Sunday, September 18, 2011

திரைகடலோடியும் திரவியம் தேடிய கதைகள்

1858 இல் இந்திய ஆட்சி பிரிட்டீஷ் பாராளுமன்றத்தின் நேரடி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியர் குடிபெயர்வு வேகமாக நடக்கத் தொடங்கியது. பிரிட்டீஷ் ஆளுமைக்குள் இருந்த பகுதிகளில் இருந்தவர்களை பிரிட்டன் அரசாங்கம் மற்ற நாடுகளுக்கு கூலிகளாக அனுப்ப விரும்பவில்லை.  முடிந்தவரைக்கும் தங்கள் காலணிகளாக இருந்து தேர்ந்தெடுத்து தங்களுக்குத் தேவைப்படும் பகுதிகளுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர்.

குறிப்பாக இந்தியாவிலிருந்து அருகேயிருந்த சிலோனுக்கு, மலேசிய குடியரசுக்கு அதிகமானோர் ஒப்பந்தக்கூலிகளாக அனுப்பப்பட்டனர். வெவ்வேறு தூர கண்டங்களில் இருந்த குடியேற்றங்களுக்கு இங்குள்ளவர்களை பிரிட்டீஷ் அரசாங்கம் அனுப்ப  மறுத்தது, இதற்கும் வேறொரு முக்கிய காரணம் ஒன்றுண்டு.  அங்குள்ள பாதுகாப்பு மற்றும் வசதி குறைபாடுகளே முக்கிய காரணமாக இருந்தது.  குறிப்பாக பிரெஞ்சு நாட்டின் கட்டுப்பாட்டிலிருந்த ரீயூனியன் தீவுக்கு சென்ற தமிழர்களில் பெரும்பாலோனார் இறந்துபோயினர். 



ஆனால் பிரான்சு நெதர்லாந்து, டென்மார்க் அரசின் கட்டிப்பாட்டின் கீழ் இருந்த பிரதேசங்களின் பின்னால் உருவான் உடன்பாட்டின் அடிப்படையில் இங்குள்ளவர்களை பிரிட்டன் அரசாங்கம் செல்ல அனுமதி கொடுத்தது. 1860 ஆம் ஆண்டு பிரிட்டன் அரசு பிரான்ஸ அரசுடனும் அதனைத் தொடர்ந்து டென்மார்க், நெதர்லாந்துடனும் உடன்படிக்கை ஏற்பட்டு 1861 ல் அனைத்து பிரெஞ்சு குடியேற்றங்களுக்கும் குடிபெயர்வோர் நலம் காக்க அங்கங்கே அலுவலகமும், பிரிட்டீஷ் தூதர்களும் நியமிக்கப்பட்டனர்.  குடிபெயர்தலுக்கான ஆட்களை மூன்று விதமங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 


ஒப்பந்தக்கூலி முறை, கங்காணி மற்றும் மேஸ்திரி முறை,     இதன்படி ஒவ்வொரு கிராமத்திலிருந்து ஆட்களை சேகரித்தனர். ஆமாம் உண்மையிலேயே பொருட்களை சேகரிப்பது போலவே நடந்து கொண்டனர். அதற்கும் காரணங்கள் உண்டு.  தொத்தல், வத்தல், உழைக்க முடியாத வலுவில்லாதவர்களை திருப்பி அனுப்பி விடுவர்.  இறுதியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை மூளைச்சலவை செய்ய தனிநபர்கள் இதற்கென்று இருப்பார்கள். பெரும்பாலும் நல்ல சம்பளம், சாப்பாடு மற்றும் தங்குமிடம் இலவசம் என்பதோடு சென்று வரக்கூடிய கப்பல் பயணக்கட்டணமும் இலவசம் என்று பலவிதமான ஆசை வார்த்தைகளால் ஆட்கள் சேகரிக்கப்பட்டது..


ஓப்பந்தக்கூலி மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் செல்லும் இடங்களில் முழுமையாக ஐந்து ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். முதலில் சேர்ந்த வேலையிலிருந்து வேறு வேலைக்கு மாற்றிக் கொள்ள முடியாது. மனைவி மக்களையும் அழைத்துச் செல்லலாம்.  ஐந்து ஆண்டு காலம் முடிந்தவுடன் ஒப்பந்தத்தை புதுபித்துக் கொள்ளலாம்.  விரும்பாவிட்டால் சொந்த நாட்டுக்கே திரும்பி விடலாம்.


ஆனால் கங்காணி முறையென்பது பெரும்பாலும் சிலோனுக்கு அங்குள்ள காபி தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிய ஆட்களை தேர்ந்தெடுக்க பயன்பட்டது ஏற்கனவே அங்கே தோட்டத்தில் பல வருடங்கள் பணிபுரிந்தவர்கள் இங்கே கங்காணிகளாக இருந்தனர்.  கங்காணி முறையில் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கான ஒப்பந்தங்கள் செல்லும் இடங்களிலேயே உருவாக்கப்பட்டது.  பெரும்பாலும் இதன் மூலம் இடைத்தரகர்களாக இருந்தவர்களே பயன்பெற்றனர். இங்கேயிருந்து தேர்ந்தெடுத்து சென்றவர்களுக்கு அங்கே சென்ற பிறகே அது வாழும் நரகம் என்பதை உணர்ந்து கொண்டனர்.  ஆனால் எக்காரணம் கொண்டும் திரும்பி வர முடியாது.  அதற்கென்று அங்கங்கே ஆப்பு அடித்து வைத்திருந்தனர்.  வேலை செய்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் தற்கொலை செய்து கொண்டு மேலோகம் சென்று விட வேண்டியதுதான்.

பிரிட்டன் அரசாங்கம் பிரெஞ்சு நாட்டுடன் ஒப்பந்தம் செய்து கொண்டவுடன் தமிழ்நாட்டில் ஆங்காங்கே குடிபெயர்வு முகவர் மையங்கள் உருவாக்கப்பட்டது.  இது முதல் முதலாக சென்னையிலும், பாண்டிச்சேரியிலும் திறக்கப்பட்டது.


சென்னை மாகாணத்தில் இணைந்திருந்த தெலுங்கு மக்கள் பெரும்பாலும் பர்மா, அசாம் பகுதிகளுக்கு செல்ல அதிக ஆர்வம் காட்டியதால் பெரும்பாலான பிரெஞ்சு குடியேற்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்தவர்கள் தமிழர்களாகவே இருந்தனர்.  1861 ஆம் ஆண்டு பிரிட்டீஷ் பிரெஞ்சு ஒப்பந்தத்தின்படி ஒவ்வொரு வருடமும் 12000 பேர்களை பிரெஞ்சுகாரர்கள் கொண்டு செல்ல முயற்சித்தாலும் அடுத்த ஐந்து வருடங்களும் ஏறக்குறைய பாதி அளவுக்குத்தான் ஆட்களை திரட்ட முடிந்தது,.  இதன் தொடர்ச்சியாக வலுக்கட்டாயமாக, ஏமாற்றி அழைத்துச் செல்லுதலும் நடைபெற்த் தொடங்கியது.

குடிபெயர்வோர் தங்கிச் செல்ல துறைமுக நகரங்களில் கூலி முகாம் இருந்தன.  இதனை டெப்போ என்றழைக்கப்பட்டது.  ஒவ்வொரு பகுதியிலும் இருந்து கொண்டு வரப்படுவர்களை இங்கே தான் தங்க வைக்கப்படுவார்கள். அவர்களை கொண்டு செல்லும் கப்பல்கள் தாமதமாக வரும் போது பல சமயங்கள் ஒரு வாரங்கள் முதல் பத்து நாடகள் வரைக்கும் இங்கே தான் தங்கியிருக்க வேண்டும். இதுவும் ஒரு வகையில் வாழப்போகும் நரக வாழ்க்கைக்கு தேவைப்படும் ஒரு பயிற்சி களமாகவே இருந்தது. 

இங்கே கொண்டு வரப்படுவர்களை கடல் பயணத்திற்கு ஏற்றபடி இவர்கள் உடல் நலன் இருக்கிறதா என்பது தொடங்கி உடல் வலு, வேறு எந்த தொற்று நோயும் இருக்கிறதா என்பது வரைக்கும் இங்கு இதற்கென்று இருக்கும் மருத்துவர்களால் சோதிக்கப்படும்.  இதில் தகுதியின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மட்டுமே கடல் பயணத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.  

தொடக்கத்தில் பிரிட்டீஷ் ஆளுமையில் இருந்த பகுதிகளில் செல்பவர்களின் மூன்றில் ஒரு பங்கு பெண்கள் இருப்பதாக உருவாக்கப்பட்டது. காரணம் செல்லும் இடங்களில் பெண்கள் இல்லாத காரணத்தினால் பல பிரச்சனைகள் உருவாகத் தொடங்கியது.  அவரவர்களும் காஞ்ச மாடு கம்புல விழுந்த கதையாய் பல அல்லோகல்லமாய் வினோத செயல்பாடுகள் உருவாகியது.  இதற்காகவே பெண்கள் இத்தனை சதவிகிதம் இருக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வந்தனர்.


ஆனால் கிராமங்களில் இருந்த ஆணாதிக்க வாழ்க்கை முறையில் பெண்களை திரட்டுவது கடினமாக இருந்தது. இதற்கும் தரகர்கள் அடுத்த பைபாஸ் வழியை கண்டுபிடித்தனர். வெவ்வேறு பிரச்சனையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் பெண்கள் தாங்களே முன்வந்து இது போன்ற டெப்போவுக்கு வரத் துவங்கினர். ஏற்கனவே வந்த ஆண்களுக்கு இந்த பெண்களை மனைவியாக மாற்றி சான்றிதழ் தயார் செய்து அனுப்பினர்.  இதற்கு பெயர் டெப்போ திருமணம் என்றழைக்கப்பட்டது. 

ஒரு டெப்போ எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட சட்டதிட்ட்ங்கள் பெயருக்கென்றே தான் இருந்தது.  சிறைச் சாலையை விட கொடுமையாக இருந்தது. இங்கேயே சுகாதார கேட்டினால் பலரும் இறந்து விடுவதும் வாடிக்கையாக இருந்தது. 

1859 ஆம் ஆண்டு சென்னையில் ராயபுரம் பகுதியில் இருந்து மொரீசியஸ் நாட்டுக்கு அழைத்துச் செல்லும் டெப்போ தான் மிகப் பெரிதாக இருந்தது.  இங்கேயிருந்து மாதமொன்றுக்கு 3500 பேர்கள் சென்றுகொண்டிருந்தனர்.  இராயப்பேட்டை சாலையில் இருந்த மற்றொரு டெப்போவிலிருந்து டிரினிடாட் நாட்டுக்குச் செல்பவர்கள் சென்று கொண்டிருந்தனர். இந்த டெப்போ ஒரு இஸ்லாமியருக்குச் சொந்தமான இடம்.  அடர்ந்த மரங்களும், புதர்களும் நிறைந்த காடு போல இருந்த காரணத்தால் நரிகளும் பாம்புகளும் சர்வசாதாரணமாக இருந்தன.

பிரெஞ்சு காலணி நாடுகளுக்குச் செல்பவர்களுக்காகவே சென்னையில் தண்டையார்பேட்டையில் 1863 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.  இது மொரீசியஸ் டெப்போ இருந்த தண்டையார்பேட்டை நெடுஞ்சாலைக்கு அருகே  2 கிலோ மீட்டர் தொலைவிலும் துறைமுகத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவிலும் மூன்று கூரைக் கொட்டகைகள் மூலம் உருவாக்கப்பட்டது.  1864 ஆம் ஆண்டு மட்டும் இதே டெப்போவில் மட்டும் இருந்து கிளம்பிய 1780 பேர்களும் தமிழ்நாட்டில் இருந்து சென்றவர்களே.  இவற்றைத் தவிர நாகபட்டிணத்தில் இருந்த டெப்போக்கள் மூலம் சென்றவர்கள் பெரும்பாலும் சிங்கப்பூர், மலேசியா, பினாங்கு பகுதிகளுக்கு சென்றவர்களே அதிகம்.


இந்திய பெருங்கடல் இந்திய எல்லைகளிலிருந்து தென்மேற்காக 4000 கீமீ தொலைவில் மொரிசீயஸ் அமைந்துள்ளது. ஆப்ரிக்கக் கண்டத்தின் அருகில் உள்ள 2100 ச கீ மீ பரப்பளவு கொண்ட குடியேற்றம் இது.  இந்தியாவிற்கச் செல்லக் கடல் வழியின் நுழைவாயிலாகக் கருத்ப்பட்ட இந்த நிலத் திட்டினை முதலில் கண்டவர்கள் போர்த்துக்கீசிய மாலூமிகள். 1498 இல் வாஸ்கோடகாமா இத்தீவினைக் கடந்த பீன்னரே அரபிக்கடலில் பயணம் செய்து கோழிக் கோட்டை அடைந்தார். 

1598 இல் டச்சுக்காரர்கள் மொரீசியஸை ஆக்கிரமித்துக் கொண்டனர்.  அப்போது ஒரு குடியேற்றத்ததை அங்கே அவர்களால் உருவாக்க முடியவில்லை. 1715 இல் பிரெஞ்சுக் காரர்கள் இத்தீவினை கைப்பற்றினர். ஸாபர்தனாய் முதலாவது ஆளுநராக 1735ல் பொறுப்பேற்றார். அவர் பாண்டிச்சேரியில் இருந்து முதல் முறையாக 169 தமிழர்களைக் கொண்டு சென்று குடியேற்றினார். கட்டிடம் கட்டுபவர்களையும், தச்சுத் தொழிலில் இருந்தவர்களையும் கொண்டு சென்றவர் தொடர்ந்து ஆயிரக்கணக்கான தமிழர்களை கொண்டு போய் சேர்த்தார்.


1810 இல் இத்தீவு பிரிட்டீஷார் கைவசம் வந்த போது 45000 தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். ஓரளவுக்கு பொருளீட்டியவர்கள் சொந்த நாட்டுக்கு திரும்பி வந்து விட பிரிட்டீஷ் அரசாங்கம் அதையும் தடுக்க அடுத்த ஏற்பாடு செய்தது. வருகின்ற கூலியாட்கள் தங்களது சொந்த ஊருக்கே குறிப்பிட்ட காலத்திற்குப் பிறக சென்று விடுவதைப் பார்த்த மொரீசஸ் ல் இருந்து தங்களது நாட்டுக்கு திரும்பி செல்வதற்காக வழங்கப்பட்டுக் கொண்டிருந்த இலவச கப்பல் பயண சீட்டை ரத்து செய்தது.

பிரிட்டன் அடிமை ஒழிப்பு முறையை கொண்டு வருவதற்கு முன்பே இங்கு குடியேற்றம் தொடங்கி விட்டது. தமிழர்களைத் தொடர்ந்து இங்கு ஆந்திரரும், பீகாரிகளும், வங்காளிகளும், சோடா நாகவுரி மலை நாட்டவரும் குடியேறினர். கல்கத்தா சென்னை போன்ற துறைமுகங்களில் இருந்து போர்ட் லூயி துறைமுகத்தை சென்றடைய 45 முதல் 60 நாட்கள் பயணம் செய்ய வேண்டியிருந்தது.  ஆனால் நவீன விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக சிறிய ரக மற்றும் விரைவு கப்பல்கள் தோன்ற 1865 ஆம் ஆண்டு முதல் பயண நாட்கள் 35  தினமாக குறைந்தது. .

மொரீசஸில் 1839 முதல் 1910 வரையிலும் இந்த குடியேற்றங்கள் தங்கு தடையின்றி நடந்தது. அளவுக்கு அதிகமான ஒப்பந்த கூலிகளாக தமிழர்கள் கொண்டு செல்லப்பட்ட இனி இங்கு வேலை வாய்ப்பு இல்லை என்றதும் குடிபெயர்வுகள் நிறுத்தப்பட்டது.  இதே ஆண்டில் மொரீசஸில்13 636 கூலியாட்களை 46 கப்பல்களில் கொண்டு சென்றனர். அக்காலத்தில் மொரீசியஸில் கடுமையான உணவுப் பஞ்சம் உருவாக ஏற்கனவே அங்கிருந்தவர்களுக்கு வேலையில்லாமல் போய்விட்டது.  இந்திய துறைமுகங்களில் மொரீசியஸ்க்கு செல்வதற்காக காத்துக் கொண்டிருந்தவர்கள் வசதியற்ற கொட்டடிகளில் தங்க வைக்கப்பட்டனர்.  60 பேர்கள் காலரா நோயினால் பாதிக்கப்பட்டனர். 


ஏறக்குறைய இன்று உலகம் முழுக்க வாழ்ந்து கொண்டிருககும் அத்தனை தமிழர்களும் ஆறு தலைமுறைக்கு முன்னால் வாழ்ந்த தங்களின் மூதாதையர்களுக்கு ரொம்பவே நன்றிகடன் பட்டிருக்க வேண்டும்.  அவர்களின் ரத்தம் தோய்நத உழைப்பு அந்த நாட்டை வளர்த்தது.  கூடவே இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களின் தலைமுறைகளும் அனுபவித்துக் கொண்டிருக்கும் அத்தனை நவீன வசதிகளுக்கும் இவர்களே காரணம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். 


ஒரு வேளை இவர்கள் அப்போதே இறந்து போயிருந்தால்? அல்லது அன்று இவர்கள் வெளிநாடு செல்லாமல் இருந்திருந்தால்?


இன்று பலநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் தலைமுறைகளும்  தமிழநாட்டுக்குள் ஏதோவொரு மூலையில் தான் வாழ்ந்திருக்க முடியும்.

5 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

//இன்று பலநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் தலைமுறைகளும் தமிழநாட்டுக்குள் ஏதோவொரு மூலையில் தான் வாழ்ந்திருக்க முடியும்.//
உண்மை தான் .

Unknown said...

இந்த பதிவை படிக்கையில் ஏறத்தாழ இந்த நவீன காலத்திலும் இப்போது அரபு நாடுகளுக்கு low wage's க்கு ஆட்களை ’ஏற்றுமதி’செய்வது,பழைய நிலைமைகளோடு தற்போதைய நிலையை ஒப்பிட தோன்றுகிறது.பதிவுக்கு நன்றி.

Reverie said...

Nice going...Keep it up...
Sorry for the mobile comment...

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
தொடர்ந்து எழுதுங்கள்.
சோகக் கதை தான்.

தாராபுரத்தான் said...

படிச்சுக்கிட்டு வரரோமிங்கோ..