Showing posts with label தேர்தல் 2014.. Show all posts
Showing posts with label தேர்தல் 2014.. Show all posts

Saturday, May 17, 2014

(தேர்தல்) திருவிழாக்களில் தொலைந்து போனவர்கள்

தேர்தல் 2014 கொண்டாட்டம் முடிந்தது விட்டது. ஆமாம். உண்மையிலேயே இதுவொரு திருவிழா கொண்டாட்டம் தான். திருவிழாவில் அலங்காரம் செய்து ஊர்வலமாகக் கொண்டுவரப்படும் பலதரப்பட்ட சாமி சிலைகள் போல ஒவ்வொரு அரசியல்வாதிகளும் வேடிக்கை காட்டி அடுத்த ஐந்து வருடங்கள் காணாமல் போய்விடும் (ஜனநாயக) திருவிழா. 

இனி அடுத்த ஐந்து வருடங்களுக்கு மக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் சம்மந்தம் இல்லை. அரசியல்வாதிகள் எப்போதும் போல அவர்களின் மூதலீடு குறித்த கவலைகளில் உழைக்கத் தொடங்குவர். இதைப்போல இந்திய ஜனநாயகத்தின் ஆட்டுவிப்பவர்களாக உள்ள அதிகாரவர்க்கத்தினர் தேர்ந்தெடுக்கப்பட்ட சோளக் கொள்ளை பொம்மைகளை வேடிக்கை பொருளாகப் பார்த்துக் கொண்டிருப்பர். 

மக்களாட்சி என்ற பெயரில் மக்களுக்கும், மக்கள் விரும்பும் நலவாழ்வுக்கும் சம்மந்தம் இருக்காது. எட்டாக்கனியை ஏக்கத்துடன் பார்த்து அடுத்த ஐந்து வருடத்திற்கு மக்கள் காத்திருப்பர். இப்போது வந்துள்ள நரேந்திர மோடி போல வேறொரு தேவ தூதனுக்காகக் காத்திருப்பர். 

நம்பிக்கை தானே வாழ்க்கை.


இந்த வருடம் தேர்தல் குறித்து, எண்ணிய எண்ணங்களை எழுத்தாக மாற்ற எண்ணம் இல்லாமல் வேடிக்கை பார்க்கும் மனோநிலையில் பலதரப்பட்ட பதிவுகளை, இணையப் பத்திரிக்கைகளை அமைதியாகப் படித்துக் கொண்டே வந்தேன். சென்ற வருடம் நான் அரசியலை பார்த்த பார்வைக்கும், இப்போது இந்திய அரசியல், குறிப்பாகத் தமிழ்நாட்டு அரசியல் மற்றும் பலதரப்பட்ட அரசியல்வாதிகள் அவர்களின் வெளியே தெரியாத முகம் போன்றவற்றைப் பல நண்பர்களிடம் உரையாடல் வாயிலாகத் தெரிந்து கொள்ள முடிந்தது. உண்மையான அரசியலுக்கும், நடைமுறை அரசியலுக்கும் உள்ள உண்மை முகத்தைத் தெரிந்து கொள்ள முடிந்தது. 

நிறையப் பலதரப்பட்ட சமூகம் சார்ந்த பல சிந்தனைகளைப் பதிவுகளின் வாயிலாக விதைக்க முடிந்ததுள்ளதை நினைத்து மனதிற்குள் கொஞ்சம் மகிழ்ச்சி இருந்த போதிலும் செயலாக்கத்தில் நாம் என்ன சாதித்து உள்ளோம் என்ற எண்ணம் மட்டும் இடைவிடாது மனதிற்குள் ஒலித்துக் கொண்டே இருந்தது. நாம் இருக்கும் இடத்தை, பணியாற்றும் சூழ்நிலையில் சில நல்ல காரியங்களைச் செய்து பார்க்கலாமே என்ற எண்ணம் உருவாகி அது சார்ந்த விசயங்களைக் கவனம் எடுத்து செய்து கொண்டு வருகின்றேன். அது குறித்து விரைவில் எழுதுகின்றேன். 

பதிவில் எழுதாத சமயங்களில் மற்ற சமூகத் தளங்களில் குறிப்பாக முகநூலில் மட்டும் கொஞ்சம் அதிக நேரம் செலவழித்து அதன் நீக்கு போக்குகளைக் கவனித்து வந்தேன். அப்போது நான் ரசித்த படமிது. 

***
ஒருவர் எழுதிய பதிவை முதல் ஆளாகப் படிக்க வாய்ப்பு கிடைத்தால் நான் எழுதி வைக்க வேண்டிய விமர்சனம் இருந்தால் கட்டாயம் எழுதி வைத்து விட்டு வந்து விடுவதுண்டு. 

தாமதமாக உள்ளே நுழைந்தால் கட்டாயம் முதலில் அந்தப் பதிவுக்கு வந்த விமர்சனங்களைப் படித்து விட்டு அந்தப் பதிவை படிப்பதுண்டு. இதன் மூலம் எழுதியவரின் உழைப்புக்கு, அவரின் சிந்தனைக்குக் கிடைத்த மரியாதையைப் படித்தவர்கள் எந்த அளவுக்கு அங்கீகரித்துள்ளனர் என்பதனை உணர்ந்து கொள்ள முடியும். மற்றபடி கும்மி, ஆஜர், த.ம போன்றவற்றை வேடிக்கையாளனாகப் பார்த்து ரசிப்பதுண்டு. 

ஆனால் நடந்து முடிந்த தேர்தல் குறித்து நான் பதிவுகளில்,இணையதளச் செய்தித் தாளில் பார்த்த சில விமர்சனங்களை இந்தச் சமயத்தில் உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். 

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையிலும் நரேந்திர மோடி தனிப்பெரும்பான்மையுடன் வர வேண்டும் என்று விரும்பினேன். நடந்துள்ளது. தமிழகத்தில் வைகோ ஜெயிக்க வேண்டும் என்று நினைத்தேன். அது நடக்கவில்லை.

வைகோ தோற்று விடுவார் என்று ஒருவர் கிரி பதிவில் எழுதியிருந்தார் என்பதை விட அதற்கான காரணத்தை அவர் எழுதியிருந்தார்.

ஆச்சரியமாக இருந்தது. அது தான் நடந்துள்ளது. 

வலைபதிவில் எழுதுபவர்களை விட எப்போதும் வாசிப்பாளர்கள் புத்திசாலிகள் என்ற கருத்து என் மனதில் மேலும் வலுப்பெற்று உள்ளது. 


காத்தவராயன் May 15, 2014 at 6:36 PM

கிரி,

நாளை தேர்தல் முடிவுகள் வருகின்றன. தொகுதிக்காரன் என்ற முறையில் கூறுகிறேன். இந்த தேர்தல் மட்டுமல்ல இனி வரும் தேர்தல்களிலும் வைகோ “விருதுநகர்” பாராளுமன்ற தொகுதியில் வெல்ல முடியாது. காரணத்தை கூறுகிறேன்.

40 தொகுதியில் வைகோ விருதுநகரை[முன்பு சிவகாசி] மட்டும் தேர்வு செய்வது ஏன் என்று கேள்வி எழுப்பினால் விடை கிடைக்கும்.

சிவகாசி தொகுதியாக இருந்தபோது இந்த தொகுதியில் நாயக்கர்,நாடார்,தேவர்,தாழ்த்தப்பட்டோர் என்ற வரிசையில் வாக்கு வங்கி இருந்தது; நாயக்கர் சமுதாயத்தின் ஏகோபித்த ஆதரவுடன் வைகோ எளிதில் வெற்றி பெற்றார்.

தொகுதி சீரமைப்பில் வைகோவை ஒழித்து கட்ட வேண்டும் என்பதற்காகவே நாயக்கர் சமுதாய மக்கள் அதிகம் இருக்கும் “கோவில்பட்டி” சட்டமன்ற தொகுதியை தூத்துக்குடியிலும், நாயக்கர் சமுதாய மக்கள் கணிசமாக இருக்கும்”ராஜபாளையம்-திருவில்லிபுத்தூர்” ஆகிய சட்டமன்ற தொதிகளை தென்காசியில் சேர்த்து நாயக்கர் ஓட்டுக்களை சிதறடித்துவிட்டனர்.

தற்போதைய தொகுதி நிலவரம் தேவர்,நாடார்,தாழ்த்தப்பட்டேர்,நாயக்கர் என்ற வரிசையில் உள்ளது.

அ.தி.மு.க, காங்கிரஸ் – தேவர்
தி.மு.க – நாடார்
பி.ஜே.பி – நாயக்கர்

திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர் ஏரியாவில் சிட்டிங் எம்.பி மாணிக்கம் தாகூர் பெயர் ஓரளவுக்கு உள்ளது. இவர் தேவர் ஓட்டுக்களை பிரிக்கும் பட்சத்தில் தி.மு.க எளிதில் வெல்லும். அப்படி நடக்காவிட்டால் அ.தி.மு.க வெல்லும்.

வைகோவிற்கு மூன்றாவது இடம்தான்.


THIRUMOORTHI from Coimbatore 

வைகோ விருதுநகரில் தோற்றது, தோல்வி வைகோவிற்கு அல்ல, மக்களுக்கே. இதற்காக வைகோ அவர்களின் மக்கள் பணி மேலும் வேகமாகப் பயணிக்கவேண்டும். வெற்றியும் தோல்வியும் போராட்டகாரனுக்கு என்றுமே இல்லை.

***

திமுகக் குறித்து எழுத்தாளர் அமுதவன் பதிவில் விமர்சனமாக மனதில் பட்டதைப் பட்டவர்த்தனமாக எழுதியிருந்தேன். அந்தப் பதிவில் நண்பர் ராஜா கலைஞர் குறித்துச் சிலம்பாட்டம் சுற்றியிருந்தார். ஆனால் எங்களை விட ஹிண்டு தமிழ் செய்தித்தாளில் வந்த கட்டுரைக்கு ஒருவர் எழுதியிருந்த விமர்சனமிது.

Sundaram

கலைஞர் இவரது வாழ்கை துவக்கத்தில் தமிழுக்கு வாழ்ந்தார் பிறகு கட்சிக்கு வாழ்ந்தார். தனது எஞ்சிய களத்தில் குடும்பத்தினருக்கு வாழ்ந்து, தான் இதுகாறும் வாழ்ந்து தமிழர்களுக்குச் சேர்த்திய பெருமைகளைப் பரம பதம் படத்தில் உள்ள பாம்பு தீண்டி கீழ விடுவிடு என இறங்குவது போல் அடி நிலையிக்கு வந்து விட்டார். அடுத்த மாதம் இவரது பிறந்த நாள் வருகிறது, தனது குடும்பச் சாதனைகளுக்கு ஒரு பட்டியலும், தமிழர்களுக்குச் செய்த துரோகத்திற்கு ஒரு பட்டியலும் தயாரித்து, செய்த துரோகத்திற்குத் தாங்களே ஒரு பிரயத்தனம் தேடி கட்சியை நிரந்தரமாகக் காக்க ஒரு வழி காட்டுங்கள்.

தவறுகளுக்கு வருந்தி தாங்களாகவே விலகிக்கொண்டால் 2016 தேர்தலில் கட்சி பலம் கூடும் .இல்லாவிடில் அறிவாலயத்தில் லியோனி அரட்டை கச்சேரி யை ரசித்துக் கொண்டே , எஞ்சிய காலத்தைக் குடும்பத்தினருடன் கழிக்கவே நேரிடும்! தளபதி, அஞ்சாநெஞ்சன் ஒன்று சேரவேண்டும். வாரிசு அரசியலை தவிர்த்து, ,குடும்பத்தைச் சேராத ஒருவர் கட்சியை வழி நடத்தவேண்டும் -சுந்தரம் 

அதேபோல நண்பன் விந்தைமனிதன் ராஜாராமன் ஜெயலலிதா வெற்றி குறித்த விமர்சனப் பார்வையிது. 

இரண்டுமே முற்றிலும் உண்மை. 

எந்தக் கூட்டணிக்கட்சியும் இல்லாம, எந்த பழைய தவறுகளையும் திருத்திக்காம அதே மாதிரி, இங்கிலாந்து மகாராணி மாதிரி உலா வந்தும்கூட மொத்தமா வாரிச் சுருட்டி இருக்காங்க அந்தம்மா... எதிர்த்து நின்னு பேருக்கு ஒத்தை சீட்டுகூட வாங்கமுடியாம, ஓட்டு சதவீதத்தை வெச்சி நாக்கு வழிக்கிறதா?! எதிர்க்கட்சி அந்தஸ்து ஏற்கனவே போச்சு.. இப்போ ஒத்தை எம்.பி சீட்டுக்குக்குக்கூட வழியத்துப் போயாச்சு.. இதுல எதுக்கு வெட்டி ஜபர்தஸ்து?

***

இது தவிர நடந்து முடிந்த தமிழ்நாட்டு தேர்தல் குறித்து (அலங்கோலம்) மற்றொரு நண்பர் எழுதிய கருத்து இது. 

வேதைதமிழன் தமிழன் 

வேதாரண்யம் பகுதியில் ஒரு ஓட்டிற்கு இரு நூறு முதல் ஐநூறு வரை அதி மு கவினர் கொடுத்தனர். அதில் எங்கள் வீட்டிற்குக் கொடுத்தனுப்பிய நான்கு ஒட்டிற்க்கான எண்ணூறு ரூபாய்களை எனது சகோதரர் வேதாரண்யம் பெரிய கோவில் உண்டியலில் போட்டு விட்டு வந்து விட்டார். பணம் கொடுக்கும் விசயம் சம்பந்தமாகத் தேர்தல் அதிகாரியாக வலம் வந்த ஒரு அரசு (இவர் எல்லோருடனும் அன்பாகப் பழகுபவர் 

அலுவலகத்திற்கு வரும் மக்களுக்குப் பணம் எதுவும் வாங்காமல் உதவி அல்லது ஆலோசனை வழங்குபவர் )அதிகாரியிடம் ஒரு தி மு க காரர் கூறியதற்கு ஏன் சார் நான் என்ன பண்ண முடியும் தேர்தல் முடிஞ்சி முடிவு அறிவிக்கும் வரைக்கும் தான் தேர்தல் கமிசன் அதுக்கப்புறம் அந்த அம்மா அரசுக்கு கீழே தான் நாங்க மீண்டும் வேலை பார்க்க வேண்டும் புரிஞ்சுகோங்க முடிந்தால் நீங்களும் கொடுங்க நாங்களும் கண்டும் காணாம இருந்துக்குறோம் அது தான் சார் என்னால பண்ண முடியும் என்று அவர் கூறியது சற்று வித்தியாசமாகத்தான் இருந்தது. ஆகப் பணம் வேலை செய்துள்ளது என்பதை ஒத்துக் கொள்ளத் தான் வேண்டும். 

•••

http://books.vikatan.com/index.php?bid=366

எனது வாசிப்பில் உள்ள புத்தகமிது. ஒவ்வொருவர் வீட்டில் இருக்க வேண்டிய புத்தகமிது. மேலோட்டமாகப் படித்து முடித்து ஜம்பம் அடிக்க முடியாத அளவிற்கு நம் வாழ்க்கைக்கு உதவக்கூடிய நூலை எழுத்தாளர் அமுதவன் எழுதியுள்ளார். நிச்சயம் சமயம் கிடைக்கும் போது இந்த நூல் குறித்த விமர்சனத்தை எழுதி வைக்க ஆசைப்படுகின்றேன்.


http://books.vikatan.com/index.php?bid=2204