Wednesday, October 31, 2012

காரைக்குடி உணவகம்



ங்க பக்கம் இப்ப மழை பெய்யுதா? என்று நண்பர் கேட்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது.  காரணம் தொடக்கத்தில் மழை என்றால் ஒரு ஊருக்குள் எல்லா பகுதிகளிலும் வெளுத்துக்கட்டும்.  ஆனால் திருப்பூருக்குள் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக இந்த மழை இப்போது பெய்து ஊரை சுத்தப்படுத்திக் கொண்டுருக்கிறது. குறிப்பிட்ட இடத்திற்கு சற்று நேரம் கழித்து செல்லாம் என்றால் அந்த பக்கம் அப்போது தான் மழையின் சாரல் தொடங்குகின்றது. 

வினோதமாக இருந்தாலும், அவசர கடமைகளை மீறி நனைந்து செல்வது வெகு நாளைக்குப் பிறகு மகிழ்ச்சியாக இருக்கிறது.

திருப்பூர் சுற்று வட்டாரத்தில் பெய்யும் மழை இந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு உதவுகின்றதோ இல்லையோ முறையற்ற, அனுமதி பெறாமல் இயங்கிக் கொண்டுருக்கும் சாயப்பட்டறைகளுக்கு பம்பர் லாட்டரி.

மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு தெரியாமல் (தெரிந்தும்?) தங்கள் பகுதியில் பள்ளத்தில் சேர்த்து வைத்திருக்கும் சாய நீரை எளிதாக இந்த தண்ணீரோடு சேர்த்து கலந்து விட்டு விடலாம் அல்லவா.

ஏற்கனவே திருப்பூர் முக்கால் வாசி மூழ்கிப் போய்விட்டது.  இன்னமும் மீதி இருப்பதால் பலரும் இதற்காகவே உழைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

நல்லது நடக்க வேண்டும் என்றால் சில அழிவுகளை நாம் கண்ணால் காண வேண்டும் என்பார்கள்.  பார்க்கலாம்.  பாதிப் பேர்கள் சொத்துக்களை விற்று தங்களை காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.  மீதிப் பேர்கள் மனம் திருந்த மார்க்கம் இல்லாத வழியில் பயணித்துக் கொண்டுருக்கிறார்கள்.

அனுபங்கள் ஆசிரியராக பொறுமையாக பாடம் கற்பிக்கும். பாடத்தை புரிந்து கொள்ள விரும்பாதவர்களுக்கு பாடங்கள் பாம்பாக மாறி கற்பிக்கும்.
                                                                •••••••••••••••••••••••••••••••••••

நொய்யல் நதியை காப்போம் என்று திருப்பூரில் உள்ள நண்பர்கள் முகப்பு நூல் ஒன்றை உருவாக்கி உள்ளார்கள்.  

அதில் முகப்பு படமாக உள்ள தற்போதைய நொய்யல் ஆற்றின் படம் இது. படத்தை சொடுக்கினால் நண்பர்கள் உருவாக்கியுள்ள முகப்பு நூலுக்கு உங்களை அழைத்துச் செல்லும்.

மழையை ரசிப்பதும் அதில் நினைவதும்  சுகமே.  பெய்த மழையில் அடித்துச் செல்லும் கழிவுகளைப் போல பல சமயம் அடித்தட்டு மக்களின்  இயல்பான வாழ்வாதாரத்தையும் மாற்றி விடுகின்றது.
                                                                      •••••••••••••••••••••••••

ண்பருடன் பேசிக் கொண்டுருந்த போது நீங்க கூட தற்போதைய மின்வெட்டு பற்றி தெளிவாக எழுதவில்லை.  உங்களுக்கு அம்மையார் குறித்த பயமா? என்றார். 

கூகுள் ப்ளஸ் ல் இது விவாதமாக வரும் போது கூட கடைசியில் இது கலைஞர் செய்த முந்தைய தவறு என்றும், இல்லை இது இந்த ஆட்சியின் நிர்வாக சீர்கேடு.  எவரும் பேசப் பயப்படுகிறார்கள். பயந்தாங்கோலி பக்கோடாக்கள் என்கிற ரீதியில் முடிவில்லாமல் போய்க் கொண்டே இருக்கிறது. 

தம்பியண்ணன் அப்துல்லா கூட உயர்வு நவிற்சி அணியில் என்னைப் பற்றி விமர்சித்து இருந்தார்.

கூகுள் ப்ளஸ் ல் சொல்ல முடியாத, நண்பர் ராஜமாணிக்கம் தமிழ் ஹிந்துவில் எழுதிய இரண்டு கட்டுரைகளுக்கு அப்பாற்பட்டு இது குறித்து எழுத வேண்டும் என்று மனதில் வைத்து இருந்தேன். ஒரு மாதத்திற்குப் பிறகு நண்பர் சென்னையில் இருந்த போது கொடுதத புத்தகத்தை முழுமையாக வாசிக்க முடிந்தது.


மின்சாரம் -- பயன்படுத்த அல்ல. புரிந்துகொள்ள மட்டும்  

என்ற தலைப்பில் சில பதிவுகளாக எழுத நினைத்துள்ளேன். முழுக்க முழுக்க புள்ளி விபரங்களை பல வித ஆதாரங்களோடு மிகத் தெளிவாக சா. காந்தி அவர்கள் எழுதி உள்ளார்.

சென்னையில் இருந்த போது நண்பர் என்னிடம் கொடுத்த புத்தகத்தை முழுமையாக வாசித்து முடித்த போது தலைசுற்றாத குறை தான்.  காரணம் தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் மின்சார தட்டுப்பாடு குறித்து தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்களின் அமைப்பின் தலைவரான சா. காந்தி அவர்களால் எழுதப்பட்ட புத்தகம் 

தமிழகத்தில் மின்வெட்டும் மின் கட்டண உயர்வும் -- காரணமும் தீர்வும். 

ஏறக்குறைய நம்முடைய தமிழ்நாடு மின்சார வாரியம் சுய பரிசோதனை செய்து கொண்டு ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட்டால் எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு இந்த புத்தகத்தில் சா. காந்தி அவர்கள் தகவல்களை ஆணித்தரமாக கொடுத்துள்ளார். 

கட்சி சார்பற்று, மொத்தமாக நம்முடைய மின்சார வாரியங்கள் கடந்து வந்த பாதை, இந்தியாவில் உள்ள மொத்த மினசாரத்தடத்தின் கதை என்று எல்லா பக்கமும் உள்ள நிறை குறைகளை அலசி துவைத்து காயப்போட்டு உள்ளது. 

இந்த புத்தகத்தை மே 17 இயக்கம், பெரியார் திராவிடர் கழகம் சேர்ந்து ஆழிப்பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளார்கள்.  நண்பரிடம் அனுமதி பெற்ற காரணத்தால் இதில் உள்ள முக்கிய தகவல்களை வலைபதிவில் எழுதி வைக்க விரும்புகின்றேன்.

அதற்கு முன்னால் பொதுவான சில விசயங்களைப் பார்த்து விடலாம்.

சென்ற ஆட்சியில் மின் தட்டுப்பாடு காரணமாக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியைப் பற்றி செய்திதாள்களிலும், தளங்களிலும் வந்த நக்கல் விமர்சனங்களை நாம் எவரும் மறந்து விடமுடியாது.  அதே நிலைமையில் இன்றைய காலகட்டத்தில் இன்றைய மின்துறை அமைச்சராக நத்தம் விஸ்வநாதன்.  

நன்றாக விபரம் தெரிந்தவர்கள் மின்சாரத் துறைக்கு அமைச்சராக வருபவர்களை கழிவிரக்கத்தோடு தான் பார்ப்பார்கள். காரணம் தற்போதைய நிலைமையில் தமிழ்நாடு மின்சார வாரியம் என்பது வழங்கும் மின்சாரத்திற்கு வசூல் செய்வது மட்டும் தான் ஒரே வேலை.  மற்றபடி எந்த அதிகாரமும் இல்லாத துறை. மாநிலத்தின் முதலமைச்சர் கூட ஒன்றும் செய்யமுடியாது என்கிற நிலைமை தான் எதார்த்தம்.

குழப்பாக இருக்கிறதா?

மேற்கொண்டு படிக்கக் காத்திருக்கவும்.

அடுத்து ஆட்சிக்கு வருபவர்களுக்கு இரண்டு முக்கிய பிரச்சனை காத்துக் கொண்டு இருக்கிறது.  ஒன்று தண்ணீர் மற்றொன்று மின்சாரம்.
                                                                                  ••••••••••••••••••••••••••

சில நாட்களுக்கு முன் குழந்தைகளுடன் ரசித்து பார்த்த படம் சமீபத்தில் வெளிவந்த சாட்டை.  


நண்பர்களின் கருத்துப்படி இது மிகைப்படுத்தப்பட்ட உணர்ச்சிகளுடன் வெளிவந்த படம் என்கிறார்கள். தற்போதைய சூழ்நிலையில் அம்மணமாக இருக்கும் ஊரில் கோவணம் கட்டியிருந்தால் கூட அவமானம் தான்.  படங்களில் இரண்டு பேர்கள் சேர்ந்து மது அருந்தும் காட்சி வந்தால் மதுப்பழக்கம் உடல் நலத்திற்கு தீங்கானது என்று மிகச் சிறிய எழுதுக்ககளில் கீழே வரும்.  அதைப் போலவே புகை பழக்கத்திற்கும்.  

ஆனால் இந்த சிறிய எழுத்துக்களை எவர் கண்டு கொள்வார்கள்? திருந்துவார்கள் என்ற ஆராய்ச்சி தேவையில்லை.  

தவறான பழக்கம் என்பது இயல்பானதாக மாறிவிட்ட சமூகம் இது.  

ஆனால் கிராமத்து பள்ளிக்கூடங்களில் இன்றும் கந்து வட்டி ஆசிரியர்கள், சாதி வெறி பிடித்த ஆசிரியர்கள், வாங்கும் சம்பளத்திற்கு மனசாட்சிக்கு கூட பயம் இல்லாமல் வேலை செய்ய விருப்பம் இல்லாமல் இருப்பவர்கள், கிராமம் என்றால் லட்சக்கணக்கான பணம் கொடுத்து மாற்றலாகி நகர்ப்புறத்திற்கு வருகின்ற ஆசிரியர்கள், அடிப்படை வசதியற்ற கிராமத்து பள்ளிக்கூடங்கள், மாணவர்களை மனிதர்களாகவே மதிக்க மறுக்கும் ஆசிரியர்கள் என்று பலவற்றையும் பார்த்துக் கொண்டு இருக்கின்றோம்.

ஆனால் நாம் ஏற்றுக் கொள்ள விருமபுவதில்லை.  

நாமும் அதே போலத்தான் அந்த தடங்களைத் தாண்டித்தான் இந்த நிலைமைக்கு வந்து இருந்தால் கூட இப்ப பழைய நிலைமைக்கு மோசம் இல்லை என்று சொல்லிக் கொண்டு நம் குழந்தைகளை ஆங்கில பள்ளிக்கு அனுப்பிக் கொண்டு இருக்கின்றோம்.

திரைப்படம் என்பது வியாபாரம்.  போட்ட முதலீட்டை எடுத்தே ஆக வேண்டும்.  ஆனால் அதற்கு அப்பாலும் படம் எடுப்பவர்களுக்கும், இயக்குநர்களுக்கும் சில அடிப்படை கடமைகள் இருக்கிறது.  

அதைப்பற்றி பேசும் போது தான் எதார்த்தம் தெரியாதவன் என்று முத்திரை குத்தப்படுகின்றது.

என் மூத்த சகோதரி கண்டிப்புக்கு பெயர் போனவர்.  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் தனது ஆசிரியை பணியைத் தொடங்கினார். கல்லூரியில் பணிபுரிய  வாய்ப்பு வந்த போது எங்கள் குடும்பத்தில் அனுமதிக்கவில்லை.

மாறுதல் வாங்க மனமில்லாமல் நீண்ட வருடங்கள் அங்கேயே இருந்தார். பத்தாண்டுகளுக்கு முன் திருவண்ணாமலையின் உள்ளடங்கிய கிராமத்திற்கு குறிப்பாக போலூர் பக்கம் உள்ளே சென்றால் அது ஒரு தனி உலகமாக இருக்கும்.

பணியில் இருந்த போது பல முறை மிரட்டலுக்கு ஆளானவர்.  ஆனால் விடாமுயற்சியில் பணிபுரிந்த 12 வருடங்களில் அந்த அரசு பள்ளிக்கூடத்தை முன்னேற்றிக் காட்டினார்.  துனை தலைமையாசிரியாக இருந்தவருக்கு தலைமையாசிரியர் பொறுப்பு வந்த போது, காத்துக் கொண்டு இருந்தவர்கள் கோவில்பட்டிக்கு அருகே தூக்கியடித்தனர். அங்கும் பல பிரச்சனைகள் உருவானது. இரண்டு குழந்தைகளையும் அரசாங்க பள்ளியில் தான் படிக்க வைத்து மாவட்ட அளவில் சிறப்பாக தேர்ச்சி பெற்றனர்.  நீண்ட வருடங்களாக ஊருக்கு வெகு தூரத்தில் இருந்து விட்டோம். கடைசி காலத்தில் ஊருக்கு அருகே இருப்போம் என்று தற்போது தேவகோட்டை கல்வி மாவட்டத்திற்கு மாறுதல் வாங்கிக் கொண்டு தேவகோட்டை பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு அரசு பள்ளியில் தற்போது தலைமை ஆசிரியராக பணிபுரிந்து கொண்டு வருகிறார்.

 ஏற்கனவே இந்த பகுதியைப் பற்றி தெரிந்தவர்களுக்கு (சாதிப் பிரச்சனை) முழு பின்புலமும் தெரியும். ஒவ்வொரு வாரமும் அவருடன் அழைத்துப் பேசும் போது அவருடைய புலம்பல்களை பொறுமையாக கேட்டுக் கொள்வதுண்டு., இன்றைய கல்வியின் குறிப்பாக அரசாங்கப் பள்ளியின் தரத்தை மாணவர்களின் சிந்தனைகளை, சுயநலமிகளின் போக்கை புரிந்து கொள்ள முடிகின்றது.

ஆனால் இதையும் தாண்டி சில நல்ல பள்ளிக்கூடங்களும் இருக்கின்றது.

திருப்பூர் மாவட்டத்தில் பல பள்ளிக்கூடங்கள் வெகு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டுருக்கின்றது.  சிவகங்ககை மாவட்ட கல்வி முதன்மை அதிகாரி நடத்தும் கூட்டத்தில் இங்குள்ள அரசாங்க பள்ளிகளைப் பற்றி  குறிப்பிட்டு  சொல்லும் அளவிற்கு என்றால் பார்த்துக் கொள்ளுங்க.

காரணம் மனதிர்களும் அவர்களின் மனசும் தான் காரண்ம்.

மனிதர்களுக்கு பணம் மட்டும் தேவை எனில் பல தொழில்கள் இருக்கின்றது. பேரூந்து நிலையத்தில் மூத்திரம் போக இரண்டு ரூபாய் வாங்கிக் கொண்டு ஓப்பந்தகாரர்களாக, அதில் பணிபுரிபவர்களாக வாழ்க்கை நடத்துபவர்கள் வரைக்கும் இந்த உலகத்தில் பலரும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களுக்கும் தினந்தோறும் பணம் தான் கிடைக்கின்றது. இதுவரைக்கும் இலைமறை காயாக நடந்து கொண்டுருந்த விசயங்கள் தற்போது நவீனமாக சமீப காலமாக திருப்பூர் நட்சத்திர ஹோட்டலில் வளர்ந்து கொண்டு இருக்கும் விபச்சாரம் வரைக்கும் பணம் சம்பாரிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றது.

சமீபத்தில் ருக்மாங்கதன் (தற்போது செக்ஸ் படங்கள் எடுத்துக் கொண்டுருப்பவர்) போல அப்பட்டமாக எடுத்து ஆமாடா நான் இப்படித்தான்.  நீங்க பெரிய ஒழுக்கமா? என்று கேட்டு விடலாம் 

அவர் கொடுத்த பத்திரிக்கை பேட்டியிலும் தைரியமாக இப்படித்தான் பேசியுள்ளார்.

அவர் சொல்லியுள்ள எதார்த்தம் முற்றிலும் உண்மை.

பாராட்டத் தோன்றுகின்றது.

முடிந்தால் குழந்தைகளுடன் சாட்டை படம் பாருங்கள். 

அன்பே சிவம் எடுத்த பிறகு இயக்குநர் மற்றும் நடிகர் சுந்தர் சி எனது திரைப்பட வாழ்க்கையில் இது போன்ற ஒரு படமும் எடுத்துள்ளேன் என்பதே எனக்கு பெரிய திருப்தி என்று சொன்னது போல சமுத்திரகனியும், இயக்குநர் அன்பழகனுக்கும் இது முக்கிய படம்.

முக்கியமாக தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குநர் பிரபு சாலமன் அவர்களையும் பாராட்டத் தோன்றுகின்றது.  

தம்பி ராமையா மிகச் சிறந்த நடிகர் என்பது ஏற்கனவே தெரிந்த விசயம். இந்த படத்திலும் சமுத்திர கனிக்கு போட்டி போட்டு நடித்துள்ளார். வலைதளத்தில் பெரும்பாலும் நல்ல விதமாகத்தான் இந்த படம் குறித்து எழுதி உள்ளனர். 

இது போன்ற படங்களுக்கு குறைந்த பட்சம் அரசாங்கம் வரிவிலக்கு கொடுக்க வேண்டும்.

காசுக்காக அலைந்தோம். காசுக்காகவே அலைகின்றோம்.  காசுக்காகவே எல்லாவற்றையும் இழந்து கொண்டும் இருக்கின்றோம்.

15 comments:

Ravichandran Somu said...

காரைக்குடி உணவகம்... புதிய தொடரா? வாழ்த்துகள். அரசு பள்ளியில் படித்தவன் என்பதால் “சாட்டை” படம் எனக்கும் மிகவும் பிடித்திருந்தது... ஒரு சில கிளிஷே மற்றும் நாடகத்தன்மையான காட்சிகள் தவிர.

saidaiazeez.blogspot.in said...

காரைக்குடி உணவகத்தில் வித்தியாசமான பண்டங்களும் பானங்களும் பரிமாறப்பட்டவிதம் மிகவும் அருமை நண்பரே!

முனைவர் இரா.குணசீலன் said...

காசுக்காக அலைந்தோம். காசுக்காகவே அலைகின்றோம். காசுக்காகவே எல்லாவற்றையும் இழந்து கொண்டும் இருக்கின்றோம்.

உண்மை

Unknown said...

நான் உயர் நிலைப்பள்ளியில்[ சரஸ்வதி உயர் நிலை ப்பள்ளி கோணாபட்டுதற்போதுபுதுகோட்டைமாவட்டம்]படித்தபோது நல்லகல்வியைகற்றுக்கொடுத்தஆசிரியர்களுக்கு என்வணக்கம்[ 1967TO1973 ]

அகலிக‌ன் said...

12 ஆம் வகுப்புவரை மாநகராட்சி பள்ளியிலேயே படித்தவன் என்பதில் பலமுறை பெருமைபட்டுக்கொள்வதுண்டு.
காரணம் அது கற்றுக்கொடுத்த தன்னம்பிக்கை

ஜோதிஜி said...

அகலிகன் நீங்க சொல்வது முற்றிலும் உண்மை. என் வாழ்க்கையில் பல சோதனைகளில் இருந்து வெளியே வர உதவியதும் இந்த தன்னம்பிக்கை தான். அது நான் படித்த அரசாங்க பள்ளிகளின் மூலம் தான் கிடைத்தது. இணையத்தில் உலாவும் போது ஆங்கில வழி கல்வி அடைந்த பெரும் பதவிகளில் உள்ளவர்களின் மனப்பாங்கும், அவர்களின் உரையாடல மூலம், அவர்கள் தங்களை வெளிகாட்டிக் கொள்ளாமல், பட்டும் படாமல் இருக்கும் தன்மையின் மூலம் புரிந்து கொள்ள முடிகின்றது.

ஜோதிஜி said...

வாங்க ரவி

சுற்றுப்பயணம் முடிந்ததா? இது தொடர் அல்ல.

கலவையான எண்ணங்களின் வடிகால்.

ஜோதிஜி said...

வாங்க பழனிசாமி அய்யா

நீங்க கோனாபட்டு என்பதை இன்று தான் கண்டு கொள்ள முடிந்தது. தொடர் பயணத்தில் பங்கெடுக்கும் உங்களுக்கு என் நன்றி.

ஜோதிஜி said...

சைதை அஜீஸ்

காவேரி மைந்தன் தொடர்பில் உள்ளே வந்து இருப்பீங்கன்னு நினைக்கிறேன். வாங்க.. வாங்க.

வருக முனைவரே? நலமா?

Unknown said...

நான் கோணாபட்டு இல்லை என் சொந்தஊர்கமுதி;ராமநாதாபுரம் மாவட்டம் ;பலவாங்குடி ல் நான் பிறக்கும் முன்பே இருந்து மளிகை கடை வைத்துஇருந்தார்;படித்தது கோணாபட்டுஇப்போது சென்னை லேலண்ட்ல்பணிபுரிகிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

சாட்டை... உங்கள் பாணியில் விமர்சனம் நன்று... நன்றி...

வவ்வால் said...

ஜோதிஜி,

// காரணம் தற்போதைய நிலைமையில் தமிழ்நாடு மின்சார வாரியம் என்பது வழங்கும் மின்சாரத்திற்கு வசூல் செய்வது மட்டும் தான் ஒரே வேலை. மற்றபடி எந்த அதிகாரமும் இல்லாத துறை. மாநிலத்தின் முதலமைச்சர் கூட ஒன்றும் செய்யமுடியாது என்கிற நிலைமை தான் எதார்த்தம்.//

நடை முறை எதார்த்தம் தெரியாதவர்னு சொல்லிடுறாங்கன்னு நீங்களே சொல்லிட்டிங்க, என்னை கேட்டால் அதை விட எதாவது சொல்லணும் என்று தான் சொல்வேன், நகைச்சுவைக்கு அல்ல உண்மையில் தான்.

மாநில முதல் அமைச்சர் கூட ஒன்றும் செய்ய முடியாத நிலை ஒரு மாநில துறைக்கு எப்படி வந்தது?

ஏற்கனவெ எப்படின்னு நான் சொல்லியாச்சு, தேடிப்பார்க்கவும்.

//இது போன்ற படங்களுக்கு குறைந்த பட்சம் அரசாங்கம் வரிவிலக்கு கொடுக்க வேண்டும். //

இதுக்கு மேல என்ன வரி விலக்கு தரணும்?

வரிவிலக்கு வாங்கிக்கொண்டு டிக்கெட் கட்டணம் குறைக்க மாட்டேன்னு சொல்லும் சின்இமாக்காரங்களை ஒன்றும் சொல்லாதிங்க.

தமிழில் பெயர் வைத்தாலே கேளிக்கை வரி விலக்குன்னு சொன்னதில் சின்ன திருத்தம் செய்து, தமிழ் கலாச்சாரமும் இருக்கணும்னு சொல்லி, அப்படியும் பெயர் தமிழில் இருந்தால்(யு சான்று) வரிவிலக்கு எல்லா படமும் வாங்குது.

சாட்டை படத்துக்கு வரி விலக்கு கொடுக்கப்படவில்லை என்று எப்படி சொல்லுறிங்க?

இப்பொ இருக்கும் விதிப்படி சாட்டை வரிவிலக்கு வாங்கி இருக்கும், இல்லைனா செய்தி ஆகி இருக்கும்.

Rathnavel Natarajan said...

அருமையான பதிவுகள்.
நன்றி.

Anonymous said...

படித்தேன், பார்த்தேன்
- மலைநாடான்

ஜோதிஜி said...

வரிவிலக்கு வாங்கிக்கொண்டு டிக்கெட் கட்டணம் குறைக்க மாட்டேன்னு சொல்லும் சின்இமாக்காரங்களை ஒன்றும் சொல்லாதிங்க.


நான் இந்த அக்கிரமத்திற்கு பயந்து கொண்டு போனால் நிச்சயம் தகாராறு வரும் என்று போவதே இல்லை. ஒரு குடும்பத்துடன் சென்று வரும் போது குறைந்தபட்சம் 500 காலி. மீதி நீங்களே யூகித்துக் கொள்ளவும்.