Monday, September 05, 2011

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் -- புரட்சித்தலைவி


மற்ற ஊர்களில் எப்படியோ?  

ஆனால் திருப்பூரில் உள்ள சாயப்பட்டறை முதலாளிகளுடன் பொதுமக்களும் நடந்து முடிந்த தேர்தலின் ஓட்டு எண்ணிக்கையின் முடிவுகளை தெரிந்து கொள்ள ரொம்பவே ஆவலாக இருந்தனர்.  

ஆட்சி மாற்றமா? அதே ஆட்சியா என்பது ஒரு திகில் கதையின் இறுதிப்பக்கம் போலவே இருந்தது.

காரணம் கலைஞர் கருணாநிதி.


அவர் ஆண்டு கொண்டிருந்த அரசாங்கத்திற்கு எத்தனையோ வாய்ப்புகள் இருந்தது.  திருப்பூர் மேல் கரிசனம் காட்ட கடைசி வரைக்கும் அவருக்கு மனமில்லை.  சொந்த காரணங்களா? இல்லை கடந்த கால கோவை மாவட்ட ஓட்டு தான் காரணமா என்பதை இன்று வரை முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. சொந்த காரணங்கள் என்றால் வதந்திகள் தினந்தோறும் ரெறக்கை கட்டி பறந்து கொண்டுருந்தன.  

எது உண்மை? எது பொய் என்பது கூட இன்று வரைக்கும் புரியாத புதிராக இருந்தது.

இப்போது சில விசயங்களை வெளிப்படையாக பேசித்தான் ஆக வேண்டும்.  

தயாநிதி மாறன் ஜவளித்துறைக்கு அமைச்சராக ஆன பிறகு அவரின் தனிப்பட்ட பார்வை பஞ்சாலை பக்கம் திரும்பியது. குறிப்பாக மாறன் தொலை தொடர்புக்கு அமைச்சராக இருந்த போது எப்படி சன் குழுமத்திற்காகவே என்று அந்த துறையை மாற்றினாரோ அதைப்போலவே இந்த ஜவுளித்துறையும் மாறத் தொடங்கியது. கோடிக்கணக்கான பேர்கள் வாழ்க்கையிழந்து தெருவுக்கு வந்தனர்.  பஞ்சை நம்பி வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் பஞ்சை பராரியானார்கள். இது முற்றிலும் உண்மை.

ஆந்திரா முதல் மற்ற அத்தனை தென் மாநிலங்களிலும் இருந்த நலிவடைந்த பஞ்சாலைகளை சன் குழுமம் வளைத்துப் போட்டுக் கொண்டிருக்கிறது. அதிக பஞ்சு விளைச்சல் உடைய குஜராத்திலிருந்து பஞ்சு பொதிகள் தென் மாநிலங்களுக்கு வருவதை விட கடல் கடக்கத் தொடங்கியது.

பஞ்சு மற்றும் நூல் ஏற்றுமதிக்கு முக்கிய காரணமாக இருப்பவர் சரத்பவார்.  அவருக்கு எல்லாவகையிலும் ஒத்துழைத்து காரியம் சாதித்து கல்லா கட்டிக் கொண்டிருப்பவர் தயாநிதி மாறன். சேர்த்த பணத்தை இந்த துறையில் முதலீடு செய்து லாபம் பார்த்தவர் சச்சின் டெண்டுல்கள் மற்றும் பலர். தெருவுக்கு வந்தவர்கள் இந்தியா ஜனநாயக நாடு என்று நம்பிக்கை கொண்டுள்ள அப்பாவி பொது ஜனம்.

இலங்கை மற்றும் நேபாளம் வரைக்கும் சன் குழுமம் இந்த பஞ்சாலை மற்றும் ஆய்த்த ஏற்றுமதி தொழிலை விரிவுபடுத்திக் கொண்டிருக்கிறது.

அழகிரி திருப்பூரில் உள்ள (கொங்கு முன்னேற்ற கழகம்) பெஸ்ட் ராமசாமியுடன் சேர்ந்து தூத்துக்குடியில் மிகப் பெரிய முதலீட்டில் சாய்ப்பட்டறை கழிவு நீரை சுத்திகரிக்கும் மெகா திட்டத்தை தொடங்க பூர்வாங்க ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார். 

மீண்டும் ஆட்சியில் அமைந்ததும் இந்த திட்டம் செயல்படத் தொடங்கும்.  இதனால் கிடைக்கப் போகும் லாபம் கணக்கில் அடங்காது.  

இதைப் போலவே திருப்பூர் ஏற்றுமதி சங்கத் தலைவர் சக்திவேலுடன் சன் குழுமம் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது.  சென்னையில் ஒரே கூரையின் கீழ் வரும் அளவுக்கு மிகப் பெரிய ஏற்றுமதி தொழிற்கூடம் அமைக்கப்பட உள்ளது.

இதைப் போலவே பல விசயங்கள். உண்மையா? பொய்யா? என்பதைப் பற்றி கவலைப்படாமல் ஆளாளுக்கு ரவுண்டு கட்டி திமுக அரசாங்கத்தை பழிவாங்க காத்துக் கொண்டிருந்தனர் என்பது மட்டும் உண்மை.

ஆனால் பாதிக்கப்பட்டது முழுக்க முழுக்க கலைஞர் கருணாநிதி மட்டுமே.  அதன் அவஸ்த்தைகளைத் தான் இன்று அவர் நொந்து கண் எதிரே பார்த்துக் கொண்டிருக்கிறார்.


சில விசயங்களை மட்டுமே இங்கே சுட்டிக் காட்டியுள்ளேன்.

இன்னும் நிலம் சம்மந்தப்பட்ட பல விசயங்கள் உண்டு. இது அத்தனையும் உண்மையா இல்லை பொய்யா என்று தெரியாமல் கலைஞர் ஆட்சியில் இருந்த போது நாளொரு மேனி பொழுதொரு (சாய) வண்ணமுமாய் வதந் தீயாய் பரவிக் கொண்டேயிருந்தது. ஆனால் எந்த முதலாளிகளும் இதைப்பற்றி பேசக்கூட பயந்தார்கள்.  காரணம் உபிகளின் அன்புப்படியில் சிக்கியிருந்த முன்னாள் தோழர் கோவிந்தசாமி போல ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் ஓராயிரம் காரணங்கள்.

மொத்தத்தில் அத்தனையும் அவரவர் சுயநலம் சார்ந்த சமாச்சாரங்கள்.


++++++++++++++++++++++++++++++++++++++

இப்போதைய முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் திருப்பூருக்கென்று கொடுத்த வாக்குறுதிகள் என்னவாச்சு என்ற கேள்விகளுக்கு நாம் விடை காணவேண்டும்.

தேர்தல் பிரச்சார கோவைமாவட்ட சுற்றுபயணத்தின் போது குறிப்பாக திருப்பூர் மாவட்ட மக்கள் கலைஞர், ஜெயலலிதா இருவரிடமிருந்து எந்த மாதிரியான வாக்குறுதிகள் வரப்போகின்றது? என்று ஆவலாய் எதிர்பார்த்து காத்திருந்தனர்?

மூடிக்கிடக்கும் சாயப்பட்டறைகளை திறக்க என்ன செய்யப் போகின்றார்கள்?

காரணம் தேர்தல் சமயத்தில் தொழில் பாதுகாப்பு குழு என்ற அரசியலுக்கு அப்பாற்றபட்டவர்கள் (?) ஒன்று கூடி பல விசயங்களில் கலைஞருக்கு தர்மசங்கடங்களை உருவாக்கிக் கொண்டிருந்தனர்.  கலைஞரும் கண்டு கொள்ளவே இல்லை என்பதோடு இவர்களின் நோக்கமும் கடைசியில் கேலிக்குறியாக கேள்விக்குறியாக போனதென்பது தனிக்கதை.

தேர்தல் பிரச்சாரத்தின் போது எப்போதும் போல கலைஞர் அவினாசி பேரூந்து நிலையத்திற்கு அருகே பேசிய பேச்சில் திருப்பூர் மறுவாழ்வு திட்டங்களில் அதிக கவனம் செலுத்துவேன் என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட்டு அவர் பயணித்த காண்வாய் போய்க் கொண்டேயிருந்தது. பெஸ்ட் ராமசாமியை காருக்கு அருகே வரவழைத்தவர் என்னய்யா எப்படியிருக்கு என்று கேட்க ராமசாமியின் நம்பிக்கை வார்த்தைகள் கிணற்றுக்குள் இருந்து வரும் குரலைப் போலவே இருந்தது.  கலைஞர் டாட்டா..... பை... பை....என்று போயே விட்டார்.  மக்களும் தனக்கு மொத்தமாகவே டாட்டா......பை....பை... என்று காட்டப் போகின்றார்கள் என்பது அவருக்கு தெரியாமலே இருந்தது.

ஆனால் ஜெயலலிதா ஆணித்தரமாக பேசினார்.  நம்பிக்கையளித்தார்.  

மற்றவர்களுக்கு எப்படியோ?  

எனக்கு ஜெயலலிதா குறித்து அவரின் உறுதி மொழிகள் குறித்து நம்பிக்கை வரவேயில்லை.  காரணம் அவரின் கடந்த கால செயல்பாடுகள் அத்தனையும் என மனதில் வந்து போனது. 

மாற்றம் என்பது மாறாதது தானே?  வந்தது மாற்றம். 

சாதாரணமான மாற்றம் அல்ல.  இலையை நக்கி சாப்பிட்டது போல திமுக என்றொரு கட்சியே விஜயகாந்திற்கு பல படிகள் கீழே என்பது போல மக்கள் கலைஞருக்கு கொடுத்த அடி பெரியவர் சாகும் தருவாயில் கூட நினைத்துப் பார்க்கக்கூடியது.

ஜெயித்தே விட்டார் ஜெயலலிதா.

முதல்வராகப் போகும் அம்மையார் ஜெயலலிதாவின் வெற்றி விழா ஆரவாரங்களை தலைவர்களின் பேட்டிகளை தொலைக்காட்சிகளில் நான்  தொடர்ச்சியாக கவனித்துக் கொண்டேயிருந்தேன். ஆனால் மனதிற்குள் இருந்த பயம் மட்டும் சப்பரமிட்டு அப்படியே இருந்தது.  காரணம் ஜெயலலிதா முதல் அமைச்சராக பதவியேற்க இரண்டு தினங்கள் இருந்த போது நண்பரிடமிருந்து அழைப்பு வந்தது.

"ரொம்ப சந்தோஷமாக இருக்கு" என்றார்.

"ஏன் வீட்டுக்காரம்மா நேத்து ஏதும் பாராடுற மாதிரி நடந்துக்கிட்டிங்களா?" என்றேன்.

"அட நீங்க வேற? அம்மையார் திருப்பூர் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளை இப்பவே வேலை வாங்க ஆரம்பித்து விட்டார்.  சாய்ப்பட்டறை பிரச்சனை சார்பாக அத்தனை கோப்புகளையும் போய்ஸ் தோட்டத்திற்கே எடுத்துக் கொண்டு வரச் சொல்லியிருக்கிறார்.  அதிகாரிகள் கலங்கிப் போயி இருக்காங்க" என்றார். 

இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு செய்திகளாக என் காதுகளுக்கு வந்து கொண்டேயிருந்தது. ஒவ்வொரு கட்டமாக நகர்நது கொண்டேயிருப்பதாக தெரிய உண்மையிலேயே அம்மையாரின் மனம் மாறிவிட்டதோ? என்று எண்ணத் தொடங்கினேன்.

முத்தரப்பு பேச்சு வார்த்தைகள் தொடர்ச்சியாக சென்னையில் நடந்து கொண்டே இருந்தது.  விவசாயிகள், முதலாளிகள், அதிகாரிகள் என்று அந்த பேச்சு வார்த்தைகள் தினந்தோறும் நீண்டு கொண்டேயிருந்தது.  ஆனால் முடிவுக்கு வந்தபாடில்லை.

விவசாயிகள் சார்பாக பேசிக் கொண்டிருந்தவர்கள் ஒரு கபடி ஆட்டமே நடத்திக் கொண்டிருந்தார்கள்.அவர்களின் மனம் இரங்குவதாக தெரியவில்லை.  சாயப்பட்டறை என்ற தொழிலே இனி திருப்பூரில் இருக்கக்கூடாது என்கிற ரீதியில் பேசத் தொடங்கினர்.  

உச்சகட்டமாக "எதுவென்றாலும் நாங்கள் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்கின்றோம்" என்கிற ரீதிக்கு வாக்குவாதம் முற்றிப் போக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜி விவசாயிகளை ஒருமையில் மிரட்டும் வரைக்கும் சென்றது.  ஆனால் விவசாயிகளின்  பிரதிநிதிகள் விட்டுக் கொடுக்கத் தயாராயில்லை.  அம்மையார் ஜெயலலிதா அரசாங்கத்தில் உள்ள அமைச்சர்களின் அதிகார வரம்பு என்பது நாம் அனைவருக்கும் தெரிந்தது தானே?

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புரிந்து விட்டது. 

சரி.. இனி மயிலே மயிலே இறகு போடுன்னா போடாது.

அம்மாசாமி தலையிட்டால் தான் இந்த மண்டையிடி ஒரு முடிவுக்கு வருமென்று பேச்சுவார்த்தை பந்தை அம்மா பக்கம் தள்ளிவிட அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியது.  

அம்மா பேச்சுவார்த்தை என்றால் மற்றவர்கள் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும்.  அல்லது வெளியே வந்து பத்திரிக்கையாளர்களிடம் அம்மாவே சரணம் என்ற துதியை முழங்கிவிட்டு வர வேண்டும்.  

இது தானே மரபு.  அந்த மரபின் வழியில் அடுத்த கட்டம் நகர்ந்தது.

அம்மையாருக்கு ஒரு சவால் காத்திருந்தது. 


சாயப்பட்டறை முதலாளிக்கு சார்பாகவும் இருக்க வேண்டும்.  அதே சமயத்தில் விவசாயிகளுக்கு, அவர்களின் வாழ்வாதரத்திற்கு அதிமுக அரசு எதிராக இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும் என்பதையும் உணர்த்திக் காட்ட வேண்டிய அவஸ்யத்தில் இருந்தார்.  

ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தே ஆக வேண்டும்.

உண்மையிலேயே அம்மையார் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு எடுக்கும் ஒவ்வொரு முடிவும் இந்த ஒரே கல்லில் இரண்டு மாங்காய என்கிற ரீதியில் போய்க் கொண்டே இருக்கிறது.  அதே போலவே அறிக்கை வந்தது.  விவசாயிகளுக்கு ஆதரவாக நஷ்டஈடு என்பதாகவும், சாயப்பட்டறை தொழிலுக்கு வட்டியில்லா கடனாக இருநூறு கோடி அரசே வழங்கும் என்பதாகவும் சொல்லி திருப்பூர் மொத்த மககளின் வயிற்றில் சாயம் கலக்காத தண்ணீரை வார்த்தார்.

++++++++++++++++++++++++++++++++



இப்போது வேறு சில சமாச்சாரங்களையும் நாம் உள்ளே புகுந்து பார்க்கலாம்.

அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் நடத்தப்பட்ட இரண்டு பேச்சு வார்த்தைகள் தோல்வியில் முடியக் காரணம் ஒன்றே ஒன்று தான்.  

பணம்.  

அதுவும் விவசாயிகளின் நஷ்டஈடு என்கிற ரீதியில் 400 கோடி ரூபாய சாயப்பட்டறை முதலாளிகள் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை வந்தது.   ஏனிந்த பணம்? இதுவரையிலும் சாயக்ழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குச் சேர வேண்டிய நஷ்டஈடு. அதற்கு செந்தில் பாலாஜி ஒரு கட்டத்திற்கு மேல் விவசாயிகளின் சார்பாக உள்ளே பேசிக்கொண்டிருந்தவர்களிடம் கூறிய வார்த்தை முக்கியமானது.  

" விவசாயம், விவசாயிகள் எந்த அளவுக்கு இந்த அரசாங்கத்திற்கு முக்கியமோ அதே அளவுக்கு திருப்பூர் தொழில் வளர்ச்சியும் முக்கியம்.  உங்களுக்கு இருக்கும் அதே அக்கறை எங்களுக்கும் உண்டு.  குறிப்பாக ஆறு, நிலங்கள் அத்தனையும் அரசாங்கத்தின் சொத்து. எங்கள் கவனம் அதிலும் உண்டு " என்ற போது தான் விவசாய சங்க பிரதிநிதிகளின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.  அதன் பிறகே அம்மையாரின் அறிவிப்பும் வெளியானது.  

ஆனால் ஜெயலலிதா சில விசயங்களில் மிகுந்த அக்கறை எடுத்து செயல்பட்டார் என்பது கண்கூடு.

சாயக்கழிவு நீர் என்கிற பிரச்சனையை இரண்டு விதமாக கவனித்தார். 

தற்காலிக தீர்வு.  நிரந்தர தீர்வு.  

நிரந்தர தீர்வு என்றால் உடனடியாக எல்அண்ட டி நிறுவனத்தை தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை மனதில் கொண்டு அவர்களிடம் திட்ட அறிக்கை கேட்டார். கடலில் கலக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென்றால் முழுமையாக இரண்டு வருடம் ஆகும் என்பதை அவர்கள் சுட்டிக் காட்ட அந்த திட்டம் உடனடியாக கவைக்கு உதவாது என்ற முடிவுக்கு வந்தார்.  ஆனால் இன்னமும் அந்த நோக்கத்தை நோக்கி காய் நகர்த்திக் கொண்டிருப்பது இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும்.  

தற்காலிக தீர்வு என்பதை கருத்தில் கொண்டு முடிந்த வரைக்கும் சாய்ப்பட்டறை முதலாளிகள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்திக் காட்ட வேறொரு பக்கத்தில் இருந்து ஆப்படித்தார்.

வெளியாகும் கழிவு நீரை முறைப்படி சுத்திகரிப்பு செய்து தான் அனுப்புகிறார்களா? என்பதை கவனிக்கும்படி மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அறிவுரை வழங்கினார்.  காரணம் இந்த பிரச்சனை இன்னமும் உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்காகும். கயிறு என்ற நினைத்து பாம்பை தொட்ட கதையாக மாறிவிடக்கூடாது என்ற புத்திசாலித்தனமும் அவரிடம் இருந்தது. ஏற்கனவே ஜீரோ டிஸ்சார்ஜ் என்பது முடியும் என்பதை அவசரப்பட்டு ஒத்துக் கொண்ட சாயப்பட்டறை முதலாளி வர்க்கம் இப்போது பேய் முழி முழித்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே மின் தடை ஒரு பெரிய சவால் என்று புலம்பிக் கொண்டிருந்தனர்.  அதுவும் இப்போது ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. 

வேறென்ன பிரச்சனை?

1974 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கும் சட்டம் தான் இப்போது முதலாளிகளுக்கு இருக்கும் ஒரு பெரிய சவாலாகும். இந்த சட்டத்தின் படி வெளியாகும் சாயக்கழிவு நீரில் டிடிஎஸ் ( டோட்டல் டிசால்வ் சால்ட்) அளவு 2100 என்கிற ரீதியில் இருக்க வேண்டும்.  

ஆனால் நடைமுறை எதார்த்தம் கேள்விக்குறியது.

கடந்த ஒரு வருடமாக சாயக்கழிவு நீர் அதிக அளவு நொய்யல் ஆற்றில் கலக்கவில்லை.  ஆனாலும் திருட்டுத்தனமாக இன்னமும் மறைமுகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் சாயப்பட்டறைகள் மூலம் ஓரளவிற்கு இந்த சாயத்தண்ணீர் ஓடிக் கொண்டே தான் இருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் எடுத்துக் கொள்வோம்.  

ஆனால் சாதாரணமாக வீட்டு கழிவு நீர் (குளித்தல், துணி துவைத்தல்) இது தவிர அன்றாட உபயோகங்கள் மூலம் வெளியாகும் நீரின் வரத்து, திருப்பூருக்குள் இருக்கும் ஒவ்வொரு உணவகத்திலிருந்தும் தினந்தோறும் வெளியாகிக் கொண்டிருக்கும் தண்ணீர் மற்றும் கழிவுகள் என்று எல்லாவகையிலும் இந்த நொய்யல் ஆறு தன் பங்குக்கு அமைதியாக வரவு வைத்துக் கொண்டே தான் இருக்கிறது. . 

ஆற்று வளத்தை, நில வளத்தை, நீர் வளத்தை பாழாக்க சமூக வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதனும் தன் ஆடம்பர மற்றும் அத்யாவ்ஸ்ய தேவைகளுக்கு என்று கெடுத்துக் கொண்டேதான் இருக்கின்றான்.  

இந்த விபரங்களை இந்த இடத்தில் விஸ்தாரமாக பேசக் காரணம்?

சாதாரணமாக சவுக்காரம் போட்டு துணி துவைக்கும் போது வரும் தண்ணீரே அரசாங்கம் கொண்டு வந்துள்ள சட்டத்தின் படி 2100 க்கு பல மடங்கு அதிகமாக இருக்கும். மற்ற சமாச்சாரங்களும் கலந்து வெளியாகும் நீரின் அளவில் இந்த டிடிஎஸ் அளவு பல மடங்கு அதிகமாகத்தான் இருக்கும்.

இதைப் போலவே திருப்பூரில் சர்வசாதாரணமாக 3000 அடிகளுக்கு மேல் போர் போட்டாலும் தண்ணீர் வராது. அந்த அளவுக்கு இறுகிய பாறை அமைப்பு உள்ள பூமி இது.

இதுக்கு மேலே இங்கே உள்ள தண்ணீரில் இயல்பாகவே உப்பின் அளவு அதிகம்.  எல் அண்ட டி நிறுவனம் திருப்பூருக்குள் வந்த பிறகே மக்கள் ஓரளவுக்க்கு நல்ல தண்ணீரை பயன்படுத்திக் கொள்ள முடிகின்றது. இந்த திட்டத்தையும் கொண்டு வந்த அம்மையார் ஜெயலலிதாவுக்கே திருப்பூர் மக்கள் நன்றி கடன்பட்டுள்ளார்கள்.

இது போன்ற சூழ்நிலையில் நொய்யல் ஆற்றில் ஓடும் நீரை மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனைக்கு என்று எடுத்துப் பார்த்தால் சாயக்கழிவு நீர் கலக்காமலேயே உச்சமான டிடிஎஸ் அளவை காட்ட முடியும்.  இதை வைத்தே ஒருவர் நீதிமன்ற தடை வாங்கிவிட முடியும்.

+++++++++++++++++++++++++++++

கற்பக வினாயகம் நீதியரசராக இருந்த போது விவசாயிகள் சார்பாக ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டது. ஈரோட்டுப் பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவரே இதற்கு தலைவர்.  இதைத்தான் மோகன் கமிட்டி என்கிறார்கள். இவரைப்பற்றி ஆச்சரியமான பல தகவல்கள் உண்டு. எளிமையின் மறு உருவம்.  அதிகமாக சைக்கிளை பயன்படுத்துபவர். 100 சதவிகித நேர்மையாளர்.  இல்லற வாழ்க்கையில் குழந்தை தேவையில்லை என்று கருத்தடை செய்து கொண்டவர். இவரின் மனைவியும் பொதுவாழ்க்கையை சமூக பணிக்காக அர்பணித்துக் கொண்டவர்கள்.எதற்கும் அஞ்சாதவர்.இன்னமும் சொல்லப்போனால் எதற்குமே வளைந்து கொடுக்காதவர். சாயப்பட்டறை முதலாளிகளுக்கு இவர் தான் இன்றைய மிகப் பெரிய சவால்.  

இவர் மட்டும் சற்றே குனிந்திருந்தால் இன்று மகா கோடீஸ்வராக ஆகியிருக்கக்கூடும்.  நீதியரசர் கற்பக விநாயகம் கொடுத்த தீர்ப்பின்படி சாயக்கழிவு நீரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு என்கிற ரீதியில் ஒவ்வொரு சாயப்பட்டறை முதலாளிகள் வெளியே விடும் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஏழு பைசா என்கிற ரீதியில் பண்ம் வசூலித்து கருவூலத்தில் கட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.  அந்த தொகை இப்போது ஏறக்குறைய 18 கோடி என்கிற அளவுக்கு இருக்கிறது. 

இது போக முதலாளிகள் கட்டிய டெபாஸிட் தொகை 76 கோடியும் தூங்கிக் கொண்டிருக்கிறது. இந்த பணம் விவசாயிகளின் கைக்கு போக வேண்டுமென்றால் உச்சநீதி மன்றம் ஒரு முடிவை இறுதியாக அறிவிக்க வேண்டும் அல்லது விவசாயிகள் தொடுத்த கேஸை வாபஸ் வாங்க வேண்டும்.  ஆக மொத்தம் சாயப்பட்டறை முதலாளிகளுக்கு உண்டான பாதிப்புகளைப் போலவே விவசாயிகளுக்கும் பயங்கரமான பாதிப்புகள் உருவாகியுள்ளது.

++++++++++++++++++++++++++++++


கலைஞர் ஆட்சியில் செயல்படாமல் இருந்த பொது சுத்திகரிப்பு நிலையங்கள் இப்போது மெதுவாக செயல்படத் தொடங்கியுள்ளது. அம்மையார் ஜெயலலிதா கொடுத்துள்ள அறிவுரையின் பேரில் திருப்பூரில் பொது சுத்திகரிப்பு நிலையங்கள் இப்போது தங்களது சோதனை முயற்சிகளை தொடங்கியுள்ளது.  திருப்பூரில் ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு விதமான சுத்திகரிப்பு நிலையங்கள் உண்டு.

ஒவ்வொருவரும் எங்கள் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் இப்படி சாதித்து விடுவோம்? அப்படி சாதித்து விடுவோம்? சொட்டு கழிவு நீர் கூட வெளியே வராது? எங்களிடம் நவீன முறைகள் உண்டு என்று உதார் காட்டிய கணவான்கள் இப்போது முழி பிதுங்கிப் போய் இருக்கிறார்கள்.

காரணம் எவரிடமும் முறைப்படியான தொழில் .நுட்ப அறிவும் இல்லை. தொழில் நுட்ப அறிவை தரக்கூடியவர்களை இன்று வரைக்கும் அணுகவும் இல்லை. 


ஒரே காரணம் பேராசை, போட்டி, பொறாமை.

ஒரு நிறுவனம் அல்லது தொழில் வளரும் போதே அதன் எதிர்கால சவால்களை குறித்து யோசிக்கக் கற்று இருக்க வேண்டும்.  அவ்வாறு கற்று இருந்தவர்கள் இப்போது ஜாம் ஜாம் என்று 9 சாய்ப்பட்டறைகளை ( மிகப் பெரிய முதலீடு) நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  இது தவிர அரசாங்கம் சொல்லியுள்ள சட்ட திட்டத்தின்படி கழிவு நீரை சுத்திகரிக்கும் வசதிகளுடன் இப்போது 65 சாயப்பட்டறைகள் தயாராக உள்ளது.  மோகன் கமிட்டி இத்ற்கு ஓ.கே. சொல்ல வேண்டும்.

கடந்த ஆறேழு மாதமாக இதுவும் இழுத்துக் கொண்டே போகின்றது.  700க்கும் மேற்பட்ட டையிங் நிறுவனங்களில் இப்போது திருப்பூருக்குள் செயல்பட்டுக்கொண்டிருப்பது 20க்குள் இருக்கக்கூடும்.

சென்ற ஆட்சியின் போது கலைஞர் திருப்பூருக்கு எந்த வகையிலும் உதவவில்லை என்றார்கள்.  


ஆனால் அம்மையார் உதவிக்கரத்தை நீட்டிவிட்டார். உதவியை பெறவேண்டிய முதலாளிகளின் கைகள் தான் இப்போது முடக்குவாதத்தில் இருக்கிறது. காரணம் இதுவரையிலும் ஒவ்வொரு சாயப்பட்டறைகளும் வெளியாகும் சாயக்கழிவு நீர் குறித்து அதிக அக்கறை எடுத்துக் கொண்டதே இல்லை. மாசுக்கட்டுபாட்டு வாரிய அதிகாரிகளுக்கு கொடுத்த மொத்த லஞ்சப்பணத்தை அணைவரும் சேர்ந்து நிறுத்தி வைத்து ஆக்கப் பூர்வ திட்டங்களில் செயல்படுத்தியிருந்தாலே இந்நேரம் பொன்னான நேரமாக இருந்து இருக்கக்கூடும்.

இப்போது அம்மையார் ஒவ்வொரு பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கென்று  (COMMON  Effluent TREATMENT PLANT  சிடிபி) 10 கோடி ரூபாய் வட்டியில்லா கடனாக அளித்துள்ளார்.

அரசாங்கம் சொல்லியுள்ள சட்டதிட்டத்தின்படி செயல்பட வேண்டும்.  ஆனால் பலன் பூஜ்யம்.  தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். வெற்றிகரமாக செயல்படுத்திக் கொண்டிருக்கும் தொழில் நுட்பத்தை கண்டுவர சாயப்பட்டறை முதலாளிகள் குஜராத் வரைக்கும் சென்றார்கள்.  ஆனால் அங்குள்ள தொழில் நுட்பத்தை பார்க்காமலேயே திரும்பி வந்து விட்டார்கள்.  ப்ரைன் சொல்யூஷன்ஸ் என்றொரு நவீன சுத்திகரிப்பின் மூலம் நாங்கள் சாயக்கழிவு நீரை ஆவியாக்கி விடுகின்றோம் என்று சொல்லிவிட்டு சுடச்சுட ஆவி பறக்க இட்லி சாப்பிட்டது தான் மிச்சம். திருப்பூரில் 20 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் இருக்கிறது.  ஆட்களும் சரியில்லை.  முன்னேற்பாடுகளையும் முறைப்படுத்த ஆளுமில்லை..

+++++++++++++++++++++++++++++

ஏற்றுமதியாளர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. காரணம் தேவைப்படும் துணிகளை வடநாட்டில் இருந்து கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள். இங்கே ஏற்கனவே சாயப்பட்டறைகள் அடித்த கொள்ளைக்கு முடிவு வந்து விட்டது என்கிற சந்தோஷமே முக்கிய காரணம். வடநாட்டில் செய்யப்படும் சாயமேற்றிய துணி திருப்பூர் அளவுக்கு தரமில்லை என்ற போதிலும் அவரவர்கள் தங்கள் அளவுக்கு ரிஸ்க் எடுத்து இந்த தொழிலை நடத்திக் கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் திருப்பூர் பிரச்சனை போல குஜராத்தில் இல்லை. காரணம் அரசாங்கத்தின் கொள்கைகள். அங்கு இந்த சாயக்கழிவு நீரை ஓரளவுக்கு சுத்திகரித்து கடலில் கலந்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

குஜராத் அரசாங்கமே பொறுப்பை ஏற்று நடத்திக் கொண்டிருக்கிறது.

இது தவிர ஏற்றுமதியாளர்கள் தங்கள் வசதிக்கு ஏற்றபடி பல்வேறு மாநிலங்களில் இங்கே இருந்த சாய்ப்பட்டறைக்கு தேவைப்படும் சமாச்சாரங்களை கொண்டு போய் துணியை சாய்மேற்றி கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.  

மாட்டிக் கொண்டாரடி மைனர் காளை என்பது போல சாய்ப்பட்டறை முதலாளிகள் இப்போது பல்வேறு சவால்களை சந்தித்துக் கொண்டு இருக்கிறார்கள்.  

அரசாங்கம் உதவ காத்திருக்கிறது.  ஆனால் உருப்படியான திட்டத்தை செயல்படுத்திக் காட்ட வேண்டும்.  

இது தவிர ஒவ்வொரு சாயப்பட்டறைகளும் தாங்கள் சாயமேற்ற வாங்கும் தண்ணீரின் அளவை அரசாங்கத்திற்கு கணக்கு காட்ட வேண்டும்.  தண்ணீரை எப்படி பயன்படுத்தினார்கள் என்பதையும், எத்தனை லிட்டர் சாய்ககழிவு நீரை பொது சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பினார்கள் என்பதையும் கணக்கில் கொண்டு வர வேண்டும்.

கணக்கு டேலி ஆக வில்லை என்றால் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் டவுசரை கழட்டி விடுவார்கள். சென்ற ஆட்சியில் கட்டுகட்டாய் பணத்தை சாக்குப்பையில் அள்ளிக் கொண்டது போல இப்போது முடியாது.  முழுமையான நேர்மை இல்லை என்றபோதிலும் கூட அம்மையார் குறித்த பயம் அடிமட்ட அதிகார வர்க்கம் வரைக்கும் பரவியுள்ளது என்பது கண்கூடு.

எப்படி தெரியுமா?


சாயப்பட்டறை முதல் பொது சுத்திகரிப்பு நிலையம் வரைக்கும் கணினி சார்ந்த தொழில் நுட்பங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எல்லாமே ஆன் லைன் சமாச்சாரங்கள். இந்த பொது சுத்திகரிப்பு நிலைய கணக்கு வழக்குகளை கண்காணித்துக் கொண்டிருக்கும் மெயின் சர்வர் சென்னையில் இருக்கிறது.  தினந்தோறும் வரவு செலவு கணக்கை நொடிப் பொழுதில் கண்டு பிடிக்க கண்கொத்தி பாம்பாக ஒரு அதிகார கூட்டமே இரவு பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒவ்வொரு சாயப்பட்டறைகளுக்கும் தனித்தனி பாஸ்வேர்ட்.  எவரும் உள்ளே புகுந்த உழப்ப முடியாது.  கணக்கு தப்பென்றால் நடு இரவில் குறிப்பிட்ட சாய்ப்பட்டறைக்கு அதிகாரிகளின் வருகை நிச்சயம் உண்டு என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.  கேள்வி எதுவும் இல்லை.  உடனடியாக சீல் வைத்து மின் இணைப்பை துண்டித்து விட்டு சென்று விடுவார்கள். மறுபடியும் கோப்புகளை புரட்டிப் பார்க்கவே ஆறு மாதம் ஓடிவிடும்.

இதன் காரணமாகவே வர்றான் வர்றான் பூச்சாண்டி என்கிற ரீதியில் ஒவ்வொரு சாய்ப்பட்டறை முதலாளிகளும் பயந்து கொண்டு இருக்கிறார்கள். 

உழைப்பு மட்டும் இருந்தால் பணம் பார்த்து விடலாம்.

ஆனால் பணம் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் போது சமூகம் குறித்த அக்கறையும் வேண்டும்.

சமூகம் குறித்த அக்கறை கூட தேவையில்லை. ஆனால் தாங்கள் சார்ந்துள்ள தொழிலின் எதிர்கால போக்கை ஒவ்வொருவம் தீர்மானமாய் உணர்ந்திருக்க தெரிய வேண்டும். அதற்கான முன்னேற்பாடுகளை தொழில் திறமைகளை தொழில் அதிபர்கள் ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ளாவிட்டால் என்ன நடக்கும்? என்பதே அம்மையார் ஜெயலலிதா உருவாக்கிய இந்த திட்டம்.

இந்த கட்டுரை அதீதம் இதழ நண்பர் திரு. கார்த்திக் அவர்களின் வேண்டுகோளின் எழுதப்பட்டது.  அதீதம் குழு நண்பர்களுக்கு நன்றி.

இது தொடர்பான மற்ற கட்டுரைகள்

சாயமே இது பொய்யடா

ஜட்ஜ் அய்யா ஜட்டி போடுவாரா?

அழுவாச்சி காவியம் கதாநாயகன்


நான் வேட்பாளர் டைரிக்குறிப்புகள்

41 comments:

nellai ram said...

நல்ல கருத்துக்கள்...
புதிய கோணத்தில் ஒரு வித்தியாச பதிவு.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமையான அலசல்.

Unknown said...

என்னமா அலசி இருக்கீங்க நண்பா....இவ்வளவு விவரங்களுடன் புரிய வைத்த உங்களுக்கு என் நன்றிகள்..

நிகழ்காலத்தில்... said...

ஜோதிஜி விரிவான கட்டுரையாக வந்து இருக்கிறது வாழ்த்துகள்

தற்போதய நிலைமையில் டையிங்காரர்கள் வெளிமாவட்டங்களில் இருப்பதால் பலமடங்கு லாபத்துடன் இயங்குவதாகவும், இருக்கின்ற கடன்களை கட்டிவிட்டு, கோடிக்கணக்கில் பணம் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன். தற்போது அவர்களே திருப்பூர் வர விரும்பவில்லை எனவும் கேள்விப்பட்டேன், இதே நிலைமை நீடிக்க வேண்டும் என விரும்புவதாகவும் கேள்விப்பட்டேன். எந்த அள்வுக்கு உண்மை என்பது தெரியவில்லை..

Anonymous said...

மிக விரிவான தெளிவான கட்டுரை.. சம்பந்தப்பட்டவர்கள் உணருவார்களா?!

தமிழ் உதயம் said...

சாயப்பட்டறைகள் குறித்து அரசியலின் ஆட்டத்திலிருந்து முதலாளிகளின் ஆட்டம் வரை தெளிவாக புரியும்படி எழுதி இருக்கிறிர்கள். நன்றி.

Unknown said...

உச்ச நீதி மன்றம் ஒட்டு மொத்தமாக சாயப்பட்டரைகள் இயங்க தடை விதிப்பதிற்கு முன்னால், நான் வேலை செய்த சாயப்பட்டறையில் நீதி மன்ற உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் சோதனைக்கு பயந்து evaporator எனும் நீராவியாக்கி சுத்தம் ப்ளாண்ட்டை பெயருக்கு 2 மணி நேரம் ஒட்டுவார்கள்,காரணம் மின்சாரத்தை அது அள்ளுமாம்.மின் துறையிலோ,strict ஆன பெண் அதிகாரி ஒருவர் திடீரென சோதனைக்கு வந்து குறிப்பிட்ட நேரத்திற்கு அதிகமாக, கூடுதலாக மின்சாரம் பயன்படுத்தியிருக்கிறீர்கள் என 2 லட்சம் அபராதம் என தீட்டிவிட்டார் என சொன்னார்கள். பகலில் சுத்தம் செய்வ்து மிச்ச கழிவு நீரை காலி செய்ய நோகாமல் அந்த பிரமாண்ட டேங்கிலிருந்து நடு ராத்திரியில் குழாய் மூலம் பக்கத்து திடலில் இறைத்து விடுவார்கள் இப்படி பல்வேறு சோதனைகளையும் ”சவாலே சமாளி”என்று ”சமாளித்து”ஒட்டிக்கொண்டிருந்தார்கள்.தற்போதைய நிலையை பல்வேறு பரிமாணங்களில் அருமையாக அலசியுள்ளீர்கள்.பல்லாயிரம் பேருக்கு பிழைப்பு கொடுத்து, யாருக்கும் பாதிப்பில்லாமல் ஜெயா ஆட்சியிலாவது விடிவுகாலம் பிறந்தால் சரி.

http://thavaru.blogspot.com/ said...

அன்பின் ஜோதிஜி...நிறையவே மாற்றங்கள் தென்படுகின்றன இன்றையமுதல்வரிடம்..இதையெல்லாம் விட சாயபட்டறை முதலாளிகள் தங்களுடைய சாயங்களை மாற்றி முன்வந்தாலே முடிவு கிடைததமாதிரிதான்.

வாழ்த்துகள்.

செந்திலான் said...

விவசாயம், விவசாயிகள் எந்த அளவுக்கு இந்த அரசாங்கத்திற்கு முக்கியமோ அதே அளவுக்கு திருப்பூர் தொழில் வளர்ச்சியும் முக்கியம். உங்களுக்கு இருக்கும் அதே அக்கறை எங்களுக்கும் உண்டு. குறிப்பாக ஆறு, நிலங்கள் அத்தனையும் அரசாங்கத்தின் சொத்து. எங்கள் கவனம் அதிலும் உண்டு "//
அப்படி இருந்திருந்தால் பாதிக்கப் பட்டவனுக்கு பிச்சை போடுவதைப்போல பதினெட்டு கோடியும் பாதிப்படைய செய்தவனுக்கு இருநூறு கோடியும் வழங்குவார்களா ? என்ன அயோக்கியத் தனம் இது? விவசாயிகளின் வாழ்கையை நிரந்தரமாக ஊனமாக்கிவிட்டு இன்று தொழில் வளர்ச்சி அது இது என்று விவசாயிகளை மிரட்டி பணிய வைத்துவிடலாம் என்று மனப்பால் குடிக்கும் மனிதர்கள் அரசியல் வாழ்வில் இருந்து அப்புறப் படுத்தப் பட வேண்டும்.வந்தாரை வாழ வைப்போம் சொந்த மக்களை சாகடிப்போம் வாழ சன நாயகம் வாழ்க சுயநல வெறி

Unknown said...

ஜோதிஜீ... பதிவுக்கு சம்ந்தம் இல்லாத பதில் தான் இருந்தாலும்.... தூக்கு தண்டனை உறுதி செய்யபட்ட சாந்தன், முருகன் பேரறிவாளன், இவர்களீன் பிறந்த குறிப்பு கிடைக்குமா? கிடைத்தால் அவர்களின் ஆயுர்பாவம் பார்க்கலாம் அல்லவா?

பாவா ஷரீப் said...

உண்மையிலே மிக அவசியமான வந்தாரை
வாழ வைத்த திருப்பூரின் இன்றைய நிலையை
அப்பட்டமாக விவரித்த பதிவு

நன்றி

Anonymous said...

Without Investment Data Entry Jobs !
FOR MORE DETAILS VISIT OUR WEBSITE : http://bestaffiliatejobs.blogspot.com

கிரி said...

//எல் அண்ட டி நிறுவனம் திருப்பூருக்குள் வந்த பிறகே மக்கள் ஓரளவுக்க்கு நல்ல தண்ணீரை பயன்படுத்திக் கொள்ள முடிகின்றது.//

ஜோதிஜி எல் அன்ட் டி என்ன செய்கிறது?

Anonymous said...

kkkkkkkkkkkkkkkkooooooooooooooooonnnnnnnnnfffttttttttttttthhhhhhhhhhddddddddsaaaaaaaaaaaccccccmmmmmmm

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
உங்களது உழைப்பிற்கு மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

நிகழ்காலத்தில்... said...

செந்திலான்
//பாதிக்கப் பட்டவனுக்கு பிச்சை போடுவதைப்போல பதினெட்டு கோடியும் பாதிப்படைய செய்தவனுக்கு இருநூறு கோடியும் வழங்குவார்களா ? என்ன அயோக்கியத் தனம் இது? //

நண்பரே விவசாயிகளுக்கு கொடுத்த பணம் பாதிப்பை சரிகட்ட... அது திரும்பத் தரவேண்டியதில்லை. ஆனால் இருநூறுகோடி கடன் தான்., பைசா வாரியாக திருப்பித்தரவேண்டும்..

Unknown said...

என்னவோ போங்க, நல்லது நடந்தா சரி, எப்படி பார்த்தாலும் திருப்பூர் பழைய நிலைமைக்கு வர கண்டிப்பா அடுத்த வருசத்துல பாதியாகிடும், அதுக்குள்ள எல்லா ஆர்டரும், மிச்ச மீதி இருக்குற சின்ன சின்ன கம்பெனிகளும் முடிஞ்சு போயிரும்

அஹோரி said...

நல்ல பதிவு.

சென்னை பித்தன் said...

நடுநிலையான,தெளிவான பார்வை!

raja said...

உங்கள் கட்டுரை கூரையை பார்த்து யோசித்து எழுதபட்டதல்ல. வாழ்த்துகள் பெரும் பத்திரிகை என்று பீற்றிக்கொள்ளும் பத்திரிகைகளில் கூட இப்படியான ஒரு ஆழமான கட்டுரையை நான் படித்ததில்லை. மீண்டும் ஒரு முறை என் வாழ்த்துகள் உங்களது எழுத்துகளுக்கும் உங்களுக்கும்.

Kumar said...

I did not understand one point. Because 10cr ruppes today jaya became heroine ?

சார்வாகன் said...

தொடருங்கள் ஆசிரியரே!!!!!
ஆசிரியர் தின வாழ்த்துக்கள்
நன்றி

NAGA INTHU said...

அடேங்கப்பா. சாயம் வெளுத்துவிட்டது.எதிர்கால சமுதாய நோக்கோடு பிரச்சனையை ஜெ.ஜெ.கையாண்டவிதம் பிரமாதம்.அதை தங்களின் எழுத்து பிரமாதமாய் புரியவைத்தது.நன்றி.

Prakash said...

இரண்டு தரப்பையும் திருப்திபடுத்துவது கடினம். இப்போது எப்படி பரம்பரை ஈழ எதிர்பாளர்களும், குபீர் ஈழ ஆதரவாளர்களும் ஒரே அணியில் இருந்து ஜெயாவை ஆதரிகிறார்கள்.
ஆனால், ஒரு கட்டத்தில், ஒரு தரப்பினர் திருப்தி அடையவில்லை, நினைத்தது நடக்கவில்லை
என்றல், எதிர்ப்பை வெளிபடுதுவர்.

அதுபோல, விவசாயிகளும், சாய தொழிலும் ஒரே சேர
திருப்தி அடைவது கடினம், ஒரு கட்டத்தில், ஒரு தரப்பினர் திருப்தி அடையவில்லை, நினைத்தது நடக்கவில்லை என்றல், எதிர்ப்பை வெளிபடுதுவர்.

ஜோதிஜி said...

நிகழ்காலத்தில் சிவா

வெளி மாநிலங்களில் சாய்பபட்டறை வைத்திருப்பவர்களுக்கு நாளுக்கு நாள் சவால்கள் அதிகாரித்துக் கொண்டே போகின்றது.நண்பர்கள் ஒருவர் இதுவரைக்கும் கர்நாடகா, ஆந்திரா என்று மாறிப்போய் சிலவாரங்களுக்கு முன் திருநெல்வேலி போய் அங்கேயும் துரத்தப்பட்டு இப்போது காரைக்குடி பக்கம் சென்றுள்ளார். நிறைய எழுத முடியும். ஒரு சாயப்பட்டறை முதலாளி தினந்தோறும் ஆயிரம் ரூபாய்க்கு தண்ணி அடிப்பது குறைந்து இப்போதெல்லாம் 500 ரூபாய்க்கு என்கிற ரீதியில் மாறியுள்ளது.

ஜோதிஜி said...

இளா

நான் சந்தேகப்பட்டது சரிதான். நீங்க திருப்பூரில் வசித்துருக்க வேண்டும் என்று நினைத்துக கொண்டேயிருந்தேன்.

நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. இன்னும் திருந்தியவர்கள் எவரும் இல்லை. அள்ளிக்குவித்த பணம் இப்போது இல்லையே என்ற அங்கலாய்ப்பு தான் அதிகம்.

ஜோதிஜி said...

தவறு வார்த்தை ஜாலத்தினை ரசித்தேன்.

செந்திலான் உங்கள் கோபம் நியாயமானதே. நானும் நிறைய எழுத முடியும். ஆனால் சாயப்பட்டறை முதலாளிகளை விட என் கோபம் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை மேல் அதிகமாக உள்ளது. அந்த அளவுக்கு சம்பாரித்து விட்டார்கள். பணம் வாங்கிக் கொண்டு அமைதியாக இருந்த காரணத்தால் ஏறக்குறைய மூன்று மாவட்டத்தின் நில ஆதாரத்தையே பாழாக்கி விட்டார்கள்.

ஜோதிஜி said...

கிரி

வாய்ப்பு இருக்கும் சுட்டிகளை சொடுக்கி படித்துப் பாருங்க. சாயமே இது பொய்யடா தொடங்கி அப்படியே ஒரு ரவுண்டு வந்தீங்கங் என்றால் கோபிச்செட்டிபாளையம் போன மாதிரி இருக்கு. காரணம் உண்டு. இந்த எல் அண்ட் டி மக்கள் தில்லாலங்கடி வேலைகளையும் எழுதியுள்ளேன்.

பவானி பூமியில் 2000 அடி தோண்டி எல் அண்ட் டி மக்கள் திருப்பூர் மக்களுக்கு தண்ணீர் கொடுத்துக கொண்டு இருக்கிறார்கள்.

ஜோதிஜி said...

வினோத்

சிரித்து விட்டேன். நண்பர்களிடம் கேட்டுப் பார்க்கின்றேன். இதைப் படிப்பவர்கள் நிச்சயம் சிரிக்கப் போகின்றார்கள்.

ரெவெரி said...

நன்கு ஆராய்ந்து எழுதி இருக்கிறீர்கள்..உங்களது உழைப்பிற்கு மனப்பூர்வ வாழ்த்துக்கள்.

Jeyapalan said...

well written. Congrats.

தாராபுரத்தான் said...

ஒழிவு மறைவின்றி..

P.S.Narayanan said...

திருப்பூரில் வாழ்ந்துகொண்டு துணிவாக இதை எழுதி உள்ளீர்கள். பாராட்டுக்கள். வட்டியில்லாக்கடன் Polluter Pays சட்டத்திற்கு முரண்பாடானது. நீதி மன்றத்திற்கு எடுத்துசென்றால் அடிபடும். முதல்வர் மூன்று மாதம் கெடு விதித்துள்ளதால் இதை நீதி மன்றத்திற்கு எடுத்துசெல்ல இயலவில்லை. அவ்வளவே. நீங்கள் அடிப்படை பிரச்சனையை தொடவே இல்லை. ஜீரோ டிஸ்சார்ஜ் ஒரு இமாலய பொய். செய்யவே முடியாது. குஜராத்தில் அரசாங்கமே செய்கிறது என்பது முற்றிலும் தவறானது. நான் செய்கிறேன் என்று ஏற்றுக்கொண்டு முதலாளிகளுக்கு சுதந்திரம் கொடுத்த மோதி அந்த சுத்திகரிப்பு நிலையங்களை நடத்தவே இல்லை. அரசு பட்டறைகளிடமிருந்து பணம் வசூலிக்கிறது. அவ்வளவே.

மருத்துவர் வே ஜீவா (பசுமை இயக்க தலைவர், ஈரோடு) திருப்பூரில் ஒரு பன்முறை மருத்துவமனை தொடங்க அறிவுரை வழங்க சில மாதங்களுக்கு முன்னர் அங்கு சென்றார். அப்போது சில பட்டறையர்கள் அவரிடம் கூறியது: "கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேல் பல அநீதிகளை செய்துவிட்டோம். அதற்கு பரிகாரமாக இந்த மருத்துவ மனையை தொடங்கி சேவை செய்ய விரும்புகிறோம். இனி இங்கு சாயத்தொழில் நடத்துவது என்பது வெறும் கானல்நீர்". எந்த பட்டறையரிடமும் தனியாக விசாரியுங்கள்; இதை ஒப்புக்கொள்ளுவார்கள்.

ZLD செய்த பின்பு வெளியாகும் திடக்கழிவை என்ன செய்வதாம்? திருப்பூரின் சாயம் இன்னும் ஓரிரு மாதங்களில் முற்றிலும் வெளுக்கும். அந்த நாளை நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டுள்ளோம். அதன்பிறகுதான் இன்னும் பெரிய கெட்ட காலம் துவங்க உள்ளது. நொய்யல் ஆற்றை பழைய நிலைக்கு கொண்டுவர நீதி மன்றத்தில் வழக்குப்போடுவோம். உலகத்தில் உள்ள எல்லா பணத்தையும் கொண்டுவந்து கொட்டினாலும் இது சாத்தியமில்லை. அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் இவர்களின் செல்வத்தை நிச்சயம் தேய்க்கும். அற்பர்களின் அடாவடி ஆடம்பர வாழ்வு மடியும். தர்மம் வென்றே தீரும்.

P.S.Narayanan said...

கேட்பது தவறு, கொடுப்பது சிறப்பு
என்ற மிக உயர்ந்த கோட்பாட்டின் அடிப்படையில் மக்களுக்கும் வாயற்ற ஜீவன்களான கால்நடைகளுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் திருப்பூர் பாவிகள் செய்துள்ள அக்கிரமங்களுக்கு உரிய தண்டனை வாங்கி கொடுப்பதே எனது ஓய்வு வாழ்வின் குறிக்கோள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஜோதிஜி said...

P.S.Narayanan said...

எப்படியோ குறுகிய காலத்திற்குள் தமிழ் அடிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்டு விட்டீங்க. உங்கள் பலன் உரிய காலத்திற்குள் கிடைக்க வாழ்த்துகள்.

Unknown said...

P.S Narayanan, Please join us @ facebook.com/noyyal

and save noyyal river group

by,

Save Noyyal

Anonymous said...

i think u r ammavin adimai,.. because neenga innum thiruppur saayakkalivaal paathikkapatta vvasaayikalaium avarkalin nilankalaium paarkkavillai endru ninaikkiren..
unkal filter machin plan best ah iruntha china, jappan pondra naadukal an ithai thadai seithirukkindrana endru sindhiunkal tholare............

Unknown said...

சிறந்த தொகுப்பு !
6 மாதம் குஜராத்தில் இருந்திருக்கின்றேன்...
அதைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கின்றது...
நீங்கள் தான் எழுதவேண்டும்...

Anonymous said...

@ P.S. Narayanan... Sir
நீங்க சொல்லறதை பாத்தா, ஈரோடு, சேலம், பவானி, கோயம்புத்தூர் -லே சாயம் போட்டு, தண்ணியை மாசு படுத்துபவன் எல்லாம் நல்லவன் போலவும், திருப்பூர்காரன் மட்டும் பாவி போலவும் குறிப்பிட்டுள்ளது வருத்தமளிக்கிறது. தங்களின் ஒய்வு வாழ்வின் குறிக்கோளாக ஈரோடு, சேலம், பவானி, கோயம்புத்தூரில் சாயம் போட்டு மாசு படுத்தும் பட்டறைகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுங்கள், அது என்ன திருப்பூர்க்கு மட்டும் என்ற ஓர வஞ்சனை.

vels-erode said...

யாரின் இவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு நடவடிக்கைகளுப்பின்னர் தான் மொத்த தமிழகத்தின் தொழில் சகாப்தமும் நாசமாக்கப்பட்டு இருக்கிரது.

phantom363 said...

நன்றி ஜோதிஜி. நிறைய விடயங்கள் கொடுத்திருக்கிறீர்கள். மலைத்து போய்விட்டேன்... ராஜாமணி