Friday, September 30, 2011

கிராம பொருளாதாரம் -- அழிந்த கதை


அமெரிக்கா ஈராக் மேல் படையெடுத்து சதாம்ஹுசேனை எலிப் பொந்துக்குள் இருந்து தூக்கிய காட்சியை தொலைக்காட்சியில் பார்த்துருப்போம்.. 

அதன் பிறகு என்ன நடந்தது?

ஒரு பொம்மை அரசு உருவானது.  அமெரிக்காவின் கார்ப்ரேட் கணவான்கள் அத்தனை பேர்களும் உள்ளே நுழைவார்கள். அத்தனை ஒப்பந்தங்களும் உள்ளே வந்திறங்கும்.  நாட்டை புதிதாக நிர்மாணம்  செய்கின்றோம் என்ற பெயரில் நாட்டை சூறையாடி பெட்ரோல் முதல் மற்ற இயற்கை வளங்கள் வரைக்கும் தங்கள் நாட்டுக்கு கடத்துவதை நாம் கண் எதிரே பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  இதே தான் 18 ஆம் நூற்றாண்டில் பிரிட்டனும் செய்தது. ஆனால் இது போன்ற அப்பட்டமான நடவடிக்கைகளில் இறங்காமல் சுற்றி வளைத்து இந்தியாவின் கழுத்தை நெறித்தார்கள்.  


படிப்படியாக இறுக்கினார்கள்.

இந்தியாவின் கிராம பொருளாதாரத்தை சிதைத்து மக்களை வறுமையில் உழலவைத்து வாழ்க்கையின் ஓரத்திற்கே விரட்டி அடித்தனர். வேறு வழியே தெரியாத மக்களும் அடிமையாக வாழ பலநாடுகளுக்கும் புலம் பெயரத் தொடங்கினார்கள். இதில் ஒரு மகத்தான ஆச்சரியம் என்னவென்றால் தொடக்கத்தில் இந்தியாவின் உள்ளே வந்த வெள்ளையர்கள் எவரும் பிரிட்டன் அரச வம்சத்தை இங்கே நிலைபெறச் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வந்தவர்கள் அல்ல. வந்தவர்கள் அத்தனை பேர்களும் வியாபாரிகளே. 

அதிக லாபம்.  மேலும் லாபம் என்ற நோக்கத்தில் தங்களது வியாபார பரிவர்த்தனைகளில் மட்டும் கவனம் செலுத்தினார்கள். காலம் செய்த கோலம் இத்தனை பெரிய இந்திய நாடு தானாகவே வெள்ளையர்களிடம் அடகு வைத்தது போல் ஆகிவிட்டது.

மற்ற அந்நிய படையெடுப்பாளர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் ஒரு முக்கிய நோக்கத்தில் ஒரு வேறுபாடு இருந்தது.  மொகலாயர்கள் வசூலிக்கும் பணமெல்லாம் இந்தியாவிற்குள் தான் சுற்றி வந்தது.  ஆனால் வெள்ளையர்களுக்கு இங்கேயுள்ள பணம் தங்களது நாட்டுக்குச் செல்ல வேண்டிய அவஸ்யமாக இருந்தது.


முதலில் வியாபாரம் அதன் மூலம் ஆதிக்கம் 

கடைசியில் சுரண்டல். 

கச்சாப்பொருட்களை தாங்களே மொத்தமாக வாங்கி தேவைப்படும் வினிநோயகப் பொருட்களை விற்பது.  அதாவது குனிய வைத்துக் கொண்டே குத்துவது.  அதைத்தான் கடைசிவரைக்கும் செய்தார்கள். இது போன்ற படிப்படியான சுரண்டல்களின் மூலம் இந்தியாவின் உயிர்நாடியான கிராமப் பொருளாதாரத்தை எவரால் காப்பாற்ற முடியும்?  வெள்ளையர்கள் கொண்டு வந்த பல திட்டங்கள் வெளியேயிருந்து பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாகவே இருக்கும். ஆனால் உள்நுழைந்து பார்த்தால் மண்டையோடு பீதியைத் தரும்.

பல கோடி மக்களுக்கு சோறு போட்டுக் கொண்டிருந்த கைராட்டினத்தை உடைத்தார்கள்.  ஓடிக் கொண்டிருந்த தறியை நிறுத்தவைத்தார்கள். பிரிட்டனிலும், மற்ற ஐரோப்பிய தேசங்களிலும் இருந்த கைத்தறி ஆடைகளை நிறுத்தினார்கள். மொத்தத்தில் இந்திய பொருளாதாரத்தில் புழுதிக் காற்று சூறாவளியாக அடித்தது. 

இங்கிலாந்து பருத்தி விளையும் நாடான இந்தியாவிற்குள் பருத்தி துணிகளை இறக்குமதி செய்து ஜவுளி பொருளாதாரத்தையே திக்குமுக்காட வைத்தது.  1812 ஆம் ஆண்டு முதல் 1836 ஆம் ஆண்டு வரைக்கும் பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட துணிகள் 5200 மடங்கு அதிகமாகியது. 1838 ல் இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்குள் வந்த மல் மல் என்னும் நைஸ் ரக துணி பத்து லட்ச கஜம் தான்.  ஆனால் அந்தத் துணியை நெய்வதில் பிரசித்தி பெற்றிருந்த டாக்காவின் மக்கள் தொகை ஒன்னரை லட்சத்திலிருந்து இருபதாயிரம் என்ற எண்ணிக்கைக்கு குறைந்து விட்டது என்றால் மனதிற்குள் கணக்குப் போட்டுக் கொள்ளுங்க.

இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளமே குடிசைத் தொழிலே ஆகும். கையால் நூற்பதும், கையால் நெய்வதும், கையாலே நிலத்தை உழுவதுமாகவே இருந்தது. இதன் மூலமே ஒவ்வொரு இந்திய குடும்பமும் தன்னிறைவு பெற்றிருந்தது.  இங்கிலாந்தின் லங்காஷயர் நகரம் இந்திய நூற்பாலைகளை, நெசவாளர்களை ஒட்டு மொத்தமாக நடுத் தெருவுக்கு கொண்டு வந்து விட்டது. மிகப் பரந்து விரிந்த ஆசியாவில் வெள்ளையர்கள் விரும்பிய பொருளாதார மாற்றங்களை மிக எளிதில் கொண்டு வந்த சரித்திர புகழ்பெற்ற நாட்டை தரித்திரமாக மாற்றுவதில் வெற்றி கண்டனர்.  வெற்றியடைந்த வெள்ளையர்கள் வேகமாக பொருளாதார ரீதியாக மேலேறத் தொடங்கினர்.  தோல்வியைக் கண்ட இந்திய கிராமத்து மக்கள் அத்தனை பேர்களும் வேறு வழியே தெரியாமல் அடிமைகளாக வாழ தலைப்பட்டனர்.   பல்வேறு நாடுகளுக்கு புலம் பெயரத் தொடங்கினர்.


ஆனால் ஒரே நாளில் வெள்ளையர்கள் இந்த வெற்றியை அடைந்துவிடவில்லை. இவர்களின் படிக்கட்டுக்கள் ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஓராயிரம் சரித்திரம் தரும் பாடங்களும் படிப்பினைகளும் உள்ளது.

இந்தியாவில் இருந்த முகலாயர்களின் பிரதேசத் தளபதிகள் முகலாய மத்திய ஆட்சியை துடைத்தொழித்தனர். இந்த தளபதிகளை மராட்டியர்கள் அடக்கி ஒடுக்கினர். மராட்டியர்களை ஆப்கானியர் அழித்துவிட்டனர். இவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு சாக வெள்ளையர்களுக்கு தங்கள் செயல்பாடுகளுக்கு எத்தனை பிரச்சனைகளும் வராமல் இருந்தது.  அடுத்தடுத்த படிகளுக்கு விரைந்தனர்.  அந்திய படையெடுப்பாளர்கள் இப்படி என்றால் இந்தியாவிற்குள் இருந்த குழுவினர்கள் ஜாதியால், மதத்தால் பல்வேறு விதமாக சிதறிக் கிடந்தார்கள்.  இதன் காரணமாக வெள்ளையர்கள் எந்த செலவுமில்லாமல் பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தி இவர்களை வைத்தே தங்கள் காரியத்தை சாதித்துக் கொண்டார்கள்.  சாதித்தவர்கள் இன்றைய நிலையில் வளர்ச்சியடைந்த நாடுகளாக உள்ளது.

விவசாய நாடான இந்தியா ஜவுளித் தொழிலுக்கு கொடுக்கும் மரியாதை இது தான்.

தொடக்கம் முதல் சண்டையிட்டு தங்களின் பலத்தை புரிந்து கொள்ள முடியாதவர்கள் இன்று வரைக்கும் நவீன அடிமைகளாகவே இருக்கிறார்கள். பல் வேறு நாடுகளுக்கும் தங்கள் மூளையை அடகு வைக்க அடிமைகளாக போய்க் கொண்டிருக்கிறார்கள்.

13 comments:

Anonymous said...

நல்ல அலசல்...
காலப்போக்கில் அறிவியல் முன்னேற்றம் தானாகவே குடிசை தொழில்களை கொன்றிருக்கும்...

bandhu said...

வயத்தெரிச்சலாய் இருக்கிறது.. இப்படிக்கு, இல்லாத மூளையை அடகு வைத்திருக்கும் ஒருவன்..

aotspr said...

"பல் வேறு நாடுகளுக்கும் தங்கள் மூளையை அடகு வைக்க அடிமைகளாக போய்க் கொண்டிருக்கிறார்கள்."

உண்மை தான்...

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.

சத்ரியன் said...

அன்று அயல்நாட்டு வெள்ளயர்களுக்கு அடிமை.
இன்று உள்நாட்டு கொள்ளையர்களுக்கு அடிமை.

ஜோதிஜி,

இந்த ”அடிமைகள் சரித்திர” தொடரை நீங்கள் நினைத்தாலும் நிறுத்த முடியாது போல தெரிகிறது.

Unknown said...

விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட்-ஆக உருமாறிவரும் நிலையில் விவசாய நாடு என்று பெருமை பீற்றிக்கொள்வது அபத்தமாக இருக்கிறது. இன்னும் நாம அடிமைகளாகத்தான் இருக்கிறோம்..கார்பரேட் கம்பெனிகளுக்கு!
நல்ல விழிப்புணர்வு கட்டுரை.

Ashwin Ji said...

நல்லதொரு பதிவுக்கு நன்றி. ஜோதிஜி.
இந்தியாவை காங்கிரஸ் அழித்தது போல யாரும் அழிக்க முடியாது. இன்னொரு கொடுமையைப் பாருங்க. தாராள மயமாக்கல் மூலம் இந்தியாவின் பொருளாதாரம் சீரழிந்து விட்டது என்று சந்தை மயமாக்கலின் இந்திய பிதாமகர் மண்ணு மோகன் சிங் இப்போது புலம்புகிறார்.

சே.குமார் said...

நல்ல பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்

சீனுவாசன்.கு said...

உங்க வீட்ல குழந்தைகள் இருக்கா?
நம்ம சைட்டுக்கு வாங்க!!
ஈஸியா தமிழ் கத்துக்கற மாதிரி
பாட்டு எழுதியிருக்கேன்!
கருத்து சொல்லுங்க!
நல்லா பழகுவோம்!!

Unknown said...

சாமர்த்தியமாக நல்லாவே சுரண்டியிருக்கிறார்கள் வெ{கொ)ள்ளையர்கள்,இன்றைய நவீன உலகத்திற்கேற்றவாறு சுரண்டலின் வடிவமும்,ஆட்களும்,துறைகளும் மாறியிருப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது,தொடரட்டும் ”அடிமைகளின் கதை”தொடர் பதிவு.நன்றி சார்.

சந்திர வம்சம் said...

ஜவுளித்தொழில் சுரத்தில்லாமல் போனதிற்கு காரணம் புரிகிறது.

Anonymous said...

தங்களுக்கும், தங்களது குடும்பத்துக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

ஆமினா said...

உங்களின் இந்த இடுகையை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது பார்வையிடவும் :-)

http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_29.html