வெயிலுக்கு பெயர் போன மாவட்டத்தில் பிறந்த காரணத்தால் இன்னமும் மழையை விட வெயில் ரொம்பவே பிடிக்கும். உடம்பில் கசகசக்கும் வியர்வை வழிந்தோடினாலும் வீட்டுக்குள் நுழைந்தால் ஆடைகளை கழட்டி விட்டால் போதும். குளிர் அப்படியல்ல. எலும்பு வரைக்கும் ஊடுருவும். வெயில் தான் என்னை வளர்த்தது. இன்று வெயில் இருந்தால் தான் வாழ முடியும் என்ற தொழிலிலும் இருக்கின்றேன்.
வானம் பார்த்த பூமி, வறப்பட்டிக்காடு, பொட்டல் காடுகள், கருவேலமரங்கள் சூழ்ந்த பூமி என்று வாழ்ந்த பூமியை விட வாக்கப்பட்ட இடத்திற்கு மாறிய போது மனமும் உடலும் மாறத் தொடங்கியது. மனம் சுகத்தை எதிர்பார்க்க வசதிகள் வந்து சேரும் போது இங்கே எல்லாமே மாறத் தொடங்கி விடுகின்றது.
கல்லூரியில் முதலாண்டு படித்துக் கொண்டிருந்த போது எழுத்தாளர் இந்துமதி எழுதிய "தரையில் இறங்கும் விமானங்கள்" என்ற புத்தகத்தை யாருமே இல்லாத நூலகத்தில் வைத்து ஒரு மதிய வேளையில் தான் முதன் முதலாக அந்த புத்தகத்தை படித்தேன்.
பலதடவை படித்துள்ளேன். கல்லூரி முடித்து வெளியே வந்து இலக்கின்றி சுற்றிக் கொண்டிருந்த போதும் படித்துள்ளேன்.
மதிய நேர வெய்யிலை அதன் சுகத்தை இந்துமதி விவரித்து இருப்பார். இன்று வரையிலும் இந்த புத்தகம் கொடுத்த தாக்கம் போல வேறு எந்த புத்தகமும் எனக்கு தந்ததில்லை. இதன் தலைப்பு கூட இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையைச் சொல்வதாகத்தான் உள்ளது.
இப்போது வெய்யில் மட்டுமல்ல மழையும் கூட உடம்புக்கு சவாலாகத்தான் இருக்கின்றது. நமக்கு என்ன வந்துவிடப்போகின்றது என்று யோசித்து வாழ்ந்த காலங்கள் மாறி நமக்கு ஏதாவது வந்துட்டா? என்று யோசிக்க வைக்கின்றது. பயம் தான் வாழ்க்கையின் ஆதாரமாக மாறிப் போக அத்தனையும் படபடப்பாக மாறிவிடுகின்றது.
உயர்வான நிலையில் உள்ள எவரை வேண்டுமானாலும் சந்தித்துப் பாருங்கள்?
ஒரு படபடப்பு அவர்களிடம் இருந்து கொண்டே இருக்கும். சேர்த்து வைத்ததை காப்பாற்ற வேண்டிய துடிப்பும், பணிபுரியும் வேலையில் தினசரி சந்திக்கும் அவஸ்த்தை என நிலையில்லாமல் தான் இருப்பர்.
யாருக்குத்தான் இங்கே பதட்டமில்லாமல் வாழ முடிகின்றது?
ஒவ்வொரு சமயத்திலும் விஞ்ஞானம் தந்த முன்னேற்றத்தை வளர்ச்சி என்கிறோம். இந்த விஞ்ஞானப் பறவையில் பறந்து முன்னேறியவர்களை வளர்ந்த நாடுகள் என்று அழைக்கின்றோம். நாம் தான் இத்தனை வருடங்கள் பின்தங்கி விட்டோம் என்று அங்கலாப்புடன் அலுத்துக் கொள்கின்றோம். கூடவே நம்மாளுங்க திங்க மட்டுமே லாயக்கு என்று நெட்டி முறிக்கின்றோம்.
ஆனால் இந்த வளர்ச்சிக்காக நாம் என்ன விலை கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்?
1990 க்குப் பிறகு இந்தியாவை உலக நாடுகளிடம் அறிமுகம் செய்து வைத்து காட் ஒப்பந்தம் என்ற கடவுளை அறிமுகம் செய்து வைத்தனர். வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்தது. அப்போது தான் வினைகளும் நமது வாழ்க்கையின் ஒரு அங்கத்தினராக மாறத் தொடங்கியது. ஆனால் அப்போது அது குறித்து எவரும் அதிகமாகஅலட்டிக் கொள்ளவில்லை.
காரணம் எளிமையானது.
எல்லோரும் எப்போதும் சொல்லும் அதே தத்துவம் தான்.
எல்லோரும் எப்போதும் சொல்லும் அதே தத்துவம் தான்.
ஒன்றை இழந்தால் தான் ஒன்றைப் பெற முடியும்.
ஒன்று இரண்டையா இழந்துள்ளோம்?
நம்மைச் சுற்றிலும் உள்ள காற்றைத் தவிர அத்தனையும் இன்று காசு கொடுத்தே பெற முடியும் என்கிற சூழ்நிலையில் இந்த வளர்ச்சி நம்மை கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.
நம் வாழ்க்கை நம் ஆரோக்கியம் என்று பேசத் தொடங்கி தற்போது நம்முடைய அடிப்படைத் தேவைகள் அனைத்தும் ஆடம்பரத் தேவையாக மாறி ஒவ்வொன்றுக்கும் ஒரு விலையை கொடுக்க வேண்டியுள்ளது.
கடந்த இரண்டு மாதமாகத்தான் வீட்டில் தண்ணீருக்கென தனியாக ஒரு தொகை ஒதுக்க வேண்டியுள்ளது. மாதச் செலவில் இந்த தொகை சிறிய அளவாக இருந்தாலும் மனதில் உருவாகும் குற்ற உணர்ச்சிக்கு அளவேயில்லை.
சுடுதண்ணீர் என்றாலும் சுத்திகரித்து குடிங்க என்று கூவிக்கூவி அழைத்து நம்மை வடிகட்டின முட்டாளாக நுகர்வு கலாச்சாரம் மாற்றியுள்ளது.
நாள்தோறும் அலறிக் கொண்டிருக்கும் ஊடகங்கள் தரும் பயமே இந்த சந்தையின் லாபத்தை நாளுக்கு நாள் அதிகரிக்க வைத்துக் கொண்டிருக்கின்றது.
இரண்டு நாளைக்கு ஒரு முறை வந்து கொண்டிருந்த வீட்டுக்குள் இருந்த குழாயில் காற்று மட்டுமே வரத் தொடங்கியது.
வாரத்தில் இரண்டு நாளைக்கு வந்து கொண்டிருந்த பொதுக் குழாயிலும் தண்ணீர் நின்று போக அப்போது கூட மக்கள் யோசிக்கத் தயாராகாமல் தண்ணீர் லாரியை வரவழைக்கத் தொடங்கினர். சுகமாக மொண்டு குளித்து வாழப் பழகியவர்களுக்கு கையிலிருந்த காசு கரைய மெதுவாகவே ஞானம் வரத் தொடங்கியது.
வாரத்தில் இரண்டு நாளைக்கு வந்து கொண்டிருந்த பொதுக் குழாயிலும் தண்ணீர் நின்று போக அப்போது கூட மக்கள் யோசிக்கத் தயாராகாமல் தண்ணீர் லாரியை வரவழைக்கத் தொடங்கினர். சுகமாக மொண்டு குளித்து வாழப் பழகியவர்களுக்கு கையிலிருந்த காசு கரைய மெதுவாகவே ஞானம் வரத் தொடங்கியது.
திருப்பூரில் 1992 ல் ஒரு குடம் 50 பைசாவில் தொடங்கி சில இடங்களில் ஒரு ரூபாய்அளவுக்குக்கூட விற்றது.
இருபது வருடங்களுக்குப் பிறகு அதே நிலமை திரும்பியுள்ளது. அப்போது இல்லாத வளர்ச்சி அத்தனையும் இப்போது வந்துள்ளது? ஆனால் அப்போது இருந்து பிரச்சனைகளை விட இப்போது அதிகமாகியுள்ளது? எப்படி?
இருபது வருடங்களுக்குப் பிறகு அதே நிலமை திரும்பியுள்ளது. அப்போது இல்லாத வளர்ச்சி அத்தனையும் இப்போது வந்துள்ளது? ஆனால் அப்போது இருந்து பிரச்சனைகளை விட இப்போது அதிகமாகியுள்ளது? எப்படி?
வார்டு கவுன்சிலர் யாரென்றே தெரியாத அத்தனை பேர்களும் அலுவலகத்திற்கு தினமும் படையெடுக்க அதற்கென்ன ஆகட்டும் பார்க்கலாம்?என்றாராம். கூடவே கேன் வாட்டர் வர்றதில்லையா? என்று கேட்ட போது தான் தற்போது தண்ணீர் என்பது விலை கொடுத்து வாங்க வேண்டிய ஒரு பொருள் என்பதே பலருக்கும் புரியத் தொடங்கியுள்ளது. குழாயில் வராத தண்ணீர் பலருக்கும் கண்ணீரை வரவழைத்துக் கொண்டிருக்கின்றது.
ஊரில் வீட்டுக்குப் பின்னால் இருந்த கிணற்றில் எனக்கு நினைவு தெரிந்த வரையிலும் பத்து இழுவையில் தண்ணீர் வந்து விடும். அருகே இருந்த நடராஜபுரம் ஊரணியில் பால் போலவே தெளிந்த நீரை குடிக்க பயன்படுத்திய குடும்பங்கள் அதிகமாகவே இருந்தார்கள்.ஊரைச் சுற்றிலும் இருந்த ஒவ்வொரு குளத்திலும் முடிந்தவரைக்கும் நிரம்பியே பார்த்திருக்கின்றேன். ஆடு, மாடுகளுடன் அவசரமாக கழுவிக் கொண்டு நகர்ந்தவர்களையும் பார்த்து இருக்கின்றேன்.
வயலுக்கு அருகே இருந்த கண்மாயில் பார்த்த தண்ணீரும், ஊருக்கு வெளியே இருந்த கண்மாயில் கடல் போல நின்ற தண்ணீர் எதையும் இப்போது காணவில்லை. குளமெல்லாம் வீடாக மாறிப் போய்விட்டது. கண்மாய் ஓரத்தில் கட்டிடங்கள் முளைத்துள்ளது.
தண்ணீரில் மூழ்கி குளித்த உடம்புக்கு இன்று முனகிக் கொண்டே துடைத்து வர கடந்து போன இருபது வருடங்கள் தந்த வளர்ச்சியில் நாம் இந்த அளவுக்கு வளர்ந்துள்ளோம்.
ஒன்றை இழந்தால் பரவாயில்லை. மொத்தமாக அத்தனையும் இழந்து கொண்டேயிருக்கின்றோம். எங்கிருந்தோ வந்தவர்களுக்காக இத்தனையும் இழந்து விட்டு இன்னமும் கூட அதைப் பற்றி யோசிக்கத் தெரியாதவர்களாக வாழ்ந்து கொண்டிருப்பது தான் இந்த வளர்ச்சி தந்த அறிவு. நாட்டுக்கு அந்நிய முதலீடு தேவை என்கிறபாதையில் சென்ற பொருளாதார புலிகள் இன்று இயல்பாக கிடைத்த புளி கூட கசக்கும் அளவிற்கு விலை உயர்ந்துவிட்டது.
எப்பேற்பட்ட வளர்ச்சி தெரியுமா?
எப்பேற்பட்ட வளர்ச்சி தெரியுமா?
மிதிவண்டி வாகனமாக மாறியது. எரிபொருளின் தேவை அதிகமானது. மொத்த நாடும் எரிபொருளை நம்பியே ஓடத் தொடங்க விலைவாசிகள் விண்ணைத் தொட்டு நிற்கின்றது.
வானொலி தொலைக்காட்சியாக மாறியது. உலகம் சுருங்கிப் போனது. ஆனால் அருகே இருப்பவர்கள் அந்நியமாகிப் போனார்கள்.
தொலைபேசி அலைபேசியாக மாறியது. உறவுகளின் நெருக்கம் விலகிப் போய்விட பேச நேரமில்லாது ஓடிக் களைத்த ஓட்டப்பந்தய வீரர்கள் போல வாழ்க்கையும் மாறிப்போனது.
ஆட்டுக்கல்லுடன் அம்மிக்குழவியும் காணாமல் போனது. நினைத்துப் பார்க்க மட்டுமே என்று இருந்த அத்தனை பொருட்களும் நுகர்வு கலாச்சாரத்தில் வந்து நிற்க ஒவ்வொரு பொருட்களுமே நமது அன்றாட வாழ்க்கைக்கு அவசியம் தானே? என்ற எண்ணமும் இயல்பாக மாறிப் போனது.
இன்று மின்சாரம் இல்லையேல் வாழ முடியாத நிலைக்கு வந்து விட்டோம்.
கடந்த 50 ஆண்டுகளில் தானிய உற்பத்தி பெருகி இன்று பசி, பட்டினி, பஞ்சம் இல்லை என்று வளர்ந்துள்ளோம். உருவான தொழில் வளர்ச்சியில் வேலை வாய்ப்புகளுக்கும் பஞ்சம் இல்லை என்று மாறியுள்ளது.
ஆனால் நிலங்கள் மலடாகி காற்றில் கரும்புகையும் கலந்து இயல்பான வாழ்க்கையில் ஒன்றாகிப் போய்விட்டது.
எல்லாமே சரி தான்?
வாழ்வதற்கான தேவைகளும், நமது வசதிகளுக்காக நாம் பெற்ற வளர்ச்சிகளும் நமக்கு நாகரிக உலகத்தை அறிமுகம் செய்து வைத்தது.
காடு அழிந்து வீடாக தொழிற்சாலைகளாக மாறியது. இயற்கையின் சுழற்சி மாறத் தொடங்கியது. இன்று ஆக்கலும் அழித்தலும் கைவரப் பெற்ற மனிதனால் இயற்கையை உருவாக்க முடிவதில்லை. அதன் சூட்சமத்தை இன்றும் கூட முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை.
இயற்கையோடு கலந்த நம் வாழ்க்கையில் உள்ள ஒவ்வொரு விசயத்தைப் பற்றியும் பேசுவாம்.
முதலில் காட்டைப் பற்றி பேசுவோம்.
அடுத்த பதிவில்...........................




