்றுகிறார்கள் என்று தன் அனுபத்தில் உணர்ந்த உண்மைகளைச் சொல்லும் ஜோதிஜி நம் மனதில் உயர்ந்து நிற்கிறார்.

புத்தகம் வெளிவருவதற்கு முதல் நாளே தமிழ்நாட்டின் மிகப் பரபரப்பான இடத்தில், சில நிமிடங்கள் மட்டும் புத்தகத்தினைப் புரட்டிப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.

ஷங்கர் படம் போல் பிரம்மாண்டமான விஷயங்களையெல்லாம் அலசிக் காயப்போடும் புத்தகத்தின் அட்டைப்படம் சத்தில்லாத மனோபாலாவைப் போல் இருப்பதாகத் தோன்றியது.

அந்தச் சில நிமிடங்களிலும் கவர்ந்தது புத்தகத்தின் வடிவமைப்பு மற்றும் ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட புகைப்படங்கள். திருப்பூர் பூராவும் புழுதி மண்டலத்தில் அலைந்து திரிந்து புகைப்படங்கள் எடுத்திருக்கும் அன்பர்  வள்ளியூர் குணாவிற்கும் பாராட்டுக்கள்.


1 comment:

Anonymous said...

//இப்புத்தகம் தென்மாவட்டங்களிலிருந்து திருப்பூருக்குச் செல்லும் அனைத்துப் பேருந்துகளிலும் வலுக்கட்டாயமாக பயணச்சீட்டுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டிய விழிப்புணர்வு மருந்தாகும் அத்தனை தகுதிகளையும் பெறுகிறது//
யோவ்! உண்மையிலேயே நீர் சுடுதண்ணிதான்யா ..:)

//ஷங்கர் படம் போல் பிரம்மாண்டமான விஷயங்களையெல்லாம் அலசிக் காயப்போடும் புத்தகத்தின் அட்டைப்படம் சத்தில்லாத மனோபாலாவைப் போல் இருப்பதாகத் தோன்றியது.//
புத்தகத்தில் ஜோதிஜி எழுதியிருக்கும் இறுதி அத்தியாயத்தின் தலைப்பு 'டல்லடிக்கும் டாலர்நகரம்' . அட்டைப்படம் அதற்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறது.
அக்கறை கொள்ள வேண்டியவர்கள் கவனத்திற்கொள்ளாவிட்டால், அஜீத் படத்தில் காணமற்போன அத்திபட்டி போலானாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை.
- மலைநாடான்