"தம்பி நம்ம நாட்டு ஜனாதிபதி யாருப்பா?"
"பிரதீபா பாட்டீல்"
"இல்லப்பா? இப்ப மாறியிருக்குறாங்களே அவங்க பேரு?"
"தெரியலையே....."
"சரி தெரிஞ்சுக்க அவரு பேரு பிரணாப் முகர்ஜி"
பையன் யோசிக்காமல் சட்டென்று அடித்தான்.
"இவரு இன்னும் பேமஸ் ஆகலை. அதுதான் எனக்கு தெரியல" என்றான்.
சென்னையை நோக்கி ரயிலில் சென்று கொண்டுருந்த எனக்கு எதிரே நடந்த உரையாடல் இது.
பையன் நாகரிகமான உடையில் பளிச்சென்று இருந்தான். நிச்சயம் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டுருக்ககூடும். கேள்வி கேட்டவர் அவனை விடவில்லை. அவன் பக்கத்து பெட்டியில் இருந்து அங்கும் இங்கும் அலைந்து கொண்டுருந்தவன். என் எதிரே இருந்த இருக்கை காலியாக இருக்க, வந்தமர்ந்தவனுக்கு சோதனையாக இந்த கேள்வி பதில் போட்டுத் தாக்கியது. என் எதிரே இருந்தவர் தொடர்ச்சியாக ஏதோவொரு புத்தகத்தை படித்துக் கொண்டே வந்தார். அது முடியும் போது என்னிடம் உள்ள புத்தகத்தை வாங்கி படிக்கத் தொடங்கி விடுவார். இடையில் சற்று நேர ஓய்வில் இந்த பையன் மாட்டிக் கொண்டான்.
பையனுக்கு பதில் தெரியவில்லை என்ற கவலை எதுவும் இருந்ததாக தெரியவில்லை. அவனுடைய நோக்கம் வேறு எங்கோ இருந்தது. ஒவ்வொரு இருக்கையாக தாவிக் கொண்டுருந்தான். கேள்வி கேட்டவர் புலம்பிக் கொண்டுருந்தார்.
"பாருங்க சார். என்ன வெளியே நடக்குதுன்னு ஒரு பசங்களுக்கும் தெரியமாட்டுது". என்றார்.
அவரை கவனிக்கும் போதே உள்ள ரயில் பெட்டியின் உள்ளே வெவ்வேறு பகுதிகளில் இருந்தவர்களை கவனித்தேன். சென்னை எக்ஸ்பிரஸ் வண்டியில் தொடக்கம் முதல் கடைசி வரைக்கும் ஒரே மாதிரியான இணைப்பு என்பதால் பயணிப்பவர்களுக்கு பல விதங்களில் பயன் உள்ளதாக இருக்கிறது. பொழுது போகவில்லை என்றால் முதல் பெட்டியிலிருந்து கடைசி வரைக்கும் ஒரு நடை போய்விட்டு வரலாம். நானும் போய்விட்டு வந்தேன்.
பலவிதமான முகங்கள். ஒவ்வொரு முகமும் சொல்லும் ஏராளமான கதைகள். இந்தியாவில் உள்ள எல்லா மொழிகளையும் ரயில் பயணங்களில் மட்டுமே தான் கேட்க முடியும். பேரூந்து போல புகை நம் முகத்தை நேரிடையாக தாக்காது. டீசல் புகையில்லாமல் நகருக்கு வெளியே பயணிக்கும் ரயில் வண்டி பயணமென்பது குழந்தைகளுக்கு எப்போதும் விருப்பமாகத் தான் இருக்கிறது. பேரூந்து பயணத்தில் ஒரு ஒழுங்கு முறை இருக்காது. போக்குவரத்து நெரிசல் தொடங்கி, ஒவ்வாத சப்தம் என்று மாறி மாறி நம்மை கடுப்பேற்றும்.
ஒவ்வொரு நிறுத்தமும் கத்தலும் கலந்து கவனத்தை திசை திருப்பும். கூட்டம் சேர சேர உள்ளே புழுக்கம் அதிகமாகும். புகை பிடிப்பவர்கள் அருகில் அமர்ந்திருந்தால் இன்னமும் அவஸ்த்தைகள் அதிகமாகும். ஆனால் ரயில் பயணம் ஒரு வீட்டுக்குள் இருக்கும் சுகம் போலத்தான் இருக்கிறது. அதுவும் விரைவு ரயில் என்றால் இன்னமும் வியப்பாகத்தான் இருக்கிறது. நகரங்களில் பயணிக்கும் போது கூட அவுட் லைன் போல ஓட்டி வெட்டி நகரும் போது அந்த நகரத்தின் வேறொரு தோற்றம் நமக்கு தெரிய வரும். மாறி வரும் காட்சிகளில் என்றுமே அலுப்பாய் இருக்காது.
பக்கத்து பெட்டியில் ஒரு கல்லூரி மாணவ கூட்டம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சியை நடத்திக் கொண்டுருந்தார்கள். ஏறக்குறைய 30 பெண்களும் 20 ஆண்களுமாய் இருந்த அந்த கூட்டத்தில் சந்தோஷம் கரைபுரண்டு ஓடிக் கொண்டுருந்தது. திடும் திடுமென்ற சப்தமும், சிரிப்புமாய் சில்லறை சிதறல்களாய் என்னை வந்து தாக்கிக் கொண்டேயிருந்தது. எது குறித்தும் கவலையில்லை. எப்போதும் இந்த வாழ்க்கையில் இந்த மகிழ்ச்சி நிரந்தரம் என்பதாக திரைப்பட பாடல்களை மாறி மாறி ஒவ்வொரு பெண்ணாக சொல்லிச் சொல்லி அடுத்த பெட்டிக்கு கேட்கும் அளவுக்கு தங்களது பயணத்தை மற்றவர்களுக்கு பயமாக்கிக் கொண்டுருந்தார்கள். அருகே இருந்த மாணவர்கள் வாய் பார்த்து கோராஸ பாடிக்கொண்டுருந்தார்கள்.
பெட்டியில் பெரும்பாலான இளையர்களின் காதில் நிச்சயம் ஒரு ஹெட்போன் இருக்க அலைபேசி பாடல்களை அவசரம் அவசரமாக ரசித்துக் கொண்டே கத்திக் கொண்டுருந்தார்கள். ரசனைக்கும் கத்தலுக்கும் இடையே உள்ள இடைவெளியை அவர்களின் முகபாவனையை வைத்து கவனித்துக் கொண்டுருந்தேன். ஏதோவொரு விதத்தில் ஒவ்வொருவரும் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளவே விரும்புகிறார்கள்.
வயதுக்கும் பொறுப்புக்கும் நிறைய சம்மந்தம் இருக்கும் போல. வேலையில்லாமல் இருப்பது மட்டும் பொறுப்பற்ற தனமல்ல. தெளிவற்ற சிந்தனைகள் கூட ஒருவகையில் பொறுப்பற்ற தனம் தான்.
பயணங்களில் மற்றும் காத்திருக்கும் சமயங்களில் பெரும்பாலும் புத்தகம் படிப்பது என்பது 40 வயதுகளை கடந்தவர்களின் கைகளில் தான் பார்க்க முடிகின்றது. வாசிப்பு அனுபவம் என்பது மெதுமெதுவாக மறைந்து கொண்டுருக்கிறது. அதற்கு பதிலாக உருவாகியிருக்கும் நவீனங்களின் மூலம் தான் பலருக்கும் ஆசைகள் முடிவுக்கு வருகின்றது. நவீனங்கள் தான் இன்றைய இளையர்களை நகர்த்திக் கொண்டேயிருக்கிறது. மேலைநாடுகளில் ஐ போன் கொண்டாட்டங்களைப் போல இங்கே அலைபேசியில் பதிவு செய்யப்பட்ட பாடல்களை கேட்டு முடியும் போது பலருக்கும் ஜென்ம சாபல்யமே முடிவுக்கு வருகின்றது.
இளையர்களின் கொண்டாட்ட மனோநிலையில் புத்தகங்கள் என்பது காணாமல் போய்விட்டது. பாடப் புத்தகத்திற்கு அப்பாலும் ஒரு உலகம் உள்ளது என்பதை தற்போதைய கல்வித்திட்டம் சொல்லிக் கொடுப்பதும் இல்லை. ஆதரிக்க விரும்புவதும் இல்லை. மதிப்பெண்கள் தான் இன்றைய கல்வியில் மிக முக்கியம். அதற்காக சுய சிந்தனைகளை வளர்க்காத மக்காக இருந்தாலும் அது குறித்து அக்கறையில்லை.
இதன் காரணமாகவே நூலகத்தை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே இருக்கிறது.
வீட்டில் குழந்தைகளுடன் பேசும் போது அவர்களின் சொந்த கற்பனைகளை பரிட்சையில் எழுதச் சொல்வதுண்டு. ஆனால் அவர்கள் ஒன்றைத் தவறாமல் சொல்வார்கள்.
"மிஸ் சொந்தமாக எழுதினால் மார்க் போடமாட்டங்கப்பா" என்பார்கள்.
எழுதியிருந்தாலும் சுழித்துயிருப்பதை பலமுறை பார்த்து இருக்கின்றேன். கருத்து அதுவாகத்தான் இருக்கும். ஆனால் வார்த்தைகள் தான் வேறுவிதமாக இருக்கும். ஆதரிக்க மனமில்லாதவர்களை ஆசிரியர்களாக பெற்றுருக்கும் போது குறுகிய உள்ளம் கொண்டு மாணவர்களைத் தான் உருவாக்க முடியும். மனப்பாடம் தான் மகத்தான் சாதனை என்பதாக மாற்றப்பட்ட ஒரு கல்விச் சமூகம் நம் முன்னால் உருவாக்கிக் கொண்டுருக்கிறது.
படிக்க வேண்டும். அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும். நல்ல வேலை அதிக சம்பளம். எளிதான வாழ்க்கையில் தனக்கான இருப்பிடம் என்பதாக ஒரு வரையறை உருவாக்கப்பட்டு விட்டது.
அதிக பணத்தை கொண்டாடுபவர்களின் கூட்டம் வெளியே தான் வீரர்களாக இருக்கிறார்கள். மனதளவில் மடையர்களாகத்தான் இருக்கிறார்கள். பணம் தரும் போதையில் சமூகம் அவர்களை கொண்டாடப்படுவதால் பார்ப்பவர்களின் பார்வையில் பரிசுத்தமானவர்களாகத் தெரிகிறார்கள்.
என் முன்னால் அமர்ந்திருந்த மற்றொரு மாணவன் வண்டி ஓடத் தொடங்கியது முதல் தொடர்ச்சியாக தனது மடிக்கணினியை பார்த்துக் கொண்டே வந்ததால் அந்த அளவுக்கு வேலை இருக்குமோ என்று யோசித்துக் கொண்டுருந்த போது தான் உண்மை புரிந்தது. கல்லூரி விடுதியில் பார்க்க முடியாத படங்களை இது போன்ற சமயங்களில் பார்த்து விடுவானாம். வரிசையான பட்டியல்களை காட்டினான். கலந்து கட்டியிருந்த அந்த படவரிசை பத்து "பயம்" தந்த கலக்கலாகயிருந்தது.
பேரூந்து பயணங்களை விட ரயில் பயணம் தான் தற்போதைக்கு பல விதங்களில் சிறப்பு,. ஏறக்குறைய கட்டண விகிதத்தில் ரயிலுக்கும் பேரூந்துக்கும் ஐந்து மடங்கு வித்தியாசம் இருப்பதுடன் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கையில் பயணிப்பது ஒரு தனியான சுகம். முனபதிவு செய்யாத சமயங்களில் பலமுறை நெருக்கியடித்து, வியர்வை குளியலில் நனைந்து பலமுறை பயணித்திருந்த போதிலும் ஒவ்வொரு பயணமும் தற்கால சமூகத்தை அப்பட்டமாக பிரதிபலிப்பதை கவனித்தால் நன்றாக புரியும்.
தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் பயணிக்கும் ரயிலில் ஒரு முறை சென்று வாருங்கள். அந்த வாய்ப்பு இந்த முறை எனக்கு கிடைத்தது. திருப்பூர் முதல் சென்னை வரைக்கும் பயணிக்கும் போது பார்த்த மனிதர்களின் மனோபாவம் என்பது சென்னை முதல் காரைக்குடி வரைக்கும் பயணிக்கும் பயணத்தில் மொத்தமாக மாறிவிடுகின்றது.
உடைகள், நடைகள், பேச்சு, பாவனைகள், கவலைகள் என்று மொத்தமாக புதிதாக இருக்கிறது. எந்த இடத்தில் இருந்தாலும் உங்களைச் சுற்றிலும் என்ன நடக்கின்றது என்பதை கவனிக்க பழகி விட்டால் உங்கள் சொந்த கவலைகள் காணாமல் போய்விடும். உங்களைவிட அதிக கவலைகள் சுமப்பவர்களை பல பயண்ங்கள் உங்களுக்கு அறிமுகப்படுத்தும்.
சுற்றிலும் கவனிக்க வேண்டும் என்ற ஆசையிருந்தால் உங்களுக்குள் இருக்கும் பல விதமான கலைஞர்கள் வெளியே வந்து எட்டிப்பார்க்ககூடும். காரணம் இங்கே எவரும் கவனிக்க விரும்புவதே இல்லை.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அவசரங்கள். தன்னுடைய அவஸ்த்தைகளையும் சுமந்து கொண்டு தான் பலரும் பயணிக்கின்றார்கள். பதில் தெரியாத கேள்விகளைப் போல பயத்துடன் தான் பயணிக்கின்றனர். அப்புறம் எங்கே பயணம் சுகமானதாக இருக்கும். கவலைகளை பயணிக்கும் போது ஜன்னலில் தூக்கி எறிந்து விடுங்கள். காணும் காட்சிகளின் மூலம் கிடைக்கும் பதில்கள் உங்களுக்கு தேவைப்படும் ஏதோவொன்றாக மாறக்கூடும்.
ஒவ்வொருவரின் பயணமும் ஓராயிரம் அனுபவங்களை இலவசமாக தந்துவிடுகின்றது. கவனிக்க மனம் தான் வேண்டும்.

