Showing posts with label பயணங்கள். Show all posts
Showing posts with label பயணங்கள். Show all posts

Tuesday, March 18, 2014

பயணமும் படங்களும் - பசியும் ருசியும்

மாற்றம் ஒன்றே மாறாதது

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வரிசைப்படுத்தி வைத்துள்ளனர். இதைப் போலவே உணவு, உடை, உறைவிடம் என்றும் நம் வாழ்க்கைக்குரிய பட்டியல்களை ஏழுக்குள் அடக்கியுள்ளனர். காலமாற்றத்தில் ஏழும் ஏழரையாக மாறிக் கொண்டே வருகின்றது. ஒவ்வொன்றுக்கும் உண்டான மரியாதையும் மாறிக் கொண்டே வருகின்றது. 

அன்பை மட்டுமே கொடுக்க வேண்டிய அம்மா இப்போது குடும்பத்தின் வருமானத்திறகும் உதவ வேண்டியவராக மாறியுள்ளார். அவரும் வாழ்க்கை என்ற எந்திரத்தின் ஒரு பகுதியாக மாறியுள்ளார். தற்போதைய தலைமுறையில் தான் அப்பா என்ற குடும்பத்தலைவருடன் குழந்தைகள் உரையாடும் கலை முற்றிலும் மாறியுள்ளது. மகன்/மகள் என்ற கோடு உடைந்து எதைப்பற்றி வேண்டுமானாலும் உரையாடலாம் நட்பு ரீதியாக சமமாக உட்காரந்து கொண்டு பகிர்ந்து கொள்ளலாம் என்கிற நிலைக்கு மாறியுள்ளது. 

குரு என்பவர்களுக்குக் கையில் காசிருப்பவர்கள் மட்டுமே "கவனிக்கப்பட வேண்டிய" வர்கள் என்ற பார்வையை உருவாக்கியுள்ளது. "சிறப்புத் தரிசனம்" என்ற பெயரில் தெய்வங்கள் கூட சராசரி மனிதர்களுக்கு அந்நியப்பட்டுப் பட்டுப் போய்விட்டது. 

இவற்றையெல்லாம் விட உயிர் வாழ முக்கியத் தேவையான உணவு என்பதன் தன்மையும் மாறிவிட்டதை அதிகம் யோசித்துள்ளேன். பசிக்காக மட்டுமே உணவு என்பது மாறி இன்று ருசியைப் பொறுத்தே உண்ணக்கூடிய உணவு என்கிற நிலைக்கு வளர்ந்துள்ளது. நானும் விதிவிலக்கல்ல.

இட்லி , தோசை வேண்டாத பொருளாகவும், புரோட்டா, சைனீஸ் உணவு தான் நான் ரொம்ப விரும்புவது என்று சொல்லும் நிலைக்கு படிப்படியாக மாறிக் கொண்டே இருக்கின்றது.  உடம்புக்கு எது தேவை? என்பதை விட எந்த இடத்தில் எப்படிப்பட்ட வகையான உணவு கிடைக்கும் என்ற தேடுதலின் வேட்க்கையும் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேயிருக்கின்றது.

கையேந்தி பவன்கள்

கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு துறையிலும் நம்ப முடியாத ஏராளமான மாற்றங்கள். குறிப்பாக இந்த உணவுத்துறையில் ஆச்சரியமான மாற்றங்கள். நான் பார்த்த வரையிலும் 15 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் அரும்பாக்கம், எம்,எம்,டி,ஏ காலணி, அமிஞ்சிக்கரை, அண்ணாநகர், தி,நகர் போன்ற இடங்களில் இரவு நேரங்களில் எங்குத் திரும்பினாலும் நடைபாதையோர கைவண்டிக் கடைகளில் சுடச்சுட இட்லியை ஆவி பறக்கத் தட்டில் எடுத்து வைத்து கொடுத்துக் கொண்டிருந்தார்கள். சென்னையில் இப்போது எந்தப் பக்கத்திலும் அது போன்ற கைவண்டிகளை தேடிக் கண்டுபிடிக்க வேண்டியதாக உள்ளது. திருப்பூரில் வாழ்க்கையைத் தேடி வந்த தென் மாவட்ட மக்களுக்கு இதுவொரு மிகப் பெரிய வரப்பிரசாதமாக இருந்தது. இப்போது சொற்ப எண்ணிக்கையில் தான் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே உள்ளனர். 

மாறிப் போன மக்களின் மனோபாவம். 

வசதியாக அமர வேண்டும். அந்த இடம் கௌரவம் தருவதாக இருக்க வேண்டும். தட்டில் கொண்டு வந்து வைப்பது எந்தக் கருமாந்திரமாக இருந்தாலும் சுவையாக இருக்க வேண்டும். வாந்தி பேதி வந்தாலும் வீட்டில் போய்க் கழுவிக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் நாள் தோறும் மக்களின் சுவையின் வேகம் உணவகத் தொழிலை அலங்காரத் தொழிலாக வளர்த்துக் கொண்டிருக்கின்றது. அலுவலகத்தில் "ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் என் பொண்டாட்டி, குழந்தைகளை ஹோட்டலுக்கு கூட்டிட்டு போகலைன்னா அந்த வாரம் முழுக்க ரொம்ப பிரச்சனையாயிடும் சார்" என்று சொல்பவர்களையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன். 

எந்த உணவகங்களிலும் விலைப்பட்டியல் வைப்பதில்லை. காரணம் கேட்டால் மாதம் ஒரு முறை விலை மாற்ற வேண்டியதாக உள்ளது என்கிறார்கள்.  ஆனால் எளிய, ஆடம்பரம் தேவைப்படாத பல உணவகங்கள் மனசாட்சிக்கு கட்டுப்பட்டதைப் போல குடலுக்கு கெடுதல் அளிக்காத உணவு வகைகளை கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள். நான் சென்ற பல இடங்களில் இது போன்ற உணவங்களையும் கண்டேன். 

சுற்றுலாத்துறை

தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறையை மட்டும் சிறப்பான அதிகாரிகளின் கையில் கொடுத்து விட்டு அரசாங்கம் தலையிடாமல் ஒதுங்கி நின்று ஒத்துழைப்புக் கொடுத்தால் மட்டும் போதும். வருடந்தோறும் பல கோடி ரூபாய் அரசாங்கத்திற்கு வருமானத்தை ஈட்டித்தரும். காமதேனு பசுப் போலக் காட்சியளிக்கக்கூடிய இந்தச் சுற்றுலாத்துறை தற்போதைய அதிமுக ஆட்சியில் அவலத்தின் உச்சமாக உள்ளது. ஒவ்வொரு சுற்றுலாத்தலமும் ஒரு கழிப்பறை போலவே உள்ளது. மேலைநாட்டினர் வரலாற்றை பொக்கிஷமாக பார்க்கக் கூடியவர்கள். ஆனால் இங்குள்ள ஆட்சியாளர்களோ வரலாற்றுப் பிழையாக அதிகாரத்தில் வந்தமர்ந்த காரணத்தால் தங்களை ஒரு வரலாற்று நாயகர்களாக சித்தரிப்பதில் தான் கவனமாக இருக்கின்றார்கள். கடைசியில் காலம் தயவு தாட்சண்யமின்றி குப்பை போல தூக்கி எறிந்தும் விடுகின்றது. திருந்தாத ஜென்மங்கள் வாழ்ந்தென்ன லாபம்?

அந்நியன் வருவானா?

சுற்றுலா பாதைகளில் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள உணவகம் என்ற பெயரில் வைத்திருப்பவர்களுக்கு என்ன மாதிரியான தண்டனை கொடுக்கலாம் என்று பலமுறை யோசிக்க வைத்த புண்ணியவான்களையும் கண்டேன். 

கருடபுராணத்தில் சொல்லப்படுகின்ற அத்தனை தண்டனைகளையும் கொடுத்து விட்டுக் கருடபுராணம் இரண்டாம் பாகம் தண்டனைகளைக் கொடுத்தாலும் போதாது. அந்த அளவுக்கு வயிற்றைக் கலக்கும் சேவையைச் செய்து கொண்டிருக்கின்றார்கள். நள்ளிரவில் பட்டுக்கோட்டையில் ஒரு சிறிய கடையில் சாப்பிட்ட இடியப்பம் மற்றும் தும்மைப் பூ இட்லியை கூட்ட நெரிசலில் சாப்பிட்டு முடித்த போது கர்ண பரம்பரைப் போல கையில் இருப்பது அனைத்தையும் உணவக முதலாளிக்கு கொடுத்து விடலாம் என்ற வந்தது. அந்த அளவுக்கு வீட்டுப் பக்குவத்தில் சுவையின் உச்சத்தை கொடுத்து இருந்தார். பத்து பேர்கள் மட்டும் உட்கார்ந்து சாப்பிட வசதியாக இருந்த இடத்தில் சாப்பிட்ட ஒவ்வொருவரும்  சட்னி சாம்பாருடன் அதிக சிநேகம் கொண்டு கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

ஆச்சரியப்படுத்திய இளைஞர்

எங்கள் பயணத்தில் ஒட்டுநகராக வந்தவர் என்றுமே மறக்க முடியாத நபராக என் மனதில் இடம் பிடித்தவர். நெருக்கடியான நிலையிலும் ஒரு மனிதர் எந்த அளவுக்குச் சிறப்பாகச் செயல்பட முடியும் என்பதை உணர்த்திக் காட்டியவர். உச்சக்கட்ட நேர்மை என்பார்களே அதையும் தாண்டி தன் சொந்த வாழ்க்கையில் கூட ஓழுக்க விழுமியங்களைச் சிறப்பாகக் கடைபிடிக்கும் அவரின் மனோநிலையை, பழக்கவழக்கங்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனேன். 

சென்னையில் இருந்து வண்டியை எடுப்பதற்கு முன்பு அவரிடம் தனியாக அழைத்துச் சென்று இப்படித்தான் சொன்னேன். "உங்க வண்டிக்கு பெட்ரோல் போடுவதை விட என் வயிற்றுக்குச் சரியான நேரத்தில் சரியாகப் பெட்ரோல் போடுவது ரொம்ப முக்கியம். நீங்க நிறுத்தும் கடைகளின் உணவின் தரம் சரியில்லை என்றால் நீங்க தான் பொறுப்பு" என்றேன். அவர் சிரித்துக் கொண்டே "நான் பார்த்துக் கொள்கின்றேன்" என்றார். 

ஆசான் எப்போதும் போலப் பையில் பழ வகைகளை வைத்திருந்தார். அவருக்கு உணவே அது மட்டுமே. எனக்கு ஒவ்வொரு இடங்களிலும் சாப்பிட்டு விட்டு அவர் வைத்திருப்பதையும் சாப்பிடுவது தான் முக்கிய வேலையாக இருந்தது.

செங்கல்பட்டைத் தொடுவதற்கு முன்பே உள்ளே பகவான் பாசுரம் பாடத் தொடங்கி விட்டார். நான் முணுமுணுக்கத் தொடங்க இன்னும் அரைமணி நேரம் தான் என்று சொல்லி செங்கல்பட்டுத் தாண்டி ஒரு கடையில் நிறுத்தினார். ரசித்த பொங்கலுடன் செறிக்காத பூரியும் சேர்ந்து பயணத்தைச் சுகமாக்கியது. பக்கவாட்டில் அந்த காலை நேரத்தில் தோசைக்கல்லில் ஆம்லேட் போட்டுக் கொண்டிருப்பதை "வேடிக்கை" மட்டுமே பார்த்து விட்டு வண்டியில் ஏறினேன்.

இராஜராஜனுடன் ஆசான்


சென்னை போக்குவரத்து நெரிசலைத் தாண்டி செங்கல்பட்டு அருகே ஆசுவாசப்படுத்திக் கொண்ட போது

வாகன ஓட்டுநருடன்


2014 ஆம் ஆண்டு நிச்சயம் இயக்குநராக மாறி இருப்பேன் என்று உறுதியளித்துள்ள மதனுடன்

துணை ஒளிப்பதிவாளாராக பணியாற்றிக் கொண்டிருக்கும்  குமாருடன்

ஆசானுக்கு அடுத்த கட்ட நிகழ்வை தெரியப்படுத்திய போது

முந்தைய பயண பதிவுகளின் தொகுப்பு

Saturday, October 06, 2012

மூச்சு விட நேரமிருக்காது. பழகிக் கொள்.


சென்னைக்குச் சென்று விடு. பிழைத்துக் கொள்வாய் என்று தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலிருந்தும் வழியனுப்பும் விழா நடந்து கொண்டே தான் இருக்கிறது. சென்னை என்பது வாழ வைக்கும் இடம்.  

படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று தொடங்கி அத்தனை பேர்களின் பயணமும் சென்னையை போன்ற பல நகரங்களை நோக்கி நகர்ந்து கொண்டே தான் இருக்கிறது.  இன்று கிராமத்து அடிப்படை ஆதாரங்கள் மாறிவிட்டது. உடல் உழைப்பு என்பதற்கான மரியாதையை விட மூளை உழைப்பு தான் இன்று வெகுவாக விரும்பப்படுகின்றது. சீக்கிரம் பணம் பார்த்து விட வேண்டும் என்பதே தராக மந்திரமாக உருவாகி ஒவ்வொருவரையும் பெருநகரங்களை நோக்கி பயணிக்க வைத்துக் கொண்டுருக்கிறது. திருப்பூர், கோவை, சேலம், சிவகாசி போன்ற நகரங்களில் உழைப்புக்கு மட்டும் தான் மரியாதை. ஆனால் சென்னையில் மட்டும் தான் அவரவர் மனதில் வைத்துள்ள கனவுகளுக்கும் மரியாதை கிடைக்கின்றது.. இந்த கனவு பிரதேசம் அவஸ்த்தை தந்தாலும் கூட பலருக்கும் சென்னை என்பது முக்கியத்துவம் பெற்றதாக இருக்கிறது. .

திருப்பூரில் ஒரு எழுத்தாளர் தனது புத்தகத்தை வெளியிட வந்தார். அந்த விழாவில் ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிகின்ற தொழிலாளி ஒருவர் வரிசையாக தான் எழுதி வைத்த கவிதை என்ற பெயரில் உள்ள ஒரு வஸ்துவை வாசித்துக் காட்டினார். அமர வைக்க முடியாமல் பலரும் பலரும் தடுமாற விழா முடிந்ததும் அவருடன் பேசினேன்.  "இதை இன்னமும் தெளிவாக்கி இன்னும் சிறப்பாக முயற்சிக்கலாமே?" என்றேன்,

யோசிக்காமல் சட்டென்று பேசினார்.

"ஆமா சார்... இந்த வேலையை விட்டுட்டு சென்னைக்கு போயிடலாம்ன்னு நினைக்கிறேன்"  என்றார்.. ஏன்? என்ற போது "அங்கே போனாத்தான் நம்ம திறமைகள் வெளியே வரும்" என்கிறார். 

ஆக திறமைசாலிகளுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு சென்னை என்ற ஒரு ஊர் மட்டும் தான் போலிருக்கு.

ஆசைகள் அதிகமாகும் போது கூடவே நம்பிக்கை வேர் பிடிக்கத் தொடங்குகின்றது. காய், கனியாவது அவரவர் உழைப்பு. இது ஜெயித்தவர்களுக்கான உலகம்.  முயற்சி செய்து கொண்டுருக்கேன் என்பீர்களேயானால் உங்களுக்கான வரிசை பின்னால் உள்ளது என்று அர்த்தம்.  ஜெயித்து விட்டு வா? அப்புறம் முன்னால் வந்து அமர் என்று தயவு தாட்சண்யம் இல்லாமல் கத்தரித்து பேசுபவர்களின் மத்தியில் நாம் சுதாரித்து நின்று பழக வேண்டும்.

கனவுகளுடன் ஆசைகளை மனதில் நிரம்பவே வைத்துக் கொண்டு வாழும் கூட்டத்தால் சென்னை நிரம்பி வழிகின்றது. அத்தனை பேர்களுக்கும் இந்த சென்னை வா...வா.... என்று வரவேற்பு அளித்துக் கொண்டேதான் இருக்கிறது. 

தங்க முடியுமா? வாழ முடியுமா? என்பது போன்ற அவ்சியமான கேள்விகளை கேட்டுக்கொள்ளாமல் நினைத்தவுடன் பயணித்து கரையை தேடுபவர்களாகத்தான பலரும் இருக்கிறார்கள். முறைப்படியான பயிற்சி, முறையான கல்வி என்பதுடன் அடியெடுத்து வைக்கும் கூட்டத்தைவிட ஆசைகளை மட்டும் வைத்துக் கொண்டு பயணித்து வந்தவர்கள் தான் அதிகம். அல்லாட்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருப்பவர்களைப் பற்றித்தான் அதிகம் யோசித்தேன்..

திருப்பூரில் நண்பருடன் பேசிக் கொண்டுருந்த போது "நான் இன்னமும் சென்னைக்கு உள்ளே சென்றதில்லை" என்றார்.  "ரயில் மாறுவதற்காக சென்ட்ரலில் உள்ளே சென்றதுடன் அவ்வளவுதான்" என்றார்.  மனதிற்குள் வியப்பு மேலிட்டது. 

கிராமத்துவாசிகளில் பாதிப் பேருக்கு சென்னை என்பது இன்று வரைக்கும் அந்த அளவுக்கு முக்கியத்துவம் இல்லாத ஊர். வாழும் ஊரிலே வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்பும் அவர்களுக்கு சென்னையின் சொல்லி மாளமுடியாத கவர்ச்சிகள் அவர்களிடம் எடுபடவில்லை என்பதை பலருடன் பேசிய போது புரிந்து கொள்ள முடிந்தது. என்னுடன் உடன்பிறந்த பலரும் ஏதோவொரு விசேடம் என்றால் போய் தலையை காட்டிவிட்டு ஓடி வந்து விடும் பட்டியலில் இருப்பவர்கள் தான்.  சென்னை என்றால் அலர்ஜி என்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டுள்ளேன்.

நானும் சென்னையில் ஒரு வருடத்திற்கு மேல் வாழ்ந்துள்ளேன். பிழைக்க வழி தேடி செல்லவில்லை.  வீட்டிலிருந்து தப்பிக்க வேறு வழி தெரியாமல் நண்பன் அழைப்பை ஏற்று சென்றவனுக்கு சென்னை ஒரு வாழ்க்கை தந்தது.  தோல் சம்மந்தமான ஏற்றுமதி அலுவலகத்தில் ஒரு வருடம் பணிபுரிந்துள்ளேன்.

ஒரு அதிகாலை வேலையில் ஆம்னி பேரூந்தில் சென்று எழும்பூரில் இறங்கி அவனுக்காக காத்திருந்த போது எந்த எண்ணமும் மனதில் தோன்றவில்லை. பெரிதான ஆர்வங்கள் இல்லை. விடுதலை தான் தேவையாக இருந்தது. சென்னை ஏற்கனவே மனதளவில் நன்றாக அறிமுகமாகி இருந்தது. படித்த கதைகள், கட்டுரைகளின் மூலம் ஒரு கனவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டுருந்த எனக்கு சென்னை ஆச்சரியங்கள் பெரிதான அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை.  "மூன்று வாரங்கள் காத்திரு.  உன்னை அழைப்பார்கள்.  அதுவரைக்கும் தினந்தோறும் சென்னையை சுற்றிப் பார்த்துக் கொண்டுரு" என்று பணம் கொடுத்து என்னை ஒவ்வொரு இடமாக அலைய வைத்தான்.   

நான் பணிபுரிந்த ஒரு வருடமும் சென்னையில் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில் என் வண்டி போகாத இடமே இல்லை.  சென்னை தான் டிவிஸ் சாம்ப் தந்தது.  வண்டியே ஓட்டத் தெரியாமல் இருந்த என்னிடம் முதலாளி, உங்களுக்கு வண்டி ஓட்டத் தெரியுமா? என்றார்.  கல்லூரிக்கு வண்டியில் தான் சென்றேன் என்று அடித்து விட வண்டி வழங்கப்பட்டது.  சென்னை அண்ணாசாலையில் இருந்த சென்டிகோ ஷோரூம் அந்த புதுவண்டியை தந்தது. 

முதன்முதலாக வண்டி ஓட்டக் கற்றுக் கொண்டது நெரிசல் மிகுந்த அண்ணா சாலையில் தான்.  போக்குவரத்து விதிகள் தெரியாத போதும் ஆட்களை வைத்து அளந்து அளந்து அவர்கள் பின்னால் ஓட்டிச் சென்று வண்டியோட்ட கற்றுக் கொண்டேன்.  தங்கியருந்த இடம் ஒரு பக்கம். அலுவலகம் ஒரு பக்கம். தொழிற்சாலை ஒரு பக்கம்.  செல்லவேண்டிய வங்கிகள் என்று தினந்தோறும் ஆசை தீர அந்த அலைச்சலை அனுபவித்து வாழ்ந்தேன். பிறகு வீட்டில் இருந்து சென்னைக்கு வந்தவர்கள் நான் வண்டி ஓட்டும் லாவகத்தை வைத்து பாராட்டுப் பத்திரம் வழங்கினார்கள்.  கடைசி வரைக்கும் அவர்களிடம் ஓட்டத் தெரியாமல் மோதி பலரிடம் திட்டு வாங்கியதை சொன்னதில்லை. போக்குவரத்து காவலரிடம் நான் கொடுத்த லஞ்சத்தைப் பற்றி பேசியதும் இல்லை.

இருபது வருடங்கள் கழித்து இந்த முறை தான் சென்னையை முழுமையாக உள்வாங்க அவகாசம் கிடைத்தது.  இதற்கிடையே பல தடவைக்ள் சென்னைக்கு சென்றாலும் சென்று இறங்கி சென்று பார்த்து பரபரப்பாய் வந்து விடுவதுண்டு. அலுங்காமல் குலுங்காமல் போய்விட்டு வந்த பயணத்தில் எதையும் பார்க்கவில்லை.  எது குறித்தும் யோசிக்கக்கூட நேரமும் அமைந்ததும் இல்லை.

இந்த முறை வட்டியும் முதலுமாய் வாய்ப்பு அமைந்தது.  கிடைத்த வாய்ப்புகளை தெளிவாக பயன்படுத்திக் கொண்டேன்.  சில பகுதிகளுக்குள் மட்டும் சென்று வந்த போது என்னுள் தோன்றியது

எப்படி இங்கே நிரந்தரமாக வாழ முடியும்? இவர்களால் எப்படி வாழமுடிகின்றது?

திருமணத்திற்கு முன்னால் வாழும் வாழ்க்கையின் அரிச்சுவடிகள் அத்தனையும் திருமணத்திற்கு பிறகு மாறி விடுகின்றது. அதுவே குழந்தைகள் பிறந்த பிறகு வேறுவிதமாகவும், அவர்கள் வளர்ந்த பிறகு மொத்தமாக மாறி நம்முடைய உருவம் மட்டும் தான் உண்மையாக இருக்கிறது.  சிந்தனை, செயல்பாடுகள், நோக்கம் என்று மொத்தமாக மாறி வாழ்ந்தே ஆக வேண்டும் என்பதற்காக ஒவ்வொன்றுக்குள்ளும் பொருத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.

வாழ பணம் தேவை என்பதைப் போல வாழ்க்கையை அனுபவித்து வாழவும் அவகாசம் வேண்டாமா? கத்தலும், சப்தமும், நெரிசலுமுமாய் வாழும் ஊரில் முண்டியத்து முண்டியத்து தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டிய ஒரு ஊரில் விடும் மூச்சைக்கூட பொறுமையாக விட நேரம் இருக்குமா?

தற்போது தான் திருப்பூரில் போக்குவரத்து நெரிசல் அந்த அளவுக்கு இல்லை.  ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நெரிசலுக்குள் தான் வாழ்க்கை வாழ முடிந்தது.  ஏறக்குறைய கடந்து போன பத்தாண்டுகளும் திருப்பூரும் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தான் தடுமாறியது. திருப்பூருக்குள் சுற்ற வேண்டும் என்பவர்களின் வாழ்க்கை வேறு. அலுவலக அறை சம்மந்தப்பட்ட வாழ்க்கை என்பது வேறு.

சாய்ப்பட்டறை பிரச்சனை விஸ்ரூபம் எடுக்க சாயம் போலவே இங்குள்ள வாழ்க்கையும் கலைந்து போய் பலரும் பல்வேறு பகுதிகளுக்கும் புலம் பெயரத் தொடங்கி தற்போது திருப்பூர் காத்தாடிக் கொண்டுருக்கிறது. சுவாசம் சீராகி சுகமாக இருக்க முடிகின்றது.  பணத்தேடல்களின் வாய்ப்புகள் குறையும் போது நாம் வாழும் வாழ்க்கை தேவைகளின் அளவீடுகளையும் பரிசிலீனை செய்து வாழ வேண்டியதாக இருக்கிறது.

அன்றும் இன்றும் மாறாமல் இருப்பது சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையம் மட்டும் தான். மற்றபடி அத்தனை இடங்களிலும் சின்னதோ பெரிதோ ஏதோவொரு மாற்றம்.  அழகான சென்னை, சீர்மிகு சென்னை, சிங்காரச் சென்னை, சிங்கப்பூர் போல சென்னை என்று ஆட்சிக்கு வந்த ஒவ்வொருவரும் தன் அளவில் சொல்லிச் சென்ற அத்தனை வாக்குறுதிகளைப் பார்த்து சென்னைக்கு வாய் இருந்தால் சிரித்து அழுது வைத்துவிடும் போல. கூவத்தை வைத்தே சம்பாரித்தவர்களைக் கூட நாம் தலைவராக பார்க்க வேண்டியதாக இருக்கிறது.

புகையும் தூசியும் கொசுவும் சூழ்ந்த ஊருக்குள் வாழ வேண்டிய வாழ்க்கையும் ஒருவிதமான சாகசபயணம் போலத்தான் வாழ வேண்டியிருக்கும் போல. முக்கிய சாலைகள் கூட வயதான நடிகைகளின் கன்னங்களைப் போலத்தான் இருக்கிறது தமிழ்நாட்டின் முகப்பு வாசல் என்கிறார்கள்.  ஆனால் புழக்கடையை விட மோசமாகத்தான் இருக்கிறது. சென்னையின் உண்மையான ரூபத்தை பார்க்க வேண்டுமானால் ஒரு மழை பெய்ய வேண்டும். இடையில் நாம் சிக்கிக் கொள்ள வேண்டும். செத்த பிறகு இருப்பதாக சொல்லப்படும் சொர்க்கம், நரகத்தின் வித்யாசங்களை அப்போது நாம் புரிந்து கொள்ள முடியும். 

அக்கறையில்லாதவர்களும், ஆளத் தகுதியில்லாதவர்களும் வந்தமர இது போன்ற அவலங்களை நாம் பார்த்துக் கொண்டுருக்கத்தான் வேண்டும். 

நாம் வாழ்க் ஒழிக என்ற இரு வார்த்தைக்குள் வாழ பழகி விட்டோம். அவர்களுக்கும் அலற வைக்க அடுத்தடுத்து யோசித்தே பழக்கி விட்டார்கள். பிறகென்ன? சாலை விபத்திலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டியது நம்முடைய பொறுப்பு தானே?


நெரிசலைக் காரணம் காட்டி பாலங்களை வைத்து அலங்கரித்த சென்னையின் முகம் முழுமையாக மாறியுள்ளது.  பெரியமேட்டில் இருந்து பெரம்பூர் வரைக்கும் சென்ற பயணத்தில் பாலம் தாண்டி செல்வதற்குள் நான் பழகியிருந்த பாதி இடங்கள் மறந்து விட்டது. அண்ணாசாலை என்பது அண்ணா வளைவு போலத்தான் எங்கங்கோ ஓடி ஒளிகின்றது. ஒரே நேர்கோடாக இருந்த பழைய பாதை அத்தனையும் மாறி புதிதான இடத்திற்குள் வந்தது போல இருக்கிறது. எல்லா இடங்களிலும் ஒரு வழிப்பாதை என்ற அவஸ்த்தைக்குள் பிரகாரம் போல சுற்றிச் சுற்றி கதற வேண்டியதாக இருக்கிறது. வேகமாய் போய் விடு.... முந்திவிடு......முந்தித்தான் செல்ல வேண்டும்....முறைப்படி ஓட்டினால் பின்னால் வருபவர்கள் இடித்து விடுவார்கள் என்று சொல்லியே ஒவ்வொருவரின் முறையற்ற வேகத்தை வேடிக்கை பார்க்கக்கூட முடியாத அளவுக்கு பயத்திலே பயணிக்க வேண்டியுள்ளது.

பாலம் கட்டும் போது பொறுத்துக் கொண்டு வாழ பழகியவர்கள் இப்போது உருவாகிக் கொண்டுருக்கும் ரயில் பாதைக்கும் தங்களை மாற்றிக் கொண்டு வாழ பழகிக் கொண்டுருக்கிறார்கள். இந்த திட்டம் முடியும் போது அப்போது இன்னும் நெரிசல் அதிகமாக இருக்கும். வேறு சில திட்டங்கள் வரும்.  அப்போதும் திட்ட முடியாது.  ஊருக்கும் திரும்பி வர மனமிருக்காது.  


போதை என்பது சாரயத்தில் மட்டுமல்ல.  வாழ்க்கை தேடல்களில் கூட போதை இருக்கத்தான் செய்கின்றது.  சிலருக்கும் இதுவே போதும் என்று தோன்றும்.  பலருக்கும் எதுவும் போதாது. என் திறமைகள் அளவு கடந்தது என்பதை வைத்து அத்தனைக்கும் ஆசைப்படு என்பதாக இருக்கும்.

குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டியிருந்தாலும் அந்த இடத்திற்கு பறந்து செல்ல வாய்ப்பு இருக்குமா? என்று அதிசய கனவை யோசிக்க வைக்கின்றது. வாகனங்கள் வைத்திருப்பவர்கள் ஒரு வகையில் தேசத்திற்கு லாபம் சம்பாரித்து கொடுக்கும் புண்ணிய ஆத்மாக்கள்.  ஒவ்வொரு சிக்னலின் போது காத்திருக்கும் ஆயிரக்கணக்கான வண்டிகள் குடித்துக் கொண்டுருக்கும் எரிபொருளின் அளவை மனதிற்குள் கணக்கிட்டு பார்த்தேன். இன்ஜின் குடிக்கும் பெட்ரோலுக்கும் சேர்த்து சம்பாரிக்க வேண்டியவர்களாக இருக்கிறார்கள். பத்து நிமிடம் காத்திருக்கும் வேளையில் அத்தனை வாகனங்களும் குடிக்கும் பெட்ரோலை டீசலைப் பார்க்கும் போது இந்தியா இன்னமும் பல மடங்கு எரிபொருளை இறக்குமதி செய்து கொண்டேதான் இருக்க வேண்டும் போல. சென்னையில் இப்படியென்றால் மும்பை, டெல்லியை நாம் தான் யோசித்துக் கொள்ள வேண்டும்.

சென்னையில் பல பகுதிகளிலும் பார்த்த பலவிதமான கண்ணாடி மாளிகைகள் ஆச்சரியம் தரவில்லை.  அது உறிஞசும் மின்சாரத்தைப் பற்றி தான் யோசிக்க வைத்தது   தென் இந்தியாவில் தமிழ்நாடு தான் அதிக அளவு தனி நபர் மின்சாரத்தை பயன்படுத்துவதில் முதன்மை வகிக்கின்றது என்பதை படித்த போது சென்னைக்கு வெளியே இருக்கும் ஊர்க்களைப் பற்றி யோசிக்க வைத்தது.

என் சொந்த ஊரில் வாழ்ந்து கொண்டுருப்பவர்கள் மின் விசிறியைக் கூட அதிகம் பயன்படுத்துவதில்லை.  விளக்குகள் கூட மாலையில் தான். பகலில் தேவையிருக்காது. மற்றபடி பிழைப்பதற்காக செய்யப்படும் தொழில் சார்ந்த தேவைகளுக்குத்தான் மின்சாரம் பயன்படுத்தப்படுகின்றது. தமிழ்நாட்டில் பெருநகரங்கள், சிறு நகரங்கள் தவிர்த்து மற்ற சிற்றூர்களில் வாழ்ந்து கொண்டுருப்பவர்களின் வாழ்க்கையில் பெரிதான மாற்றமில்லை. தொலைக்காட்சி ஒன்று தான் பெரிதான மாற்றத்தை உருவாகி இருக்கிறது. 

வீணாக்காதே என்று அவர்கள் நம்மிடம் சொல்லும் போது நமக்கு எரிச்சல் வரும். நம்முடைய பழக்கத்தை அங்கே சென்றால் மூட்டை கட்டி வைத்து விடவேண்டும். ஊரில் மதியம் ஓய்வெடுக்கும் போது கூட வாசல்படியில் தலையை வைத்துக் கொண்டு குட்டித் தூக்கம் போடுவதைப் பார்த்து கேட்ட போது இப்படி சொன்னார்கள்.

"காத்து நல்லா அடிக்கும் போது எதுக்கடா ஃபேன்" என்கிறார்கள். படிப்பவனுக்கு ஒரு யூபிஎஸ் போட்டுக் கொள்ளலாமே என்ற போது அதற்கும் திட்டு விழுந்தது. காசை கரியாக்காதே என்கிறார்கள். அவனுக்கு அக்கறையிருந்தால் பகலில் படித்துக் கொள்ள வேண்டியது தானே என்கிறார்கள். 

தேவைகள் குறைவாக இருக்கும் போது தேடல்களும் குறைந்து தான் இருக்கும். மனம் சார்ந்து வாழும் வாழ்க்கையில் அமைதிக்கே முக்கியத்துவம். ஆனால் அவஸ்த்தைகள் என்றாலும் பரவாயில்லை போராடிக் கொண்டுருப்பேன் என்கிற போது தான் அடிப்படை ஆரோக்கியத்தை விலையாக வைத்து பலவற்றையும் பெறமுடிகின்றது.

ஆனால் இந்த அடிப்படை வாழ்க்கைக்குக்கூட மின்சாரம் கொடுக்க முடியாத அளவுக்கு நம் அரசாங்கம் நிர்வாகம் செய்து கொண்டுருக்கிறது. ஆட்சிகள் மாறிய போதும் காட்சிகள் எதுவும் மாறவில்லை.

ஆனால் சென்னையில் தேவையிருந்தாலும் இல்லாவிட்டாலும் வீட்டுக்குள் ஒவ்வொரு அறையிலும் மின் விசிறிகள் ஓடிக் கொண்டே தான் இருக்க வேண்டும் போல. வேண்டாமே என்று நிறுத்தினால் செங்கல் சூளைக்குள் இருப்பது போல இருக்கிறது.  புழுக்கத்தில் இறுக்கமாக மூச்சு விடக்கூட கடினமாக இருக்கும் போல. இதற்கு மேலே குளிர்சாதன வசதி ஒன்று தனியாக உள்ளது.  காருக்குள், வீட்டுக்குள் என்று தொட்ங்கி கக்கூஸ் வரைக்கும் குளிர்ந்தால் தான் வாழ்க்கை வாழ முடியும் என்று இன்று வாழ்க்கையின் ஆதாரமே மாறியுள்ளது.

சுகமாய் வாழ் பழகிக் கொண்டவர்களுக்கு நரகம் கூட சொர்க்கம் தான்.  அதற்காகவே வாழ்ந்து, அதற்கு சம்பாரித்து ஆவி போனாலும் அத்தனைக்கும் அவஸ்த்தைப்பட்டு போராட்ட வாழ்க்கையை அனுபவித்து விரும்பி வாழ பழகிக் கொள்கிறார்கள். தங்கியிருந்த நாட்களில் பட்ட ஒவ்வொரு அவஸ்த்தைகளையும் நான் பாதைகளில் பார்த்த பலரின் வாழ்க்கையைப் பார்த்து ஒப்பிட்டுக் கொள்ள முடிந்தது.

போராடினால் வெற்றி நிச்சயம் என்பதை சென்னையில் உள்ள நடைபாதை வியாபாரிகளை வைத்து தான் புரிந்து கொண்டேன். கூட்டத்தை வைத்து காசாக்கும் கலையை ஓரமாக நின்று அமைதியாக ரசித்தேன்.  இதையே வேறுவிதமாக நடைபாதையில் பிச்சை எடுப்பவர்களையும் வைத்து புரிந்து கொள்ள முடிந்தது. மின்சார ரயில் முதல் ரயில் நடைமேடை வரைக்கும் நிறைந்திருந்த பிச்சை மக்களைப் பார்க்கும் போது ஒரு வேளை இதை ஒழிக்கத்தான் மன்மோகன் சிங் பல பெரிய மனுசங்களை உள்ளே கொண்டு வர ஆசைப்படுகின்றாரோ என்று யோசிக்க முடிந்தது.

பிச்சை வாங்கி வாழும் மக்களின் நடவடிக்கைகளைக்கூட ரொம்பவே ரசிக்க முடிக்கினற்து. மின்சார ரயிலில் கண்தெரியாதவர் பாடிக் கொண்டே வருகிறார்.  அவருக்குப் பின்னால் ஒரு பெண்மணி. ஓடும் ரயிலின் சப்தத்தை மீறி அவர் பாடும் சுருதி கலைந்த பாடல் நம்மை அவர்களை நோக்கி கவனிக்க வைக்கின்றது. தட்டுவதற்கு ஒரு கட்டை. எத்தனை கூட்டம் என்றாலும் தங்களை பொருத்திக் கொண்டு முன்னேறி வந்து விடுகிறார். பலரும் இதனை பொறுத்தும் கொள்கிறார்கள்.  ஒரு நடை நடந்து வந்து வசூல் செய்த பிறகு ஒரு ஓரமாக நின்று தட்டில் விழுந்த காசை, பணத்தை அதன் அளவு வைத்து தங்கள் தனித்தனியான பையில் போட்டுக் கொண்டு அடுத்த நிறுத்தத்தில் இறங்கி சென்று விடுகிறார்கள்.

திடீர் என்று ஏதோவொரு இடத்தில் மொத்தமாக சந்திக்கின்றார்கள். கண் தெரியாத போதும் கூட அவர்கள் அரட்டை அடித்துக் கொண்டு நக்கல் செய்து கொண்டு கலாய்த்து மகிழும் தருணங்கள் ஒரு குறும்படத்திற்கான கதைக்களம். குழந்தையை ஆயுதமாக வைத்துக் கொண்டு கேட்கும் அலறல் மொழியில் அவர்களின் அவஸ்த்தை வாழ்க்கையை விட சோறுக்காக வாழ விரும்பும் வாழ்க்கையை நமக்கு அறிமுகம் செய்கின்றது. ஜகத்தினை அழித்திடுவோம் என்றவனை நினைக்கத் தோன்றியது. ஒரு வேளை உணவு மட்டும் பார்த்து பார்த்து சாப்பிட்டு வாழ்ப்வர்கள் இந்தியாவில் அதிகமில்லை ஜென்டில்மேன் ச்சும்மா 40 கோடி பேர்கள்.  


ஒருவரிடம் கையை நீட்டும் போதே அவர்களுக்கு புரிந்து விடுகின்றது.  இவர் பையில் கை வைத்து பணத்தை எடுக்கும் போதே மற்றொரு கை வந்து கொண்டுருக்கும் வேறொருவரை நோக்கி போகின்றது.  இரண்டு கையிலும் கிடைக்கும் வருமானத்தை விட அடுத்தவரை நோக்கி பார்வை வேகமாக போகின்றது.  தொடர் போல அவர்களின் வேகமான செயல்பாடுகளைப் பார்த்து நாம் இன்னமும் மார்க்கெட்டிங் திறமைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை மனதில் குறித்துக் கொண்டேன். 

Friday, October 05, 2012

பயணமும் எண்ணமும்


"தம்பி நம்ம நாட்டு ஜனாதிபதி யாருப்பா?"

"பிரதீபா பாட்டீல்"

"இல்லப்பா? இப்ப மாறியிருக்குறாங்களே அவங்க பேரு?"

"தெரியலையே....."

"சரி தெரிஞ்சுக்க அவரு பேரு பிரணாப் முகர்ஜி"

பையன் யோசிக்காமல் சட்டென்று அடித்தான்.

"இவரு இன்னும் பேமஸ் ஆகலை.  அதுதான் எனக்கு தெரியல" என்றான்.

சென்னையை நோக்கி ரயிலில் சென்று கொண்டுருந்த எனக்கு எதிரே நடந்த உரையாடல் இது.  

பையன்  நாகரிகமான உடையில் பளிச்சென்று இருந்தான்.  நிச்சயம் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டுருக்ககூடும்.   கேள்வி கேட்டவர் அவனை விடவில்லை.  அவன் பக்கத்து பெட்டியில் இருந்து அங்கும் இங்கும் அலைந்து கொண்டுருந்தவன்.  என் எதிரே இருந்த இருக்கை காலியாக இருக்க,  வந்தமர்ந்தவனுக்கு சோதனையாக இந்த கேள்வி பதில் போட்டுத் தாக்கியது. என் எதிரே இருந்தவர் தொடர்ச்சியாக ஏதோவொரு புத்தகத்தை படித்துக் கொண்டே வந்தார். அது முடியும் போது என்னிடம் உள்ள புத்தகத்தை வாங்கி படிக்கத் தொடங்கி விடுவார்.  இடையில் சற்று நேர ஓய்வில் இந்த பையன் மாட்டிக் கொண்டான்.

பையனுக்கு பதில் தெரியவில்லை என்ற கவலை எதுவும் இருந்ததாக தெரியவில்லை.  அவனுடைய நோக்கம் வேறு எங்கோ இருந்தது. ஒவ்வொரு இருக்கையாக தாவிக் கொண்டுருந்தான். கேள்வி கேட்டவர் புலம்பிக் கொண்டுருந்தார்.  

"பாருங்க சார்.  என்ன வெளியே நடக்குதுன்னு ஒரு பசங்களுக்கும் தெரியமாட்டுது". என்றார்.

அவரை கவனிக்கும் போதே உள்ள ரயில் பெட்டியின் உள்ளே வெவ்வேறு பகுதிகளில் இருந்தவர்களை கவனித்தேன்.  சென்னை எக்ஸ்பிரஸ் வண்டியில் தொடக்கம் முதல் கடைசி வரைக்கும் ஒரே மாதிரியான இணைப்பு என்பதால் பயணிப்பவர்களுக்கு பல விதங்களில் பயன் உள்ளதாக இருக்கிறது.  பொழுது போகவில்லை என்றால் முதல் பெட்டியிலிருந்து கடைசி வரைக்கும் ஒரு நடை போய்விட்டு வரலாம்.  நானும் போய்விட்டு வந்தேன்.

பலவிதமான முகங்கள்.  ஒவ்வொரு முகமும் சொல்லும் ஏராளமான கதைகள். இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளையும் ரயில் பயணங்களில் மட்டுமே தான் கேட்க முடியும்.  பேரூந்து போல புகை நம் முகத்தை நேரிடையாக தாக்காது. டீசல் புகையில்லாமல் நகருக்கு வெளியே பயணிக்கும் ரயில் வண்டி பயணமென்பது குழந்தைகளுக்கு எப்போதும் விருப்பமாகத் தான் இருக்கிறது.  பேரூந்து பயணத்தில் ஒரு ஒழுங்கு முறை இருக்காது. போக்குவரத்து நெரிசல் தொடங்கி, ஒவ்வாத சப்தம் என்று மாறி மாறி நம்மை கடுப்பேற்றும். 

ஒவ்வொரு நிறுத்தமும் கத்தலும் கலந்து கவனத்தை திசை திருப்பும்.  கூட்டம் சேர சேர உள்ளே புழுக்கம் அதிகமாகும்.  புகை பிடிப்பவர்கள் அருகில் அமர்ந்திருந்தால் இன்னமும் அவஸ்த்தைகள் அதிகமாகும்.  ஆனால் ரயில் பயணம் ஒரு வீட்டுக்குள் இருக்கும் சுகம் போலத்தான் இருக்கிறது.  அதுவும் விரைவு ரயில் என்றால் இன்னமும் வியப்பாகத்தான் இருக்கிறது. நகரங்களில் பயணிக்கும் போது கூட அவுட் லைன் போல ஓட்டி வெட்டி நகரும் போது அந்த நகரத்தின் வேறொரு தோற்றம் நமக்கு தெரிய வரும்.  மாறி வரும் காட்சிகளில் என்றுமே அலுப்பாய் இருக்காது.  

பக்கத்து பெட்டியில் ஒரு கல்லூரி மாணவ கூட்டம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை நடத்திக் கொண்டுருந்தார்கள்.  ஏறக்குறைய 30 பெண்களும் 20 ஆண்களுமாய் இருந்த அந்த கூட்டத்தில் சந்தோஷம் கரைபுரண்டு ஓடிக் கொண்டுருந்தது.  திடும் திடுமென்ற சப்தமும், சிரிப்புமாய் சில்லறை சிதறல்களாய் என்னை வந்து தாக்கிக் கொண்டேயிருந்தது.  எது குறித்தும் கவலையில்லை. எப்போதும் இந்த வாழ்க்கையில் இந்த மகிழ்ச்சி நிரந்தரம் என்பதாக திரைப்பட பாடல்களை மாறி மாறி ஒவ்வொரு பெண்ணாக சொல்லிச் சொல்லி அடுத்த பெட்டிக்கு கேட்கும் அளவுக்கு தங்களது பயணத்தை மற்றவர்களுக்கு பயமாக்கிக் கொண்டுருந்தார்கள்.  அருகே இருந்த மாணவர்கள் வாய் பார்த்து கோராஸ பாடிக்கொண்டுருந்தார்கள்.

பெட்டியில் பெரும்பாலான இளையர்களின் காதில் நிச்சயம் ஒரு ஹெட்போன் இருக்க அலைபேசி பாடல்களை அவசரம் அவசரமாக ரசித்துக் கொண்டே கத்திக் கொண்டுருந்தார்கள்.  ரசனைக்கும் கத்தலுக்கும் இடையே உள்ள இடைவெளியை அவர்களின் முகபாவனையை வைத்து கவனித்துக் கொண்டுருந்தேன்.  ஏதோவொரு விதத்தில் ஒவ்வொருவரும் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளவே விரும்புகிறார்கள். 

வயதுக்கும் பொறுப்புக்கும் நிறைய சம்மந்தம் இருக்கும் போல. வேலையில்லாமல் இருப்பது மட்டும் பொறுப்பற்ற தனமல்ல. தெளிவற்ற சிந்தனைகள் கூட ஒருவகையில் பொறுப்பற்ற தனம் தான்.

பயணங்களில் மற்றும் காத்திருக்கும் சமயங்களில் பெரும்பாலும் புத்தகம் படிப்பது என்பது 40 வயதுகளை கடந்தவர்களின் கைகளில் தான் பார்க்க முடிகின்றது. வாசிப்பு அனுபவம் என்பது மெதுமெதுவாக மறைந்து கொண்டுருக்கிறது.  அதற்கு பதிலாக உருவாகியிருக்கும் நவீனங்களின் மூலம் தான் பலருக்கும் ஆசைகள் முடிவுக்கு வருகின்றது. நவீனங்கள் தான்  இன்றைய இளையர்களை நகர்த்திக் கொண்டேயிருக்கிறது. மேலைநாடுகளில் ஐ போன் கொண்டாட்டங்களைப் போல இங்கே அலைபேசியில் பதிவு செய்யப்பட்ட பாடல்களை கேட்டு முடியும் போது பலருக்கும் ஜென்ம சாபல்யமே முடிவுக்கு வருகின்றது.  

இளையர்களின் கொண்டாட்ட மனோநிலையில் புத்தகங்கள் என்பது காணாமல் போய்விட்டது.  பாடப் புத்தகத்திற்கு அப்பாலும் ஒரு உலகம் உள்ளது என்பதை தற்போதைய கல்வித்திட்டம் சொல்லிக் கொடுப்பதும் இல்லை.  ஆதரிக்க விரும்புவதும் இல்லை. மதிப்பெண்கள் தான் இன்றைய கல்வியில் மிக முக்கியம்.  அதற்காக சுய சிந்தனைகளை வளர்க்காத மக்காக இருந்தாலும் அது குறித்து அக்கறையில்லை.

இதன் காரணமாகவே நூலகத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே இருக்கிறது.

வீட்டில் குழந்தைகளுடன் பேசும் போது அவர்களின் சொந்த கற்பனைகளை பரிட்சையில் எழுதச் சொல்வதுண்டு.  ஆனால் அவர்கள் ஒன்றைத் தவறாமல் சொல்வார்கள்.

"மிஸ் சொந்தமாக எழுதினால் மார்க் போடமாட்டங்கப்பா" என்பார்கள்.

எழுதியிருந்தாலும் சுழித்துயிருப்பதை பலமுறை பார்த்து இருக்கின்றேன். கருத்து அதுவாகத்தான் இருக்கும்.  ஆனால் வார்த்தைகள் தான் வேறுவிதமாக இருக்கும். ஆதரிக்க மனமில்லாதவர்களை ஆசிரியர்களாக பெற்றுருக்கும் போது குறுகிய உள்ளம் கொண்டு மாணவர்களைத் தான் உருவாக்க முடியும். மனப்பாடம் தான் மகத்தான் சாதனை என்பதாக மாற்றப்பட்ட ஒரு கல்விச் சமூகம் நம் முன்னால் உருவாக்கிக் கொண்டுருக்கிறது. 

படிக்க வேண்டும். அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். நல்ல வேலை அதிக சம்பளம்.  எளிதான வாழ்க்கையில் தனக்கான இருப்பிடம் என்பதாக ஒரு வரையறை உருவாக்கப்பட்டு விட்டது.

அதிக பணத்தை கொண்டாடுபவர்களின் கூட்டம் வெளியே தான் வீரர்களாக இருக்கிறார்கள். மனதளவில் மடையர்களாகத்தான் இருக்கிறார்கள்.  பணம் தரும் போதையில் சமூகம் அவர்களை கொண்டாடப்படுவதால் பார்ப்பவர்களின் பார்வையில் பரிசுத்தமானவர்களாகத் தெரிகிறார்கள்.


என் முன்னால் அமர்ந்திருந்த மற்றொரு மாணவன் வண்டி ஓடத் தொடங்கியது முதல் தொடர்ச்சியாக தனது மடிக்கணினியை பார்த்துக் கொண்டே வந்ததால் அந்த அளவுக்கு வேலை இருக்குமோ என்று யோசித்துக் கொண்டுருந்த போது தான் உண்மை புரிந்தது.  கல்லூரி விடுதியில் பார்க்க முடியாத படங்களை இது போன்ற சமயங்களில் பார்த்து விடுவானாம்.  வரிசையான பட்டியல்களை காட்டினான்.  கலந்து கட்டியிருந்த அந்த படவரிசை பத்து "பயம்" தந்த கலக்கலாகயிருந்தது. 

பேரூந்து பயணங்களை விட ரயில் பயணம் தான் தற்போதைக்கு பல விதங்களில் சிறப்பு,.  ஏறக்குறைய கட்டண விகிதத்தில் ரயிலுக்கும் பேரூந்துக்கும் ஐந்து மடங்கு வித்தியாசம் இருப்பதுடன் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையில் பயணிப்பது ஒரு தனியான சுகம்.  முனபதிவு செய்யாத சமயங்களில் பலமுறை நெருக்கியடித்து, வியர்வை குளியலில் நனைந்து பலமுறை பயணித்திருந்த போதிலும் ஒவ்வொரு பயணமும் தற்கால சமூகத்தை அப்பட்டமாக பிரதிபலிப்பதை கவனித்தால் நன்றாக புரியும்.

தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பயணிக்கும் ரயிலில் ஒரு முறை சென்று வாருங்கள். அந்த வாய்ப்பு இந்த முறை எனக்கு கிடைத்தது.  திருப்பூர் முதல் சென்னை வரைக்கும் பயணிக்கும் போது பார்த்த மனிதர்களின் மனோபாவம் என்பது சென்னை முதல் காரைக்குடி வரைக்கும் பயணிக்கும் பயணத்தில் மொத்தமாக மாறிவிடுகின்றது. 

உடைகள், நடைகள், பேச்சு, பாவனைகள், கவலைகள் என்று மொத்தமாக புதிதாக இருக்கிறது.  எந்த இடத்தில் இருந்தாலும் உங்களைச் சுற்றிலும் என்ன நடக்கின்றது என்பதை கவனிக்க பழகி விட்டால் உங்கள் சொந்த கவலைகள் காணாமல் போய்விடும். உங்களைவிட அதிக கவலைகள் சுமப்பவர்களை பல பயண்ங்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்தும். 

சுற்றிலும் கவனிக்க வேண்டும் என்ற ஆசையிருந்தால் உங்களுக்குள் இருக்கும் பல விதமான கலைஞர்கள் வெளியே வந்து எட்டிப்பார்க்ககூடும்.  காரணம் இங்கே எவரும் கவனிக்க விரும்புவதே இல்லை.   

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அவசரங்கள். தன்னுடைய அவஸ்த்தைகளையும் சுமந்து கொண்டு தான் பலரும் பயணிக்கின்றார்கள். பதில் தெரியாத கேள்விகளைப் போல பயத்துடன் தான் பயணிக்கின்றனர்.  அப்புறம் எங்கே பயணம் சுகமானதாக இருக்கும்.  கவலைகளை பயணிக்கும் போது ஜன்னலில் தூக்கி எறிந்து விடுங்கள்.  காணும் காட்சிகளின் மூலம் கிடைக்கும் பதில்கள் உங்களுக்கு தேவைப்படும் ஏதோவொன்றாக மாறக்கூடும். 

ஒவ்வொருவரின் பயணமும் ஓராயிரம் அனுபவங்களை இலவசமாக தந்துவிடுகின்றது.  கவனிக்க மனம் தான் வேண்டும்.