தொடக்கம்
ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து ஆறு
தமிழ்நாட்டில் ஆட்சி மாறி முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றதும் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதற்கு கடந்த பத்தாண்டுகளாக கட்டணத்தை உயர்த்தவில்லை.
இதைவிட இதனால் தமிழ்நாட்டின் மின்சார எதிர்காலம் எதிர்கொள்ளப் போகும் சவால்களும் நம் முன்னால் ஏராளமாக உள்ளது.
மின்சாரத் துறையில் தனியார்கள் வந்த போது இனி மலிவான மின்சாரம் பொதுமக்களுக்கு கிடைக்கும் என்றார்கள். தனியார்மயமாக்கப்பட்ட பின்னர் தான் நாட்டில் தொலை தொடர்புத்துறை அபரிமிதமாக வளர்ச்சியடைந்தது. கட்டணமும் குறைந்தது என்பதைப் போலவே இந்த மின்சார விசயத்திலும் நடக்குமென்றே பலரும் நம்பினார்கள்.
ஆனால் மின்சாரத் துறையில் தனியார்கள் வந்த பின்பு மின்சார கட்டணம் நடுத்தர, அடித்தட்டு மக்களின் கழுத்தை நெறித்தது. ஏன் குறையவில்லை? என்பதற்கு முதலில் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் மின்சார ஒழுங்கு முறை ஆணையம் என்ற அமைப்பே.
மின்சார கொள்முதல், மின்கட்டண நிர்ணயம் போன்ற. மொத்த லகானும் அவர்கள் கையில் தானே இருக்கின்றது. ஆனால் அவர்களின் செயல்பாடுகள் ஒவ்வொன்றும் மக்களின் தேவைக்கு அப்பாற்பட்டது என்பதை சொல்லாமல் புரியவைத்தார்கள். ஆணையத்தின் ஒவ்வொரு கடந்த கால செயல்பாடுகளும் "இருட்டறைக்குள் உள்ளதடா உலகம்" என்பதாக விபரம் தெரிந்வர்களுக்கு உணர வைத்தது.
இத்துடன் மற்றொரு கூத்தும் நடந்தது.
இந்த சமயத்தில் நீங்கள் மீண்டும் ஒன்றை நன்றாக மனதில் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன் 53,298 கோடி ரூபாய். இன்றைய தேதியில் தமிழ்நாடு அரசிற்கு இருக்கும் மொத்த கடனில் இது பாதித் தொகையாக வந்து விடுகின்றது.
இந்தியாவில் அலைக்கற்றை ஊழல் ஒரு பிரளயத்தையே உருவாக்கியது. ஆனால் பலன்?
அவர் செய்தார், அவரும் செய்தார் என்று கைகள் மாறிக் கொண்டே சென்றது.
ஆனால் முடிவு?
இப்போது நீதிமன்றத்தில் இருக்கின்றது. ஊழல் வெளிவந்த கதைகள் இப்படி இருக்கும் போது மின்சாரத் துறையில் தனியார்களின் ராஜ்ஜியத்தை அவர்களின் திரைமறைவு வேலைகளை, உதவும் அதிகாரவர்க்கம், ஆணையங்கள், பலன் பெற்றவர்கள் என்று பக்கம் பக்கமாக எழுத வேண்டிய பல விசயங்கள் இருந்தாலும் சில விசயங்களை மட்டும் இங்கே பார்த்து விடலாம்.
குறிப்பாக ஒரு தொழிலில் முறைப்படி கிடைத்தே ஆக வேண்டிய லாபம் என்பது வேறு. ஆனால் லாபம் என்ற பெயரில் கொள்ளை அடிப்பது என்பது வேறு.
மின்சாரத் துறையில் கோடிக்கணக்கான ரூபாய்கள் கொள்ளையாகத்தான் மக்களின் வரிப்பணம் கடந்த பல ஆண்டுகளாக தனியார் கைகளுக்கு போய்க் கொண்டேயிருக்கின்றது.
பலருக்கும் தெரிந்தே போவது தான் மகத்தான ஆச்சரியம்.
காரணம் தனியார்கள் ஒரு துறைக்கு வரும் போது தான் உண்மையான போட்டிகளும், சேவைகளும் கிடைக்கும் என்று எண்ணம் கொண்டவர்களுக்கு நாம் எந்த அளவுக்கு ஏமாளியாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம் என்பதையும் நமது அரசியல்வாதிகள் எந்த அளவுக்கு நேர்மையானவர்கள் என்பதையும் உணர வைக்கும். காரணம் இன்று தமிழ்நாடு மின்சார வாரியம் சுமக்கும் கடன் தொகை அத்தனையும் தனியார்களுக்கு தாரை வார்த்த பணம் என்பதை நாம் நம் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
சுருக்கமாகச் சொல்லப் போனால் அவர்களிடமிருந்து மின்சாரம் வாங்கினாலும் காசு. வாங்காவிட்டாலும் காசு கொடுக்கத்தான் வேண்டும். காரணம் நம்முடைய சிற்பிகள் வடிவமைத்த ஒப்பந்தங்கள் அப்படித்தான் செப்புகின்றன.
தனியார்கள் நஷ்டம் என்று சொல்லிக் கொண்டு வெளியே சென்றுவிடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு 2003 ஆம் ஆண்டு மின்சாரச் சட்டம் என்று ஒன்று கொண்டு வந்ததை ஏற்கனவே பார்த்தோம். .
இந்த நிலையில் மத்திய மின் துறை அமைச்சகம் 21.1.2011 அன்று மின்சார மேல்முறையீட்டுத் தீர்ப்பாயத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியது.
"2011 - 2012 ஆம் ஆண்டில் நாட்டிலுள்ள அனைத்து மின் விநியோக நிறுவனங்களும் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 89 கோடி நஷ்டத்தை ஈட்டும். அதனால் மின் விநியோக நிறுவனங்கள் தனியாருடன் செய்து கொண்ட கொள்முதல் ஒப்பந்தங்களின்படி பணத்தை உடனே தருவதற்கான வழிகள் இல்லாது போகும். எனவே இந்த ஒரு தொகையை மின் பயனீட்டாளர்கள் மீது சுமத்தத் தேவையான உத்தரவுகளை அனைத்து மாநில ஒழுங்குமுறை ஆணையங்களும் வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டது.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் மின் விநியோக நிறுவனங்கள் மின் கட்டண உயர்வு வேண்டும் என்று கேட்கவில்லை. ஆனால் மத்திய தீர்ப்பாயமே முடிவு எடுத்து வருடந்தோறும் தனியார் பலன் பெறும் வகையில் மின் கட்டணத்தை உயர்த்த வழிவகை செய்தது.
இதன்படி அனைத்து ஓழுங்குமுறை ஆணையங்களும் மின் விநியோக றிறுவனங்கள் மின் கட்டண உயர்வைக் கேட்டாலும் கேட்காவிட்டாலும் ஆண்டு தோறும் கட்டண விகிதத்தை ஒவ்வொரு ஏப்ரல் மாதத்திலும் அறிவித்தாக வேண்டுமென்று அது உத்தரவிட்டது. இதன் மூலம் மொத்த இந்தியாவின் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 89 கோடி ரூபாயை மத்திய மின் தொகுப்பு ஆணையம் கேட்டுக் கொண்டபடி மக்கள் தலையில் சுமத்த அது உத்தரவிட்டது.
இந்தியாவில் மொத்த 85 மின் விநியோக நிறுவனங்கள உள்ளது. ஒவ்வொன்றிடமும் தனிப்பட்ட முறையில் மத்திய தீர்பபாயம் எநத கருத்தையும் கேட்கவில்லை.
"நான் சொல்கின்றேன் நீ செய்" என்பதாக முடிவு எடுக்கப்பட்டது.
இதிலும் குறிப்பிடப்ட வேண்டிய விசயம் என்னவென்றால் இந்த தண்டத்தொகையில் கிட்டத்தட்ட பாதி அளவு தொகை அதாவது 53,298 கோடி ரூபாய் நஷ்டத்திற்கு சொந்தகாராக விளக்கும் தமிழ்நாடு மினச்ர வாரியத்தின் கருத்தைக் கூட கேட்கவில்லை. எதனால் இந்த நஷ்டம் என்பது குறித்து அதன் மூல காரணத்தை ஆராய விரும்பவில்லை.
அது சரி?
தனியாருக்கு இந்த துறையில் என்னென்ன சலுகைகள் கிடைக்கின்றது? இதனால் அரசாங்கத்திற்கு என்ன லாபம்? இல்லை இவர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்தினால் பயன்படுத்துவோருக்கு என்ன பலன்? போன்ற கேள்விகள் நமக்கு இயல்பாக தோன்ற வேண்டும்.
ஒரு மின் நிலையம் உருவாகக வேண்டும் என்றால் ஒரு தனியாரிடம் மொத்த முதலீட்டுத் தொகையில் 30 சதவிகிதம் மட்டும் இருந்தால் போதும். மீதியுள்ள நிதிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்தின் மூலம் வந்து விடும்.
இது தவிர மின் நிலையத்திற்குத் தேவையான மின் உற்பத்தி எந்திரங்களின் இறக்குமதி, சுங்க வரி போன்ற சலுகைகள் அரசால் அளிக்கப்படுகின்றது. இதிலும் பல நிறுவனங்கள் ஏற்கனவே மேலைநாட்டில் பயன்படுத்தப்பட்ட கருவிகளை புதிய கருவிகள் என்ற பெயரில் கணக்கு காட்டி இறக்குமதி செய்து ஒரு பெரிய தொகையை லவட்டி விடுகின்றன. உள்ளே வரும் இந்த உபயோகமற்ற கருவிகளால் மொத்த மின் உற்பத்தியும் பாழாகிவிடுவது தான் மிச்சம். தனியாருக்கு இரண்டு வகையில் லாபம். அரசாங்கம் தருகின்ற வரிச்சலுகைகள் ஒருபக்கம். மற்றொன்று ஒப்பந்தம் போட்டபடி அவர்களுக்கு வழங்கவேண்டிய தொகைகளை அந்தந்த மின்சார வாரியங்கள் கப்பம் போல கட்டியாக வேண்டும்.
இதற்கு மேலும் தமிழ்நாட்டில் உள்ள எரிவாயுகளை தனியாருக்குத்தான் மத்திய அரசாங்கம் பாதிக்கு மேற்பட்ட அளவு கொடுத்து அவர்களை வாழ வைத்துக் கொண்டிருக்கின்றது.
முதலில் தமிழகத்தில் கிடைக்கும் அரிய வகை எரிவாயுக்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் தனியார் நிறுவனங்களின் பட்டியலை நாம் பார்த்து விடலாம்.
1. ARKAY ENERGY (RAMESHWARAM) LTD
2. OPG POWER GENERATION LTD
3. KAVERY GAS LTD.
4. SAI REGENCY
5. CORAMANDEL CEMENTS
6. SAHELI LTD.
7. SOUTHERN ENERGY DEVELOPMENT CORPORATION
8. MM STEELS LTD
ஆனால் தமிழ் நாடு மினவாரியத்திற்கு இந்த வளத்தில் 50 சத அளவு தான் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.
மீதமுள்ள எரிவாயுவினை மத்திய அரசு நிறுவனமான கெயில் (GAIL) தனியாருக்கு சொந்தமான சுய மற்றும் இதர தனியார் மின் உற்பத்தி நிலையங்களுக்கும் தாரை வார்த்து விட்டது.
இதன் மூலம் தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கிடைக்க வேண்டிய பெரும்பகுதி வருவாயையும் தனியாருக்கு போய் விடுகின்றது.
மின் நிலையம் இயங்குவதற்கான எரிவாயு ஒதுக்கீடு பெறுவதில் முன்னுரிமை என்பது தான் இவர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளில் மிகப் பெரும் சலுகையாகும்.
ஒரு தனியார் உற்பத்தியாளர்களுக்கு அளிக்கும் பல சலுகைகளைக் கொண்டே அரசாங்கம் தனியாக ஒரு மின் உறபத்தி நிலையமே உருவாக்கி விட முடியும். மிக குறைந்த விலையில் மக்களுக்கு மின்சாரம் வழங்க முடியும். ஆனால் செய்ய மாட்டார்கள். காரணம் ஏற்கனவே கையெழுத்திட்ட புதிய பொருளாதாரக் கொள்கை என்று பூச்சாண்டி காட்டுவார்கள்.
தமிழகத்தில் முதல் முதலாக நாகூருக்கு அருகில் உள்ள நரிமணம் என்ற இடத்தில் தான் 1980களின் கடைசியில் இயற்கை எரிவாயு கண்டறியப்பட்டது. இந்த எரிவாயுவினைப் பயன்படுத்தி 10 மெகாவாட் திறனுடைய மின் நிலையம் ஜனவரி 1992 ல் தன் மின் உற்பத்தியைத் தொடங்கியது. ஜெட் விமானங்களில் பயன்படுத்தப்படும் எந்திரங்களை உபயோகிக்கத் துவங்கப்பட்ட இந்த மின் நிலையம் தமிழ்நாடு மின் வாரியத்த்துக்கு சொந்தமானது. இது 2001 ஆம் ஆண்டு வரை இயங்கியது.
அதன் பிறகு மன்னார்குடி மற்றும் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள குத்தாலம் ஆகிய இடங்களில் எரிவாயு கண்டறிய்பட்டது. மூன்றாவதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் வழுதூர் என்ற இடத்திலும் எரிவாயு கண்டறியப்பட்டது. இவ்வாறு தமிழகத்தில் கண்டறியப்பட்ட அரிய எரிவாயு வளம் ரசாயன உர உற்பத்திக்கு உபயோகிக்க வாய்ப்பில்லை. முழுக்க முழுக்க மின் உற்பத்திக்காகவே அது உபயோகிக்கப்பட்டது. மக்கள் சேவையில் ஈடுபட்டுள்ள இந்த தனியார் மின் நிறுவனங்களைப் பற்றி ஒவ்வொன்றாக சற்று விபரமாக பார்த்து விடலாம்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உளள வழுதூர் இரண்டாவது மின் நிலையத்தை பிஜிஆர் எனர்ஜி யானது ஒப்பந்த காலமான மார்ச்சிற்குள் ( 2009 ) தன் பணியை முடிக்கவில்லை. இந்த நிறுவனம் இதற்கு முன்னால் ஜிஈஏ என்ற பெயரில் வயரிங் போன்ற இரண்டாம் கட்டப் பணிகளை செய்து வந்த நிறுவனமாகும். வழுதூர் இரண்டாம் மின் நிலையத்தில் தான் மின் நிலையத்திற்கான முழு ஒப்பந்தகாரராக உருவெடுத்தது. இந்த நிறுவனத்திடம் தான் மேட்டூரின் 600 மெகாவாட் மின் நிலையத்தில் ஈபிசி பணியும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
2011 ல் மின் உற்பத்தியைத் துவங்கியிருக்க வேண்டிய இந்த மின் நிலையமானது இன்று வரை தொடங்கப்படவில்லை.
இதே நிறுவனம் தான் கடலூர் பவர் புராஜெக்ட் என்ற 1220 மெகாவாட் அனல் மின் நிலையம் ஒன்றைத் தனது சொந்த செலவில் நிறுவுவதாக 28.9.2006 ஆம் தேதியன்று மின் வாரியத்துடன மின் கொள்முதல் ஒப்பந்தத்தினை செய்து கொண்டது. மின் ஒழுங்குமுறை ஆணையமும் இதற்கு அனுமதி வழங்கியது. ஏனிந்த தாமதம்? என்று கேள்வி எதுவும் கேட்காமல் இந்த நிறுவனத்திறகு வருடந்தோறும் அனுமதியை ஆணையம் நீட்டித்துக் கொண்ட வருகின்றது. இதன் காரணமாகத்தான் பங்குச் சந்தையில் இதன் மதிப்பு (6202 கோடி ரூபாய்). சரியாமல் இருக்கிறது.
இந்த ஒப்பந்தகார நிறுவனமானது பிஜிஆர் எனர்ஜி யின் தொழில் நுடப்த் தவறால் ஒன்னரை ஆண்டு காலம் மின் உற்பத்தியை செய்ய முடியவில்லை. மின் உற்பத்தி இல்லாத இந்த காலகட்டத்தில் ஏற்கனவே கேஸ் அத்தாரிட்டி ஆப் இண்டியா லிமிட் (கெயில்) உடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்த மின் நிலையத்திறகான எரிபொருளான இயற்கை எரிவாயுவிற்கான கட்டணத்தில் 80 சதவிகிதத்தை தமிழ்நாட்டு மின்சார வாரியம் செலுத்தவேண்டி வந்தது. இதனால் வாரியத்துக்கு கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.
2008 ஆம் ஆண்டில் உருவான கடுமையான மின் பற்றாகுறையில் தனியார் மின் உற்பத்தியாளர்களிடம் விலை கேட்ட போது யூனிட் 6,70 என்றார்கள். மின்சாரக் கொள்முதலை அனுமதிக்கும் அதிகாரம் ஒழுங்கு முறை ஆணையத்து மட்டும் தான் உண்டு. அப்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அரசாங்கமும் (?) ஏற்றுக் கொண்டபடி யூனிட் ரூபாய் 6.70 என்று இவர்களிடம் கொள்முதல் செய்ய ஆணையத்திடம் மின்வாரியம் அனுமதி கேட்டது.
மீண்டும் உங்கள் நினைவுக்கு கொண்டு வர வேண்டிய விசயம் இந்த நிறுவனங்கள் அனைத்தும் தமிழகத்தின் இயற்கை வளமான எரிவாயுவை பய்னபடுத்துபவை. இவர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரம் அடிப்படை விலை மற்றும் லாபத்தோடு ரூ 2.30க்கு மேல் இருக்க முடியாது.
இந்த உண்மை ஒழுங்குமுறை ஆணையத்திற்கு, அதிகாரத்தில் இருந்த அனைவருக்கும் வெகு நன்றாகவே தெரியும் எனறாலும் கூட இது ஆணையத்தின் கட்டளையாக முடிக்கப்பட்டு வெகுஜனத்தின் பணம் இந்த தனியார் உற்பத்தியாளர்களுக்கு தாரை வார்க்கப்படுகின்றது.
இந்த அளவுக்கு சலுகைகள் அளித்த போதிலும் நாம் ஏற்கனவே பார்த்த ஐந்து தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாடு மின் வாரியத்திற்கு பாக்கித் தொகையாக ரூ 2500 கோடி செலுத்த வேண்டியுள்ளது.
இந்த தொகையை அவர்களிடமிருந்து வசூலித்தாலே இன்று தமிழ்நாட்டு மக்களுக்கு மானிய விலையில் மினச்ரத்தை வழங்க முடியும்.
ஆக ஏழைக்கு எல்லாருமே எதிரிகள் தான் என்பது உண்மைதானே.
தற்போது நடுத்தரவர்க்கமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை ஏழையாக மாற்றி விட்டால் கேள்விகள் ஏதும் வராது. அன்றாட வயிற்றுப் பாட்டுக்கு மட்டும் ஓடி உழைக்க வேண்டியதாக மட்டுமே வாழ முடியும்.




