இந்த மாதம் முழுக்க எழுத முடியவில்லை.
இயல்பாகவே வலைபதிவுகளை விட்டு குறிப்பிட்ட காலம் ஒவ்வொரு முறையும் ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பது எனது வழக்கம். ஆனால் இந்த முறை அடிமைகள் குறித்து எழுதியதைக் கூட சரி பார்த்து வலையில் ஏற்றமுடியாதபடி தொடர் வேலைப்பளூ. கடந்த மூன்று வாரங்களாக உயிர் மறந்து உடல் துறந்து ஓடிக்களைத்த உடம்பு நேற்று தான் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பியுள்ளது.
கடந்த மூன்று வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் தான் எங்கள் குடும்பத்தில் அணைவரும் திருப்தியாக உணரும் தீப ஒளி திருநாள்.
நான் பார்க்கும் ஒவ்வொரு குடும்பத்திலும் பணம் என்ற காகிதம் தான் இந்த கொண்டாட்டங்களை சிறப்பு அல்லது வெறுப்பு என்கிற நிலைக்கு கொண்டு வந்து கொண்டிருககிறது. காரணம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒன்றை வாங்கி சேர்த்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதால் நிறைய தேவைகள் நமக்கு உள்ளது.
இருப்பதை மறந்து போய்க் கொண்டிருக்கிறோம். இல்லாததை தேடிக் கொண்டிருக்கிறோம்.
வலைபதிவுகள் அறிமுகமானபிறகு வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு ஆகா தீபாவளி வந்துடுச்சா? என்று உணர வைக்கும் அளவுக்கு ஒரு இணைப்பு பாலத்தை இந்த வலைபதிவுகள் உருவாக்குகின்றதோ என்று பலருடனும் பேசும் போது புரிந்து கொள்ள முடிந்தது.
கடந்த நாலைந்து வருடங்களாக இது போன்ற கொண்டாட்டங்களை வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் தான் இருக்கின்றேன். இந்த வருடம் நிறைய வரலாற்று புத்தகங்களை படித்த போது குறிப்பாக தமிழர்களின் பழங்கால வரலாற்றை தெரிந்து கொண்ட போது இன்னும் நிறைய மாற்றங்கள் என் சிந்தனையில் வந்துள்ளது..
தமிழர்களின் ஒவ்வொரு தலைமுறையிலும் பத்து சதவிகிதம் தான் சகல சந்தோஷங்களோடும் வாழ்ந்திருக்கிறார்கள். மற்ற அத்தனை மக்களும் போராடிப் போராடி போயும் சேர்ந்துள்ளார்கள்.
இன்று நிறைய மாற்றங்கள் வந்த போதிலும் திருப்தியான மன நிலையில் வாழ்பவர்கள் மிக குறைவாகவே கண்களுக்குத் தெரிகின்றார்கள்.
அவரவர் மனநிலையே முக்கிய காரணமென்றாலும் நாம் ஜனநாயகத்திற்கு கொடுக்கும் விலை இந்த உள்ளாட்சி தேர்தலில் மக்கள் கூச்சப்படாமல் வாங்கிய பணம் ஒரு முக்கிய உதாரணம். அதை விட கொடுமை தோற்றவர்கள் வீடு வீடாக வந்து வசூலித்த விதம்.
குழந்தைகளின் அதீத ஞாபக சக்தியில் இருக்கும் அவர்களின் பிறந்தநாள் மற்றும் இந்த தீபாவளி திருநாளை முக்கியமான நாட்களாக கருதிக் கொள்வதால் அவர்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாத அளவுக்கும் ஒவ்வொரு வருடமும் சிறப்பாகவே போய்க் கொண்டிருக்கிறது.
கல்லூரிக்கு இவன் போனால் இன்னமும் கெட்டுப் போயிடுவான் என்று போராடிய அப்பாவை மீறி என்னை கல்லூரிக்கு அனுப்ப காரணமாக இருந்த கடைசி சித்தப்பாவும் சமீபத்தில் இறந்து போன காரணத்தால் இந்த தீபாவளி ஒரு வகையில் எனக்கு வலியான தீபாவளி தான்.
சென்ற வருடம் திருப்பூரில் பாதி முதலாளிகள் வாழ்க்கையை இழந்தார்கள். இந்த வருடம் முக்கால் வாசி நிறுவனங்களுக்கு மூச்சே போய் விட்டது. ஆனால் தாக்குபிடித்து நிரந்தரமாக ஓடிக கொண்டிருந்த நிறுவனங்களில் தொடர் பணியில் இருந்த தொழிலாளர்களுக்கு எப்போதும் போலவே கிடைத்த போனஸ் தொகை அதிக உற்சாகத்தை அளித்துள்ளது.
நல்ல நிறுவனம். வருடம் முழுக்க வேலை நடந்து கொண்டிருக்கும்,. அண்ணன் தம்பி என்று இருவருமே கடுமையான உழைப்பாளிகள். கடந்த ஒரு வருடத்தில் நிறுவனத்தின் நட்டத்தை போக்க வைத்திருந்த ஒவ்வொரு சொத்து பத்திரமும் வங்கிக்கு சென்று கொண்டிருந்தது. 500 பேர்கள் பணிபுரியும் நிறுவனத்திறகு போனஸ் கொடுக்க வேறு வழியே இல்லாமல் தம்பியின் வீட்டு பத்திரத்தை கேட்க உருவானது கொடுமையான போராட்டம். பாசம் பின்னுக்கு போய் விட பகை முன்னால் வந்து நிற்கின்றது. இதைப் போலவே ஒவ்வொரு நிறுவனத்திற்குள்ளும் ஓராயிரம் கதைகள்.
இங்குள்ள பல பெரிய நிறுவனங்களுக்கு போனஸ் தொகை கொடுக்க உதவியது பிரபல்ய அரசியல் தலைகளின் பணமே. வசூலிக்கும் வட்டி கணக்கை கேட்டால் உங்களுக்கு தலை சுற்றி விடும்.
இதுவும் கடந்து போகும்.
ஏற்கனவே கலைஞர் ஆட்சியில் இருந்த அதே மின்வெட்டு இப்போதும் நேரம் காலம் தெரியாத அளவுக்கு போய் படாய் படுத்திக் கொண்டிருக்கிறது. எப்ப வரும்? என்று தெரியாமல் அல்லாடிக் கொண்டிருககிறோம். ஆனால் ஜெ வுக்கு உள்ளாட்சி தேர்தல் (அதிமுக தொடங்கி இப்போது தான் சென்னை மேயர் பதவியை பிடித்துள்ளது) எந்த அளவுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளதோ அந்த அளவுக்கு கிராமத்து மக்களிடமும் அதிக சந்தோஷத்தையும் கொடுத்துள்ளது. காரணம்?
நான் பிறந்த ஊரில் வரிசையாக நண்பர்கள் உறவுகள் என்று ஒவ்வொருவரையும் அழைத்து பேசத் தொடங்கிய போது ஆச்சரியமும் அதிசயமுமாக அவர்கள் வார்த்தைகளில் உற்சாகம் கரைபுரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. காரணம் சாதாரணமாக பேரூராட்சி என்கிற ரீதியில் உள்ள ஊரில் தலைவர் பதவிக்கு நின்றவர் செலவழித்த தொகை சுமாராக ஒரு கோடி ரூபாய். சொந்தமாக நவீன அரிசி ஆலை வைத்துள்ளார். தமிழ்நாடு முழுக்க சூர்யா பிராண்ட் என்று 25, 50 கிலோ சாக்கு பையில் நீங்கள் பார்த்து இருக்கலாம். ஒரு குடும்பத்திற்கு இருக்கும் ஓட்டின் எண்ணிக்கைப் பொறுத்து 3000 முதல் அதிகப்ட்சம் 10000 வரைக்கும் வாரி வழங்க அணைவரும் மகிழ்ச்சியாக இந்த தீபாவளியை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவரும் ஜெயித்து விட்டார்.
நண்பனிடம் கேட்டேன்.
இவ்வளவு செலவழித்து இருக்கிறாரே? இது என்ன கணக்கு? என்றேன்.
ஆமாண்டா......... ஊருக்கு பாதாளச் சாக்கடைத் திட்டம் வரப் போகுது. திட்ட மதிப்பீடு 48 கோடி. எல்லாம் ரெடியாக இருக்கு. இவர் வந்ததும் வேலை ஆரம்பிக்கப் போகுது. என்றான்.
கோடிட்ட இடங்களை நாம் தான் நிரப்பிக் கொள்ள வேண்டும்.
குழந்தைகளில் கடைக்குட்டியிடம் நேற்று பல விசயங்களைப் பேசிக் கொண்டிருந்த போது உள்ளே இருந்த மனைவி என்னைப் பார்த்து அடிக்க ஓடி வந்தார். காரணம் ஒன்றுமில்லை. கீழே உள்ளதைப் படித்துப் பாருங்க.
நடந்த தேர்தலில் யாருப்பா ஜெயிச்சாங்க?
ஜெயலலிதா.
அப்ப கருணாநிதி
இரண்டாவது இடம்.
ஏம்மா?
விஜயகாந்த எத்தனாவது இடம்?
மூன்றாவது இடம்.
இல்லப்பா விஜயகாந்த் ஜெயித்து இருக்க வேண்டும்.
ஏம்மா?
இவங்க எல்லாரும் தேவைப்படும் அளவுக்கு சொத்து சேர்த்துட்டாங்க. விஜயகாந்த வந்துருக்கலாம்ல?
(சாமீகளா சத்தியமா இவங்களோட நான் பொறுமையா பேசி ஒரு மாதம் ஆகப் போகுது. நான் கெடுத்து வச்சுருக்கேன்னு ஏம்மேல எம் பொஞ்சாதி பாயுற மாதிரி நீங்களும் அடிக்கவராதீங்க?)
தீபாவளி மட்டுமே கொண்டாடப்பட வேண்டிய நாள் அல்ல. ஒவ்வொரு நாளுமே மன இருளை போக்கி கொண்டாடப்பட வேண்டிய நாளே.
அணைவருக்கும் வாழ்த்துகள்.
24 comments:
மிக்க நன்றி
மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள்
நீண்ட நாட்களாக பதிவுலகிலும் வரவில்லை; முக நூல் பக்கமும் வரவில்லை. தொலைபேசியில் அழைப்போம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். தீபாவளி சமயம் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூப்பிடவில்லை.
உடல்நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
தீபாவளி - வலியா... வழியா... நம் பார்வையில் உள்ளது. எப்போதுமே மிக எளிமையாக செலவு செய்து தான் தீபாவளி கொண்டாடுவது. ஆனால் மகிழ்ச்சிக்கு பஞ்சமில்லை. தீபாவளி வாழ்த்துக்கள்.
ஜோதிஜி,
வணக்கம், யதார்த்தமா எழுதி இருக்கிங்க. நான் தீபாவளி , அது இதுனு கண்டுக்கிறதே இல்லை , எல்லா நாட்களும் ஒன்றே, ஆனால் வாழ்த்துகள் சொன்னா தப்பில்லைனு சொல்வேன், தீபாவளி வாழ்த்துகள்.நல்லா சாப்பிட்டு , டீவீல போடுற படம் பாருங்க , தப்பி தவறி தியேட்டர் பக்கம் போய்டாதிங்க :-))
வாழ்த்துக்கள்.
அடிமை பற்றிய பதிவை விரைவில் எதிர்பார்க்கிறேன்.
ஆப்ரிக்காவில் ஏஜெண்டுகள் எவ்வாறு அடிமைகளை பிடித்து அமெரிக்காவிற்கு அனுப்பினர்?
இஸ்லாத்தில் அடிமைகளை எவ்வாறு நடத்தவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது; என்றெல்லாம் உதிரி செய்திகள் படிக்க நேர்ந்தது. உங்கள் முறையான பதிவு ஒளி ஊட்டும்.
வணக்கம்! பிறப்பு,இறப்பு போன்று சில நிகழ்வுகளுக்கு நமது வாழ்க்கையில் விடை எங்கு தேடினாலும் கிடைக்காது. உங்களது உடலும்,உள்ளமும் உறுதிபட
எனது வாழ்த்துக்கள்.
மிக எளிமையாக செலவு செய்து தீபாவளி கொண்டாடுவதால் மகிழ்ச்சிக்கு பஞ்சம் வராது..
மனப்பூர்வ தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
உண்மை குமார். எளிமையான மக்கள் கொண்டாடும் தீபாவளி திருநாளை நான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன். குறிப்பாக சிறுவர்களை.
தமிழ் இளங்கோ மிக்க நன்றி. வாழ்த்துகள்.
தம்பி நிச்சயம் தொடருகின்றேன். நாலைந்து நாட்களுக்கு முழுமையான ஓய்வு தான். இது மட்டும் தான் எனது முக்கிய பணி.
வவ்வால் மூத்த தலைவர் நீங்க. உங்கள் வருகைக்கு நன்றி. நல்வாழ்த்துகள்.
தமிழ் உதயம் உங்கள் விமர்சனம் எப்போதும் போலவே நச். அலைபேசியில் படிப்பவர்களுக்கு எழுத்துரு பிரச்சனையாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது குறித்த தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்க.
ரத்னவேல் உங்கள் உளப்பூர்வமான அன்புக்கு என் குடும்பத்தினரின் நல்வாழ்த்துகள்.
எதார்த்தமான பதிவு... நன்றாக ஓய்வு எடுங்கள்..
யதார்த்தத்தை விளக்கிப் போகும் அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 4
please
continoueyour
wrting
இதுவும் கடந்து போகும்...
உங்கள் அறிவைப்பெருக்கிக்கொள்ள பேனாவைக் கூர்மைப்படுத்த எடுத்த ஒய்வு எங்களுக்கு சந்தோசமே...இன்னும் நிறைய நல்ல படைப்புகளை விரைவில் எதிர்பார்க்கிறோம்...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் மனம்நிறைந்த
இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்
எங்கள் மனமும் வலிக்கிறது ஜோதிஜி! நான் உங்கள் நெடுநாள் வாசகன்!
தீபஒளி வாழ்த்துகள் ஜோதிஜி.,
அரசியலில் மாற்று வேண்டுமென்பதே ஒரே குடும்பமே கொள்ளையடித்துக்கொண்டு இருக்கக்கூடாது. மற்றவரகளுக்கும் வாய்ப்பு கொடுக்கவேண்டும் என்பதுதான்:))
ஜோதி...ஜீ...சுகம்தானே.தேவியர் நால்வருக்கும் உங்களுக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள்.வலி மாறாத வலி.எத்தனை தீபாவளி வந்தாலும் மறக்கமுடியாத வலிகளோடுதான் !
தீபாவளிக்கான இனிய வாழ்த்து(க்)கள் ஜோதிஜி. குடும்பத்துக்கு என் அன்பு.
நமக்கு இங்கே எல்லா நாளையும் போல இன்னுமொரு வேலைநாள்.
பட்டாஸ் கண்ணுக்குக்கூடப் புலப்படலை. நவம்பர் 5 க்கு வெள்ளைக்கார நரகாசூரன் நினைவாக் கொளுத்தலாம்:-)
கேட்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருந்தேன்.(பதிவு தாமதத்திற்கான காரணத்தை).
அதையும் சேர்த்தே கதம்பமாக பதிவெழுதி விளக்கி விட்டீர்கள்.
இன்பம் பொங்க வாழ்த்துக்கள்!
வணக்கம் சத்ரியன்
நல்வாழ்த்துகள்.
வருக டீச்சர். நீங்க கொண்டாடுனீங்களா? பதிவுலகம் இல்லாவிட்டால் பெரும்பாலான வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு சுத்தமாக இந்த பண்டிகைகள் தெரியாது போல. ஏதோ நினைவில் வைத்துக் கொண்டு வீட்டுக்குள் மகிழ்ச்சியாக இருந்து விட வேண்டியதுதான் போல.
வருக ஹேமா. நீண்ட நாளாகிவிட்டது. நலமா?
வாழ்த்துகள் சிவா. ஒரே குடும்ப ஆசை இன்னமும் முடிவுக்கு வராமல் அசிங்கப்பட்டுக் கொண்டே இருக்கிறாரே?
நன்றி கவிப்ரியன்.
தொடர்வாசிப்புக்கு நன்றி ரெவெரி,
வாழ்த்துகள் ரமணி மற்றும் அனானி நண்பருக்கும்.
நந்தா உண்ண உறங்க படிக்க பார்க்க என்று போய்க் கொண்டிருக்கிறது.
மீண்டும் உங்கள் எழுத்தின் நளினத்தில் மூழ்கினேன்.நன்றி. வணக்கம்.
ஒருபுறம் திருப்பூர் சாயப்பட்டரைகள் மூடலிலிருந்து திணறிக்கொண்டிருக்கிறது, அதன் காரணமாக தென் மாவட்டங்களிலிருந்து திருப்பூருக்கு வேலைக்குச் சென்ற பலர் அவரவர் மாவட்டங்களிலேயே சுற்றிக் கொண்டிருக்கின்றனர். இந்த முறை தீபாவளிக்கு திருப்பூர் - மதுரை செக்டாரில் சிறப்பு பேருந்து இயக்கத்தேவை என்பது போன வருடத்தை விட குறைவான நடைகள் இயக்கப்பட்டிருப்பதே இதற்கு சாட்சி. ஆட்சி மாற்றம் வந்தவுடன் சில நாட்களிலேயே திருப்பூர் பிரச்சனை முற்றிலும் தீர்ந்துவிட்டது போல் ஊடகங்களில் மாயத் தோற்றம்.
மறுபுறம் கூடுதல் உள்ளாடைத் தேவையை நிறைவு செய்ய இயங்கிக் கொண்டிருக்கும் கம்பெனிகள் உங்களைப்போல், ஒரு தினத்திற்கு 16 மணி நேரத்திற்கு குறையாமல் உழைக்க வேண்டிய நிலை எழுந்திருக்கிறது. ஓய்வெடுங்கள் என நான் சொல்லலாம், ஆனால் நிறுவனத்தில் உங்களைப் போன்றவர்களை இரண்டு நாள் கழித்து தேட ஆரம்பித்துவிடுவார்கள்.
இருந்தாலும் அடிமைகளை தொடருங்கள். பின்னூட்டங்களில் நண்பர்கள் சொல்லியிருப்பது போல் உங்கள் எழுத்து நடையில் மேலும் மெருகு அதிகரித்திருக்கிறது.
உண்மை சம்பத்.
இந்த முறை பழைய பதிய பேரூந்து நிலையங்களில் இருந்து சென்ற பல திடீர் பேரூந்துகளில் சென்ற வருடம்அளவுக்கு கூடுதல் கூட்டம் இல்லை. தெளிவாக உணர்ந்து இருக்கீங்க. தூரத்தில் இருந்த போதிலும்.
//சென்ற வருடம் என்ன எழுதியிருந்தோம் என்று தேடிப்பார்த்த போது இந்த பதிவு தான் தெரிந்தது.//
இன்று ஏப்ரல் 1 தேதியா ...?
பதிவு வரவில்லையே என எதிர்பார்த்தேன்.தீபாவளி சமயம் ””டைட் வொர்க்’’இருப்பது அனுபவித்த,தெரிந்த ஒன்று என்பதால்,நினைத்தது போல பண்டிகை முடிந்ததும் டாண் என வ்ந்துவிட்டீர்கள்.வேலை,உடல்நலம்,பின் பதிவு இதுவே முறை.வாழ்த்துகள், விட்ட அடிமை தொடரை தொடங்க!!!நன்றி சார்.
“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.
தங்கள் வருகை தந்து சிறப்பித்ததற்கு நன்றி...
Post a Comment